Tuesday, February 20, 2018

இலங்கையில் இருநாள் - ஸ்ரீலங்கா (1)

#1

சென்ற வருடம் நவம்பர் மாதத் தொடக்கத்தில் இரு நாள் பயணமாக இலங்கை சென்று வந்தேன். என் அம்மா வளர்ந்தது இலங்கையில். தாத்தாவுக்கு அப்போது அங்கே தேயிலை வியாபாரம். ஆரம்பப் பள்ளி வயதிலிருந்து திருமணத்துக்கு முன் வரை அங்கேதான் இருந்தார்கள். தாத்தாவுக்கு ஆறு மகள்கள், இரண்டு மகன்கள். ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபதுகளின் தொடக்கத்தில் இந்தியாவுக்குத் திரும்பி விட்டார்கள்.

யு.எஸ்ஸில் இருக்கும் என் சின்னத் தங்கைக்கு அம்மாவை இலங்கைக்கு அழைத்துச் சென்று அவர்கள் வாழ்ந்த இடங்களைக் காட்ட வேண்டுமென விருப்பம் வர, ஒவ்வொரு முறை இந்தியாவுக்கு வரும்போதும் சொல்லியபடி இருப்பார்.
என் பெரியம்மாவையும் (அம்மாவின் அக்கா) சேர்த்து அழைத்துச் செல்ல நினைத்திருந்தோம். ஆனால் அவர் இரு வருடங்களுக்கு முன் காலமாகி விட அம்மாவுக்கும் செல்லும் ஆர்வம் குறைந்து விட்டிருந்தது. இருப்பினும் அவருக்கு ஊக்கம் தந்து, சில வருடங்கள் முன் வரை தொடர்பில் இருந்த அவரது  நெருங்கிய பள்ளித் தோழியும் பாடகியுமான திருமதி கெளரீஸ்வரியின் அலைபேசி எண்ணைக் கண்டு பிடித்து பேச வைத்திருந்தோம்.

மற்றொரு தோழியான பரமேஸ்வரி அவர்கள் பல பத்தாண்டுகளாக வசித்த ‘10, பீட்டர்ஸ் ரோட், முரட்டுவ, முட்டுவா’ எனும் முகவரி மட்டுமே இருந்தது. செல்லும் முன்னர் இங்கிருந்தே அருகிலிருந்த ஒரு கடையைத் தொடர்பு கொண்டு விசாரித்த போது மறுநாள் அழைக்கச் சொன்னார்கள். அவ்வாறே செய்ய, சில வருடங்களுக்கு முன் தோழி கனடா சென்று விட்டதாக தகவல் அறிந்து சொன்னார்கள். சந்திக்கும் வாய்ப்பு கிட்டாது போயினும் என்றேனும் தொடர்பு கொள்ள இயலுமெனும் நம்பிக்கையில் தெரிந்தவர்களிடம் சொல்லி வைத்திருக்கிறோம்.

#2
வம்பர் 2017_ல் தங்கை இந்தியா வந்திருந்த போது நேரம் கூடி வந்தது. நான், தங்கைகள், தங்கை மகள், தம்பியும் அவனது குடும்பமும் ஆக, திடீரெனத் திட்டமிட்டு அம்மாவை அழைத்துக் கொண்டு கிளம்பி விட்டோம். சென்ற இரண்டாம் நாள் மாலையே கிளம்பி விட்டபடியால் இதை ஒன்றரை நாள் பயணம் என்றே கொள்ள வேண்டும். சந்திக்கும் அவகாசம் இல்லாததால் PIT, Blog, Flickr மற்றும் FB வழியாக அறிமுகமான நண்பர்கள் எவருக்கும் வருவதைத் தெரிவிக்கவில்லை.

பெரிய தங்கை சென்ற வருடம் இலங்கை சென்று வந்த போது அம்மா செல்ல வேண்டிய இடங்களைக் கண்டுபிடித்து வந்திருந்தது, எங்களுக்கு அழைத்துச் செல்ல எளிதாக இருந்தது. அம்மா படித்த பள்ளி, அதன் அருகேயிருக்கும் தேவாலயம், வாழ்ந்த வீடு, அவர் வழமையாகச் சிறு வயதில் செல்கிற ஜித்துப் பட்டிக் கோவில் ஆகிய இடங்களுக்குச் சென்றதோடு, அவரது தோழியின் இல்லத்திற்கும் சென்று வந்தோம். இரு தினங்களிலும் ஒரு மணி நேரம் தோழியோடு பேசி அளவளாவி மகிழ்ந்தார். இலங்கை சங்கீத சபையின் அதிபரான திருமதி கெளரீஸ்வரியிடம் பலரும்  பாட்டு, வீணை கற்று வருகின்றனர்.
#3
ஒரு மாணவியின்
குரு வணக்கம்
சமீபத்தில் கீழே விழ நேர்ந்ததில் காலில் அடிப்பட்டு நடக்க முடியாமல் இருக்கிறார். முன் போல் நடக்க மாதங்கள் பிடிக்கலாம் என்ற நிலையிலும் அசராமல் சக்கர நாற்காலியில் அமர்ந்து வகுப்புகளைத் தொடருகிறார். வேறு ஆசிரியர்களை நியமித்தும் நடனம் சொல்லிக் கொடுக்கிறார். ஒவ்வொரு மனிதரிடமும் கற்றுக் கொள்ள ஏதேனும் இருக்கிறது. அவர் வகுப்பு நடத்தும் பெரிய கலைக் கூடங்களையும் பார்த்து வந்தோம்.


ஜிந்துப் பட்டிக் கோவில் நாங்கள் சென்ற நேரம் நடை சாத்த ஆயத்தமான நிலையில் இருக்க, நிர்வாகத்தினரிடம் 60 வருடங்கள் கழிந்து இதற்கென்றே வந்திருப்பதாகச் சொன்னதும் கோவிலைத் திறந்து உள்ளே சென்று வழிபட அனுமதித்தார்கள்.
#4


ம்மா வாழ்ந்த வீட்டின் கதவைத் தட்டத் தயக்கமாக இருந்தது. வெளியிலிருந்து பார்த்ததே போதுமென முடிவெடுத்தோம் முதலில். ஆனாலும்  தாத்தா ஆச்சி தங்களது எட்டு குழந்தைகளோடு வாழ்ந்த வீட்டைப் பார்க்கும் பேராவலும் இருந்தபடியால் துணிந்து அழைப்பு மணியில் கை வைத்தாள் தங்கை.
#5
ஒரு இளம்பெண் ஜன்னல் வழியே பார்த்து தகவலைக் கேட்டுக் கொண்டு உள்ளே செல்ல வந்தார் ஒரு வயதான பெரியவர் சற்றே சிடுசிடுவென. விவரம் சொன்னதும் முகம் மலர்ந்து வரவேற்றார். தாத்தாவிடமிருந்து வீட்டை  வாங்கியதிலிருந்து குடியிருக்கிறார். தாத்தாவை மட்டுமின்றி உடன் இருந்த அண்ணன்  மகன் குடும்பத்தினர் எல்லோரையும் நினைவு வைத்திருக்கிறார். தாத்தாவின் வியாபாரம் குறித்து அம்மாவுக்கே தெரியாத பல தகவல்களையும் சொன்னார். நீண்ட பெரிய வீடு. உள்ளே வரை சென்று பார்த்து வந்தோம். இங்கேதான் பெரியம்மா, அம்மா, சித்திகள், மாமாக்கள் ஓடியாடி வளர்ந்திருக்கிறார்கள் என்ற உணர்வோடு மகிழ்ச்சியுடனும் நெகிழ்ச்சியுடனும் பெரியவருக்கு நன்றி சொல்லித் திரும்பினோம்.

அவரது சிபாரிசின் பேரில் மதிய உணவுக்கு புதிய கதிரேசன் கோவிலை அடுத்திருந்த சூர்யா உணவகத்துக்குச் சென்றோம்.
#6
சாப்பாடு பிடித்திருந்ததால் தங்கியிருந்த (ROCOCO SERVICE APT) இடத்திற்கும் அவர்களிமிருந்தே அடுத்த வேளைகளுக்கு வர வழைத்துக் கொண்டோம். இலங்கையில் அந்நாளிலேயே இடியாப்பம், சம்பல் மிகப் பிரபலம் என்ற அம்மா அதை எப்படியாவது எங்களுக்கு வாங்கித் தர நினைத்து இரவு முயன்றதில் எங்கும் கிடைக்கவில்லை. மறுநாள் காலை சின்ன தங்கையின் சின்ன மாமியார் எங்களைக் காலை உணவுக்கு அழைத்திருந்தார். தட்டு இட்லியும், முந்தைய தினம் தேடி அலைந்த இடியாப்பம், சம்பலும் சுடச்சுடத் தயாராக இருந்தது அங்கே. அன்பான விருந்தோம்பலுக்கு நன்றி கூறி விடை பெற்றோம்.

யணத்தின் நோக்கம் முக்கியமானதாக இருக்க வேறு இடங்களுக்கு செல்லத் திட்டமிடவில்லை என்றாலும் முதல் நாள் மாலை களனி புத்தர் ஆலயத்திற்கும், பின்னர் கடற்கரைக்கும் சென்றிருந்தோம்.
#7
அந்தி வானம்
ம்மா படித்த பள்ளிக்குச் சென்றிருந்தது மறக்க முடியாத சுவாரஸ்யமான நிகழ்வுகளுடனாய் அமைந்தது. அந்நாளில் பள்ளி வெளிநாட்டினர் நன்கொடையோடு இருந்திருக்கிறது. இப்போது அந்த அளவு செழிப்பு இல்லை எனத் தெரிவித்தனர். அப்போது போலவே இப்போதும் தமிழ், சிங்கள குழந்தைகள் சேர்ந்து படிக்கிறார்கள். நாங்கள் சென்ற நேரத்தில் இந்துக் குழந்தைகளுக்கெனத் தனியாக பிள்ளையாரை பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் நடந்து கொண்டிருந்தது. அதனால் இந்துக் குழந்தைகள் மட்டும் வகுப்புகள் நடக்காது, வெளியே ஆடிப்பாடி மகிழ்ந்திருந்தார்கள்.
#8

மத நல்லிணக்கத்தைப் பார்க்க முடிந்தது. சிங்களம் மட்டுமே பேசிய  பள்ளி முதல்வர் வந்த நோக்கம் அறிந்து மகிழ்ச்சியுடன் பள்ளியைச் சுற்றிப் பார்க்க அனுமதித்தார். தமிழ் பேசிய தலைமை ஆசிரியை கும்பாபிஷேகம் நடந்த இடத்துக்கு அழைத்துச் சென்று அம்மாவுக்கு மரியாதை செய்தார்.

#9

அங்கிருந்த குழந்தைகள் தம்பியின் கேள்விகளுக்குத் துடிப்பாகவும் புத்திசாலித்தனமாகவும் பதிலளித்தனர். தம்பி மகளைக் கொஞ்சி விளையாடினர்.
#10
புத்திசாலி சிறுமிகள்

நாங்கள் கிளம்பும் நேரம் ஓடோடி வந்தார் தகவல் அறிந்து ஒரு இளம் ஆசிரியை. அவரும் அந்தப் பள்ளியின் பழைய மாணவியாம். தன்னார்வத்தில் பள்ளியின் நலனுக்காக ஆசிரியராக அங்கு தொண்டாற்றுகிறார். ‘வாருங்கள், நீங்கள் சேர்ந்த வருடத்துப் பதிவேடு இருக்கிறதா பார்க்கலாம்’ என அழைத்துச் சென்றார்.
#11
60 ஆண்டுகளுக்கு முந்தைய பதிவேட்டுடன்..
மிக மிக ஆச்சரியம். அறுபது வருடங்களுக்கு முந்தைய பதிவேடுகளும் ஒழுங்காகப் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அதில் பெரியம்மா, அம்மா, சித்தி, மாமா ஆகியோரின் பெயர்கள், பிறந்த வருடங்கள், ஒரே ஆண்டில் வெவ்வேறு வகுப்புகளில் சேர்த்திருந்த விவரம், வீட்டு முகவரி, தாத்தாவின் கையெழுத்து எல்லாம் பார்க்கக் கிடைத்தது பரவசமே.

ள்ளிக்கு எதிரிலேயே தேவாலயம். அம்மா அங்கு வாழ்ந்த காலத்திலும்  கலவரங்கள் அடிக்கடி நிகழ்ந்திருக்கின்றன. அப்போதெல்லாம் பள்ளிக் குழந்தைகளைப் பாதுகாப்புக் கருதி இந்தத் தேவாலயத்தில்தான் அடைத்து விடுவார்களாம். ரொட்டி, பழங்கள் கொடுப்பார்களாம். பெற்றோர் வந்தபின்னரே பாதுகாப்பாக குழந்தைகளை வீட்டுக்கு அனுப்புவார்களாம். அதுபோல பிரதமர் பண்டாரநாயக் இறந்தபோது பெரும் கலவரம் வெடிக்க தாத்தாவின் வாகனம் தேவாலயத்திலிருந்து குழந்தைகளை அவரவர் வீடுகளில் கொண்டு விடப் பயன்படுத்தப்பட்ட சம்பவத்தை அம்மா நினைவு கூர்ந்தார்கள்.
#12

அம்மா தேவாலயத்தைச் சுற்றி வந்து பழைய நினைவுகளில் ஆழ்ந்தார்கள். இதே ஆலயத்தில் அந்நாளில் பெரியம்மாவும், அம்மாவும் தோழிகளுடன் இருக்கும் படங்கள் பல அம்மாவிடம் உண்டு. கிடைக்கும் போது இப்பதிவில் சேமித்து வைக்கிறேன்.

#13
விகரமகாதேவி பூங்கா
நாங்கள் தங்கியிருந்த இடத்துக்கு மிக அருகே இருந்த, விகரமகாதேவி பூங்காவுக்கு இரண்டாம் நாள் காலையில் நடைப் பயிற்சிக்காகச் சென்று வந்தோம். படம் ஒன்றில் இருக்கும், பிரமாண்ட புத்தர் சிலை அங்கே எடுத்ததே.

போகவும் அமைதி தவழும் புத்தர் சிலைகளையும் வாகனத்தில் செல்லும் போது பல இடங்களில் பார்க்க முடிகிறது. சாலைகளின் திருப்பங்களில் சிறிய புத்தர் கோவில்களும் ஆங்காங்கே உள்ளன.  இப்போது நகரம் அமைதியாகக் காணப்பட்டாலும் யுத்த பூமியாய் இருந்த தேசமெனும் எண்ணம் அவ்வப்போது எழுந்தபடிதான் இருந்தது. நிலைமை முழுதாகச் சீராகவில்லை என்றே சொல்லுகிறார்கள்.

விமான நிலையம் உட்பட எல்லா இடங்களிலும் அறிவிப்புப் பலகைகள் தமிழ், சிங்களம், ஆங்கிலம் என மூன்று மொழிகளிலுமாக உள்ளன. காணக் கிடைத்த தூய தமிழ் சொற்களில் பலவும் அதிகம் நம் பயன்பாட்டில் இல்லாதவையாகவும் இருந்தன.

சென்ற ஓரிரு இடங்களைப் பற்றி தனிப் பதிவுகளாக, எடுத்த படங்கள் சிலவற்றுடன் நேரமிருக்கையில் பகிர்ந்து கொள்கிறேன்.

**

22 comments:

 1. மகிழ்ச்சியும் நெகிழ்ச்சிச்சியும் கலந்த அருமையான பதிவு, மேடம்!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி அமைதி அப்பா.

   Delete
 2. மிகவும் போற்றப்படவேண்டிய செயல். என் அப்பா ஆசைப்பட்ட - உள்நாட்டிலேயே இருந்த - தஞ்சைக்கு அருகிலேயே இருந்த அவர் படித்த, வளர்ந்த ஊருக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை என்கிற வருத்தம் எனக்கு இன்றும் உண்டு.

  ஊர் பற்றிய விவரங்களும், அறுபது வருடங்களுக்கு முன் இருந்த பதிவேடு கிடைத்து அதைப் பார்த்ததும் ஆச்சர்யம், சந்தோஷம். அதை ஒரு புகைப்படம் எடுக்கவில்லையா?

  ReplyDelete
  Replies
  1. சரி செய்ய முடியாத ஆதங்கமே.

   பதிவேட்டின் பக்கத்தைப் படம் எடுக்காமல் இருப்போமா? அதன் விவரங்கள் பதிவிற்கு அவசியமா எனத் தெரியவில்லை. உங்கள் ஆர்வத்திற்காக மின்னஞ்சல் செய்கிறேன்:). நன்றி ஸ்ரீராம்.

   Delete
 3. அருமையான பயண பதிவு/
  அம்மாவின் ஆசையை பூர்த்தி செய்த விபரம் படித்தது மனதை
  நெகிழ செய்தது.

  இயற்கை அழகை அள்ளி அள்ளி தந்த ஊர். உங்கள் காமிரா அந்த அழகை சிறைபிடித்து இருக்கும்.

  அதை பதிவில் பார்க்க ஆசை.
  படங்கள், செய்திகள் அருமை.
  என் இலங்கை பயணம் நினைவுக்கு வந்தது.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் இலங்கைப் பதிவுகள் நினைவில் உள்ளன. ஒரு வாரமாவது இருந்தால்தான் முக்கிய இடங்களையேனும் பார்க்க இயலும். ஓரு சில இடங்களுக்கே செல்ல முடிந்தது. எடுத்தவரை படங்களைப் பகிருகிறேன். நன்றி கோமதிம்மா.

   Delete
 4. வேர்களைத் தேடிய உங்கள் பயணம் அருமை!!

  ReplyDelete
 5. அருமை
  ஒரே ஒரு முறை அரைநாள் இலங்கையில் கழித்திருக்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. ஏதேனும் அலுவல் நிமித்தம் சென்றிருந்தீர்களா? நல்லது. நன்றி.

   Delete
 6. நெகிழ வைத்த பதிவு, அம்மாவின் மகிழ்ச்சி உங்களையும் நெகிழச் செய்திருக்கும் என நினைக்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. ஆம் புவனா:). வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   Delete
 7. அருமை
  நானும் ஸ்ரீலங்கான்

  ReplyDelete
 8. நெகிழ்வு. பதிவேட்டின் பக்கங்களை படம் எடுக்கவில்லையா என் நான் கேட்க நினைத்ததை ஸ்ரீராம் கேட்டு விட்டார். அம்மாவுக்கு ரொம்பவும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. ஆம் வெங்கட். மகிழ்ச்சியை வார்த்தைகளில் விவரிக்க முடியாது. நன்றி.

   Delete
 9. பழைய வீடு, பழைய பதிவேடு, பழைய நினைவுகள்...அனைத்தும் கண்முன்... உங்கள் உள்ளம் அடைந்த மகிழ்ச்சியை உணரமுடிகிறது. அண்மையில், நான் படித்த கும்பகோணம் அரசு ஆடவர் கல்லூரிக்குச் சென்றுவந்தேன். அப்பப்பா. மறக்க முடியாத நினைவாக அது மாறிவிட்டது.

  ReplyDelete
  Replies
  1. ஆம், மறக்க முடியாத நினைவாகவே இருக்கும். நானும் தங்கைகளும் படித்த பள்ளிக்குப் பல ஆண்டுகள் கழித்து எங்கள் குழந்தைகளோடு சென்றிருந்த அனுபவத்தை இங்கே பகிர்ந்திருக்கிறேன்:http://tamilamudam.blogspot.com/2010/09/blog-post.html

   வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   Delete
 10. நல்ல செயல். என் அம்மா தன இறுதி காலத்தில் தன நெருங்கிய தோழியை காண ஆசைப்பட்டார், அதைக் கூட நான் செய்யவில்லையென்னும் வருத்தம் எனக்குண்டு.
  இலங்கையில் நிலைமை இன்னும் முழுமையாக சீராகவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது. விரைவில் முழு அமைதி திரும்பட்டும்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் பகிர்வுக்கும் கருத்துக்கும் நன்றி.

   Delete
 11. உண்மையாகவே சிறப்பான பயணம் :-)

  இத்தனை வருடங்களுக்கு பிறகு சென்றது உண்மையாகவே மகிழ்வான தருணம். நினைத்தாலே சுகம் :-)

  பழைய நினைவுகளை நேரில் கண்டது நிச்சயம் பரவசமாக இருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. ஆம். நான்கைந்து வருடங்களாகவே திட்டமிட்டபடி இருந்தது ஒருவாறாக நிறைவேறியது:). நன்றி கிரி.

   Delete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin