புதன், 11 ஜூலை, 2018

பாரம்பரிய முகமூடிகளும் சில குறியீடுகளும் - ஸ்ரீலங்கா (8)

லங்கையில் முகமூடிகளின் பயன்பாடு என்பது மிகப் பழமை வாய்ந்த சரித்திரத்தைக் கொண்டது.

#1

1800 ஆம் ஆண்டுகளில் அவை நாட்டுப்புற நாட்டியங்களில் பல்வேறு கதாபாத்திரங்களைச் சித்தரிக்கவும், பேய் நடனங்களுக்காகவும் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன.

#2

முகமூடி நடனங்களும் அவற்றின் தயாரிப்புப் பாரம்பரியமும் கேரளா மற்றும் மலபாரிலிருந்து இலங்கைக்குப் பரவியதாகக் கருதப்பட்டாலும், தற்போதைய இலங்கைக் கைவினைக் கலைஞர்கள் அதில் அதீத தேர்ச்சி பெற்றிருப்பதோடு நுட்பமான வடிவமைப்பு மற்றும் வண்ணங்களைப் பயன்படுத்தித் தனித்துவமான அழகியலை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

#3


முகமூடிகள் தயாரிப்பு தற்போது தென் மேற்குக் கடற்கரையை ஒட்டிய பகுதிகளில், குறிப்பாக அம்பலங்கொடை, Wathugedara, Benthara போன்ற இடங்களில் பரம்பரை பரம்பரையாக இத்தொழிலில் ஈடுபட்டிருக்கும் சில குடும்பங்களினால் செய்யப்பட்டு வருகிறது. தொழில் நுட்பங்களும் அவரவர் குடும்பங்களுக்குள் மட்டுமே வழிவழியாகக் கற்றுத் தரப்பட்டு வருகிறது. வண்ண மயமான அலங்காரத்தைக் கொண்ட இந்த முகமூடிகளை எடை குறைந்த நீடித்து உழைக்கக் கூடிய மரங்களைப் பயன்படுத்தியே செய்ய முடியும். “Rukkattana” மற்றும் “Diyakanduru” மரங்களைப் பயன்படுத்துகிறார்கள்.

#4


தற்காலத்தில் நாடகக் கதாபாத்திரங்களைச் சித்தரிக்கவும், நடன நிகழ்வுகளுக்கும் மட்டுமில்லாமல் நோய்களைக் குணப்படுத்தும் சடங்குகளுக்கும் இந்த முகமூடிகளைப் பயன்படுத்துகிறார்கள்.

#5


#6

#7
முகமூடிகளில் ராக்ஷா முகமூடிகள், கோலம் முகமூடிகள், Sanni முகமூடிகள் எனப் பல வகைகளும் உள்ளன.

ராக்ஷா முகமூடிகள் கோலம் மதுவா எனும் ராட்சத நடனங்களுக்குப் பயனாவது. புராண வரலாற்றின்படி இலங்கை ராவணனை மன்னனாகக் கொண்டு ராட்சதர்களால் ஆளப்பட்ட நாடு. ராட்சதர்களின் பல்வேறு உருவங்களின் அனுமானமாக முகமூடிகள் தயாராகின்றன. 24 வடிவங்களில் ராட்சதர்கள் உருவகப்படுத்தப் பட்டிருந்தாலும் அவற்றில் மிகச் சிலவே கோலம் நடனங்களில் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றில் முக்கியமானவை நாக முகமூடி, பறவை முகமூடி மற்றும் மரண தேவதை.

சன்னி முகமூடிகள் - 18 வகை முகமூடிகள் நோய்களைக் குணப்படுத்தும் சடங்கு சம்பிரதாயங்களுக்குப் பயன்படுத்தப்படுகின்றன.

கோலம் முகமூடிகள் - இவை நாடகங்களில் பயன்படுத்தத் தயாரிக்கப் படுபவை.

ம்பலங்கொடையில் இருக்கும் முகமூடி காட்சியகம் பிரபலமான ஒன்று.
இது தனியாரால், அங்கு பரவலாக அறியப்பட்ட ஒரு குடும்பத்தினரால் நடத்தப்படும் அருங்காட்சியகம்.  முகமூடி அருங்காட்சியகம், முகமூடித் தொழிற்சாலை மற்றும் முகமூடி விற்பனைக் கூடம் ஆகியவையே அப்பகுதி முழுவதும் விரவி நீண்டிருப்பதாகத் தெரிகிறது. அருங்காட்சியகம் முகமூடிகளின் பாரம்பரிய வரலாற்றைத் தெரிந்து கொள்ள உதவும் வகையில் குறிப்புகளோடு காட்சிப் படுத்தப்பட்டிருக்கின்றன. விற்பனைக்கு காட்சிப்படுத்தப் பட்டிருப்பவை பொறுமையாகவும் நுணுக்கமாகவும் கைகளால் செய்யப்பட்ட வேலைப்பாடுகளுடன்  கண்ணைக் கவரும் வண்ணங்களில்  சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பவையாக உள்ளன என்கின்றன தகவல் குறிப்புகள்.

#8


நேரமின்மையால் அங்கு செல்ல முடியாது போனாலும் நாங்கள் தங்கியிருந்த இடத்திற்கு அருகாமையில் இருந்த கடையில் முகமூடிகளின் அணிவகுப்பைக் கண்டு களிக்க முடிந்தது. அந்தப் படங்களையே இங்கே பகிர்ந்துள்ளேன்.

#9

தகவல்கள்: இணையத்தில் சேகரித்துத் தமிழாக்கம் செய்தவை.

*
மிழில், முகமூடிகளைப் பற்றி விரிவாக “முகமூடிகளின் தாற்பரியங்கள்” எனும் இந்தக் கட்டுரையில் வாசிக்கக் கிடைக்கிறது. அமல மிருணாளினி என்பவர் பேராசிரியர் லயனல் பென்தரஹே என்பவரிடம் கேட்டுப் பெற்றத் தகவல்களைத் தொகுத்து அளித்திருக்கிறார். சுவாரஸ்யமான அக்கட்டுரையிலிருந்து ஒரு பகுதி:

முகமூடிகளின் நிறங்களும் அவற்றின் பாத்திரங்களின் குணாம்சங்களை பிரதிபலிக்கின்றன. தீயசக்திகள் மற்றும் பேய்களைக் குறிப்பதற்கு கறுப்பு மற்றும் மண்ணிற வர்ணங்களும் கடவுள் மற்றும் நல்ல சக்திகளைப் பிரதிபலிப்பதற்கு பொன்நிறமும் பயன்படுத்தப்படுகின்றது.

#10
நல்ல சக்தி..

முகமூடிகள் வெளிப்படுத்தும் அர்த்தங்கள் மிகவும் ஆழமானவை. இவற்றை அணிந்து உருவாக்கப்படும் மாறுவேடம் என்பது உண்மையில் கண்ணுக்குப் புலப்படாத சக்திகளுக்கு உருவம் கொடுத்து அவற்றிடமிருந்து வரங்களைப் பெற்றுக் கொள்வதாகும். இந்தச் சடங்குகள், சம்பிரதாயங்கள் மிகவும் அழகியல் உணர்வுடன் வெளிப்படுத்தப்படுகின்றன. எமக்குப் பின்னால் இருந்து எம்மை இன்னொரு சக்தி இயக்குகின்றது என்பதன் குறியீடாகவும் முகமூடி பயன்படுத்தப்படுகின்றது. மனிதன் தனது உண்மையான அடையாளத்தை மறைத்து வேறொன்றாகத் தோன்றி, தனது நோக்கத்தை அல்லது விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கான வரங்களைப் பெறுவதற்காக முகமூடிகளை அணிந்து கொள்கின்றான்.

ஆர்வமுள்ளவர்கள் அவசியம் முழுக் கட்டுரையை வாசிக்கவும்.

**

கடற்கரைக் காட்சிகள் எனும் அடுத்த பதிவோடு இத்தொடர் முடிவுறும்:).

தொடர்புடைய முந்தைய பதிவுகள்:
ஸ்ரீலங்கா - 1
ஸ்ரீலங்கா - 2
ஸ்ரீலங்கா - 3
ஸ்ரீலங்கா - 4
ஸ்ரீலங்கா - 5
ஸ்ரீலங்கா - 6
ஸ்ரீலங்கா - 7

***

10 கருத்துகள்:

  1. மிகவும் சுவாரஸ்யமான தொகுப்பு. கேரளத்திலிருந்து சென்ற கலை என்பது புரிந்தது. அதே போல கர்நாடகத்திலும் இந்த வழக்கம் உண்டு அல்லவா? யக்ஷகானம் என்ற வார்த்தை நினைவுக்கு வருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யக்ஷகானாவில் முகமூடிகள் பயன்படுத்த மாட்டார்கள். ஒப்பனையும், உடையலங்காரமும் தனித்துவமானவை. நீங்கள் ஏற்கனவே பார்த்ததுதான் என்றாலும் யக்ஷகானா பற்றிய எனது பதிவு படங்களுடன் இங்கே...

      http://tamilamudam.blogspot.com/2015/05/blog-post_25.html

      நன்றி ஸ்ரீராம்:).

      நீக்கு
  2. அருமையான முகமூடிகள். செய்திகள் மிக அருமை.
    நல்லசக்தி பொன்முகம் வெகு அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம், சாந்தமான முகம் நுணுக்கமான வேலைப்பாடுகளுடன். நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  3. முக மூடிகள் பற்றி முழுதும்படித்தேன் படித்தவை நினைவில் நீற்குமா என்பது சந்தேகமே ஆனால் செயற்கை முக மூடிகளை அணியாமல் இயற்கையிலேயே முகமூடி அணிந்திருக்கும் மக்களும் இருக்கிறார்கள் என்னும் எண்ணமும்வந்தது

    பதிலளிநீக்கு
  4. நிழ்டபடங்கள் வண்ணமயமாக உள்ளன :-) .

    கதகளி யில் உள்ள வண்ணங்கள் போல இந்த முகமூடிகளிலும் உள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கிரி.

      அம்பலங்கொடையில் இருக்கும் காட்சியகம் பார்க்க வேண்டிய ஒன்றெனச் சொல்கிறார்கள். செல்ல முடிகிறதா பாருங்கள்:).

      நீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin