Tuesday, April 10, 2018

தங்க புத்தர்.. கொழும்பு விகரமகாதேவி பூங்கா.. - ஸ்ரீலங்கா (2)

#1
முனிஸிபல் கவுன்ஸில் டவுண் ஹால்

நாட்டின் பழமை வாய்ந்த பரந்து விரிந்த பூங்காக்களில் முக்கியமான ஒன்று விகரமகாதேவி பூங்கா. கொழும்பு மாநகரில், தேசிய அருங்காட்சியகத்தின் அருகில் இருக்கிறது. ஒரு காலத்தில் விக்டோரியா பூங்கா என அறியப்பட்ட இடம். காலனி ஆதிக்கத்தின் போது எழுப்பப்பட்ட டவுண் ஹால் கட்டிடம் இந்தப் பூங்காவின் வட கிழக்குப் பகுதியில் சாலை தாண்டி நேர் எதிரே உள்ளது.  பூங்காவின் முக்கிய அம்சமாக இருப்பது வரிசையான நீருற்றுகளின் முடிவில், கவுன்ஸில் டவுண் ஹாலைப் பார்த்து அமர்ந்திருக்கும் பெரிய புத்தர் சிலை.

#2
 விகரமகா தேவி பூங்கா
பிரிட்டிஷ் ஆட்சியின் போது இப்பூங்காவுக்கான நிலம் சார்லஸ் ஹென்ரி என்பவரால் நகரத்திற்கு வழங்கப்பட்டிருக்கிறது. அதனாலேயே பிரிட்டிஷ் மகராணியின் பெயர் முதலில் சூட்டப்பட்டிருந்தது. இரண்டாவது உலகப் போரின் போது பிரிட்டிஷ் இராணுவத்தினரின் பயன்பாட்டில் இருந்த பூங்கா பின்னர் 1951 ஆம் ஆண்டில் நகரத்திற்காக மீட்கப்பட்டு பொதுமக்களுக்காகத் திறந்து விடப்பட்டது. அதன் பின்னர் துட்டகாமினி எனும் சிங்கள அரசரின் அன்னையும், திசா மன்னரின் மகளுமான விகரமகாதேவியின் பெயரால் அழைக்கப்பட்டு வருகிறது.

#3
பரந்த பூங்காவின் வரைபடமும்
1951 ஆம் ஆண்டு பொதுமக்களுக்குத்
திறந்து விடப்பட்டத் தகவலும்..

#4
பிரிட்டிஷ் ஆட்சியின் போது ‘விக்டோரியா பூங்கா’

#5
2014_ஆம் ஆண்டு  பூங்கா மற்றும் டவுண் ஹாலின் சுற்றுப்புறம் புணரமைக்கப்பட்டு மக்கள் உபயோகத்திற்காக மீண்டும் திறந்து வைக்கப்பட்ட விவரங்கள் அடங்கிய கல்வெட்டு.. 
சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்..

#6
தமிழில்..


#7
தியானத்தில் புத்தர்
ங்கியிருந்த விடுதியிலிருந்து 15 நிமிட நடையில் இருந்த இந்தப் பூங்காவிற்கும் அதிகாலை நானும் தங்கைகளும் நடைப் பயிற்சிக்காக சென்றிருந்தோம். பூங்காவின் உள்ளே இருந்த மிக உயர்ந்த அடர்ந்த மரங்கள் மட்டுமின்றி காலை நடைப் பயிற்சியில் இருந்த மனிதர்களும், பயிற்சி முடிந்து ஆங்காங்கே புல்வெளிகளிலும் கல் இருக்கைகளிலும் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த மனிதர்களும், ஜோடிகளும், நெடிந்துயர்ந்த மரங்களும் பெங்களூர் கப்பன் பூங்கா சூழலை வெகுவாகு நினைவு படுத்தின.

#8


குறிப்பாக கிளை பரப்பிக் கிடக்கும் கீழ்வரும் மரம் லால்பாக் மரங்களை நினைவுக்கு கொண்டு வந்தது.

#9
அங்கிருந்த குளம் ஒன்றில் ஏராளமான வாத்துகள் கரையோரமாக நடைபோட்டுக் கொண்டிருந்தன. சில நீந்திக் கொண்டிருந்தன. கூழைக்கிடா ஒன்று அங்குமிங்கும் பறந்தும் நீந்தியும் மீன்களைப் பிடித்துக் கொண்டிருந்தது.

#10
சாந்தமான வாத்து

#11
கரையோரம் ஒன்று.. காற்று வாங்கியபடி..


#12
கூழைக்கிடா

#13
சிறு நாரை (Heron)


#14
ஆள்காட்டிக் குருவி

மேலும் இரை தேடி விதம் விதமான பறவைகள் வந்த வண்ணம் இருந்தன. வாத்துகளை எடுத்து முடித்து விட்டு திரும்பி நின்று இந்த ஆள்காட்டிக் குருவியைப் படமாக்கிக் கொண்டிருந்த போது பின்புறமாக வந்த வாத்து ஒன்று திடீரென என் கெண்டைக் காலைப் பலமாக இரண்டு முறைக் கவ்வவும் நான் ‘வீல்’ என அலறித் திரும்பினேன். தீனி ஏதும் கொண்டு வரவில்லை எனும் கோபமோ அல்லது ‘சும்மா என்ன வளைத்து வளைத்து ஃபோட்டோ வேண்டி கிடக்கிறது’ எனும் எரிச்சலோ தெரியவில்லை. முறைத்துப் பார்த்த அந்த வாத்தையும் படமெடுத்துக் கொண்டேன்.

#15
முறைப்பு
கெண்டைக் காலைக் கவ்விய வாத்து
பின்னர் இந்தப் படத்தைப் பார்த்து ‘கேமரா கையில் இருந்தால் சுற்றப்புறம் மறந்து விடுமே’ என அடக்க மாட்டாமல் சிரித்தனர் தங்கைகளும் மற்றவர்களும்.

முதலில் குளக்கரையில் “உன் கேமராவுக்கு நல்ல இரை” என பறவைகளோடு என்னை விட்டு விட்டு பூங்காவைச் சுற்றி வரச் சென்ற தங்கையர் போன வேகத்தில் திரும்பி வந்து ‘சீக்கிரமா வா.. இதை விட சுவாரஸ்யம் காத்திருக்கிறது’ என அவசரமாக அழைத்துச் சென்றனர். அங்கே திருமணம் முடிந்த தம்பதியர் சிலருக்கு மாப்பிள்ளைத் தோழர்கள் மற்றும் மணப்பெண் தோழியரோடு வெளிப்புறப்  படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. அந்நாட்டின் கலாச்சார உடையில் இருந்தவர்களைப் படமாக்கும் வாய்ப்பை விடலாமா? அவர்களின் அனுமதி கோரி எடுத்த படங்கள்:

#16
மணமக்கள்

#17
மகிழ்ச்சி பொங்க..

#13
மாப்பிள்ளைத் தோழர்கள்..

#18
மணப்பெண் தோழிகள்..

#19
அடுத்த ஜோடி..

#20
ஆனந்தப் புன்முறுவலுடன்..

#21
“நாங்க மாப்பிள்ளை வீட்டுக்காரங்க..”

#22
“நாங்க பெண் பக்கம்..”


#23
“வாழ்த்த வந்தேன்..”
அவர்களின் நேரத்தை அதிகம் அபகரித்திடாமல், வேகவேகமாகப் படங்களை எடுத்துக் கொண்டு, ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி சொல்லி விட்டு நகர்ந்தேன்.

பூங்காவின் ஒருபுறம் குதிரைகளை வைத்துப் பராமரிக்கிறார்கள்.  இங்கே நடக்கும் விழாக்களின் போது அவற்றைப் பயன்படுத்துவதோடு யானைகளையும் வரவழைக்கிறார்களாம். மேலும் உள்ளேயே  சிறிய விலங்கியல் பூங்கா, சிறுவர் விளையாட்டுப் பூங்கா, பெரிய விளையாட்டு மைதானங்கள் ஆகியனவும் இருக்கின்றன.1927 முதல் 1995 வரையிலும் இங்கிருக்கும் கிரிக்கெட் மைதானம் பயன்பாட்டில் இருந்திருக்கிறது.

முழுப் பூங்காவையும் சுற்றி வர வேண்டுமெனில் வெகு நேரம் எடுக்கும். நேரம் இல்லாததால் புத்தரைச் சுற்றி வந்து வணங்கி விட்டுக் கிளம்பி விட்டோம்:

#24

#25


#26

(தொடரும்)
***
பாகம் 1 இங்கே.


18 comments:

 1. புத்தரை நிறையவே எடுத்திருக்கிறீர்கள். அந்த ஊர் மாப்பிள்ளைப் பெண்ணின் பாரம்பரிய உடைகள் வித்தியாசம். இலங்கைப் பிரதமர் சந்திரிகாவை இதுபோல உடைகளில் பார்த்தது நினைவுக்கு வந்தது. கோபமான வாத்துக்கு அப்புறமாவது ஏதாவது தீனி வாங்கித் தந்திருக்கலாம்!!!!!

  ReplyDelete
  Replies
  1. அதற்கு என்ன கோபமோ, தெரியவில்லை! அப்படி வாங்கித் தர அருகில் எந்தக் கடைகளும் இல்லை. நன்றி ஸ்ரீராம் :).

   Delete
 2. அழகான படங்கள் இந்த இலங்கை போன போது இங்கு போன நினைவுகள் வந்தன.
  பாரம்பரிய உடையில் மணபெண், மாப்பிள்ளை, தோழியர், தோழர்கள் படம் அழகு.
  தட்டு தட்டாய் பூ விற்பார்கள் அதை வாங்கி புத்தருக்கு வைத்து வணங்குதல் பழக்கம்.

  அந்த படமும் அழகு.

  ReplyDelete
  Replies
  1. நன்றி கோமதிம்மா. உங்கள் இலங்கைப் பயணப் பதிவுகள் நினைவிலுள்ளன.

   Delete
 3. தகவல்களும் புகைப்படங்களும் மிக அழகு!
  SRI LANKAN AIRWAYSல் விமானப்பணிப்பெண்கள் இந்த உடையில்தான் இருப்பார்கள். இப்போது தான் தெரிகிறது இது தேசீய உடை என்று!

  ReplyDelete
 4. படங்கள் ஒவ்வொன்றும் அழகு

  ReplyDelete
 5. வணக்கம்,

  www.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இத் திரட்டியில் உங்கள் இடுகைகள், ஆக்கங்கள், பதிவுகள் என்பவற்றைப் பகிர்ந்து கொள்வதன் மூலம், அத் திரட்டி வளர்ச்சியுற உங்களின் ஒத்துழைப்பை வேண்டி நிற்கிறோம்.

  நன்றி..
  தமிழ்US

  ReplyDelete
 6. சிறப்பான பதிவு. நான் அடிக்கடி சென்ற இடம். உங்கள் பதிவில் மீண்டும் புகைப்படங்களாய்ப் பார்த்ததில் மகிழ்ச்சி.

  ReplyDelete
 7. நிழற்படங்கள் செம்மையா இருக்கு :-)

  திருமண இணை மற்றும் மற்றவர்களின் நிழற்படங்களும், இயற்கையும் அசத்தலாக இருக்கிறது.

  இங்குள்ள இடங்களை பார்த்தால், சிறப்பாக பராமரிக்கிறார்கள் என்று தோன்றுகிறது.

  ReplyDelete
  Replies
  1. சகோ கிரி,
   எனது கணிப்பு ஆசியாவில் யப்பான் கொரியாவுக்கு அடுத்தபடியாடியாக தமது பழைய இடங்களை சிறப்பாக பாராமரிப்பவர்கள் இவர்களே என்பேன்.

   Delete
  2. திருமணத் தம்பதியரைப் படமாக்கக் கிடைத்த வாய்ப்பு எதிர்பாராதது.

   ஆம், வேகநரி அவர்கள் சொல்லியிருப்பது போல சிறப்பான பரமாரிப்பு. அதிகாலையிலேயே புல்வெளிகளுக்குத் தண்ணீர் பாய்ச்சி, சுத்தம் செய்யவும் தொடங்கி விட்டிருந்தார்கள்.

   Delete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin