இருபெரும் இதிகாசங்களாகிய இராமாயணமும் மகாபாரதமும் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காதவை. பிரமிப்பைத் தருகின்றவை. எண்ணற்ற கதை மாந்தர்களைக் கொண்டிருந்தாலும் ஒவ்வொரு பாத்திரப் படைப்புக்கும் முக்கியத்துவம் தரப்பட்ட இவற்றைக் கட்டுரைகளாகச் சொல்லிச் செல்வது ஒருவகை உத்தி. கதையாகச் சொல்லிச் செல்வது இன்னொரு வகை. கட்டுரைகள் ஒரு நேர்கோட்டில் விளக்கங்களுடன் நகர்ந்து செல்பவை. அவற்றையே கற்பனை கலந்து காட்சி விவரிப்போடு புனைவாக வடிப்பது ஒரு எழுத்தாளனின் திறமைக்கான சவால் என்றே சொல்லலாம்.
பலமான பின்புலத்தின் இழையிலிருந்து விலகாதிருக்க வேண்டிய நிர்ப்பந்தம். சுவை குன்றாமல் சொல்ல வேண்டிய அவசியம். சறுக்கி விடாமல் கத்தி மேல் நடப்பது போன்றதான இந்தச் சவாலை எந்த சாமர்த்தியங்களும் தேவைப்படாமல் மிக இயல்பாகத் தன் நேர்மையான எழுத்தினால் கடந்திருக்கிறார் ஐயப்பன் கிருஷ்ணன். எழுத்து நடை நம்மைக் களத்தில் கொண்டு நிறுத்துவதற்கும், கதாபாத்திரங்களின் தன்மை எந்தப் பாதிப்பும் அடையாததற்கும் காரணம், ஆசிரியர் மனதால் அந்தக் காலக்கட்டத்துக்குள் பயணப்பட்டிருப்பதும் அந்தக் கதாபாத்திரங்களாகவே மாறி உணர்ந்து எழுதியிருப்பதுமே.
பல தலைமுறைகளாகப் பல வடிவங்களில் மக்களுக்குச் சென்றபடியே இருக்கின்றன இதிகாசங்கள். ஒரு பாத்திரத்தின் அந்நேரத்தைய செயல்களை விவரிக்கும், விமர்சிக்கும் போக்கினில் அவற்றின் முழுமையான குணாதிசயங்களை ஒரு சிலபேர் சொல்லத் தவறி விடுவதால் பல மகாபாரத, இராமாயணக் கதாபாத்திரங்கள் தவறான சித்தரிப்புகளுடன் வலம் வந்தபடியும் இருக்கின்றன. அந்தப் பிழையைக் கவனமாகத் தவிர்த்திருப்பதுடன் எடுத்துக் கொண்ட கருவினில் மட்டுமே கவனத்தைச் செலுத்தாமல் எதிர்மறையாகவே நாம் பார்க்கின்ற பாத்திரங்களின் நல்ல பக்கத்தையும் வாய்ப்பு வரும் போது காட்டத் தவறவில்லை ஆசிரியர். இளம் பாண்டவர்களைத் தவறுதலாகக் கொன்று விட்ட அஸ்வத்தாமனிடம் 'குரு வம்சத்தைக் காக்கக் கடைசியாக இருந்த சிறார்களையும் அழித்து விட்டாயே' எனக் கதறியபடியே துரியோதனன் உயிரை விடுவது ஒரு உதாரணம்.
மதம் கொண்டு திரிந்த ‘அஸ்வத்தாமன், என்றொரு யானை’ தன் உடலில் ஏற்பட்ட காயங்களுக்குத் தனது வெறிச்செயல்களே பொறுப்பென்பதை உணரவேயில்லை. தந்தை துரோணர் தன்னை வேண்டுமென்றேதான் எதிரிகளிடம் ஒப்படைத்துக் கொண்டார் என்பதை உணரும் அஸ்வத்தாமன் தலை குனிந்து நிற்கிறான் கண்ணனின் முன்னால். சிரஞ்சீவியான அவனது வேதனையும் சிரஞ்சீவி ஆகிவிட இன்றைக்கும் உலகில் அனைத்து ஜீவன்களின் வலிகளில், வஞ்சிக்கப்பட்டவர்களின் வருத்தம் தோய்ந்த குரல்களில் அஸ்வத்தாமனின் துயரும், குரலும் கலந்து ஒலிப்பதாகக் காட்டுகிறார் ஆசிரியர்.
கணநேரம் ஏற்பட்டுவிட்ட தான் எனும் அகந்தைக்காக, ஆண்டவனை அடையும் வாய்ப்பை அந்த அகந்தை இழக்கச் செய்யும் என்பதற்காக கல்லுக்குள்ளே அகலிகையின் உயிரை வைத்த கெளதமரால், விமோசனம் பெற்ற அகலிகையுடன் மீண்டும் ஒன்று சேர முடிந்ததா? விடை கிடைக்கிறது ஒரு கதையில். இராமரின் கால் பட்டுக் கிடைத்த புண்ணியத்தைக் காட்டிலும் அவர் ‘தாயே’ என்றழைத்த ஒரு சொல்லால் பெண்மை போற்றப்பட்டுப் போரொளியாகிறது. அதே இராமர்தான் சீதையைக் காட்டுக்கு அனுப்பினார். அதற்கானக் காரணங்களாக வரும் கதைகள் அதிகமாகச் சொல்லப்படுவதில்லை. இன்னொரு கதையில் பிறன்மனை நோக்கிய பாவத்துக்காகப் பழிக்கப்பட்ட இராவணன் ஏன் அப்படி நடந்து கொண்டான் என ஆசிரியர் தனது பார்வையில் கூறியிருப்பது சொல்லப்படாத அப்படியான ஒரு கதையோ என நம்மை எண்ண வைக்கிறது. சூர்ப்பநகை மணமானவள், இலட்சுமணனைப் பற்றி முறையிடும் முன்னரே அண்ணன் இராவணனுடன் அவளுக்கு மனஸ்தாபம் இருந்தது என்கிற ஒரு முடிச்சினை ஆசிரியர் பிரித்து எடுக்கும்போது ஜோதியாகின்ற இராவணனின் உயிர் இராமனைச் சுற்றி வந்து உயரக் கிளம்புகிறது.
கண்ணன் - குசேலன் நட்பு நாம் அறிந்த ஒன்றே. உயர்வாகப் போற்றப்படும் துரியோதனன் - கர்ணன் நட்புக்கு எந்த விதத்திலும் குறைந்ததல்ல இவர்களின் பரிசுத்த அன்பு. தெரிந்த கதையெனக் கடந்து விட முடியாதபடிக் கட்டிப் போடுகிறது குட்டிக் கண்ணனுக்கும் சிறுவன் குசேலனுக்கும் நடுவேயான கள்ளங்கபடமற்ற பால்ய கால உரையாடல்களும் நிகழ்வுகளும். அவல் பெற்று அரண்மனை அளித்த கண்ணனின் பேரன்பில் நெஞ்சம் நெகிழ்ந்த குசேலனும் பாண்டவர்களுக்கு உதவி செய்வதில் மும்முரமாகி விட்ட கண்ணனும் பின்னர் பார்த்துக் கொள்ள வாய்ப்பு ஏற்படவேயில்லை என்றாலும் அவர்களுக்கு நடுவே இருந்த ஆழ்ந்த அன்பு எப்படி இருவரின் கடைசிக் காலம் வரை நீடித்து அதற்குப் பிறகும் கூடத் தொடர்ந்தது என்பதை அற்புதமாகச் சொல்கிறது ‘அன்புக் கவசம்’. மெய்யான அவ்வன்பில் நாம் கரைவது திண்ணம். ஆபத்துக் காலங்களில் அரணாய் நின்று நம்மைக் காப்பது நாம் செய்த நல்ல காரியங்கள் மட்டுமே அல்ல. உற்றவர் நம் மீது வைத்திருக்கும் உண்மையான அன்பும், நமக்காகச் செய்கின்ற பிரார்த்தனைகளும்தான் என்பது மறுக்க முடியாத சத்தியம் அல்லவா?
கட்டை விரலைக் காணிக்கையாகத் தந்த வேடர் குலத் தலைவனின் குருபக்தியை, அவனது வெள்ளந்தி உள்ளத்தை வெகு அழகாகச் சித்தரித்திருக்கிறார் ஆசிரியர். தந்தையின் கடைசி வார்த்தைகளை வேதவாக்காகக் கொண்டு தேடலைத் தொடரும் மகனாக, சிறுவனின் பேச்சென்று ஒதுக்கிடாமல் மகனின் கேள்விகளை மதிக்கும் பொறுப்பான தகப்பனாக, ஈரக் களிமண்ணாக இருக்கும்பொழுதே மகனை நல்வழியில் வடிக்க நினைக்கும் சிறந்த குருவாகப் பல பரிமாணங்களில் ஏகலைவனைக் காட்டும் ஆசிரியர், உண்மையான தியானத்தின் பலனாக அவனுக்கு இறைவனுடன் உரையாடும் வரம் வாய்ப்பதையும், பின்னாளில் கண்ணனின் இறுதிக் காரியங்களைச் செய்யும் பெரும்பேறு கிடைப்பதையும் சொல்லி வியக்க வைக்கிறார்.
தலைப்புக் கதையான சக்கர வியூகம் இரண்டு பாகங்களாக அதீதம் மின்னிதழில் வெளிவந்த சமயத்திலேயே பலரது பாராட்டைப் பெற்று, பரவலாகக் கவனத்தை ஈர்த்த கதை. ஆசிரியர் தரும் நுண்ணிய விவரங்களால் சக்கர வியூகமும் அதற்கு எதிரான மகர வியூகமும் மலைக்க வைக்கின்றன. போர் வர்ணனைகள் நம்மையும் அந்த சக்கர வியூகத்துக்குள் கொண்டு சென்று அபிமன்யூவுக்கும் துரோணருக்கும் நடுவே சாட்சியாக நிறுத்தி விடுகின்றன. அபிமன்யூ தந்திரமாக வீழ்த்தப்பட்டது போலவே வீழ்த்தப்படுகிறார் பின்னர் துரோணரும். தர்மத்தை நிலைநாட்ட நடப்பதாகச் சொல்லப்படும் போர்களில், மீறப்படும் போர் தர்மங்கள், போர் தந்திரங்களாக ஒப்புக் கொள்ளப்படுவது இன்றளவிலும் தொடரத்தானே செய்கிறது? ‘அனைத்தையும் பார்த்துக் கொண்டு காலம் தன் வட்டத் திகிரியை மேலும் சுழற்றிக் கொண்டே இருக்கிறது’. மெய்யான வார்த்தைகள்.
திருக்குறளைப் போலவே இருபெரும் இதிகாசங்களிலும் சொல்லப்படாத வாழ்வியலே இல்லை எனலாம். தர்மம், அதர்மம், துரோகம், வீரம், காதல், காமம், நட்பு, கடமை, பரிவு, அன்பு, பக்தி என சொல்லாமல் சொல்லப்பட்டிருக்கும் வாழ்வியல் தத்துவங்களையும் நீதிகளையும் அதே போலவே போதிக்காமல் நாம் உணர்ந்திடும் விதமாய்க் கதையின் போக்கில் கையாண்டிருக்கிறார் ஐயப்பன் கிருஷ்ணன். மொத்தம் ஏழு கதைகள். முதல் ஆறும் நேரடியாக இதிகாசப் பின்னணியைக் கொண்டிருக்க ஏழாவது கதை எல்லாக் காலங்களிலும் பெண்ணுக்குத் தொடரும் அநீதியைச் சுட்டிக் காட்டுவதாகச் சுடர் விடுகிறது. காட்டுக்குச் செல்லும் இலட்சுமணன் தன்னைப் பற்றியக் கவலை விடுத்து அண்ணனுக்கான கடமையைச் சரிவர ஆற்றட்டும் என அவனது தூக்கத்தை வரமாக வாங்கிக் கொள்ளும் ஊர்மிளையின் ஏக்கங்களையும், கெளதம சித்தார்த்தன் பிரிந்து செல்லுகையில் உறங்குவது போல நடித்து விடை கொடுக்கும் யசோதையின் வேதனைகளையும் எள்ளி நகையாடும் மூதாட்டி யார் என்பதே அச்சுடரின் திரி.
தான் வாசித்து வியந்த இதிகாசங்களை, தான் வியந்து மதித்த கதாபாத்திரங்களை தன் எழுத்தின் மூலமாக வாசகருக்குக் கொண்டு சேர்ப்பதை மட்டுமே நோக்கமாகக் கொள்ளவில்லை ஐயப்பன் கிருஷ்ணன். அதையும் தாண்டி இவற்றை வாசிக்கிற ஒவ்வொருவருக்கும் இந்த மாபெரும் காவியங்களை முழுமையாக அறிந்து கொள்ளும் ஆர்வம் ஏற்பட வேண்டுமென விரும்புகிறார். நிச்சயம் அது நிறைவேறும். அவருக்கும், வித்தியாசமான முயற்சியான இந்த இதிகாசக் கதைகளை தொகுத்து வெளியிடும் அகநாழிகை பதிப்பகத்திற்கும் நல்வாழ்த்துகள்!
*
_ சக்கர வியூகம் நூலில் இடம்பெற்றிருக்கும் எனது அணிந்துரை.
**
16 நவம்பர் 2014 திண்ணை மின்னிதழிலும்..http://puthu.thinnai.com/?p=27370 . நன்றி திண்ணை!
***
பக்கங்கள்: 96; விலை: ரூ. 80;
வெளியீடு: அகநாழிகை பதிப்பகம்;
தபாலில் வாங்கிட: aganazhigai@gmail.com
இணையத்தில் வாங்கிட: http://aganazhigaibookstore.com/index.php?route=product/product&product_id=1821
****
29 மார்ச் 2015 கல்கி இதழில் விமர்சனமாக இங்கே: http://tamilamudam.blogspot.in/2015/03/blog-post_25.html
இளம் பாண்டவர்களைத் தவறுதலாகக் கொல்கிறானா அஸ்வத்தாமன், இல்லை தெரிந்தே கொல்கிறானா என்பது முதல் கேள்வி. துரியோதனன் அப்படிக் கதறினானா என்பது இரண்டாவது கேள்வி.
பதிலளிநீக்குகண்ணனுக்கு இறுதிக்காரியங்கள் செய்வது ஏகலைவனா? அட!
புத்தகம் படிக்கும் ஆவல் பெருகுகிறது. புதிய வெளியீடா? அகநாழிகைப் பதிப்பகம் சரி, விலை? 80 ரூபாயா? படத்தைக் க்ளிக் செய்து தெரிந்து கொண்டேன்.
மாகாபாரதக் கதைகள், கதாபாத்திரங்கள் பற்றி ஏகப்பட்ட இடைசெருகல்கள் இருக்கின்றன. எது மூலம், மூலத்தை முழுமையாகப் படிப்பது எப்படி என்ற ஏக்கம் எனக்கு உண்டு. உதாரணமாக துரியோதனன் இப்படிக் கதறியது மூலத்தில் உண்டா? இப்போது ஜெமோ கூட தனது கற்பனையையும் சேர்த்து மகாபாரதம் எழுதி வருகிறார். நாளை எது மூலம், எது கற்பனை கலந்தது என்ற குழப்பம் என்னைப் போல பலருக்கு வரலாம்.
ராமாயணத்தை விட, மகாபாரதம் கணக்கிலடங்கா பார்வைகளுக்கும், நீதிகளுக்கும் வாய்ப்பளிக்கிறது. ஆனால் இதுபோன்று வரும் படைப்புகளைப் படிக்க சுவாரஸ்யம் குறைவதேயில்லை. கண்டிப்பாய் வாங்கி விடுவேன்.
உங்கள் அணிந்துரை அருமையாக இருக்கிறது.
நூலின் திறம் சொல்லும் அற்புதமான அணிந்துரை
பதிலளிநீக்குஅவசியம் நூலை படிக்க வேண்டும் எனும் எண்ணத்தைத்
தூண்டிப் போகிறது
அவசியம் வாங்கிப் படித்துவிடுவேன்
அருமையான அணிந்துரைக்கும் அதனைப் பதிவாக்கி
அறியத் தந்தமைக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
நன்றி ஸ்ரீராம்.. விரைவில் பதிலுடன் வருகிறேன்.
பதிலளிநீக்குநன்றி ரமணிஐயா :)
வாசிக்கும் ஆவலைத் தூண்டியது. சிறப்பான மதிப்புரை.
பதிலளிநீக்குஅடைமழையை வாசித்துக் கொண்டிருக்கிறேன்.
ம்ம்ம், நம்ம ஆசானின் எழுத்துகளா? இவற்றை அவர் எழுதினப்போவே படிச்சேன். எல்லாமும் நல்லா இருக்கும். அவரோட பார்வையில் புதியதொரு கோணத்தில் எழுதி இருப்பார்.
பதிலளிநீக்கு//ஒரு பாத்திரத்தின் அந்நேரத்தைய செயல்களை விவரிக்கும், விமர்சிக்கும் போக்கினில் அவற்றின் முழுமையான குணாதிசயங்களை ஒரு சிலபேர் சொல்லத் தவறி விடுவதால் பல மகாபாரத, இராமாயணக் கதாபாத்திரங்கள் தவறான சித்தரிப்புகளுடன் வலம் வந்தபடியும் இருக்கின்றன. //
இந்தக் குறை எனக்கும் உண்டு.
துரியோதனனை சந்தோஷப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு இளம் பாண்டவர்களை அஸ்வத்தாமா வஞ்சகமாகக் கொல்வான். ஆனாலும் துரியோதனன் அதற்கு வருந்துவான்.
பதிலளிநீக்குஉண்மையான காரணம் என்னவெனில் அவர்கள் விஸ்வதேவர்கள் எனவும் விஸ்வாமித்திரரின் சாபத்தால் இவ்வாறு திரௌபதியின் வயிற்றில் பிறந்து திருமணம் போன்ற பந்தங்களில் சிக்காமல் இறக்க நேரிட்டது எனவும் படித்திருக்கிறேன்.
அணிந்துரை மிக அருமை...
பதிலளிநீக்குகாலம் தன் வட்டத் திகிரியை மேலும் சுழற்றிக் கொண்டே இருக்கிறது.. - ஐயப்பன் கிருஷ்ணனின் ‘சக்கர வியூகம்’= மகாபாரத, இராமாயணக் கதாபாத்திரங்கள் தவறான சித்தரிப்புகளுடன் வலம் வந்தபடியும் இருக்கின்றன. அந்தப் பிழையைக் கவனமாகத் தவிர்த்திருப்பதுடன் எடுத்துக் கொண்ட கருவினில் மட்டுமே கவனத்தைச் செலுத்தாமல் எதிர்மறையாகவே நாம் பார்க்கின்ற பாத்திரங்களின் நல்ல பக்கத்தையும் வாய்ப்பு வரும் போது காட்டத் தவறவில்லை = ராமலக்ஷ்மி = அருமையான புத்தகம். அற்புதமான மதிப்புரை. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திருமதி
பதிலளிநீக்குRamalakshmi Rajan
//உண்மையான காரணம் என்னவெனில் அவர்கள் விஸ்வதேவர்கள் எனவும் விஸ்வாமித்திரரின் சாபத்தால் இவ்வாறு திரௌபதியின் வயிற்றில் பிறந்து திருமணம் போன்ற பந்தங்களில் சிக்காமல் இறக்க நேரிட்டது எனவும் படித்திருக்கிறேன்.//
பதிலளிநீக்குமகாபாரதத்தில் எல்லாவற்றுக்குமே இப்படி ஒரு காரணகாரியமாய் முன்கதை இருக்கும்தானே?
அருமையான அணிந்துரை...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் அக்கா.
பல தகவல்கள் அறியாதவை + வியப்பைத் தந்தன...!
பதிலளிநீக்குஇளம் பாண்டவர்களைத் தவறுதலாகக் கொல்கிறானா அஸ்வத்தாமன், இல்லை தெரிந்தே கொல்கிறானா என்பது முதல் கேள்வி.
பதிலளிநீக்குபதில் : தெரிந்தே கொல்கிறான் என்கிறது வியாச பாரதம்.
துரியோதனன் அப்படிக் கதறினானா என்பது இரண்டாவது கேள்வி.
பதில் சில வர்ஷன் ஆம் என்கிறது. மூலத்தை இன்னும் நெருக்கமாக படிக்க வேண்டும்.
ஆங்கில மூல வடிவம் இணையத்தில் கிடைக்கின்றது.
@கீதாம்மா .. நன்றி.
பதிலளிநீக்கு@ ஸ்ரீராம்,
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம். நீங்கள் கேட்ட கேள்விகளுக்கு ஒருவருக்கு இருவராய் பதில் அளித்திருக்கிறார்கள்:).
கண்டிப்பாக வாங்கி வாசியுங்கள். நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும்.
@ Ramani S,
பதிலளிநீக்குமகிழ்ச்சியும் நன்றியும், ரமணி sir.
@ ADHI VENKAT,
பதிலளிநீக்குமகிழ்ச்சி ஆதி:). நன்றி.
@ Geetha Sambasivam,
பதிலளிநீக்குநன்றி கீதாம்மா.
@ கே. பி. ஜனா,
பதிலளிநீக்குமிக்க நன்றி.
@ Rathnavel Natarajan,
பதிலளிநீக்குமகிழ்ச்சியும் நன்றியும், sir!
@ 'பரிவை' சே.குமார்,
பதிலளிநீக்குநன்றி குமார்.
@ திண்டுக்கல் தனபாலன்,
பதிலளிநீக்குநன்றி தனபாலன்.
@ Iyappan Krishnan,
பதிலளிநீக்குபதில்களுக்கு நன்றி ஜீவ்ஸ்:).