Exif: 1/125s, f/13,
ISO 100
Focal length: 300mm
#HandHeld
இந்த ஆண்டின் இரண்டாவது பெனும்ப்ரல் சந்திரக் கிரகணம் இன்றிரவு.. இதோ இப்போது நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இது நிலவு தேய்ந்து மீண்டும் வளரும் பூரணச் சந்திரக் கிரகணம் இல்லை. பூரணக் கிரகணத்தின் போது சூரியன், பூமி மற்றும் நிலவு ஆகிய மூன்றுமே ஒரே நேர்கோட்டில் வரும். அப்படி இல்லாமல் சூரியனின் கதிர்கள் பூமி மேல் விழுகையில், பூமியின் மங்கலான penumbra எனும் அரைநிழற் பகுதியை நிலவு கடந்து செல்வதையே ஆங்கிலத்தில் Penumbral Lunar Eclipse என்கிறார்கள். நிலவின் தேய்வும் மிகமிகச் சிறிதாக நாம் சாதாரணமாப் பார்க்கையில் உணர முடியாதபடியே இருக்கும். டெலஸ்கோப் மூலமாகதான் தேய்வை உணர முடியும்.
இந்திய நேரப்படி, இன்றிரவு சுமார் 10.30 மணி முதல் நாளை அதிகாலை 2.40 மணி வரை நீடிக்கும் சந்திர கிரகணம் இரவு 12.40 மணியளவில் முழுமையான அளவை எட்டும் என்கிறார்கள். இந்த நேரத்தில் நாம் எப்போதும் பார்க்கும் வழக்கமான பிரகாசத்தோடு இருக்காதாம் முழுநிலவு.
ஸ்ட்ராபெர்ரி மூன்:
பொதுவாக ஜூன் மாத நிலவை ஸ்ட்ராபெர்ரி மூன் என்கிறார்கள். Honey Moon, the Mead Moon(தேனில் தயாரிக்கப்படும் பானம்), and Rose Moon போன்ற பெயர்களும் உண்டு. The Maine farmer's almanac_படி ஒவ்வொரு மாதத்தின் முழு நிலவுக்கும் ஒரு பெயர் வழங்கப் படுகிறது.
முன்னரே ஒரு பதிவில் சொல்லியிருக்கிறேன், ஃபார்மர்ஸ் அல்மனாக் என்பது ஓரளவுக்கு நம்ம ஊர் பஞ்சாங்கம் போல.
அமெரிக்கப் பூர்வீகப் பகுதிகளில் அங்குள்ள பருவங்களையொட்டி வானிலை முன் கணிப்பு; தேதி நேரங்களோடு நிலவோட அம்சம்; சூர்யோதயம் & அஸ்தமனம், பருவங்களுக்கேற்றபடி பயிர் செய்வதற்கான ஆலோசனைகள் என நாட்டுப்புறவியல் அடங்கிய ஒரு நம்பகமான குறிப்பேடு அது. உலகளாவிய அளவில் அதில் குறிப்பிட்டுள்ள பெயராலேயே அந்தந்த மாதத்தின் நிலவு அழைக்கப்படுகிறது. அந்தப் பெயருக்கு ஒருக் காரணக் கதை இருக்கும். நாம அதுக்குள்ளே ரொம்ப ஆழமாய் இறங்க வேண்டாம். ஆக பிங்க் மூன் என்றால் பிங்க் வண்ணத்திலோ ஸ்ட்ராபெர்ரி மூன் என்றால் செக்கச் செகப்பிலோ நிலா இருக்காது என்பதைப் புரிந்து கொள்வோம் :).
மூன் ஃபோட்டோகிராஃபி:
போட்டோகிராபியில் நிலவைப் படம் எடுப்பது ஒரு சவாலான தனிப் பிரிவு. “திரும்பத் திரும்ப நிலவைப் படம் எடுப்பதில் என்ன இருக்கு... ஒரே மாதிரி படங்கள்தானே கிடைக்கப் போகிறது....” என்கிறீர்களா? இருக்கலாம். ஆனால் கிரகணங்கள் மற்றும் சூப்பர் மூன் தோன்றுகையில் அவற்றை நாம் பார்க்கும் நேரத்தைப் பொறுத்து நிலவின் அளவு, பிரகாசம் அதன் பின்னணியில், இதோ மேலே சொல்லியிருப்பது போல நாம் அறிந்து கொள்ள முடிகிற தகவல்கள் போன்றவை எடுக்கும் படங்களுக்கான சுவாரஸ்யத்தைக் கூட்டுகின்றன, இல்லையா? உதாரணத்திற்கு 2018_ல் நான் படமாக்கிய ப்ளட் மூன். ஏன் அது அப்படி அழைக்கப்படுகிறது என்பதைப் பற்றி விரிவாக ‘இங்கே’ சொல்லியிருக்கிறேன். இப்படி நிலவைப் படமெடுக்கையில் அறிந்திடவும் கற்றுக் கொள்ளவும் எவ்வளவோ உள்ளனதானே?
Exif: 1/125s, f/13,
ISO 100
Focal length: 300mm
#HandHeld
|
அடிக்கடி எடுத்துப் பழகி விட்டபடியால் இப்போதெல்லாம் ஓரிரு நிமிடங்களில் நிலவு லட்டு மாதிரி கேமராவுக்குள் விழுந்து விடுகிறது. அந்த அனுபவத்தில் நிலவைப் படமாக்குவது குறித்து சில அடிப்படைக் குறிப்புகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். [இவற்றில் ஒரு சிலவற்றை முந்தைய நிலவுப் பதிவுகளில் சொல்லியிருக்கிறேன் என்றாலும் தொகுப்பாக மீண்டும்.]
நிலவைப் படமாக்கும் போது
கவனிக்க வேண்டியவை:
1.
நிலவைப் படமாக்க குறைந்தபட்சம் நம் லென்ஸில் 200mm zoom இருக்கணும். அதற்கும் மேலே இருந்தால் இன்னும் நல்லது. (இந்தப் பதிவிலுள்ள படங்கள் 70-300mm பயன்படுத்தி எடுத்தவை)
2.உங்கள் லென்ஸிலிருக்கும் UV filter_யை அகற்றி விடுங்கள்.
3.கை நடுக்கத்தால் படம் ஷேக் ஆகிவிடுவதைத் தவிர்க்க ட்ரைபாட் பயன்படுத்துவதே சிறப்பு.
கை நடுங்காமல் எடுக்க முடிந்தால் ஓகே. இன்று நான் எடுத்துப் பகிர்ந்திருக்கும் படங்கள் ட்ரைபாட் இல்லாமல் கேமராவைக் கையில் பிடித்து எடுத்தவை வெவ்வேறு அப்பெச்சர் அளவுகளில்..! ட்ரைபாடில் வைத்து எடுத்திருந்தால் இன்னும் ஷார்ப்பாக கிடைத்திருக்கும்.
4.
ட்ரைபாடில் சரியாக கேமராவை மாட்டி, எப்படித் திருப்பி எங்கே டைட் செய்தால் நாம் விரும்பும் கோணத்தில் படம் எடுக்க முடியும் என்பதை முன்னரே பழகிக் கொள்ள வேண்டும். இருட்டுக்குள் அந்த நேரத்தில் தடுமாற வேண்டியிருக்காது.
5.என்னதான் ட்ரைபாடில் வைத்தாலும் விரலின் சிறு தொடுகையும் கூட கேமராவை ஆட்டம் காண வைக்கும். எனவே ரிமோட் அல்லது செல்ஃப் டைமர் உபயோகித்தால் நல்லது.
6.
அப்படி ட்ரைபாடில் ரிமோட் அல்லது செல்ஃப் டைமர் உபயோகித்து எடுக்கையில் VR (vibration reduction) or IS (image stabilization) ஸ்விட்சை ஆஃப் செய்திடுங்கள்.
7.மேனுவல் மோட் அல்லது அப்பெச்சர் மோட் எது உங்களுக்கு வசதியோ தீர்மானித்துக் கொள்ளுங்கள். மேனுவல் மோடில் நான் பெரும்பாலும் அப்பெச்சர் f11_ல் ஆரம்பிப்பேன். முன்னும் பின்னுமாக f9 to f13 சென்று பார்ப்பேன்.
8.
மேனுவல் ஃபோகஸ் படத்தை நல்ல ஷார்ப்பாக விரைவில் எடுக்க உதவும். அப்போது ஃபோகஸ் பாயின்டை (ஸ்பாட் மீட்டரிங் spot metering) நிலவின் நடுப்பகுதியில் வைத்திடுங்கள்.
9.
உங்கள் கேமராவின் குறைந்தபட்ச iso 100 எனில் ஷட்டர் ஸ்பீட் 1/125_ல் முயன்றிடலாம். கு.ப iso 200 எனில் 1/250 வைத்துப் பார்க்கலாம். நிலவின் பிராகாசத்தைப் பொறுத்து iso 100 முதல் 400 வரை வைத்துக் கொள்ளலாம். இதில் hard and fast விதிகள் கிடையாது. நிலவு சற்று மங்கலாக இருப்பின் ஷட்டர் ஸ்பீடைக் குறைத்துக் கொள்ளலாம். அதிகப் பிரகாசமாக இருந்தால் ஷட்டர் ஸ்பீடை கூட்டிக் கொள்ளலாம். f நம்பரில் முன்னும் பின்னுமாகப் போய்ப் பார்க்கலாம். இருளில் எடுப்பதால்கூடிய வரை iso_வை அதிக அளவில் வைக்காமல் இருந்தால் படம் noise (grains) இல்லாமல் கிடைக்கும். குறிப்பாக.....
10.
நீங்கள் அப்பெச்சர் மோடில் எடுப்பீர்களானால், iso ஆட்டோ தவிர்த்து விட்டு, நீங்களே செட் செய்திடுங்கள்.
*
யூகலிப்டஸ் மர இலைகளுக்குள்..
**
இந்தப் பதிவை முன்னர் எடுத்த நிலவுப் படங்களோடு தமிழில் புகைப்படக்கலை - பிட் தளத்திலும் பகிர்ந்திருக்கிறேன்:
மேலும் தகவலுக்காக,
பிட் தளம் நான்காண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் செயல்பட ஆரம்பித்துள்ளது. புதிதாகக் குழுவில் இணைந்திருக்கும் திரு சரவணவேல் காணொளிப் பாடங்களாக வழங்க ஆரம்பித்துள்ளார். ஆர்வமுள்ளவர்கள் பார்த்துப் பயனுறுங்கள்!
***
சுவாரஸ்யமான தகவல்கள். எப்படியோ நீங்கள் எல்லாம் நிலவை இவ்வளவு அழகாக படம் எடுத்து விடுகிறீர்களே என்று நினைக்கும்போதே அதற்கான டிப்ஸ்களையும் கொடுத்திருக்கிறீர்கள். நன்றி.
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்.
நீக்குசிறப்பான தகவல்கள்.
பதிலளிநீக்குபிட் தளத்திலும் இப்பொழுது தான் பார்த்தேன்.
நல்லது. நன்றி வெங்கட்.
நீக்குஅறிவியல் மற்றும் தொழில் நுட்பத் தகவல்கள் வாசிப்பதற்குச் சுவாரஸ்யமாகவும், தெளிவாகவும் புரிகிறது. காரணக் கதைகள் "Native American and other Traditional Names for full Moons" தேடி வாசிக்க வைத்துவிட்டீர்கள்:). நன்றி.
பதிலளிநீக்குஓ, நல்லது:). உண்மையில் ஒன்றின் தொடர்பாக ஒன்றைத் தேடுகையில் கிடைக்கும் தகவல்கள் ஆச்சரியமூட்டுகின்றன. சுவாரஸ்யம் அளிக்கின்றன. மிக்க நன்றி.
நீக்குநிலவைப் படமாக்கும் போது கவனிக்க வேண்டிய தகவல்களை குறித்து வைத்துக் கொண்டேன்... நன்றி...
பதிலளிநீக்குநன்றி தனபாலன்.
நீக்குசிறப்பான தகவல்கள், அழகான நிலா.
பதிலளிநீக்குநிலாவை எப்படி படமாக்க வேண்டும் என்ற அழகான விளக்கம் எல்லாம் அடங்கிய பதிவு அருமை.
நன்றி கோமதிம்மா.
நீக்குநிலாவை கைக்குள் அடக்க:) விவரமாகத் தந்துள்ளீர்கள். அழகான படங்கள்.
பதிலளிநீக்குநன்றி மாதேவி.
நீக்குஅருமையான தகவல்கள்! விளக்கமாக எழுதியிருக்கிறீர்கள். நிறைய பேருகு உதவும். புகைப்படமும் அழகு!
பதிலளிநீக்குநன்றி மனோம்மா.
நீக்குஅழகான காட்சிகளும் , சிறப்பான தகவல்களும் ...
பதிலளிநீக்குநன்றி அனு.
நீக்கு