வெள்ளி, 14 மே, 2010

நட்சத்திரங்கள்




உய்உய் உய்உய்..
பின்னிரவில்
உயர் குடியிருப்பு வளாகத்தில்
வாகனம் எழுப்பிய தொடர்சப்தத்தில்
விழித்துச் சுதாகரித்து
துழாவிச் சாவியெடுத்து
'உன்னிதா என்னிதா'
அறிய ஓடிவந்தவர்கள்

தம்மிதில்லையெனத் தெரிந்த நிம்மதியில்
போர்வைக்குள் பொதிந்து போயினர்
பொழுது புலர்ந்ததும்
புலம்பிக் கொள்ளலாமென
கலைந்த தூக்கத்தைத் துரத்திப் பிடிக்க

உரியவர் அடக்கியதும்
ஓய்ந்தது உய் உய்

காத்திருந்து
அணைந்து போயின அலுப்புடனே
ஆங்காங்கே ஒளிர்ந்த
சன்னல் வெளிச்சங்கள்

பதில்சொல்லிக் களைத்த
இரவுக் காவலாளியின்
இருண்ட வானக் கூரையில்
மிளிர்ந்து கொண்டிருந்தன
நட்சத்திரங்கள்

ஊர் அசந்தபின்னும் தாம் அசராது
கண்சிமிட்டிக் காவலிருந்த
விண்மீன்களை ரசித்தவாறே
விழி பிசைந்த உறக்கந்தனை
விரட்டியடிக்க
உதடு குவித்து இசைக்கலானான்

சூழ்ந்திருந்த நிசப்தத்தில்
சுரம் பிசகாமல்

அண்டம் அனுபவிக்கும்
அத்தனைக்கும் அடிநாதமாய்..
அறியப்படாமலே
காற்றோடு கரைந்து போகும்
உழைக்கும் வர்க்க கீதமாய்..
உய்... உய்...!

***






ஞாயிறு, 9 மே, 2010

உதய கீதங்களும் அந்தி ராகங்களும் - May PiT போட்டிக்கு

வானம் எனக்கொரு போதி மரம்



செவ்வானத்தில்..

ஒரு ஒளிப்பந்து
சிரிக்குது நமைப் பார்த்து


எடுக்கவோ கோர்க்கவோ

காலைக் கதிரவனின்
கனல் முத்துக்களை..



பொன்னிற ஏரியில்..

புதையலைத் தேடி
விரையுது படகு


ஓவியனவன் யாரோ

வண்ணங்குழைத்து
விண்ணில் தெளித்து
எண்ணம்போல் இழுத்த
ஓவியனவன் யாரோ
சூரியனவன் பேரோ!


சுடரொளி



இருளும் ஒளியும்
இணையும் அழகு



ஓய்வு

படகுக்கும்
சில மணித்துளியில்
பரிதிக்கும்



கீழ் வருவன மீள் படங்களே.

முதல் மூன்றும் சிலநொடி இடைவெளிகளில் பகலவன் காண்பித்த அற்புதங்கள்:

பொன் எழில் பூத்தது புது வானில்
[PiT நடத்திய மெகா போட்டி 2008-ல் . ‘ஒரு வாழ்த்து அட்டைக்குரிய சர்வ லட்சணங்களும்’ இருப்பதாக நடுவரால் பாராட்டப்பட்டு முதல் சுற்றுக்குத் தேர்வான படம்]
எங்கோ கூவும் குயில்களின் கீதம்
மகிழ்வாய்ப் பாடும் மைனாக்களின் கானம்
'கீச்'சிடும் குருவிகள் தந்திடும் உற்சாகம்
தென்னங்கீற்றுகளும் கேட்டுத் தலையசைக்கும்



ஞாயிறு ஒளி மழையில்

குளிக்க வந்த
தென்னை மரங்கள்


ஆதவப் பிரவாகம்





பொன் அந்தி மாலைப் பொழுது

அந்திமழைக்குப் பின்னே அழகு காட்டும் வானம்
அஸ்தமனத்துக்கு பின்னே இருள் வந்து சூழும்
அஸ்திவாரம் நம்பிக்கைக்கு அதுவே ஆகும்
அடுத்தநாள் விடிகையில் தானாகப் புரியும்.




பயணங்கள் முடிவதில்லை

[3 ஏப்ரல் 2010, PiT தளத்தின் ‘இந்த வார சிறந்த’ படமாகத் தேர்வானது]



போட்டி அறிவிப்பு: சூர்யோதயம் / அஸ்தமனம்

போட்டிக்கு அணிவகுத்திருக்கும் படங்கள் இங்கே.

போதிமரம் போயிருக்கிறது போட்டிக்கு.

தலைப்பை மறுபடி வாசிங்க. கச்சேரி எப்பூடின்னு சொல்லுங்க:)!



11 மே 2010, யூத்ஃபுல் விகடன் ‘Good Blogs’ பரிந்துரையில் இப்பதிவு:










நன்றி விகடன்!


28 மே 2010 : இன்று வெளியான அறிவிப்பின் படி போட்டியில் கலந்து கொண்ட ‘வானம் எனக்கொரு போதிமரம்’ முதல் சுற்றுப் படங்களில் ஒன்றாகத் தேர்வாகியுள்ளது. நன்றி PiT.

திங்கள், 3 மே, 2010

வயலோடு உறவாடி..-தினமணி கதிர் சிறுகதை


‘வயலோடு விளையாடி வயலோடு உறவாடி
வயலோடு மல்லுக்கட்டி ஆட்டம் போட்…'

ஐபாடிலிருந்து வழிந்த திரைப்பாடலின் வரிகளை மாற்றிப் பாடியவனாய், ஊருக்குப் போனபோது எடுத்த படங்களை பிக்காஸாவில் அப்லோட் செய்து கொண்டிருந்த சுந்தரேசனின் ஹெட்ஃபோன் திடீரெனப் பிடுங்கப்பட்டது.

“கூப்பிடக் கூப்பிட பதில் இல்லாதப்பவே நினைச்சேன் இதக் காதுல மாட்டியிருப்பீங்கன்னு. சாப்பிட வாங்க. சன்டேதான். அதுக்காக இப்படியா?”

மாடிப் படியேறி வந்ததில் மூச்சு வேறு வாங்க, அலுப்பாகத் திட்டிக் கொண்டே பின்னால் வந்து நின்றிருந்த சுமதி கணினித் திரையைப் பார்த்ததும் “வாவ்” என்றாள்.

மைத்துனரின் மனைவி பொங்கல் அன்று இட்டிருந்த பெரிய ரங்கோலி நேரில் பார்த்ததை விட அத்தனை அழகாக விரிந்திருந்தது.

பக்கத்தில் ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டு அவள் அமர உற்சாகமாகி விட்டான் சுந்தரேசன்.

அங்கே அவன் காமிராவும் கையுமாக அலைந்தபோது உறவுகள் மத்தியில் சொல்ல முடியாமல் “என்ன இது சும்மா சும்மா எல்லாத்தையும் க்ளிக்கிட்டு” என சந்தர்ப்பம் பார்த்து காதோரம் கடிந்தவளாயிற்றே. கண்டு கொள்ளாமல் இவன் தொடர்ந்ததில் வருத்தத்துடன் சற்று எரிச்சலும்தான் அவளுக்கு.

இப்போது அவளே சிலாகிக்க, ஆனந்தமாகி ‘இதப் பாரு அதப்பாரு’ என அடுத்தடுத்து படங்களைக் காட்ட ஆரம்பித்தான்.




முற்றமெங்கும் விரிந்திருந்த சுண்ணாம்புக் கோலங்கள், காவி பூசப்பட்ட மண்கட்டி அடுப்புகள், அக்னி வளர்க்க குவிக்கப்பட்டிருந்த பனையோலைகள், பொட்டும் மஞ்சள் குலையுமாக மினுங்கிய வெண்கலப் பானைகள், சூரியனை வரவேற்க ஏற்றி வைத்த ஐந்துமுகக் குத்து குளக்கு, பக்கத்தில் நெல்குவித்த நிறை நாழி, படைத்திருந்த காய் கனிகள், பனங்கிழங்கு கரும்புக் கட்டுகள்..!

பார்த்துப் பார்த்து எடுத்தது எல்லாம் ஸ்லைட் ஷோவில் ஒன்றொன்றாக விரிந்தன.

“நுணுக்கமாய் கவனிச்சு எடுத்திருக்கீங்க. ம்ம். நல்லாத்தானிருக்கு. ஆனா வளச்சு வளச்சு இப்படி சட்டிப் பானை, அடுப்பு கரும்புன்னு எடுத்தீங்களே..! பட்டிக்காட்டான் யானையப் பாத்த மாதிரின்னு யாரும் நினச்சுடக் கூடாதேன்னு இருந்துச்சு!” வில்லங்கமாகச் சிரித்தாள்.

“நாமதான் எதையும் செய்யறதில்லை. உனக்கும் எல்லாம் புது அனுபவம். மொத தடவையா நீ பொங்கலுக்கு ஊருக்கு வந்திருக்கேன்னு சித்தியும் விளக்கேத்துறதில இருந்து எல்லாத்தையும் உன்னையே பண்ண வச்சாங்க! செஞ்சதை நீயும், பார்த்ததை நம்ம பொண்ணுங்களும் நினைவில் வச்சுக்கணுமேன்னுதான் எடுத்தேன் தெரிஞ்சுக்கோ. இங்க பாரு நம்ம இளவரசிங்கள..”

மகள்கள் இருவரும் பாவாடை சட்டையில் தேவதைகளாய்த் தெரிந்தார்கள்.

பால் பொங்கி வருகையில் ‘பொங்கலோ பொங்கல்’ என எல்லோருமாய்க் கூவியதை வீடியோ க்ளிப்பிங்காக எடுத்திருந்தான். பானையில் அச்சுவெல்லக் கட்டிகளைச் சேர்த்த சுமதியின் வளை கரங்களை மட்டுமின்றி, கண்ணும் மூக்கும் அருவியெனப் பொங்க, அடுப்புப் புகையில் இவள் ஓலை வைக்கத் திண்டாடுவதைக் கூட க்ளோஸ் அப்பில் எடுத்து விட்டிருந்தான்.

“ஓ நோ..! இதை உடனே டெலிட் செய்யுங்க” கடுப்பாகிக் கூவினாள்.

“அட இருந்துட்டுப் போட்டும் விடு. நான் ரசிப்பேன்ல. வேணுமான ஆல்பத்திலே ஏத்தல” என்று சிரித்தவன் “சரி, உன் வேலையைக் கவனியேன். இதை முடிச்சுட்டு வந்து சாப்பிட்டுக்கறேன். இன்னிக்கு விட்டா மறுபடி ஒருவாரம் இழுத்துடும். ‘சித்திரை பொறக்கப் போகுது. பொங்கலுக்கு வந்து போனவன் இன்னும் படங்களை அனுப்பலையே’ன்னு சித்தப்பா பொசுபொசுங்க்கிறாராம். நாமெல்லாம் சேர்ந்து எடுத்துக்கிட்ட படத்தை பெரிசா ப்ளோ அப் செய்து போட்டுக்கணும்மாம் அவருக்கு. தம்பி ரெண்டு மூணு தடவை ஃபோன் பண்ணிட்டான்.”

“அரைமணியிலே வந்து சேருங்க.” பெரிய மனதுடன் அனுமதி தந்தவளாய் நகர்ந்தாள் சுமதி.

த்தனை வருடங்களுக்குப் பிறகு வாய்த்த்து இது. பெருநகரமும் கிராமமும் இல்லாத ஊர் அவனுடையது. அவனது பள்ளிப் பருவம் வரை அங்கேதான் வளர்ந்தான் தாத்தா வீட்டில். அப்பாவுடன் பிறந்த தம்பி விவசாயததை பார்த்துக் கொள்ள அவர் மட்டும் படித்து வங்கியில் வேலைக்குச் சேர்ந்து விட்டிருந்தார். ஊர் ஊராக மாற்றலாகும் உத்தியோகம் படிப்பு கெட்டு விடக் கூடாது என ஒரே மகனென்றாலும் இவனை தன் பெற்றோரிடமே விட்டு விட்டார்.

சித்தப்பாவின் பிள்ளைகளோடு, கிராமத்தில் கட்டிக் கொடுக்கப்பட்ட இரண்டு அத்தைகளும் ‘டவுணு’ பள்ளிக்கூடத்திலதான் படிப்பு நல்லாயிருக்கும் என ஏற்கனவே தங்கள் பிள்ளைகளைக் கொண்டு விட்டிருந்தார்கள். அந்த பெரிய மழலைப் பட்டாளத்தில் இவனும் ஐக்கியமாகி, கூடி வாழ்ந்த சொந்தங்களுடன் எந்தக் குறையுமில்லாமல்தான் வளர்ந்தான்.

அத்தைகள் அடிக்கடி தம் பிள்ளைகளை வந்து பார்த்துப்போக, தாய் தகப்பனை விட்டு ரொம்பத் தள்ளி வந்த பிள்ளை என இவன் மேல் எல்லோருக்கும் எப்போதும் தனி அக்கறை கரிசனம்தான். ஆனால் அவர்களை விடவும் ஒருபடி மேலாகவே இயற்கை தன்னை அரவணைத்துக் கொண்டதாகவேத் தோன்றும்.

தோட்டத்தில் பம்பு செட்டுக் குளியல், பண்ணையில் துள்ளும் கன்றுகளோடு ஆட்டம், வயலில் வைக்கோற் போரையே சறுக்கு மரமாக்கி வழுக்கி ஆடியது, வாழை கொய்யா பப்பாளி இளநீர் என பறித்த கையோடு குளிரக் குளிர வயிற்றை நிரப்பியது எல்லாம் எப்போது நினைத்தாலும் மனது குளிர்ந்து போகும்.

அறுவடையாகி வந்த அடுக்கப்பட்ட நெல்மூட்டைகள் மேலே ஏறி அமர்ந்து கொண்டு அரட்டை அடிப்பார்கள். வீட்டுப் பாடம் செய்வார்கள். பெரிய பெரிய அடுப்புகளில் மெகா சைஸ் உருளிகளில் நெல் அவிக்கும் அழகை வேடிக்கைப் பார்ப்பார்கள். மரத்துடுப்பைத் தாமும் பிடித்து கிண்டிக் கொடுப்பார்கள் ரொம்பச் சமர்த்தாய். பின்பக்க முற்றத்தில் நீண்ட நீண்ட பிறை நிலா வடிவில் அவித்த நெல்லை பண்ணைப் பெண்கள் அழகாய்ப் பரத்திக் காய வைத்துவிட்டு அந்தப் பக்கம் நகரக் காத்திருப்பார்கள்.

நெல் வெதுவெதுப்பாகி விட்டதா எனக் கவனமாய்க் காலாலே கிளறி உறுதி செய்த பிறகு அதில் உருண்டு புரண்டு சிந்திச் சிதறி மகிழ்வார்கள் யாராவது வந்து பெரிதாக அதட்டல் போடும்வரை. நெல் முழுதாகக் காய நாலு நாள் பிடிக்கும். கூத்தும் அதுவரை தொடரும். ஒருமுறை தாத்தா பார்த்து விட்டார்.

“டேய் டேய் பசங்களா என்ன இது. விளையாட்டுக்குக் கூட நெல்லை இப்படியெல்லாம் சிந்தியடிக்கப் படாதுடா” என எல்லோரையும் இழுத்துப் பிடித்து வரிசையாக அமர்த்தி விட்டார். இவர்களது எந்தக் குறும்புகளையும் கண்டு கொள்ளாத அவர் எதையாவது வலியுறுத்திச் சொல்லுகையில் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து மகுடிக்குக் கட்டுப்படும் பாம்பாகி விடுவார்கள்.

அப்படித்தான் அன்றும். எப்படி உழவும் நெல்லும் சோறு தரும் கடவுள் என அவர் விவரிக்க விவரிக்க மனதில் ஒரு பயபக்தி ஏற்படத் தொடங்கியது. தொடர்ந்து வந்த பொங்கலின் போது, பண்ணை ஆட்களுக்கு கொடுக்கின்ற பொங்கல்படி புதுத்துணி எல்லாம் தானமோ தர்மமோ அல்ல, நாம் அவர்களுக்கு செய்யும் மரியாதை எனப் புதிய கோணத்தில் பார்க்க வைத்தார்.

அதுமட்டுமில்லாமல் ‘நாட்கதிர்’ என்றொரு வழிபாடு இருந்தது. அறுவடையானதும் பசுமை மாறாத நெற்கதிர் கட்டு ஒன்று வயலில் இருந்து வீடு தேடி வரும் அருள் பாலிக்க. முற்றத்தில் கோலமிட்ட மணை ஒன்றில் அதை நேராக நிறுத்தி பொட்டு பூவெல்லாம் வைத்து சூடம் காட்டிக் கும்பிடுவார்கள்.

பின்னர் தாத்தா அனைவர் கையிலும் ஒரு கதிர் எடுத்துக் கொடுப்பார். நெற்குதிர் அறையில் சுண்ணாம்புக் கோலமிட்டு அலங்கரிக்கப்பட்ட புது மண் பானை காத்திருக்கும். முதல் கதிரை தாத்தா வைக்க, மற்ற பெரியவர்கள் தொடர,‘கூகூஊஊ’ என ரயில் வண்டி மாதிரி ஒருவர் சட்டையை ஒருவர் பிடித்து வந்த குழந்தைகளும் விளையாட்டு போலவேதான் அதில் கதிர்களைச் சேர்ப்பார்கள்.

அன்றைக்கும் நெல்மூட்டைகளுடன் தாம்பூல மரியாதை உண்டு கதிரை எடுத்துவந்த பண்ணையாட்களுக்கு. வடை பாயாசத்துடன் சாப்பாடும். புதுக்கதிரினைக் கசக்கியெடுத்து வரும் அரிசிமணிகளைச் சேர்த்துதான் பாயாசமே செய்வார்கள். ஒரு சிறிய கொத்தினை பூஜை அறையிலும் தொங்க விடுவார்கள். அந்த ஐதீகங்களின் அர்த்தமும் கொஞ்சம் கொஞ்சமாக விளங்கத் தொடங்கியது. செய்யும் தொழில் தெய்வம் என்பதும் ஆழப் பதிந்தது.

ந்தர்ப்பம் வாய்க்கும் போதெல்லாம் விவசாயத்தில் ஈடுபடுவது நமக்கெல்லாம் பெருமை என உணர்த்தியபடியே இருப்பார் தாத்தா. “‘சுழன்றும்ஏர்ப் பின்ன துலகம்’ எத்தனை அழகாய் சொல்லியிருக்கிறார் அய்யன்” என சிலாகிப்பார். “‘உழந்தும் உழவே தலை’ எந்தச் சிரமம் வந்தாலும் நம்ம குடும்பம் உழவைத் தொடரணுமடா” என்பார்.

கேட்டு கேட்டு வளர்ந்து ப்ளஸ் டூ வரை வந்து விட்டிருந்தவன் அரும்பு மீசையைத் தடவியபடி ஒருமுறை திருப்பிக் கேட்டு விட்டான்.

“அப்போ ஏன் தாத்தா அப்பாவை மட்டும் வேற வேலைக்கு அனுப்பிட்ட?”

கேள்வியின் கூர்மையில் தாத்தா சற்று திணறிப் போன மாதிரி இருந்தது. ஆனால் என்றைக்காவது இப்படிக் கேட்பான் என பதிலைத் தயாராகவே வைத்திருந்த மாதிரியும் இருந்தது.

“நாந்தான் படிக்க முடியாது போச்சு. படிப்பு நல்லா வந்ததாலே புள்ளைங்கள்ல ஒருத்தராவது உத்தியோகம் பாக்க பட்டணம் போகட்டும்னு அனுப்பிச்சேன். காடுகரைய பாத்துக்க சித்தப்ப்பா போதும்னுதான்.”

“அப்பாவுக்கு பதிலா நான் விவசாயத்தைப் பண்ணட்டுமா தாத்தா? படிச்சு முடிச்சுட்டே செய்யறேன்”

“வேண்டாம்பா வேண்டாம்” என்றார் பதட்டமாக. அவனை அருகில் அமர வைத்துக் கையைப் பிடித்துக் கொண்டார்.

“ஒன் தம்பிதான் இருக்கானே. ஒஞ்சித்தப்பா அவனை விவசாயத்துக்கே படிக்க வைக்கப் போறானாம். அவன் பார்த்துப்பான் இந்த நெலம் நீச்சையெல்லாம். ஒன்னைய என்ஜினீயராக்கணும்னு கனவு கண்டுட்டிருக்கான் ஒங்கப்பா. நீயும் படிப்புல அவனப் போலவே புலியா இருக்கே. அவன் பேச்சைக் கேட்டு நட. பெரிய உத்தியோகத்துக்கு போ.”

நெருடலாக இருந்தது அவர் அப்படிப் பேசியது.

“அப்புறம் நாங்க சரியா வளர்கலைன்னு ஒரு சொல் வந்திடப்பிடாதுப்பா” கெஞ்சியபோது ஏமாற்றமாக இருந்தாலும் ஏதோ புரிந்தது.

டுத்த வருடம் கல்லூரியில் சேர ஊரைப் பிரிந்தவன்தான். பாட்டி இருந்தவரை அப்பா வேலைக்கு லீவு போட்டு வருடாவருடம் எல்லா பண்டிகைகளுக்கும் அழைத்துச் சென்றார். பாட்டி போனதும் தாத்தாவுக்காக பொங்கலுக்கு மட்டுமாவது போவது கட்டாயமாக இருந்தது. அவர் மறைவுக்குப் பின் அதுவும் நின்று போனது.

இவனும் படித்து முடித்து கணினித் துறையில் வேலையாகி, பட்டணத்துப் பெண்ணே மனைவியாய் வர அசுர வேக இயந்திர வாழ்வில் தொலைத்த பலவற்றில் ஒன்றாகிப் போனது பண்டிகைகளைக் கொண்டாடும் முறைகளும். எப்போதோ ஊர் விட்டு வந்துவிட்ட அம்மாவும் இவற்றில் அத்தனை ஆர்வம் காட்டாதாது இன்னும் வசதியாகப் போயிற்று சுமதிக்கு.

மற்ற பண்டிகைகள் பற்றி அத்தனை உறுத்தல் இல்லாவிட்டாலும் தைப்பொங்கலை குக்கரில் பொங்கி பால்கனியில் சூரியனுக்குப் படையல் வைத்து வணங்கி முடிப்பது மிகுந்த வருத்தம் தரும் இவனுக்கு. உழவுக் குடும்பத்தில் பிறந்தவன் கொண்டாடும் திருநாள் இப்படி சம்பிரதாயமாக முடிந்து போகிறதே என்றிருக்கும்.

அப்பா தன் பாகத்துக்கு வந்த வயல்வெளி அத்தனையையும் கிரயம் செய்து சென்னையில் இந்த வீட்டை வாங்கிப் போட்டுக் காலமாகியும் விட்டிருந்தார் திடீர் மாரடைப்பில். ஊரில் மிச்சமாகி இருந்தது ஐம்பது செண்ட் அளவிலான தோட்டம் மட்டுமே.

இரண்டு பெண்களைக் கட்டிக் கொடுத்து விட்ட சித்தப்பாவுக்கும் வயதாகி விட விவசாயத்தில் முன் போல ஈடுபட இயலவில்லை. அதை நம்பி மட்டும் பிழைக்க முடியாதென மகன் குமரேசன் நான்கு கார்களை வாங்கி வாடகைக்கு விட்டான். நன்றாக அவை ஓடவே டிரான்ஸ்போர்ட் பிஸினஸில் கவனம் செல்ல ஆரம்பித்து விட்டது. இப்படியாக வயல்கள் எல்லாம் கிரயமாகி கார்களாக வேன்களாக மாற ஆரம்பித்தன. சித்தப்பாவால் தடுக்க முடியவில்லை. ஆனாலும் தன் ஆத்ம திருப்திக்காக என்று சொல்லி சில தோட்டங்களை வசப்படுத்திக் கொண்டு அத்தோடு இவனுடையதையும் கவனித்துக் கொண்டிருந்தார்.

தனக்கும் வயதாகிக் கொண்டே வருவதால் ‘குடும்பத்தோடு பொங்கலுக்கு வந்து போப்பா’ என்ற அவரது அன்புக்குக் கட்டுப்பட்டுதான் இந்தமுறை அங்கு சென்றிருந்தான். அப்போதுதான் அவனுக்கான தோட்டத்தைக் காட்டினார். அதில் வாழை பயிரிட்டிருந்தார். சுற்றிலும் சுமார் பத்து தென்னைகளும் இருந்தன. “நல்லா வச்சிருக்கீங்க சித்தப்பா” என அவர் கையைப் பிடித்து தழுதழுத்து விட்டான்.

மாதாமாதம் அவர் அனுப்புகிற பணத்தை வாங்கிக் கொள்ளுகையில் ஏற்படாத குற்ற உணர்வு பச்சை பசேல் என அவனுடைய தோட்டத்தைப் பராமரித்திருந்த அழகைப் பார்த்ததும் ஏற்பட்டது. வருடக் கணக்கில் எட்டிப் பார்க்காதது எத்தனை பெரிய தப்பென வருத்தியது.

சித்தப்பா அதை பெரிது பண்ணிக் கொள்ளவில்லை.

“எனக்கென்ன சிரமம்? சொல்லப் போனா சந்தோசம்தான். உன் தம்பியானா எல்லா வயலையும் வித்து வண்டியாக்கிட்டான். மனசு வலிச்சாலும் அவன் வாழ்க்கைக்கு எது வேணுமின்னு அவந்தானே தீர்மானிக்கணுமின்னு விட்டுட்டேன். எப்படியொ நல்லாயிருந்தா சரிதான். கிராமத்தில நாம நெல்லு விளைச்சல் பாத்த பூமியெல்லாமே கைய விட்டுப் போயாச்சு. என் ஆயுசு மட்டும் மிச்சமிருக்கிற தோட்டங்களையாவது விக்கப்படாதுன்னு சொல்லி பயிர் பண்ணிட்டிருக்கேன்” என்றபடியே அடுத்து இருந்த அவரது தோட்டத்துக்கும் அழைத்துச் சென்றார்.

கத்திரி, வெண்டை, புடலை, தக்காளி எல்லாமும் பயிரிட்டிருந்தார். தள்ளாத வயதிலும் தினசரி இரண்டு மூன்று மணி நேரங்களாவது அங்கு செலவிடுகிறார் என்பது பேச்சிலே தெரிந்தது. இளசாய் வெண்டைக்காய்களைப் பறித்து சாப்பிடத் தந்தார். “சின்னதில ரொம்ப இஷ்டமா சாப்பிடுவியே. கணக்கு நல்லா வரும்னு” சிரித்தார். “இதுகளை சாப்பிட்டு சாப்பிட்டே ஒனக்கு கணக்கு நல்லா வந்து படிச்சு பெரியாளாகி உழவை விட்டு ஒதுங்க வேண்டியதாப் போச்சு. ஊரோடு இருக்கேன் உழவைப் பாக்கேன்னு அக்ரி படிச்ச ஒன் தம்பியும் இப்போ வேற பொழப்பைத் தேடிக்கிட்டான்” என்றார் விரக்தியாக.

என்ன சொல்வதெனத் தெரியவில்லை அவனுக்கு.

ப்பாவும் அவனும் விவசாயத்திலிருந்து வெளியேறி, விருப்பப்பட்டோ படாமலோ 'திறமைக்கேற்ற' என்ற அடையாளத்துடன் வாழ்க்கையை அமைத்துக் கொண்டது நியாயமெனில் தம்பி செய்ததை அநியாயமாக நினைக்க எப்படி இயலும்? தோட்டத்தை விற்காமல் சித்தப்பாவின் உணர்வுகளுக்கு இந்த அளவுக்காவது மதிப்புக் கொடுத்திருக்கிறானே என்றுதான் சமாதானமாக வேண்டியிருந்தது. அவன் சிரமங்கள் அவனுக்கு.

அந்த சிறு நகரம் பட்டணத்துக்கு இணையான வசதிகளுடன் வளர ஆரம்பிக்க வயல் வேலைக்கு ஆள் கிடைப்பது அரிதாகிப் போனதாம். உடம்பை வருத்தாத வேறு வேலை வாய்ப்புகள் பெருகி விட்டிருந்ததை முக்கிய காரணமாக சித்தப்பா முன் நிறுத்தியதை அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

இப்போது எல்லோருமே பிள்ளைகளை நன்றாக படிக்க வைக்கிறார்கள். மீடியாக்களின் தாக்கத்தில் மொபைல்ஃபோன், டிவி, வாகனம் என அவரவருக்கு இயன்ற அளவில் வாழ்வாதார வசதிகளைப் பெருக்கிக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். மேல்வர்க்கம் அனுபவிக்கும் வசதிகளை அவர்களும் அனுபவிக்க நினைப்பதில் தவறேதுமில்லையே. படிப்பறிவு இல்லாது போனாலும் அவர்கள் தரும் உடல் உழைப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து ஊதியத்தை உயர்த்துவதே சரியான தீர்வாக அமையும்.

தாத்தாவாக இருந்தால் இதையெல்லாம் சொல்லியிருப்பான். ஆனால் அவரிடம் வாதம் வளர்த்து மனதை வருத்த விரும்பவில்லை. காரணங்கள் எதுவாயினும் உழவின் மீதான நாட்டம் குறைந்து வருவதும், காப்பாற்றப்பட வேண்டிய ஒன்றாக அது மாறி வருவதும் உண்மைதானே. சொந்த நிலத்தில் உழுது வந்த ஏழை விவசாயிகளும் அரசு என்னதான் சலுகைகள் தர முன் வந்தாலும் எப்போதடா உழவிலிருந்து கழன்று கொள்ளலாமென்கிற மனநிலையிலேதான் இருப்பது புரிந்தது.

ஊரிலே பரிச்சயமான பல இடங்களில் முன்பிருந்த பச்சை வயலெல்லாம் வணிக வளாகங்களாகவும் பெரிய மருத்துவமனைகளாகவும் பள்ளிக் கூடங்களாகவும் அல்லவா மாறி விட்டிருந்தன! பட்டணத்தில்தான் அநியாயம் என நினைத்தால் பெருகி விட்ட போக்குவரத்துக்கென, சாலைகளை விஸ்தரிக்கப் போட்டுத் தள்ளியிருந்தார்கள் பலநூறு வயதான விருட்சங்களை சகட்டுமேனிக்கு. ஏரி குளங்களைத் தூர் வாருவதில் அக்கறை காட்டுவதாகச் சொல்லும் அரசும் தேவையென்று வருகையில் நீர்வளத்தில் கைவைக்கத் தயங்கவில்லையே? ஊரின் பெரிய குளத்தை மூடிப் பேருந்து நிலையமாக்கி விட்டிருந்தார்கள். பழைய நிலையத்தில் நெருக்கடி அதிகமாகி விட்டதாம்.

வளரும் மக்கள் தொகைக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் இவையெல்லாம் அவசியம், வேறு வழியுமில்லை எனக் கருதும் நாடும் மனிதரும் மிக வசதியாக இயற்கை அன்னையின் வருத்தத்தையும் அதனால் ஏற்படக் கூடிய விளைவுகளையும் மறந்து விட்டார்கள். வாழும் வரை தத்தமக்கான வசதிகளைப் பெருக்கிக் கொண்டு வாரிசுகளுக்குச் சொத்து பத்தைச் சேர்ப்பது ஒன்றுதான் குறிக்கோளாகத் தெரிந்தது. வெட்டிச் சாய்த்த மரங்களின் எண்ணிக்கைக்கு இணையாக வீட்டுக்கு ரெண்டு மரமாவது வைத்து வளர்த்து இருந்திருப்பார்களேயானால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்! யார் சொல்லி யார் கேட்பது? ‘பூமியாம் வெப்பமடையுதாம் என்னமோ பூச்சாண்டி காட்டுறாங்க’ என்கிற அளவிலேதான் இருந்தது படித்தவர்களின் பார்வையும் கூட.

இத்தனைக்கும் சென்னை போல் நாற்பதுக்கு அறுபது ஒரு கிரவுண்ட் என்றில்லாமல் எல்லா வீடுகளும் செண்ட் கணக்கில் அமைந்தவை. காம்பவுண்டுக்குள்ளே வீட்டைச் சுற்றித் தாராளமாய்க் கிடைத்திருந்த இடத்தை எப்படிச் சோலையாக்கி வைக்கலாம்? கொசுத் தொல்லை, பராமரிக்க கஷ்டம் என்னன்னவோ சொல்லி மண்ணை மூடி சிமெண்ட் தளமாக்கி விட்டிருந்தார்கள் பலரும். வந்த நாலு நாளில் சென்ற நண்பர் உறவினர் வீடுகளில் கவனித்ததுதான். இப்படிச் செய்தால் பிறகு நிலத்தடி நீர் வறளாமல் என்ன செய்யும்?

நல்லவேளையாக அடுக்குமாடிக் குடியிருப்பு மோகம் மட்டும் அங்கு வளரவில்லை. அந்த ஊரில் எலி வளையானாலும் தனி வளை, என் காட்டுக்கு நானே ராசா என வாழ்ந்து பழக்கப் பட்டிருந்தார்கள் மேல் தட்டினர். ‘வளவு’ எனும் ஒண்டுக் குடித்தனமுறையில் வாழ்ந்து அனுபவப்பட்ட நடுத்தர வர்க்கமும் கூட இது போன்ற குடியிருப்புகளின் பராமரிப்புக்கான சட்டதிட்டங்கள், பொதுச் செலவுகளைச் சீரணிக்க முடியாமல் அந்தக் கலாச்சாரத்தையே வெறுப்பதாகக் கேள்வி. அதுவும் நல்லதாயிற்றோ? இல்லையெனில் இருக்கும் கொஞ்சநஞ்ச விளைநிலங்களையும் இந்நேரத்துக்கு ரியல் எஸ்டேட்காரர்கள் சுற்றி வளைத்து வேட்டு வைத்திருப்பார்கள்.

ழந்தும் உழவே தலை என்றிருக்கும் சித்தப்பாவின் வைராக்கியத்தில் பத்து சதவிகிதமாவது வேண்டும் தனக்கு என்கிற ஆசை வந்திருந்தது இப்போது. நேரடியாகத்தான் இறங்க முடியவில்லை. போகட்டும். ஆனால் யார் என்ன ஆசை காட்டினாலும் குத்தகைக்கு விட்டாவது ஆயுளுக்கும் தனது தோட்டத்தை விளைநிலமாகவே தக்க வைத்துக் கொள்வது ஒன்றுதான் ஆளாக்கிய தாத்தாவுக்கும், பூமித் தாய்க்கும் செய்யக் கூடிய மரியாதையாக இருக்கும் என உறுதி எடுத்துக் கொண்ட போது மனது கொஞ்சம் இலேசான மாதிரி இருந்தது.

தொலைக்காட்சிப் பெட்டியின் பக்கமே போகாமல், பொங்கலைக் கொண்டாடிக் களித்து மறுநாள் விடைபெறுகையில், வளர்த்த பாசம் கண்ணில் வழிய விடை கொடுக்கத் திணறித்தான் போனார்கள் சித்தியும் சித்தப்பாவும். அம்மாவின் முன் அதிகம் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள இயலாதவனாய் ‘அடிக்கடி வந்து போறேன் சித்தப்பா.தோட்டத்தையும் பார்த்தாப்ல ஆச்சு’ என்றான்.

ம்மா சாப்பிடக் கூப்பிடுறாங்கப்பா”

நினைவுகளிலிருந்து மீண்டு, தேர்ந்தெடுத்த படங்களை ஆல்பத்தில் ஏற்றி முடிக்கையில், கழுத்தைக் கட்டிக் கொண்டிருந்தாள் மகள்.

“இதோ ஆச்சுடா ஒரே நிமிஷம்” ஷேர் ஆல்பம் என்பதைக் க்ளிக் செய்து தம்பியின் மெயில ஐடியை தட்டச்சிட ஆரம்பித்தான். ‘கு ம ரே சன் அட் ஜிமெயில் டாட் காம்’ எனக் கூடவே நிறுத்தி வாசித்தவள், இவன் அனுப்பி விட்டுக் கணினியை மூடியதும், "அப்பா சம்மர் லீவு வரப் போகுது. சின்ன தாத்தா வீட்டுக்குப் போலாம்னு நான் சொன்னா பாட்டியும் அம்மாவும் இப்பதானே போயிட்டு வந்தோம். அடுத்த வருஷம் யோசிக்கலாம் அப்படிங்கிறாங்கப்பா” என்றாள்.


“யோசிப்பாங்களாமா? ம்ம்! நான் அழைச்சுட்டுப் போறேண்டா செல்லம். உன் ஆசையெல்லாம் அவங்களுக்குப் புரியாது.”

ஆதங்கமாய் சொன்னவனைப் பார்த்து ஜன்னலுக்கு வெளியிலிருந்து ஆதுரமாய்த் தலையசைத்தன ‘எங்களுக்குப் புரியும்’ என்பது போல், வீட்டைக் கட்டும்போது அப்பாவிடம் கெஞ்சிக் கூத்தாடி ஹாலின் அளவு குறைந்தாலும் பரவாயில்லை எனப் பத்துக்குப் பதினைந்தடி அளவில் அமைத்திருந்த சின்ன தோட்டத்தில் அவன் நட்டு வைத்து, இப்போது நெடுநெடுவென வளர்த்து விட்டிருந்த நெல்லி மரமும், காய்த்துக் குலுங்கி நின்றிருந்த தென்னை மரமும்.
***

ஓவியம்: நன்றி தினமணிக் கதிர்
புகைப்படங்கள்: நான் எடுத்தவை








  • 2 மே 2010 தினமணிக் கதிர் பத்திரிகையில் வெளியான சிறுகதை. தினமணி இணையதளத்திலும் வாசிக்கலாம் இங்கே.
  • இந்த நெடுங்கதைக்கான சிறுபொறியை நான் பெற்றது உழவனின் இந்த ஜோதியில் இருந்தே. நன்றி உழவன்! “நெற்குவியல்” எனும் தன் வலைப்பூவின் முகப்பில் ‘உழத் தவறியவன்’ என்றே தன்னை ஆதங்கத்துடன் அறிமுகப்படுத்திக் கொள்ளுகிறார் இவர்.
  • புதுகைத் தென்றலின் அழைப்புக்காக இக்கதையை பேரண்ட்ஸ் க்ளப்பின் 'குறள் கதைகள்' பெட்டகத்தில் சேர்த்திட விரும்புகிறேன்.
  • மரங்களைக் காக்கப் பதிவிடுமாறு அன்புடன் அழைத்த அமைதிச் சாரலுக்கும் இக்கதையையே பதிலாகத் தருகிறேன். இதையே அழைப்பெனக் கொண்டு விரும்பவர் தொடரவும் கேட்டுக் கொள்கிறேன்.
  • வலைப்பூ தொடங்கி சரியாக இரண்டு ஆண்டுகள் நிறைகின்றன. கடந்த வாரம் இருநூறாவது நபராக இணைந்து, தொடருபவர் எண்ணிக்கையை இரட்டை சதம் ஆக்கிய ‘அமைதி விரும்பி’க்கும், இரண்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து ஊக்கமளித்து உடன் வரும் அத்தனை நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!!

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin