Saturday, November 26, 2011

நவீன விருட்சம் 89-90வது இதழ் - ஒரு பகிர்வு (அதீதத்தில்..)எனது எழுத்துப் பயணம் தொடங்கியதே சிற்றிதழில்தான். பள்ளி மற்றும் கல்லூரி ஆண்டு மலர்கள் அதற்கு அச்சாரமிட்டன என சொல்லலாம். திருநெல்வேலியிலிருந்து வெளியான ‘நண்பர் வட்டம்’ இதழில் 1987-ல் கல்லூரியில் படிக்கும் போதே எழுத ஆரம்பித்து விட்டிருந்தேன். தொடர்ந்து நான்கைந்து ஆண்டுகள் அதில் எழுதிவந்த நிலையில் சில காரணங்களால் அது நின்று போனது. வேற்று மாநிலங்களில் வசித்த காரணத்தால் அதன் பிறகு வேறெந்த சிற்றிதழ்களோடும் அறிமுகமில்லை. பின்னர் 2003-ல் திண்ணை இணைய இதழ் அறிமுகமாகி எழுதிக் கொண்டிருந்தேன் எனினும் 2008-ல் எனக்கென முத்துச்சரம் வலைப்பூவை உருவாக்கிக் கொண்டு பதிவுலகம் நுழைந்த பின்னரே வாசிப்பும், நல்ல நட்புகளும் அவர்கள் மூலமாக பல இலக்கியப் பத்திரிகைகளும், இணைய இதழ்களும் அறிமுகமாயின.

நவீன விருட்சம் வலைப் பக்கம் அனுஜன்யா மற்றும் உழவன் ஆகியோரின் பதிவுகள் மூலமாகவே எனக்கு அறிமுகமானது. அன்றிலிருந்து அத்தளத்தை தொடர்கிறேன் என்றாலும் அதன் 23ஆம் ஆண்டின் 89-90 வது தொகுப்புதான் நான் புத்தக வடிவில் வாசிக்கும் முதல் நவீன விருட்ச சிற்றிதழ்.

என்னைப் பொறுத்தவரை சில இதழ்கள் வாசகர் வசதிக்காக தங்கள் இணையப் பக்கத்திலும் படைப்புகளை வெளியிட்டாலும் கூட சிற்றிதழ் வடிவத்திற்கு நாம் ஆதரவு தர வேண்டும். நண்பர்களுக்கு ஓராண்டு சந்தாவைப் பரிசளித்து இதழ்களை அறிமுகப்படுத்தலாம். பிறகு தொடர்வது அவர்கள் விருப்பம். பல சிற்றிதழ்கள் எந்த வியாபார நோக்குமின்றி இலக்கிய ஆர்வத்தினால் பொருளாதார நெருக்கடிகளை உதாசீனம் செய்தபடி தொடர்ந்து வெளிவந்தபடி இருக்கின்றன. நவீன விருட்சம் 23 ஆண்டுகளாக வெளிவந்து கொண்டிருப்பதும் ஒவ்வொரு இதழுக்காகவும் அதன் வாசகர் வட்டம் ஆவலாகக் காத்திருப்பதுமே அதன் மதிப்பைப் புரிய வைப்பதாக இருந்தது.

89-90வது இதழ்-ஒரு பகிர்வு

க.நா.சு அவர்களின் நூற்றாண்டையொட்டி அவரது கட்டுரையொன்றைப் பிரசுரிக்க விரும்பிய ஆசிரியரின் கண்ணில் சிக்கியிருக்கிறது கணையாழி இதழில் பல ஆண்டுகளுக்கு முன் அவர் எழுதிய ‘இலக்கியத் தரம் உயர’ எனும் கட்டுரை. இக்காலத்துக்கும் பொருந்துவதாக பல விஷயங்களில் நியாயம் இருப்பதாகக் கூறி ஆசிரியர் அதனை பகிர்ந்து கொண்டுள்ளார். ஆம், அதிலும் நியாயம் இருக்கிறது, நீங்களே பாருங்கள். க.நா.சு சொல்லுகிறார்:

இலக்கியத் தரமான விஷயங்களை, எண்பது பக்கங்களில், எட்டுப் பக்கமாவது தராத பத்திரிகைகளை வாங்குவதில்லை, படிப்பதில்லை என்று ஒரு ஐம்பதாயிரம், லட்சம் வாசகர்களாவது உடனடியாக விரதம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அது சாத்தியமா? யார் அந்த எட்டுப் பக்கத்தின் இலக்கியத் தரத்தையும் தரமின்மையையும் நிர்ணயிப்ப்பது என்பதெல்லாம் மிகவும் சாதாரணமான கேள்விகள். இலக்கியத் தரத்தை உணர்ந்து செயலாற்றத் தீர்மானித்து விட்டால், தானே தீர்ந்துவிடக் கூடிய பிரச்சனைகள் இவை. இப்போது எந்த விஷயத்தைப் பிரசுரித்தால் வாசகர் எண்ணிக்கை குறையும் என்று எண்ணுகிறார்களோ அந்த விஷயத்தை வெளியிட்டு, எண்பதில் எட்டுப் பக்க அளவிலாவது வெளியிட்டு வந்தார்களானால், அதுவும் பரவலாகப் படிக்கப் படுகின்ற விஷயமாகிவிடும்.


இதழின் கடைசி மூன்று பக்கங்களில் ஆசிரியர் அழகிய சிங்கர் தன் எண்ணங்களை, பேருந்து நிலையத்தில் சந்தித்துப் பயணிக்கும் ஜெகன் மற்றும் மோகினியுடான உரையாடல் மூலமாக எள்ளலுடன் சொல்லியிருப்பது ரசனைக்குரியது. இது ஒவ்வொரு இதழிலும் வரும் தொடர் பகுதியாகவும் இருக்கலாம்.

வள்ளுவர் ஏன் இது மாதிரி ஒரு குறளைப் படைத்தார்?” என்றொரு கேள்வியை எழுப்பியிருக்கிறார். ஆசிரியரின் “ஜோல்னாபைகள்” கவிதை உட்பட்ட பல படைப்புகளுடன்..,

சத்தியப் பிரியன் எழுதிய “பாரத புத்ரி” நாவலைப் பற்றிய விமர்சனம்:

பக்கம் 14: ‘அடிப்படைத் தேவைகள் எதையுமே பூர்த்தி செஞ்சு வைக்காம என்றும் சலுகைகள் மட்டும் எதை பூர்த்தி செல்ல இயலும்?’....

ஒவ்வொரு எழுத்திலும் மிகத் தீவிரமான அரசியல் படிந்துள்ளது என்ற ரமேஷ் - பிரேம் வரிகளுடன், நாம் ஒத்துப் போக வேண்டியது ஆகிறது.இது பெண்ணின நாவலா?.......

பக்கம் 91: பெண் ஜென்மம் பாவம் எனத் தோன்றியது. பண்ணெடுங்காலம் முன்பு ஆதி சக்தியிலிருந்து பிறந்த முப்பொறிகளே பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆனதாக தேவி பாகவதம் சொல்கிறது. இதை நிறுவும் முகமாகவே திரிபுரம் எரித்த மகாசக்தி அவதாரம் எடுத்தாள். ஆனால் எங்கு பிசகியது என்று தெரியவில்லை. மனிதப் பிறவியில் பெண் இரண்டாம் நிலையை எய்திவிட்டாள். அவளுக்குண்டாஅன உரிமைகள் மறுக்கப் பட்டுவிட்டன.......

பக்கம் 127 எந்த அரசுப் பணியாளராலும் அரை மணிநேரம் தொடர்ந்து ஓர் இருக்கையில் அமர்ந்து வேலை செய்ய இயலவில்லை. டீ குடிக்க, சிகரெட் குடிக்க, சொந்த அலுவல்களை கவனிக்க அலைந்த வண்ணம் இருந்தனர்.அடிப்படை இந்தியமனம், அக்கறையின்மை, அரசியல் குறுக்கீடு இவை மூன்றும்தான் அரசு அமைப்புகளைப் பாழ்படுத்துகின்றன.........

“வெறும் சம்பவக் கோர்வையாக அமைந்திருக்க வேண்டிய ஒரு ஆனந்த விகடன் தொடர்கதையில் இத்தனை திட்டவட்டமான கருத்துக்களைக் கூற முற்பட்ட சத்தியப்பிரியன் ஒரு புத்திசாலி எழுத்தாளர்தான், இந்நூல் நம்மால் ஒரு முறையேனும் படிக்கப்பட வேண்டிய நூல்”.


லாவண்யா, உஷாதீபன், எஸ். சங்கர நாராயணன், நா. ஜெயராமன் (ஆசிரியர்: “நா ஜெயராமனின் கதைகள், கவிதைகள் தொகுத்து ஒரு புத்தகமாக விருட்சம் வெளியீடாகக் கொண்டுவர எண்ணம். அவருடைய கதை ஒன்றை கசடதபற இதழிலிருந்து கண்டுபிடித்து வெளியிட்டிருக்கிறேன்”) ஆகியோரின் சிறுகதைகள்.

விட்டல் ராவ் அவர்கள் “பழம் புத்தகக் கடை”யில் கண்டெடுத்தாகச் சொல்லும் “FOR YOU THE WAR IS OVER" புத்தகம் பற்றியொரு பகிர்வு. “SUNDAY CHRONICLE" பிரிட்டிஷ் பத்திரிகையின் யுத்த நிருபராக இருந்த GORDON HORNER எழுதிய நூல்: “இந்நூலை மூன்று நிலைகளில் வைத்துப் பார்க்க சிறந்த ஒன்றாக விளங்குகிறது. ஒன்று: இரண்டாம் உலகப் போர் கைதி ஒருவரின் சிறந்த கைதிமுகாம் டைரி. இரண்டு : அந்த யுத்த அனுபவங்களையும் கைதி முகாம் நாட்களையும் அதன் மனிதர்களையும் நிகழ்வுகளையும் மிகச் சிறந்த கோட்டோவியங்கள் மற்றும் வாஷ் சித்திரங்கள் வாயிலாக ஆவணப்படுத்தியிருப்பது. மூன்று: கோட்டோவியங்கள் மற்றும் நீர் வண்ண ஓவியங்களின் உயர்ந்த தரம்.

நீல. பத்மநாபன், அனுஜன்யா, குமரி. எஸ். நீலகண்டன், ரிஷான் ஷெரீப், மிருணா, ராஜேஷ் நடராஜன், மதியழகன், செல்வராஜ் ஜெகதீசன், ஐராவதம் ஆகியோரின் கவிதைகளுடன் எனது கவிதை “அழகிய வீரர்கள்” (முன்னர் பகிர்ந்த போது வந்த கருத்துக்களுடன் காண இங்கே செல்லலாம்.):

மிகக் கவனமாகக்
கீழிருந்து ஆரம்பித்து
மெல்லத் தோள் வரைக்கும்
தோழமையாய் தொடர்ந்து
தலை தடவி
சாதுரியமாய் மூளை புகுந்து
அரவணைத்தது சாட்டை
புதுப் பம்பரத்தை
இறுக்கமாக..


அணைப்பின் கதகதப்பில்
கிடைத்த பாதுகாப்பு உணர்வில்
சிலிர்த்துப் பரவசமாகிய
பச்சிளம் பம்பரம்
களத்தில் இறங்கத் தயாரானது
துடிப்பாக..


இலாவகமாய் இழுத்துவிட்ட கயிறு
விலகி நின்று வேடிக்கை பார்க்க
வீரியமாய் சுழலாயிற்று
தன் வசீகரத்தில் தானே மயங்கி
பார்ப்பவர் வியக்கும் வண்ணமாக..


விசை குறைந்து சாயும்முன்
உடனுக்குடன் தூக்கி
உச்சிமுகர்ந்து பாராட்டி
ஒவ்வொரு ஆட்டத்துக்கும்
‘அழகியவீரன் நீ’யென ஆர்ப்பரித்து
அனுப்புகின்ற சாட்டையைத்
துதிக்கின்ற விசுவாசியாக..


காலமுள் சிரித்தபடி நகர
கயிற்றின் கணக்குகள்
புரியாமல் ஆடியோடியதில்
கூர்முனை மழுங்கி
வண்ணங்கள் சோபை இழக்க
வனப்பைத் தொலைத்துத்
தோற்கத் தொடங்கியது பம்பரம்
சபையிலே தள்ளாடி..


மழுங்கிய முனைக்கு
மருத்துவம் செய்யும் முனைப்போ
அதுவரையிலும் பெற்ற உழைப்புக்கு
இரங்கும் மனமோ
எப்போதும் கொண்டிராத சாட்டை
வேறு பளபளத்த பம்பரங்கள் தேடி..


ஆராதித்து வந்த தலைமையின்
அசல் முகங்கண்ட அதிர்ச்சியில்,
விசிறியடிக்கப்பட்ட விசுவாசி
விதியை நொந்தபடி..


இக்கணத்திலும்,
வட்டமிடும் பருந்துகளாய்
வான்வெளியை நிறைத்து
பசியோடு கருநாகச் சாட்டைகள்..


மாட்டுவதற்கென்றே
முட்டை ஓடு விட்டு வரும்
அறியாக் குஞ்சுகளாய்
பூமியெங்கும் அழகிய வீரர்கள்..!
***தற்போது விற்பனையில்,
நவீனவிருட்சம் 89-90
பக்கங்கள்: 90
ஆசிரியர்: அழகிய சிங்கர்
விலை: ரூ.15
கிடைக்குமிடம்: New Book Lands, T.Nagar, Chennai-17 (தொலைபேசி எண்கள்: 28158171,28156006)

அடுத்த இதழ் தயாராகி வரும் நிலையில் சந்தா செலுத்த விரும்புகிறவர்கள் ஆண்டுச் சந்தா ரூ:60-யை கீழ்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்:
6/5 போஸ்டல் காலனி முதல் தெரு,
மேற்கு மாம்பலம், சென்னை 600 033.http://www.blogger.com/img/blank.gif

அல்லது இணையம் மூலமாக கீழ்வரும் வங்கிக் கணக்கில் பணம் செலுத்திவிட்டு,
Name of the account - Navinavirutcham
Account No: 462584636
Bank: Indian Bank
Branch - Ashok Nagar, Chennai.
உங்கள் முகவரியைத் தெளிவாகக் குறிப்பிட்டு navina.virutcham@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
*** *** ***


[14 நவம்பர் 2011, அதீதம் இணைய இதழில் பகிரப் பட்டக் கட்டுரை].

20 comments:

 1. அக்கா கிடைத்த தமிழ்மணம் நட்சத்திரம் வாய்ப்பை சரியாக பயன் படுத்துறீங்க... சூப்பர்...TM 2

  ReplyDelete
 2. எழுத ஆரம்பித்ததையும், ரசித்ததை, ரசிப்பதையும் பகிர்ந்துள்ளீர்கள். கீழே இருந்த பம்பரக் கவிதை உங்கள் தளத்தில் படித்துள்ளேன்! நல்ல பகிர்வு. சிற்றிதழ்களைப் பரிசளித்தால் கூட படிப்பவர்கள் குறைந்து வருகிறார்கள் என்று என் அனுபத்தில் நினைக்கிறேன்!

  ReplyDelete
 3. தொடர்ந்து சிற்றிதழ்களை ஆதரிக்கும் உங்கள் செயல் பாராட்டுக்குரியது

  ReplyDelete
 4. அக்கா....உங்கள் நிறைவான எழுத்தை நுகர்ந்துகொண்டிருக்கிறோம்.வாழ்த்துகள் !

  ReplyDelete
 5. நானும் பல்வேறு சிற்றிதழ்களைத் தொடர்ந்து ஆதரித்து வருகிறேன்.
  தற்சமயம் மாதம் நான்கு என் வீடு தேடி தபாலில் வருகின்றன.

  கலர் கலரான சினிமாக் கவர்ச்சிகளற்ற
  அருமையான இலக்கியத்தரம் வாய்ந்தவைகள் தான் அவைகளும்.

  ஒரு வருட சந்தாத்தொகை நாமே கட்டி பிறரைப்படிக்க வைக்கலாம் என்று தாங்கள் சொல்வது எனக்குப் பிடித்துள்ளது.

  பொருளாதார நெருக்கடியால், சந்தாதாரர்கள் நிறைய பேர்கள் சேராமல், நல்ல இலக்கியத்தரம் வாய்ந்த சிற்றிதழ்கள் தொடர்ந்து வெளிவர முடியாமல் போய்விட்டன என்பதையும் நான் அறிவேன்.

  நல்ல பதிவு தந்துள்ளீர்கள். பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
  அன்புடன் vgk

  ReplyDelete
 6. சசிகுமார் said...
  //அக்கா கிடைத்த தமிழ்மணம் நட்சத்திரம் வாய்ப்பை சரியாக பயன் படுத்துறீங்க... //

  நன்றி சசிகுமார்.

  ReplyDelete
 7. செல்வராஜ் ஜெகதீசன் said...
  //Good Review Ramalakshmi.//

  மிக்க நன்றி செல்வராஜ் ஜெகதீசன்.

  ReplyDelete
 8. ஸ்ரீராம். said...
  //எழுத ஆரம்பித்ததையும், ரசித்ததை, ரசிப்பதையும் பகிர்ந்துள்ளீர்கள். கீழே இருந்த பம்பரக் கவிதை உங்கள் தளத்தில் படித்துள்ளேன்! நல்ல பகிர்வு. சிற்றிதழ்களைப் பரிசளித்தால் கூட படிப்பவர்கள் குறைந்து வருகிறார்கள் என்று என் அனுபத்தில் நினைக்கிறேன்!//

  நன்றி ஸ்ரீராம்.

  ReplyDelete
 9. மோகன் குமார் said...
  //தொடர்ந்து சிற்றிதழ்களை ஆதரிக்கும் உங்கள் செயல் பாராட்டுக்குரியது//

  நன்றி மோகன் குமார்.

  ReplyDelete
 10. //ஹேமா said...
  அக்கா....உங்கள் நிறைவான எழுத்தை நுகர்ந்துகொண்டிருக்கிறோம்.வாழ்த்துகள் !//

  நன்றி ஹேமா.

  ReplyDelete
 11. வை.கோபாலகிருஷ்ணன் said...
  //நானும் பல்வேறு சிற்றிதழ்களைத் தொடர்ந்து ஆதரித்து வருகிறேன்.
  தற்சமயம் மாதம் நான்கு என் வீடு தேடி தபாலில் வருகின்றன....

  ....

  நல்ல பதிவு தந்துள்ளீர்கள். பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.//

  மகிழ்ச்சியும் தங்கள் விரிவான பகிர்வுக்கு நன்றியும்.

  ReplyDelete
 12. பல்சுவையுடன் முத்துச்சரத்தில் விதவிதமான மலர்கள்... மணங்கமிழும் மலர்களுடன் மிகவும் நிறைவாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.நல்ல இதழ்களையும் நல்ல எழுத்துக்களையும் பகிர்ந்து சொல்லும் பாங்கு மிகவும் நிறைவைத் தருவது......

  ReplyDelete
 13. நல்ல பகிர்வு.நான் முன்பே ரசித்து வாசித்தவற்றை மீண்டும் காணும் பொழுது மகிழ்ச்சி.

  ReplyDelete
 14. நண்பர்களுக்கு ஓராண்டு சந்தாவைப் பரிசளித்து இதழ்களை அறிமுகப்படுத்தலாம். பிறகு தொடர்வது அவர்கள் விருப்பம்.//

  நல்ல கருத்து.

  நல்ல பகிர்வு ராமலக்ஷ்மி.

  ReplyDelete
 15. குமரி எஸ். நீலகண்டன் said...
  //நல்ல இதழ்களையும் நல்ல எழுத்துக்களையும் பகிர்ந்து சொல்லும் பாங்கு மிகவும் நிறைவைத் தருவது......//

  மகிழ்ச்சியும் நன்றியும் நீலகண்டன்.

  ReplyDelete
 16. asiya omar said...
  //நல்ல பகிர்வு.நான் முன்பே ரசித்து வாசித்தவற்றை மீண்டும் காணும் பொழுது மகிழ்ச்சி.//

  மகிழ்ச்சி ஆசியா. மிக்க நன்றி.

  ReplyDelete
 17. கோமதி அரசு said...
  //நல்ல பகிர்வு ராமலக்ஷ்மி.//

  மிக்க நன்றி கோமதிம்மா.

  ReplyDelete
 18. அமைதிச்சாரல் said...
  //அருமையான பகிர்வு..//

  நன்றி சாந்தி.

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin