தர்மபுரி, கிருஷ்ணகிரி பக்க இயற்கையெழில் காட்சிகள்.
சமீபத்தில், தேசிய நெடுஞ்சாலையில்
அதிவேகமாக விரைந்த எம் வாகனத்தினுள் இருந்து, ஏற்றிய கண்ணாடிகள் வழியே, ஷட்டர் ஸ்பீட்
1/800-ல் முயற்சித்த படங்கள்.
குறிப்பிடும் அளவுக்கு இது பெரிய விஷயமா எனக் கேட்டால், இதே போல விரைந்த வாகனத்தில் இருந்து நான் எடுத்த படம், [சரியாக இரண்டு வருடம் முன்னர் பிப்ரவரி 2009 PiT ] ‘கணநேரக் கண்ணாடிகள்-ஆக்ஷன் படங்கள்’ தலைப்புக்காக
இரண்டாவது படமாக இந்தப் பதிவில்!
பார்த்து விட்டீர்களா? இப்போது புரிந்திருக்குமே ஏன் ஆர்வமாக SLR-ல் இந்த முயற்சி என்று? ஒத்தும் கொள்வீர்கள்தானே கிடைத்த ரிசல்டை நான் பகிர்ந்திட நினைத்ததில் தவறில்லை என்று:)!
1. எழிலோவியம்

2. நீல வானமும் நீண்ட மலைகளும்..

இதே படங்களை வண்டியை ஆங்காங்கே நிறுத்தியும் எடுத்திருக்கலாம்தான். ஆனால் திட்டமிட்ட நேரத்தில் ஊர் போய் சேர இயலாதென்பதோடு, நெடுஞ்சாலைகளில் திடீர் திடீரென வேகத்தைக் குறைப்பதையும், ஆங்காங்கே நிறுத்துவதையும் தவிர்ப்பதே நல்லதெனக் கருதுவேன். விரையும் பிற ஊர்திகளின் வேகத்துக்கு ஈடுகொடுத்தபடியே செல்லுவதும் தேவையான ஒன்றாக உள்ளது.
3. நெடிந்துயர்ந்த தென்னைகளும்..

4.தேசிய நெடுஞ்சாலையும்..

குன்றுகள்
சன்னல் கண்ணாடியை இறக்கினால் அடிக்கிற காற்றில் எடுக்கிற படமும் கிழிந்திடும் போல:)! ஆக ஏற்றியே இருந்த
கண்ணாடியின் பிரதிபலிப்பு கீழ் வரும் முதலிரண்டு படங்களில் தெரியத்தான் செய்கிறது.
5. பச்சைப் பாவாடை அணிந்து..

6. பளபளக்கும் பாறையுடன் நிமிர்ந்து..

7. உச்சியிலே கோட்டையினைச் சுமந்து..

திப்பு சுல்தானும், கிருஷ்ணகிரி மாம்பழமும்:இப்படங்களை ஒரு ஆர்வத்தில் ‘தமிழ்வாசல்’ பல்சுவை மின்குழுமத்தில் பகிர்ந்து கொண்ட போது கிருஷ்ணகிரியை சொந்த ஊராகக் கொண்ட
வடக்கு வாசல் ஆசிரியர் திரு.பென்னேஸ்வரன் ‘
எங்கள் ஊருக்கே அழைத்துச் சென்று விட்டீர்கள். மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கிறது. மிக்க நன்றி.’ என்றதோடு ‘இத்தனை அழகான இடத்தை விட்டு டெல்லியில் வந்து வாழ எந்த ஜென்மத்தில் எந்தப் பாவம் செய்திருக்கிறேனோ தெரியவில்லை’ என ஆதங்கப்பட்டிருந்தார். படங்களுடன் தொடர்புடையதாக சில அரிய வரலாற்றுத் தகவல்களையும் தந்திருந்தார். அவற்றை அவரது வார்த்தைகளிலே, வண்ண எழுத்துக்களில் பதிந்துள்ளேன்.
“நீங்கள் புகைப்படம் எடுத்திருக்கும் இடங்களில் ஹைதர் அலியும் திப்பு சுல்தானும் அலைந்திருக்கிறார்கள். குலாம் அலி என்கிற மனிதர் சுமார் 103 ஆண்டுகள் உயிரோடு இருந்தவர். திப்புவால் 18ம் நூற்றாண்டின் இறுதியில் கான்ஸ்டான்டிநோபிள் அனுப்பப்பட்டார். இவர்தான் கிருஷ்ணகிரியின் முதல் முன்சீப்பாக ஆங்கிலேய அரசால் நியமிக்கப்பட்டார். அதற்கு விலையாக அவர் பின்னாளில் திப்புவைக் காட்டிக் கொடுத்தார்.
உங்கள் இரண்டாவது புகைப்படம் [2. நீல வானமும் நீண்ட மலைகளும்]
இருக்கும் குன்றில் திப்புவின் நண்பர் பசவராஜ் என்பவர் பாண்டிச்சேரிக்கு திப்புவின் உதவி கோரிய ஓலையை சுமந்து குதிரையில் பயணித்த போது அவரை சில துரோகிகள் வழிமறித்துக் கொன்று அங்கேயே புதைத்தனர். பிரான்சுப் படைக்கு திப்பு நலமாக இருப்பதாகவும் படைகள் தேவை இல்லை என்று வேறு செய்தியை அந்தத் துரோகிகள் அனுப்பினார்கள். பிரென்சுப் படைகள் நேரத்தில் வராததால் திப்பு போரில் மரணத்தைத் தழுவினார்.
மீண்டும் குலாம் அலிக்கு வருகிறேன். அவர் கான்டோன்டிநோபிள் சென்ற போது திப்புவுக்காக அங்கிருந்து ஒரு கூடை நிறைய மாம்பழங்கள் சுமந்து வந்தார். அந்தப் பழத்தில் ஒரு கொட்டையை திப்பு சந்தூர் என்கிற கிராமத்தில் (அநேகமாக உங்கள் படம் 5ல் உள்ள குன்றின் பின்புறம் உள்ள கிராமம்) புதைத்து வைத்தார். அந்த மாம்பழம்தான் சந்தூரா என்ற பெயரில் பெங்களூரிலும் கிடைக்கின்றன.
சேலத்து மாம்பழம் என்று பெயர் வாங்கியதும் இந்த மாம்பழம்தான். கிருஷ்ணகிரிக்கு சேரவேண்டிய பெருமை, அப்போது கிருஷ்ணகிரி சேலம் மாவட்டத்தில் இருந்ததால் சேலத்து மாம்பழம் என்று பெயர் வாங்கி விட்டது.”ஊர்க்காரர்களுக்கே உரித்தான உண்மையான ஆதங்கம்.
எதேச்சையாக எடுத்த படங்களுக்குப் பின்னால் இத்தனை அரிய பல தகவல்கள் இருக்குமென்று நினைத்திருக்கவில்லை. மிக்க நன்றி திரு. பென்னேஸ்வரன்!.
வன ஆண்டு:வரலாற்று உண்மைகளுக்குப் பிறகு நிகழ்காலத் தகவல் ஒன்று:
அந்தி நேரத்து நிர்மலமான நீலவானம், மலைகள், குன்றுகள் இவற்றோடு பார்வைக்குக் கிடைத்த பசுமைகள் யாவும் ‘இருக்கிற வளமாவது காக்கப்பட வேண்டுமே’ எனும் ஏக்கத்தை ஏற்படுத்தியது.
2011 சர்வ தேச வன ஆண்டாகக் கொண்டாடப்படுகிறதாம்.

இப்படியான கொண்டாட்டங்களை அறிவித்துதானே விழிப்புணர்வைக் கொண்டு வரவும் மரங்களைக் காப்பாற்றவும் போராட வேண்டியிருக்கிறது.
கீழ்வருவது மட்டும் டோல் கேட் பக்கம் நின்ற சில நொடிகளின் போது...
8. மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன?

அந்தப் பனை அழகா? இல்லை.., பாயும் கதிர் அழகா..?
எது அழகு:)? நீங்களே சொல்லுங்கள்!
*** *** ***