செவ்வாய், 24 ஜனவரி, 2012

பெங்களூர் ஹெப்பால் ஏரிக்கரை பூங்காவில்.. கொன்றையும் குல்மொஹரும்.. - படங்கள்


பெங்களூரின் வடபகுதியில் பெலாரி ரோடினை அவுட்டர் ரிங் ரோட் கடக்கும் இடத்தில், மேம்பாலம் அருகே தேசியநெடுஞ்சாலையை ஒட்டி அமைந்திருக்கிறது ஹெபால் ஏரி. நகரிலிருந்து விமான நிலையம் சென்று வருபவர் கண்களிலிருந்து எளிதாகத் தப்பி விட வாய்ப்பின்றி 150 ஏக்கர் பரப்பளவில் விரிந்து கிடக்கிறது. இது 1537_ஆம் ஆண்டு கெம்பகெளடா உருவாக்கிய மூன்று ஏரிகளுள் ஒன்று.

# 2.
பலவிதமான பறவைகள் கூடும் ஏரிகளுள் இதுவும் ஒன்றென எப்போதோ படித்த நினைவில் பறவைகளைத் தேடிதான் நுழைந்தேன் சென்ற வருடம் ஒரு கோடை மாதத்தில் அதுவும் மாலை நேரத்தில். பிறகுதான் தெரிந்தது குளிர்காலமே (நவம்பர் முதல் பிப்ரவரி வரையிலும்) அதற்குச் சரியான சமயமென்பதும் அதுவும் அதிகாலையில்தான் பாடும் பறவைகளின் தரிசனம் அதிகமாகக் கிட்டும் என்பதுவும். காக்கா குஞ்சின் சத்தம் கூடக் கேட்க முடியாத அமைதி நிரம்பிய ஏரிக்குள் தூண்டிலைப் போட்டபடி மீன்களைப் பிடித்துக் கொண்டிருந்தார்கள் சிலர்.

# 3போன மட்டிற்குச் சும்மாத் திரும்ப முடியுமா? பறவைகள் இல்லாவிட்டால் என்ன என்று ஏரியையொட்டிப் பூத்துக் குலுங்கி நின்ற கொன்றைகளுக்கும் குல்மொஹர்களுக்கும் வீசினேன் கேமரா வலையை. கொத்து கொத்தாக மாட்டியவற்றை ஃப்ளிக்கரில் பகிர ஆரம்பிக்கவும் நண்பர்கள் அவரவர் எடுத்த அதே மலர்களின் படங்களைப் பகிர ஆரம்பித்தார்கள். பலருக்கும் முதலில் கொன்றைக்கும் குல்மொஹருக்கும் வித்தியாசம் தெரியவில்லை. ஆக அனைவருமே ஆர்வத்துடன் இரு மலர்கள் குறித்தும் தெரிந்த தகவல்களையும் தெரியாதவற்றை இணையத்தில் தேடிப் பிடித்தும் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டோம். அப்படியாக அங்கு நான் பகிர்ந்த படங்களின் தொகுப்பு சேகரித்தத் தகவல்களுடன்:

  • Peacock flowers என அறியப்படுகிறது கொன்றை. மயிலின் கொண்டை போல் வெளிவரும் மகரந்தத் தண்டுகளால் அப்பெயர் ஏற்பட்டதோ என்னவோ. Pride of Barbados அல்லது Barbados Flower Fence என்றும் இதை அழைக்கிறார்கள். எங்கள் குடியிருப்பின் சுற்றுச் சுவரினுள் வரிசையாக அணிவகுத்து நிற்பன இவையே:)! பல பூங்காக்களுக்கு வேலியாக கொன்றை மரங்கள் இருப்பது கவனித்தால் தெரிய வரும்.

# 4. மயிற்கொன்றை / Peacock Flower
உலர்ந்த சிலவும்
மலர்ந்து சிரிப்பனவும்
மலரக் காத்திருப்பவையும்..

  • காட்டுத் தீயின் ஆழ்சிகப்பு நிறங்கொண்டிருப்பதால் குல்மொஹரை Fire of the Forest என்றழைக்கிறார்கள். அந்தி இருளில் செம்பிழம்பாக முதல் படத்தில் கனன்று கொண்டிருப்பதும் குல்மொஹரே. தமிழில் ‘மயூரம்’ என்பார்கள் என இணையத்தில் கண்டேன். இதன் மூடிய மொட்டுக்கள் நல்ல பச்சை நிறத்தில் இருக்கின்றன. கொன்றை மலர்களிலோ விரியாத மொட்டுக்கள் மலர்களின் வண்ணத்தில் இளஞ்சிவப்பாகவேக் காணப்படுகின்றன.

# 5. மயூரம் / Gulmohar
பச்சிளம் மொட்டுக்களும்
செக்கச் சிவந்த மலர்களும்

  • அதேபோல் கொன்றை மலர்களின் இதழோரங்களில் மஞ்சள் நிறம் பார்டர் போல அமைவது இன்னொரு வித்தியாசம். வேறு வண்ணக்கலவையற்று முழுமையான சிகப்பில் குல்மொஹர்.

# 6. மலர்ந்து விரிந்த மயூரம்

# 7. மஞ்சட்கொன்றை மலர்கள் / Yellow Peacock Flowers

# 8. ஆயிரம் மலர்களே..
எல்லா மலரும் அழகாய் மிளிர எதைப் படமெடுப்பதெனும் குழப்பத்தில் ஒரு இளைஞன்.

# 9. வானமே எல்லை
# 8. பக்கத்து வீட்டுக்காரங்க..
“நலம். நலமறிய ஆவல்...”

# 9. பக்கத்துத் தெருக்காரங்க..
  • மேலிருப்பதில் இடப்பக்கம் வரிசை கட்டி நிற்பவை கொன்றை. வலது முனையில் குல்மொஹர். கொன்றை மரங்களைக் கவனித்தால் வேரிலிருந்தே அடி மரம் பல கிளைகளாகப் பிரிவதைப் பார்க்கலாம். குல்மொஹரிலோ மரங்களின் அடிமரம் ஒற்றையாக உயர்ந்து வளர்ந்து பின்னரே கிளைகளாகப் பிரிகின்றன.

# 10. மரத்துக்குக் கிளை பாரமா...?
வீழ்ந்தாலும் தலைதூக்கி வாழ்ந்து காட்டும் கிளை

பாட்டனி க்ளாஸ் முடிந்தது:)! பூங்காவை இன்னும் கொஞ்சம் சுற்றிப் பார்க்கலாம் வாங்க...

# 11 முகப்பில்..

வாகன நிறுத்தம் அருகில்..

# 12. காவல்


# 13. காத்திருப்பு‘சிக்குமா சிக்காதா..?’ தூண்டில் முள்ளைச் சுற்றிய தண்ணீரின் வளையங்களை வைத்த கண் வாங்காமல் பார்த்தபடி சிறுவன்.

# 14. கண்ணுல சிக்குன ஒண்ணே ஒண்ணுதேடிப்போனதே இதற்குதானே:)? இப்போது பறவைகளைக் காண நல்ல சீசன். ஆர்வமுள்ள பெங்களூர்வாசிகள் சென்று வாருங்கள்! [ஸ்ரீராம் கேட்டுக் கொண்டதன் பேரில் பறவையின் பெயரைத் தேடியதில், இது Pond Heron என்பதும் தமிழில் ‘குருட்டுக் கொக்கு’ என அழைக்கப்படுவதாகவும் தெரிய வந்தது.]

# 15. சின்னக் குயில்அழகு வனத்தில் இவள் போலச் சிட்டாகக் கூவித் திரிந்த குழந்தைகள் பலரைப் பார்க்க முடிந்தது.

# 16 தனியே தன்னந்தனியே..

# 17. ஏரி பார்த்த இரட்டைக் கோபுரக் குடியிருப்பு
படம் இரண்டில் புள்ளிகளாகத் தெரிகிறக் கட்டிடங்கள்.

# 18. கூந்தற்பனை (Caryota urens) திப்பிலிப் பனை என்றும் அழைக்கப்படும் இதனை இலங்கையில் ‘கித்துல்’(Kitul Palm) என்கிறார்கள்.

அனுமதி நேரம்: காலை 6 மணி முதல் 9 மணி வரை இலவசம்.

காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை கட்டணம் உண்டு.

ஆறுமாதங்களாக சேமிப்பிலே இருந்து போன படங்களைப் பகிர்ந்தாயிற்று, இயற்கையின் எழிலை நீங்களும் ரசிக்க வேண்டுமெனும் ஆசையில் :)!
***

சனி, 14 ஜனவரி, 2012

இன்றைய கல்கியில்.. . ‘உறங்காது காத்திருக்கும் ஊஞ்சல்!’


காத்திருப்பு

ஆடும் ஊஞ்சல் முன்
அலைபாய்ந்த கண்களோடு
தன் முறைக்காக
நெடுநேரம் காத்திருந்தாள் சிறுமி.

புதன், 11 ஜனவரி, 2012

‘அகநாழிகை’ பொன். வாசுதேவனின் "ஞாயிற்றுக்கிழமை மதியப்பூனை"-ஒரு பார்வை-உயிரோசையில்..



கவிதைகளைப் பிரசுரித்த இதழ்களின் பட்டியலே அவற்றின் சிறப்புக்கு அணிந்துரையாக மிளிர, கவிஞரின் நெடிய இலக்கிய பயணத்தை எண்பத்து ஏழு கவிதைகளுக்குள் அடக்கிக் கொண்டதாக ’ஞாயிற்றுக்கிழமை மதியப்பூனை’. பாசாங்குகளற்ற நேர்மையான மென்மையான உணர்வுகளால் நிரம்பியிருக்கிறது. வாழ்வின் மீதான அவதானிப்புகளுடன் சில என்றால் அன்பைத் தேடுவனவாக பிரியங்களைப் போற்றுவனவாக இருக்கின்றன பல.

எத்தனையோ விதமான தேடல்கள் நிரம்பிய உலகில் தேடிக் கிடைத்த எவற்றாலும் மகிழ்ச்சியுறாத மனிதமனம் அன்பு ஒன்றினால் மட்டுமே மனநிறைவு காண்கிறது. ஊற்றெடுக்கும் சுனைநீர் எதன் பொருட்டும் தன் வேகத்தைக் குறைத்துக் கொள்வதில்லை. மனதிலிருந்து பீறிடும் பிரியங்கள் அதற்கான காரண காரியங்களை ஆராய்வதில்லை. எதற்கும் கட்டுப்படாது சுரக்கின்ற அதன்வேகம் பதிலுக்குப் பெறபடும் அன்புக்கு மட்டுமே அடங்குகிறது.

‘தொடங்கியிருக்கிறோம்’ கவிதையில்..,
“...எனக்குள் பூத்த ஆண்டாளைப்
பறித்தெடுத்து சூடிக்கொள்கிறேன்
எதற்கெனத் தெரியாமல்.”

‘கொடுக்கல் வாங்கல்’ எனும் ஒரு கோட்டில் பயணிக்கும் உலகில் இந்தக் கோட்பாட்டை உடைத்து, விதிவிலக்காக நிபந்தனைகளற்று இருந்தால் மட்டுமே அன்பு அன்பாக இருக்கமுடியும்:
“நொடிகளைத் துரத்தும் நிமிடங்களாய்
துரத்திக் கொண்டேயிருக்கிறது
அன்பு காலம் காலமாய்
...

அன்பின் பிரதேசத்தால் வாய்த்திருக்கிறது
வாழ்வின் ஆசிர்வாதம்

உனக்கும் எனக்கும்
அவருக்கும் இவருக்கும்
யாவருக்கும்”

காற்றைப் போல் கலைந்து விடக்கூடிய, ஒளியைப் போல் மறைந்து விடக்கூடிய சாத்தியங்களைத் தன்னோடு கொண்ட அன்பினைச் சார்ந்து வாழ்வதன் சிரமங்களைப் புரிந்திருந்தாலும் அதனை யாசிப்பதை நிறுத்த முடிவதில்லை எவருக்கும். இங்கே கவிஞருக்கும். வாழ்க்கையின் அடிநாதம் அன்பு என்கிற புரிதலுடன் அதனை யாசித்துப் பெறுவதில் எந்தத் தயக்கமும் காட்டாமல் துணையிடமும் ‘பிரிந்து போன தோழி’யிடமும் தாய்மையைக் கண்டு போற்றி நிறைவு கொள்கிறார். ‘சொல்ல இருக்கிறது காதல்’, ‘பால்ய விளையாட்டு’ எனப் பிரியம் பேசும் பல கவிதைகளுக்குள் ஒவ்வொரு எழுத்திலும் அன்பை இழைத்துக் கொண்டு வார்த்தைகளான வரிகள் சில:

‘பிரியத்தில் விளைந்த கனி’:
“.. பிரியத்தின் பொருட்டே
உனக்குள் என் வாழ்வு
பூரணமடைந்திருக்கிறது”

‘பிரியங்கள் உதிர்த்த கனி’:
“வலுக்கட்டாயமாய்
உதிர்ந்த பிரியங்களைத்
திசைக்கொன்றாய் வீசிச் சுழற்றி
கடத்திக் கொண்டிருக்கிறது காற்று’

‘புசிக்கத்தூண்டும் பிரியங்கள்’:
”நிகழ்வின் சாத்தியங்களாக
அன்பும் பிரியமும் மட்டுமே
என்று விதிக்கப்பட்டிருக்கிறது
பிரியங்களுக்கு”

உண்மையான அன்பின் மொழி மெளனமே. அன்பின் பரிமாற்றம் நிகழ்ந்த பின், அதன் திண்மை இளகி இனிமை கூடுவது இயல்பாக நிகழ்வது. பரிமாற்றம் தவறும் போது இனிமையின் இடத்தில் வலியும் வேதனையும் வந்தமர்கிறது என்றால் பரிமாற்றங்களுக்கும் பிறகும் கூட பலவீனப்படுகிற அன்புகளால் இணையை அலட்சியப்படுத்துவதும், அன்பை சாதகமாக எடுத்துக் கொள்வதும் நிகழவே செய்கிறது. பாதிக்கப்பட்டவர்கள் மெளனமாக அனுபவிக்கும் வலியைப் பற்றிய கவலையிருப்பதில்லை. பாலினப் பாகுபாடின்றி, அன்பிற்காகவே அனைத்து உதாசீனங்களையும் பொறுத்துக் கொண்டு செல்லும் இணைகள் கொண்ட உலகம் இது. இப்படியான அன்பின் எல்லாப் பரிமாணங்களையும் காட்டுவதான தொகுப்பின் முதல் கவிதை ‘மொழி’வது:
“உன்னுடன் சேர்ந்து வரும்
மெளனம் போதுமெனக்கு
...
உனது மெளனம் என்னை
மறுத்துப் பேசாது
...
தொடர் பின்றி நான் பேசினாலும்
உனது மெளனம் என்னிடம்
கைகட்டி தலை குனிந்து நிற்கும்
...
உனக்கும் எனக்குமிடையே
போட்டிகளோ பொறாமைகளோ இல்லை
என்றும்
நீ
உன் மெளனத்தைக் கடைபிடிக்கும்வரை.”

‘பிரியங்களின் வன்முறை’யில்..
“வன் எழுத்துக்களில் புலனாகும்
குரூரம் யெப்போதும் யாரையும்
அண்டச் செய்வதில்லை என்கிறாள்

பிரியங்களின் கொடுமனம் நிகழ்த்தும்
வன்முறை பற்றி
ஒருபோதும் நான் அவளிடம்
கேட்டதேயில்லை”.

கடைசி நிறுத்தம் வரை சென்று கொண்டிருக்கும் இவரது ‘பிராயணம்’ போலவே கடக்கின்றது தொகுப்பு பாடுபொருளாய்ப் பல வாழ்வியல் காட்சிகளை உள்ளடக்கி. ‘தன்னையே கீறக்கூடுமென அறிந்திருந்தும்’ வளர்க்கும் நகங்களைப் பற்றிப் பேசுகிறது ‘இருப்பு’. உய்தலுக்கானப் போராட்டத்தை எப்படி விலங்குகளுடன் நடத்த வேண்டி வருகிறது மனிதனுக்கு என்பதைக் காட்டுகிறது ‘இருத்தல்’. தந்திரங்களையும் வஞ்சகங்களையும் சூழ்ச்சித் திறம் என்று கொண்டாடும் உலகெங்கும் இவர் காட்டும் ‘மிதந்து கொண்டேயிருக்கும் வலை’கள் ஏராளம்.

‘ஒரு கவிதையை வாசிக்கும் பொழுதில்’, ‘ஓவிய நீட்சி’ ஆகியன பிடித்த கவிதைகள் எனில், பிடித்த வரிகளைக் கொண்டதாக ‘என்னிடம் வந்த இந்த நாள்’:
“தாழப்பறந்தும் கையில் சிக்காத
விருப்பப் பறவையாய்
கொஞ்சமும் இரக்கமில்லாது
கடந்த செல்கிறது இந்த நாள்”.

கவிஞர் ஒரு வழக்கறிஞர். ‘பாவத்தின் சம்பளம் மரணம்’ என்பதில் அவருக்குச் சம்மதமில்லை. குற்றவாளிக் கூண்டில் நிற்க வைக்கப்படும் பலபேரின் பின்னணியை, சிறுவயதுப் போராட்டத்தை, எது அவர்களை அச்செயலுக்கு உந்தியது எனும் காரண காரியங்களை நீதிமன்றங்கள் அலசுகின்றனவா? அவற்றைக் கருத்தில் கொண்டு பரிவு காட்டப்படுகின்றதா? விடை தேடுவதே அவசியமற்றதாக ஒதுக்கப்படும் கேள்விகள் இவை.
“அவனைவிட பாவங்களை
நீங்களும் செய்திருக்கிறீர்கள்
நானும்தான்...”

‘அகநாழிகை’ என்ற பெயரில் சிற்றிதழும் பதிப்பகமும் நடத்தி வரும் பொன். வாசுதேவனின் இந்த முதல் கவிதைத் தொகுப்பில் ‘கடவுளைச் சுமந்தவன்’ சொல்லுகிறான்:
“பத்திரமாக கோவிலில்
இறக்கி விட்டேன் கடவுளை

நிம்மதியாகவும்
மனநிறைவாகவும் இருந்தது
கடவுளுக்கும்”

இருபது ஆண்டுகளாகச் சுமந்து வந்த கவிதைகளைத் தொகுப்பாக இறக்கி வைத்த கவிஞருக்கும் இது பொருந்தும். மன நிறைவு வாசிப்பவருக்கும்!
***

“ஞாயிற்றுக்கிழமை மதியப்பூனை”
விலை ரூ:70. பக்கங்கள்: 112. வெளியீடு: உயிர்மை பதிப்பகம்.

சென்னையில் கிடைக்கும் இடங்கள்: ந்யூ புக் லேன்ட், தி.நகர் [தொலைபேசி: 28158171, 28156006] மற்றும் டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே நகர்.

ஜனவரி 5 முதல் 17 வரைக்குமாக நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சியில், கடை எண்: F 27.
*** *** ***

11 ஜனவரி 2012 உயிரோசையில்.., நன்றி உயிரோசை!

திங்கள், 9 ஜனவரி, 2012

கூட்டல் கழித்தல் - நவீன விருட்சத்தில்..



பாவக்கணக்குகளை எழுதும் சித்ரகுப்தன்
எழுதி எழுதிக் கைசோர்ந்து
கணினிக்கு மாறினார்.
ஜிபியில் சேமித்து முடியாமல்
டெராபைட் கொள்ளளவுக்கு மாறிய பிறகும்
திணற நேர்ந்தது.
அவுட் சோர்ஸிங் தீர்வாகுமென
மானுடரை அணுகினார்.
முட்டிமோதி முன்வந்த எவருக்கும்
கணக்குகளில்
எந்தப் பாவமும் தெரியவில்லை.
பாவத்தைப் பற்றிய பார்வை
மாறியிருந்தது.
சம்பளமாகப் பூலோகத்தில்
சொர்க்க வாழ்வைப் பேரம்பேசி
வேலையைத் தொடங்கினார்கள்.
கூட்டலும் கழித்தலும்
வகுத்தலும் பெருக்கலும்
பணம், பதவி, புகழ் எனும்
விடைகளையே
திரும்பத் திரும்பத்
தேடியிருந்தது
சுவாரஸ்யத்தைத் தந்தது.

சகமனிதரிடம் அன்பு
பிற உயிரிடம் நேசம்
இயற்கையிடம் நன்றி
அற்றுப் போன பூமியின்
கடவுச்சொல் ஒருநாள்
காக்கும் சக்திக்கு மறந்து போகலாம்.
சுனாமிகளாலும் கலங்காத கோளினைத்
தன் இரட்சிப்பின் எல்லையிலிருந்து
வைரஸ் பாய்ச்சி விலக்கலாம்.
அண்டவெளியில் பூமி
அதிவேகத்தில் சுழலாம்.
இரண்டு மணிகளுக்கொருமுறை
இரவு பகல் நேரலாம்.
அந்நாள்வரையிலும்
கூட்டலாம் கழிக்கலாம்
வகுக்கலாம் பெருக்கலாம்.
*** ***

26 டிசம்பர் 2011, நவீன விருட்சத்தில்.., நன்றி நவீன விருட்சம்.

* ஆறுவருடங்களுக்கு முந்தைய சுனாமியின் நினைவுகள் தந்த கவிதை.

* படம்: இணையத்திலிருந்து..

புதன், 4 ஜனவரி, 2012

‘விரியும் எல்லைகளால் பெங்களூர் பெற்றதும் இழந்ததும்...’ - வடக்குவாசல் கட்டுரை - நான் எடுத்த படங்களுடன்

நான்கு பக்கக் கட்டுரையுடன், அட்டையில் என் படத்தையும் வெளியிட்டு அங்கீகாரம் தந்திருக்கும் வடக்குவாசலுக்கு நன்றி!

தில்லி, மும்பை, சென்னை, பெங்களூர் போன்ற மாநகரங்களைப் பற்றி ஒவ்வொரு இதழிலும் ஒவ்வொருவர் ஆசிரியர் கேட்டுக் கொண்டதன் பேரில் எழுதி வருகிறார்கள். இம்மாதம் பெங்களூர் குறித்து எழுதும் வாய்ப்பினை ஆசிரியர் எனக்கு அளித்திருந்தார். எடுத்த படங்கள் ஏழுடன் கட்டுரை:

***

புதுவருடத்தின் தொடக்கத்தில் வடக்குவாசல் தந்திருக்கும் அங்கீகாரத்துடன் கிடைத்த இன்னொன்றாக, 1 ஜனவரி தமிழ்மணம் அறிவித்த சென்றவருட ‘முன்னணி 100’ வலைப்பூக்களின் பட்டியல். அதில் முத்துச்சரமும்.., நன்றி தமிழ்மணம்!
2011 blog rank 26

சென்றவருடம் போல் இவ்வருடம் வாரம் இரண்டு பதிவுகளாக வழங்க இயலுமா என்பது எனக்குள் கேள்விக்குறியாக இருக்கும் வேளையில் கிடைத்த இடம் ஊக்கம் தருவதாக இருப்பதை மறுக்க இயலாது. இதை சாத்தியப்படுத்திய அனைத்து நண்பர்களுக்கும் என் அன்பு நன்றி! அதேநேரம் பல காரணிகளால் நிர்ணயிக்கப்படுவதாகச் சொல்லப்படுகிற இவ்வரிசையை ஒரு அளவுகோலாக எடுத்துக் கொள்ளாமல் அவரவர் வழியில் தொடர்ந்து நல்ல பதிவுகளைத் தருவதில் மட்டும் அக்கறை காட்டி வந்தால் அது பதிவுலகம் ஆரோக்கியமாக இயங்க வழிவகுக்குமென்பது என் தாழ்மையான கருத்து.
***

சனி, 31 டிசம்பர், 2011

2011-ல் முத்துச்சரம்



ஒரு நல்ல நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் நேசம் அமைப்பு பற்றி அறிந்திட இங்கே செல்லக் கேட்டுக் கொள்கிறேன்.


சென்ற வருடம் இதே நாளில் நண்பர்கள் அழைத்ததன் பேரில் 2010-ல் முத்துச்சரம் [தீராத ஆர்வம்.. பேனாவும் காமிராவும்] எழுதினேன். ‘2011-ம் நானும்’ எனத் தொடர் பதிவுகள் பதிவுலகில் ஓடிக் கொண்டிருக்கும் வேளையில் முத்துச்சரம் பற்றிய ஒரு பார்வை, சுய அலசலாக அடுத்த ஆண்டை எதிர்நோக்க வைக்கும் என்பதால் இந்தப் பகிர்வு. எனக்கான ஒரு டைரிக் குறிப்பாகவும் கொள்கிறேன்.

வலையுலகில் முதல் மூன்று வருடங்களுமே மாதம் மூன்று எப்போதேனும் நான்கு என்ற அளவிலேயே பதிவிட்டு வந்த நான் இந்த வருடம் சராசரியாக மாதம் 10 பதிவுகள் தந்திருப்பதற்கு நண்பரின் ஊக்கம் காரணம் என்பதை ஏற்கனவே பகிர்ந்திருக்கிறேன்.

இந்த வருடச் சிறப்பாக அமைந்திருந்தன வலைச்சர வாரமும், தமிழ்மணம் நட்சத்திர வாரமும்.

வலைச்சர வாரத்தில் நண்பர்கள் பலரின் சிறந்த பதிவுகளை அறிமுகப்படுத்த முடிந்த மகிழ்ச்சியுடன் அங்கு ஒன்றும், அறிவிப்பாக முத்துச்சரத்தில் ஒன்றுமாக வழக்கத்துக்கு மாறாக 14 பதிவுகள் இட்டது ஆச்சரியம் என்றால் அதைவிட ஆச்சரியம் தமிழ்மணம் நட்சத்திர வாரத்தில் மீள்பதிவுகள் இன்றித் தரமுடிந்த 16 பதிவுகள். நட்சத்திர வாரத்தில் தமிழ்மணம் வெளியிடும் வாராந்திர ‘டாப் 20’ பட்டியலில் முத்துச்சரத்துக்கு முதலிடம் கிடைத்தது.

இரண்டு வாரங்களிலும் நண்பர்கள் தந்த ஊக்கம் நெகிழ்வானது.

எழுத்துக்கும் புகைப்படப் பயணத்துக்குமான அங்கீகாரங்களாக அமைந்து ஊக்கம் தந்தன கீழ்வரும் வெளியீடுகள்:

பத்திரிகைகள்:

  • தினமணி கதிரில் மூன்று சிறுகதைகள். அதிலொன்று நட்சத்திரவாரத்தில் பிடித்த ஓவியர் ராமுவின் சித்திரத்துடன்..

  • வடக்குவாசல் இலக்கிய இதழில் 3 கவிதைகள்
  • நவீன விருட்சம் 89-90வது இதழில் கவிதை

இணைய இதழ்கள்:


  • உயிரோசையில் 3 கவிதைகள்; 2 புத்தக விமர்சனங்கள்
  • கீற்றினில் 5 கவிதைகள்; 2 புத்தக விமர்சனங்கள்
  • திண்ணையில் 4 கவிதைகள்; 4 புத்தக விமர்சனங்கள்; 1 சிறுகதை
  • நவீனவிருட்சத்தில் 11 கவிதைகள்
  • வல்லமையில் 2 புத்தக விமர்சனங்கள், 1 கவிதை
  • பண்புடனில் 1 கவிதை; 1 புகைப்படத் தொகுப்பு
  • அதீதத்தில் 3 புத்தக விமர்சனங்கள்; 1 மொழிபெயர்ப்புக் கவிதை

வெளியிட்ட ஆசிரியர்கள் அனைவருக்கும் நன்றி.


க்ளிக் க்ளிக்


புகைப்படங்களைப் பொறுத்தவரை ‘ஏரிக்கரை பூங்காற்றே’ பதிவுக்கு தமிழ்மணம் விருது 2010-ன் வெள்ளிப்பதக்கம் கிடைத்தது: 2009-லும் இதே பிரிவில் வெள்ளிப்பதக்கம் என்பதில் இது தொடர் வெற்றியாயிற்று.

DSLR-ன் பயன்பாடுகளைக் கற்றுத் தேறிட வேண்டுமென்பதில் இன்னும் போகவேண்டிய தூரம் அதிகமிருக்கிறது. இருப்பினும் அதில் எடுத்த படங்களுடனான பதிவுகள் பல நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தன. PiT பதிவுகள் போக குடியரசு மற்றும் சுதந்திர தின மலர்கண்காட்சிகள், நிலவைப் பிடித்த கதைகள்(சூப்பர் மூன், சித்திரா பெளர்ணமி, சந்திரக் கிரகணம்), அதிவேகத்தில் எடுத்த இயற்கைக் காட்சிகள், பக் பக் பறவைகள், பெங்களூர் சிவாலயம் மற்றும் சிங்கப்பூர் பயணப் படங்கள் ஆகியன அவற்றில் சில.

மே மாதம் PiT குழுமத்தில் உறுப்பினராக இணைந்தது இன்னும் சிறப்பாக எடுக்க வேண்டுமென்கிற பொறுப்புணர்வைத் தந்தது.

29 நவம்பர், ஃப்ளிக்கர் எக்ஸ்போளரரில் அன்றைய சிறந்த படங்களில் ஒன்றாக என் படம் இடம் பெற்றது:

ஜூலையிலிருந்து அதீதம் ஆசிரியர் குழுவில் இடம் பெற்று செயலாற்றி வருவதும் குறிப்பிடத்தக்கதாக. அதன் ‘வலையோசை’ மற்றும் ‘ஃபோட்டோ கார்னர்’ பகுதிகளுக்கு முழுப் பொறுப்பு எடுத்து நல்ல வலைப்பக்கங்களையும் சிறந்த நிழற்படங்களையும் அறிமுகப்படுத்த முடிவதில் திருப்தி கிடைக்கிறது.

அதீதம் புத்தாண்டு இதழில்..அதீதத்தில் இந்த வருடம் மாதம் ஒரு சிறப்பாசிரியரை அறிமுகம் செய்வதை நடைமுறைப்படுத்தி உள்ளோம். புத்தாண்டு இதழுக்கு யார் ஆசிரியர் என அறிய இங்கே செல்லுங்கள். வலையோசையைக் காண இங்கே செல்லலாம். ஃபோட்டோ கார்னரில் புத்தாண்டை வரவேற்று ஆடும் அழகு மயில்களை எடுத்தவர் யார் என்பதைக் காண வேண்டாமா?

கடந்த வருடம் கடைப்பிடிக்க வேண்டிய நிலைப்பாடாக வாசிப்பை அதிகப்படுத்த வேண்டுமென எடுத்தத் தீர்மானம் ஓரளவு நிறைவேறியிருப்பதைப் புத்தக விமர்சனங்களின் எண்ணிக்கை காட்டுகிறது. சிறுகதைகள் அதிகம் எழுத வேண்டுமென எடுத்த தீர்மானம் காற்றில் பறந்தது. பல கரு மனதில் இருந்தும் வடிவம் கொடுக்காத சோம்பேறித்தனம் வரும் ஆண்டிலாவது மாறுமா தெரியவில்லை. கவிதைகள் தோன்றும் பொழுது மட்டுமே எழுதுவதால் எந்தத் தீர்மானமும் எடுத்திருக்கவில்லை.

ஆக, செயல்படுத்த முடிந்த புகைப்பட நுணுக்கங்கள் கற்பது, வாசிப்பு இதற்கே வரும் வருடத்திலும் அதிக நேரம் செலவிட வேண்டுமென்பது சுலபமான நிலைப்பாடாகத் தோன்றுகிறது:)! பதிவுகளைப் பொறுத்த வரையில் வாரம் இத்தனை எனும் திட்டமிடல் ஏதுமின்றி இயலும்போது பதியலாம் என்றிருக்கிறேன். எண்ணிக்கை இவ்வருடம் போல் அமைவது சிரமமே.

2012_ல் வேண்டுவது இயற்கையின் ஆசி, உலகில் அமைதி, அனைத்துதரப்பு மக்கள் வாழ்விலும் சுபிட்சம், ஆரோக்கியம். இயற்கையிடம் நன்றியுடன் இருப்போம். இயன்றவரை பிறருக்கு உதவுவோம்.

நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!
***

வெள்ளி, 30 டிசம்பர், 2011

நைட் சஃபாரி - சிங்கப்பூர் பயணம் (9) - நிறைவுப் பாகம்

# 1. நீரைக் குடித்து நெருப்பாய்க் கக்கு
காணும் கனவைக் காரியம் ஆக்கு


இருட்டத் தொடங்கும் ஏழுமணிக்கே ஆரம்பமாகிறது காட்டுக்குள் பயணம். அதற்கொரு அரை மணி முன்னதாகவே ஆங்காங்கே தீப்பந்தங்கள் ஏற்றத் தொடங்கி விடுகிறார்கள். காத்திருக்கும் வேளையில் மீன் தொட்டிகளுக்குள் கால்களைக் கொடுத்து ஃபிஷ் ஸ்பா செய்தபடி சிலர், சுற்றியிருக்கும் கடைகளில் நினைவுப் பொருட்கள் வாங்கியபடி சிலர், மலைப்பாம்புகளை வாங்கிக் கழுத்தில் இட்டுப் படமெடுத்தபடி சிலர் எனக் கலகலப்பாக இருக்கிறது இடம். பாம்புகளைத் தோளில் போட்டுக் கொள்வது அதிர்ஷ்டத்தைக் கொடுக்குமென்கிற நம்பிக்கை அங்கே உள்ளது. ஜூராங் பூங்கா, மக்கள் நடமாட்டமுள்ள மெர்லயன் என எல்லா இடங்களிலுமே இதற்கென்றே பாம்புகளை வைத்திருந்தது குறித்து பாகம் இரண்டில் படங்களுடன் பகிர்ந்திருந்தேன். கையிலெடுக்க நடுக்கம், ஆனால் வேண்டும் அதிர்ஷ்டம் என்போருக்கு இங்கே அட்டை வீரன் பாம்பை ஏந்திக் காத்திருக்கிறான். முகத்தை உள்ளே விட்டுப் படமெடுத்துக் கொண்டு திருப்தியாக நடையைக் கட்டுகிறார்கள் வரப்போகும் அதிர்ஷ்டத்தை எண்ணிக் கனவு கண்டபடி.

# 2. முகப்பில் வரவேற்கும் பழங்குடியினர் சிலைகள்

# 3. பக்கத்தில் (சிரித்த முகத்துடன்?)‘நல்வரவு’ எனக் கூவும் முதலைசமீபத்தில் தன் அமெரிக்கப் பயணத்தில் அச்சு அசல் இதே போன்ற ஒரு முதலைச் சிலையின் வாயினுள் தன் ஒற்றைக் காலைக் கொடுத்து இரண்டு கைகளையும் தூக்கி அலறுவது போன்ற முகபாவத்துடன் ஒரு தோழி தன் படத்தைப் பகிர்ந்திருந்தார்:)! யோசனையும் ரசனையும் இணைந்த காட்சியாக இருந்தது அது.

# 4. நிகழ்வு மேடைஇரவு நிகழ்ச்சிகள் ஆரம்பமாகும் வரை தைரியசாலிகள் பாம்புமாலை அணிந்து காட்சி கொடுத்தபடி இருந்த மேடை.

# 5. தீப்பந்தங்கள்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin