Thursday, November 24, 2011

வாழ்வை வளமாக்கும் புத்தகங்கள்

என்னுடைய வாசிப்பு அத்தனை விஸ்தாரமானதல்ல. சிறுவயதிலிருந்து இப்போதைய அனுபவம் வரை இந்தக் பதிவில் (“கட்டிப் போட்ட கதைகள்”) சொல்லிவிட்டுள்ளேன். கடந்த இரண்டு வருடங்களாக வாசிப்பு சற்றே அதிகரித்திருக்கிறது எனச் சொல்லலாம். என் வீட்டிலிருக்கும் சுமார் 1800 புத்தகங்களில் எனது சேகரிப்பு 200 வரைதான் இருக்கும். கணவரின் சேகரிப்பான மீதப் புத்தகங்களில் 90 சதவிகிதம் ஆங்கிலமே. இன்ன வகை(Subject)தான் என்றில்லாமல் பரவலாக பலவற்றைப் பற்றியும் அறியும் தாகமுடைய சேகரிப்பாக அவை. புனைவுகள் வெகு சொற்பமே. ஆரம்பக் காலங்களில் புத்தகத்துக்காக ஒதுக்கப்படும் தொகையைப் பார்த்து முணுமுணுத்ததுண்டு நான்! பின்னர் எனக்கே அதன் பயனில் ஒரு தெளிவு ஏற்பட்டு எதுவும் சொல்லுவதில்லை.

பெங்களூரைப் பொறுத்தவரை கங்காராம்ஸ், சப்னா, ஹிங்கிங்பாதம்ஸ், ஸ்ட்ராண்ட், ஷங்கர்ஸ் புக் ஹவுஸ் போன்றன ரொம்பகாலமாக இருப்பவை. கடந்த பத்து வருடங்களில் வந்தவையாக க்ராஸ்வொர்ட், லேண்ட்மார்க் மற்றும் சமீபத்தில் ரிலையன்ஸ் டைம் அவுட். மாதந்தோறும் மேற்சொன்ன கடைகளில் குறைந்தது ஏழெட்டு புத்தகங்களாக வாங்குவார் கணவர். இவரது இந்த தொடர் வாசிப்பில் எனக்கு வியப்பும் உண்டு. சலிப்பும் உண்டு. வாங்கிய வேகத்திலேயே அத்தனை வேலைகளுக்கு மத்தியிலும் தினம் பயணிக்கும் வேளைகளில், வாரயிறுதிகளில் என வாசித்து முடித்து விடுவது வியப்பு. என்னைப் போல வாங்கிப் ‘பிறகு படிக்கலாம்’ என சேர்த்துக் கொண்டே போவதில்லை:)! தவிக்கமுடியாமல் எழும் சலிப்பு அவற்றை இடம்பார்த்து வைப்பதில்.

#

இருபது வருட சேகரிப்பு. ஐந்து புத்தக அலமாரிகள். அதில் வீட்டிலிருந்த புத்தகங்களின் உயர அகலம் பார்த்து தேவைக்கேற்ப நானே வடிவமைத்து ஒரே மாதிரியான உயரங்களில் செய்து கொண்டவை நான்கு. இதனால் சின்ன புத்தகங்கள் சில தட்டுகளில் இரண்டு வரிசைகளில் வைக்க முடிகிறது. வாசித்தவற்றையே திரும்ப வாசிக்கும் அல்லது திடீரெனக் குறிப்பிட்ட புத்தகத்தை எடுத்துப் புரட்டும் பழக்கம் உண்டு. ஆரம்பத்தில் என்னென்ன புத்தகங்கள் உள்ளன என்பதை பட்டியல் படுத்த ஆரம்பித்து முடியாமல் விட்டுவிட்டேன். 95-ல் கணினி வந்த போது எளிதாக இருக்குமென அதிலும் முயற்சித்து விட்டு விட்டேன். இப்போது ஐபேட் அந்த வேலையை சுலபமாக்கி விட்டுள்ளது.

நூலகங்களில் ISBN எண்ணை ஸ்கேன் வைத்து பட்டியல் படுத்துவது பல காலமாக இருந்து வரும் முறையே. அந்த வசதியை ஐபேடின் app ஆகிய iBookShelf நமக்குத் தருகிறது. ஐபேடின் கேமராவே ஸ்கேனாகப் பயன்பட அனைத்துப் புத்தகங்களையும் நொடியில் பட்டியல் படுத்துவதோடு அதன் விவரங்களையும்(Read Book Synopsis) தருகிறது. அதுமட்டுமின்றி Goodreads Reviews தளத்திலிருந்து அப்புத்தகத்துக்காக எழுதப்பட்ட அனைத்து விமர்சனங்களையும் கொண்டு வந்து கொடுக்கிறது. தமிழ் புத்தகங்களில் முயன்றதில் விகடன் மற்றும் கிழக்குப் பதிப்பகப் புத்தகங்கள் சேமிப்பாகி ஓரிரு வரிகளில் விவரங்களையும் காட்டுகிறது iBookShelf. மற்ற தமிழ் பதிப்பகப் புத்தகங்களை இன்னும் முயன்று பார்க்கவில்லை.

'Kindle' வாங்கிய புதிதில் ‘இனி இடம் அடைக்காமல் புத்தக வாசிப்புத் தொடரும்’ என்றே மகிழ்ந்திருந்தேன். ஆனால் அங்கொரு பக்கம் அமேசானில் வாங்குவதோடு எப்போதும் வாங்குவது தொடரவே செய்கிறது. கின்டிலும், ஐபேடும் பலபுத்தகங்களைக் கையடக்கமாக வைத்து வாசிக்க, குறிப்பாகப் பயணங்களின் போது சவுகரியமாக இருப்பது தாண்டி புத்தகங்களுக்கு மாற்று எனக் கொள்ள முடியாதபடியாக.., புத்தகத்தில் வாசிக்கும் நிறைவைத் தராதவையாக.. என்பதே கணவர் உட்பட நான் கேட்டறிந்த பலரின் கூற்றும்.

# பிறகு வாசிக்கலாமென..

எனது மேசையில்..:(

பெங்களூர் மக்களுக்கு வாசிப்பை வளர்த்ததில் மிகப் பெரிய பங்கு ஸ்ட்ராண்ட் புக் ஸ்டாலுக்கே என்றால் இந்த ஊர்க்காரர்கள் மறுக்க மாட்டார்கள் என்றே எண்ணுகிறேன். அவர்கள் வருடம் தோறும் நடத்தும் புத்தக விழாவுக்கு கூட்டம் அலைமோதும். குழந்தைகள் பெரியவர்கள் கூடை கூடையாகப் புத்தகங்களை அள்ளிச் செல்லுவார்கள் சகாய விலையில். எல்லாமே ஆங்கிலம்தான். வழக்கமான பெங்களூர் புத்தக கண்காட்சியை விடவும் இந்த ஒரு சிறிய கடை பெரிய அரங்கினை வாடகைக்குக்கு எடுத்து வருடம் இருமுறை நடத்தும் கண்காட்சிக்கு அதிக கூட்டம் என்பதே நிதர்சனம்.

பொதுவாக கணவரும் சரி, மகனும் சரி தங்களைப் பற்றி நான் வலைப்பூவில் பகிர்வதை விரும்புவதில்லை. இருப்பினும் இது பொதுவான ஒரு விஷயத்தைப் பற்றியதாகையால் பகிர்ந்திடும் எண்ணம் பிறந்தது (புத்தகக் கண்காட்சிப் பதிவின் நீட்சியாகவும்).

மகன் எட்டாம் வகுப்பில் Best Reader Award வாங்கியிருக்கிறான் பள்ளியில். சக மாணவர் அனைவரும் அவனையே தங்களுக்குப் புத்தகம் தேர்ந்தெடுக்கச் சொல்லுவதாக நூலக மேற்பார்வையாளர் ஒருமுறை மகிழ்வுடன் குறிப்பிட்டார். தந்தையைப் போலவே fast reader. பதினோராம் வகுப்பில் படிப்புச் சுமை கூடிய வேளையில் வாசிப்பு குறைய ஆரம்பித்து இப்போது நின்றே விட்டுள்ளது. ஒருவயதுக்கு மேல் எதையும் நாம் பிள்ளைகளிடம் திணிப்பது சரியல்ல என்பது என் எண்ணமாக. விட்டதை விரும்பி அவனே தொடர்வான் எனும் நம்பிக்கை இருக்கிறது. இப்போது என் தங்கையின் மகளுக்குப் பிடித்தமான விஷயமாக வாசிப்பு இருப்பதும், வாசிக்கிற புத்தகங்களுக்கு உடனுக்குடன் அருமையான விமர்சனங்களை எழுதி வருவதும் எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. அவளது(எட்டு வயது) ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் அவள் விரும்பும் புத்தகங்களைப் பரிசளிப்பதே என் பழக்கம்.

ஆக, ஆரம்பத்தில் நான் இருந்தது போல நீங்களும் ஒருவேளை புத்தகங்களுக்குச் செலவழிப்பது வீண் எனும் எண்ணம் கொண்டிருப்பீர்களானால் அதை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே இப்பகிர்வு. அவரவரால் இயன்ற அளவு ஒரு தொகையை புத்தகங்களுக்கு ஒதுக்குவது அவசியமானதே. அவற்றுக்கு நாம் செய்யும் செலவு நம் வாழ்வை வளமாக்கச் செய்கிற முதலீடே.

இப்பதிவுக்காக வற்புறுத்தி, சில கேள்விகளின் மூலமாகக் கணவரிடம் பெற்ற கருத்துக்களும் உங்கள் பார்வைக்கு:

 • உலகை மற்றும் வாழ்வைப் பற்றியதான பார்வை முழுமை பெற புத்தகங்கள் உதவுகின்றன. ஒரே வகையான சித்தாந்தத்தையோ ஒரே வகையான விஷயங்களையோ ஆழமாகப் படிக்கப் படிக்க பார்வை குறுகிக் கொண்டே போகுமே தவிர விரிவடைவதில்லை. எல்லா வகைப் புத்தகங்களும் படிக்கையிலேயே அது சமமாகக் கிடைக்கும்.

 • சில புத்தகங்கள் தகவல்களை மட்டுமே தருவதாக இருந்தால், சில தகவல்களோடு சிந்தனைகளைத் தூண்டுவதாக, சிந்தனைகளின் விளைவாகத் தெளிவைத் தருவதாக அமைந்து விரிந்த பார்வையை அளிக்கின்றன.

 • நாம் வாழ்க்கையைக் கடக்கும் போது நாம் என்ன செய்தோம் செய்கிறோம் என்று அறியாமலே கடப்பவரும் உண்டு. அறிய விரும்பி, அதனை அலசி ஆய்ந்து அனுபவத்தை ஆசானாக எடுத்துக் கொள்பவரும் உண்டு. ஆனால் நம் ஒருவருடைய அனுபவமும் அதைச் சார்ந்த எண்ணமும் மட்டுமே இந்த வாழ்வைப் பற்றியதான புரிதலுக்குப் போதுமானதாகிறதா? இல்லை என்கிற தேடலுடன் இருப்பவர்களுக்கு பலருடைய அனுபவங்களையும் எண்ணங்களையும் கொண்டு வந்து சேர்க்கும் ஆசான்களாகப் புத்தகங்கள் விளங்குகின்றன.

*****

81 comments:

 1. உங்கள் வீட்டுக்கு என்றேனும் வந்தால் நானும் "சுஜாதா" ஆவேன். வேற ஒண்ணுமில்லை. சுஜாதா ஒரு முறை இப்படி சொன்னார்: உங்கள் நண்பர்களுக்கு புத்தகம் இரவல் தராதீர்கள். யாரும் திருப்பி தருவதில்லை. என்னிடம் உள்ள புத்தகங்கள் பலவும் அப்படி வந்தது தான் !!"

  லைப்ரரி பாக்க பிரம்மாண்டமா இருக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. பிறகு படிக்கலாம் என்று சேர்த்துக் கொண்டு போகாத அதிசயப்பிறவியை மதிக்கிறேன். மிகவும் சிரமமான செயல். உங்கள் புத்தக collection மிரள வைக்கிறதே! உங்கள் மகனுக்குப் பாராட்டுக்கள்! பள்ளிப்பாடங்களுக்கு அப்பால் புத்தகம் படிப்பது இன்றையக் காலக்கட்டத்திலும் நடக்கிறது என்பது மிகுந்த நம்பிக்கையூட்டும் செய்தி! பெங்களூரில் ஸ்ட்ராண்ட் எங்கே இருக்கிறது?

  ReplyDelete
 3. நீங்கள் அதிகம் படித்த புத்தகங்களைப் பற்றிச் சொல்லுங்களேன்?

  ReplyDelete
 4. வீட்டு லைப்ரரி அட்டகாசமா இருக்குப்பா!!!!! இனிய பாராட்டுகள்.

  ReplyDelete
 5. சகோதரி!
  தங்கள் கணவரிடமிருந்து
  பெற்ற கருத்துக்கள் மூன்றும்
  முத்துக்கள் அனுபவ வித்துக்கள்
  அவரையும் ஒரு பதிவு
  எழுதச் சொல்லலாமே!

  த ம ஓ 1

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 6. வாசிப்பின் வாசம் அறியாத எனக்கு வியப்பாய் இருக்கிறது.. நண்பர்களும் தொடர்ந்து வாசிக்கச் சொல்லி அறிவுறுத்துவதால் இனி நானும் தொடரலாம் என முடிவெடுக்க வைத்து விட்டது பதிவு...மேலும் வளமாக வாழ்த்துக்கள் லஷ்மி..

  ReplyDelete
 7. புத்தக வாசிப்பு ஒரு அலாதி அனுபவம். தவறவிடும் பல நல்ல விஷயங்களில் புத்தக வாசிப்பும் ஒன்று என்பது வருத்தப்பட வேண்டிய ஒன்று.

  ReplyDelete
 8. "பலருடைய அனுபவங்களையும் எண்ணங்களையும் கொண்டு வந்து சேர்க்கும் ஆசான்களாகப் புத்தகங்கள் விளங்குகின்றன". மிகச்சரியாக சொல்லி யிருக்கிறீர்கள்.(நாம் ஒவ்வொன்றையும் அனுபவம் மூல்மே கற்பதென்றால் ஆண்டுகள் பல ஆகுமே)

  ReplyDelete
 9. உங்கள் கணவரின் புத்தக ஆர்வத்தைப் பார்த்தால்....சாப்பிடும் பொழுதும் புத்தகதோடுதான் இருப்பார் போலிருக்கிறதே....

  ReplyDelete
 10. குடும்பத்தில் ஒருவருக்கு வாசிக்கும் பழக்கம் இருந்தால் போதும், மற்றவருக்கும் தொற்றிவிடும்.

  மகன், படிப்புச் சுமையால் வாசிப்பது குறைந்துவிட்டது என்பது எனக்கும் கவலையளிக்கிறது- என் மகனும் இனி அப்படி ஆகிவிடுவானோ என்று. எனினும், தொட்டில் பழக்கம் முழுமையாக விட்டுப்போகாது திரும்பிவரும் என்ற நம்பிக்கையும் உண்டு உங்களைப்போலவே.

  உங்கள் லைப்ரரி - கலெக்‌ஷன்ஸ், அலமாரி, நேர்த்தியாக அடுக்கியிருப்பது - என்று எல்லாமே கண்ணை-கருத்தைக் கவர்கிறது!!

  ReplyDelete
 11. ஆகா வீட்டிலயே ஒரு பேட்டியும் எடுத்திட்டீங்களா.. நல்ல பதிவு ராமலக்‌ஷ்மி நிறைய விசயங்களைத்தந்திருக்கீங்க.. ஐபேட் ஆப் எப்படின்னு பாக்கறேன்..நன்றி..

  ReplyDelete
 12. பயணங்களின் போதும், கிடைக்கும் ஓய்வு நேரங்களையும் புத்தகம் படிக்கச் செலவிடும் என்னை பலர் கேலிதான் செய்திருக்கிறார்கள். உங்கள் கணவரும் பரந்துபட்ட வாசிப்பாளி என்பதில் எனக்கு ஆறுதல். கடைசி மூன்று பாராக்கள் அருமை. என்னுடைய கருத்துடன் ஐநூறு சதவீதம் ஒத்துப் போகிறவை. நல்லதொரு சிந்தனை விதையை ஊன்றியதற்கு நன்றி, நன்றி, நன்றி!

  ReplyDelete
 13. மிக நல்ல பதிவு. இன்றைய தலைமுறைக்கு தேவையான பதிவு.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 14. மிக அருமையான இடுகை... அனுபவம், ஆர்வம், புத்தகம், உயர்ந்த நோக்கம் எல்லாம் நமது மனதை பார்வையை விரிவு படுத்துபவை. உங்கள் கணவரும் புதல்வனும் நல்ல புத்தக விரும்பிகளாக இருப்பது நீங்கள் மிகவும் பெருமைப்பட வேண்டிய விஷயம்... ஆங்கிலத்திலிருந்து கூட மிக முக்கியமான நூல்களை நீங்கள் நேரமிருப்பின் தமிழில் மொழி பெயர்க்கலாம்...

  ReplyDelete
 15. book collection and reading are just like any other addictive habits :). what all it takes is just the initiation...

  enjoy!

  ReplyDelete
 16. அருமையா இருக்குங்க உங்க வீட்டு லைப்ரரி.

  பரந்துபட்ட வாசிப்பனுபவம் ஒரு மனுஷனை நிச்சயமா பண்படுத்தும். உங்க ரங்க்ஸின் கருத்துக்களும் அருமை.

  ReplyDelete
 17. லைப்ரரி ரொம்ப நல்லா இருக்கு இப்பவே கிளம்பி வந்துடலாம் போல இருக்கே.

  ReplyDelete
 18. படித்தவுடன் பிடித்த தோழமைகளுடன் பகிர்ந்துகொண்டேன்.

  ReplyDelete
 19. நட்சத்திர வாழ்த்துகள் !!!

  வாசிப்பு பற்றிய நல்ல பதிவு...

  ReplyDelete
 20. உங்க கணவரின் பேட்டி சிந்திக்க வைத்தது.ஒரு சில வாசிப்பளர்கள் வீட்டில் புத்தகங்கள் பராமரிக்கப்படாமல் அங்கே இங்கே என்று இருப்பதுண்டு,அழகாக முறைப்படுத்தி அடுக்கி வைத்திருப்பது எடுத்து வாசிக்க வேண்டும் என்ற ஆவலை தூண்டுகிறது.

  ReplyDelete
 21. புத்தகங்கள் வாழ்வின் ஆசான்கள்...!!!

  ReplyDelete
 22. நான் உங்க வீட்டிற்கு வந்தால், கண்டிப்பாக புத்தகங்கள் சுட்டு லவட்டிட்டு போயிருவேன் ஹி ஹி...

  ReplyDelete
 23. அருமையான பகிர்வு. படிக்க வேண்டியவை லிஸ்ட்டில் மேஜையில் நீளமான வரிசை! கடைசியில் முத்தான மூன்று கருத்துகள்.
  அப்பாதுரையை வழிமொழிகிறேன்.
  ஹுஸைனம்மாவை அப்படியும் முழுமையாகச் சொல்லி விட முடியாது என்று மறுக்கிறேன்.எனக்கோ எனக்குத் தெரிந்த சிலரிடம் இருக்கும் புத்தகம் படிக்கும் பழக்கம் எங்கள் வாரிசுகளிடம் இல்லை!

  ReplyDelete
 24. பலருக்கும் ஆத்மார்த்தமான "Best friend" என்றால் புத்தகம் தான். புத்தகத்தை வாங்குவதோடு மட்டுமின்றி அதனை பராமரிப்பது சிலரால் தான் முடிகிறது. உங்களிடம் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும். அருமைப் பதிவு.

  ReplyDelete
 25. அருமையான பகிர்வு அக்கா. அவ்ளோம் பொக்கிஷம். இதுக்கு மேல சொல்லத் தெரியலை.

  என் பசங்களுக்கு இன்னம் கொஞ்சம் படிக்கிறது புரியிற அளவு வந்ததும் தமிழ் புத்தக வாசிப்பையும் சேர்த்துக்க இருக்கேன்.

  ReplyDelete
 26. பகிர்வுக்கு நன்றி....தமிழ்மணம் 7

  ReplyDelete
 27. மீண்டும் ஒரு நல்ல கருத்தை வலியுறுத்துகிறது இப்பதிவு...

  ReplyDelete
 28. உங்கள் கணவரின் முதல் கருத்தையொத்தவன் நானும்.

  அனைவருமே ”வாசிப்பை நேசித்தல்” அவசியம்.

  ReplyDelete
 29. ஆ.. இம்புட்டு புக்கா.. தமிழ்மண நட்சத்திரப் பதிவருக்கும் அவர் கனவருக்கும் வாழ்த்துக்கள்..:)

  ReplyDelete
 30. புத்தகங்கள் இணைபிரியாத நல்ல தோழர்கள்,ஆசான்கள் என்பதை அழகாக விளக்கியிருக்கிறீர்கள்.

  இந்த பதிவு பலருக்குப் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தைத் தூண்டிவிட்டிருக்கும்.

  ReplyDelete
 31. புத்தகத்தைப்போன்ற சிறந்ததொரு நண்பன் கிடையாது. புத்தகப்புழுவாக இருந்தவன் தான் நானும். தங்களின் இந்தப் பதிவு மிகவும் அருமையாக உள்ளது. பாராட்டுக்கள்.vgk

  ReplyDelete
 32. நீங்கள் சொல்வது ரொம்ப சரி. நானும் புத்தக பிரியைதான்.ஆனால் இணைய தளத்தில் என்னதான் பல விஷயத்தை அறிந்து கொண்டாலும் புத்தகம் படித்து தெரிந்து கொண்டார்ப் போல் முழுமை இல்லை.மறுபடியும் புத்தகம் படிக்க ஆரம்பித்துள்ளேன்.இதுதான் நினைவில் அழுத்தமாக பதிகிறது.

  ReplyDelete
 33. வாழ்வை வளமாக்கும் புத்தங்கள்.//

  உண்மை உண்மை ராமலக்ஷ்மி.

  உங்கள் கணவரின் கருத்துக்கள் அருமை.

  ReplyDelete
 34. நல்லதொரு பகிர்வு. புத்தக அலமாரி அருமை. பார்ப்பதற்கே சந்தோஷமாக இருக்கிறது. 1800 புத்தகங்கள்.. வாவ்..

  வாழ்த்துகள்.

  ReplyDelete
 35. நல்ல பழக்கம் புத்தகம் சேமித்தல்...எனக்கும் புடிக்கும். உங்கள் வீட்டு லைப்ரரி செம சூப்பர்.

  ReplyDelete
 36. இத்த்த்த்தனை புத்தகங்களா! என்கிட்டே "பல நேரங்களில் பல மனிதர்கள்" இது ஒண்ணே ஒண்ணு தான் இருக்கு :-) அப்புறம் இதற்க்கு முன் படித்த மனசே ரிலேக்ஸ் ப்ளீஸ்! நாங்கெல்லாம் படிக்காத மேதை ;-)

  ReplyDelete
 37. புத்தகங்கள் என்பது அனுபவங்களை மூலதனமாகக் கொண்டு எழுதப்பட்டவை.அவற்றை முன்வைத்தே நாம் காலங்களை நகர்த்திச் செல்ல வேண்டும்..அவை ஒரு உண்மையான வழிகாட்டி என்றால் மிகையாகாது.

  ReplyDelete
 38. மிக அருமையான பதிவு.

  /*கின்டிலும், ஐபேடும் பலபுத்தகங்களைக் கையடக்கமாக வைத்து வாசிக்க, குறிப்பாகப் பயணங்களின் போது சவுகரியமாக இருப்பது தாண்டி புத்தகங்களுக்கு மாற்று எனக் கொள்ள முடியாதபடியாக.., புத்தகத்தில் வாசிக்கும் நிறைவைத் தராதவையாக.. என்பதே கணவர் உட்பட நான் கேட்டறிந்த பலரின் கூற்றும்*/

  நானும் உடன் படுகிறேன். மற்ற கருத்துக்களோடும்...

  ReplyDelete
 39. //வாங்கிய வேகத்திலேயே அத்தனை வேலைகளுக்கு மத்தியிலும் தினம் பயணிக்கும் வேளைகளில், வாரயிறுதிகளில் என வாசித்து முடித்து விடுவது வியப்பு. //

  வெகு சிலரால் மட்டுமே இப்படி முடிகிறது..

  --
  வாசிப்பை முன்னெடுக்க வைக்கும் அருமையான ஒரு பதிவு

  நன்றி

  ReplyDelete
 40. மோகன் குமார் said...
  //உங்கள் வீட்டுக்கு என்றேனும் வந்தால் நானும் "சுஜாதா" ஆவேன்.....

  லைப்ரரி பாக்க பிரம்மாண்டமா இருக்கு வாழ்த்துக்கள்//

  நன்றி மோகன் குமார்:)!

  ReplyDelete
 41. அப்பாதுரை said...
  //பிறகு படிக்கலாம் என்று சேர்த்துக் கொண்டு போகாத அதிசயப்பிறவியை மதிக்கிறேன். மிகவும் சிரமமான செயல். உங்கள் புத்தக collection மிரள வைக்கிறதே! உங்கள் மகனுக்குப் பாராட்டுக்கள்!..../

  மிக்க நன்றி.

  //பெங்களூரில் ஸ்ட்ராண்ட் எங்கே இருக்கிறது?//

  டிக்கன்ஸன் ரோடிலுள்ள மனிபால் சென்டரில் உள்ளது.

  ReplyDelete
 42. அப்பாதுரை said...
  //நீங்கள் அதிகம் படித்த புத்தகங்களைப் பற்றிச் சொல்லுங்களேன்?//

  ஆரம்பத்தில் என் வாசிப்பனுபவம் குறித்த பதிவுக்கு ஒரு லிங்க் கொடுத்திருக்கிறேன். நேரமிருப்பின் பாருங்கள்.

  ReplyDelete
 43. துளசி கோபால் said...
  //வீட்டு லைப்ரரி அட்டகாசமா இருக்குப்பா!!!!! இனிய பாராட்டுகள்.//

  மிக்க நன்றி மேடம்.

  ReplyDelete
 44. புலவர் சா இராமாநுசம் said...
  //சகோதரி!
  தங்கள் கணவரிடமிருந்து
  பெற்ற கருத்துக்கள் மூன்றும்
  முத்துக்கள் அனுபவ வித்துக்கள்
  அவரையும் ஒரு பதிவு
  எழுதச் சொல்லலாமே!//

  நல்லது, மிக்க நன்றி.

  ReplyDelete
 45. தமிழரசி said...
  //வாசிப்பின் வாசம் அறியாத எனக்கு வியப்பாய் இருக்கிறது.. நண்பர்களும் தொடர்ந்து வாசிக்கச் சொல்லி அறிவுறுத்துவதால் இனி நானும் தொடரலாம் என முடிவெடுக்க வைத்து விட்டது பதிவு...மேலும் வளமாக வாழ்த்துக்கள் லஷ்மி..//

  மகிழ்ச்சியும் நன்றியும் தமிழரசி.

  ReplyDelete
 46. தமிழ் உதயம் said...
  //புத்தக வாசிப்பு ஒரு அலாதி அனுபவம். தவறவிடும் பல நல்ல விஷயங்களில் புத்தக வாசிப்பும் ஒன்று என்பது வருத்தப்பட வேண்டிய ஒன்று.//

  நன்றி ரமேஷ்.

  ReplyDelete
 47. வியபதி said...
  //"பலருடைய அனுபவங்களையும் எண்ணங்களையும் கொண்டு வந்து சேர்க்கும் ஆசான்களாகப் புத்தகங்கள் விளங்குகின்றன". மிகச்சரியாக சொல்லி யிருக்கிறீர்கள்.(நாம் ஒவ்வொன்றையும் அனுபவம் மூல்மே கற்பதென்றால் ஆண்டுகள் பல ஆகுமே)//

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 48. goma said...
  //உங்கள் கணவரின் புத்தக ஆர்வத்தைப் பார்த்தால்....சாப்பிடும் பொழுதும் புத்தகதோடுதான் இருப்பார் போலிருக்கிறதே....//

  நன்றி:)!

  ReplyDelete
 49. ஹுஸைனம்மா said...
  //குடும்பத்தில் ஒருவருக்கு வாசிக்கும் பழக்கம் இருந்தால் போதும், மற்றவருக்கும் தொற்றிவிடும்.

  மகன், படிப்புச் சுமையால் வாசிப்பது குறைந்துவிட்டது என்பது எனக்கும் கவலையளிக்கிறது- என் மகனும் இனி அப்படி ஆகிவிடுவானோ என்று. எனினும், தொட்டில் பழக்கம் முழுமையாக விட்டுப்போகாது திரும்பிவரும் என்ற நம்பிக்கையும் உண்டு உங்களைப்போலவே.

  உங்கள் லைப்ரரி - கலெக்‌ஷன்ஸ், அலமாரி, நேர்த்தியாக அடுக்கியிருப்பது - என்று எல்லாமே கண்ணை-கருத்தைக் கவர்கிறது!!//

  மிக்க நன்றி, ஆர்வம் அணையாதபடி பார்த்துக் கொள்ளுங்கள்:)!

  ReplyDelete
 50. முத்துலெட்சுமி/muthuletchumi said...
  //ஆகா வீட்டிலயே ஒரு பேட்டியும் எடுத்திட்டீங்களா.. நல்ல பதிவு ராமலக்‌ஷ்மி நிறைய விசயங்களைத்தந்திருக்கீங்க.. ஐபேட் ஆப் எப்படின்னு பாக்கறேன்..நன்றி..//

  நன்றி முத்துலெட்சுமி:)! மிக உபயோகமான app.

  ReplyDelete
 51. கணேஷ் said...
  //பயணங்களின் போதும், கிடைக்கும் ஓய்வு நேரங்களையும் புத்தகம் படிக்கச் செலவிடும் என்னை பலர் கேலிதான் செய்திருக்கிறார்கள். உங்கள் கணவரும் பரந்துபட்ட வாசிப்பாளி என்பதில் எனக்கு ஆறுதல். கடைசி மூன்று பாராக்கள் அருமை. என்னுடைய கருத்துடன் ஐநூறு சதவீதம் ஒத்துப் போகிறவை. நல்லதொரு சிந்தனை விதையை ஊன்றியதற்கு நன்றி, நன்றி, நன்றி!//

  கருத்துக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 52. வின்சென்ட். said...
  //மிக நல்ல பதிவு. இன்றைய தலைமுறைக்கு தேவையான பதிவு.
  வாழ்த்துக்கள்.//

  தங்கள் வருகையிலும் கருத்திலும் மகிழ்ச்சி.

  ReplyDelete
 53. குமரி எஸ். நீலகண்டன் said...
  //மிக அருமையான இடுகை... அனுபவம், ஆர்வம், புத்தகம், உயர்ந்த நோக்கம் எல்லாம் நமது மனதை பார்வையை விரிவு படுத்துபவை. உங்கள் கணவரும் புதல்வனும் நல்ல புத்தக விரும்பிகளாக இருப்பது நீங்கள் மிகவும் பெருமைப்பட வேண்டிய விஷயம்... ஆங்கிலத்திலிருந்து கூட மிக முக்கியமான நூல்களை நீங்கள் நேரமிருப்பின் தமிழில் மொழி பெயர்க்கலாம்...//

  முயன்றிடுகிறேன். மகிழ்ச்சியும் நன்றியும் நீலகண்டன்.

  ReplyDelete
 54. Thekkikattan|தெகா said...
  //book collection and reading are just like any other addictive habits :). what all it takes is just the initiation...

  enjoy!//

  நன்றி:)!

  ReplyDelete
 55. அமைதிச்சாரல் said...
  //அருமையா இருக்குங்க உங்க வீட்டு லைப்ரரி.

  பரந்துபட்ட வாசிப்பனுபவம் ஒரு மனுஷனை நிச்சயமா பண்படுத்தும். உங்க ரங்க்ஸின் கருத்துக்களும் அருமை.//

  நன்றி சாந்தி:)!

  ReplyDelete
 56. Lakshmi said...
  //லைப்ரரி ரொம்ப நல்லா இருக்கு இப்பவே கிளம்பி வந்துடலாம் போல இருக்கே.//

  நன்றி லக்ஷ்மிம்மா:)!

  ReplyDelete
 57. பாலராஜன்கீதா said...
  //படித்தவுடன் பிடித்த தோழமைகளுடன் பகிர்ந்துகொண்டேன்.//

  மகிழ்ச்சியும் நன்றியும்.

  ReplyDelete
 58. ரவிச்சந்திரன் said...

  //நட்சத்திர வாழ்த்துகள் !!!

  வாசிப்பு பற்றிய நல்ல பதிவு...//

  நன்றி, தங்கள் முதல் வருகைக்கும்.

  ReplyDelete
 59. asiya omar said...

  //உங்க கணவரின் பேட்டி சிந்திக்க வைத்தது.ஒரு சில வாசிப்பளர்கள் வீட்டில் புத்தகங்கள் பராமரிக்கப்படாமல் அங்கே இங்கே என்று இருப்பதுண்டு,அழகாக முறைப்படுத்தி அடுக்கி வைத்திருப்பது எடுத்து வாசிக்க வேண்டும் என்ற ஆவலை தூண்டுகிறது.//

  மிக்க நன்றி ஆசியா.

  ReplyDelete
 60. MANO நாஞ்சில் மனோ said...
  //புத்தகங்கள் வாழ்வின் ஆசான்கள்...!!!//

  நன்றி மனோ.

  ReplyDelete
 61. ஸ்ரீராம். said...
  //அருமையான பகிர்வு. படிக்க வேண்டியவை லிஸ்ட்டில் மேஜையில் நீளமான வரிசை! கடைசியில் முத்தான மூன்று கருத்துகள்.
  அப்பாதுரையை வழிமொழிகிறேன். //

  மிக்க நன்றி ஸ்ரீராம்.

  ReplyDelete
 62. Shakthiprabha said...
  //பலருக்கும் ஆத்மார்த்தமான "Best friend" என்றால் புத்தகம் தான். புத்தகத்தை வாங்குவதோடு மட்டுமின்றி அதனை பராமரிப்பது சிலரால் தான் முடிகிறது. உங்களிடம் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும். அருமைப் பதிவு.//

  மிக்க நன்றி ஷக்தி.

  ReplyDelete
 63. சுசி said...
  //அருமையான பகிர்வு அக்கா. அவ்ளோம் பொக்கிஷம். இதுக்கு மேல சொல்லத் தெரியலை.

  என் பசங்களுக்கு இன்னம் கொஞ்சம் படிக்கிறது புரியிற அளவு வந்ததும் தமிழ் புத்தக வாசிப்பையும் சேர்த்துக்க இருக்கேன்.//

  மகிழ்ச்சி சுசி. அவசியம் செய்யுங்கள்.

  ReplyDelete
 64. சசிகுமார் said...
  //பகிர்வுக்கு நன்றி....//

  நன்றி சசிகுமார்/

  ReplyDelete
 65. பாச மலர் / Paasa Malar said...
  //மீண்டும் ஒரு நல்ல கருத்தை வலியுறுத்துகிறது இப்பதிவு...//

  நன்றி மலர்.

  ReplyDelete
 66. சத்ரியன் said...
  //உங்கள் கணவரின் முதல் கருத்தையொத்தவன் நானும்.

  அனைவருமே ”வாசிப்பை நேசித்தல்” அவசியம்.//

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete
 67. தேனம்மை லெக்ஷ்மணன் said...

  //ஆ.. இம்புட்டு புக்கா.. தமிழ்மண நட்சத்திரப் பதிவருக்கும் அவர் கணவருக்கும் வாழ்த்துக்கள்..:)//

  நன்றி தேனம்மை:)!

  ReplyDelete
 68. goma said...

  //புத்தகங்கள் இணைபிரியாத நல்ல தோழர்கள்,ஆசான்கள் என்பதை அழகாக விளக்கியிருக்கிறீர்கள்.

  இந்த பதிவு பலருக்குப் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தைத் தூண்டிவிட்டிருக்கும்.//

  மிக்க நன்றி கோமாம்மா.

  ReplyDelete
 69. துரைடேனியல் said...

  //Puthagankal
  Nam vaazhvin
  Puthaiyalgal.
  Arumai.//

  மிக்க நன்றி.

  ReplyDelete
 70. வை.கோபாலகிருஷ்ணன் said...

  //புத்தகத்தைப்போன்ற சிறந்ததொரு நண்பன் கிடையாது. புத்தகப்புழுவாக இருந்தவன் தான் நானும். தங்களின் இந்தப் பதிவு மிகவும் அருமையாக உள்ளது. பாராட்டுக்கள்.//

  மிக்க நன்றிங்க vgk

  ReplyDelete
 71. natchiar kothai said...

  //நீங்கள் சொல்வது ரொம்ப சரி. நானும் புத்தக பிரியைதான்.ஆனால் இணைய தளத்தில் என்னதான் பல விஷயத்தை அறிந்து கொண்டாலும் புத்தகம் படித்து தெரிந்து கொண்டாற் போல் முழுமை இல்லை.மறுபடியும் புத்தகம் படிக்க ஆரம்பித்துள்ளேன். இதுதான் நினைவில் அழுத்தமாக பதிகிறது.//

  கருத்துக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 72. கோமதி அரசு said...

  ***/வாழ்வை வளமாக்கும் புத்தங்கள்.//

  உண்மை உண்மை ராமலக்ஷ்மி.

  உங்கள் கணவரின் கருத்துக்கள் அருமை./***

  மிக்க நன்றி கோமதிம்மா.

  ReplyDelete
 73. செ.சரவணக்குமார் said...

  //நல்லதொரு பகிர்வு. புத்தக அலமாரி அருமை. பார்ப்பதற்கே சந்தோஷமாக இருக்கிறது. 1800 புத்தகங்கள்.. வாவ்..

  வாழ்த்துகள்.//

  நீங்களும் ஒரு புத்தகப் பிரியர் என்பதை உங்கள் எழுத்தின் மூலமாக அறிந்திருக்கிறேன். மிக்க நன்றி சரவணக்குமார்.

  ReplyDelete
 74. விச்சு said...

  //நல்ல பழக்கம் புத்தகம் சேமித்தல்...எனக்கும் புடிக்கும். உங்கள் வீட்டு லைப்ரரி செம சூப்பர்.//

  மிக்க நன்றி.

  ReplyDelete
 75. கிரி said...

  //இத்த்த்த்தனை புத்தகங்களா! என்கிட்டே "பல நேரங்களில் பல மனிதர்கள்" இது ஒண்ணே ஒண்ணு தான் இருக்கு :-) அப்புறம் இதற்க்கு முன் படித்த மனசே ரிலேக்ஸ் ப்ளீஸ்! நாங்கெல்லாம் படிக்காத மேதை ;-)//

  நன்றி கிரி:)!

  ReplyDelete
 76. kothai said...

  //புத்தகங்கள் என்பது அனுபவங்களை மூலதனமாகக் கொண்டு எழுதப்பட்டவை.அவற்றை முன்வைத்தே நாம் காலங்களை நகர்த்திச் செல்ல வேண்டும்..அவை ஒரு உண்மையான வழிகாட்டி என்றால் மிகையாகாது.//

  சரியாகச் சொன்னீர்கள். மிக்க நன்றிங்க கோதை.

  ReplyDelete
 77. அமுதா said...

  //மிக அருமையான பதிவு.

  /*கின்டிலும், ஐபேடும் பலபுத்தகங்களைக் கையடக்கமாக வைத்து வாசிக்க, குறிப்பாகப் பயணங்களின் போது சவுகரியமாக இருப்பது தாண்டி புத்தகங்களுக்கு மாற்று எனக் கொள்ள முடியாதபடியாக.., புத்தகத்தில் வாசிக்கும் நிறைவைத் தராதவையாக.. என்பதே கணவர் உட்பட நான் கேட்டறிந்த பலரின் கூற்றும்*/

  நானும் உடன் படுகிறேன். மற்ற கருத்துக்களோடும்...//

  நன்றி அமுதா:)!

  ReplyDelete
 78. ஈரோடு கதிர் said...

  //வெகு சிலரால் மட்டுமே இப்படி முடிகிறது..

  --
  வாசிப்பை முன்னெடுக்க வைக்கும் அருமையான ஒரு பதிவு//

  மிக்க நன்றி கதிர்.

  ReplyDelete
 79. reading and making a note on the important points are just like a meditation.I experienced daily this feelings.Your article is a valuable one to hear so many informations .Kindly keep it up

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin