கடந்த கல்வியாண்டின் தொடக்கத்தில் பெங்களூரின் ஒரு பள்ளியில ஐடி கார்ட் அணிந்து வராத ஒன்றாம் வகுப்புக் குழந்தைகள் பள்ளிக்கட்டிடங்களைச் சுற்றிப் பலமுறை ஓடுமாறு தண்டிக்கப் பட்டனர். அதில் ஒரு சிறுமி மயக்கமாகும் நிலைக்கு வர, அடுத்த நாள் பெற்றோர் பெருந்திரளாக வந்து தட்டிக் கேட்கவும் நிர்வாகம் பயந்து குழந்தைகளை திருத்தும் நல்லெண்ணத்தில்தான் அப்படி செய்ததாகவும் இனி ‘தவறு’ நேராதென்றும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டது. ஒன்றாம் வகுப்புக் குழந்தைகளை இதுபோன்ற காரணங்களுக்காக ஓட விட்டது தவறுதான். ஐடி கார்ட் அணியாதது குறித்து பெற்றவர்களுக்கு எச்சரிக்கை அனுப்பியிருக்கலாம். ரிப்போர்ட் கார்டில் குறிப்பது, அபராதம் விதிப்பது என எத்தனையோ பிற வழிமுறைகள் இருக்கின்றனவே.
இது ஒரு உதாரணத்துக்கே. உடல் மன ரீதியாக குழந்தைகளை வருத்தும் கார்ப்போரல் தண்டனைகள் பற்றி எத்தனையோ கேட்டாயிற்று. பார்த்தாயிற்று. எதிர்ப்புகளும் தெரிவித்தாயிற்று. வாக்குவாதங்கள் நிகழ்ந்தாயிற்று. ஆனாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாச் செய்திகள் இந்தப் பக்கம்தான் குற்றம் எனக் கைநீட்டி உறுதியாகச் சொல்லமுடியாதபடி சில சமயங்களிலும், கைகட்டி வேடிக்கை பார்க்க முடியாதபடி பல சமயங்களிலும்.
இந்த நேரத்தில் நமது பள்ளி அனுபவங்களோடு ஒப்பிட்டுப் பேசுவதென்பது காலத்துக்குப் பொருந்தாத ஒன்றாய் தோன்றலாம். ஆனால் நினைவின் இடுக்குகளுக்குள் இருந்து அவை பீறிட்டு வரவே செய்கின்றன. சென்ற நூற்றாண்டின் எழுபது எண்பதுகளில் எனது பள்ளிக்காலம். பிள்ளைகளை பள்ளியில் சேர்த்து விட வருபவர்கள் ஆண்டுவிழா போன்ற நிகழ்வுகள் தவிர வேறெதற்கும் அழைக்கப்படுவதில்லை. பிள்ளைகளின் படிப்போடு ஒழுக்கத்துக்கும் பள்ளிகளே உத்திரவாதம் என்பது போலாக என்ன கண்டித்தாலும் பெற்றோர் தலையிட்டதில்லை.
மணலில் முழங்காலிட வைப்பது, பெஞ்சு மேல் ஏற்றுவது, ஸ்கேலினால் உள்ளங்கையில் அடிப்பது, மைதானத்தைச் சுற்றி ஓடவிடுவது இதெல்லாம் சர்வ சாதாரணமாகத் தரப்பட்ட தண்டனைகள். ஓரிரு முறைகள் சற்றே வரம்பு மீறிச் சென்ற சம்பவங்களில் மட்டுமே பெற்றோர் தலையிடக் கண்டிருக்கிறேன். தலைமை ஆசிரியரும் குறிப்பிட்ட ஆசிரியர்களை எச்சரிக்கத் தவறவில்லை அந்த நாளிலும்.
ஆனால் இப்போது சின்ன விஷயங்களுக்கும் ஆசிரியர்கள் மாணவர்களை உரிமையுடன் நெறிப்படுத்த முடியாத நிலையிலேயே உள்ளனர். அப்படியே மாணவர்மேல் தன்மையாகத் தவறுகள் சுட்டிக்காட்டப்படும் போதும்கூட தங்கள் பிள்ளைகளிடம் தவறேதும் உள்ளதா என்பது பற்றி ஆராயாமல் பெற்றவர் கொந்தளிப்பதே பெரும்பாலும் நடக்கின்றது. பொறுமையற்ற ஆசிரியர்கள் சிலரால் நடந்த பல தவறுகளால் ஆசிரியர்கள் பிள்ளைகளைக் கண்டிப்பதே குற்றமெனும் மனோபாவத்துக்கு வந்தே விட்டோம்.
அன்றைக்கு ஆசிரியர்கள் நமக்கு வழங்கிய தண்டனைகளைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், அவர்கள் கண்டிப்புடன் இருந்ததாலேயே நல்ல ஒழுக்கத்துடன் வளர்ந்தோமென நம்புகிற நாம் இன்றைக்கு நமது பிள்ளைகளை ஆசிரியர்கள் அடிப்பதை விரும்பவில்லைதான். என் மகன் படித்து முடித்த பள்ளிகளில் கார்ப்போரல் தண்டனைகள் இல்லாதது இயல்பாக நடந்தது. இருந்திருந்தால் நான் அதை விரும்பியிருப்பேனா என்பது கேள்விக்குறியென்றால் இன்றைய சூழலுக்கு என்னதான் தீர்வு என்பதற்கும் என்னிடம் சரியான விடையில்லை.
ஒரு தாய் எப்படி அன்பையும் கண்டிப்பையும் பிள்ளைகளிடம் ஒருசேரக் காட்டுவாளோ அதே போன்ற கருணை உள்ளம் ஆசிரியருக்கு இருக்க வேண்டியதும், தங்கள் கண்ணின் மணிகளைக் காக்கும் இமைகளாய் ஆசிரியர்கள் இருப்பார்கள் எனும் நம்பிக்கை பெற்றோருக்கு இருக்க வேண்டியதும் அவசியமாகிறது. தாயுமாய் ஆசிரியர்கள் இருக்கையில் தண்டனைகள் வரம்பு மீற வாய்ப்பில்லை. இந்த பரஸ்பர நம்பிக்கை காப்பாற்றப்பட்டால் வரம்பின் எல்லையை வரையறுப்பதிலுள்ள சிக்கல்களும் தீரக் கூடுமென்றே நினைக்கின்றேன்.
***
இந்த ஆசிரியர் தினம் இதோ நான் பகிரப் போகும் நினைவுகளைத் தாங்கி நன்றியுடன் நகர்ந்தது நேற்று. கடந்த மாதம் நெல்லை சென்றிருந்த போது எங்கள் பள்ளியாகிய இக்னேஷியஸ் கான்வென்டுக்குச் சென்று வந்தது பற்றி
சென்ற பிட் பதிவில் குறிப்பிட்டிருந்தேன். நானும் தங்கையர் இருவரும் பிள்ளைகளுடன் சென்றிருந்தோம். படிப்பினை முடித்து பல ஆண்டுகள் ஆகிவிட்டபடியாலும், எங்களுக்கு எடுத்த ஆசிரியர்கள் பலரும் ஓய்வு பெற்று விட்டதைக் கேள்விப்பட்டதாலும், வகுப்பு நாள் எனில் மாணவருக்கு இடைஞ்சலாய் இருக்கக் கூடும் என்பதாலும் நாங்கள் தேர்ந்தெடுத்தது ஒரு அழகான ‘ஞாயிறு’.
வாசலில் இருந்த காவலாளி ‘நாங்கள் பழைய மாணவியர்’ என சொன்னதும் மிகுந்த பரிவுடன் ‘போங்க, போய் நல்லா சுத்திப்பாருங்க. பசங்களுக்கு எல்லா இடமும் காட்டுங்க. கொஞ்ச நேரம் அமைதியா உக்காந்துட்டும் வாங்க’ என்றார். அவருக்கும் நன்றி.
ஒவ்வொரு வகுப்பு இருந்த கட்டிடங்களுக்குக்கும் மைதானங்களுக்கும் தேவாலயத்துக்கும் சென்று வந்தோம். எம்மைச் செதுக்கிய ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் நினைவுக்கு வந்தனர். கூடப்படித்தவர்கள் எல்லாம் பச்சை வெள்ளை சீருடையில் சினிமாவில் வரும் ஃப்ளாஷ்பேக் போல அவ்விடத்தில் தோன்றி அங்குமிங்குமாய் நடமாடினால் எவ்வளவு நன்றாக இருக்குமென்ற சிறுபிள்ளைத்தனமான ஏக்கம் எழுந்தது.
அத்தனை இடங்களையும் படம் எடுத்தேன், எனக்காக மட்டுமல்ல எனது பள்ளியின் பழைய மாணாக்கர் அனைவருக்காகவும். அப்படங்களின் தொகுப்பு இங்கே:
[எம் பள்ளி மாணவியரால் ஃபேஸ்புக்கில் பல இலட்சம் பக்கப் பார்வைகளைப் பெற்ற ஆல்பமாக உள்ளது. அனைவரையும் நன்றியோடு நினைவு கூர்ந்திட உதவும் தொகுப்பாக அது அமைந்து போனதில் மகிழ்ச்சி.]
மற்றவருக்கு இப்படங்கள் வெறும் கல்லும் கட்டிடமும், மண்ணும் மைதானமுமே. அங்கு கற்றவருக்கோ தாய்வீடு போல. தவழ்ந்து வளர்ந்த வீட்டில் அமர்ந்து கதை பேசிய திண்ணை, ஓடி விளையாடிய முற்றம், நிலாச் சோறு உண்ட மொட்டைமாடி இவற்றின் மீதான் நேசம் போலவே அங்கிருந்த வகுப்பறைகளுடனும், மரத்தடிகளுடனும், மாடிப்படிகளுடனும், நடனம் நாடகம் என அசத்திய மேடையுடனும் அளவில்லாப் பாசம் பொங்கியது.
விடுதிக் கட்டிடம் அருகே சென்ற போது மாடி வராந்தாவில் நின்றிருந்த மாணவி நீங்கள் யாரென சைகை செய்ய அறிமுகம் செய்து கொள்ளவும் ‘எந்த வருடத்தில் முடித்தீர்கள்’ எனக் கேட்டாள். சொன்னபோது நெஞ்சில் கை வைத்து ‘ஏ ஆண்டவரே. நானெல்லாம் அப்போது பிறக்கவே இல்லையே!’ என்றபடி மற்றவர்களைக் கூவி அழைத்தாள். அவர்களுடன் அளவளாவும் ஆசையில் தங்கை கீழே அழைக்க, ‘அனுமதியில்லை’ என்றார்கள் வருத்தத்துடன். ‘ஆகா, விதிகளை மீறாத நல்ல பிள்ளைகள்’ என மெச்சியபடி கையசைத்து விட்டு நகர்ந்தோம்.
இன்னும் இருபது இருபத்தைந்து வருடங்கள் கழிந்து அவர்களில் எவரேனும் நெஞ்சம் நிறைய நன்றியுடன் இப்படி பள்ளியினை வலம் வரக் கூடும். அப்போதைய மாணவியர் திகைப்பும் மகிழ்வுமாய் அவர்களை நோக்கிக் கையசைக்கக் கூடும்.
காலச் சக்கரத்தின் சுழல்வில் எங்கெங்கோ இடம்பெயர்ந்தாலும், எத்தனையோ நிகழ்வுகள் அனுபவங்களில் நாம் உலகைக் கற்றாலும், பயின்ற பள்ளி ஆழ்மனதில் நீங்கா மதிப்புடன் இடம் பெறுகிறதென்றால் அதற்குக் காரணம் சொல்லித் தந்த ஆசிரியரும்தானே!!
***
‘
அ, ஆ’ அறிவித்து, அறிவுக் கண் திறந்து, பதின்ம வயதில் பக்குவம் தந்து வளர்ச்சியின் ஒவ்வொரு படியிலும் கூட இருந்த பள்ளியுடனான பந்தம், பேபி க்ளாஸ் என அழைக்கப்பட்ட யுகேஜி-யுடன் சேர்த்து பதிமூன்று வருடங்கள் என்பதனால் ஒருவித ஓரவஞ்சனையுடன் கல்லூரிக்குச் செல்லாமல் வந்து விட்டதாக நினைக்க வேண்டாம். நேரம் அமையவில்லை. அடுத்த முறை நிச்சயம் செல்வோம். ஆனால் அம்மை அப்பனை அழகாய் வலம் வந்து ஞானப்பழத்தைப் பெற்றுக் கொண்டப் பிள்ளையாரைப் போல எங்கள் மூவருக்குமே கல்லூரியில் தமிழ் வகுப்பெடுத்த, தற்போது ஓய்வு பெற்று விட்ட பேராசிரியை திருமதி. விமலா சாமுவேல் அவர்களை அவரது இல்லம் சென்று சந்தித்தோம் ஒரு மதிய நேரத்தில்.
சற்றும் எங்களை எதிர்பார்த்திராத அவர் ஆரத் தழுவி வரவேற்றார். ‘இத்தனை வருடங்கள் என் ஆசிரியர்களைச் சந்தித்து, என்னைப் பற்றிக் கேட்டுவந்த உங்களைப் பற்றி, உங்கள் ஆசிரியர் என்ன சொல்கிறார் எனப் பார்க்கிறேன்’ என்றபடியே கூட வந்த மகனைப் பார்த்து ‘உங்கம்மா ரொம்ப தங்கமான ஸ்டூடண்ட்பா’ என்றுதான் தன் பேச்சினையே ஆரம்பித்தார்:)! . ‘அந்த காலத்தில் எப்படிக் கதை கவிதையெல்லாம் எழுதுவா தெரியுமா?’ என்றார். இப்போதும் தொடர்வதை என் தங்கைகள் சொல்லக் கேட்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தார். ‘கணினி அத்தனை பரிச்சயம் இல்லை. கணவர் ஏதேனும் காட்டினால் பார்ப்பேன்’ என்றவரிடம் ‘வலையில் என் படைப்புகளைப் பாருங்கள்’ என்று சிரமப் படுத்த விரும்பவில்லை. கல்லூரி காலத்தில் இவரே எனக்கு எழுத உற்சாகம் தந்தவர். கல்லூரியில் இருந்த ஐந்து வருடங்கள் மட்டுமின்றி அதன் பின்னரும் ஓரிரு வருடங்கள் என் படைப்புகளை வாங்கி ஆண்டுமலரில் வெளியிட்டவர். அருமையாகப் பாடமெடுத்துத் 'தமிழை அமுதென்று' உணர வைத்த ஆசிரியர். அவருக்கு இங்கு என் வணக்கங்கள்.
மாணவியர் நாங்கள் மூவரும் அவருடன் நின்று புகைப்படமெடுத்துக் கொண்டோம். கல்லூரியின் தற்போதைய மாற்றங்கள் பற்றியெல்லாம் பேசிக் கொண்டிருந்தார். விடைபெறும் போது எம் பிள்ளைகள் அனைவரையும் உச்சி முகர்ந்து ஆசிர்வாதித்தார் எமது அன்னையைப் போல. வீடு திரும்பியதும் தம்பியுடன் இதைப் பகிர்ந்த வேளையில் சொன்னான் ‘
ஆண்டுகள் எத்தனை கடந்தாலும், ஆசிரியருக்கே மறந்தாலும் மாணவர் தேடிச் சென்று பார்ப்பதும், அதனால் அவருக்குக் கிட்டும் பரவசமும் உன்னமான இப்பணிக்குத் தன்னை ஒப்படைத்தவருக்கு மட்டுமே வரமாய் வாய்த்த ஒன்று!’ என. எத்தனை உண்மை.
அத்தனை ஆசிரியப் பெருந்தகையினருக்கும் வாழ்த்துகளும் வணக்கங்களும்!!
*** *** ***
13 செப்டம்பர் 2010, உயிர்மை.காமின் ‘உயிரோசை’ இணைய இதழில்..
நன்றி உயிரோசை!