வாலில்லா மனிதக் குரங்கு, சிம்பன்ஸி. சிம்பன்சிகள் மனிதர்களுடன் 98% டி.என்.ஏ (DNA) ஒற்றுமை பெற்றவை. மனிதர்களைப் போன்ற கை, கால், மற்றும் முக அமைப்பைக் கொண்டுள்ளது. இவை மனிதர்களை ஒத்திருந்தாலும்,உருவில் சற்று சிறியதாக இருக்கும். மனிதர்களைப் போல் நேராக நிற்க, பீடு நடை போட முடிவதில்லை. 3-4 அடி உயரம் கொண்டவை. எடை 40-70 கிலோ வரை இருக்கும்.
ஹோமினிடே (Hominidae) எனும் குடும்பத்தைச் சேர்ந்த சிம்பன்ஸிகளில் இரண்டு வகை உண்டு. சாதாரண (Common) சிம்பன்ஸி. இதன் உயிரியல் பெயர் : Pan troglodytes.
மற்றொரு வகை போனோபோ (Bonobo) சிம்பன்ஸி. இவை பிக்மி (Pygmy) சிம்பன்ஸி என்றும் அறியப்படுகிறது. இதன் உயிரியல் பெயர்: Pan paniscus
இங்கே நான் பகிர்ந்திருப்பவை போனோபோ சிம்பன்ஸியின் படங்கள். சாதாரண வகைக்கும் இவற்றுக்குமான வித்தியாசங்கள்:
சாதாரண சிம்பன்ஸிகளின் உடல் முழுக்க உரோமங்கள் இருந்தாலும் முகம் வெள்ளை அல்லது இளஞ்சிவப்பு நிறத்தில் உரோமங்கள் இல்லாமல் இருக்கும். வால் இருக்காது.
போனோபோ வகை சிம்பன்ஸிகளின் முகம் கருப்பாக இருக்கும். முகத்திலும் முடி அடர்ந்து காணப்படும். இளஞ்சிகப்பு நிற உதடுகளைக் கொண்டிருக்கும். பெரிய வால் என இல்லாவிடிலும் சிறு குஞ்சம் போன்ற வால் அமைப்பு இருக்கும்.
#2
இவ்விரு வகை சிம்பன்சிகளும் ஆப்பிரிக்காவின் தெற்கு, மேற்கு மற்றும் நடுப் பகுதிகளில், அடர்ந்த காடுகளிலும், புல்வெளிகளிலும் வாழ்கின்றன. குறிப்பாகக் காங்கோ ஆற்றுக்குக் கிழக்கில் அதிக அளவில் காணப்படுகின்றன.
சிம்பன்ஸிகள் 20-30 வரையிலான எண்ணிக்கையில குழுவாக வாழ்ந்து சமூக உறவுகளைப் பேணுகின்றன. ஒவ்வொரு குழுவுக்கும் வலுவான ஒரு ஆண் (alpha male) தலைமை தாங்கிச் செல்லும்.
மனிதர்களைப் போலவே மகிழ்ச்சி, கோபம், கவலை போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடியவை.
#3
#4
ஊனுண்ணியான சிம்பன்ஸிகள் பழங்கள், விதைகள், இலைகள், பூக்கள், தேனடை, பூச்சிகள் மற்றும் சில நேரங்களில் சிறிய கால்நடைகளையும் உணவாகக் கொள்கின்றன.
இயற்கைச் சூழலில் இவற்றின் ஆயுட்காலம் 30-40 ஆண்டுகள். பராமரிப்பில் உள்ள சிம்பன்ஸிகள் 50 ஆண்டுகள் வரை வாழும்.
அறிவாற்றல் மிக்கவை. விலங்கியல் பூங்காக்களிலும், ஆராய்ச்சி நிலையங்களிலும் பயிற்சி பெறக்கூடியவை. தங்களின் தேவைகளுக்காகக் கருவிகளைப் பயன்படுத்தும் திறன் பெற்றவை. இசைக் கருவிகளைக் கூட வாசிக்கப் பழக்க முடியும்.
வேட்டையாடுதல், நோய்கள் மற்றும் வனச் சூழல் அழிவினால் சிம்பன்சிகளின் எண்ணிக்கை வெகுவாகு குறைந்து வருகிறது. தற்போது அழிந்து வரும் இனங்களில் ஒன்றாகப் பார்க்கப் படுக்கிறது. இவற்றைப் பாதுகாக்க பல சர்வதேச அமைப்புகள் முயன்று வருகின்றன.
#5
[படங்கள் சமீபத்திய மைசூர் பயணத்தின் போது விலங்கியல் பூங்காவில் எடுத்தவை. கடைசிப் படம் மட்டும் 2012_ஆம் ஆண்டு பயணத்தில் எடுத்தது. சேமிப்பிலிருந்து தேடியெடுத்துப் பகிர்ந்துள்ளேன்.]
***
சுவாரஸ்யம். இவை சம்பந்தப்பட்ட படங்களும் சுவாரஸ்யமாக இருக்கும். இவை ஊனுண்ணி என்பது வியப்பு.
பதிலளிநீக்கு