வெள்ளி, 13 ஜூன், 2025

காலத்தைக் கடந்த கோட்டை – கோல்கொண்டா ( i ) - ஹைதராபாத் (4)

 கோல்கொண்டா கோட்டை:

#1


#2

கோல்கொண்டா கோட்டை, தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத் நகரத்திற்கு மேற்கே 11கி.மீ. தொலைவில் உள்ள ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்கக் கோட்டை. உலகில் முதல்முதலாக வைரங்கள் கண்டெடுக்கப்பட்ட பகுதி கோல்கொண்டா என்பது கவனத்திற்குரியது.

#3

பண்டைய காஹாத்திய ராச்சியத்தின் (கி.பி. 1364–1512) தலைநகராக இருந்தது கோல்கொண்டா. இராணி ருத்ரமாதேவியின் ஆட்சி காலத்தில் இந்த பிரமாண்டமான கோல்கோண்டா கோட்டை கட்டப்பட்டது.

பின்னர் வடக்கில் முகலாயர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து தற்காத்துக் கொள்வதற்காகத் தங்களது முதலாம் தலைநகரான கோல்கொண்டாவில் காஹாத்திய அரசர்கள் இக்கோட்டையை மீண்டும் கட்டியெழுப்பினர். அதன் பின்னர் 16_ஆம் நூற்றாண்டில் குதுப் ஷாஹி எனும் மன்னரால் ஆக்ரமிக்கப்பட்டு கோட்டை விரிவாக்கப்பட்டது. 1687_ ஆம் ஆண்டில்  ஔரங்கசீப் தலைமையிலான முகலாயப் படைகள் இந்தக் கோட்டையை முற்றுகையிட்டு கைப்பற்றினர்.  போரில் தோல்வியுற்று வீழ்ந்த பிறகு தகுந்த பராமரிப்பு இன்றி கோட்டை சிதையத் துவங்கி விட்டது.

#4


#5

கோல்லா கொண்டா” என்கிற பெயரில் இருந்துதான் “கோல்கொண்டா”  எனும் பெயர் இக்கோட்டைக்கு வந்ததாகக் கூறப்படுகிறது. இதன் பொருள் “மேய்ப்பர் மலை” என்பதாகும். ஆடு மேய்க்கும் சிறுவன் ஒருவன் மலையில் சிலை வடிவ இறைவனைக் கண்டதாக நம்பப்படுகிறது. இதைத் தொடர்ந்தே அந்த இடத்தைச் சுற்றி அப்போது ஆட்சியில் இருந்த காஹாத்திய வம்ச அரசர் இக்கோட்டையை எழுப்பினார் என சொல்லப்படுகிறது.

கோல்கொண்டா செல்வம் கொழிக்கும் வைர வியாபாரத்தின் சந்தை நகரமாக இருந்தது. இப்பகுதியிலுள்ள சுரங்கங்களில் மட்டுமே வைரங்கள் காணப்பட்டதை ஐரோப்பியர்கள் அறிந்திருந்தனர். புகழ்பெற்ற வைரங்களான கோஹினூர் மற்றும் ஹோப் வைரம் போன்றவை இங்கு வெட்டப்பட்டு பாதுகாப்பட்டிருந்தன.

#6

ந்த நகரமும் கோட்டையும் 120 மீட்டர் (400 அடி) உயரமுள்ள ஒரு கிரானைட் மலையின் மீது கட்டப்பட்டுள்ளன. சுற்றிலும் பெரிய பெரிய பாதுகாப்பு மாடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 87 அரை வட்டக் கொத்தளங்களுடன் பத்து கி.மீ.  நீள வெளிச் சுவர் கொண்ட நான்கு தனித்தனி கோட்டைகள் உள்ளன. கொத்தளங்கள் சிலவற்றில் இன்னும் பீரங்கிகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. கோட்டையில் எட்டு நுழைவாயில்கள், ஏராளமான அரண்மனைக் குடியிருப்புகள், அரங்குகள், கோவில்கள், மசூதிகள் ஆகியவை உள்ளன. 

தே தர்வாசா:

#7

இவற்றில் மிகக் குறைந்த உயரத்தில் இருப்பது தற்போது நுழைவாயிலாக இருக்கும் “வெற்றி நுழைவாயில்” ஆகும். கோட்டையை வென்ற ஒளரங்கசீப் ராணுவத்தின் வெற்றிப் படை இந்த வாயில் வழியாக நுழைந்ததால் அதற்கு “பதே தர்வாசா” எனும் பெயர் வழங்கப்படுகிறது.

#8

[மேலே மற்றும் கீழே உள்ள படங்கள் நுழைவாயிலின் உள்ளிருந்து வெளிநோக்கி எடுக்கப்பட்டவை.]

#9

நுழைவாயிலின் தென்கிழக்கு மூலை அருகே பெரும் இரும்புக் கூர்முனைகள் பதிக்கப்பட்டிருக்கும். யானைகள் வாயில் கதவை மோதி வீழ்த்தாமல் தடுக்கும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அது மட்டுமின்றி கதவின் மேல்பாகத்திலுள்ள மாடத்திலிருந்து வீரர்கள் சூடான எண்ணெயை யானைகள் மேல் ஊற்றுவார்கள் என அங்கிருந்த வழிகாட்டி காண்பித்தார். 

#10

பாவம். போர்களில் சிப்பாய்கள் மட்டுமின்றி குதிரைகள், யானைகள் ஆகிய விலங்குகளும் அனுபவித்த துன்பங்கள் அதிகம்.

காஹாத்திய மன்னர்களின் பொறியியல் சிறப்பை எடுத்து இயம்புவதாக உள்ளது இக்கோட்டை. குறிப்பாக ஆச்சரியப்படுத்தும் ஓர் ஒலியமைப்பு. வெற்றி நுழைவாயிலைக் கடந்து உள்ளே சென்றதும் கீழ் காணும் உயர்ந்த கூரையைக் கொண்ட கோபுர அரங்கை அடைகிறோம்:

#11

கோபுர மையத்தின் நேர் கீழே அதாவது ஒரு குறிப்பிட்ட புள்ளிக்கு கீழே நின்று கை தட்டினால், அது சுமார் ஒரு கி.மீ. தூரத்தில் இருக்கும் ‘பால ஹிசார்’ எனும் விதானத்தில் தெளிவாய் ஒலிக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது. 

#12

தாக்குதல் சமயங்களில் அரசர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் அமைப்பாக இது செயல்பட்டிருக்கிறது. சுற்றுலா வந்த பலரையும் அங்கிருந்த வழிகாட்டி கோபுரத்தின் கீழே கைதட்ட வைத்து, அங்கேயே கேட்கும் எதிரொலியைக் கவனிக்க வைத்தபடி இருந்தார்.

#13

கோட்டைக்குள் இருக்கும் ஆலைகள், நீர் வழங்கும் அமைப்பு, பிரபலமான ‘ரபான்’ பீரங்கி, அரச சபை அரங்கில் தொடங்கி மலை அடிவார அரண்மனை ஒன்றுக்கு இட்டுச் செல்லும் சுரங்கப்பாதை ஆகியவை குறிப்பிடத் தக்க சிறப்புகள்.

ந்தக் கோட்டை வளாகம் மற்றும் அதன் சுற்றுப்புறம் அனைத்தும் சுமார் 11 கி.மீ. பரப்பளவுக்கு விரிந்து பரந்து இருப்பதால் அதன் அனைத்து பகுதிகளையும் காண்பது என்பது சுலபமானதல்ல. நானும் முதலில் கோட்டையைப் படத்தில் பார்த்து விட்டு நம்மால் எங்கே ஏறமுடியப் போகிறது என்றே நினைத்தேன்:). ஆனால் நல்லவேளையாக எதற்கும் சென்று பார்க்கலாம் என முடிவெடுத்தது நல்லதாயிற்று. மேலே ஏறும் அவசியமின்றி சுற்றி வந்தாலே பல இடங்களைப் பார்த்து விட முடிகிறது.

#14

[இடிந்த கோட்டை மேல் நின்று
தமது எதிர்காலக் கோட்டையைக் 
கனவு காணும் ஜோடி]

#15

வரலாற்றின் சட்டத்துக்குள்...
தனிமையில் ஆழ்ந்து...
[படம் 2_ல் இரண்டாவதாக அமர்ந்திருக்கும் நபரையே 
நான் மறுபக்கத்திலிருந்து படமாக்கியுள்ளேன்.]

வருகிற யாவருமே தங்களால் நடக்க முடிந்த அளவுக்கு வாசல்கள், தளங்கள், நுழைவாயில்கள், பதுங்கும் கட்டிடங்கள் மற்றும் கோபுரங்களைக் கண்டு ரசிக்கிறார்கள். வெகு சிலர் மட்டுமே கோட்டையின் உச்சி வரை சென்று அரசியின் மாளிகை, அங்கிருக்கும் காளி கோயில் போன்றவற்றைப் பார்த்து வருகிறார்கள். அங்கிருந்து ஹைதராபாத் நகரத்தைப் பார்ப்பது அற்புதமான அனுபவம் என்கிறார்கள்.

சிதைந்த நிலையிலும் வலுவான கட்டமைப்பு, அதிசயிக்க வைக்கும் ஒலிப் பிரதிபலிப்பு, சிறப்பான பாதுகாப்பு அமைப்பு மற்றும் ரகசிய வழிகள் போன்றவற்றிற்கு பெயர் பெற்று விளங்கும் இக்கோட்டை இந்திய தொல்லியல் துறை பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

#16

[மேலிருக்கும் படத்தின் சிறிய வாசல் வழியே நுழைந்துதான் கீழிருக்கும் பாதுகாப்புப் பாதைக்குள் செல்ல வேண்டும்.]

#17

#18


*

[மேலும் படங்கள் மற்றுமோர் பதிவாக வரும்.]

*

[விக்கிப்பீடியா தளம் உட்பட இணையத்தில் சேகரித்துத் தமிழாக்கம் செய்த தகவல்கள்.]

*

10 கருத்துகள்:

  1. கோல்கொண்டா கோட்டை படங்கள் விவரங்கள் அருமை.
    வெற்றி நுழைவாயில் அழகு.பாதுகாப்பு பாதை படங்கள், வரலாற்று சட்டத்துக்குள் படமும் அருமை.

    சுரங்க பாதையும் கோட்டையின் படங்களும் கற்பனையாக பழைய காலத்தை எண்ணிப்பார்க்க வைக்கிறது.

    பதிலளிநீக்கு
  2. கோல்கொண்டா - குச்சியைக் கொண்டா என்பது போல்....

    கோட்டை பற்றிய தகவல்கள் எல்லாமே சுவாரசியம். எல்லாப் படங்களையும் ரசித்துப் பார்த்தேன். படங்கள் எல்லாமே அழகு. எடுத்த விதமும்.

    இந்தக் கோட்டைக்குள் அப்போது ஆண்டவர்கள் மக்கள் எல்லாம் எப்படி இருந்திருப்பார்கள் வலம் வந்திருப்பார்கள் என்று கற்பனை ஓடியது.

    உள்ளேயே கோயில்கள் மசூதிகள் ...அதனால்தான் 11 கிமீ ...இது அரசர்கள் மட்டும் இருந்த பகுதியா இல்லை இந்தக் கோட்டைக்குள் மக்களும் வசித்திருப்பாங்க இல்லையா?

    எனக்குத் திருவனந்தபுரம் கோட்டைப் பகுதி நினைவுக்கு வந்தது. இப்பவும் கோட்டை என்றுதானே சொல்லப்படுகிறது. கோட்டைக்குள் குடியிருக்கும் பகுதிகள்தானே இப்போது. கடைகள் என்று பல வந்து கோட்டை மதிகளும் உள்ளே ஒரு சில பழைய கட்டிடங்களும், குறிப்பாகப் பத்மநாபசுவாமி கோவிலும் கிழக்கே கோட்டை (கிழக்கு வாயில்) தெக்கே கோட்டை, மேற்குக் கோட்டை (படிஞார) என்று வாயில்கள் இருந்தாலும் உள்ளே எல்லாமே நவீனமாகிவிட்டன

    ஆனால் கோல்கொண்டா கோட்டை சில சிதைவுகள் இருந்தாலும் கோட்டை அப்படியேதான் இருக்கின்றது போலும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அரசர்களும், பாதுகாவலர்கள் மற்றும் பணியாளர்களுமே கோட்டைக்குள் வசித்திருக்கிறார்கள். பொதுமக்கள் கோட்டையைச் சுற்றியே வாழ்ந்திருக்கிறார்கள்.

      நீக்கு
  3. படம் 10 ல் பையன் கையை முறுக்கிக் கொண்டிருக்கிறார்!!

    16, 17 செமையா இருக்கு சின்ன வாசல் வழி பாதுகாப்புப் பாதைக்குச் செல்வது...

    இங்கு கை தட்டினால் 1 கிமீ தூரத்தில் கேட்கும் படி அமைப்பு உண்மையாகவே காஹாத்திய மன்னர்களின் பொறியியல் சிறப்பைப் பறைசாற்றினாலும்,

    யானைகளின் மீது சூடான எண்ணையைக் கொட்டுவது என்பது கொடூரம்.
    போர்களில் யானைகளும் குதிரைகளும், விலங்குகளும் பட்ட கஷ்டங்கள் நிறைய.

    இப்போது கோவில்களிலும் யானைகள் கஷ்டப்படுகின்றனதான்.

    விவரங்கள் நிறைய தெரிந்து கொள்ள முடிந்தது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படம் 10 - நானும் கவனித்தேன்:). கருத்துகளுக்கு நன்றி கீதா.

      நீக்கு
  4. பார்க்கத் தவற விடக்கூடாத இடம் என்று தெரிகிறது.  அரண்டு பக்கமும் உயரமான பதில் நடுவே பாதை..  ஒலி அமைப்பின் அதிசயங்கள்..  முன்னோர்கள் எவ்வளவு புத்திசாலிகள் என்று தெரிகிறது.  படங்கள் யாவுமே கவர்கின்றன.

    பதிலளிநீக்கு
  5. // கொத்தளங்கள் சிலவற்றில் இன்னும் பீரங்கிகள் பொருத்தப்பட்டிருக்கின்றன //

    கொத்தளங்களில் பொருத்தப்பட்டிருந்த பீரங்கிகள் இன்னும் இருக்கின்றன என்று இருந்தால் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றுகிறது!

    பதிலளிநீக்கு
  6. சூடான எண்ணெயை யானைகள் குதிரைகள் மேல் கொட்டி... அடக் கொடுமையே... படை எடுத்து வருவது தவறு தான், காத்துக் கொள்ள வேண்டியதும் கடமைதான். எனினும் இது கொடுமையாக தான் இருக்கிறது!

    பதிலளிநீக்கு
  7. பொருத்தப்பட்டிருந்த பீரங்கிகள்.. திருத்தி விட்டேன். கருத்துகளுக்கு நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin