ஞாயிறு, 25 செப்டம்பர், 2011

சித்திரப் பூக்கள் - பெங்களூர் லால்பாக் ஆகஸ்ட் 2011 கண்காட்சி (பாகம்-2) - ( Bangalore Lalbagh Flower Show )

பாகம் 1 இங்கே.

#1 பிறந்த குழந்தையின் பிஞ்சுப்பாத வண்ணம்

#2 வெள்ளை ரோஜா இளஞ்சிகப்புடன் கூட்டணி அமைத்து..

#3 நித்திய கல்யாணி (Catharanthus_roseus_white)
பனித்துளி ஏந்திப் பால் வெள்ளையில்..

#4 போகன்விலா


#5. த்ரீ ரோசஸ்
அன்று மலர்ந்ததாய் ஒன்று
முன் தினம் முகிழ்ந்து விரிந்த ஒன்று
முதிர்ச்சியில் உலர்ந்து கவிழ்ந்து ஒன்று
வாழ்வின் தத்துவம் இதுவென்று..

#6 முதல்வனே.. வனே..சென்ற பதிவில் சொன்னது போல ஒவ்வொரு கண்காட்சியிலும் பெரிய அளவாலும், வியக்க வைக்கும் விதவிதமான நிறங்களினாலும் (shade) முதல் பரிசை விடாமல் தக்க வைத்துக் கொள்ளும் கோழிக் கொண்டை (Cock's Comb). முன்னர் இளஞ்சிகப்பு, ஆழ்சிகப்பில் இவற்றைப் படமாக்கியிருக்கிறேன். இந்த வண்ணத்தில் இம்முறைதான் பார்த்தேன். மெகா தங்க மலர்:)!

#7 உருக்கி ஊற்றி அச்சில் வார்த்த தங்க மலர்கள் மத்தியில் மாணிக்கப் பதக்கமாக சிகப்பு அந்தூரியம் (விற்கிற விலையில் சாத்தியமா என்றெல்லாம் கேட்காதீர்கள். கர்நாடகத்தில் சாத்தியமே, நாட்டுநடப்பை உன்னிப்பாகக் கவனிப்பவராயின் புரிந்திருக்குமே இந்நேரம்!)


#8 டாலியா (Dahlia)

#9 பாதைகளின் நடுவே பல இடங்களில்.. பல வண்ணங்களில்.. வகைகளில்..

#10 ஆயிரம் மலர்களில் சாப்பிடக் கூடிய ஒரே வவையாக..:)!

#11 சென்ற கண்காட்சியில் இதே இடத்தில் தன் மகனோடு பலூன் விற்க வந்திருந்த இதே மனிதரைப் படம் பிடித்திருந்தேன். இந்த முறை இரண்டு மகள்களுமாகக் குடும்பத்துடன்..

#12 ‘மூச்சை’க் கொடுத்து உழைக்கிறார் மூன்று குழந்தைகளையும் ஆளாக்க..அந்தக் கண்களிலிருக்கும் கனவுகள் யாவும் நனவாக வாழ்த்துவோம்!

#13 மக்கள் கூட்டம் தொடர்ச்சியாக மக்கள் வந்தபடியேதான் இருந்தார்கள் என்றாலும் எப்போதும் போன்ற பெரும் கூட்டம் இல்லையென்றே சொல்லவேண்டும். இன்னும் சிறப்பாக செய்திருந்திருக்கலாமே எனும் கருத்து பரவலாக இருந்தது.

கண்ணாடிமாளிகைக்கு தவிர்த்து வெளிப்புறம் வழக்கமாக சிறுசிறு பிரிவாக பலவித மலர்கள் காட்சிக்கும் விற்பனைக்குமாக இருக்கும். அவை இந்த முறை அவை இல்லாதது புகைப்பட ஆர்வலருக்கு மட்டுமின்றி பொதுமக்களுக்கும் பெரும் ஏமாற்றத்தைத் தருவதாக இருந்தது, அதிக அக்கறை எடுக்கப்படவில்லையென. தனிமலராக படம் எடுக்கத் திறந்த தோட்டமே வசதி. போகன்விலா தவிர்த்து ஏனைய யாவுமே கூட்டம் மிகுந்த க்ளாஸ் ஹவுஸ் உள்ளிருந்தவையே.

இருந்தாலும் மக்கள் இயற்கை தீட்டிய சித்திரப்பூக்களிடம் மனதைப் பறிகொடுத்து போலிஸ் கெடுபிடியைச் சட்டை செய்யாமல் ஆங்காங்கே நின்று நின்று ரசிப்பதும், மலர்களை மட்டுமின்றி அவற்றின் அருகே நின்று படம் எடுப்பதுக் கொள்வதுமாக மகிழ்ச்சியுடனேயே வலம் வந்தார்கள்.

#14 புன்னகைப்பூ(க்கள்)


ஒவ்வொரு கண்காட்சித் தொகுப்பையும் கண்ணாடி மாளிகை ஷாட்டுடன் முடிப்பது வழக்கமாகி விட்டது:)!

#15 நீங்காத நினைவுகளை நெஞ்சோடு நிறுத்த..முந்தைய மலர் கண்காட்சிப் பதிவுகள்:
1. பெங்களூரு லால்பாக்-குடியரசுதின மலர் கண்காட்சி 2010
2. மலரோடு மலராக..-பெங்களூரு லால்பாக்கில்..
3. 2011 பெங்களூரு குடியரசு தின மலர் கண்காட்சி புகைப்படங்கள்
4. தலைநகரின் தாமரைக் கோயில்-பெங்களூரு மலர் கண்காட்சியில்..-சுதந்திரதின சேதி சொல்லி..
5. ஆயிரம் மலர்களே.. - பெங்களூர் லால்பாக் ஆகஸ்ட் 2011 கண்காட்சிப் புகைப்படங்கள் (பாகம்-1)


வெள்ளி, 23 செப்டம்பர், 2011

ஆயிரம் மலர்களே.. - பெங்களூர் லால்பாக் ஆகஸ்ட் 2011 கண்காட்சிப் புகைப்படங்கள் - பாகம் 1 - ( Bangalore Lalbagh Flower Show )

ஆகஸ்ட் 2011 மலர் கண்காட்சியில் கண்ணாடி மாளிகைக்குள் காட்சிப் படுத்தப்பட்டவை மட்டும் 572 வகை என்றும், பூங்கா எங்குமாக சேர்த்து தோட்டக்கலைப் போட்டியில் பங்கு பெற்றவை 593 வகை என்றும் தெரிவிக்கிறது புள்ளி விவரம். எண்ணவே வேண்டாம் சுற்றும் முற்றும் பார்த்தாலே தெரியும் வாருங்கள் பூக்களின் மத்தியில் புகுந்து ஒரு நடை போய் வரலாம்..

விருப்பமான படங்களைப் பெரிது படுத்தி ரசித்திடுங்கள். பெயர் குறிப்பிடாத மலர்களைப் பற்றித் தெரிந்திருந்தால் சொல்லிச் செல்லுங்கள். குறித்துக் கொள்கிறேன்:)!

#1 மஞ்சள் லில்லி மலர்கள் (Day Lilies)


#2 பூப்பூவா.. (Lilacs)


#3 பெட்டூனியா..#4 டாலியா (Dahlia) எத்தனை வண்ணங்களில்..

#5 கோழிக் கொண்டைகள் (Cock's Comb)
‘நாங்க மட்டும் குறைஞ்சவங்களா?’ எனப் பல வண்ணங்களில் மிரட்டும் அளவுகளில்.. ஒவ்வொரு வருடமும் முதல் பரிசைத் தட்டியபடி [காட்சி ஆரம்பித்து ஒருவாரம் ஆன நிலையில் கால் கடுக்க நின்றதில் சில களைத்து வாடி..]

#6 பால்சம்

இந்த மலர்கண்காட்சிகளுக்கு பின்னால் ஒரு சரித்திரமும் உள்ளது. 1922_ஆம் ஆண்டு மைசூர் தோட்டக்கலை சங்கம் வருடத்துக்கு இருமுறை கோடைக் காட்சி, குளிர்காலக் காட்சி என நடத்த ஆரம்பித்தது. அதனுடன் அரசின் தோட்டக்கலைத் துறை 1951-ல் கைகோர்த்துக் கொண்டு வருடம் இரண்டு காட்சிகளை குடியரசு தினம் மற்றும் சுதந்திரதினத்தையொட்டி நடத்த ஆரம்பித்து இன்று வரை தொடர்கிறார்கள்.

இந்த ஆகஸ்டில் தலைநகர் தில்லியின் தாமரைக் கோவிலை பல ஆயிரம் வெள்ளை ரோஜாக்கள் மற்றும் சம்பங்கி, நந்தியாவட்டைகளால் எழுப்பியிருந்த அழகை இங்கே பார்த்து மகிழ்ந்தீர்கள்.

#7 கொனார்க் சக்கரம்
அடுத்த முக்கியத்துவம் ஒரிசா சூரியக்கோவிலின் இந்த கொனார்க் சக்கர வடிவமைப்புக்குத் தரப்பட்டிருந்தது. இந்தச் சக்கரம் இந்திய அரசாங்க முத்திரையாக சில நோட்டுத்தாள்களில் இடம் பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

#8 END POLIO
ரோட்டரி சக்கரம் போலியோவுக்கு முடிவு கட்ட அழைத்து..

காய்ந்த மலர் கொண்டு செய்யும் அலங்காரங்கள், தாய், டட்ச் மற்றும் ஜன்னுர் மலர் அலங்காரங்கள் பயிற்றுவிக்க படுவதாக அறிவித்திருந்தார்கள். காட்சிப்படுத்தப்பட்டிருந்த சில அந்த வகையைச் சேர்ந்தனவா எனத் தெரியாது. பகிர்ந்து கொள்கிறேன்.

#9

#10

#11

#12 வெள்ளை லில்லிகள்

#13 செந்நாரை மலர்கள் (Anthurium)

#14 வெள்ளை அந்தூரியம்

#15 பச்சையிலும்..

ஊட்டியின் ஃபெர்ன் ஹில் கார்டன் குளிர் பிரதேசப் பூக்களின் 40 வகைகள் காட்சிப் படுத்தப்பட்டிருந்தன. அவற்றில் சில பார்வைக்கு:

#16

#17

#18

#19 சாமந்திப்பூக்கள்

#20 லிமோனியா

#21

சிலவற்றுக்குத் தமிழில் பெயர் தெரியவில்லை. பூக்களை ரசிக்க மொழி ஒரு தடையா என்ன:)? ரசிப்போம் வாங்க இந்த ஓரங்குலப் ப்ரிமுலா கண்சிமிட்டும் அழகை..

#22 பேரழகி ப்ரிமுலா இச் சின்னஞ்சிறு மலர் ஃப்ளிக்கர் தளத்திலும் பலர் மனதைக் கொள்ளை கொண்டு விட்டது:)!
***

‘ஆயிரம் மலர்களே..’ எனத் தலைப்பிட்டு எண்ணூற்று எண்பத்து எட்டு மலர்களைதான் பாகம் ஒன்றில் காட்டியிருக்கிறேன். மீதம் நூற்றுப் பனிரெண்டுடன் அடுத்த பாகம் “ஒவ்வொரு பூக்களுமே..” வெகு விரைவில்:)!

*****

புதன், 21 செப்டம்பர், 2011

யுத்தம் - உயிரோசையில்..


இரு பக்கத்தினின்றும்
தாராளமாக
இறையப்படுகின்றன வார்த்தைகள்
பறவைகளுக்கான
தானியத்தைப் போல

வேடிக்கைக்குக் காத்திருந்தவர்கள்
கொத்திக் கொத்தி ருசித்தனர்
புறாக்களைப் போல

ஒவ்வொரு
மணிக்குள்ளிருந்தும்
மனிதப் பண்புகள்
சிரிப்பாய்ச் சிரிக்க

உண்டு களித்துப்
புறாக்கள் கொழுக்க

நல்லுறவும்
நேசக்கரம் இனி நீளுவதும்
கேள்விக் குறிகளாக

இடைவிடாது இறைத்ததில்
கைகள் சோர்ந்து,
தானியக் கூடைகளும் காலியாக

யுத்தம் முடிவுக்கு வருகிறது
புறாக்கள் பறந்து விட்டிருந்தன

போர்க்களமெங்கும்
அவை விட்டுச் சென்றிருந்த
எச்சங்கள்

காலத்தாலும்
கழுவ இயலா
கசப்பான மிச்சங்களாக.
***

படம்: இணையத்திலிருந்து..

29 ஆகஸ்ட் 2011 உயிரோசை இதழில்.., நன்றி உயிரோசை!

ஞாயிறு, 18 செப்டம்பர், 2011

நீர்க்காத நம்பிக்கை - பண்புடன் இணைய இதழ் - புகைப்படக்கலை செப்டம்பர் 15, 2011

கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில்..” என்றபடி இவ்வருட சுதந்திர தினத்தன்று மலர்ந்திருக்கிறது பண்புடன் குழுமத்தின் புதிய இணைய இதழ். பிரதி மாதம் 15ஆம் தேதி வெளியாகும் இதழின் இம்மாத புகைப்படக்கலை பக்கத்தில் எனது புகைப்படங்கள் எனது வரிகளுடனே. நன்றி பண்புடன்!1. ஓய்வு காலத்தில்..
தள்ளாத வயதிலும் தன் காலில் நிற்க விரும்பும் வைராக்கியம்?
அல்லது
தனக்கான உணவைத் தானே தேட வேண்டிய கட்டாயம்?
***

2. நீர்க்காத நம்பிக்கை நீர்க்குமிழி வாழ்வில்..
நம்பிக்கைக் காற்று
நகற்றும் நீர்க்குமிழிகள்
நொடியிலே மறைந்து
கனவுகளைக் கரைத்தாலும்
தொடருகிறது வாழ்க்கை
நாளும் இவருக்கு

உடைவதை பற்றிக் கவலைப்படாது
உருவாக்குவதில் கவனம் வைத்து..
***

வெள்ளி, 16 செப்டம்பர், 2011

வண்ணக் குடைகள் விற்பனைக்கு.. - கீற்றினில்..

பால் வெள்ளையில்
சின்னச்சின்ன மஞ்சள் பூக்கள்

நீல ஆகாயத்தில்
நீந்தும் வண்ணப் பலூன்கள்

துள்ளியோடும் ஜெர்ரிகளைத்
துரத்தும் டாம்கள்

பசுஞ்சோலையில் மரவிழுதைப்
பற்றியாடும் டோராக்கள்.

கைக்கு இரண்டாகச் சுழற்றியபடி
சிக்னல் நிறுத்தத்தில்
வண்டிகளுக்கு நடுவே
புகுந்து புறப்பட்டுக்
கவனம் ஈர்த்துக் கொண்டிருந்த
குடை வியாபாரி

சடசடவென மழை பூக்கவும்
அவசரமாய்க் குடைகளை மடக்கிப்
பத்திரமாய்ப் பைக்குள் திணித்தவாறு
ஒதுங்க இடம் தேடுகிறான்.
***

15 செப்டம்பர் 2011, நேற்றைய கீற்றினில்.., நன்றி கீற்று!

புதன், 14 செப்டம்பர், 2011

அன்புதான் அனைத்திற்கும் ஆதாரம் - கோமதி நடராஜனின் கட்டுரைத் தொகுப்பு - ஒரு பார்வை (வல்லமையில்..)

சிந்திக்க ஒன்றும் சிரிக்க ஒன்றுமாக இரண்டு வலைப்பூக்களை நிர்வகித்து, இணையத்தில் ‘கோமா’ என அறியப்பட்டும், அழைக்கப்பட்டும் வரும் திருமதி. கோமதி நடராஜனின் முதல் புத்தகம். கடந்த முப்பது ஆண்டு கால எழுத்துப் பயணத்தில், வாழ்க்கை அனுபவத்தைக் கூர்ந்த அவதானிப்புடன் அந்தந்த காலக்கட்டத்திலேயே பதிந்து வைத்தவற்றின் முழுத் தொகுப்பு. இதில் சில கட்டுரைகள் பத்திரிகைகளில் வெளியானவை. சில அவரது வலைதளங்களில் பகிர்ந்தவை.

எனது பதினைந்தாவது வயதிலிருந்து இவரது எழுத்துக்களைத் தொடர்கிறேன் என்பது ஒரு விசேஷம். எழுபதுகளில் இவரது முதல் சிறுகதையே ஆயிரம் ரூபாய் பரிசினை வென்று பேசப்பட்ட ஒன்றாக அமைந்திருந்தது. எண்பதுகளில் என் எழுத்துப் பயணமும் ஆரம்பமாக இருவரும் ஒரே சமயத்தில் ‘நண்பர் வட்டம்’ சிற்றிதழிலும், பிறகு 2000-ன் ஆரம்பத்திலிருந்து திண்ணை இணைய இதழிலும் எழுதி வந்துள்ளோம். திரு நெல்லைக் கண்ணன் அவர்களது சிறப்பான அணிந்துரையுடன், திரு லேனா தமிழ்வாணனின் மணிமேகலைப் பிரசுர வெளியீடாக அமைந்த இவரது முதல் தொகுப்பை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதில் எனக்கு அளவற்ற மகிழ்ச்சி.

தான் பார்த்தவற்றினின்று மட்டுமின்றி தனைப் பாதித்த, வருத்திய விஷயங்களிலிருந்தும் படிப்பினையை எடுத்துக் கொண்டதோடன்றி அதைக் கற்பித்திவர்களையும் போற்றும் பண்பே சொல்கிறது நமக்கு இப்புத்தகத்துக்கும் அன்பே ஆதாரமாக அமைந்திருப்பதை: “சிலர் எப்படி இருக்க வேண்டும் என்று கற்றுத் தந்தார்கள். ஒரு சிலர் எப்படி இருக்கக் கூடாது என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லித் தந்தார்கள். இருவருமே நான் போற்றும் ஆசிரியர்கள்தாம்.

சுயமுன்னேற்றப் புத்தகங்களைத் தேடித் தேடி வாசிக்கிறோம். நம் சுயத்தை அறிந்து கொள்ள, புடம் போட்டு வெளிவர உதவும் மந்திரக் கோலாக இப்புத்தகம் வாசிப்பவரால் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்படும் வகையில் அமைந்திருக்கிறது.

அன்றாட வாழ்வில் அனுசரிக்கப்பட வேண்டிய பலவற்றை, அவசர உலகில் நின்று சிந்திக்க அவசியமற்றதாய் நாம் ஒதுக்கிச் செல்லும் தவறுகளை, உணர்த்தும் விதமாக அமைந்த தனது கருத்துக்களை வலிந்து திணிக்கவும் முற்படவில்லை.

தான் முப்பது ஆண்டு காலமாக சேகரித்த பொக்கிஷம் என்கிறார் இப்புத்தகத்தை ஆசிரியர். நமக்கும் அப்படியே. கொட்டிக் கிடக்கும் பொற்காசுகள் ஒவ்வொன்றும் வாசிப்பவர் வாழ்வை வளமாக்கப் போவது நிச்சயம். இதமான அனுபவ மொழிகளாய்ச் செதுக்கி வைத்ததோடு தன் வேலை முடிந்ததெனக் கருதுகிறார் தான் சொன்ன கருத்துக்கே முன் மாதிரியாக நின்று: “அண்டி வந்து கேட்டால் ஒழிய அறிவுரை வழங்காதீர்கள். இந்த விஷயத்தில், நாம் எல்லோரும் அலமாரியில் அடுக்கி வைக்கப்பட்ட புத்தகம் போல் காத்திருப்போம்.

இதோ இப்புத்தகமும் காத்திருக்கிறது. வாருங்கள் உள்ளே செல்வோம்.

மொத்தம் பதினான்கு அத்தியாயங்கள். ஒரு சிலவற்றினின்று ஒருசில துளிகளைப் பகிர்கிறேன்.

குடும்பத்தைக் கோவிலாக்குவோம்’ அத்தியாயத்தில், “மழையில் நனைகிறேன், வெயிலில் காய்கிறேன், எல்லாவற்றிற்கும் நான் தானா அகப்பட்டேன் என்று குடையும், குளிர் நிழல் தரும் ஆலமரமும் நினைத்தால் அது எத்தனை அபத்தமோ அத்தனை அபத்தம் குடும்பத்தின் ஒற்றுமையைப் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்கவேண்டியவர்களின் சலிப்பும் முணுமுணுப்பும்.

உரையாடும் கலை’யில், “சிலருக்கு, அடுத்தவரை ஏளனப்படுத்திப் பார்ப்பதில் அலாதியான சந்தோஷம் இருப்பதாக நினைத்து, வார்த்தைகளுக்கு நடுவே குத்தலும் கேலியும் விதைத்து உரையாடுவர்.... அப்படிப்பட்டவர்கள் உண்மையான சந்தோஷத்தின் அர்த்தத்தை உணராதவர்களாகத்தான் இருக்கமுடியும்..” என்கிறவர் ஜடப்பொருட்களுக்குத் தரும் கவனிப்பையும் கரிசனத்தையும் ஏன் கண்ணெதிரே நடமாடும் மனிதர்களுக்கு இவர்கள் தருவதில்லை என ஆற்றாமையுடன் வினவுகிறார். “கனிவாய் உரையாட, மனித நேயத்தின் பெருமையை உணர்ந்திருந்தாலே போதும்” என்கிறார்.

சிற்பிகளைச் செதுக்கும் சிப்பிகளே!’, “குழந்தைகளின் மனதில் ஒரு நல்ல குணம் பதிய வேண்டும் என்று உண்மையாகவே நீங்கள் விரும்பினால், அதைச் சொல்லிக் காட்டுவதை விடச் செயலில் காட்டுவதே சிறந்தவழி....பிஞ்சுக் கால்கள் என்றுமே தனக்கு முன்னே தெரியும் காலடிச் சுவடுகளைப் பின்பற்றித்தான் நடை போடும்....குழந்தைகள் உங்கள் அடிமைகள் என்ற தவறான எண்ணத்துடன் அவர்களை அடக்க முயலாதீர்கள்....குழந்தைகளிடையே அன்பு, கண்டிப்பு இவற்றில் பாரபட்சம் காட்டினால், அவர்களிடையே நிலவ வேண்டிய ஒற்றுமையை முளையிலேயே கிள்ளி எறியும் மோசமான தோட்டக்காரர் நீங்கள்.

உதவும் மனங்களுக்கு உகந்த குணங்கள்.’ பிரதிபலன் எதிர்பாரா சுனை நீராக மனம் இருக்க வேண்டுகிறார். “உதவி பெற்றவரே உங்களுக்கு உதவ வேண்டும் என்று இறைவனும் நினைத்திருந்தால், இந்தப் பரந்த உலகில், உறவு வட்டம் மிகவும் சுருங்கியிருக்கும்.” அடுத்தவருக்கு உதவும் சந்தர்ப்பத்தை வழங்கியதற்கு இறைவனுக்கு நன்றி சொல்லப் பழகிக் கொண்டால் ‘நான் உதவினேன்’ எனும் மமதை மறையும் என்கிறார்.

ஆளாக்கினோம் என்பதற்காகக் குழந்தைகளிடம் கூட பிரதிபலனை எதிர்பாராதீர்கள் என்கிறார். பெற்றோருக்கும் உற்றாருக்கும் செய்கிற உதவிகளைச் சொல்லிக் காட்டுபவர்களுக்காக கடமைக்கும் உதவிக்கும் இடையேயான வித்தியாசத்தை அழகான உதாரணத்துடன் விளக்கியிருக்கிறார்.

நாம் நாமாக..’ எந்நேரமும் இருக்க முயன்றிடுவது சரிதானா எனும் கேள்வியை எழுப்புகிறார். “நம் சந்தோஷம், அடுத்தவர் வேதனையில் அமையக் கூடாது என்பதில் மட்டுமே கவனமாக இருந்தால் போதும்.” என்கிறார்.

பாசம் நிறைந்திருக்க வேண்டிய குடும்ப அமைப்பில் முன்னோர் விட்டுச் செல்லும் பணத்தினால் எப்படியெல்லாம் பூசல்கள் எழுகின்றன என்பதைச் சொல்லுகிறது ‘பத்திரம் பத்திரம்’: “நம் சொந்த முயற்சியில் ஈட்டிய ஒரு கோடி நமக்கு அடிமை என்றால், அடுத்தவர் உரிமையைத் தட்டிப் பறித்து எடுத்த ஒற்றை ரூபாய் ஆயுளுக்கும் நம்மை ஆட்டி வைக்கும் சர்வாதிகாரி.”

மன அஜீரணத்துக்கு மருந்து’ வழங்குகிறார். ‘நாணல் போல் வளைந்து சிகரம் போல் உயர..’ வழிகாட்டுகிறார்.

இந்த அத்தியாயங்களுக்கு எல்லாம் சிகரமாக அமைந்திருக்கிறது கடைசி அத்தியாயம்: ‘அறுபதுக்கு அன்புக் கட்டளைகள்’. தமக்கென்று வாழாமல் குடும்பத்துக்காகவே உழைத்து, பிள்ளைகள் வாழ்வை சீரான பாதையில் செல்ல வைத்த பின்னும் தம் மேல் அக்கறையின்றி இருப்பவர் ஆயிரம் ஆயிரம் பேர். ஓய்வு காலத்தில் இவர்கள் அவசியம் கடைப்பிடிக்க வேண்டியவையாக பகிர்ந்திருக்கும் ஆலோசனைகள் பெரியவர்களைப் பரவசப் படுத்துவதாக அமைந்திருக்கிறது. வாசிக்கும் இளைஞர்களும் தம் பெற்றோருக்கு ஆற்ற வேண்டிய கடமைகளைச் சரிவர செய்கிறோமா என சிந்திக்க வைப்பதாகவும் உள்ளது. பெற்ற பலனை மற்றவரும் அடைந்திட ஒன்றுக்குப் பத்தாக வாங்கி வைத்துக் கொண்டு சந்திக்கும் பெரியவர்களுக்குப் பரிசாக வழங்கினால் உங்களை மனதார வாழ்த்தி ஆசிர்வதிப்பார்கள்.

அன்புதான் அனைத்திற்கும் ஆதாரம்”அன்பு எனும் சொல்லுக்கு அகராதியாய், நமைச் சுற்றி இருப்பவரை மதிக்கவும், நம்மை நாமே நேசிக்கவும் சொல்லித் தந்து, அன்பால் மட்டுமே இப்பூவுலகம் சுழல, அன்புடன் வேண்டி நிற்கிறது. படைத்தவரும் உயர்ந்து நிற்கிறார்.

அடுத்து இரண்டு தொகுப்புகளாகத் தனது ஹாஸ்யக் கட்டுரைகளையும், கவிதைகளையும் வெளிக் கொணர ஆசிரியர் எடுத்துவரும் நல்முயற்சி விரைவில் வெற்றிபெற வாழ்த்துவோம்.
***

ன்புதான் அனைத்திற்கும் ஆதாரம்
பக்கங்கள்:76 ; விலை:ரூ.40
பதிப்பகம்: மணிமேகலைப் பிரசுரம்
தொலைபேசி எண்கள் : 044-24342926, 044-24346062
மின் அஞ்சல் : manimekalai1@dataone.in
இணையத்தில் வாங்கிட விவரங்களுக்கு: http://www.tamilvanan.com/tech/book_rate_july_2011.pdf
*** ***

14 செப்டம்பர் 2011, வல்லமை இணைய இதழில்.., நன்றி வல்லமை!

ஞாயிறு, 11 செப்டம்பர், 2011

எண்ணும் எழுத்தும் போட்டிக்குத் தகும் - செப்டம்பர் PiT - மாதிரிப் படங்கள்

மிக சுவாரஸ்யமான அதே நேரம் எளிதாகப் படம் பிடிக்கும் வகையில் ஒரு தலைப்பைக் கொடுத்துள்ளார் நடுவர் MQN. நம் கண்ணுக்குத் தெரிகிற தற்செயலாக அமைந்த எண்கள் மற்றும் எழுத்துக்களை எடுத்துக் காட்டுவதே இம்மாதப் போட்டி.

ஆனால் எண், எழுத்தாகவே எழுதப்பட்ட எதையினையும் படம் பிடித்துக் காட்ட தடா. சில மாதிரிகளை இங்கே பார்ப்போம்.

#T
எலக்டஸ் கிளியின் இருக்கை


எண்ணோ எழுத்து கோடு இழுத்த மாதிரிதான் இருக்க வேண்டுமென்பதில்லை. அதன் வடிவத்திலும் இருக்கலாம். அதே நேரம் படத்தில் கவனத்தை ஈர்ப்பதாகவும் இருக்க வேண்டும்.

#O
‘ஓ’ போடலாம்தானே இதன் வித்தைக்கு..


O ரொம்ப எளிதா பந்திலிருந்து பிழிந்து குடிக்கும் சாத்துக்குடி வரையில் எல்லாவற்றிலும் இருக்கிறதுதான். ரசனையோடு ஒரு ஓ-வை உருட்டி விடுங்கள்.

#H


வீட்டில நம்மைச் சுற்றி பார்த்தாலே எத்தனை தற்செயல் எழுத்தும் எண்ணும் கொட்டிக் கிடக்கின்றன. அப்படி மாட்டிய ஒன்று:

#C
சிங்கத்தின் வாயில்..

என்ன படம் கொடுக்கலாமென விட்டத்தைப் பார்த்து யோசித்த நம்ம அமைதிச்சாரல் மின்விசிறியை Y ஆகக் காட்டி விட்டுள்ளார்:)! அவர் வழியில் சிந்தனையைத் தட்டி விட்டதில் என்ன கிடைத்தது பாருங்கள்:

#X
காலம் பொன் போன்றது
அதை வீண் செய்வது
பெரும் (X)தவறென்கிறதோ
சுவர்க் கடிகாரம்?

#U

நேர்த்தியான கட்டமைப்புக்கு உதாரணம்?
அல்லது
புலம் பெயர் துயரின் அடையாளம்?

எனக்கு இதை U ஆகவே காட்ட விருப்பம் என்றாலும் திருப்பிப் போட்டு D ஆகவும் காட்ட அனுமதிக்கிறார் நடுவர்.அடுத்து வரும் நிலாவை எப்படி லைட்டாத் திருப்பிப் போட்டு D ஆக்கியுள்ளேன் பாருங்கள்:

# D


திருப்பியோ சுழட்டியோ போடுகையில் சில படங்களுடைய லாஜிக் உதைக்குமே என நீங்கள் கருதலாம். உதாரணத்துக்குத் தேனடையைத் திருப்பினால் எப்படி பக்கவாட்டில் அது தொங்கமுடியுமென. ஆனாலும் அது மாதிரியான லாஜிக் பார்க்கத் தேவையில்லைன்னு சொல்லியிருக்கிறார் நடுவர். எனவே தாராளமாய் சுழட்டுங்கள்.

வல்லிம்மா சரியான புரிதலுடன் மேலே அரைவட்டமாக இருந்த ஒரு சன்னலை அப்படியே அலாக்காய் திருப்பிப் போட்டு U ஆகப் போட்டிக்குக் கொடுத்திருக்கிறார். நானானிம்மா சிரித்தபடி ‘நல்லாருக்கே சிரசாசனம்’ என்று சொல்லிச் செல்ல எனக்கும் ஏன் நடுவர் அப்படி ஒரு விதிமுறையை வைத்தார் எனப் புரிந்தது. கொஞ்சம் அப்படி இப்படி அவர் தலையை சரித்துப் பார்க்கச் சொன்னால் பரவாயில்லை. சிரசாசனம் செஞ்சு பார்த்துக் கொள்ளுங்கள் என்றால்..?! அந்த சிரமம் கொடுப்பதைத் தவிர்க்கப் பாருங்கள்:)! மேலும் ஆங்கிலம் மற்றும் தமிழ் எழுத்துக்களுக்கு மட்டுமே அனுமதி! ஏனெனில் பிறமொழிகள் தனக்குத் தெரியாது எனப் பின்வாங்கி விட்டுள்ளார் நடுவர்:)!


#1
நம்பர் 1 இடத்தைப் பிடிக்க நிற்கிறதோ ஒற்றைக் காலில் தவம்?#7


#S

சன்னல்கள், அதன் கம்பிகள், நாற்காலிகளின் கால்கள் என எல்லாவற்றுள்ளும் எண், எழுத்து கிடைக்கும். எங்கே எதிலே தேடலாம் என விவரமாக அறிவிப்புப் பதிவில் சொல்லியிள்ளார் நடுவர் MQN. சூலாயுதத்தில் W தெரிகிற எனது சிவன் படம் உட்பட நடுவர் எடுத்த மேலும் பல அருமையான மாதிரிப் படங்களுக்கும், போட்டி விதிமுறைகளுக்கும் இங்கே செல்க!

அணிவகுக்க ஆரம்பித்து விட்ட போட்டிப் படங்களைக் காண இங்கே வருக! எப்படியெல்லாம் வித்தியாசமாக சிந்தித்திருக்கிறார்கள் நம் நண்பர்கள் என்பதைக் கண்டு மகிழ்க! உங்கள் கருத்துக்களைப் பதிந்து உற்சாகம் நல்குக! அதே உற்சாகத்துடன் போட்டிக்கான உங்கள் படங்களைத் தேதி பதினைந்துக்குள் அனுப்பித் தருக:)!!!

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin