ஞாயிறு, 12 ஜூன், 2011

‘அழகர்சாமியின் குதிரை’ முதல் அன்றைய ‘பா’ வரிசைப் படம் வரை..-பிட் மல்டிப்ளெக்ஸில்..-ஜூன் போட்டி

ஆடுன காலும், பாடுன வாயும், பிட் போட்டிக்குப் பதிவு போட்ட கையும் நிற்காதுல்ல. ‘பிட்’டுக்கான மாதாந்திரப் பதிவு இனியும் தொடரும், உங்களுக்கு நினைவூட்ட.. உற்சாகமளிக்க.. மாதிரிப் படங்களுடன். விளம்பரமென்றும் கொள்ளலாம். அதிலும் இம்மாதத் தலைப்புக்கும் விளம்பரத்துக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கே. தமிழில் வெளியான ‘திரைப்படத் தலைப்பு’களுக்குப் பொருத்தமான நிழற்படங்கள் என்பதே இம்மாதப் போட்டி. சுவாரஸ்யம் இல்லையா?

போட்டி அறிவிப்பு இங்கே. போட்டி விதிமுறை இங்கே.

அட்டகாசமாய், அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கும் போட்டிப் படங்களின் அணிவகுப்பு இங்கே.

இனி என்னுடைய தயாரிப்பிலான படங்கள். டிக்கெட் இலவசமே:)!

இவற்றில் புது ரிலீஸ் 7. மற்றன தலைப்புக்குப் பொருத்தமாய்.

1.அழகர்சாமியின் குதிரை


2.வசந்த மாளிகை


3.தொட்டால் பூ மலரும்


4.கோபுரங்கள் சாய்வதில்லை
மாமல்லபுர கடற்கரைக் கோவில்
நூற்றாண்டுகள் பல கடந்து
சிற்பக்கலைக்கு சிகரமாக

5.பயணங்கள் முடிவதில்லை

6.அலைகள் ஓய்வதில்லை


7.தூங்காதே தம்பி தூங்காதே


8.வானமே எல்லை


9.புதிய பாதை


10.வாழ்க்கைப் படகு


11.கண்ணாமூச்சி ஏனடா?


12.தீபம்


13.இரு மலர்கள்


14.தவமாய் தவமிருந்து


15.தண்ணீர் தண்ணீர்


16.இயற்கை


17.மாட்டுக்கார வேலன்


18.மன்னாதி மன்னன்


19.கலைஞன்
இசைவெள்ளம் நதியாக ஓடும்..

20.மேல்நாட்டு மருமகள்
சொந்த இடம் விட்டு
வந்த மண் வாழ
வனிதை காட்டும் அக்கறை
கைவழி தொங்கும் துணிப்பையில்..
சொல்லுவோம் நாமும்
‘நோ டு ப்ளாஸ்டிக்’


21.தில்லானா மோகனாம்பாள்


22.ஜகன் மோகினி


23.பக்த மீரா


30-35 வருடங்களுக்கு முன்னால் திரைப்படங்களை ‘ஈஸ்ட்மென் கலர் சித்திரம்’ என்றே விளம்பரம் செய்து கவர்ந்திழுப்பார்கள். எங்கள் ஊரில் வெளியாகும் வண்ணப்படங்களுக்கு மத்தியில் அன்றைய பிரபல ‘பா’ வரிசை பாசமலர், பாலும் பழமும், பாவ மன்னிப்பு போன்ற கருப்பு வெள்ளைப் பழைய படங்களும் குறிப்பிட்ட அரங்குகளில் வெளியாகி சக்கைப் போடு போடும். எத்தனை முறை பார்த்திருந்தாலும் இன்றைக்கும் ‘எதிர் நீச்சல், பாமாவிஜயம்’ போன்ற படங்கள் ஒளிபரப்பானால் நம்மை இழுத்து தொலைகாட்சி முன் அமர்த்திக் கொள்கின்றன.

இதோ அந்த வரிசையில் ஒரு படம். நான் எடுத்த படம் அன்று. ‘ஓட்டைப் பல் சிறுமி’யாக தோன்றிய படம்:)!

‘அன்பு’ தலைப்புக்காக என் அப்பா எடுத்த.., நான் அண்ணனுடன் இருக்கும் பழையபடம் ஒன்றைப் பகிர்ந்து கொண்டிருந்தேன். அப்பாவின் அதே யாஷிகா-D கேமராவால் அவரது தங்கை எங்களை எடுத்த படம் இது. அந்தப் பதிவிலேயே ‘தான் எடுத்த படத்தைப் பகிர்ந்திட வேளை வரவில்லை’ என ஆதங்கப்பட்டிருந்தார். இம்மாதப் போட்டிக்கு என் தொகுப்பிலே இடம் பெறச் செய்த பின் அனுப்பி வைக்கலாமெனக் காத்திருக்கிறார்.

படம் ப்ரிண்ட் ஆகி வந்ததும் பூரித்துப் போன என் அப்பா, இதை வைத்துப் பிரத்தியேகமாக ஒரு பொங்கல் வாழ்த்து அட்டை தயாரித்து அந்த ஆண்டு உறவினர் அனைவருக்கும் அனுப்பி வைத்திருந்தார். இன்றளவிலும் எங்கள் குடும்பத்தினர் மனதில் மறக்க முடியாத படமான இது உங்கள் பார்வைக்கும்..

பாசப் பறவைகள்
ஒரு குழந்தையை சிரிக்கிற மாதிரி படம் பிடிப்பதே சிரமம். நான்கு சிறார்களை எப்படி சிரிக்க வைத்தாராம்? அங்குதான் இருக்கிறது இதை எடுத்தவர் யார் என்ற ரகசியம்:)! தான் ‘ஒன்.. டு.. த்ரீ..’ சொன்னதும், தொடர்ந்து எங்களை ‘ஹா.. ஹா.. ஹா..’ என மூன்று முறை தொடர்ந்து ஒலிக்குமாறு சொல்லச் சொல்ல, நாங்களும் அவ்வாறே செய்ய அற்புதமாகப் படமாக்கியிருக்கிறார். இப்போது புரிந்திருக்குமே யார் என்பது? நீங்கள் யாவரும் ‘ஹா ஹா ஹா’ என சிரித்து மகிழ ஹாஸ்யரசம் படைத்து வரும் கோமா அவர்களே!

பிட் போட்டிகளில் ஆர்வமாகப் பங்கு பெற்று, பலமுறை முதல் மற்றும் இறுதிச் சுற்றுக்கள் வரை வென்று அசத்தி வருபவரின் திறமையை 37 ஆண்டுகளுக்கு முன்னரே எடுத்துக் காட்டிய படம்.

நீங்காத நினைவுச் சித்திரத்துக்கும், இங்கு பதிய விரும்பி அனுமதித்ததற்கும் அன்பு கலந்த நன்றி அவருக்கு:)!


இம்மாத நடுவராகப் புதிதாகப் பொறுப்பு எடுத்திருக்கும், MQN என நண்பர்களால் அன்புடன் விளிக்கப்படும், MQ Naufal பற்றியும் சில வார்த்தைகள் சொல்லிக் கொள்ள விருப்பம். அனைவராலும் அறியப்பட்டவர் எனினும் தவறவிடக் கூடாத அவரது தளத்தை இங்கு அறிமுகப் படுத்த ஆவல். வாழ்க்கையை ரசனையுடன் பார்ப்பதோடு மட்டுமின்றி, அவற்றின் அதிர்வுகளையும், மனிதர்களின் நுண்ணிய உணர்வுகளையும் தன் படங்களில் பதிவு செய்கின்றவர். அவசியம் தொடருங்கள்:
Naufal Photography.


இன்னும் ஏன் காத்திருக்கீங்க? உங்க படங்களை சீக்கிரமா அனுப்புங்க. இந்த லிங்கில் பத்து பத்து ஆண்டாக ரிலீஸ் ஆன தமிழ்படங்களின் பெயர் பட்டியல் கூட இருக்கு. அதையும் பாருங்க. கவித்துவமா யோசியுங்க. பிட் மல்டிப்ளெக்ஸ் உங்கள் படங்களைத் திரையிட ஆவலுடன் காத்திருக்கிறது:)! முடிவுத் தேதி ஜூன் பதினைந்து. இன்னும் நாலு நாள் இருக்கு. நடுவிலே இதோ ஒரு ஞாயிறும் இருக்கு.
***

புதன், 8 ஜூன், 2011

க்ளிக் க்ளிக் ஆர்வம்-‘கல்கி’ தந்துள்ள ஊக்கம்

இந்த வார கல்கியில் என் புகைப்படத் தொகுப்பு.

‘கேமரா என் மூன்றாவது கரம்’ எனும் அறிமுகத்துடனும், படங்களுக்கான கல்கியின் வாசகங்களுடனும்:கல்கி இணைய தளத்திலும் காணலாம் இங்கே.. http://www.kalkionline.com/kalki/2011/jun/12062011/kalki1003.phpநன்றி கல்கி!
செய்திச் சித்திரத்துக்கு மிக்க நன்றி அமிர்தம் சூர்யா!

தகவல்:
ஜூன் பதினைந்துக்குப் பிறகு கட்டண சேவை ஆகிறது ‘கல்கி ஆன்லைன்’. இதுகாலமும் இலவசமாக நான்கு புத்தகங்களைப் படிக்கத் தந்த வகையில் கல்கிக்கு நன்றி சொல்லலாம். ஆன்லைனில் தொடர்ந்து வாசிக்க விரும்புகிறவர்கள் ஆரம்பக்காலச் சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

பகிர்வு:
இதற்கு முன் ‘தேவதை’ இதழின் ‘வலையோடு விளையாடு’ பக்கத்தில் வெளியான புகைப்படத் தொகுப்பு இங்கே.
இம்மாத ‘இவள் புதியவள்’ இதழில் ‘பெங்களூர் மலர் கண்காட்சி’ தொகுப்பு இங்கே.
***

வெள்ளி, 3 ஜூன், 2011

பெங்களூர் லால்பாக் மலர் கண்காட்சி - என் புகைப்படத் தொகுப்பு.. இவள் புதியவளில்.. - ( Bangalore Lalbagh Flower Show )

கோடையின் கொடுமையிலிருந்து தப்பிக்க ஊட்டியை நோக்கிப் படையெடுக்கும் சுற்றுலா பயணிகளைக் குஷிப்படுத்த எப்போதும் போலவே, இவ்வருடமும் மே இருபதாம் தேதி முதல் மலர்கண்காட்சி நடைபெற்றது.'ஊட்டியில்' கோடையில் என்றால் 'பெங்களூரில்' வருடந்தோறும் குடியரசு மற்றும் சுதந்திர தினங்களையொட்டி பத்து நாட்கள் போல லால்பாக் தோட்டத்தில் நடக்கும் மலர் கண்காட்சிகள் உலகப் பிரசித்தமானவை.
கோடையில் கண்காட்சி ஊட்டியில் என்பது, பெங்களூரில் நடந்ததாகப் புரிந்து கொள்ளப்பட்டு விட்டது. ஆகவே கோடையிலன்றி லால்பாக் கண்காட்சியை ரசிக்க ஜனவரி அல்லது ஆகஸ்டில் பெங்களூர் வர வேண்டும். இன்னும் சில தகவல்கள் சற்றே விரிவாக:

டொர்னட்டோவில் வசிக்கும் வயதான பெரியவர் திரு. கிருஷ்ணமூர்த்தி ஒவ்வொரு வருடமும் தவறாமல் மலர்கண்காட்சியைக் காண இந்தியா வருவதாகக் குறிப்பிட்டிருந்தது சுவாரஸ்யம். ஆம், இப்படியான ஆசையுடன் எத்தனை பெரியவர்கள்?

நாங்கள் காரை பார்க் செய்யும் போது இளைஞர் ஒருவர் தன் காரில் இருந்து மடக்கு சக்கர நாற்காலியை இறக்கிக் கொண்டிருந்தார். மைதானத்தினுள் ஆறேழு நாற்காலிகளைப் பார்க்க முடிந்தது. 460 ஏக்கர் பரப்பளவைக் கொண்டதாயிற்றே லால்பாக். அப்பெரிய தோட்டத்தில்.., அலைமோதும் கூட்டத்தில்.. வீட்டுப்பெரியவர்களை நடக்க வைக்க வேண்டாமென நாற்காலிகளில் வைத்துத் தள்ளியபடி அக்கறையுடன் அழைத்து வந்து கண்காட்சியை ரசிக்க வைக்கிற இன்றைய தலைமுறையைக் காண்கையில் நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியும்.

“அழகாய்ப் பூத்திருக்கு” தலைப்பிற்கு ஏற்ப பூக்களின் வண்ணங்கள் வனப்பாய் தெரியுமாறு படங்களை வெளியிட்டிருக்கும் இவள் புதியவளுக்கு நன்றி:)!

பத்திரிகையில் வந்த படங்களை பெரிய அளவில் மறுபடியும் இங்கே கண்டு களியுங்கள்:

1. குதும்ப்மினார்


2. பெங்களூரின் அந்நாளையத் தொடக்கமான கெம்பகெளடா மண்டபமும். பின்னால் இந்நாளையத் தொடக்கமான மெட்ரோவும்


3. அன்னை காவேரி


4. டிமோத்தி, கற்றாழை வகை கள்ளிச்செடி:

5. அன்தூரியம் செடிகளின் அணிவகுப்பு

செந்நாரை மலர்
‘சிகப்பு’ தலைப்புக்காக PiT போட்டிப் பதிவொன்றில் இம்மலரின் க்ளோஸ் அப் ஷாட்டை பகிர்ந்து கொண்டிருந்தேன். பல பேரின் கவனத்தை ஈர்த்தது. ‘இதன் பெயர் என்ன’ என என் flickr தளத்திலும் நண்பர் ஒருவர் கேட்டிருந்தார். பின்னரே இணையத்தில் தேடி அறிந்தேன். Anthurium எனப்படும் இம்மலர் பெரும்பாலும் குளிர் பிரதேசங்களிலேயே செழித்து வளருகிறது. அந்த வண்ணத்தினால் Flamingo(செந்நாரை) Flower என்றும் அழைக்கப்படுகிறது.

6. உயர்ந்த தூணில் மெகா மலர் பந்து
பார்க்கப் பார்க்க ஆசை வருகிறதா:)?

பத்திரிகை கட்டுரையின் கடைசி பத்தியை மீண்டும் தங்கள் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன்: “வாழ்நாளில் ஒருமுறையேனும் பார்க்கப்பட வேண்டிய ஒன்று மலர் கண்காட்சி” :)!
*****

வியாழன், 2 ஜூன், 2011

இசைக்கு மொழி தேவையில்லை.. - மேடைப்படங்கள் (பாகம் 3)

ருஹானியத் என்பது ஒரு அற்புதமான இசைத் திருவிழா. இந்தியாவின் அத்தனை அதிகம் அறியப்படாத கிராமங்களைச் சேர்ந்த இசைக் கலைஞர்களும், உலகின் பல பாகங்களைச் சேர்ந்த இசை மன்னர்கள் அவரவர் நாட்டு இசைக்கருவிகளுடனும் பக்கவாத்தியப் பரிவாளங்களுடனும் எழுப்பும் ஒரு இன்னிசை வேள்வி. அமைதி, ஒற்றுமை, நட்பு, அன்பு யாவும் ஐக்கியமாகும் அந்த வேள்வியில் கேட்பவரும் இசைப்பவரும் தம் ஆன்மாவை அடையாளம் காண இயலுகிறது.

கடந்த டிசம்பர் 26 ஆம் தேதி பெங்களூரில் ஐந்தாவது முறையாக அரங்கேறிய ருஹானியத்தை இரண்டாவது முறையாக ரசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த மார்கழி குளிர் நடுக்குகிற இரவில், பெங்களூர் ஜெயமஹால் அரண்மனையின் திறந்த அரங்கம் ரசிகர்களால் நிரம்பியிருந்தது. பால் வெண்மையில் ஒருபக்கம் அரண்மனையும், பாலாய் பொழிந்தபடி வானிலே தேனிலாவும் கூடத் தயாராகின கானத்தில் நனைய. #படம் 1: ஜெயமஹால்

பஞ்சாப்பை சேர்ந்த பர்கத் சித்துவின் பாகிஸ்தானிய சூஃபி பாடல்களுடன் ஆரம்பமானது இசை விருந்து. இது போன்ற இசை நிகழ்ச்சிகள் ஏன் திறந்த அரங்கில் நடக்கின்றன என்பது அவரது குரல் வானெங்கும் எதிரொலித்துத் திரும்பி ரசிகர்களை பிரமிப்பில் ஆழ்த்தியிருந்ததில் புரிந்தது. குழப்பமான கொந்தளிப்பான வாழ்வில் தொடர்ந்து நம்மை ஆனந்தமாக இருத்திக் கொள்ளும் ரகசியங்களைச் சொல்வதானதாய் இருந்தது அப்பாடல்.

இப்படி எதைப் பற்றி பாடுகிறார்கள் என முதலிலேயே ஆங்கிலதில் அறிவித்து விடுவதால், மொழி புரியாவிட்டாலும் அதன் உணர்வோடு ஒன்றி ரசிக்க இயலுகின்றது.

எகிப்தைச் சேர்ந்த அரசு சூஃபி குழுவினர் ஷேக் அப்துல் ஹமீது அல்ஷரீஃப் மற்றும் முகமது ஃபர்கலி ஆகிய பாடகர்களுடன் மேடையேறினர். மூன்று வெவ்வேறு விதமான கம்போஸிஷன்களில் இடைவெளியின்றி பாடி அசத்தினார்கள். கடவுளுக்கான வாழ்த்தில் தொடங்கி பிரபல கவிஞர்களின் பாடல்களின் மூலமாக மகிழ்ச்சிக்கான செய்தியைப் பரப்பினார்கள். அந்த உயிர்ப்பான குரல்களில் மெய்மறந்திருந்த ரசிகர்களை அப்படியே எகிப்துக்கே கொண்டு சென்று விட்டனர் தம் அபாரமான வாசிப்பால் இசைக் குழுவினர்.

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பார்வதி பவல்(Parvathy Baul) பற்றி அறியாத இசைப்பிரியர்கள் இருக்க முடியாது. இவர் பாடகி மட்டுமல்ல. சிறந்த ஓவியரும் கதைசொல்லியும் கூட. ரவீந்திரநாத் தாகூரின் சாந்தினிகேதன் கலாபவன் மாணவியாக இருந்தவர் பவல் சமூகத்தின் கலாச்சாரங்களால் ஈர்க்கப்பட்டு அவர்களின் பழக்கவழக்கங்களுடனான இசைவழி செல்ல முடிவெடுத்தவர். #படம் 2:பார்வதி பவல்

இவர் பாடும் போது கூடவே இசைக்கப் பயன்படுத்துவது ஒற்றை நரம்பு கொண்ட எக்தாரா, ஒரு ஜோடி முரசு, மற்றும் காலின் சலங்கைகள்.# படம் 3 : எக்தாரா, முரசு [முதல் இம்மூன்று படங்கள் மட்டும் ஸோனி w80-ன் அதிகபட்ச ஜும் ஒத்துழைப்பில் நான் எடுத்தவை.]

ராஜஸ்தானைச் சேர்ந்த பெரியவர் கச்ராகானும், கோடாவைச் சேர்ந்த ஹிஃப்சுரேமான் ஹகிமியும் சிறப்பாகப் பாடினார்கள்.

நிகழ்ச்சியின் ஹைலைட்டாக அமைந்திருந்தது இறுதியாக வந்த டனோரா(Tannoura) நடனம். கலை என்பது தெய்வீகம் எனும் அர்ப்பணிப்புடன் வேகமாக ஒலித்த இசைக்கு சுறுசுறுவென சுழன்று சுழன்று இருபது நிமிடங்கள் ஆடி பார்வையாளர்களைக் கிறங்க வைத்து விட்டனர் முழுநீள பலவண்ண உடையிலிருந்த இருவர். மேலே குடை போல சுழற்றுவது ஆரம்பத்தில் இடுப்பில் அணிந்திருந்த பாவாடை போன்ற அங்கியின் மேல் அணிந்திருந்த ஒன்றே. ஹூலா ஹூப்ஸ் போல கொஞ்ச கொஞ்சமாக விரிந்து தலை வரை கொண்டு வந்து சுழற்றுகிறார்கள். கூட்டமே ஸ்தம்பித்து விட்டது.

கரகோஷம் விண்ணைப் பிளக்க, கடைசி ஐந்து நிமிடங்கள் அதை கையில் தூக்கிப்பிடித்து சுழற்றியவாறு கூட்டத்துக்குள் நடனமாடியபடியே வந்து பார்வையாளர்களை மகிழ்வித்தார்கள். அற்புதமான காட்சிகள்தாம். படமெடுக்க அனுமதி இல்லாததால் வேறுவழியின்றி இணையத்திலிருந்து எடுத்து சிறிய அளவில் பகிர்ந்துள்ளேன். நன்றி:கூகுள்

நுழைவுச் சீட்டுகளிலேயே வீடியோ பதிவுக்கு அனுமதியில்லை என அச்சடிக்கப் பட்டிருக்கிறது. பங்கு பெறும் கலைஞர்களின் நிகழ்ச்சிகள் தனித்தனி ஆடியோ வீடியோ சிடிகளாக அங்கேயே விற்கப்படுகின்றன, விருப்பமானவர் வாங்கிட வசதியாக. இடைவேளையில் நாங்களும் வாங்கினோம். வீடியோதானே கூடாதென பலர் தம் மொபைல் மற்றும் காமிராக்களில் மேடை நிகழ்வை அவ்வப்போது புகைப்படமாக க்ளிக்கிட்டபடி இருக்க நானும் தயக்கத்துடன் பார்வதி பவல் தோன்றும் போது ஒருசில படங்கள் எடுத்தேன். புகைப்படங்கள் எடுப்பதைத் தவிர்க்கும்படியும், அது கலைஞர்களுக்கு இடைஞ்சலாக அமையுமென்றும் அடுத்து அறிவிப்பானது. காமிராவைப் பைக்குள் போட்டு மூடி விட்டேன். இதுவும் மேடை நிகழ்வுகளில் மதிக்கப்படவேண்டிய ஒரு புகைப்படப் பாடம்தானே:)?

ருஹானியத். நீங்கள் வசிக்கும் நகரில் நடைபெற்றால் தவறவிடாதீர்கள். பெரிய இசைஞானம் ஏதுமின்றி இரண்டுமுறையும் வெகுவாகு ரசிக்க முடிந்த அனுபவத்தில் சொல்லுகிறேன்:)! இந்நிகழ்ச்சியின் மூலம் வசூலாகும் தொகை ஆதரவற்றோருக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது உங்களுக்கான கூடுதல் தகவல்.
***

எழுதி வைத்து, ரொம்ப காலமாக ட்ராஃப்டிலேயே இருந்து போனவற்றைத் தொகுத்து மூன்று பாகங்களாக வழங்கியாயிற்று! பொறுமையாய் கூட வந்தவருக்கு நன்றி:)!

புதன், 1 ஜூன், 2011

கண்ணோடு காண்பதெல்லாம்.. நடனம் - மேடைப் படங்கள் (பாகம் 2)

கண்ணோடு காண்பதெல்லாம்.. காமிராவுக்குச் சொந்தமில்லை என எனைத் தடுமாற வைத்த அனுபவம் இது:)!

இரவுக் காட்சிகளை எடுக்க என்னென்ன அவசியம் என்பதைப் புரிய வைத்த படங்கள் இவை.

சென்ற வருட ஜனவரியில் விடுமுறைக்காக குமரகம் சென்றிருந்ததும் அதைப் பற்றிய பகிர்வு ‘ஏரிக்கரைப் பூங்காற்றே..’ புகைப்படங்களுக்காக தமிழ்மணம் விருது 2010 வெள்ளிப் பதக்கம் பெற்றதும் உங்களில் பலர் அறிந்திருக்கக் கூடும்.

அங்கு வேம்பநாடு ஏரிக்கரையில் அமைந்த தாஜ் ரெட்ரீட் விடுதியில் இருக்கும் சிறு நீர்தேக்கத்தைச் சுற்றிலும், மாலைச் சூரியன் மெல்ல மெல்ல ஏரிக்குள் உறங்கச் செல்ல, இருள் படர ஆரம்பிக்கும் ஏழுமணி அளவில் ஆரம்பித்து, நான்கு கிராமத்துபெண்கள் ஆயிரம் அகல்விளக்குகளை ஏற்றி வைப்பது பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். (நீர் நிலம் அக்னி வாயு ஆகாயமென பஞ்சபூதங்களையும் தரிசிக்கும் ஐதீகமாம்). சரியாக அத்தனை விளக்குகளும் ஏற்றி முடிக்க ஒருமணி நேரமாவது தேவைப்படுகிறது.

இந்தப் பின்னணியில் அங்கிருக்கும் பேக்கர்ஸ் பங்களாவையொட்டிய புல்வெளியில் தினமும் இரவு எட்டிலிருந்து எட்டரை மணி வரை ஒவ்வொருநாளும் ஒன்றாக மோகினியாட்டம், பரதநாட்டியம், திருவாதிரை எனும் கேரளப் பாரம்பரிய கூட்டுநடனம், வயலின் மெல்லிசை எனக் காண வாய்த்தது. அருகிலேயே உணவுக் கூடாரம். இரவு உணவை சுவைத்தபடி நிகழ்வுகளை தங்கியிருப்பவர் ரசிக்கவே இந்த ஏற்பாடு.

முதல் நாள் மோகினி ஆட்டம். மாலை படகுச் சவாரி முடிந்து ஏரிக்கரை புல்வெளியில் வழங்கப்பட்ட கேரளப் பணியாரங்கள், தேநீர் இவற்றால் வயிறு ‘கம்’ என்று இருப்பதாகவும், பசிக்கவில்லையாதலால் சற்று பொறுத்து வருகிறோமென்றும் கணவரும், மகனும் காட்டேஜில் தங்கி விட நான் மட்டும் ஆர்வமாய் ஆஜராகி விட்டேன் அங்கே எட்டு மணிக்கு. நான்கு நாட்களுமே ஆரம்பத்தில் இருபது பேரும் நிகழ்வு முடியும் நேரம் 40 பேர் வரைக்குமே பார்வையாளர்கள் எனினும் முழு ஈடுபாட்டுடன் கலைஞர்கள் லயித்து ரசித்து தம் கலையோடு ஒன்றி, பார்ப்பவரையும் ஒன்றிட வைத்தார்கள்.

என்ன ஒரு அருமையான சந்தர்ப்பம்? படம் எடுக்க எந்த விதக் கட்டுப்பாடும் கிடையாது. புல்வெளியின் சமதளத்துக்கு தற்காலிகமாய் போடப்பட்டிருந்த மேடையை ஒளியூட்ட ஒரு ஃபோகஸ் விளக்கு(படம் 1). எத்தனை நெருங்கிச் சென்று வேண்டுமானாலும் படம் எடுக்கலாம். வழக்கமாக படம் எடுக்க போட்டிக்கு வரும் வெளிநாட்டவர் கூட யாருமில்லை. ஆயினும் ஆயினும்.... :(!

அகல் தீபங்கள் ஆயிரம் பின்னால் ஒளிர்ந்து கொண்டிருக்க அற்புதமாக ஆட ஆரம்பித்தார் நர்த்தகி. ரசித்தபடியே ஆர்வமாகப் படங்களை எடுக்க ஆரம்பித்தேன். எடுத்த படங்களை உடனுக்குடன் பார்க்கப் பார்க்க அதிர்ச்சியில் உறைந்து போனேன். ‘மோகினி ஆட்டமல்லவா? அதனால்தானோ!’ என எண்ணும் வகையில் நர்த்தகியின் கைகள் கழன்று திசைக்கொன்றாக வான் வெளியில் மிதந்து கொண்டிருந்தன. ‘மகிஷாசுரனை அழிக்க வந்த ஸ்வரூபமோ’ எனத் தலைகள் பன்மடங்காகித் தெரிந்தன.

சோனி W80 அளவில் மிகச் சிறியதாயினும் எனக்குக் கைநடுக்கமே ஏற்படாது. பலரும் என் பல படங்களைக் குறிப்பிட்டு ஷேக் இல்லாமல் எடுத்திருப்பதாய் சொல்லியிருக்கிறார்கள். அப்போதுதான் . ‘ஓஹோ.., இது பாராட்டுக்குரிய ஒரு திறமை போலும்’ என உணர்ந்திருக்கிறேன்.

என்னதான் பிரச்சனை என முழிந்துக் கொண்டிருக்கையில் கணவரும் மகனும் சாவகாசமாக நடந்து வந்து கூடாரத்து சாப்பாட்டு மேசையில் அமர்ந்தார்கள். பீதி அப்பிய முகத்தோடு விரைந்து சென்று ‘காமிராவுக்கு என்னவோ ஆயிட்டு’ என்றேன். முந்தைய பாகத்தில் சொன்னது போல நான்தான் அப்போது காமிராவின் பிற பயன்பாடுகளை முயன்றிராத பேர்வழியாயிற்றே. கணவர் சிரித்து விட்டு ‘இரவுக் காட்சிகளுக்கு ISO மாற்றணும். Night shot mode இருக்குதா பார்’ எனச் சுட்டிக்காட்ட அதன் பிறகு எடுத்த படங்களே இங்கே:
மோகினி ஆட்டம்
#படம் 1#படம் 2#படம் 3#படம் 4


2. பரதம்
#படம் 5#படம் 6
3. திருவாதிரைக்களி
ஓணம் மற்றும் திருவாதிரை விழாக்களில் கேரள நங்கையர் ஆடி மகிழும் இந்நடனம் ‘கைகொட்டிக்களி’ என்றும் அழைக்கப்படுகிறது. (தீபங்களின் ஒளி தனித்துத் தெரிய வேண்டுமென்பதற்காகவோ என்னவோ, இந்த நிகழ்ச்சிக்கு ஃபோகஸ் லைட்டும் இருக்கவில்லை. மிகக் குறைந்த வெளிச்சத்தில் படமாக்க வேண்டியிருந்தது.)
#படம் 7


இப்படியாகத் தொடர்ந்து வந்த நாட்களிலும் ISO மற்றும் twlight mode-ல் ஒருவாறாக . . 'சுமார்' திருப்தியுடன் இரவுப் படபிடிப்பை முடித்தேன். (சுமாராகத் தேறியவற்றையே பகிர்ந்தும் உள்ளேன்).

ஊரிலிருந்து வந்ததும் ‘பிட்டூ..’ என ஓடினேன். இரவுப் புகைப்படக்கலை பற்றிய விளக்கங்கள் இரண்டு (PiT) பதிவுகளில் கிடைத்தன:இரவுப்புகைப்படக்கலை - ஒரு அறிமுகம்; படம் செய்ய விரும்பு- 5 இரவு புகைப்படக்கலை - பாடம் 1.

“இரவு காட்சிகளில் முக்காலியின் அவசியத்தை பல காலம் கழித்துதான் தெரிந்து கொண்டேன்
” என இதிலொரு பதிவில், இன்றைக்கு சென்னையில் புகைப்படக் கண்காட்சிகள் நடந்தும் புகழ்பெற்ற வல்லுநர் ஒருவர் பின்னூட்டத்தில் சொல்லியிருந்தது பார்த்து சற்றே ஆறுதலாகவும், கொஞ்சமே கொஞ்சம் அற்ப சந்தோஷத்தைத் தருவதாகவும் இருந்தது:)! DSLR-ல்தான் நல்ல ரிசல்டுக்கு வாய்ப்பு அதிகம் என்றாலும் கூடுதலாக நான் செய்திருக்க வேண்டியது முக்காலிக்கு பதில் ஒரு நாற்காலியில் காமிராவை வைத்து செல்ஃப் டைமர் போட்டிருந்திருக்கலாம்.

போகட்டும். இப்போது முக்காலியுடன் DSLR-ல் இரவுக் காட்சிகளைப் படமாக்குவதிலே தேர்ச்சி பெற்று விட்டக் கதையைதான் உங்களுக்கு ஏற்கனவே சூப்பர் மூன் மற்றும் சித்திரா பெளர்ணமி பதிவுகளில் சொல்லி விட்டுள்ளேனே. நீங்களும் சூப்பர் சூப்பர்னு சொல்லிவிட்டீர்களே:)!
***

சவாலே சமாளி.. பட்டிமன்றம் - மேடைப்படங்கள் (பாகம் 1) இங்கே.

அடுத்த பாகத்துடன் தொடர் நிறைவுறும்:)!

திங்கள், 30 மே, 2011

சவாலே சமாளி.. பட்டிமன்றம் - மேடைப்படங்கள் (பாகம் 1)

கலைகள், அதில் ஈடுபடுவோர் ரசிப்போர் இருசாராருக்கும் உற்சாகத்தையும் புத்துணர்வையும் தருபவை. சென்ற வருடம் ரசிக்கக் கிடைத்த சில [இசை, நடனம், பட்டிமன்றம்] நிகழ்வுகளைப் பற்றியும் அவற்றைக் காட்சிப் படுத்திய அனுபவம் பற்றியும் ரொம்பத் தாமதமாக... :)!

மேடைப்படங்கள் எடுப்பது சற்றே சிரமமானது. பெரிய நிகழ்வுகளில் மேடை முன்னே நடக்கும் அனுமதி இருக்காது. மிக அருகில் சென்று எடுக்க இயலாது. இருந்து இடத்திலிருந்து எடுக்கையில் முன் வரிசையில் இருப்பவர் தலைகள் ஃப்ரேமுக்குள்ளே வரக் கூடாது. இரவுக் காட்சிகளாக இருப்பின் பாயிண்ட் & ஷுட்(P&S) காமிராவில் அத்தனை பிரமாதமான ரிசல்ட் கிடைக்குமென எதிர்பார்க்க இயலாது.

இது போன்ற சந்தர்ப்பங்களில் செய்கிற பரிசோதனை முயற்சிகள், தவறுகளில் கிடைக்கும் பாடங்கள் நம்மை மேம்படுத்திக் கொள்ள உதவுகின்றன. எடுத்த படங்கள் சில வேளைகளில் சரிவராது போனால் கூட, . “அடடா இது நமக்கு சரிப்படாது” என சோர்ந்து ஒதுங்கிப் போகாமல் தவறுகளை ஆராய்ந்து திருத்திக் கொள்வதில் ஆர்வம் காட்ட வேண்டும்.

பட்டி மன்றம்:


பேச்சுக்கலையை தமிழ்நாட்டில் வளர்ப்பவை அரசியல் மேடைகளா பட்டிமன்றங்களா என ஒரு பட்டிமன்றமே நடத்தி விடலாம். 1987-ல் என நினைக்கிறேன். தூர்தர்ஷனின் தமிழ் ஒளிபரப்பு தமிழகம் எங்கும் தெரிய ஆரம்பித்த காலத்தில்தான் சாலமன் பாப்பையா தலைமையிலான பட்டிமன்றங்கள் அறிமுகமாயின. ஆரம்பக் காலத்தில் சுவாரஸ்யமாக இருந்தாலும் வெகுவிரைவில் எடுத்துக் கொள்ளப்பட்ட தலைப்புகளில் (எனக்கு) ஈர்ப்பு இல்லாததாலும், சிலநேரங்களில் ஓரணியில் இருக்க நேர்ந்து விட்ட காரணத்துக்காக விடாப்பிடியாக தவறான கருத்துக்களை வலியுறுத்துவது(விதண்டா வாதம்?) போன்ற தோற்றங்களைத் தந்ததாலும் நாட்டம் குறைந்து பட்டிமன்றங்களைப் பார்ப்பதேயில்லை நான். இதனால் இக்கால பேச்சாளர்கள் பற்றியும் அதிகம் அறிந்திருக்கவில்லை.

அப்புறமாக வந்த விஜய் டிவியின் ‘நீயா நானா’ கலந்துரையாடல் புதுமையாகவும் அருமையாகவும் தோன்றியது. தொடக்க ஜோர் அதிலும் கொஞ்ச கொஞ்சமாய் தேய்ந்து போனது. உறவு சார்ந்த தலைப்புகளில் குடும்ப நபர்களுக்குள்ளே பகையை உண்டு பண்ணும் அளவுக்கு நிகழ்ச்சிகள் செல்ல, கலந்து கொள்பவர்களும் ‘என்ன பேசுகிறோம்’ எனும் விவஸ்தையின்றி எதையெதையோ பேசுவது கண்டு ஏற்பட்ட அயர்ச்சியில் அதையும் நிறுத்தி விட்டேன். எப்போதேனும் தாம் கலந்து கொள்வதாக பதிவர்கள் அறிவிக்கையில் மட்டும் பார்க்கிறேன் இப்போது:)!

கடந்த வருடம் ஜூலை இரண்டாவது ஞாயிறு மாலை, பெங்களூர் செளடையா அரங்கில் சன் டிவியின் ‘கல்யாண மாலை’ பட்டிமன்றமும் படப்பிடிப்பும் நடக்கவிருப்பதாகவும் வர விருப்பமா எனக் கேட்டும் அழைப்பு விடுத்தார் தோழி ஷைலஜா. மல்லேஷ்வரத்தில் வயலின் போன்ற அமைப்பைக் கொண்ட இந்த அரங்கு என் இல்லத்திலிருந்து அதிக தொலைவில் இல்லை என்பதால் மட்டுமின்றி, நேரில் பட்டிமன்றம் பார்த்ததில்லை என்கிற ஆர்வத்தாலும் நண்பர்களை சந்தித்த மாதிரியும் ஆயிற்று என்பதாலும் உடனடியாக ஒப்புக் கொண்டேன்.

அவ்வப்போது பெங்களூரில் இலக்கியக் கூட்டம் நடத்தும் ஐவரில் ஒருவர் (ஷக்தி ப்ரபா) தனக்குப் பிறந்தநாள் எனப் பின் வாங்கிவிட, திருமால் மற்றும் ஜீவ்ஸ் உள்ளிட்ட நால்வர் ‘பேரணி’(?) சரியான நேரத்தில் அரங்க வாயிலில் ஆஜர் ஆனது! மூன்றாம் வரிசையில் இருக்கைகளைத் தேடி அமர்ந்து கொண்டது.

கூட்டணியின் இரண்டு புகைப்படக்காரர்களும் தத்தமது காமிராக்களைத் தயாராக எடுத்து வைத்துக் கொண்டிருந்தோம். லென்சுகளை அடிக்கடி கழற்றி மாற்றிப் போட்டு, ஜூம் செய்து படங்களை எடுத்துக் கொண்டிருந்தார் வல்லுநர். சலங்கை ஒலி கமல், ஜெயப்ரதா எடுத்த படங்களைப் பார்த்து தன்னுடைய காமிராவை ஒளித்து வைத்தது போலன்றி, அசராமல் என் சோனி W80-யில் சுட்டுத் தள்ளினேன். பின்னே, தன்னம்பிக்கையே என் தாரக மந்திரம் அல்லவா:)? காமிராவின் அதிக பட்ச ஜூம்(zoom) ஒத்துழைத்த அளவுக்குக் கிடைத்த படங்களே இங்கே. எப்படி வந்துள்ளன என்பதை உங்கள் கருத்துக்கே விடுகிறேன்.

வொயிட் பாலன்ஸும் காமிராவின் இன்னபிற வசதிகளும்:


ஒளிக்கு ஏற்ப white balance-யை மாற்ற வேண்டும் என்பதை இப்போது SLR-ல் மறக்காமல் கவனிக்கும் எனக்கு P&S[Point and shoot]-ல் அந்த வசதி உண்டு எனும் அடிப்படை கூடத் தெரியாது இருந்திருக்கிறது அப்போது! அதை சொல்லித் தந்தார் வல்லுநர். வரவேற்புரை, குத்துவிளக்கேற்றும் வைபவம் என ஆரம்பத்தில் எடுத்தவற்றை விட வொயிட் பாலன்ஸ் அட்ஜஸ்ட் செய்தபின் எடுத்த படங்கள் கூடுதல் தெளிவாக இருந்தன.

இதை நீங்களே P & S-ல் பரிசோதித்துப் பார்க்கலாம். சாதாரணமாக auto mode-ல் வைத்து எடுப்பதற்கும் Program mode-க்கு மாறிக் கொண்டு வீடியோ வெளிச்சத்துக்கு ஏற்ப [use under incandescent light or video lights எனும் குறிப்போடு குண்டு பல்பு படம் போட்டிருக்கும் கவனியுங்கள்.] செட் செய்து எடுப்பதற்கும் நிறைய வித்தியாசம் கிடைப்பதை. படங்கள் துல்லியமான விவரங்களுடன் கிடைக்கும். அது போல வெள்ளை ஒளி [white fluorescent light], சூரிய வெளிச்சமெனில் அதற்கேற்ப white balance-யை மாற்றிடுங்கள்.

நமது பதிவர்கள் பலரும் தொடர்ந்து ஏதேனும் நிகழ்வுகளுக்கு சென்று படமெடுத்து பதிந்தபடியே இருக்கிறார்கள். அவர்களில் ஒரு சிலருக்கேனும் இக்குறிப்பு பயனாகலாம்.

தவிரவும், எப்போதுமே நமது காமிராவில் தரப்பட்டுள்ள பலதரப்பட்ட வசதிகளைப் பயன்படுத்தத் தவறாதீர்கள். வேகக் காட்சிகளுக்கு Action or Sports, குறைந்த ஒளியில் Night மற்றும் ISO, இயற்கை காட்சிகளின் வண்ணங்களை எடுப்பாகக் காட்ட Landscape, பொருட்களை வெகு அருகாமையில் எடுக்க macro இப்படியாக..

இனி பட்டிமன்ற மேடைக்கு செல்வோமா?

குடும்பமா.. பணியிடமா..:


அன்றைய தலைப்பு, இன்றைய வாழ்வில் சவாலாக இருப்பது குடும்பமா பணியா என்பதே. காலத்துக்கேற்ற தலைப்புதான். குடும்பம்தான் என்று வாதிட முறையே மென்பொருள், பத்திரிகை மற்றும் அக்கவுண்ட்ஸ் துறைகளைச் சார்ந்த மூவர். பணியிடம்தான் என்று வாதிட மென்பொருள், அரசுப்பணி மற்றும் வ்ங்கித் துறை சார்ந்த மூவர்.

1. ஆரம்பமாகிறது பட்டிமன்றம்
அறிவிக்கப்பட்ட சரியான நேரத்தில்..


2. குடும்பம்-சவாலே சமாளி
நகைச்சுவையாகப் பேசித் தன் கருத்துக்களை முன் வைக்கிறார் அணித் தலைவர்.

சிரிக்கிற யுவதியை வல்லுநர் எப்படி அழகாய் படம் பிடித்துப் பதிந்துள்ளார் என நீங்களே பாருங்கள்: http://www.flickr.com/photos/iyappan/4960758285/in/photostream
ஃப்ளிக்கர் தளம் சிலருக்கு எளிதாகத் திறப்பதில்லை ஆதலால் படம் இங்கேயும்:
படம்#ஜீவ்ஸ்அசந்து மறந்து இதற்கான பாராட்டை என் கணக்கில் யாரும் டெபாசிட் செய்து விடக் கூடாதென்பதால் வித்தியாசப்படுத்த சிறிய அளவில் பதிந்துள்ளேன்:)!

இந்த அளவுக்கு விருப்பத்துக்கு ஏற்றவாறு வொயிட் பாலன்ஸ் அளவுகளை பாயிண்ட் அண்ட் ஷூட்டுகளில் மாற்ற இயலாதுதான். அதே நேரம், ஒரே மேடையின் ஒரே சமயப் படங்களில் காணக் கிடைத்த ஒளி வேறுபாடு வொயிட் பாலன்ஸின் அவசியத்தை உங்களுக்கு உணர்த்தும். எனது காமிராவில் நான் அட்ஜஸ்ட் செய்யாமல் இருந்திருந்தால் படங்கள் இப்போது உள்ளதைவிடவும் அதிகமாய் மஞ்சள் பூசிக் குளித்திருந்திருக்கும்.

3. பணியிடமே பயங்கர சவால்
முஷ்டியை மடக்கி வாதிடுகிறார் எதிரணித் தலைவர்


4. நடுவராக பாரதி பாஸ்கர்
தீர்ப்பு வழங்கும் திண்டாட்டத்தில்..


பட்டிமன்றங்கள் பார்த்ததில்லை என்று சொன்னேனே. ஆக, பிரபல பேச்சாளரான பாரதி பாஸ்கரை டிவியில் அன்றி அங்குதான் முதன் முறை பார்த்தேன். பேச்சையும் கேட்டேன். வாதங்களுக்கு ஏற்ப மிகச் சரளமாகவும் மென்மையானதொரு ஆளுமையுடனும் நகைச்சுவை மிளிரப் பேசி வியக்க வைத்தார். மொத்தத்தில் இருபக்கத்தினருமே வீண் தர்க்கங்கள் ஏதுமின்றி ரசிக்கத்தக்க நியாயமான பதில்களைத் தந்து அவரவர் கருத்துக்களை அழுத்தமாகப் பேசி முடித்தது சிறப்பு.

கல்யாண மாலை பல ஊர்களிலும் நடத்தி வரும் பட்டிமன்றங்களில் அந்தந்த ஊரைச் சேர்ந்த பேச்சாளர்களையும், புதியவர்களையும் ஊக்கம் தந்து மேடையேற்றி வருவதாகவும் தெரிய வந்தது. பெங்களூரிலிருந்து இரண்டு கட்சிக்கும் ஒவ்வொருவரைத் தேர்வு செய்து தர ஷைலஜாவின் உதவி நாடப்பட, அவர் நம் பதிவர்களை முன் நிறுத்த விரும்ப, குடும்பச் சுமையால் அம்பியும், பணிச் சுமையால் ஜீவ்ஸும் தேர்வுக்கு சென்னை செல்ல இயலாமல் வாய்ப்பைத் தவற விட்டு ஷைலஜாவிடம் வாங்கிக் கட்டிக் கொண்டார்கள். நாமும் பதிவர்களை ‘உலகெங்கும்’ [அதிர அதிர சொல்லிக்கணும்] ஒளிபரப்பாகும் நிகழ்வு மேடையில் காணும் வாய்ப்பினை இழந்தோம்!

பார்வையாளர் கூட்டத்திலிருந்த எங்களை பளிச்சுன்னு படமெடுத்து பத்து வார ஒளிபரப்பிலும் தோன்றச் செய்த கேமிரா மேனை நான் பளிச்சுன்னு புடிச்ச படம்:)!


5. தொழில் பக்தி

செய்யும் தொழிலே தெய்வம்
சொல்லாமல் சொல்லுகிறது
காமிராவை அலங்கரிக்கும் பூச்சரம்.

பட்டிமன்றத்தின் முடிவில் நடுவர் அளித்த தீர்ப்பு இருக்கட்டும் ஒரு பக்கம். உங்கள் பார்வையில், இன்றைய சூழலில் அதிக சவாலாக இருப்பது பணியிடமா குடும்பமா?


[இசை, நடனம்- மேடைப்படங்கள். அடுத்த பாகத்தில் அல்லது இரண்டு பாகங்களாக விரைவில்..:)]

*** ***

புதன், 25 மே, 2011

விழியனின் ‘காலப் பயணிகள், ஒரே ஒரு ஊரிலே..’ இரு நாவல்கள்- ஒரு பார்வை

கணினி விளையாட்டுக்கள், கார்ட்டூன் படங்கள் இவையே பிடித்தமான பொழுது போக்குகளாகி வருகின்றன இன்றைய குழந்தைகளுக்கு. அதே கணினியும் தொலைகாட்சிப் பெட்டிகளுமே பெரியவர்களின் நேரத்தையும் ஆக்ரமித்துக் கொண்டு வருகையில் வாசிப்பை எப்படிக் குழந்தைகளிடம் வளர்ப்பது? தாமும் மாறி, குழந்தைகளுக்கும் வாசிப்பை ஒரு விருப்பமான பொழுதுபோக்காக மாற்ற வேண்டியது பெற்றோரின் அத்தியாவசியக் கடமைகளில் ஒன்றாகிறது.

பாடப் புத்தகங்கள் அறிவை வளர்க்குமெனில் நல்ல குழந்தை இலக்கியங்கள் நாளைய உலகை எதிர்கொள்ளத் தேவையான நேர்மையை, மனவலிமையை, நற்பண்புகளை, நல்ல பழக்கவழக்கங்களை வளர்க்கும். மொழிவளம், கற்பனைத் திறன் பெருகும். பிழையற்ற தமிழ் வசமாகும்.

குழந்தைப் பருவத்தில் கோகுலம், அம்புலிமாமா, ரத்னபாலா, பாப்பா மலர், அணில் மற்றும் சாகசங்கள் நிறைந்த காமிக்ஸ்கள் என புதியதோர் மாய உலகுக்குள் நம்மை கட்டிப் போட்ட கதைகள்தாம் எத்தனை? நல்ல நல்ல குழந்தை இலக்கியங்களைத் தேடித்தேடி வீட்டுப் பெரியவர்கள் வாங்கித் தந்தார்கள். இதோ நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு வாங்கித் தர அற்புதமான இரு நாவல்களைப் படைத்திருக்கிறார் பள்ளிச் சிறுவர்களை மனதில் கொண்டு, கவிஞரும் எழுத்தாளரும், பதிவரும் புகைப்படக் கலைஞருமான விழியன் என்ற உமாநாத்.


நாவல் 1: காலப் பயணிகள்


ஒரே தெருவில் குடியிருக்கும் நான்கு மாணவர்கள் வினய், ராகவ், ப்ரீதா, ஆர்த்தி. இதில் சிறுமியர் இரட்டையர்கள். நல்ல நண்பர்களான இவர்கள் கையில் கிடைக்கிறது மாயப் புத்தகம் ஒன்று.அதன் மூலமாக கடந்தகாலத்துக்கும் வருங்காலத்துக்கும் பயணம் செய்து வாழ்வின் வெற்றி ரகசியத்தை எப்படிக் கண்டு பிடிக்கிறார்கள் என்பதே ‘காலப் பயணிகள்’ நாவல். பதினாறு அத்தியாயங்களுக்கும் ஆவலை அதிகரிக்கும் விதமாக ‘அனுமானுடன் சந்திப்பு, இராமனும் போர்க்களமும், பாஞ்சாலங்குறிச்சி, கட்டபொம்மன் அரண்மனையில், வேங்கடரத்தினம் எனும் ஆச்சரியம்’போன்ற சுவாரஸ்யமான தலைப்புகள்.

முன்னூறு ஆண்டுகள் முன்னுக்குச் சென்று சந்தித்த வேங்கடரத்தினம் நமக்கும் ஆச்சரியமானவர்தான். நாட்டுக்கு ஒருவர் அப்படிக் கிடைத்து விட்டால்.. ? அவர்கள் நுழைந்த வருங்காலத்தில் ப்ளாஸ்டிக் ஒழிந்து, எங்கெங்கும் மரங்கள் வளர்ந்து, புகைவரும் வண்டிகள் மறைந்து, சூரியஒளி பயன்பாடு பெருகி எனப் பேராச்சரியங்கள் பல சாத்தியப்பட்டதற்கு.., இன்றைய மாணவர்களிடம் ஏற்பட்ட உலகளாவிய விழிப்புணர்வைக் காரணம் காட்டிய இடத்தில் ஆசிரியர் தன் நோக்கத்தைத் தொட்டு உயர்ந்து நிற்கிறார்.

அனுமானின் வழவழப்பான கூந்தலைப் பார்த்து அதைப் பராமரிக்க என்ன பயன்படுத்துகிறார் என ப்ரீதா கேட்க எண்ணுவது,ஜாக்ஸன் துரையை தான் சந்தித்த அனுபவத்தை நிஜக் கட்டபொம்மன் குழந்தைகளுக்கு விவரிக்கையில் “அரசே, ‘மாமனா.. மச்சானா.. மானங்கெட்டவனே’ இந்த வசனத்தை நீங்கள் பேசவேயில்லையே?” என வினய் கேட்பது என ஆங்காங்கே நகைச்சுவைக்கும் பஞ்சமில்லை.

பெற்றோருக்குத் தெரியாமல் இந்த சாகசப் பயணங்களில் ஈடுபடுவதாக வருவது மட்டுமே நெருடல். சொன்னால் கதை நிகழ்ந்திருக்கவே வாய்ப்பில்லையே. ஹாரி பாட்டர் போன்ற மந்திர மாய புதினங்களில் தவிர்க்க முடியாது போகும் சில சமரசங்களுக்கும், நிதர்சனத்துக்குமான இடைவெளிதனைப் புரிந்தவரே இக்காலப் புத்திசாலிக் குழந்தைகள் எனத் தாராளமாக நம்பலாம். இருப்பினும் கூட அடுத்த கதையில் இதை சரி செய்து விட்டுள்ளார் ஆசிரியர்.

வினய்யின் செய்தித்தாள் வாசிக்கும் வழக்கம், குழந்தைகளின் நூலகம் செல்லும் ஆர்வம் கண்டு பெற்றோர் அடையும் மகிழ்ச்சி, நேரந்தவறாமை இவற்றுடன் ‘தீவிரமாக ஒரு செயலில் ஈடுபட்டால் தானாகவே வழிகள் பிறக்கும்’, நட்பின் இலக்கணம் நண்பர்களின் வெற்றியைக் கொண்டாடுவது போன்ற பல நற்சிந்தனைகளையும் கதையின் போக்கில் தேனில் தோய்த்த பலாச் சுளைகளாகக் கொடுத்திருக்கிறார் ஆசிரியர். முத்தாய்ப்பாக வருகிறது ஆழமாய் மனதில் நிறுத்த வேண்டிய வெற்றியின் ரகசியம்.
***

நாவல் 2: ஒரே ஒரு ஊரிலே..


அடுத்த நாவலின் தலைப்பே அழகு. 'ஒரே ஒரு ஊரிலே...' அட, இப்படித்தானே எல்லாக் கதைகளையும் தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா ஆகியோர் நமக்கும், நாம் நமது குழந்தைகளுக்கும் சொல்ல ஆரம்பிப்போம். சுற்றிக் குழந்தைகளை அமர வைத்து அவர்தம் கண் அகலக் கதை கேட்கிறதொரு பாணியிலே சொல்லிச் செல்கிறார் இக்கதையை.

பதினைந்து அத்தியாயங்கள் கொண்டது. அறிமுக அத்தியாயங்களை ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் எனத் தனித்தனியாக ஒதுக்கியிருக்கிறார். சோழவரம்பன் கதை சொல்லும் அத்தியாயம் குழந்தைகளை ரசிக்க வைக்கும். யார் சோழவரம்பன்? பார்க்கலாம்.

இந்தக் கதையிலும் நாயகர்களாக நண்பர்கள் அருண், செந்தில், சாப்பாட்டுப் பிரியன் சரவணன், ஆராதனா அவள் ‘வளர்க்கும் பிரிய நாய்’ சோழவரம்பன் மற்றும் எப்போதாவது இவர்களுடன் சேர்ந்து விளையாட அனுமதிக்கப்படும் வரலட்சுமி.

பள்ளி செல்லும் ஒரு நாளில் ஆரம்பிக்கிற கதையானது பள்ளி முடிந்து விடுமுறையைக் கழிப்பதிலும், அதன் முடிவில் பிரிந்து செல்ல நேரும் தோழர்கள் பிறகும் நட்பை எப்படி மறவாமல் தொடர்ந்தார்கள் என்பதையும் சிறுவர்களுக்குரிய அத்தனை மெல்லுணர்வுகளையும் பிரதிபலிக்கும் வகையில் விவரிக்கிறது. சின்னச் சின்ன செல்லச் சண்டைகளையும் விட்டு வைக்கவில்லை.

தந்தையற்ற செந்திலுக்கு பள்ளிக்கட்டணம் செலுத்த உதவுவது, கிரிக்கெட்டில் தம் தோழியர் மாநில அளவில் பெயர் பெற சிறுவர்கள் மனதார ஆசைப்படுவது, மலைக் கோவில் செல்ல தெளிவாகத் திட்டமிடும் திறன், வழியில் சந்திக்கும் டீக்கடைக்காரரின் தாயற்ற மகளிடம் காட்டும் கனிவு, பின்னொரு சமயம் அச்சிறுமி வீடுதேடி வருகையில் செய்யும் உபச்சாரம் என நற்குணங்களை அறிவுரையாக அன்றி, இந்நாவலிலும் கதையின் போக்கில் குழந்தைகளுக்கு உணர்த்துகிறார் ஆசிரியர்.

மினி பயணத்துக்குப் பெற்றோரிடம் ‘அனுமதி’ பெறவதற்கென்றே ஒரு அத்தியாயத்தை ஒதுக்கி, அதன் அவசியத்தை இயல்பு வாழ்வை ஒட்டிய இக்கதையில் வலியுறுத்தியதன் மூலம், ‘காலப் பயணிகள்’ கதையில் கண்ட ஒரே குறையை ஜாக்கிரதையாக நிவர்த்தி செய்திருக்கும் ஆசிரியரின் அக்கறையும் சிரத்தையும் பாராட்டுக்குரியது.

மலைக்கோவிலில் காணமல் போன அருண் எங்கே எப்படிக் கிடைத்தான் என்பதை அவனது நண்பர்களைப் போலவே பதற்றத்துடன் வாசித்து அறிந்து கொள்ளட்டுமே உங்கள் பிள்ளைகளும்:)!
***

கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, புத்தகம் எங்கும் தூவப்பட்டிருக்கும் விதைகள் நிச்சயம் நாளை விருட்சங்களாகும். விண்ணைத் தொடும். வாழ்த்துக்கள் விழியன்.

இப்படியொரு சிறப்பான சிறுவர் இலக்கியத்தை நாளைய சந்ததியரின் நலன் கருதி வெளியிட்டிருக்கும் திரிசக்தி பதிப்பகத்தாருக்கு நன்றி.

நடுநிலைப் பள்ளி மாணவருக்கு இப்புத்தகத்தைத் தமிழ் துணைப்பாட நூலாக்கிட தமிழக அரசுக்குப் பரிந்துரைக்கிறேன்.

***

எங்கே கிளம்பி விட்டீர்கள்? கோடை விடுமுறை முடியும் முன் குழந்தைகளுக்குப் புத்தகத்தை வாங்கித் தந்திடவா? நல்லது. மகிழ்ச்சி!

விலை ரூ:70. பக்கங்கள்: 122. வெளியீடு: திரிசக்தி பதிப்பகம்.

சென்னையில் கிடைக்கும் இடங்கள்: -ந்யூ புக் லேன்ட், தி.நகர் [தொலைபேசி: 28158171, 28156006] மற்றும் டிஸ்கவரி புக் பேலஸ்[அலைபேசி: 9940446650], கே.கே நகர்.

இணையத்தில் வாங்கிட: உடுமலை.காம்
*** ***

இந்நூல் விமர்சனம் இன்று 25 மே 2011 வல்லமை இணைய தளத்தில் இடம் பெற்றுள்ளது. நன்றி வல்லமை!

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin