வெள்ளி, 15 ஜூலை, 2022

பகடையை உருட்டு - சார்லஸ் புக்கோவ்ஸ்கி (20) - சொல்வனம் இதழ்: 273

  

பகடையை உருட்டு

நீங்கள் முயற்சி செய்வதாயின்
முழுமையாக முயன்றிடுங்கள்.
அல்லது, தொடங்கவே தொடங்காதீர்கள்.

நீங்கள் முயற்சி செய்வதாயின்
முழுமையாக முயன்றிடுங்கள்.
இதனால் நீங்கள் இழக்க நேரலாம் தோழிகளை,
மனைவியரை, உறவினரை, பணிகளை ஏன்
உங்கள் புத்தியையும் கூட.

முழுமையாக முயன்றிடுங்கள்.
அதன் அர்த்தம் நாலைந்து நாட்கள் சாப்பிடாதிருக்க நேரலாம்
அதன் அர்த்தம் பூங்கா இருக்கையொன்றில் 
உறைந்து போக நேரலாம்.
அதன் அர்த்தம் சிறையாக இருக்கலாம்,
அதன் அர்த்தம் ஏளனத்தை 
பரிகாசத்தை எதிர் கொள்வதாக இருக்கலாம்
தனிமைப் படுத்தப் படுவதாக இருக்கலாம்.

தனிமை ஒரு பேறு,
மற்றன யாவும்
உங்கள் சகிப்புத்தன்மைக்கு,
உண்மையில் நீங்கள் எந்த அளவுக்கு
செய்ய விரும்புகிறீர்கள் என சோதிக்க 
ஒரு பரீட்சை.

நீங்கள் செய்வீர்கள்
நிராகரிப்பு மற்றும் மோசமான மனவேறுபாடுகளுக்கு மத்தியிலும்.
அது நீங்கள் கற்பனை செய்யும் எதனை விடவும்
நன்றாகவே இருக்கும்.

நீங்கள் முயற்சி செய்வதாயின்
முழுமையாக முயன்றிடுங்கள்.
அதற்கு ஈடான உணர்வு
வேறெதுவும் இல்லை.
நீங்கள் தெய்வங்களுடன் தனித்திருப்பீர்கள்
இரவுகள் நெருப்பின் சுடரில் ஒளிர்ந்திடும்.

முயன்றிடுங்கள், முயன்றிடுங்கள், முயன்றிடுங்கள்.
முயன்றிடுங்கள்.

முழுமையாக
முழுமையாக.

நீங்கள் பூரண சிரிப்புக்குள்
நேராக வாழ்க்கையைச் செலுத்திடுவீர்கள்,
அது ஒன்றே  நல்ல போராட்டம்
அங்கு.
*
மூலம்:
"roll the dice" By Charles Bukowski

[படம்: இணையத்திலிருந்து..]
*
சார்லஸ் புக்கோவ்ஸ்கி:

ருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த அமெரிக்கக் கவிஞர் எனக் கொண்டாடப்படும் ஹென்ரி சார்லஸ் புக்கோவ்ஸ்கி (1920 – 1994) , நாவலாசரியரும் சிறுகதை எழுத்தாளரும் கூட. ஜெர்மனியில் பிறந்தவர். தந்தை அமெரிக்கர். தாய் ஜெர்மனியைச் சேர்ந்தவர். இவரது சிறுவயதில் பெற்றோர் அமெரிக்காவில் குடி புகவும், அமெரிக்கராகவே வளர்ந்தார். கூடப்பிறந்தவர்கள் கிடையாது. குடித்து விட்டுத் தாயையும் தன்னையும் அடிக்கும் வழக்கம் கொண்ட தந்தையை எதிர்க்க, சோகத்தை மறக்க தானும் அதே பழக்கத்தில் விழுந்தவர். லாஸ் ஏஞ்சல்ஸ் சிட்டி கல்லூரியில் பத்திரிகைத் துறையில் பட்டம் பெற்றிருந்தாலும் பெரும்பாலும் விளிம்பு நிலை வேலைகளையேத் தொடர்ந்து பார்த்திருக்கிறார். இவரது எழுத்துக்களும் இவர் வாழ்ந்த லாஸ் ஏஞ்சல்ஸின் சமூக, கலாச்சார, பொருளாதார நிலைமைகளைப் பிரதிபலிப்பதாகவே உள்ளன. ஆறு நாவல்கள், ஆயிரக்கணக்கான கவிதைகள், நூற்றுக்கணக்கான சிறுகதைகள் யாவும் சுமார் அறுபதுக்கு மேலான புத்தகங்களாக வெளியாகியுள்ளன. அனைத்தும் அமெரிக்க விளிம்புநிலை மனிதர்களின் வாழ்க்கைப் போராட்டங்களை மையமாகக் கொண்டவை.

வரது கவிதைகள் மழுங்கலானவை என்றொரு கூற்று உண்டு. அன்றைய காலக் கட்டத்தில் கவிஞர்கள் ஒலிநயத்துடனான கவிதைகளை இயற்றுவதையே வழமையாகக் கொண்டிருந்தனர். உருவகங்களுடனும், மறை பொருட்களுடனும் எழுதுவதில் முனைப்பு காட்டி வந்தனர். சார்லஸ் புக்கோவ்ஸ்கியின் கவிதைகளோ உரைநடை வடிவைக் கொண்டிருந்தன. ஆரவாரமான அவரது படைப்புகள் கவித்துவமற்றவை என்று ஒரு சிலர் வாதிட, மற்ற சிலர் அதே படைப்புகளை உணர்ச்சி வேகமுடையவை எனக் கொண்டாடினர். 

சார்லஸ் புக்கோவ்ஸ்கி இரண்டு உலகப் போர்கள் மற்றும் வியட்நாம் போர் ஆகியவற்றைத் தன் வாழ்க்கையில் பார்த்திருக்கிறார். அவர் படைப்புகளில் பரவலாக வெளிப்படும் அவநம்பிக்கை, கசப்புணர்வு ஆகியவற்றுக்கு இந்தக் காலக்கட்டங்களே காரண கர்த்தாவாகக் கைகாட்டப் படுகின்றது. 
*

26 ஜூன் 2022, சொல்வனம் இதழ்: 273_ல் வெளியாகியுள்ள 3 கவிதைகளில் ஒன்று. 
நன்றி சொல்வனம்!
***

6 கருத்துகள்:

  1. ரஷ்யப் பெயர் மாதிரிஇருக்கிறது. கவிஞர் பற்றிய விவரங்கள் முன்பும் தந்திருக்கிறீர்களோ என்று சந்தேகம்.  இன்றைய கவிதையும் படித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம், இதுவரையிலும் இக்கவிஞரின் 20 கவிதைகளைக் தமிழாக்கம் செய்திருப்பதால் இவர் பற்றிய குறிப்பை முன்னரும் பலமுறை பகிர்ந்துள்ளேன். நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. இன்றைய கவிதையில் ஒன்று மிகவும் பொருந்திப் போகும் ஒன்று முயற்சி செய்யும் முழுமையாகச் செய்ய வேண்டும் அப்போது உறவினர் நட்பு எல்லாம் இழக்க நேரிடலாம் என்பது.

    கீதா

    பதிலளிநீக்கு
  3. நாம் கொண்ட இலக்கை அடைய வேண்டுமென்றால் முயற்சி இருக்க வேண்டும்தான்,
    சொல்வனத்தில் இடம்பெற்றதற்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin