செவ்வாய், 29 மே, 2018

ஜிந்துப்பிட்டி முருகர் ஆலயம் - ஸ்ரீலங்கா (3)

மூன்று நூற்றாண்டு கால பழமை வாய்ந்தது, இலங்கையின் தலைநகரான கொழும்பு மாநகரில் இருக்கும் ஜிந்துப்பிட்டி ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி ஆலயம். பதினேழாம் நூற்றாண்டின் காலப் பகுதிகளில் தென்னிந்தியாவின் திருச்செந்தூரில் இருந்து இலங்கைக்குக் குடியேறிய சிந்து பாடிகள் எனும் இனத்தவர்களால் ஸ்தாபிக்கப் பட்டது. ‘சிந்துபாடிகள் வாழும் பட்டி’ என்பதே மருவி ஜிந்துப்பிட்டி என அழைக்கப்பட்டிருக்கிறது. இவர்களின் பூர்வீகத் தொழில் பூக்கட்டுதல், காவடிக் கட்டுதல் மற்றும் சிந்து பாடி முருகப் பெருமானைத் தொழுதல்.

#1
பிரகாரத்தில் இருந்த சன்னதி ஒன்றில் 
அருள்பாலித்திருந்த வேலவர்
Flickr தளத்தின் EXPLORE பக்கத்தில் தேர்வாகி 
11500++ பக்கப் பார்வைகளைப் பெற்ற படம்.

அறுபடை வீடுகளில் ஒன்றான, அருணகிரியாரால் திருச்சீரலைவாய் எனப் புகழ்ந்து பாடப்பட்ட, அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரைப் போலவே இலங்கையின் வடமேற்குக் கடலோரமாக கொழும்பு நகரில் அமைந்திருக்கிறது இந்த அழகிய முருகக்ஷேத்திரம்.

#2




#3


#4

திருப்புகழைத் தொகுத்து சந்தமுடம் பாடிப் பரப்பிய வள்ளிமலை சுவாமிகள் சென்று வணங்கி வியந்து பாராட்டிய ஆலயம். மேலும் மதுரை சோமு, மாரியப்ப சுவாமிகள், சீர்காழி கோவிந்தராஜன், பெங்களூர் ரமணியம்மாள், சூலமங்கலம் சகோதரிகள் போன்ற ஆன்மீகப் பாடகர்களையும், டி.என்.ராஜரத்தினம், காரைக்குடி அருணாச்சலம் போன்ற நாதஸ்வர வித்வான்களையும் அழைத்து வந்து விழா நிகழ்ச்சிகளில் பங்கேற்ப வைப்பதில் முன்னோடியாகத் திகழ்ந்திருக்கிறது இந்த ஆலயம்.

#5

#6


இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் சிந்துபாடி இனத்தவர் அருகி விட்ட படியால் ஆலயத்தைச் சரியான முறையில் நிறுவகிக்க முடியாது போக, 1932ஆம் ஆண்டு முதல் திருநெல்வேலியைப் பூர்வீகமாகக் கொண்ட தெக்ஷணத்து வேளாளர் என்ற சமூகத்தினர் தெக்ஷணத்து வேளாளர் மகமை பரிபாலன சங்கம் என்கிற அமைப்பை ஏற்படுத்தி இவ்வாலயத்தைப் பொறுப்பேற்று நடத்தி வருகின்றனர்.

திருச்செந்தூர் ஆலய முறைகளைப் பின்பற்றியே இங்கும் பூஜைகளையும் விழாக்களையும் செய்து வருகின்றனர். வள்ளி, தெய்வானை அம்மன்களை இருமருங்கிலும் கொண்டு மூலவர் ஸ்ரீ சுப்பிரமணியர் எழுந்தருளி நிற்கிறார். ஆனால் நாங்கள் உச்சிகாலம் தாண்டிச் சென்றதாலும், கேட்டுக் கொண்டதன் பேரில் உள்ளே அனுமதிக்கப்பட்டதாலும் மூலவரை ஒரு கணமே தரிசிக்க முடிந்தது. அதன் பின் கருவறையின் நடையைச் சாற்றும் பணியைத் தொடங்கி விட்டார் அர்ச்சகர். ஆனால் சுற்றி வர இருந்த சன்னதிகளை நாங்கள் வழிபடவும் படமாக்கவும் அனுமதித்தார்கள். அங்கே சோமஸ்கந்த முகூர்த்தமாக வலப்பக்கம் காசி விஸ்வநாத சுவாமியையும் இடப்பக்கம் விசாலாட்சி அம்மனும் அமைந்திருக்க அருள் பாலிக்கிறார்.

#7
சோமஸ்கந்தர், 
காசி விஸ்வநாத சுவாமி அன்னை விசாலாட்சி அம்மனுடன்


இந்த ஆலயத்தின் பழைய மூலவர் தற்போது அதன் பஜனை மடாலயத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த மூலவரும், திருச்செந்தூர் மூலவரும் திருநெல்வேலி குறுக்குத்துறை தாமிரபரணி ஆற்றின் நடுவே உள்ள பாதையிலிருந்து எடுக்கப்பட்ட கல்லில் இருந்து சுசீந்திரத்தைச் சேர்ந்த கைதேர்ந்த சிற்பிகளால் செதுக்கப்பட்டவை என்பது கூடுதல் தகவல்.

மற்றும் சர்வ சித்தி விநாயகர், ஸ்ரீ வள்ளி - ஸ்ரீ தேவசேனா, தெக்ஷிணாமூர்த்தி, ஸ்ரீதேவி - பூமாதேவி சமேத ஸ்ரீ வேங்கட வரதராஜர், நடராஜர்,
ஸ்ரீ லக்ஷ்மி, ஸ்ரீ சரஸ்வதி, ஸ்ரீ ராஜராஜேஸ்வரி, ஸ்ரீ காளியம்பாள், பைரவர், மகாமேருவுடன் ஸ்ரீ சுவர்ணசிவ துர்காம்பிகா, ஸ்ரீ ஆஞ்சநேயர் ஆகிய சன்னதிகளை மூலவரைச் சுற்றி வரும் போது வரிசையாகத் தரிசிக்க முடிந்தது. நவக்கிரக சன்னதியும் உள்ளது. எடுத்த படங்களில் சிலவற்றைப் பகிர்ந்து கொள்கிறேன்:

#8
அருள் புரிவாள்..

#9
அகிலாண்டேஸ்வரி..

#10
 ராஜராஜேஸ்வரி


ஒவ்வொரு சன்னதியிலும் இறைவனுக்கும் அம்மனுக்குமான அலங்காரங்கள் கண்ணை அகற்ற முடியாத அளவுக்கு அருமையாக இருந்தது. அக்கறையுடனும் ரசனையுடனும் செய்திருந்தார்கள். பார்க்கையில் உங்களுக்கே புரியுமென நம்புகிறேன்.

#11
திருமகள்

#12
கலைவாணி

#13
துர்கா தேவி


#14
பிரம்மன்


#15
ஆஞ்சநேயர்


#16
வீரபாகு


 ஆலய வரலாற்றிலிருந்து மேலும் சில தகவல்கள்:

வைகாசியில் மகோற்சவம், ஆடியில் வேல்விழா, புரட்டாதியில் நவராத்திரி, ஐப்பசியில் கந்தர் சஷ்டி, சூரசம்ஹாரம், திருக்கல்யாணம், மார்கழியில் தினம் பஜனை மற்றும் திருவெம்பாவைப் பூஜை, தை முதல் தேதி தொடங்கி 48 நாட்களுக்கு முருகப் பெருமானுக்கு விசேஷ அலங்காரம், அபிஷேகம், சண்முகார்ச்சனை நடைபெற்று பூர்த்தி நாளன்று சகஸ்ர சங்காபிஷேகம் நடைபெறுகிறது.  வருடந்தோறும் வரலெக்ஷ்மி பூஜையும், ஏகாதசி, சதுர்த்தி, சஷ்டி, பிரதோஷம் போன்ற பிற மாதாந்திர பூஜைகளும்  சிறப்பாக நடைபெற்று வருகின்றன. இங்கிருக்கும் சண்முக விலாஸ், ஸ்ரீ வள்ளி-தெய்வானை, கனகலிங்கம் ஆகிய மூன்று மண்டபங்களில் வருடம் முழுவதும் திருமண வைபவங்கள் நடைபெறுகின்றன. தெக்ஷணத்தார் பொறுப்பில் 1936, 1953, 1978, 1996, 2003 ஆகிய வருடங்களில் ஐந்து முறைகள் கும்பாபிஷேகமும் சிறப்பாக நடைபெற்றிருக்கிறது.

தகவல்கள்: இணையம்

***

தொடர்புடைய முந்தைய பதிவுகள்:
ஸ்ரீலங்கா  - 1
ஸ்ரீலங்கா  - 2

19 கருத்துகள்:

  1. அழகிய படங்கள். கோவில் அழகு. வேலவரையும் புத்தரின் சாயலில் அமைத்திருக்கிறார்களோ!

    ஆனாலும் கோவில் மாடங்களில், கதவுகளில் ஏதோ ஒரு வித்தியாசம்... ஏதோ திரைப்படத்துக்காக தாற்காலிகமாகத் தயார் செய்யப்பட்ட கோவில் போல....

    ஆம் அலங்காரங்கள் விசேஷம், அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படத்தில் இருக்கும் வேலவர் மூலவர் அல்ல. நீங்கள் சொன்னதுமே கவனிக்கிறேன். சற்றே புத்தரின் சாயல். மற்றபடி கோவில் மாடங்கள், கதவுகள் நேரில் பார்க்க நன்றாகவே இருந்தன. நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. படங்கள் எல்லாம் அழகு.
    நாங்கள் போன போது பிரதோஷ பூஜைப் பார்த்தோம்.
    சுவாமி, அம்மனுக்கு அலங்காரங்கள் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த ஆலயத்துக்குச் சென்றிருந்தது அறிந்து மகிழ்ச்சி. நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  3. அருமையான அழகான புகைப்படங்கள் சகோதரி.
    சிறு கால இடைவெளியில் அற்புதமான பல புகைப்படங்களை எடுத்திருக்கிறீர்கள்.
    வாழ்த்துக்கள். மீண்டும் வருக.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ரிஷான். இலங்கையில் எடுத்த படங்களில் ஒன்று இம்மாத கலைமகள் பத்திரிகையின் அட்டைப்படமாக வெளி வந்துள்ளது என்பதை உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி.

      நீக்கு
  4. பக்தி கமழும் படங்கள்...

    அனைத்தும் அழகு..

    பதிலளிநீக்கு
  5. நம்ம இலங்கையிலே
    முருகன் கோவில் உலாவா
    மகிழ்ச்சி

    பதிலளிநீக்கு
  6. எப்படி நீங்க இவ்வளவு தெளிவா எடுத்தீங்க? இங்கே யாரும் கட்டுப்பாடு விதிக்கவில்லையா?

    என்னுடைய விருப்பக்கடவுள் முருகன் படம் செமையா இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மூலவரை எடுக்க அனுமதி இல்லை. மற்ற சன்னதிகளில் எடுத்துக் கொள்ள அனுமதித்தார்கள். படத்தில் இருக்கும் முருகர் மூலவர் அல்ல. பிரகாரத்திலிருக்கும் ஒரு சன்னதியில் எடுத்தேன். குறைந்த ஒளியே இருந்தபடியால் ISO_வை அதிகரித்து எடுத்தேன். நன்றி கிரி:).

      நீக்கு
  7. 1983 இனக் கலவரத்தில் இந்த கோவிலில் அகதிகளாக தஞ்சம் அடைந்தோம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருத்தம் அளிக்கும் தகவல். கோயில் நிர்வாகம் அடைக்கலம் அளித்தது நல்ல செயல். தங்கள் வருகைக்கு நன்றி.

      நீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin