Friday, November 25, 2011

குறும்பட ஆசை

பாகம் 1

ம்மைப் பாதித்த சில விஷயங்களை கட்டுரையாக முன் வைக்கும் போதே அதில் உண்மைத் தன்மை அதிகமிருக்கும் என்பார் அடிக்கடி ஒரு நண்பர். அதை படைப்பிலக்கியத்தில் வெளிபடுத்த முயன்றால் ‘கற்பனைதானே’ எனும் எண்ணமே எவருக்கும் தலை தூக்கும் என்பது அவர் வாதம்.

இதையே நான் இப்படியும் பார்க்கிறேன். கட்டுரையாகத் தரும் போது ‘அன்றாடம் செய்தித்தாளைத் திறந்தாலே இதுதானே’ என மற்றுமொரு செய்தியாக கடந்து விடும் வேதனையும் நிகழவே செய்கிறது. அதையே கவிதையாகவோ கதையாகவோ தரும் போது உணர்வுப்பூர்வமாக நெருங்கி ‘நடக்காததையா சொல்றாங்க?’ என சிந்திக்க வைக்கும் வாய்ப்பாகவும் சிலசமயம் அமைந்து போகிறது.

இரண்டு வடிவங்களும் சிறப்பெனினும் இவை நிறைகுறைகள். இவற்றை விட ஒரு படி மேலாகக் காட்சி ஊடகங்கள். ஒரு கதை சொல்ல வருவதை ஒரே ஒரு நிழற்படம் உணர்த்தி விடுவதையும் பலநேரம் பார்க்கிறோம். அடுத்து இன்று செய்தித்தாளில் செய்திகளை வாசிப்பவரை விட சேனல் சேனலாக செய்தியைப் பார்ப்பவரே அதிகமென்பதை மறுக்க முடியாது. சமுதாயத்துக்கான கருத்தை ஒரு திரைப்படம் அழுத்தமாகத் தரமுடியுமென்றால் குறும்படம் அதையே ஆழமாக மக்கள் மனதில் பதிய வைக்க முடியும். திரைப்படங்கள் போட்ட பணத்தை எடுக்க வேண்டிய சூழலில் செய்து கொள்ள வேண்டி வரும் சமரசங்களால் சொல்ல வரும் விஷயத்தை விட்டுப் பல இடங்களில் விலக வேண்டி வருகிறது. அந்த வகையில் குறும்படம் தனிச் சிறப்புடன் நிமிர்ந்து நிற்பதை ஒப்புக் கொள்ளவே வேண்டும்.

குறும்படம் குறித்து இப்படியான ஒரு கருத்து என் மனதில் இருப்பினும் அதைத் தயாரிக்கும் எண்ணமெல்லாம் ஏற்பட்டதேயில்லை 2001-ல் SONY TRV140E வீடியோகேம் வாங்கும் வரை. அது வந்த போது சில வருடம் ஸ்டில் ஃபோட்டோ எடுப்பதையே நிறுத்தி விட்டு எங்கு போனாலும் வீடியோதான்.

# கனமான கேமரா
பதிவுக்காக இன்று எடுத்தது

வாங்கிய புதிதில் ஒரு விடுமுறைக்கு ஊருக்குப் போயிருந்தபோது 2,3 வாகனங்களில் தங்கைகள் குடும்பம், பெரியப்பா, அத்தை குடும்பத்தினர், குழந்தைகள் என எல்லோருமாக பாபநாசம் சென்றிருந்தோம். வீட்டிலிருந்து கிளம்பியதிலிருந்து இயற்கை காட்சிகளையும் உறவினர் எவரையும் விட்டு விடாமலும் அங்குக் (காணக்கிடைத்த சுவாரஸ்யக் காட்சிகள் உட்பட) திரும்ப வந்து சேரும் வரையான நிகழ்வுகளைப் பதிவாக்கி, H8 கேசட்டிலிருந்து அதை சிடியாக்கும் சாஃப்ட்வேர் பிடிபடாததால் டிவியில் கனெக்ட் செய்து VCR-ல் (எடிட்டிங்குடன்) பதிவு செய்து, பின் அந்த வீடியோ கேசட்டைக் கடையில் கொடுத்து என..... தலையைச் சுற்றி மூக்கைத் தொட்டு... எல்லோருக்கும் சிடி நகல் அனுப்பி வைத்திருந்தேன்.

சின்னத் தங்கை புகழ்ந்து தள்ளி விட்டாள் [உசுப்பேத்தி உசுப்பேத்தி ரணகளமாக்குவது] அதுவும் பலதடவை: “பிரமாதமான கவரேஜ். எடிட்டிங். எங்கே லாங் ஷாட் , எங்கே க்ளோஸ் அப் என்பதெல்லாமும் கூட அருமையா பண்ணியிருக்கே” என. அப்போ தலைதூக்கியதுதான் இந்த ஒளிப்பதிவு ஆசை. ஒரு சின்ன குறும்படத்துக்கு நாம ஒளிப்பதிவு செய்யலாமோன்னு... கிடப்பிலேயே போட்டிருந்த ஆசைக்கு உயிர் கொடுக்கும் விதமாக குறும்படம் தயாரிக்கும் எண்ணம் வந்தது பெங்களூர் குழுவுக்கு.

க்தி பிரபா டிஸ்டண்ட் எஜுகேஷனில் MCA செய்த போது அதில் ஒரு பாடமாக மல்டிமீடியா மற்றும் வெப் டிஸைனிங் கற்றுத் தேர்ந்திருந்தார். திரைக்கதை, வசனம், இயக்கம், நடிப்பு எல்லாமே எனக்குக் கசந்து விட்டக் கதையைதான் பாகம் ஒன்றில் பார்த்தீர்களே:)! இந்த இடத்தில் எனக்கான களம் ஒளிப்பதிவுதான் எனத் தோன்றியது. கனமான ஹேன்டி கேமராக்கள் போய் கையடக்க டிஜிகேம்கள் வந்த பின்னும் ஏன் அதை வாங்கவில்லை எனும் கதையெல்லாம் இங்கே விலாவாரியாகச் சொல்லியிருக்கிறேன்.

“சோதனை முயற்சிக்காகப் புதிய டிஜிகேமெல்லாம் வாங்க வேண்டாம். இருப்பதை உபயோகித்திடலாம்” என முடிவாயிற்று. அனலாக் பதிவு முறையே அவுட் டேட்டட் ஆகி விட்டநிலையில் என் வீடியோகேம் உபயோகித்து H8-ல் பதிவு செய்தால் அதே தரத்துடன் டிவிடி ஆக்க வேண்டுமே என யோசித்தபோது “படமாக்கிக் கேசட்டைக் கையில் கொடுப்பதோடு உங்க வேலை முடிஞ்சது. மற்றதை நான் பார்த்துக்கறேன்” என இமேஜ் எடிட்டிங், வீடியோ ஆடியோ மிக்ஸ்ங், premiere, 3dmax மற்றும் பலவருடம் முன் 2d அனிமேஷனும் படித்திருந்த ஷக்தி குழுவினருக்குத் தைரியம் அளித்தார்.

கதை நல்லதா தோன்றினா சொல்லலாம். மற்றபடி கேமராவை வல்லுநர் கையில் கொடுத்து விட்டு நாம ஒரு ஓரமா நின்று வேடிக்கை பார்க்க வேண்டியதுதான் என நினைத்த வேளையில் ஜீவ்ஸ் அவராகவே “வீடியோ கேமராவைத் தொடர்ந்து கையில் பிடிப்பது எனக்கு நடுக்கம் வந்துடும். நீங்களே பாருங்க” என்ற போது ஏற்பட்ட மகிழ்ச்சியை நான் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை:)! ஒருவகையில் கனமான கேமரா இதுமாதிரியான படபிடிப்புக்கு நல்லதென்றும் சொன்னார்.

சமூக நோக்குடனான படமாக இருக்கவேண்டுமென்பதில் தீர்மானமாக இருந்தோம். ரெண்டு ஸ்கிர்ப்ட் முழுமையாய் ரெடியானது. தோழி ஷைலஜா தன் இமேஜையும் பொருட்படுத்தாது ‘இந்தியன்’ கமல் போல மேக்கப் போட்டு பாட்டியாக (ஒதுக்கப்படும் முதியவர்கள் பற்றியது) ஒரு கதையில் நடிக்க ஒப்புதல் அளித்திருந்தார். இவர் நாடகப் போட்டிகளில் நடிப்புக்குப் பரிசுகள் வென்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முதல் கட்ட டிஸ்கஷன் எனது இல்லத்தில் நடைபெற்ற வேளையில் ஷக்தியால் கலந்து கொள்ள முடியாது போயிற்று. இரண்டாவது கட்ட டிஸ்கஷன் ஷக்தி வீட்டில் நடந்த போது என்னால் கலந்து கொள்ள இயலவில்லை. இப்படி டிஸ்கஷன் லெவலுக்கே இழுத்த வேளையிலும் “நண்பர் ஒருவர் பயிற்சிப்பட்டறை நடத்தித் தரத் தயாராக இருக்கிறார். ஒரு சின்ன ஹால் பார்க்கணும். ஆனால் குறைந்தது 20 பேராவது அட்டெண்ட் செய்தால்தான் வருவாராம்” என்ற ஜீவ்ஸ் இன்னும் பதினைந்து பேரைத் திரட்ட யார் யாரையெல்லாம் கூப்பிடலாமென விட்டத்தைப் பார்த்துத் திட்டமே போட ஆரம்பித்திருந்தார் பாவம் அடுத்த லெவலுக்கே நாங்கள் போகப்போவதில்லை என்பதை அறியாமல்.

ஒவ்வொரு முறை திட்டமிட முனைகையிலும் யாரேனும் ஒருவருக்கு கலந்து கொள்ள முடியாது எனத் தகவல் வரும். கூட்டம் ரத்தாகும். இப்படி நகர்ந்த நாட்களில் திருமால் குடும்பஸ்தராகி, நித்திலா பாப்பா பிறக்க குழந்தையோடு இன்னும் பிஸியாகிக் குழுவிலிருந்து நகர்ந்து விட்டார். ஸ்விட்சர்லாந்து பறந்து விட்ட ஷைலஜா ஆறுமாதங்கள் கழித்துத் திரும்பி வந்து இப்போது வட இந்தியா சென்றுவிட்டார் மகளின் ப்ராஜெக்டுக்குத் துணையாக. இரண்டு வருடம் முன் செய்து கொண்ட ஒரு அறுவை சிகிச்சையின் பின்விளைவால் மீண்டும் ஒரு அறுவை சிகிச்சையை (தள்ளிப்போட்டபடி) எதிர்நோக்கி இருக்கும் நிலையில் நானும் இப்போதைக்கு அதில் ஈடுபடுவதாயில்லை. ஆனால் தன் ஆர்வத்தை அணைய விடாமல் இருந்த ஷக்தி பிரபா, கல்கி நடத்திய போட்டியில் கலந்து கொண்டு சிறந்த திரைக்கதை ஆசிரியருக்கான விருதைப் பெற்றதில் எங்களுக்கெல்லாம் மிகுந்த மகிழ்ச்சி.கல்கியில் ஒரு கதையின் கருவை இருவரியில் விளக்கியிருந்தனர். அதனையொட்டி கதையை உருவாக்குவதைப் போட்டியாக அறிவித்திருந்தனர். (நடுவராக இருந்து) பரிசு பெற்றவர்களை இயக்குனர் கௌதம் மேனன் பாராட்டுவதே இந்தப் போட்டி:
வாழ்த்துக்கள் ஷக்தி:)!

வாழ்த்துவோம் ஷக்தியை. ஷக்தியின் கதைகளில் எனக்குப் பிடித்த ஒன்றாக இதைச் சொல்வேன்: பள்ளிக்கூடம் போக மாட்டேன். இதுவும் கூட இவர் திரைக்கதைத் திறனை உங்களுக்குப் புரியவைக்கக் கூடும்.

ங்கள் குறும்பட ஆசை நிறைவேறாமல் போனாலும் நான் தொடர்ந்து வாசிக்கும் பதிவரும், PiT குழும உறுப்பினருமான ஒருவர் சிறப்பான ஒரு குறும்படத்தை எடுத்து வந்து ‘இதோப் பாருங்க’ எனக் காண்பித்த போது ஏற்பட்ட மகிழ்ச்சிக்கும் அளவில்லை. நேர்த்தியான அதன் ஆக்கத்தில் பிரமிப்பும் ஏற்பட்டது.

அந்தக் குறும்படமும் அதற்கான விமர்சனமும் அடுத்த பாகத்தில்...

விமர்சனத்தை எழுதியது நான் இல்லை என்பதை மட்டும் இப்போதைக்குச் சொல்லிக் கொள்கிறேன்:)!

(அடுத்த பாகத்துடன் நிறைவுறும்)

13 comments:

 1. புகைப்படக்கலையின் அடுத்த கட்டத்துக்குள் நுழைந்து விட்டீர்கள்.வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. இப்போதைக்குத் தள்ளிப் போகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். காலம் கனிந்து உங்கள் ஒளிப்பதிவிலும் பல குறும்படங்கள் ஜொலிக்கத்தான் போகின்றன. அட்வான்ஸ் வாழ்த்துக்கள் உங்களுக்கும், வாழ்த்துக்கள் கல்கி போட்டியில் வென்ற ஷக்திக்கும்...

  ReplyDelete
 3. //வாழ்த்துவோம் ஷக்தியை//
  வாழ்க வாழ்க!

  ReplyDelete
 4. விவரமா எழுதி இருக்கீங்க.சக்திப்ரபாவை இங்கே நானும் பாராட்டறேன்.என்றாவது நம் குறும்படக்கனவு மெய்ப்படும்!

  ReplyDelete
 5. திருமதி ஷக்திப்பிரபா அவர்களுக்கு என் அன்பான வாழ்த்துக்கள்.

  உங்களுக்கும் பாராட்டுக்கள்.
  vgk

  ReplyDelete
 6. ராமலக்ஷ்மி, என்னையும் பதிவில் இணைத்து எழுதியது உங்கள் பெருந்தன்மை. மிக்க நன்றி :)

  goma, கணேஷ், Vasudevan Thirumurthi, வை.கோ sir, and shy,

  அனைவரின் அன்புக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி :)

  ஷை, Ramalakshmi

  I still cant let go off my dream, we made a great gang...yeah we should pursue someday :)

  ReplyDelete
 7. goma said...
  //புகைப்படக்கலையின் அடுத்த கட்டத்துக்குள் நுழைந்து விட்டீர்கள்.வாழ்த்துக்கள்//

  நுழைய முயன்றேன். உங்கள் வாழ்த்துகளால் ஒருநாள் கை கூடலாம்:)! மிக்க நன்றி.

  ReplyDelete
 8. கணேஷ் said...
  //இப்போதைக்குத் தள்ளிப் போகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். காலம் கனிந்து உங்கள் ஒளிப்பதிவிலும் பல குறும்படங்கள் ஜொலிக்கத்தான் போகின்றன. அட்வான்ஸ் வாழ்த்துக்கள் உங்களுக்கும், வாழ்த்துக்கள் கல்கி போட்டியில் வென்ற ஷக்திக்கும்...//

  மிக்க நன்றி.

  ReplyDelete
 9. Vasudevan Tirumurti said...
  ***//வாழ்த்துவோம் ஷக்தியை//
  வாழ்க வாழ்க!/***

  நன்றி திவா சார்:)!

  ReplyDelete
 10. ஷைலஜா said...
  //விவரமா எழுதி இருக்கீங்க.சக்திப்ரபாவை இங்கே நானும் பாராட்டறேன்.என்றாவது நம் குறும்படக்கனவு மெய்ப்படும்!//

  அப்படியே ஆகட்டும் ஷைலஜா:)! நன்றி!

  ReplyDelete
 11. வை.கோபாலகிருஷ்ணன் said...
  //திருமதி ஷக்திப்பிரபா அவர்களுக்கு என் அன்பான வாழ்த்துக்கள்.

  உங்களுக்கும் பாராட்டுக்கள்.//

  நன்றி vgk சார்.

  ReplyDelete
 12. Shakthiprabha said...
  //ராமலக்ஷ்மி, என்னையும் பதிவில் இணைத்து எழுதியது உங்கள் பெருந்தன்மை. மிக்க நன்றி :)

  ஷை, Ramalakshmi

  I still cant let go off my dream, we made a great gang...yeah we should pursue someday :)//

  செய்வோம் ஷக்தி:)! நன்றி.

  ReplyDelete
 13. கனவுகளே வாழ்க்கை - வாழ்க்கையே கனவு
  இரண்டில் எது சரி?

  கனவுகள் சித்தியாக வாழ்த்து.

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin