ஞாயிறு, 31 ஜூலை, 2022

கவிதை ஓர் அறிமுகம் - பில்லி காலின்ஸ் - சொல்வனம் இதழ்: 275


கவிதை ஓர் அறிமுகம்

அவர்களிடம் கேட்டுக் கொண்டேன் கவிதையொன்றை எடுத்து
வண்ணப் படத்தைப் போல
வெளிச்சத்தில் தூக்கிப் பிடிக்குமாறு

அல்லது செவியை அதன் தேன்கூட்டில் அழுத்தும்படி.

நான் சொன்னேன் எலியொன்றைக் கவிதைக்குள் விடுமாறு,
பிறகு அது நுண்ணாய்ந்து வெளியேறுவதைக் கவனிக்கும்படி,

அல்லது கவிதையின் அறைக்குள் நடந்து செல்லுமாறு,
பிறகு விளக்கின் மின் விசைக்காகச் சுவர்களை உணரும்படி.

நான் விரும்பினேன் அவர்கள் கவிதைப் பரப்பின் குறுக்காக 
நீர்சறுக்கி விளையாடிச் செல்ல வேண்டுமென்று,
கரையில் இருக்கும் எழுத்தாளரின் பெயருக்குக் கையசைத்தபடி.

ஆனால் அவர்கள் விரும்பியதெல்லாம்
கவிதையைக் கயிற்றால் நாற்காலியில் கட்டிவைத்து
கொடுமைப்படுத்தி ஒப்புதல் வாக்குமூலம் வாங்கவே. 

அவர்கள் அதைத் நீர்க்குழாயினால் அடிக்கத் தொடங்குகிறார்கள்
அது என்ன சொல்ல வருகிறது என்பதைத் தெரிந்து கொள்வதற்காக.
*

மூலம்:  'Introduction to Poetry'  from "The Apple that Astonished Paris"
                By Billy Collins
*


பில்லி காலின்ஸ்:

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வசிக்கும் 81 வயதான பில்லி காலின்ஸ் (வில்லியம் ஜேம்ஸ் காலின்ஸ்) கவிஞரும், எழுத்தாளரும், பேராசிரியரும், நூல் திரட்டாளரும் ஆவார். 2001 முதல் 2003_ஆம் ஆண்டு வரையிலும் அமெரிக்காவின் அரசுக் கவிஞராக நியமனம் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத் தக்கது. 2014_ஆம் ஆண்டு கவிதைக்காக நார்மன் மெயிலர் பரிசைப் பெற்றவர். நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையால் “அமெரிக்காவின் மிகப் பிரபலமான கவிஞர்” எனப் பாராட்டப்பட்டவர்.

பில்லி காலின்ஸ் 1941_ஆம் ஆண்டு மன்ஹாட்டன் நகரில் வில்லியம் - கேதரின் காலின்ஸ் தம்பதியருக்குப் பிறந்தவர். இவரை வளர்ப்பதற்காகத் தன் செவிலியர் வேலையை ராஜினாமா செய்த தாய் கேதரின், கவிதை உட்பட எந்தத் தலைப்பிலான எழுத்தையும் பாராயாணம் செய்து ஒப்பிப்பதில் வல்லவர்.  சிறுவயதிலேயே தான் படித்தவற்றைப் பாடி, ஒப்பித்து மகனுக்கு வார்த்தைகளின் மீதான ஆர்வத்தை ஏற்படுத்தியவர். தன் தந்தையிடமிருந்து நகைச்சுவை உணர்வைப் பெற்றதாகக் குறிப்பிடுகிறார் காலின்ஸ்.

இவர் ஹோலி க்ராஸ் கல்லூரியில் ஆங்கிலத்தில் இளங்கலைப் பட்டமும், கலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தில் முதுகலைப் பட்டமும், காதல் கவிதைகளுக்காக முனைவர் பட்டமும் பெற்றவர். நியூயார்க் நகரின் லேமன் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி 2016_ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

இவரது முக்கியத் தொகுப்புகளாக அறியப்படுபவை: The Apple That Astonished Paris, Questions About Angels, The Art of Drowning.
*
படங்கள்: நன்றியுடன்.. இணையத்திலிருந்து..
*

8 கருத்துகள்:

 1. "இருள் சூழ்ந்த அறையில் மின் விசை தேடுவது போல், சிந்தையில் தேடி, உணர்வால் பொருள் புரிந்து அனுபவித்து மகிழ்வது கவிதை" அருமை. கவிதை கடலிலிருந்து மீண்டும் ஒரு சிறந்த முத்து. மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

   நீக்கு
  2. கையசைப்புக்கான விளக்கம் அருமை.

   சொல்ல வரும் கருத்தை, வாசிப்பவர்களுக்கு மிகத் தெளிவாகப் புரியும்படி, ஒவ்வொரு வார்த்தையும் தெரிந்தெடுத்து எளிமையான வாக்கியங்களில் எழுதுகிறீர்கள்.
   நன்றி.

   நீக்கு
 2. கவிதை சொல்வனத்தில் இடம்பெற்றதற்கு வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.
  கவிஞ்ரை பற்றிய செய்திகள் பகிர்வு அருமை.
  கவிதை கவிஞர் என்று பெயர் வைத்து கொண்டு கரையில் நிற்கிறார்கள்
  உள்ளே இறங்க மாட்டேன் என்கிறார்கள் என்று சொல்கிறாரா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்

  1. இக்கவிதை, கவிதையை எப்படி வாசிக்க வேண்டும் என்பது குறித்தானது. கவிதைப் பரப்பினுள் நுழைந்து ரசித்து வாசிப்பதோடு, எழுதியவர்களை அங்கீகரிக்கும் விதமாகக் கையசைக்கச் சொல்கிறார் எனக் கொள்ளலாம். ஆனால் நிதர்சனம் வேறாக இருப்பதாக முடித்திருக்கிறார்:)!

   கருத்துக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி கோமதிம்மா!

   நீக்கு
 3. புது மாதிரியாக இருக்கிறது கவிதை. கவிஞர் பற்றிய விவரங்கள் படித்து தெரிந்து கொண்டேன்.

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin