Tuesday, February 21, 2012

தூறல்: 1 - பள்ளி நிர்வாகங்கள்; பிளாஸ்டிக் அரக்கன்; அங்கீகாரங்கள்

பள்ளி நிர்வாகங்கள்:

மாணவர்-ஆசிரியர்-பெற்றோர் இவர்களுக்கிடையான உறவு எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்த என் எண்ணங்களை ஒன்றரை வருடம் முன், நான் படித்த பள்ளிக்கு சென்று வந்த போது பதிந்த தாயுமானவராய்..” பதிவில் சொல்லி விட்டுள்ளேன்.

ஆசிரியை உமா மகேஸ்வரிக்கு நேர்ந்த அவலமான முடிவுக்குப் பின் மீண்டும் விவாதிக்கப்பட்டு வரும் இப்பிரச்சனையில் நான்காவது கோணமாகப் ‘பள்ளி நிர்வாகங்கள்’ அழுத்தமான குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளன. இதை மறுப்பதற்கில்லை. நூறு சதிவிகித ரிசல்டில்தான் தங்கள் கெளரவம் அடங்கியிருப்பதாகக் கருதும் பள்ளிகளையும், அதை முன்னிறுத்தியே கட்டணங்களை ஏற்றுவதையும், பிற பள்ளிகளோடு ஒப்பீடு செய்து பெருமை கொள்வதையும் சர்வ சாதாரணமாகக் காண முடிகிறது. மதிப்பெண்களை நோக்கி மாணவர்களைத் துரத்தும் பணிக்கு ஆசிரியர்களும் நிர்ப்பந்தப்படுத்தப் படுகிறார்கள்.

தங்கள் பள்ளியிலேயே சின்ன வயதிலிருந்து படித்த மாணவர்களை ஒன்பதாம் வகுப்பில் வடிகட்டிவிட்டுப் பெருமிதமாய் நூறு சதவிகித ரிசல்ட் காட்டும் பள்ளிகளை விடவும், படிப்பில் பின் தங்கிய மாணவர்களைச் சரியான முறையில் கையாண்டு அவர்கள் தேர்ச்சி பெற முடிந்தவரை முயன்றிடும் பள்ளிகளே போற்றுதலுக்குரியவை. அவர்கள் திறமைக்கு ஏற்ப வாழ்க்கையை அமைத்துக் கொள்ள எத்தனையோ வழிகள் இருப்பதை நம்பிக்கை ஏற்படும் விதமாக விளக்கி, குறைந்தபட்சம் SSLC-யாவது படித்திருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தி ஊக்கம் கொடுத்து, பரீட்சை எழுதும் வாய்ப்பை எத்தனை பள்ளிகள் வழங்க முன் வருகின்றன? இந்த அழுத்தம் ஒரு சுழற்சியாய் மாணவரை, ஆசிரியரை, பெற்றோரை பாதித்தபடியே இருப்பதற்கு பல வருந்தத்தகு செய்திகளை உதாரணமாகச் சொல்லிக் கொண்டே போக முடியும்:(!

அரக்கனின் விலை:

“அம்பது நூறுன்னு ஆக்கிப் பாருங்க”
ன் தங்கையின் எட்டு வயது மகள் சென்ற தீபாவளி சமயத்தில் மால் ஒன்றின் கேஷ் கவுண்டரில் சில நிமிடங்கள் நடப்பதைக் கூர்மையாகக் கவனித்திருந்து விட்டு கேஷியரிடம் நேராகப் போய் ‘பிளாஸ்டிக் பைகளுக்கு 3 ரூபாய் , 5 ரூபாய் என விலை நிர்ணயித்து மக்களை மேலும் உபயோகிக்கவே தூண்டுகிறீர்கள். நானும் பார்க்கிறேன். எவருக்குமே அதை காசு கொடுத்து வாங்குகிறோமென்ற வருத்தம் கொஞ்சம் கூட இல்லை. விலையை 50, 100 என ஆக்கிப் பாருங்கள்’ என்றாளாம்.

சூப்பர் மார்க்கெட்டுக்குச் செல்ல முடிவெடுத்துக் கிளம்பும் போது சணல் பைகளை எடுத்துக் கொள்கிற நான், வேறெங்கேனும் சென்றுவிட்டுத் திரும்பும் வழியில் போக நேர்ந்தால் பைகளைக் குற்ற உணர்வுடன் காசு கொடுத்து வாங்கும் நிலை ஏற்படவே செய்கிறது. இவள் சொன்னதைக் கேட்ட பிறகு அது இன்னும் அதிகரிக்க, நிரந்தரமாக 2,3 பைகள் காரில் இருக்குமாறு பார்த்துக் கொள்கிறேன்.

என்னதான் நாம் பைகளைக் கொண்டு சென்றாலும் பலசரக்கு பொருட்கள் எல்லாமே ப்ளாஸ்டிக் பைகளில் அடைக்கப்பட்டுதானே விற்பனையாகிறது? முழுமையாகத் தவிர்க்க முடியாத இப்புழக்கத்திற்கு மாற்றான தீர்வுதான் என்ன எனும் சிந்தனை வந்த போது நான்கு வருடங்களுக்கு முன் பெங்களூரைச் சேர்ந்த அகமது கான் வெற்றிகரமாக செயல்படுத்திக் காட்டிய பிளாஸ்டிக் சாலை நினைவுக்கு வர, அந்த முறை பின்பற்றப் படாததற்கு அரசியல் காரணங்கள் ஏதேனும் இருக்குமோ எனும் கேள்வி என்னுள் சுற்றிக் கொண்டிருந்தது.

ப்போது சென்னையின் 200 வார்டுகளில் பிளாஸ்டிக் தார்ச் சாலைகள் போட ஏற்பாடாகி இருக்கிற விவரம் மகிழ்ச்சி அளிக்கிறது. மாநகராட்சியே ஆட்களை அமர்த்தி புதன் கிழமை தோறும் வீடு வீடாகச் சென்று மெல்லிய பிளாஸ்டிக் பைகளைச் சேகரிக்க இருப்பதாகவும், பொது மக்கள் plasticwaste@chennaicorporation.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மெல்லிய பைகள் குறித்த தகவல் அளிக்கலாம் என்றும் ஒரு நண்பர் முகப்புத்தகத்தில் பகிர்ந்திருக்கக் கண்டேன்.

கனவாகனப் போக்குவரத்து இல்லாத எல்லா சாலைகளையும் (அதாவது போட்டு ஒருசில வருடங்களில் கோடிகளை முழுங்கி விட்டுச் சேதமாகிப் பல்லைக் காட்டும் ரோடுகளை) பிளாஸ்டிக் சாலைகளாக மாற்றிடுவது குறித்து எல்லா மாநில அரசுகளும் விரைவில் பரிசீலிக்கும் என நம்புவோம்.

பெங்களூரில் என் தங்கை வசிக்கும் சுமார் 500 வீடுகள் கொண்ட குடியிருப்பின் அசோசியேஷன் மிகக் கடுமையாகப் பின்பற்றிவரும் முறை இது:

1. சமையல் கழிவுகள் மட்டுமே தினசரிக் குப்பையாக வெளியேற்றப்பட வேண்டும்.

2. பேப்பர், அட்டைகள், பிளாஸ்டிக் கவர் மற்றும் பொருட்கள் அவர்கள் தருகிற சாக்குப் பையில் சேமிக்கப்பட்டு வாரயிறுதி நாட்களில் வெளியேற்றப் படவேண்டும்.

3. வேண்டாத பாட்டில்கள் போன்றவை தனியாகக் கீழ்தளத்தில் அதற்கென வைக்கப்பட்டிருக்கும் ட்ரம்களில் சேர்க்கப்பட வேண்டும். இதில் குளறுபடி செய்கிறவர்களுக்கு அபராதம் உண்டு.

இந்த முறையினால் மறுசுழற்சிக்குப் பொருட்களை எளிதில் அனுப்ப முடிகிறது. இந்த நடைமுறையில் வெகுவாகு மகிழ்ந்து, அசோசியேஷன் தலைவராக செயல்பட்டு வரும் பெண்மணியை பெங்களூர் மாநகராட்சி (BBMP) பாராட்டிக் கெளரவித்துள்ளது. இவரை முன் உதாரணமாகக் கொண்டு அனைத்து குடியிருப்புகளும் இம்முறையைப் பின்பற்ற வலியுறுத்தி வருகிறது.

அங்கீகாரங்கள்:

எழுத்துக்கு..

சென்ற வருடம் மார்ச் மாதத்தில் முனைவர் இளங்கோவன் அவர்கள் தனது நண்பர் பேராசிரியர் பட்டாபிராமனுக்கு முனைவர் பட்ட ஆய்வுக்கு என்னைப் பற்றிய விவரங்கள் தேவைப்படுவதாக அறிமுகம் செய்து வைத்திருந்தார். தொடர்ந்து பேராசிரியர் பட்டாபிராமன் கேட்டுக் கொண்ட விவரங்களை அனுப்பி வைத்திருந்தேன். தென்காசியைச் சேர்ந்த இவர் புளியங்குடியில் இருக்கும் மனோ கல்லூரியில் பணியாற்றி வருகிறார்.

நெல்லை மனோன்மணியம் பல்கலைக் கழகத்தில் “இணையத்தில் இலக்கியம் - பெண்களின் பங்கு” என்பது குறித்தத் தன் ஆய்வின் ஒரு பாகமாக எனது படைப்புகள் சிலவற்றை எடுத்துக் கொண்டிருந்ததுடன், ஆய்வு அறிக்கையில் என் புகைப்படம், வாழ்க்கைக் குறிப்பு மற்றும் வலைப்பூ குறித்த விவரங்களைச் சமர்ப்பித்திருந்ததையும், இந்த ஜனவரி ஐந்தாம் தேதி முனைவர் பட்டம் பெற்று விட்டதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தார். முனைவர் பட்டாபிராமன் அவர்களுக்கு என் வாழ்த்துகளும் மனமார்ந்த நன்றியும். என் பெயரைப் பரிந்துரைத்திருந்த முனைவர் இளங்கோவன் அவர்களுக்கும் என் நன்றி.

நிழற்படங்களுக்கு..

ஓய்வு பெற்ற பேராசிரியரும், மதிப்பிற்குரிய பதிவரும், சிறந்த புகைப்படக் கலைஞருமான தருமி அவர்கள் தனது நாற்பதாண்டு கால புகைப்பட அனுபவங்களைக் குறித்து “நானும், photography-யும்” என ஒரு தொடர் எழுதிக் கொண்டிருக்கிறார். அதன் பாகம் நான்கில் எனது புகைப்படங்களைக் குறித்த பெருந்தன்மையுடனான அவரது பாராட்டு ஒரு விருதைப் பெற்ற மகிழ்ச்சியைத் தந்தது என்றால் அது மிகையன்று. நன்றி தருமி சார்:)!

வலைப்பூவுக்கு..

போதுமென ஒரு சோர்வோ சலிப்போ தோன்றும் வேளைகளில் எங்கிருந்தேனும் வந்தடையும் அங்கீகாரங்கள் நம்மைத் தொடர்ந்து இயங்கச் செய்கிறது. ‘திருமதி பக்கங்கள்’ கோமதி அரசு வழங்கிய “The Versatile Blog” விருதுக்கும்; ‘கற்றலும் கேட்டலும்’ ராஜி,‘சமையல் அட்டகாசங்கள்’ ஜலீலா கமல் ஆகியோர் வழங்கிய “Liebster Blog" விருதுக்கும் என் அன்பு கலந்த நன்றி. இதுவரையிலுமாக 26 நண்பர்கள் அன்புடன் வழங்கிய 12 விருதுகளும் ஊக்கம் தரும் சக்தியாக எப்போதும் முத்துச்சரம் முகப்பில்.. பிகாஸா ஆல்ப வடிவில்..!

வழக்கம் போலவே இந்த இரு விருதுகளையும், பல்வேறு பணிகளுக்கு இடையே தொடர்ந்து எழுதி வரும் அனைத்து வலைப்பதிவர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.


இது சரியா?

வசக்தி என்றொரு தளம். பிப்ரவரி 7ஆம் தேதி ஒரே நாளில் எனது கவிதைகள், கட்டுரைகள், நூல்விமர்சனம் மற்றும் (முந்தைய பாகங்களின் சுட்டிகளையும் கொண்ட) சிங்கப்பூர் பயணக் கட்டுரையின் கடைசிப்பாகம் என 10 பதிவுகளைத் தங்கள் தளத்தில் தனித்தனியே காபி பேஸ்ட் செய்து பதிந்துள்ளார்கள். போக ‘முத்துச்சரம்’ எனத் தனியாக ஒரு அறிவிப்புப் பதிவும். பதிவர்களுக்கு விளம்பரமா? புரியவில்லை. அப்படியே வைத்துக் கொண்டாலும் ஒவ்வொரு பதிவின் முடிவிலும் எனது வலைப்பூவுக்கு இணைப்பு கொடுப்பதாக நினைத்து தவறுதலாக வேறொரு வலைப்பூவின் பெயர் மற்றும் இணைப்பைக் கொடுத்துள்ளார்கள். அனுமதி இல்லாமல் போட்டதுதான் போட்டார்கள். அதையாவது சரிசெய்யுமாறு கேட்டுப் பின்னூட்டம் இட்டேன். எந்தப் பதிலும் இல்லை. சரி செய்யவும் இல்லை.

அதீதம் கார்னர்:

வலையோசை-7_ல் க. நா. சாந்தி லட்சுமணன்;
வலையோசை-10_ல் சுந்தரா;
வலையோசை-11_ல் கே. ரவிசங்கர்

***


ஃபோட்டோ கார்னர்..

11 ஜனவரி பொங்கல் சிறப்பிதழில்..:
 • உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் (பீ வீ)
 • ஆழிசேர் ஆறுகள் முகிலாய் மழையாய் பொழிவதுபோல்.. நம் இசை ( சேத்தன் ராம்)

29 ஜனவரி இதழில்.. உலகின் உன்னத இடங்கள்:

 • தந்தையின் தோள் (ராகேஷ் );
 • தாயின் மடி (அமைதிச்சாரல்)

14 பிப்ரவரி காதல் சிறப்பிதழில்..:

 • எங்கும் அன்பு எதிலும் அன்பு (MQN)
 • பருவமே புதிய பாடல் (ஜீவ்ஸ்)

என் ரசனையில் அமைந்த படத் தேர்வுகளைக் கண்டு களியுங்கள்:)!
படத்துளி:

குட்டி நாயின் நீண்ட நிழல்
கலவையான விஷயங்களை ஒரு தொகுப்பாக வகைப்படுத்திப் பகிரும் எண்ணம் தள்ளிப் போய்க் கொண்டேயிருந்தது. துளித்துளியாக இனி அவ்வப்போது தூறும் :)!

***

47 comments:

 1. இந்த ஜனவரி ஐந்தாம் தேதி முனைவர் பட்டம் பெற்று விட்டதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தார். முனைவர் பட்டாபிராமன் அவர்களுக்கு என் வாழ்த்துகளும் மனமார்ந்த நன்றியும். என் பெயரைப் பரிந்துரைத்திருந்த முனைவர் இளங்கோவன் அவர்களுக்கும் என் நன்றி.

  வாழ்த்துகள்....

  ReplyDelete
 2. மனம் மகிழ்வித்த தூறல் துளிகளுக்குப் பாராட்டுக்கள்...

  ReplyDelete
 3. பள்ளி நிர்வாகங்கள்; This is the right time to make them feel their right and wrong..in their policies on acadamy side.

  congrats to you for the awards now you are enjoying...!

  ReplyDelete
 4. பிளாஸ்டிக் பைகளை எந்தளவுக்கு உபயோகிக்க வேண்டும், உபயோகிக்க கூடாது என்பது படித்தவர்களுக்கு தெரியாதா? மார்க்கெட்டுக்கு காய்கறி வாங்க போகும் போது கூட வெறும் கையை வீசிக் கொண்டு போகிறார்கள். எவ்வளவு தான் சொல்வது. பல விஷயங்களை அடக்கிய பதிவு சிறப்பாக இருந்தது.

  ReplyDelete
 5. ரொம்ப சந்தோசமா இருக்கு.. மனமார்ந்த வாழ்த்துகள்.

  ReplyDelete
 6. ரிசல்டுக்காக முக்கியமான நேரத்தில் மாணவனை வெளியே அனுப்பும் பள்ளிகளை என்னவென்று சொல்ல? கேள்விப் படும்போதும் பார்க்கும்போதும் கஷ்டமாகத்தான் இருக்கும்.
  உங்கள் தங்கை பெண்ணுக்கு எட்டு வயதில் என்ன அபார சிந்தனை...பாராட்டுகள்.
  நவசக்தி பக்கத்தைத் திறந்து விட்டு மூட கஷ்டப்பட்டுப் போனேன்.
  பல்சுவைப் பதிவு சுவாரஸ்யமாக இருந்தது.

  ReplyDelete
 7. இராஜராஜேஸ்வரி said...
  //வாழ்த்துகள்....

  மனம் மகிழ்வித்த தூறல் துளிகளுக்குப் பாராட்டுக்கள்...//

  மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி.

  ReplyDelete
 8. kothai said...
  //பள்ளி நிர்வாகங்கள்; This is the right time to make them feel their right and wrong..in their policies on acadamy side.

  congrats to you for the awards now you are enjoying...!//

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 9. தமிழ் உதயம் said...
  //பிளாஸ்டிக் பைகளை எந்தளவுக்கு உபயோகிக்க வேண்டும், உபயோகிக்க கூடாது என்பது படித்தவர்களுக்கு தெரியாதா? மார்க்கெட்டுக்கு காய்கறி வாங்க போகும் போது கூட வெறும் கையை வீசிக் கொண்டு போகிறார்கள். எவ்வளவு தான் சொல்வது. பல விஷயங்களை அடக்கிய பதிவு சிறப்பாக இருந்தது.//

  விழிப்புணர்வு முழுமையாக ஏற்படவேயில்லை.

  நன்றி ரமேஷ்.

  ReplyDelete
 10. "உழவன்" "Uzhavan" said...
  //ரொம்ப சந்தோசமா இருக்கு.. மனமார்ந்த வாழ்த்துகள்.//

  நன்றி உழவன்:)!

  ReplyDelete
 11. ஸ்ரீராம். said...
  //ரிசல்டுக்காக முக்கியமான நேரத்தில் மாணவனை வெளியே அனுப்பும் பள்ளிகளை என்னவென்று சொல்ல? கேள்விப் படும்போதும் பார்க்கும்போதும் கஷ்டமாகத்தான் இருக்கும்.
  உங்கள் தங்கை பெண்ணுக்கு எட்டு வயதில் என்ன அபார சிந்தனை...பாராட்டுகள்.

  பல்சுவைப் பதிவு சுவாரஸ்யமாக இருந்தது. //

  நன்றி ஸ்ரீராம். தங்கை மகளிடம் தெரிவிக்கிறேன்.

  //நவசக்தி பக்கத்தைத் திறந்து விட்டு மூட கஷ்டப்பட்டுப் போனேன். //

  வருந்துகிறேன். அந்த சுட்டியை இப்போது நீக்கி விட்டேன்.

  ReplyDelete
 12. குட்டி நாய் படம் சூப்பர் :-)

  ReplyDelete
 13. Lot of matters covered in a single post.

  Congrats for the recognitions !

  ReplyDelete
 14. மும்பையிலும் நாங்கள் வசிக்கும் புற நகர் பகுதியில் ப்ளாஸ்ட்டிக் கவரில் சாமான்கள் தர மாட்டாங்க. பேப்ப பையோ துணிப்பையோ நாம வீட்லேந்தே கொண்டுபோகனும். பதிவு ரொம்ப நல்லா இருக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
 15. நிறைய நிறைய வாழ்த்துகள் அக்கா :)

  ReplyDelete
 16. பிளாஸ்டிக் பை விவகாரம் பையப் பையத்தான் மாறும்

  ReplyDelete
 17. முனைவர் பட்டாபிராமனுக்கு வாழ்த்துக்கள்.ஆய்வுக்கு சரியான பதிவரைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறார்.

  ReplyDelete
 18. நாயாரின் நிழல் படமும்,குட்டிப் பெண்ணில் ஆழ்ந்த அறிவும் சூப்பர் !

  ReplyDelete
 19. க்ரேட் ராமலக்‌ஷ்மி.. :) வாழ்த்துகள்..

  மகிழ்ச்சியின் தூறல்கள் :)

  ReplyDelete
 20. முதலில் பாராட்டுக்கள்.

  பகிர்வில் சிந்திக்க நிறையவே இருக்கு....

  ReplyDelete
 21. கல்வி முறையை மாற்ற வேண்டும் என்ற எண்ணம் எல்லோர் மனதிலும் தற்பொழுது எழுந்துள்ளது... என்ன நடக்கிறது என பார்ப்போம்.... பதிவு நல்லா இருக்கு அக்கா...

  ReplyDelete
 22. இந்தப் பல்சுவைத் தொகுப்பு நல்லாருக்கு. ஒண்ணொண்ணுமே ஒரு பதிவு எழுதக்கூடிய விஷயங்கள். (மற்ற பதிவுகள் எழுதுவதைவிட, ட்ரங்குப் போட்டி எழுதத்தான் அதிகம் சிரமப்படுவேன் - ஷார்ட் & ஸ்வீட்டா இருக்கணுமே!! )

  //இந்த அழுத்தம் ஒரு சுழற்சியாய் மாணவரை, ஆசிரியரை, பெற்றோரை பாதித்தபடியே இருப்பதற்கு//
  கரெக்ட்டுக்கா, இது ஒரு never-ending cycle-ஆகப் போய்கிட்டிருக்கு - பிளாஸ்டிக்கின் விளைவுகள் போலவே!!

  அட, முனைவர் பட்டம் வாங்குறதுக்கு உங்க எழுத்துகளா? ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை; உங்க பன்முகத் திறமைகள் அப்படி!! ம்ம்... பெரியவங்க சகவாசம் எனக்கும் கிடைச்சிருக்கு!! :-))))

  //சென்னையின் 200 வார்டுகளில் பிளாஸ்டிக் தார்ச் சாலைகள் //
  ரொம்ப நல்ல செய்தி!!

  உங்க தங்கை ஃப்ளாட் “மறுசுழற்சி” ஐடியா மேடத்திற்கு என் வாழ்த்துகளும்.

  வலைப்பூ விருதுகள் குறித்து நீங்கள் சொல்லியிருப்பது உண்மையே. மனம் நெகிழ வைப்பவை.

  ReplyDelete
 23. கிரி said...
  //குட்டி நாய் படம் சூப்பர் :-)//

  நன்றி கிரி:)!

  ReplyDelete
 24. மோகன் குமார் said...
  //Lot of matters covered in a single post.

  Congrats for the recognitions !//

  நன்றி மோகன் குமார்.

  ReplyDelete
 25. Lakshmi said...
  //மும்பையிலும் நாங்கள் வசிக்கும் புற நகர் பகுதியில் ப்ளாஸ்ட்டிக் கவரில் சாமான்கள் தர மாட்டாங்க. பேப்ப பையோ துணிப்பையோ நாம வீட்லேந்தே கொண்டுபோகனும். பதிவு ரொம்ப நல்லா இருக்கு வாழ்த்துகள்.//

  நல்ல விஷயம். நன்றி லக்ஷ்மிம்மா.

  ReplyDelete
 26. சுசி said...
  //நிறைய நிறைய வாழ்த்துகள் அக்கா :)//

  மிக்க நன்றி சுசி:)!

  ReplyDelete
 27. goma said...
  //பிளாஸ்டிக் பை விவகாரம் பையப் பையத்தான் மாறும்//

  ஆம், மாறிதான் ஆக வேண்டும்.

  //முனைவர் பட்டாபிராமனுக்கு வாழ்த்துக்கள்.ஆய்வுக்கு சரியான பதிவரைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறார்.//

  வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 28. ஹேமா said...
  //நாயாரின் நிழல் படமும்,குட்டிப் பெண்ணில் ஆழ்ந்த அறிவும் சூப்பர் !//

  நன்றி ஹேமா.

  ReplyDelete
 29. முத்துலெட்சுமி/muthuletchumi said...
  //க்ரேட் ராமலக்‌ஷ்மி.. :) வாழ்த்துகள்..

  மகிழ்ச்சியின் தூறல்கள் :)//

  நன்றி முத்துலெட்சுமி:)!

  ReplyDelete
 30. Shakthiprabha said...
  //முதலில் பாராட்டுக்கள்.

  பகிர்வில் சிந்திக்க நிறையவே இருக்கு....//

  மிக்க நன்றி ஷக்தி.

  ReplyDelete
 31. சசிகுமார் said...
  //கல்வி முறையை மாற்ற வேண்டும் என்ற எண்ணம் எல்லோர் மனதிலும் தற்பொழுது எழுந்துள்ளது... என்ன நடக்கிறது என பார்ப்போம்.... பதிவு நல்லா இருக்கு அக்கா...//

  மாற்றம் வர வேண்டும்.

  நன்றி சசிகுமார்.

  ReplyDelete
 32. ஹுஸைனம்மா said...
  //இந்தப் பல்சுவைத் தொகுப்பு நல்லாருக்கு. ஒண்ணொண்ணுமே ஒரு பதிவு எழுதக்கூடிய விஷயங்கள். (மற்ற பதிவுகள் எழுதுவதைவிட, ட்ரங்குப் போட்டி எழுதத்தான் அதிகம் சிரமப்படுவேன் - ஷார்ட் & ஸ்வீட்டா இருக்கணுமே!! )//

  உண்மைதான். ஒரு பதிவாக எழுதக் கூடியதா என்ற எண்ணத்தால் பகிராது விட்ட விஷயங்கள் பல. அந்த வகையில் தொகுப்பது வசதியாக உள்ளது:)!

  பகிர்ந்து கொண்ட விரிவான கருத்துகளுக்கு நன்றி ஹுஸைனம்மா.

  ReplyDelete
 33. வளரும் தலைமுறையிடம் சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வு இருப்பது மிகவும் மெச்சத்தக்கது.

  முனைவர் பட்ட ஆய்வுக்கு ஏற்றப் பதிவராகத் தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது மிகவும் பெருமைக்குரிய விஷயம். பாராட்டுகள்.

  ReplyDelete
 34. உங்களுக்கும் உங்கள் தங்கை மகளுக்கும் வாழ்த்துகளும் பாராட்டுக்களும்.

  ReplyDelete
 35. வணக்கம் சகோதரி….இன்றைய வலைச்சரத்தில் தங்களது இடுகை ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளேன்.ஓய்வு நேரத்தில் வலைச்சரம் வந்து வாசித்து செல்ல அன்புடன் அழைக்கின்றேன்

  ஜொலிக்கும் பெண் சிற்பிகள்

  அன்புடன்
  சம்பத்குமார்

  ReplyDelete
 36. வாழ்த்துகள்... வாழ்த்துகள்.. உங்க தங்கை பெண்ணுக்கு தனியா வாழ்த்துகள் :-)

  ப்ளாஸ்டிக்.... அடிமேல் அடிச்சா அம்மியும் நகரும். நகர்த்தாம விடமாட்டோம்ன்னு ஒவ்வொருத்தரும் கங்கணம் கட்டிக்கிட்டுச் செயல்பட்டா கூடிய சீக்கிரம் சாதிச்சுடலாம்.

  ReplyDelete
 37. கீதமஞ்சரி said...

  //வளரும் தலைமுறையிடம் சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வு இருப்பது மிகவும் மெச்சத்தக்கது.

  முனைவர் பட்ட ஆய்வுக்கு ஏற்றப் பதிவராகத் தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது மிகவும் பெருமைக்குரிய விஷயம். பாராட்டுகள்.//

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கீதமஞ்சரி.

  ReplyDelete
 38. Jaleela Kamal said...

  //உங்களுக்கும் உங்கள் தங்கை மகளுக்கும் வாழ்த்துகளும் பாராட்டுக்களும்.//

  நன்றி ஜலீலா:)!

  ReplyDelete
 39. சம்பத்குமார் said...
  //வணக்கம் சகோதரி….இன்றைய வலைச்சரத்தில் தங்களது இடுகை ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளேன்.ஓய்வு நேரத்தில் வலைச்சரம் வந்து வாசித்து செல்ல அன்புடன் அழைக்கின்றேன்

  ஜொலிக்கும் பெண் சிற்பிகள் //

  மகிழ்ச்சியும் நன்றியும்.

  ReplyDelete
 40. அமைதிச்சாரல் said...

  //வாழ்த்துகள்... வாழ்த்துகள்.. உங்க தங்கை பெண்ணுக்கு தனியா வாழ்த்துகள் :-)

  ப்ளாஸ்டிக்.... அடிமேல் அடிச்சா அம்மியும் நகரும். நகர்த்தாம விடமாட்டோம்ன்னு ஒவ்வொருத்தரும் கங்கணம் கட்டிக்கிட்டுச் செயல்பட்டா கூடிய சீக்கிரம் சாதிச்சுடலாம்.//

  உண்மைதான். ஊர் கூடி இழுக்க வேண்டிய தேர்.

  வாழ்த்துகளுக்கு நன்றி சாந்தி.

  ReplyDelete
 41. யப்பா.. ரெண்டு மூணு தரம் வந்து படிக்க வேண்டியதாப் போச்சு.. நிறைய சுவாரசியமான விஷயங்கள். ப்லெஸ்டிக் விலையேத்த சொன்னது ப்ரில்லியண்ட். நாய்நிழல் படம் அருமை. அதை அப்படியே என் பதிவுல போட்டு இன்னொருத்தர் ப்லாகுக்கு சுட்டி குடுத்துட அனுமதி கொடுங்க,, ஹிஹி. 'ப்லேஸ்டிக் தார்' வித்தியாசமா இருக்கு - ஆனா ப்ரேக்டிகலா தெரியலையே.. விவரங்கள் எங்கே கிடைக்கும்? இன்னொரு விஷயம்.. ஒரு தடவை, ரெண்டு வருஷத்துக்கு முந்தி.. மலேசியா போயிருந்த போது அங்கே பதிவுல வந்ததை வெட்டி ஒட்டி ப்ரிந்ட் செஞ்சு பத்திரிகை மாதிரி அரை டாலருக்கு விற்றுக் கொண்டிருந்தார்கள்.. இப்போதும் செய்கிறார்கள் என்று நண்பர் சொல்கிறார்.. அதில நீங்க எடுத்த 2009(?) தமிழ்மண விருது சமர்ப்பண போட்டோவும் வந்திருந்தது.. இணையம் இலவசம்ன்றதுனால அதுல வர எல்லாமே இலவசம்னு நெனச்சு உரிமை மீறுவது ஒருபுறம்.. அதையே வியாபாரமா செஞ்சது நம்ப முடியாத அதிர்ச்சி.

  ReplyDelete
 42. இளங்கோவனின் பரிந்துரைக்கும் மற்றத் தகவல்களுக்கும் வாழ்த்துகள்.

  உங்கள் பெயரையும் வலைப்பக்கத்தின் சுட்டியும் கொடுக்காமல் காப்பி, பேஸ்ட் பண்ணியது அநியாயம் தான். :(((((

  ReplyDelete
 43. அப்பாதுரை said...
  // ப்லெஸ்டிக் விலையேத்த சொன்னது ப்ரில்லியண்ட். நாய்நிழல் படம் அருமை. அதை அப்படியே என் பதிவுல போட்டு இன்னொருத்தர் ப்லாகுக்கு சுட்டி குடுத்துட அனுமதி கொடுங்க,, ஹிஹி.//

  தங்கை மகளிடம் சொல்லுகிறேன்:). நாய்க்குட்டியை தாராளமாக அழைத்துச் செல்லுங்கள். (எல்லோரும் இப்படிக்) கேட்டுவிட்டு செய்தால் நான் வேண்டாமென்றா சொல்லப் போகிறேன்:)?


  // 'ப்லேஸ்டிக் தார்' வித்தியாசமா இருக்கு - ஆனா ப்ரேக்டிகலா தெரியலையே.. விவரங்கள் எங்கே கிடைக்கும்?//

  பதிவிலேயே இது குறித்து 2 சுட்டிகள் தந்திருக்கிறேன் பாருங்கள். பெங்களூரில் சுமார் 430 கிமீட்டருக்குப் போடப்பட்ட சாலைகள் நல்ல உழைப்பதாகத் தெரிய வந்துள்ளது. [போடப்பட்ட புதிதில் இதுகுறித்து எல்லா செய்தித்தாள்களுமே அப்போது பாராட்டி எழுதியிருந்தது நினைவிலேயே இருந்தது.] 10% தார் பயன்பாடு குறைவு, பராமரிப்பு எளிது, கூடுதலாக 5 ஆண்டுகள் உழைக்கும் என சொல்லுகிறார்கள். மதுரையைச் சேர்ந்த பேராசிரியர் வாசுதேவன் அவர்களது கண்டுபிடிப்பு என்றும், தமிழ்நாட்டில் காரைக்குடி, சிவகங்கை போன்ற இடங்களில் ஏற்கனவே இந்தப்பணி ஆரம்பமாகி விட்டுள்ளதாகவும் தெரிகிறது.


  //இன்னொரு விஷயம்.. ஒரு தடவை, ரெண்டு வருஷத்துக்கு முந்தி.. மலேசியா போயிருந்த போது அங்கே பதிவுல வந்ததை வெட்டி ஒட்டி ப்ரிந்ட் செஞ்சு பத்திரிகை மாதிரி அரை டாலருக்கு விற்றுக் கொண்டிருந்தார்கள்.. இப்போதும் செய்கிறார்கள் என்று நண்பர் சொல்கிறார்.. அதில நீங்க எடுத்த 2009(?) தமிழ்மண விருது சமர்ப்பண போட்டோவும் வந்திருந்தது.. இணையம் இலவசம்ன்றதுனால அதுல வர எல்லாமே இலவசம்னு நெனச்சு உரிமை மீறுவது ஒருபுறம்.. அதையே வியாபாரமா செஞ்சது நம்ப முடியாத அதிர்ச்சி.//

  இது புதிதாக இப்போதுதான் கேள்விப்படுகிறேன்:(! இணையத்தில் பகிர்ந்திட விரும்பும்போது இவற்றையும் எதிர்கொள்ளதான் வேண்டும் போல:(.

  தங்கள் வருகையிலும் கருத்துகளிலும் மகிழ்ச்சி. நன்றி.

  ReplyDelete
 44. கீதா சாம்பசிவம் said...
  //இளங்கோவனின் பரிந்துரைக்கும் மற்றத் தகவல்களுக்கும் வாழ்த்துகள்.

  உங்கள் பெயரையும் வலைப்பக்கத்தின் சுட்டியும் கொடுக்காமல் காப்பி, பேஸ்ட் பண்ணியது அநியாயம் தான். :(((((//

  பத்து பதிவுகளில் ஒன்றான சிங்கப்பூர் பயணக்கட்டுரை கடைசிப் பாகத்தில் நானே கொடுத்திருந்த சுட்டிகளின் வழியே திடீரென வருபவர் எண்ணிக்கை அதிகமான போது, ட்ராஃபிக் சோர்ஸ் வழியே சென்று பார்க்கையில் தெரிய வந்தது:(.

  வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி மேடம்.

  ReplyDelete
 45. “இணையத்தில் இலக்கியம் - பெண்களின் பங்கு” என்பது குறித்தத் தன் ஆய்வின் ஒரு பாகமாக எனது படைப்புகள் சிலவற்றை எடுத்துக் கொண்டிருந்ததுடன், ஆய்வு அறிக்கையில் என் புகைப்படம், வாழ்க்கைக் குறிப்பு மற்றும் வலைப்பூ குறித்த விவரங்களைச் சமர்ப்பித்திருந்ததையும், இந்த ஜனவரி ஐந்தாம் தேதி முனைவர் பட்டம் பெற்று விட்டதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தார். முனைவர் பட்டாபிராமன் அவர்களுக்கு என் வாழ்த்துகளும் மனமார்ந்த நன்றியும். என் பெயரைப் பரிந்துரைத்திருந்த முனைவர் இளங்கோவன் அவர்களுக்கும் என் நன்றி.//

  உங்களை பரிந்துரைத்திருந்த முனைவர் இளங்கோவன் அவர்களுக்கு நன்றி முதலில்,சரியான தேர்வு செய்தமைக்கு.

  பட்டாபிராமன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  உங்களின் திறமைக்கும், உழைப்புக்கும் கிடைத்த வெற்றி.

  வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்.

  பள்ளி நிர்வாகம் பற்றி அருமையாக சொல்லி விட்டீர்கள். நல்லா படிக்காத மாணவர்களை படிக்க வைத்து நல்ல மதிபெண்கள் பெற செய்வது தான் நல்ல நிர்வாகத்தின் செய்ல்பாடு.

  பிளாஸ்டிக் பைகளின் உபயோகத்தை தடுக்கும் விழிப்புணர்வு பதிவு அருமை.

  உங்கள் தங்கை பெண்ணுக்கு வாழ்த்துக்கள்.

  நாயின் நீண்ட நிழற் படம் அருமை ராமலக்ஷமி.

  விருதை பதிவர்கள் எல்லோருக்கும் வழங்கியதற்கு பாராட்டுக்கள்.

  சுவையான பல்சுவை.

  ReplyDelete
 46. விரிவான கருத்துக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி கோமதிம்மா.

  ReplyDelete
 47. //பள்ளி நிர்வாகங்கள்//

  பணத்தை மட்டுமே குறியாக வைத்து செயல்படும் பள்ளிகளிடம் நாம் பெரிதாக ஒன்றும் எதிர்பார்க்க முடியாது. விதிவிலக்காக ஒரு சில பள்ளிகளும் உண்டு.

  ************
  //அரக்கனின் விலை//

  தங்கை மகளுக்கு என்னுடைய பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் தெரிவிக்கவும்.

  கிராம மக்களிடம் கூட பிளாஸ்டிக் பையை தவிர்க்க வேண்டும் என்கிற விழிப்புணர்வு வந்துள்ளது. ஆனால், நகரத்தில் இன்னும் போதிய விழிப்புணர்வு இல்லை என்றே தோன்றுகிறது.

  ************

  //அங்கீகாரங்கள்//

  தங்களுக்கு கிடைத்துள்ள இந்த அங்கீகாரங்கள் மகிழ்ச்சியளிக்கிறது. வாழ்த்துகள்.

  இன்னும் பல அங்கீகாரங்கள் தங்களை நோக்கி வர காத்திருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது.

  ************

  //இது சரியா?//

  நிச்சயமாக சரியல்ல. இவரைப் போன்றவர்கள் தொடர்ந்து இணையத்தில் இருக்க முடியாது என்பது வரலாறு.

  தங்களுடைய பின்னூட்டத்திற்கு பிறகும், அவர் அப்படி சுட்டியை மாற்றாமல் இருப்பது வருத்தமடைய செய்கிறது. ஆனால், நீங்கள் இப்படி சொல்லவில்லை என்றால் அப்படி ஒரு பிளாக் இருப்பதே பலருக்கு தெரியாமல்தான் இருந்திருக்கும்.

  ***************

  //கலவையான விஷயங்களை ஒரு தொகுப்பாக வகைப்படுத்திப் பகிரும் எண்ணம் தள்ளிப் போய்க் கொண்டேயிருந்தது. துளித்துளியாக இனி அவ்வப்போது தூறும் :)!//

  அவசியம் தொடரவும்.

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin