Monday, May 25, 2015

யக்ஷகானா - 'அர்ஜூனா - சுதன்வா யுத்தம்'

ர்நாடகாவின் பாரம்பரிய நாட்டிய நாடகக் கலை வடிவம்... யக்ஷகானா!
#1
“கிருஷ்ணா நீ பேகனே பாரோ!”
இசை, நடனம், வசனம், .உடை அலங்காரம், ஒப்பனை மற்றும் மேடை உத்திகள் ஆகியவற்றில் தனித்ததொரு பாணியைக் கொண்டது. இந்தப் பாரம்பரிய நடனம் ஆரம்பக் காலத்தில் இருள் கவிழத் தொடங்கும் அந்தி நேரத்தில் ஆரம்பிக்கப்பட்டு விடிய விடிய, அதாவது பொமுது புலரும் வரை நடப்பது வழக்கமாக இருந்தது.

#2


நிகழ்ச்சிக்கான பின்னணி இசையை வழங்கும் கலைஞர்களின் குழு ஹிம்மேளா என்றும், வசனம் பேசி நாட்டியமாடும்  கலைஞர்களின் குழு மும்மேளா என்றும் அறியப்படுகிறார்கள். ‘பகவதா’ என அறியப்படும் இசைக்குழுவின் தலைவரே நாட்டிய நாடகத்தை இயக்குகிறார்.

#3

கைகளால் வாசிக்கப்படும் மிருதங்கம், குச்சிகளால் முழக்கப்படும்  Chande என்கிற மத்தளம்,
புல்லாங்குழல் மற்றும் ஹார்மோனியம் ஆகிய வாத்தியங்களை வாசிக்கும் கலைஞர்களும் இந்த இசைக்குழுவில் அடங்குவர். ராகங்களை அடிப்படையாகக் கொண்டு  “மட்டு” எனப்படும் தாளகதிக்கேற்ப இசைக்கிறார்கள்.

நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட தாளகதிகளில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மத்தளம்  மட்டுமே வாசிக்கிறார்கள். இதை“பீடிகை” என்கிறார்கள். அதன் பிறகே நாட்டியக் கலைஞர்கள் மேடைக்கு வருகிறார்கள்.

தினெட்டாம் நூற்றாண்டில் தோன்றியதாக அறியப்படும் இந்நாட்டிய நாடகத்தில் நாளடைவில் பல மாற்றங்கள். ஆரம்பத்தில் கோவில் விழாக்கள் மற்றும் அரச சபைகளில் மட்டுமே நடத்தப்பட்டவை பின் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பொது மக்களுக்காகக் கொட்டகையில்  அனுமதிச் சீட்டு வழங்கி நடக்க ஆரம்பித்தது. லாந்தர் விளக்குகள் மறைந்து மின் விளக்குகளோடு, இருக்கை வசதிகளோடு என வணிக நோக்கில் செல்ல ஆரம்பித்த பிறகு எடுத்துக் கொள்ளப்பட்ட கதைக் களங்களும் விரிவடைந்திருக்கிறது. ஆண் கலைஞர்கள் மட்டுமே பங்கேற்க, பெண் வேடங்களையும் அவர்களே ஏற்று நடித்து வந்த நிலை மாறி பெண்களும் நடிக்க ஆரம்பித்திருக்கின்றனர். தற்போது பெண் கலைஞர்களை மட்டுமே கொண்ட குழுக்களும் கூட இருக்கின்றன. ஆண்வேடங்களைப் பெண்களே ஏற்றுச் செய்கிறார்கள்.

#4


கர்நாடாகாவில் உத்தர கன்னடா, உடுப்பி, தக்ஷிண கன்னடா, ஷிமோகா, காசரகோடு பகுதிகளில் பிரபலமாயிருக்கும் இப்பாரம்பரிய நடனம் கடற்கரையை ஒட்டிய மாவட்டங்களிலும் குறிப்பாக மழைக்காலங்களில் வேறு பொழுது போக்குகளுக்கு வழியற்ற நிலையில், அதிகம் நடத்தப்படுகிறது. சமீப வருடங்களாக பெங்களூரிலும் பிரசித்தி பெற்று வருகிறது. கர்நாடக மாநிலத்தின் பிறந்த நாளான ராஜ்யோத்சவா தினம் நவம்பர் 1ஆம் தேதி என்றாலும், அந்த முப்பது நாளுமே நகரெங்கும் கொண்டாட்டம் இருக்கும். அப்போது யக்ஷகானா பரவலாகப் பல இடங்களில் நடப்பதைப் பார்க்கலாம். அப்படி சென்ற நவம்பரில் படமாக்கிய நிகழ்வே இது.

டை அணிகலன்கள்:

யக்ஷகானா நிகழ்வுக்கான ஆடை அணிகலன்களைப் பற்றிய விவரங்கள் சுவாரஸ்யமானவை.

#5

ராஜா வேடமேற்பவர் பிரமாதமான கிரீடத்துடன் காட்சியளிப்பார். நெஞ்சிலும் தோள்களிலும் கவசம், இடுப்பில் பட்டையாக பெல்ட் அணிந்திருப்பார். எல்லாமே எடை குறைவான மரத்தாலானவை. மேலே Golden foil_லினால் சுற்றப்பட்டவை. கலைஞர்கள் அனைவரது ஆடைகளுமே வண்ணமயமானவை.   ஜிலுஜிலுப்புக்கு கண்ணாடித் துண்டுகள், வண்ணக் கற்கள் ஆகியவற்றையும் பயன்படுத்துகிறார்கள். மேடை விளக்குகள் இவற்றில் பட்டுப் பிரதிபலிக்கும் போது ஆடைகளும் கூடுதலாக ஜொலிக்கின்றன. இந்த அணிகலன்கள் உடலின் மேல்பாதியை அலங்கரிக்க, கீழ் பாதி கச்சே (கச்சை) எனப்படும் உடுப்பு அலங்கரிக்கிறது. இது சிகப்பு, மஞ்சள், ஆரஞ்சு சதுரங்களால் ஆனது. கீழ் பாகம் உப்பலாகத் தெரிவதற்காக கச்சைக்கு உள்ளே தெர்மகோல் பட்டைகளை அணிகிறார்கள். அணிகலன்களுக்கும் கூட  இன்றைய காலத்தில் மரத்துக்குப் பதில் சிலர் தெர்மோகோலையும் பயன்படுத்துவதாகத் தெரிகிறது. ஒவ்வொருக்குமான ஆடை அலங்காரத்துக்கே மணிக்கணக்காகிறது.

ர்ஜூனா - சுதன்வா கலகா (கன்னடத்தில்..):

ஸ்வமேத யாகம் வளர்த்த பாண்டவர்கள் சடங்கின் ஒரு பாகமாக, யாகக் குதிரையை உலகைச் சுற்றி வர அனுப்புகிறார்கள். தங்கள் இராஜ்ஜியத்தை கடக்கும் போது மன்னர்கள் அதை வணங்கி வழி விடுவது அனுப்பியவர்களை வணங்குவதாக அர்த்தம் கொள்ளப்படுகிறது. எதிர்க்க நினைப்பவர்கள் அதை நிறுத்தி, பாண்டவர்களால் அனுப்பப்பட்டப் படையோடு போர் செய்து வெல்லலாம். அப்படியின்றி குதிரை வெற்றிகரமாக உலகை வலம் வந்து விட்டால் யாகமும் வெற்றி பெறுவதாகக் கொள்ளப்படும்.
#6
சுதன்வ மன்னன்
இந்நிலையில், மன்னன் சுதன்வனின் பகுதிக்கு குதிரை வருகிறது. கிருஷ்ணனின் பரம பக்தனான சுதன்வனோ கிருஷ்ணரையே தன் இராஜ்ஜியத்துக்குள் வரவேற்பதாக உவகை பொங்குகிறது. ஆனால் அவனது தாயாரோ ஒரு வீரனாக அக்குதிரையை எதிர்த்து நின்று படையோடு போராடுவதே பெருமை சேர்க்கும் என போதிக்க அங்கே விதி விளையாடுகிறது. பாண்டவர்களை தோற்கடிப்பதாக அன்னைக்கு வாக்குக் கொடுக்கிறான் சுதன்வன். குதிரையைச் சிறைப்படுத்துகிறான். செய்தி அறிந்த அர்ஜூனன், கிருஷ்ண பகவானைத் துணைக்கு அழைத்துக் கொண்டு தன் படையோடு சுதன்வனின் இராஜ்ஜியத்துக்கு வருகிறான்.
#7
"இந்த சுதன்வன் தங்களுக்கு எந்த மாதிரியான பக்தன்...?"
இவன் தங்களுக்கு எந்த மாதிரியான பக்தன் என அர்ஜூனன் வினவ, கிருஷ்ணர் சுதன்வனின் பெருமைகளையும், எவராலும் வீழ்த்த முடியாத அவனது வீரத்தையும், வில் வித்தையில் பெற்றிருந்த தேர்ச்சியையும் விளக்கிச் சொல்கிறார்.

#8
கிருஷ்ண பகவான்

போர் நாள் வருகிறது. போர் ஆரம்பிக்கும் முன் சுதன்வன் கிருஷ்ணரின் பாதங்களுக்கு அருகே முன்னால் நிலத்தில் அம்பைச் செலுத்தித் தன் மரியாதையைச் செலுத்துகிறான். இரண்டாவது அம்பை வான் நோக்கி எய்து மாலையாக கிருஷ்ணரின் கழுத்தில் விழச் செய்கிறான். அடுத்த சில மணிகளில் அர்ஜூனனின் படை பாதியாகக் குறைந்தது. அதுவரையிலும் வெறும் பார்வையாளராகவே இருந்தார் கிருஷ்ணர். ஆனால் சுதன்வன் அர்ஜுனரை அழிக்க முடிவு செய்த போது நிலைமை மாறியது.

#9
அர்ஜூனன்
சுதன்வன் அர்ஜூனனை நோக்கி வில்லை உயர்த்தி  “வாழ்க்கையில் எனக்கு மிகவும் மதிப்பு மிக்கவராக கிருஷ்ண பகவான் இருப்பாரேயானால் இந்த அம்பு அர்ஜுனன் தலையைக் கொய்யட்டும்” என மந்திரத்தை உச்சரிக்கலானான். கிருஷ்ணர் உடனே அர்ஜுனனை ஓரடி பின் நகருமாறு எச்சரித்ததுடன் “என் எல்லா இராணிகளை விடவும் அர்ஜூனன் எனது நேசத்துக்குரியவன் என்றால் வருகிற அம்பு உடையட்டும்” என எதிர் மந்திரத்தை உச்சரிக்கிறார். சுதன்வனின் அம்பு உடைந்து விழுகிறது.

சுதன்வனோ “என் வாழ்நாள் முழுவதிலும் என் உடலை விடவும் கிருஷ்ண பகவானையே நான் அதிகம் மதித்து நேசித்திருப்பேனேயானால், இந்த அம்பு அர்ஜூனனின் தலையைக் கொய்யட்டும்” என மந்திரத்தை உச்சரித்தபடியே இரண்டாவது அம்பை எய்கிறான். தடுக்கிறார் அதையும் கிருஷ்ணர் “என் வாழ்நாளிலே அர்ஜூனனின் நலமே என் நலனை விடப் பெரிதென்றுக் கருதியிருப்பேனேயானால் இந்த அம்பு உடைந்து விழட்டும்” என. அவ்வாறே நடக்கிறது.

இறுதி முயற்சியாக மூன்றாம் அம்பில் தனது அத்தனை நல்ல செயல்களையும் பணயம் வைத்து எய்கிறான் சுதன்வன். அதைக் கண்ட கிருஷ்ணர், “ நான் தவறாகவே பார்க்கப்பட்டாலும், என் பிரிய பக்தனுக்காக உலகத்தின் பார்வையில் பிழை செய்தவனாகக் கொள்ளப்பட்டாலும், பாண்டவர்களுக்காக மதக் கொள்கைகளுக்கு விரோதமாக நான் நடப்பதாகவே இருந்தாலும் இவை உண்மையிலேயே ஒரு உயர்ந்த நோக்கத்துக்கானது என்றால் இந்த அம்பு திரும்பிச் சென்று சுதன்வனைக் கொல்லட்டும்” என்கிறார். அம்புத் திரும்பிச் செல்ல சுதன்வன் வீழ்ந்து மடிகிறான்.

துதான் அர்ஜூனன் - சுதன்வன் யுத்தம். புரிதலுக்காகக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் சுருக்கமாகத் தமிழில் தந்திருக்கிறேன்:).

அர்ஜூனனாக செல்வி. அர்பிதாவும்... 
#10


கிருஷ்ணராக திருமதி. கீதா ஹெக்டேயும்...
#11


சுதன்வ மன்னனாக திரு. பிரஷாந்த் ஹெக்டேயும்.. 
#12

.... அருமையாகப் பேசிப் பாடி நடித்திருந்தார்கள். என்னதான் வண்ணங்களை பிரதானமாகக் கொண்ட நடன வடிவம் ஆயினும் அதைக் கருப்பு வெள்ளையில் காண்பது கூட ஒரு தனிக் களைதான் இல்லையா?

கதையைப் புரிந்து கொண்டபின் இப்போது மீண்டும் ஒரு முறை படங்களைப் பார்த்தால் இக்கலைஞர்களின் முகபாவங்களில் இருந்து  கதாபாத்திரங்களின் உணர்வுகளை உள்வாங்கிக் கொள்ள முடியும் என நம்புகிறேன்:)!
***

20 comments:

 1. உயிர்ப்புள்ள படங்கள் மூலம் விளக்கம் அருமை...

  ReplyDelete
 2. அடடா.... ஒருமுறை யக்ஷகானா பார்த்தே ஆகணும் போல இருக்கே!

  படங்கள் அட்டகாசம்! இனிய பாராட்டுகள்!

  ReplyDelete
  Replies
  1. உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்:). நன்றி.

   Delete
 3. ஒரு கலையைப் பற்றி அழகான படங்களுடன் தெளிவான விளக்கங்களுடன் கட்டுரை புனைந்திருப்பது அருமை.

  ReplyDelete
 4. படங்கள் எல்லாமே அழகு. அருமையானதோர் கலையினைப்பற்றிய தங்களின் பகிர்வுக்கு நன்றிகள்.

  நானும் இதுபோன்றதோர் நிகழ்ச்சியை நேரில் கண்டு வியந்து பதிவாக்கியிருந்தேன். ஏனோ அது என் நினைவுக்கு வந்தது.

  http://gopu1949.blogspot.in/2012/03/svanubhava-2012-1-of-2.html

  http://gopu1949.blogspot.in/2012/03/svanubhava-2012-2-of-2.html

  ReplyDelete
  Replies
  1. தங்கள் பதிவுகளையும் பார்த்தேன். நல்ல பகிர்வு.

   நன்றி.

   Delete
 5. யக்ஷகானம் பற்றி அருமையான பதிவு ராமலெக்ஷ்மி !

  ReplyDelete
 6. அருமையான அறிமுகம். அற்புதமான படங்கள். அழகிய கதை.

  யட்சகானம் என்று படித்ததும் இரண்டு விஷயங்கள் உடனடியாக ஞாபகத்துக்கு வந்தன! முதலாவது சுஜாதாவின் 'மூன்று நிமிஷம் கணேஷ்'! இரண்டாவது யக்ஷகானா என்ற மலையாளப் படத் தலைப்பு!

  ReplyDelete
 7. அறியாத கலை பற்றி அறிந்தேன் சகோதரியாரே
  ஒவ்வொரு படமும் உயிரோடு பேசுகிறது
  நன்றி சகோதரியாரே

  ReplyDelete
 8. அற்புதமான ஒரு கலை வடிவம் பற்றிய அறிமுகத்திற்கு நன்றி. படங்கள் கதை பேசுகின்றன!

  ReplyDelete
 9. ஸ்ரீராம் சொன்னது அத்தனையும் எனக்கும் நினைவுக்கு வந்தது. புகைப்படங்களும்
  கலைஞர்களின் அபினயங்களும் அற்புதம். சுதன்வ கண்ட பரசுர் என்றுவிஷ்ணு சஹஸ்ர நாமத்தில்
  வரிகள் வரும். என்ன ஒரு அற்புத வசனங்கள். மிக அருமை ராமலக்ஷ்மி.

  ReplyDelete
  Replies
  1. இரசித்தமைக்கு நன்றி வல்லிம்மா.

   Delete
 10. யக்ஷகானா என்ற பெயரைக் கேள்விப்பட்டிருக்கிறேனே தவிர வேறெந்த தகவலும் அறிந்திருக்கவில்லை. இந்தப் பதிவால் படங்களுடன் அக்கலை பற்றிய பல அரிய தகவல்களையும் அறிந்துகொண்டேன். பகிர்வுக்கு நன்றி ராமலக்ஷ்மி. படங்கள் அனைத்தும் பிரமாதம். வாழ்த்துகள்.

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin