1 ஏப்ரல் செவ்வாய் கிழமை, கவிதைகள் மாதத்தின் தொடக்கத்தைக் குறிக்கின்றது, அமெரிக்க தேசத்தில். புனித மாதமாக ஏப்ரல் மாதம் அனுசரிக்கப்பட ஆரம்பித்தது 1996_ஆம் ஆண்டில். அமெரிக்க கவிஞர்கள் கழகம், பதிப்பாளர்கள் மற்றும் கவிதை நேசர்களைக் ஒன்று கூட்டி இதை முன்னெடுத்தனர். அதன் துவக்கமாக அப்போது ஒரு இலட்சம் கவிதைப் புத்தகங்களை நூலகங்கள், பள்ளிகள் மற்றும் புத்தகக் கடைகளுக்கு வழங்கினார்கள்.
கவிதைகள் மாதத்தில், கவிதைகள் குறித்து கவிஞர்களும் எழுத்தாளர்களும் சொல்லிச் சென்றவை, நமக்கு கவிதை மேலான நேசத்தை மேலும் பலப்படுத்தும், கவிதைகள் ஒரு எழுத்து வகை என்பதைத் தாண்டி, கவிதைகள் ஒரு அனுபவம், ஒரு உணர்வு, மொழிகளைக் கடந்த ஒரு உண்மை என்பதை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தும் எனக் கருதி, 27 கவிஞர்களின் கூற்றுகள்:
டி. எஸ். எலியட் [T.S. Eliot] :
“உண்மையான கவிதை புரிந்து கொள்ளப்படும் முன்னரே சொல்ல வந்ததைச் சொல்லி விடும்.”
“முதிர்ச்சியற்ற கவிஞர்கள் மற்றவர்களைப் பின்பற்றுவார்கள்; முதிர்ச்சியுள்ள கவிஞர்கள் நம்மைக் களவாடி விடுவார்கள்.”
“உணர்ச்சிகளைத் தளர விடுவதன்று கவிதை, உணர்ச்சிகளிலிருந்து தப்பிப்பது; ஆளுமையின் வெளிப்பாடு அல்ல, ஆளுமையிடமிருந்து தப்பிப்பது.
ஆனால், நிச்சயமாக, ஆளுமையும் உணர்வுகளையும் கொண்டவர்களுக்கு மட்டுமே தெரியும் அவற்றிலிருந்து தப்பிக்க விரும்புவது எவ்வளவு முக்கியம் என்பது.”எமிலி டிக்கன்ஸன் [Emily Dickinson] :
“நான் ஒரு புத்தகத்தை வாசிப்பேனேயானால், அது என் முழு உடலையும் எந்த நெருப்பும் வெதுவெதுப்பாக்க முடியாத அளவுக்கு உறைய வைக்குமேயானால், எனக்குத் தெரியும் அதுதான் கவிதை. நான் உடல்ரீதியாக என் தலையின் மேற்பகுதி பறிபோனதாக உணர்வேனேயானால், எனக்குத் தெரியும் அதுதான் கவிதை. இவையே எனக்குத் தெரிந்த ஒரே வழி. வேறேதும் வழி உள்ளதா என்ன?”
மேத்யூ ஆர்னால்ட் [Matthew Arnold] :
“அடிப்படையில் கவிதை என்பது வாழ்க்கையை விமர்சிப்பது; ஒரு கவிஞனின் மேன்மையானது அவன் எவ்வளவு சக்தியுடனும் அழகுடனும் தன் கருத்துகளை வாழ்வுடன் இணைக்கிறான்,‘எப்படி வாழ்வது’ எனும் கேள்விக்கு விடையாக.”
ஹென்றி டேவிட் தூரோ [Henry David Thoreau] :
“அறிஞரின் சூழலில் நின்று கவிதையை சுவாசிக்க இயலாது.”
“நல்ல கவிதை மிக எளிமையாகவும் இயற்கையாகவும் தோற்றமளிக்கும், நாம் அதை சந்திக்கையில் எல்லா மனிதர்களும் எப்போதும் கவிஞர்களாய் இருப்பதில்லை என்பது ஆச்சரியம் அளிக்கும். கவிதை என்பது ஆரோக்கியமான பேச்சு என்பதைத் தவிர வேறொன்றுமில்லை.”
வில்லியம் வொர்ட்ஸ்வொர்த் [William Wordsworth] :
“கவிதை என்பது சக்திமிகு உணர்வுகளின் தங்குதடையற்ற வெளிப்பாடு; அமைதியில் நினைவு கூர்ந்திடும் உணர்வுகளிடமிருந்து ஆரம்பமாவது.”
ராபர்ட் ஃபுரொஸ்ட் [Robert Frost] :
“ஒரு கவிதை தொண்டையில் ஒரு அடைப்புடன் தொடங்குகிறது, அது வீட்டு நினைவால் ஏற்படும் ஏக்கம் அல்லது காதலினால் ஏற்படும் வலி. அது ஒரு வெளிப்பாட்டை நோக்கி விரையும் முயற்சி; ஒரு நிறைவை அடையும் முயற்சி. உணர்வு தன் சிந்தனையை கண்டடையும் போது, அந்த சிந்தனை சொற்களைக் கண்டடையும் போது உருவாகுவதே ஒரு முழுமையான கவிதை.”
“புதுக்கவிதை எழுதுவதென்பது வலையைக் கீழிறக்கி டென்னிஸ் விளையாடுவது போன்றது.”
பெர்சி பைஷே ஷெல்லி [Percy Bysshe Shelley] :
“கவிதை என்பது மிகச் சிறந்த மற்றும் மகிழ்ச்சியான மனங்களின் மிகச் சிறந்த மற்றும் மகிழ்ச்சியான தருணங்களின் பதிவாகும்.”
கலீல் ஜிப்ரான் [Kahlil Gibran] :
“கவிதை என்பது மகிழ்ச்சி, வலி மற்றும் ஆச்சரியம் ஆகியவற்றுடனான ஒரு ஒப்பந்தம், கூடவே ஒரு கோடு அகராதியும் சேர்ந்தது.”
வில்லியம் ஹாஸ்லிட் [William Hazlitt] :
“கவிதை என்பது கற்பனை மற்றும் உணர்ச்சிகளின் மொழி.”
தாமஸ் ஹார்டி [Thomas Hardy] :
“கவிதை என்பது உணர்வுகளை அளந்து வைப்பது.”
எடித் சிட்வெல் [Edith Sitwell] :
“கவிதை என்பது யதார்த்தத்தை தெய்வீகமாக்குவது”.
சார்ல்ஸ் போதலேர் [Charles Baudelair] :
“எப்போதும் கவிஞராக இருங்கள், உரைநடையிலும்.”
சிமோனைட்ஸ் [Simonides] :
“ஓவியம் என்பது ஒரு மௌனக் கவிதை, கவிதை என்பது பேசும் திறன் வாய்ந்த ஓர் ஓவியம்.”
பைரன் பிரபு [Lord Byron] :
“கவிதை என்பது கற்பனையின் எரிமலைக் குழம்பு, நிலநடுக்கத்தைத் தடுக்கின்றது அதன் வெடிப்பு.”
ரிச்சர்ட் ஹியூகோ [Richard Hugo] :
“நீங்கள் காதல் வயப்பட்டிருக்கையில் காதல் கவிதைகளை எழுதாதீர்கள். நீங்கள் காதல் வயப்படாத போது அவற்றை எழுதுங்கள்.”
ஆஸ்கார் வைல்ட் [Oscar Wilde] :
“மோசமான கவிதைகள் உண்மையான உணர்வுகளிலிருந்து மலருபவை.”
மரியான் மூர் [Marianne Moore] :
“கவிதைகள் என்பது, உண்மையான தேரைகளைக் கொண்டு கற்பனைத் தோட்டங்களை உருவாக்கும் கலை.”
ஆடன் [W. H. Auden] :
“ஒரு கவிஞரானவர், மற்ற எதற்கும் முன்னதாக, மொழியை நேசிக்கும் மனிதர்.”
பிளேட்டோ [Plato]
“சரித்திரத்தை விடவும் முக்கியமான உண்மைக்கு அருகாமையில் வருவது கவிதைகள்.”
சல்மான் ருஷ்டி [Salman Rushdie] :
“ஒரு கவிஞரின் பணியானது பெயரிட முடியாதவற்றிற்குப் பெயரிடுவது, மோசடிகளைச் சுட்டிக் காட்டுவது, பக்கம் எடுப்பது, தர்க்கங்களைத் தொடங்குவது, உலகத்தை வடிவமைப்பது, மற்றும் அது உறங்கிப் போகாமல் தடுப்பது.”
கார்ல் சான்ட்பர்க் [Carl Sandburg]
“கவிதை என்பது நிலத்தில் வாழ்கிற, ஆகாயத்தில் பறக்க விரும்புகிற கடல்வாழ் விலங்கின் நாட்குறிப்பு. கவிதை என்பது அறியப்படாத, அறிந்து கொள்ள இயலாத தடைகளை தகர்க்கக் கூடிய சொற்களுக்கான தேடல். கவிதை என்பது வானவில்கள் எப்படி உருவாகின்றன, ஏன் அவை மறைந்து போகின்றன என சொல்கின்ற, மாயாவியைப் போன்ற ஒரு எழுத்து.”
“கவிதை என்பது நிழலை நடனமாடக் கேட்கும், ஒரு எதிரொலி”
சாமுவேல் டெய்லர் கோல்ரிட்ஜ் [Samuel Taylor Coleridge] :
“கவிதை நிச்சயமாக நல்லுணர்வை விடவும் மேலானது, ஆனால் அது அனைத்து சந்தர்ப்பங்களிலும் நல்லுணர்வாக இருக்க வேண்டும். ஒரு மாளிகை எப்படி ஒரு வீட்டினை விட மேலானதோ அது போன்று, ஆனால் குறைந்த பட்சம் அது ஒரு வீடாக இருக்க வேண்டியது அவசியம்.”
அருந்ததி சுப்ரமணியம் [Arundhathi Subramaniam] :
“மொழியானது உயர்ந்த வெப்பத்திற்கும் அழுத்தத்திற்கும் உட்படுத்தப்படுகையில் அந்த மின்னழுத்தத்தில் மேலும் செறிவுடையதாக வளர்கின்றது; அதன் வேதியியல் மாறுகின்றது. கவிதை இத்தனை மர்மமான வடிவமாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம் ஆகிறது. மேலும் இது இடைநிறுத்தங்களை மிகக் கவனமாகப் பயன்படுத்தும் ஒரு சொற்கலை வடிவம், தனது இசை மற்றும் பொருளுக்காக மட்டுமின்றி மௌனத்திற்கான ஒரு அழைப்பாகவும் உள்ளது.
கவிதை, விவாத தர்க்கம் அல்லது நியாயமான நேரியல் வாதம் ஆகியவற்றின் மூலமாக வேலை செய்யாது. இது ஒரு கடுமையான வடிவம், ஆனால் இதன் தர்க்கம் அடிப்படையில் இரவுநேரமாகும். அதன் தந்திரம் ஆழமாக ஓடும்; உங்கள் இரத்த ஓட்டத்தில் ஊடுருவி, நீங்கள் அறியாமலே உங்களை மாற்றி விடும்.”
Basho [பஷோ] :
“நூறு எலும்புகளாலும், ஒன்பது திறப்புகளாலும் ஆன இந்த மோசமான உடலில், மனநிலை என அழைக்கப்படும் ஒன்று உள்ளது, சிறிய காற்றுக்கும் அந்தப் பக்கமும் இந்தப் பக்கமுமாக அலைக்கழியும் உறுதியற்றத் திரைச்சீலை. அப்படியான ஒரு மனநிலை, என்னைக் கவிதைக்குள் அழைத்து வந்தது, பொழுது போக்குக்குச் சற்றே மேலாக, பிறகு என் வாழ்வின் முழுநேரத் தொழிலாக. பல நேரங்களில், அந்த எனது மனநிலை, இலக்கை விட்டுக் கொடுத்து சோர்வுற்றிருக்கிறது, வேறு சில நேரங்களில் பெருமையுற்று, வெற்றி பெற்றிருக்கிறது. ஆக, ஆரம்பத்திலிருந்தே அது தன்னுள் அமைதியைக் கண்டுபிடிக்காமல், எப்போதும் அது உருவாக்குபவற்றின் தகுதியைச் சந்தேகித்தபடி இருந்திருக்கின்றது.”
டியா அஜுலே [Tia Azulay] :
“கவிதை என்பது கவிஞரின் ஆன்மாவை ஒரு கணம் தாக்கும் உணர்வெனும் இசைத் தந்தியைப் பிடித்து, அதன் இசை வாசகரின் ஆன்மாவிடத்தில் ஒலிக்கச் செய்யும் முயற்சி.”
டிலான் தாமஸ் [Dylan Thomas] :
“ஒரு நல்ல கவிதை என்பது யதார்த்தத்திற்கு ஒரு பங்களிப்பு. ஒரு நல்ல கவிதை சேர்க்கப்பட்டவுடன் உலகம் ஒருபோதும் முன் போல் இருப்பதில்லை. ஒரு நல்ல கவிதை பிரபஞ்சத்தின் வடிவத்தை மாற்ற உதவுகிறது, மற்றும் ஒவ்வொருவரும் தன்னைப் பற்றியும் தன்னைச் சுற்றியுள்ள உலகத்தைப் பற்றியுமான அறிவை விரிவாக்கிக் கொள்ள உதவுகிறது.”
ஏ.ஏ. மில்னே [A.A. Milne]:
“கவிதைகள் மற்றும் பாடல்கள் நீங்கள் பெறுகின்ற விஷயங்கள் அல்ல, அவை உங்களைப் பெறுகின்ற விஷயங்கள். நீங்கள் செய்யக் கூடியதெல்லாம் அவை உங்களைக் கண்டு பிடிக்கக் கூடிய இடத்திற்குச் செல்வது மட்டுமே.”
*
தமிழாக்கம்: ராமலக்ஷ்மி
*
13 ஏப்ரல் 2025, சொல்வனம் இதழில்..,
***
அருமை. எப்படி ஒரு தொகுப்பாகத் தொகுத்தீர்கள்? ஒவ்வொன்றும் ஓரொரு கருத்தை முன்வைக்கிறது. சில, சில பொதுவான பழமொழிகளை நினைவு படுத்துகிறது!
பதிலளிநீக்குஇணையத்தில் பல தளங்களில் சேகரித்தவை. ஆம், தொகுக்க அதிக நேரம் ஆனது. தேடி தேர்வு செய்யவும், பின்னர் மொழிபெயர்க்கவும். நன்றி ஸ்ரீராம்.
பதிலளிநீக்குஅழகான தொகுப்பு. உங்கள் உழைப்பும் தெரிகிறது. ஏனென்றால் இணையத்தில் தேடி எடுப்பதற்கே நேரம் எடுக்கும் அதைவிட மொழி பெயர்ப்பு.
பதிலளிநீக்குகவிதை பற்றி ஒவ்வொருவரின் கருத்தும் நன்றாக உள்ளது. வேர்ட்ஸ் வொர்த்தின் கருத்தை வாசிக்கறப்ப அட! இது நல்லாருக்கு இது ரொம்பவே நல்லாருக்கு பிடிச்சிருக்கு என்று அடுத்ததை வாசிக்கப் போகும் போது அட! இதுவும் பிடிக்குதே...என்று முழுவதுமே பிடித்துவிட்டது.
கீதா
நன்றி கீதா.
நீக்கு