Tuesday, April 19, 2011

சித்ரா பெளர்ணமியும் நிலாச் சோறு நினைவுகளும்..

திங்கள் தோறும் பெளர்ணமி வந்தாலும் சித்திரைமாத முழுத்திங்களை மட்டும்தானே ‘சித்ரா பெளர்ணமி’ என்றழைத்துக் கொண்டாடுகிறோம். இந்த பெளர்ணமிக்கு முன் தினம் எங்கள் குடியிருப்பில் நாங்கள் இருக்கும் கட்டிடத்திலுள்ள 15 குடும்பங்கள் போல மொட்டை மாடியில் குழுமியிருந்தோம். இரவு உணவும் அங்கேயே. பல வருடங்களுக்குப் பின்னான நிலாச் சாப்பாடு பால்ய கால நிலாச் சோறு நினைவுகளைக் கிளப்பி விட்டது. 7 மணிக்கு ஆரம்பித்து நான்கு மணி நேரம் நடந்த சந்திப்பில் பெரும்பாலான நேரம் என் கண்கள் நிலாவையும் அதைச் சுற்றி நீந்தி விளையாடிக் கொண்டிருந்த மேகக் கூட்டங்களையும் பருகியபடியே இருந்தன. அப்போதே ஆசை துளிர்ந்து விட்டது முகிலோடு சேர்த்து நிலவைப் பிடித்து விட வேண்டுமெனெ.

சென்ற மாதம் போலன்றி சற்று முந்நேரத்தில் ஏழரை மணி போல மொட்டை மாடிக்குச் சென்று விட்டேன். அபூர்வ நிலாவைப் பிடித்த அனுபவத்தில் இரண்டு க்ளிக்குகளில் நிலாப் பெண் ஓரளவு திருப்திகரமாகக் கிடைத்து விட்டாள்.

1. சித்திரைப் பெண்


அடுத்து மேகங்களுடன் எடுக்க முனைந்தால் நிலவின் துல்லிய விவரங்கள் மறைந்து ‘வெள்ளித் தட்டு’தான் கிடைத்தது:)! பரவாயில்லையென ISO அதிகரித்து முயன்றதில், நிலவு ஒளியூட்ட.., அழகிய முகில்களின் ஊர்வலங்களைப் பதிய முடிந்தது. வல்லுநர்கள் பார்வையில் இவை எப்படிப்பட்ட படங்களோ தெரியாது. ஆனால் ஆர்வ மிகுதியில் பகிர்ந்து கொள்கிறேன் உங்களுடன் அவற்றை இங்கு:

2. விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே..


3. சித்திரை மாதம் பெளர்ணமி நேரம்
முத்து ரதங்கள் ஊர்வலம்போகும்..

சித்திரா பெளர்ணமியன்று குமரி முனையில் மாலை ஆறுமணிக்கு கிழக்கே நிலா உதிக்க அதே கணத்தில் மேற்கே மெல்ல மெல்ல சூரியன் அஸ்தமிக்கும் அற்புதக் காட்சியை காண வாருங்கள் என நாகர்கோவிலைச் சேர்ந்த மாணவர் கண்ணன் J நாயர் Buzz-ல் நண்பர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். இக்காட்சியை எப்போதேனும் பார்த்தவர் இருந்தால் பகிர்ந்திடுங்கள் தங்கள் அனுபவத்தை.

கடலோரம் மட்டுமின்றி உறவினர்கள் நண்பர்கள் நதிக்கரைகளில் இந்நாளில் ஒன்றுகூடி உரையாடியபடி உண்பதும் பழங்காலத்தைய வழக்கம். சித்திரை மாதம் தகிக்கின்ற கோடையின் உஷ்ணத்தைத் தணித்துக் கொள்ள ஏற்படுத்தப்பட்ட பழக்கமாகத் தெரிகிறது. தொலைக்காட்சிப் பெட்டிகளால் தொலைந்து போகின்றவற்றில் ஒன்றாக இப்போது இதுவும்.

சிவபெருமான் வடித்த சித்திரத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட சித்திர புத்திர நாயனார் எனப்படும் சித்திர குப்தன் அவத‌ரி‌த்த நாளு‌ம் இ‌‌துவே. ம‌னித‌ர்க‌ளி‌ன் பாவ, புண்ணிய‌க் கண‌க்குகளை கண்ணிலே எண்ணெய் விட்டுப் பார்த்தபடி எழுதிக் குறிப்பார் எனும் புராணக்கதையை சின்னவயதில் அம்மாவுக்கு அவர் பாட்டி, பாட்டிக்கு அவர் அம்மா என சொல்லப்பட்டு எங்களையும் வந்தடைந்தன. விளையாட்டுக்களில் வரும் சின்னச் சின்ன சண்டைகளின் போது [கிரிக்கெட்டில் வரும் LBW சர்ச்சை சந்தேகம் போல] ஒருவரையொருவர் ‘சித்திர புத்திர நாயனார் பார்த்துக் கொண்டே இருக்கிறார்’ என்றெல்லாம் சொல்லி மிரட்டிக் கொண்டது நினைவில் உள்ளது:)!

மனசாட்சியைக் கழற்றி வைத்து விட்டு கணக்கற்ற பொய்களுடன், சுமக்கிற பாவமூட்டைகளைப் பற்றிய மனக்கிலேசம் ஏதுமின்றி நடமாடும் பெரிய மனிதர்கள் நிறைந்த இவ்வுலகம் மறந்தபோன ஒரு கடவுளாகி விட்டாரோ இன்று சித்திர புத்திர நாயனார்?

நிலாச் சோறு நினைவுகள்:

சின்ன வயதில் நாங்கள் வசித்த திண்ணை வீட்டில், மாடியின் தளத்தில் இருக்கும் திறந்தவெளியை கீழ் தட்டட்டி என்றும், மாடியறைக்கு மேல் அமைந்த தளத்தை மேல்தட்டட்டி என்றும் அழைப்போம். வடக்கு வீடு, தெற்கு வீடு இரண்டு பக்கத்திலிருந்தும் மேல் தட்டட்டிக்கு செல்ல ஏணி போன்றதான மரப்படிகள் இருக்கும். பரந்த மேல்தட்டட்டியின் ஒருபக்கம் மாடியறைகள் குளுமையாய் இருக்க வேயப்பட்ட ஓடுகளுடனான சுவரும் கூரைக்கு நடுவே அந்தப்பக்கம் செல்ல படிக்கட்டுகளும் அமைந்திருக்கும். [படம்:4]

பெளர்ணமி அன்று நிலாச் சோறு என்றால் மாலையிலேயே முடிவாகி விடும். வீட்டு வேலையாள் காசி என்பவர் இருட்டும் முன்னர் இடத்தைப் பெருக்கி சுத்தம் செய்து விட்டு வந்து விடுவார். இருட்டத் தொடங்கியதுமே குழந்தைகள் அனைவரும் முதலில் சென்று ஆஜராகி விடுவோம். வெள்ளைத் துணியில் வெட்டிவேர் கட்டிப்போட்ட மண்பானையிலிருந்து குளிர்ந்த நீர் மூக்குக்கு மூடி கொண்ட எவர்சில்வர் ஜக் இரண்டில் நிரப்பிக் கொடுக்கப்பட, அண்ணன்மார்கள் இருவரும் அதை துளி சிந்தாமல் இலாவகமாய்க் கொண்டு சேர்ப்பார்கள். அக்கா ட்ரான்ஸிஸ்டருடன் பாய்களை, நான் தட்டுகளை, தங்கைகள் தம்ளர், கரண்டிகளை என அவரவர் பங்குக்கு எடுத்துச் செல்வோம்.

சுருட்டி உருட்டிய அம்மாவின் சேலையுடன் கீழ் படியில் நிற்கும் தம்பியை யாரேனும் கவனமாகக் கூட்டி வருவோம். [அந்த குறிப்பிட்ட சேலை இரவானால் அவனுக்கு தினம் வேண்டும். யாரும் அதை மடித்து விடக் கூடாது. துவைத்த பின்னரும் அதே வடிவில் உருட்டி சுருட்டி வைக்காவிட்டால் போச்சு!]. பாயிலே அச்சேலையை அணைத்துப் படுத்தபடி சமர்த்தாக நிலவில் தெரியும் முயலோடு பேசிக் கொண்டிருப்பான். நிலா காய்ந்தாலும் சின்னப் பிள்ளைகள் இருக்குமிடத்தில் பூச்சி செட்டு ஏதேனும் வந்திடக் கூடாதென, இரண்டு அரிக்கேன் விளக்குகளை குறைந்த திரியில் ஒளிர விட்டு ஒரு ஓரமாய் வைத்துவிட்டுப் போவார் காசி.

ஆளாளுக்கு ஏதேனும் பாட்டுப் பாடி கதை பேசிக் களித்திருப்போம். சற்று நேரம் அக்கா ட்ரான்ஸிஸ்டரில் இனிய பாடல்களைக் கசிய விடுவாள்.  நேர் எதிரே பரந்து விரிந்து நிற்கும் (பிள்ளையார் கோவில்) அரச மரத்திலிருந்து எண்ணற்றப் பறவைகள் குறிப்பாக வெண்ணிற நாரைகள் உறங்காமல் நிலவொளியில் எமைப் பார்த்திருக்கும்.
4. கூரைப்படி
இதோ இந்தக் கூரைப் படிகளில் (பெரிய போட்டியே நடக்குமாகையால்) ஆளாளுக்கு முறைவைத்து நிலாபார்த்து சாய்ந்து படுத்திருப்போம். ஆனால் இந்தப் படம் உச்சி வெயிலில் எடுத்தது. அண்ணன்மார் மேல்படிகளில், தங்கைமார் கீழ்படிகளில் நடுவிலே நான் என வயதுப்படி:)!

அம்மாவும் பெரியம்மாவும் பெரிய சட்டியில் ‘கொழுக்க கொழுக்க’ தயிர்சாதம் பிசைந்து, மதிய சாம்பார் அவியலை சுண்டவைத்து செய்த பழங்கறியுடன் உருட்டிப் போடப் போட குளுமையாக அவை தொண்டைக்குள் வழுக்கிச் செல்லும்.

பின்னாளில் கல்லூரி பக்கமாய் வீடு மாறி வசித்த போது, தூத்துக்குடியிலிருந்து கோடை விடுமுறைக்கு வரும் சித்தி குழந்தைகளோடு சித்திரா பெளர்ணமி சாப்பாடு தொடர்ந்தது, அவர்களுக்கு மிகப் பிடித்த எங்கள் அம்மாவின் கைமணத்தில் தயாராகும் கூட்டாஞ்சோறு மற்றும் பொரித்த அப்பளம் கூழ் வற்றலோடு.

நானும் தங்கைகளும் பந்தயங்களை முன்னின்று நடத்த, நிலவொளியில் தவக்களைகளாகவும் முயல்களாகவும் மாறி என் தம்பியுடன் தாவிக் குதித்தோடி, சிரித்துக் களைத்துப் பசியோடு நிலாச் சோற்றை ஒருபிடிபிடித்த நினைவுகளை இப்போதும் சந்திக்கும் போதெல்லாம் பகிர்ந்திடத் தவறுவதில்லை சித்தி பிள்ளைகள்.

து ஒரு அழகிய கனாக் காலம்! அவசர உலகில் நாம் இழந்தவை ஏராளம்.

இனிய நிலாச் சோறு நினைவுகளை விருப்பமானவர்கள் தொடருங்களேன்!

அப்படியே முகிலோடு விளையாடும் நிலவின் மேல் சில வார்த்தைகள்...:)!

*** *** ***

88 comments:

 1. அது ஒரு நிலாக் காலம்!

  ReplyDelete
 2. சிறிய வயதுபோட்டோ சூப்பர் மேடம். அப்படியே நிலாச்சோறு சாப்பிட்ட நியாபங்கள் நெஞ்சில் நிலலாடுகிறது..

  ReplyDelete
 3. டாப்புல இருக்குற கூரைப்படி போட்டோ செம டாப் :))

  ReplyDelete
 4. >>>>அது ஒரு அழகிய கனாக் காலம்! அவசர உலகில் நாம் இழந்தவை ஏராளம்.

  ரசித்த வரிகள்

  ReplyDelete
 5. அழகிய நிலாப்படத்துடன் மலர்ந்து நிற்கும் நினைவுகள்...நன்று ராமலக்ஷ்மி..

  ReplyDelete
 6. //சித்திரா பெளர்ணமியன்று குமரி முனையில் மாலை ஆறுமணிக்கு கிழக்கே நிலா உதிக்க அதே கணத்தில் மேற்கே மெல்ல மெல்ல சூரியன் அஸ்தமிக்கும்///

  இது எங்கள் ஊரில் அற்புதமான காட்சி ஆகும்...!!! நிறைய வெளி நாட்டுக்காரர்கள் இதை ஆர்வத்துடன் கண்டு களிப்பார்கள்.....

  ReplyDelete
 7. வெண்ணிலா படம் அனைத்தும் அருமை....

  ReplyDelete
 8. அது ஒரு கனாக் காலம் அக்கா...நிலவு படங்கள் அழகு!!

  ReplyDelete
 9. அந்நாளைய நிலாக்காலத்தை அழகிய படத்துடன் பறிமாறி இருந்த விதம் மனதினை பரவசப்படுத்தி விட்டது.

  ReplyDelete
 10. கூரைப் படி வெகு அழகு. நிலாக் காயும் நேரம் சரணம்........ ;-))

  ReplyDelete
 11. நிலவு தூங்கினாலும், நிலவு குறித்த ஞாபகங்கள் தூங்கிடாதே.

  அருமையான படங்கள், அருமையான நிலா பாடல்கள், அருமையான ஞாபக மீட்டல்கள்.

  ReplyDelete
 12. படங்கள் பிளாக் அண்ட் ஒயிட்டா என்ன? இந்த காலத்தில் பிளாக் அண்ட் ஒயிட் படங்கள் !!

  ReplyDelete
 13. படங்களும், பகிர்வும் மிகவும் அருமையாக இருக்குது.

  உங்களுடன் சேர்ந்து நானும் நிலாச்சோறு சாப்பிட்டது போல ஒரு திருப்தி ஏற்படுகிறது, இந்தப்பதிவைப் பார்த்ததும்.

  பாராட்டுக்கள்; வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 14. அட்டகாசமான படங்களுடன் அழகான நினைவலைகள் ராமலக்‌ஷ்மி..

  \\மூக்குக்கு மூடி கொண்ட எவர்சில்வர் ஜக் // வாவ்..:) எனக்கும் அது ரொம்ப பிடிக்கும்..

  ReplyDelete
 15. அழகிய படங்கள்! ரசனையான நினைவுகள்! மலர்ந்து நிற்கும் நினைவுகளுடன் நானும் ரசித்து மகிழ்ந்தேன்!

  ReplyDelete
 16. அக்கா, சித்ரா பௌர்ணமி நினைவுகளில் எங்களையும் இணைத்து விட்டீர்கள். அழகு... படங்கள் - கொள்ளை அழகு..... மலரும் நினைவுகள் - ரம்மியமான அழகு. பாராட்ட வார்த்தைகளே இல்லை. மிகவும் ரசித்தேன்.

  ReplyDelete
 17. மிக ரசித்து வாசித்தேன்,அருமையான புகைப்படங்கள்,எனக்கும் எங்கள் வீட்டு கணக்குப் பிள்ளை வீட்டில் சாப்பிட்ட நிலாச்சோறு அனுபவம் நினைவிற்கு வந்தது,பகிர்வுக்கு நன்றி ராமலஷ்மி.அப்படியே கண்முன் சமபவத்தை நிறுத்தி விட்டீர்கள்..வார்த்தையை அழகாய் கோர்த்து எழுதிய விதம் என் மனதை மிகவும் கவர்ந்தது.ஒரு சில வரிகளை மனதில் அசை போட்டு பார்க்கிறேன்..

  ReplyDelete
 18. நிலவையும்
  நினைவையும்
  நிழல்படங்களுடன் தந்து
  நெஞ்சத்தை
  நிரம்ப வைத்து விட்டீர்கள்

  ReplyDelete
 19. ஏக்கப் பெருமூச்சு.. பழைய நினைவுகளுக்கும், நிலாவை பார்க்க விடாம சதி செய்த மேகக் கூட்டத்துக்கும் சேர்த்து.

  அழகா.. நேர்ல பார்த்த மாதிரி இருக்கு அக்கா படங்கள்.

  முகிலோடு விளையாடுவது கொள்ளை அழகு.

  ReplyDelete
 20. அற்புதமான நினைவுகள். படங்களும் வெகு அழகு. அதுவும் மேகங்களுக்கிடையே நிலாப் பெண் அதிஅற்புதமான அழகோடு ஜொலிக்கிறாள். நன்றி பகிர்வுக்கு

  ReplyDelete
 21. படங்களும், பகிர்வும் மிகவும் அருமை.

  ReplyDelete
 22. நிலாப் போட்டோ அருமை..அதை விட குயவன் ஓடு போட்ட வீட்டின் மீது அமர் ந்துள்ள குழந்தைகள் போட்டோ மிகவும் அருமை..

  ReplyDelete
 23. நினைவலைகளைத் தூண்டி விட்ட நிலா...கால வெள்ளத்தில் பின்னோக்கிப் பயணித்துக் குழந்தையாக வைக்கும் நனவோடை.

  ReplyDelete
 24. மனதுக்கு நிலவின் குளுமையை அளித்த பதிவு. பகிர்ந்தமைக்கு நன்றி.

  உங்கள் நிலாச் சாப்பாடு பதிவு என் நினைவுகளைச் சுருள வைத்து விட்டது...

  ஒவ்வொரு பெளர்ணமியன்றும எங்கள் தாய் பூஜை செய்வார். பூஜைக்குத் தவறாமல் வடையும், பாயாசமும் படைக்கப்படும். தட்டட்டியில் வடை, பாயாசத்தோடு நிலாச் சோறு சாப்பிட்டது என்றும் மனதுள் இருக்கும் மிக இனிமையான நினைவுகள்.

  ReplyDelete
 25. //7 மணிக்கு ஆரம்பித்து நான்கு மணி நேரம் நடந்த சந்திப்பில் பெரும்பாலான நேரம் என் கண்கள் நிலாவையும் அதைச் சுற்றி நீந்தி விளையாடிக் கொண்டிருந்த மேகக் கூட்டங்களையும் பருகியபடியே இருந்தன.//

  பதிவர் மூளை மாதிரி கேமரா மூளை உங்களை உசுப்பி விட்டது போல :-))

  நானும் பவுர்ணமி அன்று (எதேச்சையாக) பீச் சென்று இருந்தேன் (குடும்பத்துடன்)... நிலா வெளிச்சம் கடற்பரப்பில் அழகாக இருந்தது. நான் என்னோட மொபைலில் ஃபோட்டோ எடுத்தேன் (நிலாவை அல்ல நிலா மற்றும் கடலில் விழுந்த நிலா வெளிச்சத்தை) சுமாராக!! வந்து இருந்தது :-)

  நல்ல கேமராவில் எடுக்க ஆசை.. வாய்ப்பு தான் அமையவில்லை.

  ReplyDelete
 26. உங்கள் முந்தைய தலைமுறையினரான நாங்களும், வெள்ளி நிலவே வெள்ளி நிலவே என்று அதே தட்டட்டியை, கையேந்திபவனாக்கியிருக்கிறோம்.பன்னிரண்டு கைகளுக்கு[அப்பா ,இரண்டு மருமகள்] அன்னமிட்ட.
  அந்த வெள்ளி நிலவு.இந்த நிலவுக்குள் இருக்கிறதா தேடிப் பார்க்கிறேன்

  ReplyDelete
 27. சித்திரைப்பெண் ரொம்ப அழகு.

  நிலாச்சோறு,கூரைப்படி.. கொடுத்துவெச்சவங்க நீங்க :-))

  ReplyDelete
 28. கல்கியில் "குடியரசு........"கவிதை படித்தேன்.அருமை.

  ReplyDelete
 29. அன்பு ராமலக்ஷ்மி நிலவுச்
  சோறு அருமை. அக்கா தங்கை அண்ணா தம்பி படம் கேட்கவே வேண்டாம்.
  மேகங்களும் நிலவும் கூட்டு மிகப் பிரமாதம்.
  அன்புடன்,
  ரேவதி

  ReplyDelete
 30. தட்டிக்கொடுத்து சிறகுகள் முளைத்தால் இப்பொழுது ராமலஷ்மியும் ஒரு பட்டாம் பூச்சி ....வாழ்த்துக்கள்

  ReplyDelete
 31. சுருட்டி உருட்டிய அம்மாவின் சேலையுடன் கீழ் படியில் நிற்கும் தம்பியை யாரேனும் கவனமாகக் கூட்டி வருவோம். [அந்த குறிப்பிட்ட சேலை இரவானால் அவனுக்கு தினம் வேண்டும். யாரும் அதை மடித்து விடக் கூடாது. துவைத்த பின்னரும் அதே வடிவில் உருட்டி சுருட்டி வைக்காவிட்டால் போச்சு!]....

  அதே போல்தான், இன்னொரு வாண்டு ஒரு பில்லோ வச்சு கொஞ்சும்...
  இப்போ தம்பி என்ன பண்றாப்ல,

  ReplyDelete
 32. கே. பி. ஜனா... said...
  //அது ஒரு நிலாக் காலம்!//

  மிக்க நன்றி ஜனா.

  ReplyDelete
 33. அன்புடன் மலிக்கா said...
  //சிறிய வயதுபோட்டோ சூப்பர் மேடம். அப்படியே நிலாச்சோறு சாப்பிட்ட நியாபங்கள் நெஞ்சில் நிலலாடுகிறது..//

  நன்றி மலிக்கா.

  ReplyDelete
 34. ஆயில்யன் said...
  //டாப்புல இருக்குற கூரைப்படி போட்டோ செம டாப் :))//

  நன்றி:)!

  ReplyDelete
 35. சி.பி.செந்தில்குமார் said...
  //>>>>அது ஒரு அழகிய கனாக் காலம்! அவசர உலகில் நாம் இழந்தவை ஏராளம்.

  ரசித்த வரிகள்//

  நன்றி:)!

  ReplyDelete
 36. பாச மலர் / Paasa Malar said...
  //அழகிய நிலாப்படத்துடன் மலர்ந்து நிற்கும் நினைவுகள்...நன்று ராமலக்ஷ்மி..//

  மிக்க நன்றி மலர்!

  ReplyDelete
 37. MANO நாஞ்சில் மனோ said...
  ***//சித்திரா பெளர்ணமியன்று குமரி முனையில் மாலை ஆறுமணிக்கு கிழக்கே நிலா உதிக்க அதே கணத்தில் மேற்கே மெல்ல மெல்ல சூரியன் அஸ்தமிக்கும்///

  இது எங்கள் ஊரில் அற்புதமான காட்சி ஆகும்...!!! நிறைய வெளி நாட்டுக்காரர்கள் இதை ஆர்வத்துடன் கண்டு களிப்பார்கள்...../***

  இந்த முறை மேகமூட்டத்தால் சூரியனைக் காண இயலாது போனதாக அறிந்தேன்.

  ReplyDelete
 38. MANO நாஞ்சில் மனோ said...
  //வெண்ணிலா படம் அனைத்தும் அருமை....//

  மிக்க நன்றி.

  ReplyDelete
 39. "உழவன்" "Uzhavan" said...
  //nice :-)//

  நன்றி உழவன்:)!

  ReplyDelete
 40. S.Menaga said...
  //அது ஒரு கனாக் காலம் அக்கா...நிலவு படங்கள் அழகு!!//

  நன்றி மேனகா.

  ReplyDelete
 41. ஸாதிகா said...
  //அந்நாளைய நிலாக்காலத்தை அழகிய படத்துடன் பறிமாறி இருந்த விதம் மனதினை பரவசப்படுத்தி விட்டது.//

  நன்றி ஸாதிகா:)!

  ReplyDelete
 42. RVS said...
  //கூரைப் படி வெகு அழகு. நிலாக் காயும் நேரம் சரணம்........ ;-))//

  நன்றி ஆர் வி எஸ்:)!

  ReplyDelete
 43. தமிழ் உதயம் said...
  //நிலவு தூங்கினாலும், நிலவு குறித்த ஞாபகங்கள் தூங்கிடாதே.

  அருமையான படங்கள், அருமையான நிலா பாடல்கள், அருமையான ஞாபக மீட்டல்கள்.//

  மிக்க நன்றி தமிழ் உதயம்.

  ReplyDelete
 44. மோகன் குமார் said...
  //படங்கள் பிளாக் அண்ட் ஒயிட்டா என்ன? இந்த காலத்தில் பிளாக் அண்ட் ஒயிட் படங்கள் !!//

  இரவு வானம் ப்ளாக் ஆகவும் நிலாவும் மேகமும் ஒயிட்டாகவும்தானே இருக்கும்:)?

  ReplyDelete
 45. வை.கோபாலகிருஷ்ணன் said...
  //படங்களும், பகிர்வும் மிகவும் அருமையாக இருக்குது.

  உங்களுடன் சேர்ந்து நானும் நிலாச்சோறு சாப்பிட்டது போல ஒரு திருப்தி ஏற்படுகிறது, இந்தப்பதிவைப் பார்த்ததும்.

  பாராட்டுக்கள்; வாழ்த்துக்கள்.//

  மகிழ்ச்சியும் நன்றியும்.

  ReplyDelete
 46. முத்துலெட்சுமி/muthuletchumi said...
  //அட்டகாசமான படங்களுடன் அழகான நினைவலைகள் ராமலக்‌ஷ்மி..

  \\மூக்குக்கு மூடி கொண்ட எவர்சில்வர் ஜக் // வாவ்..:) எனக்கும் அது ரொம்ப பிடிக்கும்..//

  ரொம்ப வசதியான ஜாடி அது. சாப்பாடு மேசையில் எப்போதும் இரண்டு இருக்கும்:)! மிக்க நன்றி முத்துலெட்சுமி:)!

  ReplyDelete
 47. Priya said...
  //அழகிய படங்கள்! ரசனையான நினைவுகள்! மலர்ந்து நிற்கும் நினைவுகளுடன் நானும் ரசித்து மகிழ்ந்தேன்!//

  நன்றி ப்ரியா.

  ReplyDelete
 48. Chitra said...
  //அக்கா, சித்ரா பௌர்ணமி நினைவுகளில் எங்களையும் இணைத்து விட்டீர்கள். அழகு... படங்கள் - கொள்ளை அழகு..... மலரும் நினைவுகள் - ரம்மியமான அழகு. பாராட்ட வார்த்தைகளே இல்லை. மிகவும் ரசித்தேன்.//

  மிக்க நன்றி சித்ரா:)!

  ReplyDelete
 49. asiya omar said...
  //மிக ரசித்து வாசித்தேன்,அருமையான புகைப்படங்கள்,எனக்கும் எங்கள் வீட்டு கணக்குப் பிள்ளை வீட்டில் சாப்பிட்ட நிலாச்சோறு அனுபவம் நினைவிற்கு வந்தது,பகிர்வுக்கு நன்றி ராமலஷ்மி.அப்படியே கண்முன் சமபவத்தை நிறுத்தி விட்டீர்கள்..வார்த்தையை அழகாய் கோர்த்து எழுதிய விதம் என் மனதை மிகவும் கவர்ந்தது.ஒரு சில வரிகளை மனதில் அசை போட்டு பார்க்கிறேன்..//

  மகிழ்ச்சியும் நன்றியும் ஆசியா!

  ReplyDelete
 50. திகழ் said...
  //நிலவையும்
  நினைவையும்
  நிழல்படங்களுடன் தந்து
  நெஞ்சத்தை
  நிரம்ப வைத்து விட்டீர்கள்//

  அழகான கருத்துக்கு நன்றி திகழ்:)!

  ReplyDelete
 51. சுசி said...
  //ஏக்கப் பெருமூச்சு.. பழைய நினைவுகளுக்கும், நிலாவை பார்க்க விடாம சதி செய்த மேகக் கூட்டத்துக்கும் சேர்த்து.//

  அதற்காகவே இப்படங்கள். சென்ற முறை போல் உங்களுக்காகவே எடுத்ததாகக் கொள்ளுங்கள்:)!

  //அழகா.. நேர்ல பார்த்த மாதிரி இருக்கு அக்கா படங்கள்.

  முகிலோடு விளையாடுவது கொள்ளை அழகு.//

  நன்றி சுசி:)!

  ReplyDelete
 52. geethasmbsvm6 said...
  //அற்புதமான நினைவுகள். படங்களும் வெகு அழகு. அதுவும் மேகங்களுக்கிடையே நிலாப் பெண் அதிஅற்புதமான அழகோடு ஜொலிக்கிறாள். நன்றி பகிர்வுக்கு//

  மிக்க நன்றி கீதா மேடம்.

  ReplyDelete
 53. T.V.ராதாகிருஷ்ணன் said...
  //படங்களும், பகிர்வும் மிகவும் அருமை.//

  மிக்க நன்றி டி வி ஆர் சார்!

  ReplyDelete
 54. ESWARAN.A said...
  //நிலாப் போட்டோ அருமை..அதை விட குயவன் ஓடு போட்ட வீட்டின் மீது அமர் ந்துள்ள குழந்தைகள் போட்டோ மிகவும் அருமை..//

  மிக்க நன்றி சார்!

  ReplyDelete
 55. ஸ்ரீராம். said...
  //நினைவலைகளைத் தூண்டி விட்ட நிலா...கால வெள்ளத்தில் பின்னோக்கிப் பயணித்துக் குழந்தையாக வைக்கும் நனவோடை.//

  நன்றி ஸ்ரீராம்:)!

  ReplyDelete
 56. Ammu said...
  //மனதுக்கு நிலவின் குளுமையை அளித்த பதிவு. பகிர்ந்தமைக்கு நன்றி.

  உங்கள் நிலாச் சாப்பாடு பதிவு என் நினைவுகளைச் சுருள வைத்து விட்டது...

  ஒவ்வொரு பெளர்ணமியன்றும எங்கள் தாய் பூஜை செய்வார். பூஜைக்குத் தவறாமல் வடையும், பாயாசமும் படைக்கப்படும். தட்டட்டியில் வடை, பாயாசத்தோடு நிலாச் சோறு சாப்பிட்டது என்றும் மனதுள் இருக்கும் மிக இனிமையான நினைவுகள்.//

  மகிழ்ச்சியும் நன்றியும் அம்மு. இனிய நிலாச் சோறு நினைவுகளைப் பகிர்ந்தமைக்கும் நன்றி:)!

  ReplyDelete
 57. கிரி said...
  ***//நானும் பவுர்ணமி அன்று (எதேச்சையாக) பீச் சென்று இருந்தேன் (குடும்பத்துடன்)... நிலா வெளிச்சம் கடற்பரப்பில் அழகாக இருந்தது. நான் என்னோட மொபைலில் ஃபோட்டோ எடுத்தேன் (நிலாவை அல்ல நிலா மற்றும் கடலில் விழுந்த நிலா வெளிச்சத்தை) சுமாராக!! வந்து இருந்தது :-)

  நல்ல கேமராவில் எடுக்க ஆசை.. வாய்ப்பு தான் அமையவில்லை.//***

  இதற்காகவே செல்லுங்கள் முழுநிலா நாளில்:)! மிக்க நன்றி கிரி!

  ReplyDelete
 58. goma said...
  //உங்கள் முந்தைய தலைமுறையினரான நாங்களும், வெள்ளி நிலவே வெள்ளி நிலவே என்று அதே தட்டட்டியை, கையேந்திபவனாக்கியிருக்கிறோம்.பன்னிரண்டு கைகளுக்கு[அப்பா ,இரண்டு மருமகள்] அன்னமிட்ட.
  அந்த வெள்ளி நிலவு.இந்த நிலவுக்குள் இருக்கிறதா தேடிப் பார்க்கிறேன்//

  நீங்கள் காட்டியதும் எனக்குத் தெரிகிறது!

  ReplyDelete
 59. அமைதிச்சாரல் said...
  //சித்திரைப்பெண் ரொம்ப அழகு.

  நிலாச்சோறு,கூரைப்படி.. கொடுத்துவெச்சவங்க நீங்க :-))//

  நன்றி சாந்தி:)!

  ReplyDelete
 60. Kanchana Radhakrishnan said...
  //கல்கியில் "குடியரசு........"கவிதை படித்தேன்.அருமை.//

  மகிழ்ச்சியும் நன்றியும் மேடம்:)! விரைவில் இங்கும் பகிந்து கொள்கிறேன்:)!

  ReplyDelete
 61. வல்லிசிம்ஹன் said...
  //அன்பு ராமலக்ஷ்மி நிலவுச்
  சோறு அருமை. அக்கா தங்கை அண்ணா தம்பி படம் கேட்கவே வேண்டாம்.
  மேகங்களும் நிலவும் கூட்டு மிகப் பிரமாதம்.//

  நன்றி வல்லிம்மா! சித்திரைப் பெண்ணை சென்ற இடத்திலும் தவறாமல் நீங்கள் பதிந்தது ரொம்பப் பிடித்திருந்தது எனக்கு:)!

  ReplyDelete
 62. goma said...
  //தட்டிக்கொடுத்து சிறகுகள் முளைத்தால் இப்பொழுது ராமலஷ்மியும் ஒரு பட்டாம் பூச்சி ....வாழ்த்துக்கள்//

  மிக்க நன்றி:)! அடுத்த பதிவில் முத்துச்சரம் ‘வண்ணத்துப்பூச்சிகளின் வகுப்பறை’யாகும்!

  ReplyDelete
 63. goma said...
  //அதே போல்தான், இன்னொரு வாண்டு ஒரு பில்லோ வச்சு கொஞ்சும்...//

  தலையணை உறையின் ஓரங்களிலிருக்கும் நூல்குஞ்சத்தை வைத்து...:)!

  //இப்போ தம்பி என்ன பண்றாப்ல,//

  என் மருமகனுக்கு முழு நிலவிலிருக்கும் முயலைக் காட்டிக் கொண்டிருக்கிறாப்ல:)!

  ReplyDelete
 64. சசிகுமார் said...
  //நிலா மிக அழகு.//

  நன்றி சசிகுமார்!

  ReplyDelete
 65. தமிழ்மணம் இன்ட்லியில் வாக்களித்த நட்புகளுக்கு என் நன்றி:)!

  ReplyDelete
 66. அது ஒரு அழகிய கனாக் காலம்!//
  முழு நிலவாய் தகதகத்த பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

  ReplyDelete
 67. @ இராஜராஜேஸ்வரி,

  மிக்க நன்றி.

  ReplyDelete
 68. நிலா சோறு நினைவுகள் அருமை ராமலக்ஷ்மி.

  நிலா படங்கள், கூரைப்படியில் இருக்கும் நிலவுகள் அழகு.

  கூட்டாஞ்சோறு, கூழ்வத்தல் அருமையாக இருக்கும். கூடி சாப்பிட.

  ReplyDelete
 69. நிலவின் வழி மொழிந்த அந்த குளிர்ச்சியான நினைவுகள் மிகுந்த மகிழ்ச்சி அளிப்பவை. சித்ரா பௌர்ணமி அன்று கன்னியாகுமரியில் கதிரவனின் அஸ்தமனத்தையும் நிலவின் உதயத்தையும் ஒருங்கே கண்ட அந்த காட்சிகள் மனதை விட்டு நீங்காதவை. நயினார் நோன்பன்று வீட்டில் மதியம் சாப்பாட்டில் எல்லா வீட்டிலும் கீரைத்தொவரன் இருக்குமல்லவா...

  ReplyDelete
 70. நிலவுடன் நீங்கள் தந்த பௌர்ணமி விருந்து மிகுந்த சுவையானது.. நல்ல நேர்த்தியான நினைவுகளைத் தூண்டுமளவில் கருப்பு வெள்ளை புகைப்படங்கள்.

  ReplyDelete
 71. நிலவும் நினைவும் அசத்தல்.நீங்க ரொம்பவே அழகாயிருக்கீங்க !

  ReplyDelete
 72. ||துவைத்த பின்னரும் அதே வடிவில் உருட்டி சுருட்டி வைக்காவிட்டால் போச்சு||

  ஆஹா!

  அதென்ன போட்டொவுல தம்பியக் காணோம். நடுவில நீங்க இருக்கனும்னு 5 பேர் வர்ற போட்டோவ போட்டுட்டூங்களோ #டவுட்டு

  ReplyDelete
 73. வரவர ‘லேட் ரங்கம்மா’ ஆகிட்டு வர்றேன், பதிவுகளுக்குப் பின்னூட்டமிடுவதில்!!

  தட்டட்டி - தட்டூடு (தட்டு வீடு) என்று நாங்கள் சொல்வோம். மற்றபடி நிலாச்சோறு சாப்பிட்ட அனுபவமில்லை. நிலாவையும் ரசிக்கலாம் என்பதே கல்லூரிப் பருவங்களில்தான் தெரிய வந்த அளவுக்கு கலா ரசனை கொண்ட குடும்பமும்/ ஊரும். (அவர்கள் மீது தவறில்லை. வறுமை நிறைந்த ஊரில் ரசனை எங்கிருக்கும்?)

  இளமையில் இதெல்லாம் மிஸ் பண்ணிருக்கேன்னு நினைக்கும்போது கொஞ்சம் வருத்தமாருந்தாலும், இக்காலத்து சிறுவர்கள் அளவு மோசமில்லை. தாமிரபரணியாற்றில் போட்ட ஆட்டங்கள் போதும் காலத்துக்கும் அசைபோட!! ;-))))

  தன் விவரங்கள் மட்டுமே வெளிப்படும் தனி நிலவு படத்தைவிட, முகிலும், நிலவும் படம்தான் பிடித்திருக்கிறது எனக்கு!! ஜோடியா இருந்தாத்தான் நிலவும் அழகு போல!! ;-)))))))


  //மூக்குக்கு மூடி கொண்ட எவர்சில்வர் ஜக் //

  வாய்க்கு மட்டுமல்லாது, மூக்குக்கும் மூடி போட்ட சில்வர் ஜக் வேண்டும் என இத்தனை வருடங்களாகத் தேடிக் கொண்டிருக்கிறேன்(றோம்). கிடைக்க மாட்டேங்குது!!

  ReplyDelete
 74. //அண்ணன்மார் மேல்படிகளில், தங்கைமார் கீழ்படிகளில் நடுவிலே நான் என வயதுப்படி:)!//

  மேலே அண்ணன்மார், கீழே தங்கைமார் நடுவிலே பாதுகாப்புடன் அமைதியாக(மற்றப் படங்களில் பார்த்த சிறுவயது புன்னகை மிஸ்ஸிங்) தாங்கள் இருப்பதை படம் உணர்த்துகிறது:-)))))!

  நல்ல பகிர்வு.

  ReplyDelete
 75. கோமதி அரசு said...
  //நிலா சோறு நினைவுகள் அருமை ராமலக்ஷ்மி.

  நிலா படங்கள், கூரைப்படியில் இருக்கும் நிலவுகள் அழகு.

  கூட்டாஞ்சோறு, கூழ்வத்தல் அருமையாக இருக்கும். கூடி சாப்பிட.//

  மிக்க நன்றி கோமதிம்மா. அதிலும் என் அம்மா செய்யும் கூட்டாஞ்சோறு என் கல்லூரி தோழிகள் மத்தியிலும் பிரசித்தம். வீட்டுக்கு வந்து கற்றுச் செல்வார்கள் அப்போது.

  ReplyDelete
 76. குமரி எஸ். நீலகண்டன் said...
  //நிலவின் வழி மொழிந்த அந்த குளிர்ச்சியான நினைவுகள் மிகுந்த மகிழ்ச்சி அளிப்பவை. சித்ரா பௌர்ணமி அன்று கன்னியாகுமரியில் கதிரவனின் அஸ்தமனத்தையும் நிலவின் உதயத்தையும் ஒருங்கே கண்ட அந்த காட்சிகள் மனதை விட்டு நீங்காதவை.//

  பல முறை இந்த சந்தர்ப்பம் வாய்க்கப் பெற்றிருக்குமே உங்களுக்கு? மிக்க மகிழ்ச்சி!

  //நிலவுடன் நீங்கள் தந்த பௌர்ணமி விருந்து மிகுந்த சுவையானது.. நல்ல நேர்த்தியான நினைவுகளைத் தூண்டுமளவில் கருப்பு வெள்ளை புகைப்படங்கள்.//

  மிக்க நன்றி நீலகண்டன், பாராட்டுக்கும் தங்கள் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டமைக்கும்.

  ReplyDelete
 77. ஹேமா said...
  //நிலவும் நினைவும் அசத்தல்.நீங்க ரொம்பவே அழகாயிருக்கீங்க !//

  நன்றி ஹேமா:)!

  ReplyDelete
 78. ஈரோடு கதிர் said...
  //அதென்ன போட்டொவுல தம்பியக் காணோம். நடுவில நீங்க இருக்கனும்னு 5 பேர் வர்ற போட்டோவ போட்டுட்டூங்களோ #டவுட்டு//

  படத்தில் இருக்கும் கடைசிப் படியே ஐந்தடி உயரத்தில் ஆரம்பிக்கும். வயதில் ரொம்பச் சிறியவனாகையால் மொட்டைமாடிக்கு விளையாட வருவதற்கெல்லாம் அனுமதி கிடையாது அவனுக்கு:)!

  ReplyDelete
 79. ஹுஸைனம்மா said..

  // தாமிரபரணியாற்றில் போட்ட ஆட்டங்கள் போதும் காலத்துக்கும் அசைபோட!! ;-))))//
  ஆமாங்க, அடிக்கடி அதுவும் உண்டு. மறக்க முடியாத தண்ணீர் கரை.. இனிய நாட்கள்:)!

  //தன் விவரங்கள் மட்டுமே வெளிப்படும் தனி நிலவு படத்தைவிட, முகிலும், நிலவும் படம்தான் பிடித்திருக்கிறது எனக்கு!! ஜோடியா இருந்தாத்தான் நிலவும் அழகு போல!! ;-)))))))//

  ரொம்ப நன்றி. எனக்கும் ரொம்பப் பிடித்ததாலேயே பெர்ஃபெக்‌ஷன் பற்றி கவலைப்படாமல் பகிர்ந்து கொண்டு விட்டேன்:)!

  ***//மூக்குக்கு மூடி கொண்ட எவர்சில்வர் ஜக் //

  வாய்க்கு மட்டுமல்லாது, மூக்குக்கும் மூடி போட்ட சில்வர் ஜக் வேண்டும் என இத்தனை வருடங்களாகத் தேடிக் கொண்டிருக்கிறேன்(றோம்). கிடைக்க மாட்டேங்குது!!//***

  நானும் தேடிக் கொண்டே இருக்கிறேன். எங்கேனும் பார்த்தாலும் உங்களுக்கும் முத்துலெட்சுமிக்கும் வாங்கி வைக்கிறேன். விரிவான பகிர்வுக்கு நன்றி ஹுஸைனம்மா:)!

  ReplyDelete
 80. இதனை பார்த்தவுடன் நிலாவின் அழகை நான் புரிந்து கொண்டேன். புரியவைத்ததற்கு நன்றி. சூர்யா

  ReplyDelete
 81. @ Soorya,

  மகிழ்ச்சியும் நன்றியும் சூர்யா.

  ReplyDelete
 82. #4 flashback picture and related content was a good read :)

  ReplyDelete
 83. மறுபடியும் ரசித்தேன். முன்னால் நாம் என்ன கமெண்ட் கொடுத்திருக்கிறோம் என்று பார்ப்பதிலும் ஒரு சுவாரஸ்யம்.

  நீலகண்டன் ஸார் இப்போதெல்லாம் ப்ளாக் பக்கம் வருவதில்லை. அவ்வப்போது ஃபேஸ்புக்கில் பார்க்க முடிகிறது.

  சுவிஸ் ஹேமாவும் காணாமல் போய்விட்டார். இனிய கவிதைகளின் எஜமானி.

  ReplyDelete
 84. மூக்குக்கும் மூடி கொண்ட ஜக் என்னிடமும் ஒன்று இருக்கிறது.. மூக்கை இழந்த சூர்ப்பனகையாய்.

  என் முதல் பிறந்தநாளுக்குப் பரிசாக வந்த பொருள் என்பதால் இன்னும் அதைப் பொக்கிஷமாய் வைத்திருக்கிறேன் :-)

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin