வியாழன், 6 ஆகஸ்ட், 2026

வானத்தின் அகலம் - சொல்வனம்: இதழ் 371

 

வானத்தின் அகலம்

நூறாண்டு கடந்த
பழைய அரசமரத்திலிருந்து
ஒவ்வொரு காலையிலும்
புறப்படுகின்றன பறவைகள் 
வானத்தின் அகலத்தை
அளந்து பாராமல்

இன்றைய பறப்புக்கு
இந்த நீலம் போதுமா 
இன்னொரு நாள் பறக்க
தேவையான நீலம் 
மீதமிருக்குமா என
ஒருபோதும் அவை 
கேட்டுக் கொள்வதில்லை

அடிவானம் விலகிச் செல்கிறதா
அல்லது
மெல்ல நெருங்கி வருகிறதா என
யோசித்ததில்லை

சிறகுகளுக்குக் கீழே
ஒவ்வொரு கணமும்
விரிந்து கொண்டிருக்கும்
வழியைத் தவிர
வேறு எந்த வரைபடத்தையும்
பின்பற்றுவதில்லை

சென்ற இடங்களுக்கு
சாட்சியாக 
வீட்டுக்குக் கொண்டு செல்ல
வானத்தின் துண்டுகளை
சேகரிப்பதில்லை

எழுகின்றன 
சிதறுகின்றன
காற்றிடம் தம்மை
ஒப்படைக்கின்றன
வயல்களுக்கிடையே
கூரைகளுக்கிடையே
தொலைவில் ஒலிக்கும்
அழைப்புகளுக்கிடையே
பகலைக் கழிக்கின்றன

மாலை சாய்கையில்
திரும்புகின்றன
புறப்பட்ட அதே சிறகுகளுடன்
புறப்பட்ட அதே கிளைக்கு—

வானம் முழுவதுமே
இரு கிளைகளுக்கு
இடையேயான தூரமே தவிர
வேறொன்றுமில்லை
என்பதைப் போல.
*
படம்: ஏஐ உருவாக்கம்
*

26 ஜூலை 2026, சொல்வனம் இணைய இதழ்: 371_ல் வெளியாகியுள்ள எனது இரு கவிதைகளில் ஒன்று. 
நன்றி சொல்வனம்!
**

6 கருத்துகள்:

  1. படம் அருமை. கவிதை நன்றாக இருக்கிறது.
    வானம்முழுவதும் இரு கிளைகளுக்கு இடையேயான தூரம் தான்.
    அது உண்மைதான். அவைகள் கற்றுத்தரும் பாடங்கள் அதிகம்.
    இயற்கையோடு இயந்து வாழும் . வானத்தில் பறக்க நீள அகலங்களை கணக்கிடுவது இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம், பறவைகளிடம் கற்க ஏராளமானவை உள்ளன. தங்கள் கருத்துகளுக்கு நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  2. இரு கிளைகளுக்கிடையேயான தூரம்தான் வாழ்க்கை அவைகளுக்கு.  பிறப்புக்கும் இறப்புக்கும் இடையேயான தூரம் மனிதனுக்கு!  கவிதை அருமை.

    பதிலளிநீக்கு
  3. சென்ற வாரம் மொட்டை மாடியில் காலை 6;30 மணிக்கு பார்த்தபோது காக்கைகளும், புறாக்களும் கூட்டம் கூட்டமாக வேலைக்குப் புறப்பட்டுச் செல்லும் மனிதர்கள் போல பறப்பதைப் பார்த்தேன்.  எனக்கும் அது கண்கொள்ளா காட்சியாக இருந்தது. 

    சில காக்கைகள் எழுந்து ஒன்றிரண்டாக அல்லது கூட்டமாக ஒரு இடத்தில் அமர்ந்து சிறகுகளை சோதித்துக் கொண்டு மெல்ல நேரம் எடுத்து பறக்க ஆரம்பித்தன.  

    இன்றைய உங்கள் கவிதை எனக்கு அவற்றை நினைவு படுத்துகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பறவைக் கூட்டங்களைப் பார்ப்பது கண்கொள்ளாக் காட்சியே. இங்கு கிளிக் கூட்டங்களைக் காண முடிகிறது. பொதுவாக காலை வேளைகளில் எல்லாப் பறவைகளும் சிறகுகளைச் சோதித்தபடி அமர்ந்திருக்கும். பல பறவைகளை அந்த போஸில் படமாக்கியுள்ளேன்:).

      கருத்துகளுக்கு நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin