புதன், 26 நவம்பர், 2008

26/11 என்னதான் வேண்டும் உமக்கு?

மும்பைச் சம்பவம் நாட்டின் வரலாற்று ஏட்டில் இன்னொரு கரும்புள்ளி. விடுதிக்குள் இருந்தபடி வீரம் காட்டிக் கொண்டிருப்பவரை ஒவ்வொரு சாமான்யனும் கேட்க விளைவதே இங்கே வரிகளாய்:



என்னதான் வேண்டும் உமக்கு?
எதுவரை செல்லுவதாய் கணக்கு?
எப்போது நிறுத்துவதாய் உத்தேசம்?
எவ்வளவுதான் தாங்கும் இத்தேசம்?

மனிதம் மறப்பதே புனிதம் என
போதிக்கிறது உமக்குத் தீவிரவாதம்
உங்கள் உயிரைப் பணயம் வைத்து
பணம் பார்க்கிறது பயங்கரவாதம்.

மூளைச் சலவையில் முகவரி தொலைத்து
மூளை மயங்கி முகங்காட்டுவது வீரமென்று
கையில் தரப்பட்ட 'ஏகே'க்களை ஏந்தி
கண்ணில் பட்டவரை சுடுவதுதானா உம்வெற்றி?

உங்கள் உயிரையும் போக்கிக் கொண்டு
உதவாக்கரைகளுக்கு உதவிக் கொண்டு
பாவமூட்டைகளை சுமந்து கொண்டு
பாவிகளாய் வாழ்ந்து காண்பதுதான் என்ன?

இன்றைய வெறி இத்தோடு அடங்கட்டுமே
இறப்பவர் எண்ணிக்கை இத்தோடு நிற்கட்டுமே
கணக்கின்றி போகும் காயமடைந்தோர் கதறல்கள்
கனக்கச் செய்யவில்லையா உங்கள் கல்லிதயங்களை?

பேரங்கள் பேசியபடி நீங்கள் வெளியனுப்பும்
பிரேதங்கள் பேச்சிழக்க வைக்கின்றன என்றால்
வீரமரணம் அடைகின்ற காவலரின் தியாகங்கள்
கரங்கூப்பிக் கலங்கித் தொழ வைக்கின்றன!

விட்டுவிடுங்கள் போதுமிந்தக் கோரவிளையாட்டு
குடும்பங்கள் உண்டவருக்கு புரியாதா உங்களுக்கு?
பத்துதிங்கள் உமைஒருத்தி சுமந்துதானே பெற்றாள்
மற்றவரும் அவ்வாறே வந்திந்தமண்ணிலே உதித்தார்!

***




தீவிரவாதிகள் கையில் மாட்டிக் கொண்டிருப்போர் எந்த உயிர்சேதமுமின்றி வெளிவர கூட்டுப் பிரார்த்தனை செய்வோம் வாருங்கள். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு நம் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்போம்.

82 கருத்துகள்:

  1. //உங்கள் உயிரையும் போக்கிக் கொண்டு
    உதவாக்கரைகளுக்கு உதவிக் கொண்டு
    பாவமூட்டைகளை சுமந்து கொண்டு
    பாவிகளாய் வாழ்ந்து காண்பதுதான் என்ன?//

    நெத்தியடியா சொன்னீங்க

    //கணக்கின்றி போகும் காயமடைந்தோர் கதறல்கள்
    கனக்கச் செய்யுமா உங்கள் கல்லிதயங்களை?//

    இவர்கள் இதயம் இல்லா அதிசய பிறவிகள்.

    ஒன்றும் அறியா அப்பாவிகளை கொன்று வெற்றி!!! பெற்றதாக நினைக்கும் இவர்கள் எக்காலத்திலும் திருந்த போவதில்லை.

    பதிலளிநீக்கு
  2. \\உங்கள் உயிரையும் போக்கிக் கொண்டு
    உதவாக்கரைகளுக்கு உதவிக் கொண்டு
    பாவமூட்டைகளை சுமந்து கொண்டு
    பாவிகளாய் வாழ்ந்து காண்பதுதான் என்ன?\\

    பாவிகளாய் வாழ்வது மட்டுமல்லாமல்
    அப்பாவிகளையல்லவா கொல்கிறார்கள்

    \\பேரங்கள் பேசியபடி நீங்கள் வெளியனுப்பும்
    பிரேதங்கள் பேச்சிழக்க வைக்கின்றன
    விட்டுவிடுங்கள் வேண்டாம் கோரவிளையாட்டு
    குடும்பங்கள் உண்டவருக்கு புரியாதா உங்களுக்கு?\\

    வலிகளோடு உள்ள வாக்கியங்கள்.

    பிரார்த்தனை
    -----------
    இறந்தவர்களுக்காகவும், அவர்களை இழந்தவர்களுக்காகவும்.

    அடேய் பாவிகளா உங்களும் எனது பிரார்த்தனைகள்
    இனியாவது மனிதம் விளங்கி மக்களை வாழவிட்டு,
    நீங்களும் வாழுங்கள்

    பதிலளிநீக்கு
  3. நேற்றுதான்..அல்ல இன்னும் நடந்து கொண்டிருக்கிறது போராட்டம்..நம் கையாலாகாத காவல்துறை, அரசாங்கம்..அதை சீரழிக்கும் அரசியல்வாதிகள் ஆகியோரால்!!!
    அதற்குள் துறுதுறுத்த உங்கள் மனம், கைகள் இவற்றின் திறன் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே!!!

    பதிலளிநீக்கு
  4. ஒன்று முடியும் முன் மற்றொன்று...தொடர் சங்கிலிதான்...

    பதிலளிநீக்கு
  5. ரொம்பவே வேதனையா பதைபதைப்பா இருந்தது. :(



    திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்? :(

    பதிலளிநீக்கு
  6. எதுக்கு இந்த குண்டுவெடிப்பு..என்ன சாதிக்கப் போறாங்க? நல்லா சொல்லியிருக்கீங்க உங்க ஆதங்கத்தை! மனசு ரொம்ப கஷ்டம போய்டுச்சு காலையில் பார்த்ததும்!! என்ன மாதிரி உலகத்தில் வாழறோம்னே புரியலை!

    பதிலளிநீக்கு
  7. மனித உயிர்களை மதிக்கத் தெரியாத இந்த பதர்கள் இவர்கள்.... மனித இனத்தில் சேர்க்க இயலாத இவர்கள் அழிக்கப்பட வேண்டியவர்கள்.

    இறந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்..:(

    பதிலளிநீக்கு
  8. //கிரி said...
    \\//கணக்கின்றி போகும் காயமடைந்தோர் கதறல்கள்
    கனக்கச் செய்யுமா உங்கள் கல்லிதயங்களை?//

    இவர்கள் இதயம் இல்லா அதிசய பிறவிகள்.//\\

    இதயத்தை தலைமைகளிடம் அடகு வைத்து விட்டவர்கள். இரக்கத்தை எப்படி எதிர்பார்ப்பது?

    //ஒன்றும் அறியா அப்பாவிகளை கொன்று வெற்றி!!! பெற்றதாக நினைக்கும் இவர்கள் எக்காலத்திலும் திருந்த போவதில்லை.//

    திருந்தும் காலம் வரும் வரும் என நாம் இருக்க நடப்பவை எதுவும் நம்பிக்கை தருபவையாக இல்லைதான்:(!

    \\//உங்கள் உயிரையும் போக்கிக் கொண்டு
    உதவாக்கரைகளுக்கு உதவிக் கொண்டு
    பாவமூட்டைகளை சுமந்து கொண்டு
    பாவிகளாய் வாழ்ந்து காண்பதுதான் என்ன?//

    நெத்தியடியா சொன்னீங்க//\\

    ஒத்த கருத்துக்கு நன்றி கிரி. யோசித்துப் பார்த்தால் அப்படித்தானே தோன்றுகிறது. அப்பாவிகளை அழிக்க ஏவப்பட்ட இந்த அம்புகள் யாவும் முடிவில் அழிந்துதான் போகின்றன. அதை எட்டி யோசிக்கும் சிந்தனை அற்ற மூடர்களாய் இருப்பதும் சோகமே.

    பதிலளிநீக்கு
  9. பழையபேட்டை சிவா said...
    //என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்... //

    நன்றி சிவா. ஈடு செய்ய இயலா இந்த இழப்பிலிருந்து இக்குடும்பங்கள் மீண்டு வர இறைவன்தான் அருள் செய்ய வேண்டும்.

    பதிலளிநீக்கு
  10. அதிரை ஜமால் said...
    //\\உங்கள் உயிரையும் போக்கிக் கொண்டு
    உதவாக்கரைகளுக்கு உதவிக் கொண்டு
    பாவமூட்டைகளை சுமந்து கொண்டு
    பாவிகளாய் வாழ்ந்து காண்பதுதான் என்ன?\\

    பாவிகளாய் வாழ்வது மட்டுமல்லாமல்
    அப்பாவிகளையல்லவா கொல்கிறார்கள்\\//

    மாட்டிக் கொண்டிருக்கும் மீதி அப்பாவிகள் எப்படி விடுவிக்கப் படப் போகிறார்களோ தெரியவில்லையே ஜமால். தற்சமயம் ராணுவமும் அங்கு வந்தாயிற்று.

    //\\பேரங்கள் பேசியபடி நீங்கள் வெளியனுப்பும்
    பிரேதங்கள் பேச்சிழக்க வைக்கின்றன
    விட்டுவிடுங்கள் வேண்டாம் கோரவிளையாட்டு
    குடும்பங்கள் உண்டவருக்கு புரியாதா உங்களுக்கு?\\

    வலிகளோடு உள்ள வாக்கியங்கள்.//\\

    அடுத்தவர் வலி புரியாத அறிவிலிகள் இவர்கள்.

    \\//பிரார்த்தனை
    -----------
    இறந்தவர்களுக்காகவும், அவர்களை இழந்தவர்களுக்காகவும்.

    அடேய் பாவிகளா உங்களும் எனது பிரார்த்தனைகள்
    இனியாவது மனிதம் விளங்கி மக்களை வாழவிட்டு,
    நீங்களும் வாழுங்கள்//\\

    பிரார்த்தனையில் இணைந்தமைக்கு நன்றி ஜமால்.

    பதிலளிநீக்கு
  11. உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். :(

    பதிலளிநீக்கு
  12. நானானி said...
    //நேற்றுதான்..அல்ல இன்னும் நடந்து கொண்டிருக்கிறது போராட்டம்..//

    சிக்கியவர்கள் இன்னும் மீண்ட பாடில்லையே.

    //நம் கையாலாகாத காவல்துறை, அரசாங்கம்..அதை சீரழிக்கும் அரசியல்வாதிகள் ஆகியோரால்!!!//

    ஆமாம் இப்போதுதான் நமது கடற்படை, தீவிரவாதிகள் ரகசியமாய் வந்து இறங்கிய கப்பலைத் துரத்திக் கொண்டிருக்கிறது.

    மாட்டி இருப்பவர்களை காப்பாற்ற வந்திருக்கும் ராணுவத்தின் மேல் நம்பிக்கை வைப்போம்.

    //அதற்குள் துறுதுறுத்த உங்கள் மனம், கைகள் இவற்றின் திறன் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே!!!//

    நானானி, காலையிலிருந்து ஓடுகிற டைம்ஸ் சேனல் ஏற்படுத்திய டென்ஷனில் எழும்பிய பதிவு. உடனடியாக பதிந்தால்தானே பிரார்த்தனை கூட்டாக இருக்கும். அதற்கிருக்கும் வலிமைதான் இப்போது எஞ்சியிருப்பவர்களைக் காப்பாற்ற வேண்டும்.

    பதிலளிநீக்கு
  13. பாச மலர் said...
    //ஒன்று முடியும் முன் மற்றொன்று...தொடர் சங்கிலிதான்...//

    உண்மைதான் பாசமலர். வேதனை மேல் வேதனை.

    பதிலளிநீக்கு
  14. ambi said...
    //ரொம்பவே வேதனையா பதைபதைப்பா இருந்தது. :(//

    அலுவலகத்தில் இருப்பீர்கள் நீங்கள். நடப்பதை தொலைக்காட்சியில் தொடர்ந்து பார்க்கப் பார்க்க பதைபதைப்பு அடங்குவனா என்கிறது.

    //திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்? :(//

    இந்த நேரத்துக்கேற்ற அழுத்தமான பாட்டு வரிகள், நன்றி அம்பி.

    பதிலளிநீக்கு
  15. சந்தனமுல்லை said...
    //எதுக்கு இந்த குண்டுவெடிப்பு..என்ன சாதிக்கப் போறாங்க? நல்லா சொல்லியிருக்கீங்க உங்க ஆதங்கத்தை!//

    இது நம்ம எல்லாரது ஆதங்கமும்தாங்க.

    //மனசு ரொம்ப கஷ்டம போய்டுச்சு காலையில் பார்த்ததும்!! என்ன மாதிரி உலகத்தில் வாழறோம்னே புரியலை!//

    ’ஒண்ணுமே புரியலே ஒலகத்திலே என்னமோ நடக்குது
    மர்மமா இருக்குது..’ :( !

    அம்பி ஒரு பாடலின் வரிகளை ஞாபகப் படுத்தினாலும் படுத்தினார். உங்கள் கருத்து இப்பாடலை நினைவுக்கு கொண்டு வருகிறது.

    பதிலளிநீக்கு
  16. தமிழ் பிரியன் said...
    //மனித உயிர்களை மதிக்கத் தெரியாத இந்த பதர்கள் இவர்கள்.... மனித இனத்தில் சேர்க்க இயலாத இவர்கள் அழிக்கப்பட வேண்டியவர்கள்.//

    உண்மைதான், அம்பி அருமையா சொல்லி விட்டார் பாருங்கள்:
    ”திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்?”

    //இறந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்..:(//

    அவர்களது குடும்பத்தாருக்காகவும் பிரார்த்தனை செய்வோம் தமிழ் பிரியன். நம்மால் இயன்றது அது ஒன்றுதாகத்தான் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  17. முத்துலெட்சுமி-கயல்விழி said...
    //m:(//

    அனுதாபங்களுக்கு நன்றி முத்துலெட்சுமி. வருத்தப் படுவதைத் தவிர வேறென்ன செய்ய இயலுகிறது நம்மால்:(?

    பதிலளிநீக்கு
  18. எம்.ரிஷான் ஷெரீப் said...
    //உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். :(//

    காலத்தாலும் ஈடு செய்ய இயலாத இழப்புகள். கடவுள்தான் அவர்களுக்கு இதைத் தாங்கிடும் மனவலிமை தர வேண்டும்.

    பதிலளிநீக்கு
  19. எம்.ரிஷான் ஷெரீப் said...
    //நல்ல பதிவு சகோதரி !//

    கருத்துக்கும் அனுதாபங்களுக்கும் நன்றி ரிஷான். இழப்புகளின் வலிகளை உணர்ந்தவர்கள் நீங்கள்.

    பதிலளிநீக்கு
  20. //உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். :(//

    எத்தனை கோடிகளை இந்திய அரசாங்கம் ராணுவத்துக்கும், உளவுத்துறைக்கும் செலவு செய்கிறது? இருந்தும் ஏன் இத்தனை குண்டு வெடிப்புகள்?

    இது நாடா இல்லை மிருகங்கள் வசிக்கும் காடா?

    பதிலளிநீக்கு
  21. Joe said...
    //உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். :(//

    செய்யணும் ஜோ.

    //எத்தனை கோடிகளை இந்திய அரசாங்கம் ராணுவத்துக்கும், உளவுத்துறைக்கும் செலவு செய்கிறது? இருந்தும் ஏன் இத்தனை குண்டு வெடிப்புகள்?//

    ஆமாம், ஸ்பீட் போட்களில் தீவிரவாதிகள் உள்ளே நுழைந்ததை கடற்படை காலங்கடந்து இப்போதுதானே கண்டு பிடித்திருக்கிறது?

    //இது நாடா இல்லை மிருகங்கள் வசிக்கும் காடா?//

    காடென நினைத்து மனிதரை வேட்டையாடும் மிருகங்கள் அவர்கள். உலவும் இந்த மிருகங்களால் நாடென நினைத்து வாழ முடியாத அபாக்கிய மனிதர்களாய் நாம்:(!

    பதிலளிநீக்கு
  22. அன்பையும்,அஹிம்சையையும் போதிக்கிற நம் நாடு!

    வெளிநாட்டு விருந்தினர் வந்தால், அவர்களை
    நம் அன்பினால் திக்குமுக்காட செய்யும்
    விருந்தோம்பல் பண்பு!

    மத சார்பற்ற அரசியல் அமைப்பு!

    எல்லாம் இருந்தும் நம்மை எதிரியாய்
    நினைக்கும் சில அமைப்புகள்? ஏன் ?

    ''நம் வேரில் சில விஷ கிருமிகள்''

    விட்டு விட்டோம்! விழிப்பது எப்போது?

    பதிலளிநீக்கு
  23. ஜீவன் said...
    //அன்பையும்,அஹிம்சையையும் போதிக்கிற நம் நாடு!//

    மகாத்மா வாழ்ந்த மண்தானா இது?

    //வெளிநாட்டு விருந்தினர் வந்தால், அவர்களை
    நம் அன்பினால் திக்குமுக்காட செய்யும்
    விருந்தோம்பல் பண்பு!//

    ‘இந்தியா’ வரவே இனி யோசிக்கும் நிலை.

    //மத சார்பற்ற அரசியல் அமைப்பு!//

    எல்லா நாடுகளுக்கும் முன் மாதிரி! ஆனால் நடக்கின்ற சம்பவங்களால் வெட்கி நிற்கிறோம் இன்று அவர்களின் முன்னாடி:(!

    //எல்லாம் இருந்தும் நம்மை எதிரியாய்
    நினைக்கும் சில அமைப்புகள்? ஏன் ?

    ''நம் வேரில் சில விஷ கிருமிகள்'' //

    ஏன்? நீங்களே சொல்லி விட்டீர்கள் ஜீவன்!.

    //விட்டு விட்டோம்! விழிப்பது எப்போது?//

    விடையைத் தேடிய படி நூறு கோடி ஜோடிக் கண்கள்:(!

    பதிலளிநீக்கு
  24. உங்கள் கூட்டுப் பிரார்த்தனையில் நானும் இரு கை கூப்பி மண்டியிடுகிறேன்.
    சகாதேவன்

    பதிலளிநீக்கு
  25. சகாதேவன் said...
    //உங்கள் கூட்டுப் பிரார்த்தனையில் நானும் இரு கை கூப்பி மண்டியிடுகிறேன்.//

    உள்ளார்த்தமான உங்கள் உயர்ந்த பிரார்த்தனைக்கு மிக்க நன்றி. இதுவரை பலர் மீட்கப் பட்டிருப்பது வருத்தங்களுக்கு நடுவில் வந்து சேர்ந்த ஆறுதல். தொடரும் நம் பிரார்த்தனை மற்றவரையும் காப்பாற்றட்டும் சகாதேவன்.

    பதிலளிநீக்கு
  26. வலி கொண்ட வேதனைகளை வரி கொண்டு, சாமான்யனின் கோரிக்கையாய் படைத்திருக்கிறீர்கள்.

    //தீவிரவாதிகள் கையில் மாட்டிக் கொண்டிருப்போர் எந்த உயிர்சேதமுமின்றி வெளிவர கூட்டுப் பிரார்த்தனை செய்வோம் வாருங்கள். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு நம் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்போம்.//

    நாமும் ப்ராத்திக்கிறோம் உங்களுடன் சேர்ந்து.

    பதிலளிநீக்கு
  27. அக்கா இந்தக் கோழைகளை என்ன செய்வது??

    நீங்க சொன்னபடி பிராத்தனை செய்து விட்டேன். அதைத் தவிர இந்தக் கோழைக்கு ஏதும் தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
  28. நல்ல பதிவு, சரியான சமயத்தில், இதுவே தீவிரவாதத்தைப் பற்றிய உங்களது கடைசி கவிதையாய் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

    பதிலளிநீக்கு
  29. அன்பின் ராமலக்ஷ்மி

    மும்பைச் சம்பவங்களைப் பற்றிய - தீவிர வாதிகளுக்கான கவிதை.

    நாடு எங்கே போகிறது - உலகம் முழுவதும் தீவிரவாதம் தலை விரித்தாடுகிறது. ஒன்றுமறியா அப்பாவிகள் கொல்லப்படுகிறார்கள். என்ன செய்வது

    மீதமுள்ளவர்கள் மீண்டு வர பிரார்த்தனைகள்

    பதிலளிநீக்கு
  30. கவிதை கனக்கிறது நெஞ்சில்...
    இதயம்அற்றவர்களுக்கு செவியும் விழிகளும் இருக்குமா என்ன இதைப்படித்து கேட்டு உணர்ந்துகொள்ள?

    பதிலளிநீக்கு
  31. சதங்கா (Sathanga) said...
    //வலி கொண்ட வேதனைகளை வரி கொண்டு, சாமான்யனின் கோரிக்கையாய் படைத்திருக்கிறீர்கள்.//

    சாமான்யர்களின் ஆதங்கமும் கோரிக்கையும் வேண்டுமானால் கவனிக்கப் படாமல் போகலாம். ஆனால் பிரார்த்தனை..?

    //நாமும் ப்ராத்திக்கிறோம் உங்களுடன் சேர்ந்து.//

    ஆமாம் சதங்கா, மிக்க நன்றி. தொடருவோம் நம் பிரார்த்தனையை. அதுவே என்றாவது இந்த தீவிரவாதிகள் மனதையும் மாற்றாதா?

    பதிலளிநீக்கு
  32. நல்ல அர்த்தமுள்ள அருமையான கவிதை.

    பதிலளிநீக்கு
  33. புதுகை.அப்துல்லா said...
    //அக்கா இந்தக் கோழைகளை என்ன செய்வது??//

    சரியாகச் சொன்னீர்கள் அப்துல்லா. வீரம் காட்டுவதாய் எண்ணிக் கொண்டு அப்பாவிகளைக் கொன்று குவிக்கும் இவர்கள் கோழைகளேதான்.

    //நீங்க சொன்னபடி பிராத்தனை செய்து விட்டேன்.//

    மிக்க நன்றி. அதுவே பலரையும் மீட்க வழிவகுத்திருக்கிறது.

    //அதைத் தவிர இந்தக் கோழைக்கு ஏதும் தெரியவில்லை.//

    யாருக்கும்தான் எதுவும் தெரியவில்லை, கையாலாகாமல் ஆதங்கப்படுவதைத் தவிர:(! பிரார்த்தனை ஒன்றுதானே நமக்குத் தெரிந்தது.

    பதிலளிநீக்கு
  34. கபீஷ் said...
    //நல்ல பதிவு, சரியான சமயத்தில், இதுவே தீவிரவாதத்தைப் பற்றிய உங்களது கடைசி கவிதையாய் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.//

    எனது ஆசையும் அதுவே. காலம்தான் பதில் சொல்ல வேண்டும். நன்றி கபீஷ்.

    பதிலளிநீக்கு
  35. cheena (சீனா) said...
    //மும்பைச் சம்பவங்களைப் பற்றிய - தீவிர வாதிகளுக்கான கவிதை.//

    ஆமாம் சீனா சார். அவர்களுக்கு நமது குரல் கேட்கிறதோ இல்லையோ இறைவன் மூலமாக ஏதோ ஒரு வழியில் எட்டட்டும். மனம் மாறட்டும்.

    //நாடு எங்கே போகிறது - உலகம் முழுவதும் தீவிரவாதம் தலை விரித்தாடுகிறது. ஒன்றுமறியா அப்பாவிகள் கொல்லப்படுகிறார்கள். என்ன செய்வது//

    வேதனைப் படத்தான் முடிகிறது.

    //மீதமுள்ளவர்கள் மீண்டு வர பிரார்த்தனைகள்//

    மிக்க நன்றி. நமது நம்பிக்கை வீண் போகாது பலரும் காப்பாற்றப் பட்டு விட்டனர். மீதமுள்ளவர்களும் அவ்வாறே மீண்டு வரட்டும். (இன்னும் தொடருகின்ற) மீட்புப் பணியில் உயிர் இழக்க நேர்ந்த காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் ஜவான்களுக்கும் நமது அஞ்சலியும் வணக்கங்களும் உரித்தாகட்டும்.

    பதிலளிநீக்கு
  36. ஷைலஜா said...
    //கவிதை கனக்கிறது நெஞ்சில்...
    இதயம்அற்றவர்களுக்கு செவியும் விழிகளும் இருக்குமா என்ன இதைப்படித்து கேட்டு உணர்ந்துகொள்ள?//

    உண்மைதான் ஷைலஜா. சாமான்யர்களின் ஆதங்கங்கங்கள் ஆதங்கங்களாகவேதான் மரித்துப் போகின்றன. இறைவன்தான் இவர்களுக்கு நல்ல புத்தியைக் கொடுக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  37. மூளைச்சலவை செய்யப்பட்ட மனித
    மிருகங்கள்

    பதிலளிநீக்கு
  38. ஏன் இப்படி என்று மனம் வெறுத்துப் போகிறது தீவிரவாதத்தால். இன்னும் தொடரும் அந்த போராட்டத்தைக் கண்டு நெஞ்சம் பதைக்கிறது. பிரார்த்தனையை மட்டுமே நம்பும் இடத்தில் இருக்கிறோம். "இறைவா , அனவர் மனதிலும் மானுடம் தழைக்க அருள் புரிய மாட்டாயோ!!" என்று இறைஞ்சுகிறது மனம்.

    பதிலளிநீக்கு
  39. இறை நம்பிக்கை இல்லை எனினும் கனத்த மனதுடன் உங்கள் கூட்டு பிரார்த்தனையில் கலந்துகொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  40. அம்மா...

    மிக அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.

    வேறென்ன சொல்வதென்று தெரியாமல் இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  41. நசரேயன் said...
    //நல்ல அர்த்தமுள்ள அருமையான கவிதை.//

    நன்றி நசரேயன்.

    பதிலளிநீக்கு
  42. thevanmayam said...
    //மூளைச்சலவை செய்யப்பட்ட மனித
    மிருகங்கள்//

    தாங்களே பலியாடுகள் என்பது கூடப் புரியாத முட்டாள்கள். கருத்துக்கு நன்றி Thevanmayam.

    பதிலளிநீக்கு
  43. //பேரங்கள் பேசியபடி நீங்கள் வெளியனுப்பும்
    பிரேதங்கள் பேச்சிழக்க வைக்கின்றன//

    ஆதங்கத்தின் அழகான வெளிப்பாடு. உங்கள் கவிதை இன்னுமொரு கவிதைக்கு வித்திட்டது. அதற்கும் நன்றி

    பதிலளிநீக்கு
  44. அமுதா said...
    //ஏன் இப்படி என்று மனம் வெறுத்துப் போகிறது தீவிரவாதத்தால். இன்னும் தொடரும் அந்த போராட்டத்தைக் கண்டு நெஞ்சம் பதைக்கிறது.//

    உயிரழப்புகளின் எண்ணிக்கைக் கூடிக் கொண்டு போவது பதைப்பாகவே இருக்கிறது. மீட்புப் பணியில் உயிர் விட்ட உயர் அதிகாரிகள் அசோக் காம்தே, ஹேமந்த் கர்கரே, விஜய் சலஸ்கர் ஆகியோரும் கூடவே கொல்லப் பட்ட ஜவான்களும் நம் வணக்கத்துக்கு உரியவர்கள்.

    //பிரார்த்தனையை மட்டுமே நம்பும் இடத்தில் இருக்கிறோம். "இறைவா , அனவர் மனதிலும் மானுடம் தழைக்க அருள் புரிய மாட்டாயோ!!" என்று இறைஞ்சுகிறது மனம்.//

    இறைஞ்சுவோம். எஞ்சியிருப்போர் பிழைக்கவும் மானுடம் தழைக்கவும் பிரார்த்தனை ஒன்றே நம் கையில் இருக்கும் ஆயுதம்.

    பதிலளிநீக்கு
  45. தாமிரா said...
    //இறை நம்பிக்கை இல்லை//

    அது உங்க சொந்த விருப்பு.

    //எனினும் கனத்த மனதுடன் உங்கள் கூட்டு பிரார்த்தனையில் கலந்துகொள்கிறேன்.//

    மற்றவரின் துயர் கண்டு கலங்கும் குணமும் பிரார்த்தனையில் கலந்து கொள்ளும் உங்கள் உயர்ந்த மனமும் போதும். இறைவன் நிச்சயமாக செவி சாய்ப்பார். மிக்க நன்றி தாமிரா.

    பதிலளிநீக்கு
  46. கவிதை நன்று. அந்த மடையர்களுக்கு மன உணர்வுகள் கிடையாது. மரக்கட்டைகள். நடு ரோட்டில் நிற்க வைத்து சுடவேண்டும் அப்பொழுதுதான் நாடு உருப்படும்.

    பதிலளிநீக்கு
  47. பரிசல்காரன் said...
    //அம்மா...

    மிக அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.//

    நன்றி பரிசல்காரரே.

    //வேறென்ன சொல்வதென்று தெரியாமல் இருக்கிறேன்.//

    வார்த்தைகள் வராது போகும் வருத்தங்கள் அதிகமாகும் போது. நடப்பவற்றைப் பார்க்கையில் பெருமூச்சுதான் விட முடிகிறது. வேறென்ன புதிதாக சொல்ல..? கருத்துக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  48. அபி அப்பா said...
    //:-((((//

    தங்கள் வருத்தத்தைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி அபி அப்பா.

    பதிலளிநீக்கு
  49. KABEER ANBAN said...
    //ஆதங்கத்தின் அழகான வெளிப்பாடு.//

    நன்றி கபீர் அன்பன்.

    // உங்கள் கவிதை இன்னுமொரு கவிதைக்கு வித்திட்டது. அதற்கும் நன்றி//

    உங்களுக்கு எப்படி என் கவிதை வித்திட்டதோ, அதே போல என் கவிதைக்கு வித்திட்டது சர்வேசனின் பதிவாகிய "Mumbai will survive" http://surveysan.blogspot.com/2008/11/mumbai-will-survive.html. குறிப்பாக அப்பதிவின் முதல் வரி.
    அவரது பதிவும் ஏறத்தாள உங்கள் கவிதையின் கருத்தைக் கொண்டதே.

    உங்கள் கவிதை தற்போதையே நிலைமைக்கு ஆறுதலையும் தைரியத்தையும் தரக் கூடியதாக இருக்கிறது. ஆனால் அதனை அப்படியே நடைமுறைப் படுத்த நாட்டுக்கு துணிவான ஒரு தலைமை இல்லாது போவதுதான் பெரிய குறை. எத்தனை ஆட்சிகள் மாறினாலும் இது போன்ற அசம்பாவிதங்கள் நிகழும் போதெல்லாம், இதைச் செய்தால் இவர் ஓட்டு அடுத்த தேர்தலில் கிடைக்காது..இப்படி செய்தால் இவர் ஆதரவு இப்போதே வாபஸ் பெறப்பட்டு ஆட்சி கவிழ்ந்து விடும்.. என்பது போன்ற பயங்களிலேயே ஒவ்வொரு தலைமைகளும் ஒவ்வொரு காலக் கட்டத்திலும் தடுமாறி நிற்பதுதான் இத்தனைக்கும் ஆணிவேர்.

    அன்று இந்திரா காந்தி கொண்டு வந்த எமர்ஜன்ஸி போல துணிந்து செயல் பட வேண்டும் அரசு. நிறைகுறைகள் இருக்கலாம் அதில். ஆனால் இப்போதைய தேவை தீவிரவாதத்தை எப்பாடு பட்டாவது களைவதே. அதற்கு ஒட்டு மொத்த நாடும் ஒத்துழைக்க வேண்டும்.

    உங்கள் கவிதை மெய்ப்பட வேண்டும்.
    வருகைக்கும் கருத்துக்கும் புனைந்த பதில் கவிதைக்கும் என் மனமார்ந்த நன்றிகள் கபீர் அன்பன்.

    பதிலளிநீக்கு
  50. நிலாரசிகன் said...
    //கவிதை நன்று.//

    மிக்க நன்றி.

    //அந்த மடையர்களுக்கு மன உணர்வுகள் கிடையாது. மரக்கட்டைகள். நடு ரோட்டில் நிற்க வைத்து சுடவேண்டும் அப்பொழுதுதான் நாடு உருப்படும்.//

    நாடு உருப்பட தைரியமான ஒரு தலைமை வேண்டும், கபீர் அன்பனுக்கு நான் அளித்த பதிலில் சொல்லியிருப்பது போல. நல்ல காலம் விரைவில் பிறக்க பிரார்த்திப்போம் நிலா ரசிகன்.

    பதிலளிநீக்கு
  51. //இன்றைய வெறி இத்தோடு அடங்கட்டுமே//

    இத்தோடு அடக்கப்படும் வரை இது தொடர் கதையாக தான் இருக்கும் என்பது தான் நிதர்சன உண்மையாக இருக்கிறது.

    நல்லதொரு விடியலை எதிர்பார்ப்போம்

    பதிலளிநீக்கு
  52. அருமையாக எழுதியிருக்கிறீர்கள். பாதிக்கப் பட்டவர்களுக்கு என் அனுதாபங்கள்.

    பதிலளிநீக்கு
  53. நடந்த சம்பவங்களை தொலைக்காட்சி காட்டிக்கொண்டே இருந்தது. மனதில் கோபமும் கவலையும் கலந்து என்னென்னமோ சொல்லத் தோன்றினது. ஆனால் வார்த்தைகள் தொலைந்து போனது. தேடினேன், அவைகளை உங்கள் கவிதைகளில் கண்டேன். நல்வாழ்த்துக்கள்.
    என் சுரேஷ்

    பதிலளிநீக்கு
  54. நாகை சிவா said...
    \\//இன்றைய வெறி இத்தோடு அடங்கட்டுமே//

    இத்தோடு அடக்கப்படும் வரை இது தொடர் கதையாக தான் இருக்கும் என்பது தான் நிதர்சன உண்மையாக இருக்கிறது.//\\

    முற்றிலும் உண்மையே. அடங்குவதாய் தெரியவில்லை. அடக்கிக் கொண்டே இருக்கிறோம் மூன்றாவது நாளாக:(!

    //நல்லதொரு விடியலை எதிர்பார்ப்போம்//

    நல்ல வார்த்தைகள். நம்பிக்கையோடு காத்திருப்போம். நன்றி நாகை சிவா.

    பதிலளிநீக்கு
  55. திகழ்மிளிர் said...
    //ஆழ்ந்த அனுதாபங்கள்//

    அனுதாபங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி திகழ்மிளிர்.

    பதிலளிநீக்கு
  56. வடகரை வேலன் said...
    //அருமையாக எழுதியிருக்கிறீர்கள். பாதிக்கப் பட்டவர்களுக்கு என் அனுதாபங்கள்.//

    தங்கள் அனுதாபங்களைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி வடகரை வேலன்.

    பதிலளிநீக்கு
  57. N Suresh said...
    //நடந்த சம்பவங்களை தொலைக்காட்சி காட்டிக்கொண்டே இருந்தது. மனதில் கோபமும் கவலையும் கலந்து என்னென்னமோ சொல்லத் தோன்றினது. ஆனால் வார்த்தைகள் தொலைந்து போனது. தேடினேன், அவைகளை உங்கள் கவிதைகளில் கண்டேன்.//

    உண்மையில் இந்நிகழ்வைப் பார்த்த நம் அனைவரின் மனக் குமுறலே இங்கே வரிகளாய். உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி சுரேஷ்.

    பதிலளிநீக்கு
  58. நந்து f/o நிலா said...
    //நாம் என்னதான் செய்ய? :(((((//

    அதுதான் தெரியவில்லை. குமுறல்களும் அனுதாபங்களும் பிரார்த்தனைகளும் மட்டுமே நடந்தவற்றை சீர் படுத்தி விட முடியாது. பிரச்சனைக்குத் தீர்வாகி விட முடியாது.

    கபீர் அன்பனுக்கு நான் அளித்த பதிலில் சொல்லி இருப்பது போல அரசு முனைந்து திடமாக எமர்ஜன்ஸி போல ஒரு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதில் பொது மக்களாகிய நமக்கு சில அசெளகரியங்கள் இருந்தாலும் தீவிரவாதத்தை வேரோடு களையும் ஒரே நோக்கத்துக்காக நாமும் ஒத்துழைக்க வேண்டும்.

    அரசு ஆவன செய்யுமா? செய்தால் நாமும் தயாராய் இருப்போம் ஒத்துழைக்க.

    பதிலளிநீக்கு
  59. ராமலக்ஷ்மி!

    கருத்தாழம் மிக்க அருமையான கவிதை!

    ***பேரங்கள் பேசியபடி நீங்கள் வெளியனுப்பும்
    பிரேதங்கள் பேச்சிழக்க வைக்கின்றன
    விட்டுவிடுங்கள் வேண்டாம் கோரவிளையாட்டு
    குடும்பங்கள் உண்டவருக்கு புரியாதா உங்களுக்கு?***

    புரியவேண்டும் அவர்களுக்கு! ஏன் புரியமாட்டேன் என்கிறது? இங்குதான் எனக்கு குழப்பமே! :-(

    பதிலளிநீக்கு
  60. கவிநயா said...
    //பிரார்த்தனைகளுடன்...//

    நன்றி கவிநயா. பிரார்த்தனைகள் பலம் வாய்ந்தவை. நம்பிக்கை தருபவை.

    பதிலளிநீக்கு
  61. வருண் said...
    //ராமலக்ஷ்மி!

    கருத்தாழம் மிக்க அருமையான கவிதை!//

    நன்றி வருண்.

    //***பேரங்கள் பேசியபடி நீங்கள் வெளியனுப்பும்
    பிரேதங்கள் பேச்சிழக்க வைக்கின்றன
    விட்டுவிடுங்கள் வேண்டாம் கோரவிளையாட்டு
    குடும்பங்கள் உண்டவருக்கு புரியாதா உங்களுக்கு?***

    புரியவேண்டும் அவர்களுக்கு! ஏன் புரியமாட்டேன் என்கிறது? இங்குதான் எனக்கு குழப்பமே! :-(//

    எப்படி புரியும் வருண். செய்யப் பட்ட மூளைச் சலவையில் முகவரியை மட்டுமின்றி மூளையையும் சேர்த்து தொலைத்தவர்கள் அல்லவா :( ?

    பதிலளிநீக்கு
  62. ரொம்ப அழகா கோர்வையா வந்திருக்கு வார்த்தைகள்.

    ஆழமான கருத்து.

    அருமை அருமை.

    இந்ததேசம்=இத்தேசம்?

    பதிலளிநீக்கு
  63. SurveySan said...
    //ரொம்ப அழகா கோர்வையா வந்திருக்கு வார்த்தைகள்.

    ஆழமான கருத்து.

    அருமை அருமை.//

    நன்றி சர்வேசன். உங்கள் பதிவு தந்த உத்வேகம்தான்.

    //இந்ததேசம்=இத்தேசம்?//

    திருத்தத்துக்கும் நன்றி. செய்து விட்டேன்.

    பதிலளிநீக்கு
  64. நச்சுன்னு சொல்லியிருக்கீங்க ராம் மேடம்

    எனது ஆழ்ந்த அனுதாபங்களும், ப்ரார்த்தனைகளும்

    இத்துடன் ஓய்ந்தால் நல்லா இருக்கும், இன்னும் ஒருயிர் கூட மடியாமல்

    பதிலளிநீக்கு
  65. //அமிர்தவர்ஷினி அம்மா said...
    //நச்சுன்னு சொல்லியிருக்கீங்க ராம் மேடம்

    எனது ஆழ்ந்த அனுதாபங்களும், ப்ரார்த்தனைகளும்//

    நன்றி அமிர்தவர்ஷினி அம்மா.

    //இத்துடன் ஓய்ந்தால் நல்லா இருக்கும், இன்னும் ஒருயிர் கூட மடியாமல்//

    இதுதான்.. இதுதான் அனைவரின் வேண்டுதலாகவும் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  66. மும்பையில் அரங்கேறிய அந்த கொடுமையான சம்பவத்தை யாரும் மறக்க முடியாது. நெஞ்சம் பதபதைக்க அந்த காட்சிகளை இந்திய மக்கள் டி.வி.களில் பார்த்து கொண்டு தானே இருந்தார்கள்.
    தீவிரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்ததாக வேண்டும். நம் சகோதரர்களின் பறி போன உயிருக்கு அவர்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும்.

    கொலைவெறி பிடித்த அந்த தீவிரவாதிகள் எப்படி கடல் வழியே வந்தார்கள்? இந்தியாவின் பாதுகாப்பை ஆட்சி செய்யும் அரசியல்வாதிகள் மறந்தது ஏன்? இதற்கெல்லாம் பதில் தேட வேண்டும்.
    தேச பாதுகாப்பில் அனைத்து தரப்பினரும் ஒற்றுமையாக இருந்தால் தான் நம்மை நாம் காப்பாற்ற முடியும். ஆட்சியை காப்பாற்ற துடிப்பதை விட்்டு விட்டு நாட்டை காப்பதில் அரசியல்வாதிகள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  67. ராமலக்ஷ்மி said...
    @ கடையம் ஆனந்த்,

    எல்லோரின் மனதிலும் இருக்கும் கேள்விகளை அப்படியே பிரதிபலிப்பதாய் இருக்கிறது உங்கள் பின்னூட்டம்.

    //ஆட்சியை காப்பாற்ற துடிப்பதை விட்்டு விட்டு நாட்டை காப்பதில் அரசியல்வாதிகள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.//

    மிகச் சரியாகச் சொன்னீர்கள். நன்றி ஆனந்த்.

    பதிலளிநீக்கு
  68. மனசுக்குப் பாரமாத்தான் ஆயிருச்சுங்க.(-:

    பதிலளிநீக்கு
  69. துளசி கோபால் said...
    //மனசுக்குப் பாரமாத்தான் ஆயிருச்சுங்க.(-://

    இந்தப் பாரம் இறங்காது. இனி வரும் நாளிலும் இது தொடர்ந்தால் தாங்காது.

    அப்போது என்னதான் வழி என்பதை இது பற்றிய உங்களது பதிவில் http://thulasidhalam.blogspot.com/2008/12/blog-post.html தாங்கள் கூறியிருப்பதையே எடுத்து இங்கே வழி மொழிகிறேன்:
    //ஆனா நம்பிக்கையே இல்லைன்னா நாம் வாழறதுக்கு ஒரு அர்த்தமே இல்லாமப் போயிருமே. இப்போதைய நம்பிக்கை இளைய சமுதாயம்தான்.
    இவுங்க தன்னம்பிக்கையோடு, செயல்பட்டா ஊழல் இல்லாத ஒரு சமூகத்தை, நாட்டை உருவாக்க முடியும். ஊழல் தொலைஞ்சாவே பாதி பலம் வந்த மாதிரி. மீதி பலத்தைப் பாதுகாப்பு கொடுக்கும்.//

    நன்றி துளசி மேடம்.

    பதிலளிநீக்கு
  70. சிறப்பா சொல்லியிருக்கீங்க!
    கனமாவும் , சினமாவும் இருக்கு!

    பதிலளிநீக்கு
  71. சுரேகா.. said...
    //சிறப்பா சொல்லியிருக்கீங்க!
    கனமாவும் , சினமாவும் இருக்கு!//

    நன்றி சுரேகா. நெஞ்சின் கனமே வார்த்தைகளில் வெடித்திருக்கிறது சினமாய்.

    பதிலளிநீக்கு
  72. மும்பை நிகழ்வுகளின் சூழலில் ஓரளவு நானும் சிக்கிக் கொண்டது உங்களுக்குத் தெரியும். அதனால் உடனே இந்தக் கவிதையைப் படிக்கத் தவறி விட்டேன். (இல்லாட்டி மட்டும் என்னவாம்?). நான் உணர்ந்த கையறு நிலையை அப்படியே உங்கள் கவிதையில் கொண்டு வந்து விட்டீர்கள்! வழக்கம் போல் 'அருமை' என்று சொல்ல கரு இடம் கொடுக்கவில்லை. ஆயினும், நன்றி சகோதரி எங்கள் எல்லார் மனதிலும் இருப்பதை வெளிப்படுத்தியமைக்கு.

    அனுஜன்யா

    பதிலளிநீக்கு
  73. அனுஜன்யா said...

    //மும்பை நிகழ்வுகளின் சூழலில் ஓரளவு நானும் சிக்கிக் கொண்டது உங்களுக்குத் தெரியும்.//

    அறிவேன் அனுஜன்யா. தங்கள் உண்மை அனுபத்தைதானே கதையாகத் தந்திருந்தீர்கள்.

    நண்பர் சூசன் ஜார்ஜ் தற்போது எப்படி இருக்கிறார்? அவருக்காக நீங்கள் பரிதவித்து அந்த கெடுபிடியான இரவிலும் தேடிச் சென்றதும், பின்னர் களத்துக்கே சென்று கண்டறிந்ததும்.. நட்பின் மேல் உங்களுக்கிருந்த மரியாதையை எங்களுக்கு உணர்த்தியதோடன்றி உங்கள் மேலான மரியாதையையும் அதிகரிக்கச் செய்து விட்டது.

    //நான் உணர்ந்த கையறு நிலையை அப்படியே உங்கள் கவிதையில் கொண்டு வந்து விட்டீர்கள்!//

    உண்மைதான் உங்களைப் போலவே அந்த 3 நாட்களில் கலங்கி நின்ற ஒவ்வொரு சாமன்யனும் கேட்க விரும்பிய கேள்விகள்தான் இங்கே வரிகளாய்...

    கருத்துக்கு நன்றி அனுஜன்யா.

    பதிலளிநீக்கு
  74. Unfortunately such precious messages dont reach the concerned ppl :(

    கவிதை அழகாக வரைகிறீர்கள். வார்த்தைகள் அதது இடங்களில் நிமிர்ந்து நிற்கின்றன.

    தீவிரவாதம் முளையில் தலையெடுக்கும் போதே, இப்படிப்பட்ட கவிதைகளையும், கருத்துக்களையும் அவர்கள் பாடத்திட்டத்தில் சேர்த்தால் 100ல் ஒருவராவது மனம் மாறலாமோ?

    Just a crazy imagination

    பதிலளிநீக்கு
  75. Shakthiprabha said...

    //Unfortunately such precious messages dont reach the concerned ppl :( //

    வாஸ்தவம்தான் ஷக்தி.

    // கவிதை அழகாக வரைகிறீர்கள். வார்த்தைகள் அதது இடங்களில் நிமிர்ந்து நிற்கின்றன.//

    தீவிரவாதம் மறைந்து நாடு நிமிர்ந்திட வேண்டும் என்கிற ஆதங்கத்தில் வந்த வார்த்தைகள்.

    // தீவிரவாதம் முளையில் தலையெடுக்கும் போதே, இப்படிப்பட்ட கவிதைகளையும், கருத்துக்களையும் அவர்கள் பாடத்திட்டத்தில் சேர்த்தால் 100ல் ஒருவராவது மனம் மாறலாமோ?

    Just a crazy imagination//

    crazy imagination இல்லை ஷக்தி. இப்படி நினைத்தே பல நல்லதை செய்யத் தவறி விடுகிறோமோ? நீங்கள் சொல்வது சரியே. பாடத்திட்டத்தில் இது பற்றியும் சேர்த்தால் வளரும் இளைய சமுதாயத்தினிடையே ஒரு விழிப்புணர்வு பரவ ஏதுவாக இருக்கும்தான்.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin