வெள்ளி, 19 டிசம்பர், 2014

தேனம்மை லெக்ஷ்மணன் பார்வையில்.. ‘இலைகள் பழுக்காத உலகம்’குழந்தைகளைப் பற்றியும் அவர்களின் மென்மையை மேன்மையைப் பற்றியும் அதே சமயத்தில் வாழ்வின் ஆத்ம விசாரங்களையும் தான் எதிர்கொண்ட நிகழ்வுகளையும் அழகான கவிதைகளில் ரசனையோடு கொடுத்துள்ளார் ராமலக்ஷ்மி. இரண்டு விருதுகள் இவரது முதல் கவிதைத் தொகுதிக்குக் கிடைத்துள்ளன. அதுவே இத்தொகுதியின் சிறப்பைக் கூறும்.

முதல் கவிதை முதுமையையும் இனிமையாக்குகிறது, செவிகளால் பார்க்கமுடியும் அற்புதத்தை நிகழ்த்துகிறது என்றால்
முடிவுக்கவிதை பிரபஞ்சத்தின் நிசப்தத்தைக் கேட்க வைக்கின்றது.

ரோஜாச் செடிக்குப் பூமழை வேண்டும் பூக்குட்டி., காப்பாத்து கடவுளே என்றதும் பெய்யெனப் பெய்யும் மழை, குழந்தைத் தடத்தைக் கண்டு அலைக்கழியும் கடல், புரட்டப்படாத செய்தித்தாளாய் உறங்கும் குழந்தைமை, வெள்ளிச் செருப்புவிட்டுச் சென்ற தேவதை, வண்ணத்துப் பூச்சிகளின் வகுப்பறை, குளிர் நிலவு, மொழம், ஓவியக் கூடத்திலிருந்து ஓடிப் பிடித்துப் பிள்ளையாரைத் தேடும் எலி, அரும்புகள், எல்லாம் புரிந்தவள் , கடன் அன்பை வளர்க்கும் ஆகிய கவிதைகள் அழகியல் தன்மையால் மனமெங்கும் மகிழ்ச்சி அலையைப் பரப்பின.

நிறையக் கவிதைகள் தாய்க்கும் சேய்க்கும் உள்ள பிணைப்பையும் நெருக்கத்தையும் பேசுகின்றன. அதில் ஒன்று மழலையின் எதிர்ப்பாட்டு. கேயாஸ் தியரி போல ஒன்றைச் சார்ந்து ஒன்று நடக்கும் அதுவும் இயைந்து நடக்கும் என்று தீர்மானித்தது போல அன்பையும் பாசத்தையும் கொட்டிச் செல்லும் கவிதைகள்.

“என்றைக்கு

எப்போது வருமென

எப்படியோ தெரிந்து

வைத்திருக்கின்றன

அத்தனை குஞ்சு மீன்களும்

அன்னையர்க்குத் தெரியாமல்

நடுநிசியில் நழுவிக்

குளம் நடுவே குழுமிக் காத்திருக்க

தொட்டுப் பிடித்து விளையாட

மெல்ல மிதந்து

உள்ளே வருகிறது

பிள்ளை பிறைநிலா.”

மனிதர்களின் சுயநலத்தைப் பேசும் கவிதை நாம் ,யுத்தம் ஆயிரமாயிரம் கேள்விகள், இருப்பையும் இறப்பையும் பேசும் சூதாட்டம், காண்போரற்று நிகழும் அரங்கு நிறையாத காட்சிகள், முகமூடிகள், அரசியல் பகடைக்காய்களாகும் அழகிய வீரர்கள் , அனுதாபம் மறுப்பு , ப்ரார்த்தனை கூட்டல் கழித்தல் சுயநலம் , நட்சத்திரக் கனவு ஆகிய கவிதைகள் சிந்திக்க வைத்தன.

மனிதர்களின் தான் என்ற அகந்தையைக் கூறும் சில கவிதைகளும் உண்டு. ஒன்றையொன்று. உண்மைகள் என்ற கவிதைகளும் அவற்றில் சில.

குழந்தைகளின் பால்ய விளையாட்டுக்களையும் சிறிது காலத்துக்கு ( 30 ஆண்டுகளுக்கு ) முன்னான குழந்தை விளையாட்டுகளையும் ஆடுகளம் கவிதையில் சொல்லிச் செல்கிறார். அந்த விளையாட்டுகளோடனான
வாழ்க்கையின் ஒப்புமையும் சிறப்பாக வடிக்கப்பட்டிருக்கிறது. குழந்தைகளிடமிருந்து கற்றுக் கொள்ளலைச் சில கவிதைகள் பகிர்கின்றன. இயற்கையைப் பாழ்படுத்துவதைப் பற்றிய கவிதைகள் சில.

இலைகள் பழுக்காத உலகம் நெகிழ வைத்த கவிதை. எட்டு வயதில் இறந்துவிட்ட தந்தையின் நினைவிலிருக்கும் அன்பு மகள் அவரைக் காண ஏங்கும் ஏக்கமும், அவர் தற்போது தன்னைக் கண்டால் எப்படித் தான் தென்படுவேனென்ற பதிவும் கலங்கடித்தது.

ஏழ்மையிலிருக்கும் மக்கள், புலம்பெயர்ந்தவர்கள், காவலாளிகள், தெருவோர வியாபாரிகள், இல்லத்தரசிகள் அனுபவிக்கும் மெல்லிய துயரங்களையும் வடித்துச் செல்கின்றன கவிதைகள்.

தூறல், தொடரும் பயணம். அவர்களின் கதைகள் ,வலி ஆகியன பெரும் பாரத்தை உண்டாக்கிய கவிதைகள், கூழாங்கற்கள் போன்ற கவிதைகள் சில நிலையாமையையும் பேசின.

"..பாய்ந்து வந்த வார்த்தை அம்புகளைத் தடுக்க

எட்டுகிற தொலைவில் கிடந்தும்

கேடயத்தை எடுக்கின்ற தெம்பில்லை

சுழற்றி வீச வாளொன்று சுவரிலே தொங்கியும்

நிமிர்த்திப் பிடிக்க விரல்களில் வலுவில்லை

இவள் தொட்டு ஆசீர்வதித்த

செங்கற்களைக் கொண்டு எழுந்த மனையென்பது

எவர் நினைவிலும் இல்லை." //////"..மீளாத்துயருடன் நாளும்

அக்கதைகளைக் கேட்டபடி

அவர்களுக்காகவே மின்னிக் கொண்டிருந்தன

ஆதிக்கவாசிகளால் நலிந்து

அழிந்து போன அவர்களின் உறவுகள்

வானத்தில் நட்சத்திரங்களாக."///

ஆகியன வலிக்க வைத்த கவிதைகள்.

அதே போல் பேரன்பு தாயைப் பற்றிய கவிதை. தந்தைக்குப் பின் தாயெனும் பேரன்பு எப்படி அன்புச் சங்கிலியால் அனைவரையும் பிணைத்துக் காக்கிறது என்று கூறியது.

சீண்டுவாரற்ற இயற்கையாய் சிற்றருவியின் சங்கீதம், உயிர்க்கூடு, விருது புறக்கணிப்பின் வலியையும் தொடர்ந்து வாழ்தலையும் கற்பித்த கவிதைகள்.

மொத்தத்தில் குழந்தைகளோடு பயணித்து பெண்களின் நிலையைக் கோடிகாட்டிச் சென்றும், ஆன்ம விசாரத்தைச் செய்வதையும், முதுமையையும் பரிசாய் எண்ணுவதும், வாழ்வியல் நிகழ்வுகளை ஒவ்வொரு கணத்திலும் மேன்மையாக்கும் வித்தையை வேண்டுவதிலும் இக்கவிதைத் தொகுதி சிறப்புற்றதாகிறது. இனிமையான வாசிப்புக்கு இலைகள் பழுக்காத உலகத்தைப் படிக்கலாம் என உத்தரவாதம் கூறுகிறேன்

நூல் :- இலைகள் பழுக்காத உலகம்
ஆசிரியர் :-ராமலக்ஷ்மி
பதிப்பகம் :- அகநாழிகை
விலை :- ரூ. 80/-
*

23 நவம்பர் 2014 திண்ணை இதழில்.. வெளியாகியுள்ள கட்டுரை.
**

தொகுப்பு குறித்த தங்கள் பார்வைக்கு நன்றி தேனம்மை!
***
 

23 கருத்துகள்:

 1. அருமையான விமர்சனம்...... பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 2. அஹா போட்டாச்சா.. பகிர்வுக்கு நன்றி ராமலெக்ஷ்மி. :)

  நன்றி வெங்கட் சகோ:)

  பதிலளிநீக்கு
 3. அழகாக ரசித்திருக்கிறார் தேனம்மை.

  வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 4. தேனம்மை அக்காவின் எழுத்தில் அழகானதொரு விமர்சனப் பார்வை...
  இது மதிப்பான உரை.

  பதிலளிநீக்கு
 5. பிரமாதமான கவியலசல்... வாசிக்கத் தூண்டும் விமர்சனம். நன்றி தேனம்மை. பாராட்டுகள் ராமலக்ஷ்மி.

  பதிலளிநீக்கு
 6. அழகான விமர்சனம் தேனம்மை வாழ்த்துக்கள்.
  ராமலக்ஷ்மி, வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin