எந்தக் கிளை
தன் எடையைத் தாங்குமென்று
கொடி அறிந்திருக்கிறது—
நீண்டு, பின்வாங்கி, வளைந்து தாவி
எப்படியோ கண்டுகொள்கிறது
தான் பற்றிக்கொள்ள வேண்டிய இடத்தை
பூமியின் இருண்மைக்குள்
முதல் வேரைக் கீழ்நோக்கியும்
தான் ஒருபோதும் கண்டிராத
ஒளியின் திசையில்
பச்சைக்குருத்தை மேல்நோக்கியும்
அனுப்புகிறது
வியப்பதில்லை விட்டில்பூச்சி
ஏன் ஒரு வெளிச்சம்
மற்றொன்றை விடத் தன்னை
நெருக்கமாக ஈர்க்கிறதென்று—
வட்டமிடுகிறது, பாதையை மாற்றுகிறது
திரும்பி வருகிறது
ஈர்ப்பே ஒரு ஆணை என்பதாக
யாரும் அறிவிக்காத தாளங்களினூடே
உலகம் இசைத்துக் கொண்டே இருக்கிறது—
சிறகுகள் விரிவதும், மலர்கள் மலர்வதும்
காத்திருக்கும் பூமிக்கு மழை திரும்புவதுமாக
ஒவ்வொன்றும்—
ஆழ்வுணர்வின்
கட்டளைக்குப் பாடும் கவி
*
படம்: ராமலக்ஷ்மி
*
பண்புடன் மின்னிதழில் சென்ற வாரம் அறிவிப்பான ஈற்றடிக்கு எழுதப்பட்டு வெளியீட்டுக்குத் தேர்வான கவிதை. தேர்வான மற்ற வெண்பாக்கள், கவிதைகளையும் இந்த இணைப்பில் வாசிக்கலாம்:
நன்றி பண்புடன்!


விஞ்ஞானக் கவிதை. அருமை.
பதிலளிநீக்கு