உயிரியல் பூங்காக்களைப் போலவே பறவைப் பண்ணைகளும் பறவைகளைப் பாதுகாப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றன. குறிப்பாக அழிந்து வரும் அரிய இனங்கள் பெருகி வளர வழிவகுக்கின்றன. இந்தியாவின் மிகப் பெரிய பறவைப் பண்ணைகளுள் ஒன்றாகத் திகழ்கிறது கராஞ்சி ஏரி இயற்கைப் பூங்கா. இருவாச்சி, கிளிகள், கருப்பு அன்னப் பறவைகள் உட்பட்டப் பல வகைப் பறவைகளின் புகலிடமாக உள்ளது. முக்கியமாக மயில்கள்.
#2
இந்தப் பூங்காவுக்கு செல்வது மூன்றாவது முறை. கடந்த முறை சென்று வந்து படங்களை 3 பதிவுகளாகப் பகிர்ந்திருந்தேன். அவற்றின் இணைப்புகள் பதிவின் இறுதியில் உள்ளன.
உள்ளே நுழையும் போது இரு வரிசையிலும் இருந்த பாக்கு மரங்கள் முன்னை விடவும் நன்கு வளர்ந்து வானை முட்டி நின்று வரவேற்றன.
#3
இருபது மீட்டர் உயரம், அறுபதுக்கு நாற்பது மீட்டர் பரப்பளவு கொண்ட பெரிய கூண்டுக்குள் பறவைகளை மிக அருகில் சென்று பார்க்கும் வசதி கொண்ட பண்ணை. இந்த அடைப்பினுள் சுமார் 10-12 எண்ணிக்கைகளில்தாம் மயில்கள் உள்ளன. பெரும்பாலும் ஆண்மயில்கள். ஆனால் மக்கள் வெளியில் நின்று பார்க்கும்படி அமைக்கப்பட்ட இதைவிடவும் பன்படங்கு பரந்த கூண்டு வெளியில் நூற்றுக்கும் மேலான மயில்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
சென்ற முறை தோகை விரித்தாடி பல மயில்கள் என் கேமராவுக்கு விருந்து அளித்தன. இந்த முறை அந்த வாய்ப்புக் கிட்டவில்லை. யாரையும் கண்டு கொள்ளாமல் நடை போட்டாலும் pose கொடுப்பதில் குறை வைக்கவில்லை:)!
#4
நீல மயில் [Pavo cristatus] இந்தியா, இலங்கை மற்றும் தென் ஆசிய நாடுகளில் அதிகம் காணப்படுகின்றன. இந்தியத் துணைக்கண்டத்தைப் பூர்வீகமாகக் கொண்டதால் இந்திய மயில் என்றும் அறியப்படுகிறது. இந்தியாவின் தேசியப் பறவையுமாகும். Phasianidae எனப்படும் கோழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை.
#5
மயில்கள் ஈருருவத் தோற்றம் (பால் ஈருருமை) கொண்டவை. பறவை இனத்தில் உருவத்தில் பெரியவை மற்றும் கனமானவை. இவற்றின் எடை இரண்டரை முதல் நான்கு கிலோ வரை இருக்கும். அலகிலிருந்து வால் நுனி வரையிலும் 40 முதல் 46 அங்குல நீளம் கொண்டவை. நன்கு முதிர்ந்து வளர்ந்த பறவைகள் 78 முதல் 90 அங்குல நீளத்திலும் காணப்படுகின்றன. இவற்றின் ஆயுட்காலம் 15 முதல் 20 ஆண்டுகள்.
#6
ஆண் மயில்கள் பெரிய தோகைகளை கொண்டிருக்கும்.
#7
பெண் மயில்களுக்குப் பெரிய தோகைகள் கிடையாது. அவை பெரும்பாலும் வெள்ளை நிற முகம், பச்சை நிறக் கீழ் கழுத்து, மற்றும் பழுப்பு அல்லது சாம்பல் நிற இறகுகளைக் கொண்டிருக்கும்.
கனமான பெரிய தோகைகளைக் கொண்டிருந்தாலும் மயில்கள் பறக்கும் திறன் கொண்டவை. திறந்த காடுகளில், வயல்வெளிகளில் காணப்படுகின்றன.
பெங்களூரில் நான் வழக்கமாக நடைப் பயிற்சி செல்லும் தென்னந்தோப்பில் சுமார் பத்துக்கும் மேலான பெண்மயில்களும் ஓரிரு ஆண் மயில்களும் நிரந்தமாக வசிக்கின்றன. இவை மாலை நேரங்களில் கூட்டமாக ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குப் பறந்து சென்று அமர்ந்து பூச்சிகளைத் தேடி உண்டபடி இருப்பது நான் அடிக்கடி பார்க்கும் காட்சி.
#8
மயில்கள் Polygamous எனப்படுகிற பலதார மண முறையைப் பின்பற்றுகின்றன. அதாவது ஒரு ஆண் மயில் பல பெண் மயில்களுடன் இணை சேரும். ஆண் மயில்கள் (Peacocks) தமது நீண்ட, வண்ண மயமான இறகுகளை விரித்து ஆடி பெண் மயில்களின் (Peahens) கவனத்தை ஈர்க்க முயன்றிடும். விரிந்த தோகையின் அழகிய வடிவம், மென்மையான நடன இயக்கங்கள், ஒய்யார நடை மற்றும் அவை எழுப்பும் சிறப்பு ஒலிகள் பெண் மயில்களைக் கவரும்.
#9
மயில்கள் பழங்கள், தானியங்கள் போன்றவற்றை உண்கின்றன ஆயினும், இவை பாம்புகள், எலிகள், பல்லிகள் மற்றும் சிறிய கொறித்துண்ணிகளை வேட்டையாடி உண்கின்றன. மயில்களின் அகவல் இந்த சிறு உயிரினங்களைக் கண்டறிய உதவுகின்றன. வனங்களில் இவற்றின் அகவல் புலி, சிங்கம், சிறுத்தை, வேங்கை போன்ற வேட்டையாடும் விலங்குகள் இருப்பதை மற்ற சிறு விலங்குகளுக்கு எச்சரிக்கை செய்வதற்காகவும் பயனாகின்றன.
வெள்ளை நிற மயில்கள் பெரும்பாலும் உயிரியல் பூங்காக்களில் மட்டுமே பரவலாகக் காணப்படுவதற்குக் காரணம் உள்ளது. இவை மனிதனால் தேர்ந்தெடுக்கப்பட்ட இனப்பெருக்க முறை மூலமாக உருவாக்கப்பட்ட வெள்ளை நிறத் திரிபுகள்.
#11
எந்த ஒரு பறவை இனமும் பாதுகாக்கப்பட்டால், சுற்றுச்சூழல் சமநிலையும் பாதுகாக்கப்படும். அதற்கு மயில் இனம் விதிவிலக்கன்று.
**
மேலும் சில பறவைகளின் படங்களுடன், கராஞ்சி ஏரி இயற்கைப் பூங்கா - பாகம் 2 வரும்.
**
*இணையத்தில் சேகரித்துத் தமிழாக்கம் செய்யப்பட்டத் தகவல்கள்.
*பறவை பார்ப்போம் - பாகம்: 119
**
அருமை அருமை படங்கள் அருமை .இயறகையை ரசிப்பது எப்பொதுமே ஆலாதியானது .ப்கிர்வுக்கு நன்றி
பதிலளிநீக்கு