செவ்வாய், 23 நவம்பர், 2010

யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள் - என் பார்வையில்..


பொதுவாக கதைகளை விட கவிதைகளின் மீதான் நேசம் சற்றே தூக்கலாக இருப்பதால் அவற்றையே விரும்பித் தேடி வாசிப்பது வழக்கம். அந்த வகையில் இணையத்தில் நிலாரசிகன் பக்கங்களில் அவரது கவிதைகளுடனேயே அதிக பரிச்சயமாகி இருந்த சமயம். சர்வேசன் நடத்திய ‘நச்’ சிறுகதை போட்டிக்கு நடுவர்களில் ஒருவராக இருக்கும் வாய்ப்பு என்னைத் தேடி வர, அதில் இரண்டாம் பரிசுக்குத் தேர்வான நிலாரசிகனின் ‘அப்பா சொன்ன நரிக்கதை’ வித்தியாசமான களத்தாலும், சொன்ன விதத்தாலும் என்னைப் பிரமிப்பில் ஆழ்த்தியது. அதுவே நான் வாசித்த அவரது முதல் சிறுகதை. 
ஒரு சில நாட்களில் மேற்சொன்ன பரிசு பெற்றக் கதையினையும் சேர்த்துக் கொண்டு வெளிவந்தது அவரது சிறுகதைகளின் தொகுப்பு “யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள்”. 

திரிசக்தி பதிப்பகத்தின் இப்புத்தக வெளியீட்டு விழாவுக்குச் சென்று வந்த தோழி ஷைலஜா என்னுடன் பகிர்ந்து கொண்ட சம்பவத்தைக் குறிப்பிடுவது கதாசிரியரை கெளரவப் படுத்துவதாக அமையும் என நம்புகிறேன். அன்று பலரது புத்தகங்களையும் வெளியிட சிறப்பு விருந்தினராக வந்திருந்த அஸிஸ்டென்ட் கமிஷனர் திரு. ரவி அவர்கள் விழா மேடையில் வந்தமர்ந்ததும் “யார் அந்த நிலாரசிகன்? எங்கே அவர்? அவரை நான் பார்க்க வேண்டும். உடனடியாக மேடைக்கு வரவும்” என ஒலிபெருக்கியில் அறிவிக்க சலசலத்ததாம் கூட்டம். கூச்சத்துடன் இவர் மேடைக்குச் செல்ல, தொகுப்பின் தலைப்பாக அமைந்த ‘யாரோ ஒருத்தியின் டைரிக் குறிப்புகள்’ கதையினை மிகவும் சிலாகித்துக் கூறியதோடு நில்லாது “நிலாரசிகன், இன்று முதல் நான் உங்கள் ரசிகன்!” என்றாராம். இது போன்ற ஆத்மார்த்தமான பாராட்டுக்களே எழுத்தாளனை மேலும் செலுத்துகின்ற உந்து சக்தியாக அமைகின்றன என்றால் அது மிகையாகாது.

த்தகு பாராட்டுக்கான அனைத்துச் சிறப்பையும் கொண்டதுதான் முதல் கதையான 'யாரோ ஒருத்தியின் டைரிக் குறிப்புகள்'. மிகையற்ற வார்த்தைகளே இவை என வாசித்தால் நிச்சயம் உணர்வீர்கள்.

சென்னையிலிருந்து மும்பைக்குப் பயணப்படுகையில் ரயிலில் வாசிக்கவென ஏதேனும் வாங்கும் எண்ணத்தில் பழைய புத்தகக் கடைக்குச் செல்லும் நாயகன், தற்செயலாக காணக் கிடைத்த கிழிந்த டைரியால் ஈர்க்கப்பட்டு அதைப் பத்து ரூபாய் கொடுத்து வாங்கிக் கொள்கிறான். ஏழு வருடங்களுக்கு முந்தைய டைரியின் ஆறுபக்கங்கள் கிழிந்து ஜனவரி ஏழாம் நாளில் தொடங்கி மார்ச் பனிரெண்டு வரைக்குமான குறிப்புகள் காணக் கிடைக்கின்றன. முத்தான கையெழுத்தில் எழுத்துப் பிழைகளுடனான அக்குறிப்புகள், மும்பைக்குக் கடத்தப்பட்டு விற்கப்பட்ட சிறுமியினுடையதாகும். குறிப்புகளை சிறுமியின் பார்வையிலேயே பதிந்திருப்பது உருக்கத்தை அதிகரிக்கிறது.

ஊருக்குத் திரும்பிய இரண்டு வாரங்களுக்குப் பின்னரும் சமூகம் அச்சிறுமிக்கு இழைத்த கொடுமையின் தாக்கத்தில் இருந்து விடுபட முடியாத நிலையில் மறுபடி தில்லிக்குப் பயணப்படுகிறான் நாயகன். அங்கிருந்து ஜான்ஸிக்கு செல்லும் ரயிலில் அவனோடு பயணிக்கும் இருபது வயது யுவதி மேல்பர்த்தில் இருந்து தவற விடும் டைரியைத் தவிர்க்க முடியாமல் வாசிக்க நேருகையில் நாயகனுக்கு ஏற்படும் அதிர்ச்சி வலி குழப்பம் எல்லாம் நம்மையும் தொத்திக் கொள்கிறது.

சிறப்பான ஆரம்பக் கதையே மற்ற கதைகளை விரைந்து வாசிக்கத் தூண்டுதலாய் அமைய, ஒரே நாளில் கீழே வைக்க மனமின்றி மற்ற கதைகளையும் வாசித்து முடித்தேன். நூலில் இடம்பெற்றிருப்பது மொத்தம் பதினேழு கதைகள். ஒவ்வொன்றுமே மாறுபட்ட களங்களில் இயல்பான அழகான எழுத்து நடையில்.

எதையும் எதிர்பாராத தூய்மையான தாயன்பைப் பேசுகிறது 'ஆலம்'.

அக்கம் பக்கத்து குழந்தைகளை அவரவர் குழந்தைகளைப் போல நேசிக்கும் எவரும் ஒன்றிடுவர் 'ப்ரியாக்குட்டி நான்காம் வகுப்பு ‘ஏ’ பிரிவு' சிறுகதையுடன். ஒரு இளைஞனுக்கும் கீழ்வீட்டில் வசிக்கும் சிறுமிக்கும் இடையேயான அன்புப் பிணைப்பு அழகான கவிதையாய். கேன்சரால் பாதிக்கப்பட்ட குழந்தை மருத்துவமனையில் சிரமப்படுகையில் அவனிடம் எழும் தவிப்பு, பிசிறற்றப் பிரியங்களால் நிறைந்தது உலகமென்பதை உணர வைக்கிறது சோகத்தின் நடுவேயும்.

நிஜங்களின் பிம்பமான 'வேலியோர பொம்மை மனம்' பெற்றோரைக் கண்ணெதிரே இலங்கை குண்டு வெடிப்பில் பலிகொடுத்த சிறுமி ஜெயரஞ்சனியை பற்றியது. “அநாதை எனும் வக்கிரச்சொல் ஜெயாவின் செவிகளில் நுழைய முடியாமல் காற்றில் அலைந்து திரிந்தது” என்கிறார் ஆசிரியர். ஆம், காது கேளாத வாய் பேச இயலாத குழந்தை அவள். நேசித்த கரடிப் பொம்மை மட்டுமே அப்போதைய ஒரே ஆறுதலாக இருக்க, முள்வேலி முகாமில் தட்டேந்தி நிற்பவளிடம் மூர்க்கமாக நடந்து கொள்கிறான் ஒரு ராணுவவீரன். பொம்மையைப் பிடுங்கி கருணையே இல்லாமல் பிய்த்துப் போட்ட அவனை ஒரு காலை நேரத்தில், தன் வெள்ளை மனதால்.. அப்பழுக்கற்ற அன்பால்.. வீழ்த்தியது தெரியாமலே தன்வழி நடப்பதாகக் கதை முடிகிறது.

அவள் கை அணைப்பிலிருந்த பிய்ந்த கரடிப் பொம்மையைப் போலவேக் கிழிந்து போகின்ற வாசிப்பவர் மனம், மீண்டும் தன்னிலைக்கு வர அவகாசம் தேவைப்படுகிறது.

வை ஒருபுறமிருக்க..,

நான் மிக மிக ரசித்தவை, ரகளையான விவரணைகளுடன் என்னை மிகக் கவர்ந்தவை 'வால்பாண்டி சரித்திரம்', 'சேமியா ஐஸ்' மற்றும் 'தூவல்':)! பால்ய கால நினைவுகளின், அனுபவங்களின் பிரதிபலிப்பாக அமைந்தவை முதலிரண்டும். வயதுக்கே உரித்தான குறும்புகளின் மொத்தக் குத்தகைக்காரனாக வரும் சிறுவன் பால்பாண்டி 'வால்' பாண்டியாக மாறிப் போவதுவரை அவனது பார்வையிலேயே அட்டகாசமாக நகருகின்றது முதல் கதை. ‘போர்டிங் ஸ்கூலில் போட்டால்தான் உருப்படுவான்’ என அவன் அப்பா முடிவெடுத்து அழைத்துச் செல்லுகையில் நமக்கு ஏற்படும் பரிதாபம் அதை அவன் எதிர்கொள்ளும் விதத்தில் தவிடுபொடியாகி புன்னகைக்க வைக்கிறது.

இதே வாசிப்பின்பம் 'சேமியா ஐஸ்' கதையின் முடிவிலும். சித்தியின் ப்ளாஸ்டிக் செருப்பைக் கொடுத்து சேமியா ஐஸ் வாங்கித் தின்ற குற்றத்துக்காக அடிவாங்கி வேப்பமரத்தோடு அந்த மாற்றாந்தாயால் கட்டிப் போடப்படும் சின்னஞ்சிறுவன், இரவெல்லாம் நின்றபடியே தூங்கிப் பட்டினியாகக் கிடப்பது பார்த்து வருகின்ற பச்சாதாபம் தொலைந்து போய், பொங்குகிறது ஒரு 'குபீர்' சிரிப்பு கதையின் கடைசி வாக்கியத்தால்.

அதுவுமில்லாமல் சின்ன வயது நினைவுகளையும் அழகாய் கிளப்பி விட்டது இந்த 'சேமியா ஐஸ்':)! அப்போது எங்கள் வீட்டில் தெருவில் போகும் ஐஸ் எல்லாம் வாங்க விடமாட்டார்கள். காசும் கிடைக்காது. ‘பழைய டப்பா டபரா இரும்புக்கு சேமியா ஐஸேய்...’ என்று கூவியபடி மணியடித்துச் செல்பவரிடம் ஓவல் டின், போர்ன்விட்டா காலி டப்பாக்களைப் போட்டு ரகசியமாய் சேமியா ஐஸ் வாங்கி வந்து அண்ணன்மார்கள் தர, குதில் போன்றதான துணி போடும் பெட்டிக்குள் ஒளிந்திருந்து உறிஞ்சி உறிஞ்சி சாப்பிட்டிருக்கிறோம் நானும் தங்கைகளும்:))!.

'தூவல்' கதையில் பேனாவின் மீதான நேசத்தைச் சொன்ன விதமும், முடிவைப் படிக்கும் போது ஆரம்ப வரிகளை மறுபடி வாசிக்க வைத்திருப்பதும் கதாசிரியரின் வெற்றி.

சிறுகதைப் பிரியர்களின் சேகரிப்பில் அவசியம் இருக்க வேண்டிய தொகுப்பு.

விலை ரூ:70. பக்கங்கள்: 86. வெளியீடு: திரிசக்தி பதிப்பகம்.

சென்னையில் கிடைக்கும் இடங்கள்: -ந்யூ புக் லேன்ட், தி.நகர் [தொலைபேசி: 28158171, 28156006] மற்றும் டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே நகர்; லேன்ட் மார்க்; சிடி சென்டர்/ஸ்பென்ஸர் ப்ளாஸா.

இணையத்தில் வாங்கிட இங்கே [http://ezeebookshop.com/eshop/product_info.php?products_id=79 ] செல்லவும்.

இதுவே நிலாரசிகனின் முதல் சிறுகதைத் தொகுப்பு. இதையடுத்து இவரது நான்காவது கவிதை தொகுப்பு " வெயில் தின்ற மழை " அடுத்த மாதம் 'உயிர்மை' பதிப்பகத்தின் வாயிலாக வெளிவர உள்ளது. சென்னைவாழ் நண்பர்கள், இலக்கிய ஆர்வலர்கள் அவசியம் விழாவுக்குச் சென்று சிறப்பியுங்கள். விழா குறித்த அறிவிப்பு அவரது வலைதளத்தில் விரைவில் வெளியாகும்.

மென்பொருள் நிறுவனமொன்றில் வேலை பார்த்தபடி கிடைக்கின்ற நேரத்தை எல்லாம் இலக்கியத்துக்கு அர்ப்பணித்து வரும் இந்த முப்பது வயது இளைஞர் நிலாரசிகன் மேலும் பல சிகரங்கள் தொட வாழ்த்துவோம்.

இன்று அவரது பிறந்த தினமும்..

எதேச்சையாக அறிய வந்த போது ஏற்பட்டதொரு இனிய திகைப்பு.

பரிசாக எனது முதல் நூல் விமர்சனம்:)!
*** *** ***



  • ஈரோடு சுப்ரீம் அரிமா சங்க சுவடுகள் இதழிலும்..

செவ்வாய், 16 நவம்பர், 2010

ஒளியிலே.. தெரிவது..- நவம்பர் PiT போட்டி

இம்மாதத் தலைப்பு ‘ஒளி’.

“தீப ஒளி,
சூரிய ஒளி,
நிலவொளி,
பட்டாசு ஒளி,

இப்படி எந்த ஒளியை வேண்டுமானாலும் படம் பிடிச்சு அனுப்புங்க..” என இங்கே அறிவித்திருக்கிறார்கள்.

பகலவனின் ஒளி ஜாலங்களைப் பலவிதமாக முந்தைய போட்டிப் பதிவுகள் சிலவற்றில் காட்டி விட்டுள்ளேன். இப்பதிவில் உள்ள யாவும் பார்வைக்கு வைக்காத புதியவையே.

குறிப்பாக ஒன்றும் ஐந்தும் தலைப்புக்காகவே எடுத்தவை. அவற்றில் ஒன்றையே போட்டிக்குக் கொடுக்க எண்ணியுள்ளேன்.

[படங்கள் கணினித் திரையை விட்டு விலகித் தெரிந்தால் Ctrl மற்றும் minus பொத்தான்களை ஒரு சேர அழுத்தி வேண்டிய அளவுக்குக் கொண்டு வரக் கேட்டுக் கொள்கிறேன்.]



1. ஒரு அகல் ஒரு சுடர் ஒரு மலர்
வாழ்வின் நம்பிக்கையாய்..
***


2. பால் நிலா

***


3. பகலவன் பொன்னொளி

‘நீரிலே.. நீந்துவது.. பொன் மீனா?’
திகைப்பாய் எட்டிப் பார்க்கின்றன மரங்கள்
***



4. அந்தி வானில் சூரியப்பந்து

***


5. ஒளிரும் தீபங்கள்

தீயன துரத்தி
அல்லல் அகற்றி
அகிலம் செழிக்க
பரவட்டும் தீபஒளி!
*** *** ***

இம்மாதப் ஒளிப் படங்கள் இங்கே. போட்டியின் இறுதித் தேதி பதினைந்து அல்ல இருபது என்பதை நினைவூட்டுகிறேன். இதுவரை கலந்திராதவர்கள் ‘ஜோதி’யில் ஐக்கியமாகக் கேட்டுக் கொள்கிறேன்:)!


கயல்விழி முத்துலெட்சுமியின் சிறுமுயற்சி
பயணம் ஐந்தாம் ஆண்டுக்குள் நுழைந்திருக்கிறது நேற்று. அவரை வாழ்த்துவோம்.

சகபதிவாளர்களுடன் கலந்துரையாடி, ‘வியல் விருது’ வழங்கித் தொடங்கியுள்ளார் புதுவருடத்தை.

அப்பதிவில் என் முன் அவர் வைத்த கேள்விகளும் நான் தந்த பதில்களும்..

கேள்வி: நீங்க... கவிதையிலும் கதைகளிலும் ஒருவித நேர்மறை எண்ணங்களை விதைக்கறீங்களே.(பல பின்னூட்டங்களிலும் கூட) அந்த விதைகளின் பலன்கள் எப்படி இருக்குமென்று நினைக்கிறீர்கள்?

பதில்: பொதுவாகப் பார்க்கையில் , ஒரு ஊரில் இருக்கும் ஆயிரம் பேரில் ஒருவர் தவறானவராக இருந்தால் அவர் செய்தியாகிறார். நல்லவராய் மற்ற 999 பேரும் இருந்தாலும் கவனிக்கப் படாமல்தான் போகின்றனர். உலக இயல்பு இது. தினம் நாம் எதிர் கொள்ளும் செய்திகள் பெரும்பாலும் எதிர்மறையாகவே உள்ளன. அவை ஒரு அலையாக எதிர்மறை செயல்பாட்டுக்கும் வித்திடுகின்றன. நேர்மறை எழுத்தால் மட்டும் உலகம் திருந்தி விடாது என்பது உண்மை என்றாலும் அதன் தேவையும் அவசியமானது. பெருக்கெடுத்தபடி இருக்கும் எதிர்மறை அலைகளுக்கு அணை போட சிறு சிறு துளியாக (அவை ஒன்று சேர்ந்து பெருவெள்ளமாகும் எனும் நம்பிக்கையோடு) நேர்மறை எண்ணங்களை எழுத்தில் விதைக்கும் வெகு சிலரில் ஒருவராக இருக்க விருப்பம்.

கேள்வி: நேர்மறை எண்ணங்களுக்கு உங்களுக்கு ரோல் மாடல் யாரு?


பதில்: அம்மாவும் கணவரும்.
**************************************

நேர்மறை எண்ணங்களைப் பரப்ப வாழ்த்தி எனக்கும் அவர் அளித்த வியல்(பொன்) விருது இதோ:

இப்பதிவின் படங்கள் ஒன்றும் ஐந்தும் பெற்ற விருதின் நோக்கத்தைப் பிரதிபலிப்பதாக நம்புகிறேன்! மிக்க நன்றி முத்துலெட்சுமி!

ஞாயிறு, 14 நவம்பர், 2010

தமிழ்மணம்-டாப் ட்வென்டி-பரிசு மழை-விருது விழா

ஞாயிறு கொண்டாட்டம் #மகிழ்ச்சி

தமிழ் மணம் புதிய சேவை ஒன்றை அறிவித்துள்ளது. அதன் படி ஒவ்வொரு ஞாயிறும் முந்தைய வாரத்தின் முன்னணி வலைப்பூக்கள் இருபதைத் தேர்ந்தெடுத்து இங்கே அளிக்கத் தொடங்கியுள்ளது.

முதல் வாரம் பத்தாவது இடத்தில் முத்துச்சரம்:)!


வாரத்துக்கு ஒன்றோ இரண்டோ பதிவுகள் போட்டுவிட்டு பாதையோரமாய் ‘பராக்கு’ பார்த்தபடி போய்க் கொண்டிருந்த என்னை ‘படார்’னு ஜீப்புல ஏத்தி விட்டிருக்காங்க.

எதேச்சையாக ஆனந்தவிகடன் தீபாவளி ஸ்பெஷல் கவிதை, கலைமகள் மற்றும் லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளிமலர் கதைகள், தினமணி தீபாவளி மலர் பங்களிப்பு என வரிசையாகப் பத்திரிகைப் படைப்புகளைப் பதிந்ததில் தற்காலிகமாக அதிகரித்த பார்வையாளர்களால் (தகவல்:Blogger stat) கிடைத்த இடமே என்றாலும், புதிய சேவையின் தொடக்க வாரத்தில் கிடைத்த அங்கீகாரம் மகிழ்ச்சி அளிக்கிறது. நன்றி தமிழ்மணம்!

சமீபத்திய இடுகை ஒன்றில் பதிவர் சகாதேவன் அவர்கள் ‘what is the secret of your writing?’ எனக் கேட்டிருந்தார்.

‘இங்கு கிடைக்கிற ஊக்கம்’ எனப் பதிலளித்திருந்தேன்.

ஆத்மார்த்தமாய் சொன்னது.

தொடர்ந்து வருகை புரிந்து ஊக்கம் தரும் அனைத்து நண்பருக்கும் என் நன்றிகள்!


புத்தகப் புதுவெள்ளம் #குதூகலம்

தமிழ்மணம் விருது 2009-ல் பரிசு பெற்றதற்கு நன்றி சொல்லி இட்ட பதிவில் நான்...

தமிழ்மணம் விருதென்பது வருடம் முழுவதும் கூடவே வந்த தோழமைகள் சுற்றிச் சூழ நின்று கைதட்ட, தாயின் பரிவோடு திறமையைத் தட்டிக் கொடுக்கும் தலைமையாசிரியரிடமிருந்து பரிசு வாங்குவது போன்றதான சின்ன வயது சந்தோஷம். குழந்தையின் குதூகலம். பதிவருக்கே உரித்தான பரவசம்:)!

என்னதான் சொல்லுங்க. நம்மை பாராட்டி வழங்கப் படும் எந்தப் பரிசும் குதூகலம் தரக் கூடியவை. அதிலும் எழுதும் நமக்கு சிறந்த பரிசு புத்தகங்களை விட வேறென்னவாக இருந்திட இயலும்?

இரண்டு பிரிவுக்குமாக ரூ.1500-க்கு வருடத் தொடக்கத்திலேயே ந்யூபுக் லேண்ட் பரிசுக் கூப்பன்களை அனுப்பி வைத்திருந்தது தமிழ்மணம். சென்னைக்கு செல்லும் வாய்ப்பு இல்லாது போன நிலையில் சமீபத்தில்தான் மிகத் தாமதமாக அணுக முடிந்தது அவர்களை. ஏற்பட்ட கால இடைவெளியின் காரணமாக மறுபடி ‘தமிழ்மணத்திலிருந்து ஒரு மின்னஞ்சல் வந்தால் நல்லது’ என அவர்கள் தெரிவிக்க, தமிழ்மணம் நிர்வாகி திரு. ஆர்.செல்வராஜ் அவர்கள் உடன் செயல் பட்டு மின்னஞ்சல் அனுப்பியதோடு, நான் புத்தகங்களை வாங்கியாயிற்றா மடல் அனுப்பிக் கேட்டு உறுதியும் செய்து கொண்டார். அவருக்கு என் நன்றிகள்.

வாங்கிய புத்தகங்களின் பட்டியல் உங்கள் பார்வைக்கு:

அவனும் இவனும் - ஷைலஜா
யாரோ ஒருத்தியின் டைரிக் குறிப்புகள் - நிலாரசிகன்
என் செல்ல செல்லங்கள் - துளசி கோபால்
கருவேல நிழல் - பா. ராஜாராம்
கோவில் மிருகம் - என்.விநாயமுருகன்
காலப் பயணிகள் - விழியன்
இரவுக் காகங்களின் பகல் - க.அம்சப்ரியா
டி.வி.ஆர் நினைவுப்போட்டி - பரிசு பெற்ற கதைகள்
கருவாச்சி காவியம் - வைரமுத்து
என்ன மாதிரியான காலத்தில் வாழ்கிறோம் - மனுஷ்ய புத்திரன்
சுஜாதாவின் ‘கற்றதும் பெற்றதும்’- முழுத்தொகுப்பு [4 பாகங்கள்]

எல்லாம் வாசித்தானதும் சில புத்தகங்களைப் பற்றி உங்களுடன் பகிர்ந்திட உள்ளேன்.


திருவிழா தேரோட்டம் #உற்சாகம்

வேகமாய் நகருகின்றது காலம். இதோ வந்து விட்டது அடுத்த திருவிழா. தமிழ்மணம் வலைப்பதிவு விருதுகள்-2010. விவரங்கள் இங்கே. பெண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் தனிப்பிரிவும் புதிதாக அறிவித்துள்ளார்கள்.

பரிசு நம் இலக்கல்ல. பங்களிப்பே முக்கியம். நம் அனைவரது படைப்புகளையும் உலகெங்கும் உள்ள தமிழ் நெஞ்சங்களுக்குக் கொண்டு சேர்க்கும் தமிழ்மணம் நடத்தும் விழா. கூடித் தேர் இழுப்போம். உற்சாகமாய் அனைவரும் கலந்து கொள்வோம். வாருங்கள்.
***


வெள்ளி, 12 நவம்பர், 2010

எங்க வீட்டு ருசி - தினமணி தீபாவளி மலர் 2010-ல்..


ஹாட்ரிக்காக கலைமகள், லேடீஸ் ஸ்பெஷல் ஆகியன தொடர்ந்து தினமணி தீபாவளி மலரிலும் என் பங்களிப்பு. அது கதையா கட்டுரையா கவிதையா என சிந்தித்தபடி வரும் நண்பர்களுக்கு கொடுக்கிறேன் 'கொத்து' ஆச்சரியம். முத்துச்சரம் தொடுக்க ஆரம்பித்து இரண்டரை வருடமும் 126 பதிவுகளும் கடந்த நிலையில் சமையல் சார்ந்த பதிவே இல்லை எனும் குறையை நிவர்த்தி செய்து கொள்ள வேண்டாமா:)? நாங்களும் சமைப்போம்ல..

எங்க வீட்டு ருசி.. எங்க ஊர் ருசியும்தான்..!

தீபாவளி மலரின் 336 பக்கங்களின் நடுநடுவே, பலரது வீட்டு ருசியையும் தொகுத்து வழங்கியவர் கவிஞர் மதுமிதா.
***


பத்திரிகைக்காக செய்த அன்று டிஸ்ப்ளேயில் வைத்த விதம் உங்கள் பார்வைக்கு.


சரி, இப்போ பிடிங்க இந்த முந்திரிக் கொத்தை..:)!


வீட்டிலும் செய்து பாருங்க! புரோட்டின் சத்து நிறைந்த ஆரோக்கியமான பதார்த்தம். அம்மாவிடம் கற்றது.



  • வாய்ப்பை நல்கிய மதுமிதாவுக்கு என் முதல் நன்றி!
  • மிக்க நன்றி தினமணி!
  • பெங்களூரில் புத்தகம் கிடைக்கத் தாமதமாவது அறிந்து கொரியரில் அனுப்பி வைத்த கோமாவுக்கு ஸ்பெஷல் நன்றிகள்!
***

புதன், 10 நவம்பர், 2010

பொட்டலம் - லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர் 2010-ல்..

அழகிய அட்டைப்படம், அருமையான உள்ளடக்கம், இருநூற்று ஐம்பத்தாறு பக்கங்கள் எனும் சிறப்புகளுடன் வெளிவந்துள்ள லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர் 2010-ல் எனது ‘பொட்டலம்’ சிறுகதை இடம் பெற்றுள்ளதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி.

நன்றி லேடீஸ் ஸ்பெஷல்!









லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலரை முழுதாக வாசித்து மகிழ இங்கே செல்லலாம்.
***

ஞாயிறு, 7 நவம்பர், 2010

உலகம் அழகானது - கலைமகள் தீபாவளி மலர் 2010-ல்..

372 பக்கங்களுடன் பல எழுத்துலக மேதைகளின் படைப்புகளைத் தாங்கி வெளியாகியுள்ளது கலைமகள் தீபாவளி மலர் 2010. அவற்றிற்கு நடுவே ஐந்து பக்கங்களுக்கு எனது சிறுகதை, ஓவியர் ஜெயராஜின் உயிர்ப்பான சிந்திரங்களுடன்...

‘இந்த ஆண்டு மகளிர் தினக் கொண்டாட்டத்தின் நூறாவது ஆண்டு ஆகையால் கலைமகள் தீபாவளி மலரில் அனைத்துமே பெண்கள் சம்பந்தமான கட்டுரைகள், பெண் எழுத்தாளர்களின் சிறப்புரைகள், பல துறைகளில் சாதனை புரிந்த பெண்மணிகள் பற்றிய பல அரிய கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. பழைய காலப் பெண்மணிகள்(ஆர். சூடாமணி, லக்ஷ்மி, வசுமதி ராமசாமி, அநுத்தமா,வை.மு. கோதைநாயகி அம்மாள் போன்ற பலர்) எழுதிய சிறுகதைகளோடு, இன்றைய பெண் எழுத்தாளர்களும் கைகோர்க்கிறார்கள்’ என மலரின் முன்னுரையில் குறிப்பிடுகிறார் ஆசிரியர் கீழாம்பூர்.

இன்றைய அன்றைய எழுத்துலகப் பெரியவர்கள் பலரின் படைப்புகளுக்கு நடுவே எனது படைப்பும் என்பதில் முதல் மகிழ்ச்சி. நான் விரும்பி வாசித்த பல எழுத்தாளர்களின் கதாபாத்திரங்களைக் கண்முன் கொண்டு வந்த ஓவியர் ‘ஜெ...’ இன்று எனது கதாபாத்திரங்களுக்கும் உயிர் கொடுத்திருப்பது பார்த்து கூடுதல் மகிழ்ச்சி:)!



ளம் தொந்தியைப் பற்றிக் கவலைப்படாமல் முப்பதுகளின் நடுவிலேயே எதற்கு உடற்பயிற்சி என்கிற எண்ணத்துடன் எந்த வஞ்சனையும் இல்லாமல் வகை வகையாய்ச் சாப்பிட்டு வாழ்க்கையை அனுபவித்து வந்த எனக்கு எச்சரிக்கை மணி அடித்தது, அலுவலகத்தின் கட்டாய வருடாந்திர மருத்துவப் பரிசோதனை. அது கூடியிருக்கு இது குறைந்து போயிருக்கு என என்னென்னமோ சொல்லி வாயைக் கட்டுப்படுத்தச் சொன்னதோடு தினசரி ஒரு மணிநேரம் நடந்தே ஆக வேண்டுமென்று கட்டளையும் பிறப்பித்துவிட்டார்கள்.

நண்பனை அழைத்தேன். “டேய் சீதா, எனக்கு ஒரு நல்ல ட்ரெட்மில் வாங்கணும். பார்த்து செலக்ட் பண்ண கூட வர்றியா?”

விவரம் கேட்ட சீதாராமன் ”கிறுக்கா பிடிச்சிருக்கு. கார்டன் சிடியிலே இருந்துகிட்டு ட்ரெட்மிலில் ஓடப் பார்க்கிறியேடா சோம்பேறி” என்று சீறினான்.

எந்த வியாதியும் இல்லாமலே, நாள் தவறாமல் லால்பாகில் நடைபயிற்சிக்குச் செல்லும் அவனை எத்தனையோ முறை வேலையற்ற முட்டாள் எனத் திட்டியிருக்கிறேன்.

”ஒழுங்கு மரியாதையா நாளையிலிருந்து காலை ஆறுமணிக்கு டாண்னு லால்பாக் வாசலில் வந்து நிற்கணும் ஆமா” என்றான்.

“அதில்லே, இந்த பெங்களூரு குளிரு.., அப்புறம் அவ்வளவு தூரம் வந்து..”

“பொல்லாத தூரம். உன் வீட்டிலிருந்து பத்து நிமிஷ ட்ரைவ். உன் அப்பா வயசு ஆளுங்கெல்லாம் குல்லா ஸ்வெட்டருடன் ஓடிட்டிருக்காங்க. உனக்கு வெடவெடங்குதோ”

மேலும் மறுக்கத் தைரியமில்லாமல் “ம்” என்றேன்.

***

டக்கத் தொடங்கிவிட்டேன் சீதாராமனுடன். எத்தனை வகை மரங்கள். செடிகள். மலர்கள். அவற்றை ரசித்தபடியே சுத்தமான காற்றை சுவாசித்தபடி நண்பனுடன் நடப்பது பிடித்திருந்தது. இயற்கையான அந்த சூழல் ஒருநாள் விடாமல் உற்சாகமாய் போகத் தூண்டியது. களைத்து திரும்புகையில் கிழக்கு கேட் பக்கமாக இருக்கும் ஆறு தள்ளு வண்டிகளில் ஏதேனும் ஒன்றில் அருகம்புல் சாறு வாங்கிக் குடிப்பதும், அப்படியே அவரவர் வந்த வாகனங்களில் ஏறிப் பிரிவதும் வழக்கமாயிற்று.

முதல் நாள் அந்த பச்சைச் சாற்றினைப் பார்த்து நான் ‘உவ்வே எனக்கு வேண்டாம்பா’ என்ற போது சீதாராமன் வற்புறுத்தவில்லை. ‘என்ன தண்ணியோ, எந்தப் புல்லோ’ என அடுத்தநாள் முணுமுணுத்த போது ‘ரொம்பதான் அலட்டிக்காதே. நல்லா கவனி. வாங்கிப் பருகுபவரில் முக்காவாசிப்பேரு வசதியானவங்க. ஹெல்த் கான்ஷியஸ் உள்ளவங்க. சுகாதாரம் பாக்குறவங்க. பக்கத்திலிருக்கும் ஒரு முதியோர் ஆசிரமத்திலிருந்துதான் இந்த ஜூஸ் தயாராகி வருகிறது. விற்பது மட்டுமே இந்த வண்டிக்காரங்க வேலை” என்றான்.

உண்மைதான். ஆசிரமத்து பெயர் தாங்கிய ஒரு வேனில் கேன்கள் வந்து இறங்குவதை ஒருநாள் சீக்கிரமாய் போனவேளையில் காண முடிந்தது.
‘நான் சொன்னா திருப்தி இருக்காது உனக்கு. நீயே கூகுள் செய்து பாரு. புரியும் இதோட மருத்துவக் குணங்கள்’ சீதாராமன் சொல்ல அன்றே தேடினேன்.
‘வியாதிகளுக்கு விடை-அருகம்புல், அருகம்புல் சாற்றின் மகிமை’ என வரிசையாக வந்து விழுந்தன கட்டுரைகள். எதற்காக எனக்கு நடைபயிற்சி வற்புறுத்தப் பட்டதோ அதற்கான தீர்வும் அதிலிருப்பதாய்த் தோன்ற நானும் அருகம்புல் ரசிகனாகி விட்டேன்.

***

ருநாள் வேகமாய் நடந்தபடியே தோட்டத்தின் உள்ளிருந்து மெயின் கேட் பக்கமாக பார்வையை வீசியபோது அங்கும் ஒரு அருகம்புல் வியாபாரி.

”இந்த கேட் பக்கம் அப்படிப் பெரிசா ஒண்ணும் போணி ஆகாதே” என்றான் சீதாராமன்.

நான்கு வாசல்களைக் கொண்ட மாபெரும் தோட்டமாயிற்றே லால்பாக். வாகனங்களில் வருபவர் கிழக்கு வாசல் வழியாகவே நுழைய இயலும் என்பதால் அங்குதான் அருகம்புல் வியாபாரம் ஜேஜே என்றிருக்கும்.

“வாயேன். என்னன்னு கேட்டுட்டு இன்னைக்கு இவனிடம் வாங்கலாம்.” என்றழைத்தான்.

“ரெண்டு கப்” என இருபது ரூபாயை நீட்டினேன் புதியவனிடம்.

“ஏம்பா, இங்கே நிக்கறே. இந்தப் பக்கம் அத்தனை வேகமாய் விற்காதே” பேச்சுக் கொடுத்தான் சீதாராமன் சாற்றை உறிஞ்சியபடி.

“நெசந்தாங்க. ஆனா கிழக்குவாசலில் இருக்கிற ஆறுபேரும் என்னை விட மாட்டேனுட்டாங்க. சரின்னு இந்தப் பக்கமா வந்துட்டேன். என்ன ஒண்ணு. அவங்க ஒரு மணியிலே வித்து முடிக்கிறதை இங்கே நான் காலி பண்ண ரெண்டு மணி நேரமாயிடுது. சிலசமயம் முழுசுமா விற்க முடியாமலே வேலைக்கு கிளம்ப வேண்டியதாயிடுது” என்றான்.

“எங்க வேலை பாக்கறே”

“ஒரு ஜவுளிக் கடையில சேல்ஸ்மேனா இருக்கேங்க. என் பொண்ணுக்கு அரசு கோட்டாவில் மெடிக்கல் சீட் கிடைச்சு காலேஜிலும் சேர்ந்திட்டா. சாதாரண படிப்பா அது. மேலே எத்தனை செலவிருக்கு. மொனைப்பா படிச்சு சீட்டு வாங்குனவளுக்கு தகப்பனா நான் என்னதான் செய்ய? மனசு கிடந்து அடிச்சுக்குது. அதான் பார்ட் டைமா என்னென்ன வேலை கிடைக்கோ எல்லாத்தையும் செய்யறேன். ஒரு ஸ்கூலிலே நைட் வாட்ச் மேனாவும் சேர்ந்திருக்கேன். எப்படியோ இந்த நாலு வருசம் நான் கஷ்டப் பட்டுட்டா அவ டாக்டராயிடுவா இல்லே” என்றான் கண்கள் மினுங்க.

‘நிச்சயமா’ மனதார நினைத்தோம். அன்றிலிருந்து அவனிடமே வாங்கிப் பருகவும் தீர்மானித்தோம். தினசரி தங்களில் ஒருவரிடம் வாங்குபவர்கள் இப்போது நேராக அவரவர் வாகனங்களில் ஏறிப் பறப்பதை இரண்டுவாரமாகக் கவனித்த கிழக்குவாசல் வியாபாரிகளுக்கு மூக்கில் வியர்த்திருக்க வேண்டும்.

***

ன்றுதாங்க கடைசி. நாளையிலிந்து நான் வர்றதில்லை” என்றான் திடுமென ஒருநாள், வருங்கால டாக்டரின் தந்தையான செந்தில். முகமோ வாடி வெளிறிப் போயிருந்தது.

“ஏன்” என்றோம் ஒரே சமயத்தில்.

“அந்த ஆறுபேரும் டர்ன் போட்டு வந்து மிரட்டிட்டுப் போயிட்டாங்க இன்னிக்கு. அவங்களை எதிர்த்து என்னால ஒண்ணும் செய்ய முடியாதுங்க. விடுங்க, எல்லோருமே புள்ளைப் புட்டிக்காரங்க. அவங்க நியாயம் அவங்களுக்கு. நல்லாயிருக்கட்டும்” என்றான்.

“ என்ன அநியாயம்? நீ எடுத்துச் சொல்லியிருக்கணும். முட்டாத்தனமா பேசாதே” வெடித்தான் சீதாராமன்.

“காலில விழாத குறையா கெஞ்சியாச்சுங்க. ஒரு பலனுமில்லே. விட்டுட்டேன். அக்கறையா விசாரிச்ச உங்களிடமும் இன்னும் சில ரெகுலர் கஸ்டமருங்களிடமும் ஒரு வார்த்தை சொல்லிட்டுப் போலாமேன்னுதான் காத்திருந்தேங்க”

“சரி மொபைல் நம்பர் இருந்தா கொடு. உனக்காக அவங்ககிட்டே பேசிப் பார்த்துட்டு சொல்றோம்”

“ஐயோ வேண்டாம் சார். ரொம்பப் பொல்லாதவங்க. ஆள வச்சு அடிச்சுப் போட்றுவோம்னு மிரட்டினவங்க. அவங்ககிட்டே எதுவும் வச்சுக்காதீங்க. என்னால நீங்க பிரச்சனையில மாட்டிக்கப்படாது” பெரிய கும்பிடுடன் பிடிவாதமாய் மறுத்து விட்டான்.

***

ன்ன உலகமடா இது? இதை இப்படியே விடக் கூடாது. வா ரெண்டுல ஒண்ணு பார்த்திடுவோம்” என்றான் சீதாராமன். தொடை சற்று நடுங்கினாலும் காட்டிக் கொள்ளாமல் கூட நடந்தேன்.

விற்று முடித்துக் கிளம்பத் தயாராகிக் கொண்டிருந்தார்கள்.

“அந்தாளு செந்தில் அங்கே கடை போட்டிருப்பதிலே உங்களுக்கென்னங்க கஷ்டம்?” நைச்சியமாகதான் ஆரம்பித்தான் சீதாராமன்.

“தூது விட்டிருக்கானா உங்களை. நினைச்சேன் இது போல ஏதாவது செய்வான்னு” என்றான் ஒருவன்.

“என்ன கஷ்டம்னு எப்படி சார் கேட்க முடியுது உங்களால. மெயின் வாசல்வழி வந்து போறவங்க மட்டுமில்லாம எங்களிடம் வாங்கினவங்களில் நிறையப் பேரு அவன்கிட்டே வாங்க ஆரம்பிச்சிட்டாங்க உங்களையும் சேர்த்து. தெரியாத மாதிரி நடிக்காதீங்க” இது அடுத்தவன்.

“ஏம்பா இங்க கூட நான் இன்னாரிடம்னு வாங்கினதில்லையே. அப்பல்லாம் பேசாமதான இருந்தீங்க? ஆறோடு ஏழேன்னு அவன் ஒரு ஓரமா பொழச்சிட்டுப் போட்டுமே.” என்றான் சீதாராமன் விடாப்பிடியாக.

“ஆகா. பின்ன ஏழு பத்தாகும். பத்து இருபதாகும். நல்லாயிருக்கு சார் உங்க வாதம்” என்றவனின் குரல் உயரத் தொடங்கியிருந்தது.

எப்போதும் பணிவான பேச்சும் சிநேகமான புன்னகையுமாகவே பார்த்துப் பழக்கமாகியிருந்தவர்களின் கண்களில் தெறித்த கோபம் அச்சுறுத்துவதாய் இருந்தாலும் சீதாராமன் அசரவேயில்லை.

“அஞ்சு ஏன் ஆறாகணும்னு இதே போல உங்களில ஒருத்தர் நினைச்சிருந்தா என்னாயிருக்கும்னு யோசிங்களேன்” என்றான்.

“நாங்கல்லாம் ஒண்ணுக்குள்ள ஒண்ணு சார். இதெல்லாம் இங்கே எழுதப்படாத சட்டம். உங்க மாதிரி மேட்டுக்குடி ஆளுங்களுக்கு புரியாது”

”நீங்கதாம்ப்பா புரியாம பேசறீங்க. மழைக்காலந் தவிர்த்து என்னைக்காவது ஒரு நாளாவது வித்து முடிக்கமா திரும்பிப் போயிருக்கீங்களா சொல்லுங்க பாப்போம்? தேவை இருக்குமிடத்தில கூட ஒருநபரை பெரிய மனசு பண்ணி சேர்த்துக்கிட்டா என்னவாம்? சரின்னு உடனே விலகிப் போகும் அவனிடமிருக்கும் பெருந்தன்மை உங்களிடம் இல்லையே”

“இப்ப என்னாங்கறே” என்றான் ஒருவன் மிகக் கடுப்பாக.

***
சீதாராமனின் கையைப் பிடித்து அழுத்தினேன் இனி நான் பார்த்துக் கொள்கிறேன் என்பது போல. அவர்களின் எதிர்பேச்சு ஒவ்வொன்றும் ஏற்கனவே எனக்குள்ளும் ஒரு கனலை எழுப்பி விட்டிருந்தது.

“அவன் பொண்ணு டாக்டருக்கு படிக்கிறா. தெரியுமா உங்களுக்கு? அவளை படிக்க வைக்கதான்..”

“வா சாரே வா. நல்லா வாங்குறியே வக்காலத்து? ஏன் எம்புள்ளைக்கும்தான் வக்கீலுக்குப் படிக்க ஆசை. இதோ இவன் மகளுக்கு இஞ்சினீரு ஆகணும்னு ஆசை. எல்லாருக்கும் புள்ளைங்க குடும்பம்னு இருக்கு. நாங்க யாரும் கஸ்டமருங்க கிட்டே கஸ்டத்தை சொல்லி பேஜாரு பண்றதில்லை.”

என்ன சொல்லி புரிய வைப்பது? விலங்குகளுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்? இவர்கள் போன்ற கடைக்கோடி மனிதர் முதல் கோடானு கோடீஸ்வரர் வரை ‘சர்வைவல் ஆஃப் தி ஃபிட்டஸ்ட்’ என சொல்லித் தங்களை நியாயப்படுத்திக் கொண்டு, இவ்வுலகையே போட்டியும் பொறாமையும் நிறைந்ததாக்கி விட்டார்கள் என்றே தோன்றியது. அதைத் தாண்டி ‘மனித நேயம்’ என்பதைப் பற்றியதான சிந்தனை அற்றுதான் போய் விட்டது. எல்லோரும் எல்லாவற்றையும் ’தமக்கென்ன லாபம்’ என்கிற சுயநல நோக்கிலேயே பார்க்கப் பழகி விட்டார்கள். சரியென அதே வழியில் சென்று அவர்களை மடக்க முயன்றேன்.

“ஏம்பா உங்கள மாதிரியான ஒரு குடும்பத்திலயிருந்த ஒரு பொண்ணு கஷ்டப்பட்டு படிச்சு சீட் வாங்கியிருக்கு. அதை உதாரணமா காட்டியே உங்க புள்ளைங்களயும் நல்லாக் கொண்டு வர முடியும். வக்கீலாக்கி என்ஜினீயராக்கிப் பார்க்க முடியும்”

ஆசை காட்டியதோடு “அடுத்தவன் மரத்துக்கு ஆண்டவன் ஊத்துற தண்ணியத் தட்டி விட்டுப் பாவத்த சேக்காதீங்க” என்று கடைசி அஸ்திரமாய், எச்சரித்து ஒரு பிட்டையும் போட்டேன்:

”அதேதான் நாங்களும் கேட்டுக்கறோம். எங்களுக்கு ஆண்டவன் ஊத்தறதை நீங்க தட்டி விட்டுப் பாவத்த சேக்காதீங்க. மரம் வச்சவனே அவனுக்கு வேற வழியக் காட்டுவான்” ஒருவன் சொல்ல “அப்படிப் போடு” மற்றவர்கள் பெரிதாகச் சிரித்தார்கள்.

எரிச்சலானேன்.

“புல்லைப் புடுங்கிப் புடுங்கிச் சாறு வித்தே பழகிட்ட உங்களுக்கு ஒரு தளிரு வளர்ந்து ஆலமரமாய் விரியற வாய்ப்பைக் கொடுக்கும் மனசும் இல்ல, அது உலகத்துக்கு தரக்கூடிய நிழலைப் பற்றிய தொலைநோக்கோ புரிதலோ சுத்தமா இல்ல. நாளைக்கே உங்க குடும்பத்துல ஒருத்தருக்கு ஒண்ணுன்னா அந்தப் பொண்ணு நன்றியோட ஓடிவரும். இதையெல்லாம் எட்டி யோசிக்கிற அறிவு ஊஹூம், ஜீரோ”

கோபமாய் நான் ஆள்காட்டி விரலால் காற்றில் பெரிய வட்டம் வரைய..

“என்ன சார் விட்டா பேசிட்டே போற? பாருங்கடா. நம்பளை முட்டாளுங்கறாரு. முட்டை வேற வரையிறாரு. இதே இன்னொருத்தரா இருந்தா வரைஞ்ச கைய வளைச்சு முறிச்சி அடுப்பில வச்சிருப்போம். நல்லபடியா வூடு போய் சேரு” மூர்க்கமாய் ஒருவன் கத்த ஆரம்பிக்க சீதாராமன் என்னை இழுத்துக் கொண்டு நகர்ந்தான்.

***

றுநாளிலிருந்து அவர்கள் பக்கமே நாங்கள் திரும்பவில்லை. எதேச்சையாக பார்வைகள் சந்திக்க நேர்ந்தாலும் முகத்தைத் திருப்பிக் கொண்டு நகர்ந்தோம்.
அருகம்புல் சாறும் வெறுத்துப் போனது. பதிலுக்கு அதே முறைப்புடன் அவர்களும் இருக்க ஒருவாரம் கழிந்த நிலையில் “என்னா சார்? எங்க மேலே உள்ள கோபத்தை ஏன் அருகம்புல்லு மேலே காட்டறீங்க? அது வேற இது வேற!” என்றான் ஒருவன். நாங்கள் கண்டு கொள்ளாமல் விரதத்தைத் தொடர்ந்தோம். மேலும் ஒருவாரம் சென்றிருக்க, அது ஒரு ஞாயிறு. அன்றைக்கு சற்று தாமதமாக உள்ளே நுழைந்தோம்.

“சாரே”

வந்த குரலை வழக்கம் போல சட்டை செய்யவில்லை.

”சாரே” இப்போது குரல்கள் ஓங்கி ஒலித்தன கோரசாக. திரும்பிப் பார்த்தால் எங்கள் கண்களை எங்களாலேயே நம்ப முடியவில்லை. ஆறாவது வண்டிக்கு அடுத்து ஏழாவதாய், முகம் முழுக்க சிரிப்பாய் நின்றிருந்தான் செந்தில்.

விரைந்தோம்.

“எப்படி” வியப்பில் திணறினோம்.

“நேத்தைக்கு என் வூடு தேடி வந்துட்டாங்க சார் இவங்கெல்லாம். பொண்ணுக்கு ஹான்ட்பேக் பேனால்லாம் கூட வாங்கி வந்திருந்தாங்க. கூடவே அவங்க புள்ளைங்களையும் கூட்டி வந்திருந்தாங்க.” என்றான் செந்தில் நெகிழ்வுடன்.

“நிச்சயமா அவரு பொண்ணுட்ட ஓசி வைத்தியம் பார்த்துக்க இல்ல சார். நீங்க சொன்னதெல்லாம் யோசிச்சு யோசிச்சு பார்த்ததிலே பொறந்த ஞானம்” ஒருவன் சொல்ல நானும் சீதாராமனும் ஓடிப்போய் ஒவ்வொருவர் கையையும் தனித்தனியாகப் பிடித்துக் குலுக்கினோம்.

“இனிமே அருகம்புல் மேலே கோபமில்லையே?” ஒருவன் கேட்க அசடு வழிந்தோம்.

ஆனால் யாரிடம் வாங்குவது? செந்திலைக் கை காட்டினார்கள் எங்களின் திகைப்பைப் புரிந்து கொண்டவர்களாய்.

பர்சை எடுக்கப் போன சீதாராமனைத் தடுத்தான் செந்தில்.

“உங்க ரெண்டு பேருக்கும் என்னைக்கும் இலவசம் சார். என் நன்றியா நினைச்சு ஏத்துக்கிட்டா மனசுக்கு ரொம்ப ஆறுதலா இருக்கும்” நெஞ்சைத் தொட்டபடி சொன்னான்.

“நாங்க அவங்களைப் போல இல்லேப்பா. உன் பொண்ணுகிட்ட கண்டிப்பா ஓசி வைத்தியம் பார்க்க வருவோம். அதுக்கான ஃபீஸைதான் இப்பவே கொடுக்கறோம். நினைவில வச்சுக்க ஆமா” சிரித்தபடி அவன் சட்டைப் பையில் நோட்டுத் தாளைச் செருகினான் சீதாராமன்.

மேலே மேலே வந்து கொண்டிருந்த கிழக்குச் சூரியனின் கதிர் உடம்புக்கும் மனதுக்கும் இதமாக இருந்தது. பூத்துக்குலுங்கிய மரங்களுடன் தோட்டம் எப்போதை விடவும் மிகமிக அழகாகத் தெரிந்தது. உலகமும்.

*****



நன்றி கலைமகள்!

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin