வியாழன், 11 டிசம்பர், 2014

சிறுகதை: "நல்லதோர் வீணை" - தமிழ் ஃபெமினாவில்..


ன்றைக்குதான்  ரேணுவுக்கும் பிறந்தநாள்.


மணவாழ்வு முறிந்து முழுதாக இருபத்தியெட்டு வருடங்கள் ஆகிவிட்டிருந்தாலும், ஒரு முறையேனும்  ரேணுவை நினைக்காமல் இளைய மகள் திரிஷாவின் பிறந்தநாளைக் கடக்க முடிந்ததில்லை கிஷோரால்.  அதுவும் நேற்று நடுங்கும் குரலில் வெகுநேரம் அம்மா அவன் கையைப் பிடித்தபடி ரேணுவைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்ததில் அவள் நினைவு கூடுதலாகவே மனதை ஆக்ரமித்திருந்தது.

அம்மாவின் அறையை எட்டிப் பார்த்தான். இலேசாக வாயைத் திறந்தபடி விடிந்தது தெரியாமல் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள். இரண்டு நாட்களாகக் காய்ச்சல் வேறு. தூக்கத்தைக் கலைக்க வேண்டாமென பால்கனிக்கு வந்தான். ’திரிஷா இந்நேரம் எழுந்திருப்பாளா?’ அங்கிருந்த ஊஞ்சலில் முன்னும் பின்னும் ஆடியபடியே மொபைலில் அழைத்தான். ரிங் ஆகிக் கொண்டேயிருந்தது. என்ன வழக்கமோ. எப்போதும் வைப்ரேஷனில்தான் போட்டிருப்பாள்.

“நான் மேஜர் ஆயாச்சுப்பா. விஷ் மி மெனி மெனி ஹாப்பி ரிடர்ன்ஸ் ஆஃப் தி டே” இவனை முந்திக் கொண்டு கலகலவெனச் சிரித்தாள் சத்தமாய், ரேணுவைப் போலவே. மீண்டும் எழுந்த ரேணுவின் நினைவை வலுவில் ஒதுக்கி விட்டு “ஹாப்பி பர்த் டே திரிஷ் டார்லிங்” என்றான்.

“சாரிடா. எங்களுக்கு இன்னைக்கு உன் கூட இருக்க முடியாமப் போச்சு.  அப்புறம் என்ன ப்ரோக்ராம் இன்னிக்கு? ஃப்ரெண்ட்ஸுக்கு நைட் டின்னர் ட்ரீட் கொடுக்கிறதா சொன்னியே?”

”இல்லப்பா. அவங்கதான் எனக்கு ட்ரீட் தருவாங்களாம். 18 இஸ் வெரி வெரி ஸ்பெஷல்னு அகிலும் ஜெயேஷும் சூப்பரா ஒரு ப்ளான் போட்டு அசத்திட்டாங்க. தியாவும் வர்றா. காலேஜ் முடிஞ்சதும் நைட் ட்ரெயின்ல மதுரை கிளம்பறோம். காலேல கொடை ரோட்ல இருக்கிற ஒரு ரிசார்டுக்குப் போறோம். ஒன்றரை மணி நேரம் ட்ரெக்கிங் செஞ்சுதான் அங்க ரீச் ஆகணும். அங்கே நோ எலக்ட்ரிசிட்டி, நோ நெட், நோ டிவி, நோ மொபைல். நேச்சரோடு 2 நாள். கோயிங் டு பி அன் அட்வென்ச்சரஸ் ஸ்டே” மீண்டும் சிரித்தாள்.

 “த்ரிஷ்.. என்னடா இது? உன் அம்மா..”

“ஸ்டாப் அப்பா. அம்மா எவ்வளவு சொன்னாலும் புரிஞ்சுக்க மாட்டாங்க. கலாட்டா செய்வாங்க.  என் பொறந்தநாளும் அதுவுமா அவங்கள அழ வச்சி நானும் மூட் அவுட் ஆக விரும்பல. ஃபோன் செஞ்சு விஷஸ்ஸை மட்டும் வாங்கிடுவேன். விஷயத்தைச் சொல்லி கன்வின்ஸ் பண்றது உங்க வேலை.”

வனஜாவை சமாதானப்படுத்துவதா? தலை சுற்றியது.

“கண்ணா, அட்லீஸ்ட் அங்கங்கேருந்து...”

“கமான். ஜெயேஷும் அகிலும் எங்கள பத்திரமாப் பாத்துப்பாங்க.  மதுரை போனதும் கூப்பிடறேன். அப்புறமா சிக்னல் இருக்குமா தெரியாது. சேஃப் அன்ட் சவுண்டா மன்டே மார்னிங் ஹாஸ்டல்ல இருப்போம்.

ஃபோனை கட் செய்து விட்டாள். திரும்ப அழைத்தாலும் எடுக்க மாட்டாள். வனஜாவிடம் இப்போதே சொல்ல வேண்டுமா? தன் அப்பாவுக்கு பைபாஸ் சர்ஜரி என ஊருக்குப் போயிருக்கிறாள். மாலையில் சொல்லிக் கொள்ளலாம். அதுவரையில் நிம்மதியாய் இருக்கட்டும்.

ரேணு என்ன பெரிய தப்பு செய்து விட்டாள்?

இத்தனை புலம்பும் அம்மாவும்தானே அன்றைக்குத் தன்னைத் தூண்டி விட்டாள்? இப்போதோ “நான்தான் புத்திகெட்டுப் போய் ஏதேதோ சொன்னேன்னா படிச்ச ஒனக்குப் புத்தி வேண்டாம்?” என்கிறாள். சரிதான். அன்றைய தன் மனநிலைக்கு அம்மாவின் தூண்டுதல்களைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டதே நிஜம். வனஜாவைப் பற்றியும்தான் எவ்வளவோ குறைகள் இன்றுவரையிலும் சொல்லிக் கொண்டே இருக்கிறாள். விலகியா விட்டான்? அம்மாவைதான் விலக்கி வைத்த மாதிரி ஆகி விட்டது.

வனஜாவுக்கும் அம்மாவுக்கும் உப்புச் சப்பில்லாத விஷயத்துக்கெல்லாம்  எழுகிற வாக்குவாதங்களில் இவன் தலையிடுவதே இல்லை. ஒவ்வொரு நாளும் ஒரு பிரச்சனை. இத்தனைக்கும் வனஜா அம்மாவின் சொந்த அண்ணன் மகள். இரண்டாவது சாய்ஸாகத்தானே தன்னை மருமகளாக்கிக் கொண்டார்கள் என்கிற ஆத்திரம் அவள் மனதினுள் இன்னும் கனன்று கொண்டேயிருக்கிறது என்பது அம்மாவின் கணிப்பு.

ரேணுவைப் பெண் பார்க்கச் சென்ற நாள் இன்னும் பசுமையாக நினைவில் இருக்கிறது. அசர அடிக்கிற அழகு. பிரமிப்பில் இருந்தான். ரேணுவின் கலகலப்பான பேச்சு அப்பாவுக்கும் தம்பிக்கும் பிடித்திருந்தது. ஆங்கிலத்தில் சரளமாகப் பேசியது அம்மாவுக்குப் பெருமையாக இருந்தது. எல்லோரும் இவன் அதிர்ஷ்டசாலி என்றார்கள். ஆரம்பத்தில் சந்தோஷத்தைத் தந்த பாராட்டு போகப்போக ‘அப்போ அவ அதிர்ஷ்டசாலி இல்லையா?’ எனக் குதர்க்கமாக யோசிக்க வைத்து விட்டது.

தான் பார்க்க அத்தனைப் பிரமாதமானவன் இல்லை என்பது கிஷோருக்கும் தெரியும். ஆனால் நல்ல படிப்பு. பெரிய வேலை. தரகர் பெரியப்பா மகனுக்காகக் கொண்டு வந்த ரேணுவின் படத்தைப் பார்த்ததும், இவனை விடத் திறமைகளில் பலபடிகள் கீழே இருக்கிற பயலுக்கு இப்படி ஒரு அழகான எம்.ஏ படிச்சப் பொண்ணா என்று அம்மாவுக்குப் பொறுக்கவில்லை. ‘கிஷோருக்குப் பார்க்கலாமே’ என முந்திக் கொண்டிருக்கிறாள். ‘கிஷோரை உங்க அண்ணன் பொண்ணுக்குதானே…’ எனத் தரகர் இழுத்தபோது ‘அவங்க ஆசைப்பட்டா ஆச்சா? பி.யு.ஸி கூடத் தாண்டலையே வனஜா’ அம்மா அன்று சொன்னதை இன்றும் வனஜா குத்திக் காட்டிக் கொண்டு இருக்கிறாள். ‘வந்து நின்னீங்களே அப்புறமா.. குடும்பத்தோடு வாசல்ல கையக் கூப்பி’ என்பதையும் மறக்காமல் சேர்த்துக் கொள்வாள்.

ரேணு கேட்டாள் மணமான புதிதில் ‘பொண்ணு பாத்த அன்னிக்கு மொதல்ல எங்கிட்ட என்ன பிடிச்சது உங்களுக்கு?’ என. கொஞ்சம் கூட யோசிக்காமல் ‘ஒன்னோட சிரிப்பு’ என்றான். சோழிகளை உருட்டி விட்டது போல அதற்கும் சிரித்தாள் கலகலவென. யாரையும் திரும்பி இரசிக்க வைக்கிற சிரிப்பு. பொது இடங்களில், கல்யாண வீடுகளில் ரேணு சிரிக்க நாலு பேர் திரும்பிப் பார்க்க ‘அடக்கம் வேண்டாம்..’ என ஆரம்பித்தாள் அம்மா. மகளைப் போல அப்பாவிடம் பாசம் காட்டியதும், ஒரு சகோதரியைப் போலத் தம்பியிடம் உரிமையோடு கேலி பேசியதும் பிடிக்காமல் போனது. ‘மாமனார், கொழுந்தன்னு ஒரு மரியாத.. இடைவெளி வேண்டாம்?’ முணுமுணுத்தாள். இவர்களோடு வந்து தங்கியிருந்த போது பார்ட்டிகளில் கிஷோரின் நண்பர்களோடு சரிக்குச்சரி அமர்ந்து உரையாடியது, உலக விஷயங்களை அலசியது, குறிப்பாக ஸ்லீவ்லெஸ் சுடிதாரில் வலம் வந்தது எதுவுமே பிடிக்கவில்லை அம்மாவுக்கு. மெல்ல இவன் மனதைக் கலைக்க ஆரம்பித்தாள்.

சந்திக்கிறவர்களில் ஒருவர் பாக்கி இல்லாமல் “ஹவ் லக்கி யூ ஆர்!” எனச் சொல்லிச் சென்றதும் சேர்ந்து கொண்டது. இவன் தகுதிக்கு ரேணு அதிகம் என எள்ளல் செய்வதாகப்பட ஆரம்பித்து விட்டது. ஈகோ. தாழ்வு மனப்பான்மை. அதை ஒத்துக் கொள்ள முடியாமல் சீற்றத்தைக் கீழ்த்தரமாக ரேணுவிடம் காட்ட ஆரம்பித்தான். சிரித்தால் “யாரை வளைத்துப் போட?” என்பான். முதல் முறை அடிப்பட்ட மாதிரி அவள் வேதனையோடு அவனைப் பார்த்த பார்வை இருக்கிறதே. ‘டியூஷன் சொல்லிக் கொடுங்களேன்’ என வந்த பக்கத்துவீட்டு ஒன்பதாம் வகுப்புப் பையனைக் கேவலமாகப் பேசி விரட்டி அடித்தது, ஒருநாள் வீட்டில் வைத்துப் பூட்டி விட்டு அலுவலகம் சென்றது என அடுத்தடுத்த அதிர்ச்சிகளை இவன் தந்தபோது தொடர்ந்து தாங்கிக் கொள்கிற கோழையாக இருக்கவில்லை ரேணு.

ரண்டே வருடங்களில் முடிவுக்கு வந்த மணவாழ்க்கைக்குப் பிறகு சோர்ந்து போய் விடாமல் ரேணு ஒரு புகழ் பெற்றக் கல்லூரியில் விரிவுரையாளராக வேலைக்குச் சேர்ந்தது தெரியும். இன்னொரு திருமணம் செய்யப் பெற்றோர் எவ்வளவோ வற்புறுத்தியும் மறுத்து விட்டிருக்கிறாள். அவளைப் பற்றியக் கவலையிலேயே ஒருவர் பின் ஒருவராகக் காலமாகி விட, தனக்கு வருகிறவளால் ரேணுவைப் பிரிய நேருமோவென அண்ணன்காரன் திருமணமே வேண்டாமென முடிவெடுத்து விட்டதாகக் காற்றுவாக்கில் சேதி வந்தது.


அப்பா இருந்தவரை இவனை மன்னிக்கவில்லை. வனஜாவுடனும் பேத்திகளோடும் பாசமாக இருந்தாலும் இவனோடு கடைசி வரை ஒரு வார்த்தை பேசவில்லை. அம்மாவோ வருடக் கணக்காகச் சுமந்து கொண்டிருந்த பாரத்தை நேற்று இவன் மேல் இறக்கி வைத்து விட்டாள். மனம் விட்டு அழுதாள். வனஜாவும் வீட்டில் இல்லாமல், அபூர்வமாய் வாய்த்த தனிமை வசதியாய்ப் போயிருந்தது.

”ரேணு மாதிரி வருமா? அம்மா அம்மான்னுதான் கூப்பிடுவா. பாத்துப் பாத்து செய்வா. போனமாசம் சந்திரா அத்தையப் பாத்தேன். ‘அந்தப் பொண்ணக் கழட்டி விட்டப் பாவத்த எங்கியாவது போய்க் கழுவு. அக்கறலதான் சொல்லுதேன். ரெண்டு பொம்பளப் புள்ளகளப் பெத்து வச்சிருக்கான் ஒம்மவன். வம்சம் தளைக்க வேண்டாமான்’னு கேக்குறா. ‘ஒங்களால அவ அண்ணனும் கண்ணாலங்காட்சிப் பாக்காம ஒரு வம்சமேல்லா நின்னு போச்சு’ன்னா”

ம்சம். பெரியவள் ஆஷாவைப் பற்றி அம்மாவுக்கு இதுவரை தெரியாது. பேத்தி மும்பையில் கைநிறையச் சம்பளம் வாங்குகிறாள், வேலை மீதான ஆர்வத்தில் கல்யாணத்தைத் தள்ளிப் போடுகிறாள் என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறாள். திருமண பந்தத்திலோ, குடும்ப அமைப்பிலோ நம்பிக்கை இல்லை என்றே சொல்லி வந்தவள் ஆஷா. தனியளாய் நின்று விடுவாளோ எனக் கவலைப்பட்டுக் கொண்டிருந்தபோது திடீரென ‘குருவை எனக்குப் பிடிச்சிருக்கு. வி ஆர் கோயிங் டு லிவ் டுகெதர்’ எனப் பெரிய குண்டைத் தூக்கிப் போட்டாள். மன்றாடிப் பார்த்தார்கள். ‘கல்யாணம்னு கமிட் ஆகி, பிடிக்கலேன்னா டிவோர்ஸ்னு போறதெல்லாம் முடியாதுப்பா. ரெண்டு வருஷம் பாக்கிறோமே. இஃப் ஆல் கோஸ் வெல், அப்புறமாப் பண்ணிக்கிறோம்.’ தன் முடிவில் உறுதியாக இருந்தாள். இந்த மட்டில் ஒரு துணையைத் தேடிக் கொண்டாளே என ஆறுதல் அடைய வேண்டியதாயிற்று.

அக்காவைப் போலவே திரிஷாவும். அணியும் உடைகளிலிருந்து பழகும் நண்பர்கள் வரையிலும் எல்லாவற்றையும் தானே தீர்மானம் செய்கிறாள். ‘நம்ம வேல்யூஸ் என்னன்னு தெரியும். டோன்ட் வொர்ரி’ மகள்கள் இருவருமே வனஜாவின் அழுகை, இவனது கண்டிப்பு எல்லாவற்றையும் பேசிப்பேசியே கடந்து விடுகிறார்கள்.

‘என் பெண்களுக்கு முழுச் சுதந்திரம் கொடுத்திருக்கிறேன். அவர்கள் வாழ்க்கையை அவர்களே தீர்மானிக்க விட்டு விட்டேன்’ தோள்களை உயர்த்திப் பெருமிதமாக நண்பர்களிடம் சொல்லிக் கொள்கிறான், தன் இயலாமையை மறைக்க. மனதார அவர்களின் போக்கை அங்கீகரித்திருந்தாலும் பரவாயில்லை. பெருமைப்படுவதில் ஒரு நேர்மையாவது இருந்திருக்கும். கையாலாகாத இந்த நிலைதான் கடவுள் கொடுத்தத் தண்டனையா? சரியாகப்படாவிட்டாலும் தன் பெண்கள் என்பதால் மனம் சமரசம் செய்து கொள்கிறதா?

“வயித்தப் பிசையுதுடா இந்தச் சந்திரா சொன்னத நெனைச்சா. எந்த கங்கையிலப் பாவத்தக் கழுவ? பரிகாரம் பூஜைன்னு போறத விட இந்த மூச்சு நிக்கறதுக்கு முன்ன அவளப் பாத்து மனசார ஒரு முறை மன்னிப்புக் கேக்கணும். அவ மன்னிக்கணும்னு கூட அவசியமில்ல. ஆனா கேக்கணும்” அம்மா சொன்னபோது அவனுக்கும் அப்படியே தோன்றியது.

ன்றைக்கே நேருக்கு நேர் ரேணுவைச் சந்திப்போமெனக் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. ‘இன்னிக்குப் பிரதோஷம். ஒடம்பு தேவலை. கபாலீஸ்வரரைத் தரிசனம் செஞ்சே ஆகணும்’ அம்மா பிடிவாதம் பிடிக்கவே இருவருமாகக் கோவிலுக்கு வந்திருந்தார்கள். ஆச்சரியம். ரேணுவும் அங்கே. முப்பது வருடங்களுக்கு முன் பார்த்த மாதிரி அப்படியே இருந்தாள். ஷார்ட் குர்தா, ஜீன்ஸில் அழகாக, இளமையாகத் தெரிந்தாள். பெண் பார்த்த அன்று ஏற்பட்ட அதே பிரமிப்பு எழ, ஒருநொடி நெஞ்சடைத்த மாதிரி ஆகி விட்டது. பேச்சு வரவில்லை.

அத்தனை அருகாமையில் இவர்களைப் பார்த்த ரேணுவும் என்ன பேசவென அசெளகரியமாக உணர்ந்திருக்க வேண்டும். ஆனாலும் காட்டிக் கொள்ளாமல் ‘ஹவ் ஆர் யூ கிஷோர்?’ என்றாள். பதிலுக்குக் காத்திராது திரும்பி அம்மாவைப் பார்த்தாள். அம்மாவின் முகத்தில் தெரிந்த பரவசத்தில் இறுக்கம் தளர்ந்து புன்னகைத்தாள்.

“வாட் எ சர்ப்ரைஸ். ஹேப்பி பர்த் டே ரேணு!” பின்னாலிருந்து கேட்டது ஒரு கம்பீரமான குரல். இவர்களைக் கடந்து வந்து ரேணுவின் கைகளைப் பற்றிக் குலுக்கினார் ஒரு ஆறடி உயர மனிதர். “ஜி ப்ளஸ்ல விஷ் பண்ணி அரைமணி கூட ஆகலை. இங்கே பார்ப்பேன்னு நினைக்கல.  டூ தவுஸன் செமினார்ல மொத தடவை ஒன்னப் பாத்தப்போ எப்படி இருந்தியோ அப்படியே இருக்கறம்மா. காட் ப்ளஸ் யூ!”

“ஓ! தேங்யூ சோ மச் சார்” கலகலவெனச் சிரித்தாள் ரேணு சத்தமாக.

சற்றே நகன்றுபோய் ஒருசில நிமிடங்கள் பேசியிருந்து விட்டு, “கேரி ஆன். யு லுக் வெரி ப்ரிட்டி இன் திஸ் ட்ரெஸ். ஹவ் எ வொன்டர்ஃபுல் டே” என அவர் விடைபெற்றதும் விரைந்து சென்று ரேணுவின் கைகளைப் பற்றிக் கொண்டாள் அம்மா.

“எப்படிம்மா இருக்கே” அம்மா கேட்டதும் “நல்லாருக்கேம்மா நீங்க..” ரேணு சொன்னதும் மட்டுமே கிஷோருக்குக் கேட்டது. அதற்கு மேல் அவர்களிடத்தில் கவனம் செல்லவில்லை. ‘யாரிந்த ஆளு..’ மூளைக்குள் கேள்வி புழுவாய் நெளிய, ‘இவ்ளோ அன்யோன்யமாய்..’ குடைச்சலில் தலை விண்விண் எனத் தெறிக்க, திரும்பிச் சென்று கொண்டிருந்த ஆஜானுபாவமான அந்த ஆறடி உயர மனிதரையே வெறித்துப் பார்த்து நின்றிருந்தான் கிஷோர்.


* 
நன்றி ஃபெமினா!  
**

26 கருத்துகள்:

 1. நலங்கெட புழுதியில் எறிஞ்சும் கூட என்ன ஒரு பொஸஸிவ்நஸ்:(

  நானும் இப்படி பிரிஞ்சு போன சிலரைப் பார்த்திருக்கேன். அவன் திரும்பக் கல்யாணம் செஞ்சுக்கலாம். ஆனால்... அவளை வாழவிடமாட்டேன் என்று இன்னமும் கூட தொந்திரவு கொடுப்பதும், மன உளைச்சல் தருவதுமாக இருக்கிறான்.

  இந்த விஷயத்தில் மட்டும் இந்திய ஆண்கள் ஒரு தனி ரகம்:(

  பதிலளிநீக்கு
 2. ஆளுக்கொரு நீதி! மாறுவதே இல்லை ஆண் மனம்!

  பதிலளிநீக்கு
 3. அருமையான கதை. இதுவரையிலான கதைகளிலிருந்து வித்தியாசப்பட்டு நிற்கிறது இந்தக் கதை. ஏனென்று தெரியவில்லை. வழக்கமான திறமையான எழுத்துநடைதான். கதைக்களம் காரணமாயிருக்கலாம்.

  பதிலளிநீக்கு
 4. என்னவோ மனதை என்னவோ செய்கிறது இந்தக் கதை, அக்கா. எத்தனை ரேணுக்கள் இப்படி நிஜத்தில். தான் செய்யாத தவறுக்காக, வாழ்வை இழந்து - துறந்து.... என் நெருங்கிய தோழியின் கதையும் இதுதான். இதுவேதான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நானறிந்த சிலரும் இருக்கிறார்கள். இது ஒரு தொடர்கதைதான்..

   நீக்கு
 5. சரளமாய் பேசும் பெண்களை ஏனோ சிலருக்கு பிடிப்பது இல்லை.
  மன்னிப்பு கேட்க வந்து மீண்டும் பழைய நிலையில் யோசிக்கும் கிஷோர்!
  ஏன் ? பெண் மனதை புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள் என்று கேட்கத்தான் தோன்றுகிறது.
  அருமையான கதை.

  பதிலளிநீக்கு
 6. அருமையான கதை ..சில இயல்புகளை மாற்றவே முடியாது ..எத்தனை காலமானாலும் எட்டி பார்க்கும் சந்தேக குணம்

  பதிலளிநீக்கு
 7. அருமையான கதை ராமலெக்ஷ்மி. முதல் தொகுதி வெற்றி அடைஞ்சதுக்கு வாழ்த்துகள் ( திருப்பூர் அரிமா சக்தி விருதுகள் கிடைச்சிருக்கே ! ) அடுத்த தொகுதிக்கு நிறைய கதைகள் வந்திருச்சே ..புக்கா போட்டுறலாம். :) அட்வான்ஸ் வாழ்த்துகள். !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி. அரிமா சக்தி விருது பெற்றிருக்கும் தங்களுக்கும் என் நல்வாழ்த்துகள்! அடுத்த நூல் குறித்த சிந்தனை இப்போதைக்கு இல்லை.

   நீக்கு
 8. ரேணு பாத்திரம் மிகப் பெருமைக்குறியது. இந்நாளையப் புதுப் பெண்.பரந்த மனசில் பழமைக் கலாசாரத்தில் ஊறின இதயத்தை ப் பூட்டி வைத்துக் கொண்டு பெண்மையைக் காக்கிறாள். கிஷோர் .சொல்லிப் பிரயோசனமில்லை. இனி என்ன இருக்கிறது வாழ்க்கையில் பாவம் அந்தப் பெண். அருமையான கதை ராமலக்ஷ்மி..

  பதிலளிநீக்கு
 9. குடிக்காரன் கூட, கூட வாழ்ந்திடலாம். ஆனால் சந்தேகப்பேய் கூட ஒரு நிமிஷம் கூட வாழ்முடியாது. எத்தனையோ ரேணுக்கள் இம்மாதிரிப் பேய்களுக்கு வாக்கப்பட்டு உள்ளுக்குள் குமுறிக்கொண்டிருக்கிறார்கள்.
  நலங்கெட புழுதியில் எறிந்த பிறகு, தூசி தட்ட வேண்டாம்..மேலும் புழுதியை வாரியிறைக்காமலாவது இருக்கலாம். அருமையான நடை.. ;ஆனா கேக்கணும்' ...அவள் போற வழிக்கு புண்ணியம் வேண்டாமா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சரியாகக் கேட்டுள்ளீர்கள். கருத்துக்கு நன்றி நானானிம்மா.

   நீக்கு
 10. நல்ல கதை. எத்தனை வருஷம் ஆனாலும் ஆணுடைய ஆதிக்க சுபாவம் மாறாது.

  பதிலளிநீக்கு
 11. அருமையான கதை. திருமணத்திற்கு முன் ஒவ்வொரு ஆணும் அவசியம் படிக்க வேண்டிய கதை. வாழ்த்துகள் மேடம்!

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin