புதன், 17 டிசம்பர், 2014

கருப்பு வெள்ளையும் ஐந்து நாட்களும்..

ருப்பு வெள்ளையில் மட்டுமே ஒரு காலத்தில் ஒளிப்படங்கள் எடுக்கப்பட்டு வந்தன. டிஜிட்டல் உலகில் விதம் விதமான வசதிகளுடன் ஒளிப்படக் கருவிகள், எடுக்கும் படங்களை விருப்பத்திற்கேற்ப மேம்படுத்திக் கொள்ளும் தொழில் நுட்ப வளர்ச்சிகளுக்கு மத்தியில் இன்றைக்கும்  வண்ணப்படங்களுக்கு மத்தியில் அதிகம் விரும்பப்படுகிறவையாக இருப்பவை மோனோக்ரோம் எனக் குறிப்பிடப்படும் கருப்பு வெள்ளைப் படங்களே.

காட்சியை வலிமையாக வெளிப்படுத்த உதவுவது, கருப்பொருளின் மீதான கவனம் பிற வண்ணங்களால் சிதறாமல் இருப்பது, குறைந்த ஒளியிலும் அழகான ரிசல்ட் கொண்டு வர முடிவது,  உணர்வை அழுத்தமாகக் காட்டக் கூடிய தன்மை எனப் பல காரணங்கள். அதுமட்டுமின்றி,
இவை Portrait, landscape, nature, architecture என எவ்வகைக்கும் பொருந்தி வரக் கூடியவை. எளிமையான காட்சியைக் கூட ஈர்ப்புடையதாக மாற்றும் வல்லமை பெற்றவை.

ஃப்ளிக்கரில் நான் அறிந்து, பல கலைஞர்கள் raw format_ல் எடுத்து கருப்பு வெள்ளையாக மாற்றுகின்ற படங்கள் பிரமாதமாக இருப்பதைக் குறிப்பிட்டாக வேண்டும். இப்போதெல்லாம் கேமராவிலேயே monochrome வசதி இருப்பினும், வண்ணத்தில் எடுத்து பிறகு ஒளியையும் நிழலையும் நம் ரசனைக்கேற்பக் கையாண்டு சரியான கான்ட்ராஸ்டில் காட்சியைக் கருப்பு வெள்ளையாக மாற்றுவதே சிறப்பான output தருமென்பது பொதுவாகப் பல வல்லுநர்களின் கருத்தாக இருந்து வருகிறது. இத்தகைய சிறப்பு மிக்க கருப்பு வெள்ளைப் படங்களைப் பகிர்வதில் நானும் ஈடுபாடு காட்டியே வருகிறேன். அந்த ஆர்வத்தை அதிகரிப்பதாக வந்தது ஒரு அழைப்பு.

சில வாரங்களுக்கு முன் ஃபேஸ்புக்கில் கருப்பு வெள்ளைப் படங்கள் அதிகமாக வலம் வந்ததைக் கவனித்திருப்பீர்கள். ஒரு தொடர் விளையாட்டாக, நண்பர்கள் ஒருவருக்கொருவர் அழைப்பு விடுக்க அதைச் சவாலாக எடுத்துக் கொண்டு அழைக்கப்பட்டவர்கள் தொடர்ந்தனர். (இன்னும் கூட தொடர்கிறது என நினைக்கிறேன்.)

அழைப்பு எதற்கெனில் தினம் ஒன்றாக 5 நாட்களுக்கு, அவரவருக்குப் பிடித்த கருப்பு வெள்ளைப் படங்களைப் பதிய வேண்டும். ஒவ்வொரு நாளும் ஒரு ஒளிப்படக் கலைஞரைத் தொடரக் கேட்டுக் கொள்ள வேண்டும். இதனால் கலைஞர்களின் மனம் கவர்ந்த படங்களைக் காண மற்றவருக்கும் அமைந்தது நல்ல வாய்ப்பு.

எனக்கு அழைப்பு விடுத்திருந்தவர் ஆனந்த் விநாயகம். அவருக்கு நன்றி சொல்லி நான் தொடங்கிய இழையில் மனம் கவர்ந்த படமாக மருமகனின் கீழ் வரும் படத்தை முதல் நாளில் பகிர்ந்ததுடன், சிறந்த கலைஞரும் குழந்தைகளை இரசனையுடன் படமாக்குவதில் வல்லவருமான MQ Naufal_யைத் தொடர அழைத்திருந்தேன்:

"அன்பினால் ஆனது உலகு”

#நாள் 2
2010_ல் Sony W80_ல் எடுத்த கீழ்வரும் படம் முன்னரே பகிர்ந்த ஒன்றானாலும் எடுத்ததில் பிடித்தது வரிசையில் இதைத் தேர்வு செய்திருந்தேன். இப்பகிர்வின் தொடர்ச்சியாக தன் கேமரா கண்ணால் வயோதிகர்களின் தோல் சுருக்கங்களில் அவர்தம் வாழ்வின் அனுபவங்களை வாசிக்கும் திறன் கொண்ட Nithi Anand_க்கு அழைப்பு விடுத்திருந்தேன்.

“முதுமை”

ஒரு நல்ல ஒளிப்படம் பல கதை சொல்லும். குறிப்பாகப் பொது இடங்களில் இயல்பு நிலையில் படமாக்கப்படுகிற மனிதர்கள் (street photography) அந்தந்த காலக்கட்டத்தின் கலாச்சாரத்தை, வாழ்க்கை முறையை அவற்றின் நிறைகுறைகளை வெளிப்படுத்துவதோடு, தம்மையும் அறியாமல் சரித்திரத்தில் இடம் பெற்று விடுகிறார்கள். கீழ்வரும் படம் அந்த வகையில் ஒன்றாக, மீண்டும் மீண்டும் பார்த்து ரசிக்கத் தூண்டும் படங்களுக்கு மத்தியில் இன்னொரு முறை பார்க்கத் தேவையின்றி மனதில் பதிந்து விடும் இரகமாக எனக்கும்... இன்னும் பலருக்கும்.. (சொன்னார்கள்) !

காலஓட்டத்தில் காணாது போன அரிக்கேன் விளக்கை காலத்தை இழுத்துப் பிடித்து வாழ்பவர் விடாமல் உபயோகித்து வருவது, லாந்தர் எண்ணெயைத் துடைக்கப் பயன்படுத்தும் துணியை அதிலேயே முடிந்து வைத்திருப்பது, பறந்து விடாமலிருக்க அருகிலுக்கும் கம்பத்தில் இறுக முடிச்சிட்டு வைக்கப்பட்டத் துவாலை, வெள்ளை வேட்டி அழுக்காகி விடக் கூடாதென துண்டை விரிப்பாக்கி அமர்ந்திருக்கும் விதம், தேய்ந்த காலணிகள், கைத்தடி.. கவனிக்க எவ்வளவு இருக்கின்றன?

#நாள் 3 --

சிறு வியாபாரிகள்

சிறு வியாபாரிகளுக்கும் அவர்களிடம் வாடிக்கையாய் வாங்குகிற வீட்டினருக்கும் ஒரு காலத்தில் இருந்த பந்தங்கள் குறித்து உப்புத் தாத்தா பதிவில் சொல்லியிருக்கிறேன். வாடிக்கையாய் வருகிறவர்கள் குறைந்து விட்டிருப்பினும் வீடு வீடாகச் சென்று விற்பவர்களைக் காண முடிகிறது இன்றைக்கும் நெல்லையில். சென்ற ஜூன் மாதம் நெல்லை சென்றிருந்தபோது எடுத்த இது:
பகிர்வின் தொடர்ச்சியாக, தினசரி வாழ்க்கையில் தென்படும் மனிதர்களை இயல்பாகப் படமாக்குவதில் சிறந்தவரான (அமைதிச் சாரல்) Shanthy Mariappan_யைத் தொடர அழைத்திருந்தேன்.


#நாள் 4
..எந்தக் கலையானாலும் ஆர்வமும் அர்ப்பணிப்பும் இருந்தால் மட்டுமே மிளிர முடியும். வருங்காலத்தில் சாதிக்க வாழ்த்தி ஆடற்கலையில் அசத்தும் இச்சிறுமியின் படமே நான்காம் நாளின் பகிர்வு:
--தன் சிநேகிதியின் நாட்டிய நிகழ்வை அழகுறப் படமாக்கியிருந்த வனிலா பாலாஜியைத் தொடர அழைத்திருந்தேன். வீட்டிலேயே மினி ஸ்டூடியோ வைத்திருக்கிறார் வனிலா. நண்பர்களுக்கும் தெரிந்தவர்களுக்கும்  Profile, Portrait மற்றும் குடும்பப் படங்கள் எடுத்துக் கொடுக்கிறார். மாடலிங் துறையில் இருக்கும் மகளிருக்காக ஆல்பங்கள் செய்து கொடுத்தும் வருகிறார். 

#நாள் 5
“வான் கோழி”

பெங்களூர் பண்ணை ஒன்றில் கூண்டுக்குள் இருந்த வான்கோழி. உலகெங்கும் பயணப்பட்டு, பெருவனங்களில் சுற்றித் திரிந்து, பறவைகளை அவற்றின் வாழ்விடத்திலே தேடிப் பிடித்து இதுவரையிலும் முந்நூறுக்கும் அதிகமான இனங்களைப் படமாக்கியிருக்கும் விஜய் விஜயாலயனைத் தொடர அழைத்திருந்தேன். இவரது பறவைப் படங்களில் பல educational slides ஆகப் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத் தக்கது. கட்டிடங்கள், இயற்கைக் காட்சிகள், பூக்கள் என எவ்வகைப் படமானாலும் அவற்றில் இருக்கும் நேர்த்தி அசர வைக்கும். தொடர்ந்து இவர் எடுத்து வரும் மெல்போர்ன் நகர night shots எனக்கு மிகப் பிடித்தமானவை. இவரது தளம்: www.evergreenclicks.com/nature

பொதுவாகத் தொடர் அழைப்பு என்றால் அன்புடன் கேட்டுக் கொண்டு தவிர்த்தே வந்திருக்கிறேன். வலைப்பூவில் பதிவுகள் ரெகுலராக இல்லாவிடினும் ஃப்ளிக்கரில் தினம் ஒருபடம் என்பதை இப்போது கடைபிடித்து வருவதால் இந்த சவால் எளிதாக இருந்ததென வைத்துக் கொள்ளுங்களேன்:). வாய்ப்பை அளித்த ஆனந்த் விநாயகத்திற்கும், என் அழைப்பை ஏற்று படங்களைப் பதிந்து இழையைத் தொடர்ந்த நண்பர்கள் ஐவருக்கும் என் நன்றி!
** 

16 கருத்துகள்:

  1. ஃபேஸ்புக்கில் பார்த்த நினைவு இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் ஸ்ரீராம். முதல் படம் தவிர்த்து மற்றதை முன்பே பார்த்திருப்பீர்கள். நன்றி.

      நீக்கு
  2. சூப்பர்...!

    என்ன தான் இருந்தாலும் Old is Gold...

    பதிலளிநீக்கு
  3. கருப்பு, வெள்ளை என்பது எல்லாமே பிரமை.

    அதே போலத்தான் எல்லா வண்ணங்களும்.

    ஆண்டவன் வெளிச்சத்தை 0 முதல் 1 வரை ஒரு ஸ்கேல் கொடுத்து, அதில் நீ எங்க வேண்டுமானாலும் என்ன வேண்டுமோ பார்த்துக்கொள், எடுத்துக்கொள் என்று சொல்லி இருக்கிறான்.

    நாம் வானவில்லின் ஏழு நிறங்களும் ஒரு நீர்த்துவலையின் பிரதிபலிப்பு தான் என படித்திருக்கிறோம்.

    ஆர்.எம். கே.வி. 50000 கலர் பட்டு புடவை விற்கிறார்கள்.

    எல்லாமே மாயை தானோ.

    டோடல் ப்ளாக் முதல் டோடல் வைட் வரை எல்லா நிறமும் சங்கமம்.

    ,ஆனாலும், அந்தக்காலத்து ஒன்பது வயது சூரி ப்ளாக் அண்ட் வைட்டில் இன்னும் பாலிஷ் ஆ இருக்கானே.

    சுப்பு தாத்தா.வின் உரத்த சிந்தனைகள்.
    just loud thinking.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உரத்த சிந்தனைகள் நன்று:). வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சூரி sir.

      நீக்கு
  4. கருப்பு வெள்ளை படங்கள் அருமை அக்கா...

    பதிலளிநீக்கு
  5. அன்பினால் ஆனது உலகு ரசிக்கவைத்தது...பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  6. உங்கள் புகைப் படம் எடுக்கும் திறன் பற்றிக் கேட்கவே வேண்டாம். உங்கள் ஐந்து படங்களில் எனக்கு மிகவும் பிடித்திருந்தது உங்கள் மருமகன் படம். காரணம் அதில் நீங்கள் தோலின் மிருதுத் தன்மையை வெகு நேர்த்தியாகக் கொண்டு வந்தீர்கள். வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin