திங்கள், 15 டிசம்பர், 2014

சான்றோர் ஆசி


கடந்த இரண்டு வருடங்களாகவே திட்டமிட்டு, ஏதேனும் காரணங்களால் தள்ளிப் போய்க் கொண்டேயிருந்த ஒரு சந்திப்பு சென்ற சனிக்கிழமை நண்பகலில் நிறைவேறியது.

வெ.சா என கலை மற்றும் இலக்கிய உலகில் அறியப்படும் மதிப்பிற்குரிய திரு. வெங்கட் சாமிநாதன் அவர்கள் தனது எண்பதாம் அகவையை நான்காண்டுகளுக்கு முன் நிறைவு செய்திருந்தார். சென்னையிலிருந்து பெங்களூருக்கு வந்த விவரம் அறிந்ததில் இருந்து அவரைச் சந்தித்து அளவளாவி ஆசிகளைப் பெற வேண்டும் என்பதே நண்பர்கள் அனைவரின் விருப்பமாக இருந்து வந்தது. இந்த முறை நேரம் கூடி வந்தது. ஷைலஜா ஒருங்கிணைக்க, அவர் இல்லத்துக்கு வெகு அருகாமையில் இருந்த ஹெப்பால் எஸ்டீம் மாலின் மூன்றாம் தளத்தை தேர்வு செய்தோம்.

#2
சான்றோர்
வழக்கமாக சனிக்கிழமை காலையில் நடைபெறும் கம்ப இராமயணம் முற்றோதலை மாலை நேரத்துக்கு மாற்றி அமைத்து விட்டு மகேஷ், திருமூலநாதன் ஆகியோருடன் சரியான நேரத்துக்கு வந்து விட்டிருந்தார் மதிப்பிற்குரிய திரு. ஹரிகிருஷ்ணன் அவர்கள். இரு சான்றோரின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது கூட்டம்.
நண்பர்கள் ஷைலஜா, ரஞ்சனி நாராயணன், திருமால், பார்வதி இராமச்சந்திரன், குடும்பத்துடன் ஐயப்பன் கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

#3
“எழுதத் தொடங்கி இந்த ஆண்டில் (2010) பொன் விழாக் காணும் இவரை விமர்சனப் பிதாமகர் என்று அழைப்பது வழக்கம். இலக்கியம் மட்டுமல்ல, இசை, நடனம், ஓவியம், பன்னாட்டு சினிமா என்று கலைத் துறையின் எல்லாப் பிரிவுகளையும் வெ.சா.வின் விமர்சனக் கோல் தொட்டதுண்டு, சுட்டதுண்டு. ’என்னை எல்லோரும் சிங்கம், புலி என்று கூறுகிறார்கள், நான் அப்படியா இருக்கிறேன் ?‘ கேட்டபடி பலமாகச் சிரிப்பார். தான் உணர்ந்ததை உணர்ந்தபடி நீர்க்காத சொற்களால் விமர்சிக்கும் இவரது பாணி பலரை இவரிடமிருந்து எட்டி நிற்க வைத்ததுண்டு. ஆனால் பல புதிய எழுத்தாளர்களை முளையிலேயே இனம் கண்டு, அவர்கள் மீது விளக்கொளியைத் திருப்பி, தழைக்க வைத்த கதைகளும் நிறைய உண்டு. இவரைக் கட்சி, கோட்பாடு என்கிற சிமிழ்களில் அடைக்க முடியாது. ’அக்கிரஹாரத்தில் கழுதை‘ என்ற படத்துக்கு கதை, வசனம் எழுதி, அந்தப் படம் தேசீய விருது பெற்றது. கனடா இலக்கியத் தோட்டத்தின் இயல் விருது பெற்றவர்.” - நன்றி “சொல்வனம்”.


சந்திப்பு குறித்து விரிவாகப் பகிர்ந்து கொண்டிருக்கிறார் தோழி ஷைலஜா தனது தளத்தில்.. “இங்கே”- . “தமிழின் மிகப் பெரிய ஆளுமையைச் சந்தித்தோம்..”  எனவே மேலும் எடுத்த படங்கள் சிலவற்றையும் அங்கே சொல்ல விட்டுப் போனவற்றையும், திரு.வெ.சா அவர்களைப் பற்றிய குறிப்புகளையும் மட்டுமே இங்கே சேர்க்கிறேன்.

#4

*“என் மற்ற நண்பர்களுக்கு எரிச்சலூட்டும் அளவுக்கு, நான் வெங்கட் சாமிநாதனின் அபிப்ராயங்களை மதிக்கிறேன்.” - க.நா.சு

*“சாமிநாதனது பேனா வரிகள் "புலிக்கு தன் காடு பிற காடு வித்தியாசம் கிடையாது" என்றபடி சகலத்தையும் பதம் பார்க்கும்” - சி. சு. செல்லப்பா 

விமர்சனங்கள் எழுதுவதில் உங்களுக்குப் பிறகு யார் என்ற மகேஷின் கேள்விக்கு “இந்தக் கேள்வியை கேட்கவே கூடாது. யாரேனும் சிறப்பாகச் செய்வதாக உங்களுக்குப் படுமானால் அவரே நல்ல விமர்சகர்.” என்றார். ‘ஒன்றை விமர்சனம் செய்ய அந்தத் துறையில் பரந்த வாசிப்பு (அ) ஞானம் இருந்தாக வேண்டுமா? அல்லது ரசனை மட்டும் போதுமா?’ என்ற ரஞ்சனிம்மாவின் கேள்விக்கு “இந்த சமோசாவில் உப்பு அதிகம். சாப்பிட ஆரம்பித்ததுமே அது தெரிந்து விட்டது. அதைச் சொல்ல முழுவதையும் சாப்பிடணுமா என்ன?” எனக் கேட்டார்.

#5
*“தமிழ் கலைத் துறைகள் மீது வெ.சா கொண்டிருக்கும் ஆவேச ஈடுபாடு, வெகு அபூர்வமானது. தமிழ் இனத்தோடு தன்னைப் பிணைத்துக் கொண்டிருக்கும் தன்மையில் இவரை பாரதியுடன் மட்டுமே ஒப்பிட முடியும். பாரதியோ ஒரு உணர்ச்சிக் கவிஞன். தேசியக் கவிஞன்; புரட்சிவாதி. அவனது இயற்கையான முகங்கள் அனைத்தும் நம்மவர்கள் இயற்கையாகவே புரிந்துகொள்ளாமல் போற்ற வசதியானவை. வெ.சாவின் உலகமோ, புரிந்து கொள்ளும் ஆற்றலை தீவிரமாகக் கேட்டு நிற்கிறது. சுய அபிமான உணர்வுகளை நீக்கி சத்தியத்தைப் பார்க்க முடிந்தவர்களை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது. ஆகவே அங்கீகாரத்திற்கு, காலத்தை இவர் எதிர்பார்த்து நிற்பது சரிதான்” - சுந்தர ராமசாமி

*“எந்த மேல் நாட்டு விமரிசன பாணியையும் கைக் கொள்ளாமல் தன் சுவைக்கு உட்பட்டதை, படைப்பின் கலாச்சாரப் பின்ணணியோடு பார்க்கும் தனி ரகம், இவரது விமரிசனம்” - கோமல் சுவாமிநாதன்

[Source: Wikipedia]

இனி வரும் படங்களை எடுத்தவர்கள் மகேஷ் மற்றும் ஐயப்பன் கிருஷ்ணன்:

நிகழ்வின் முடிவில் திரு.வெ.சா. அவர்களுக்கு சால்வை போர்த்தி மரியாதை செய்தனர் திரு.ஹரிகிருஷ்ணனும் ஐயப்பன் கிருஷ்ணனும்.
#

தத்தமது நூல்களை அவரிடம் வழங்கி ஆசிகள் பெற்றோம் அனைவரும். திருமதி.ரஞ்சனி நாராயணன் கிழக்குப்பதிப்பக வெளியீடான “விவேகானந்தர்” நூலினையும், ஷைலஜா தன் தந்தை எழுதிய “மனிதன்” நாவலின் மறுபதிப்பையும் கொடுக்க, ஐயப்பன் கிருஷ்ணன் தனது “சக்கர வியூகம்” சிறுகதைத் தொகுப்பைக் கொடுக்கிறார்.
#

எனது நூல்களின் அட்டைப்படங்களைப் பார்த்ததுமே கப்பன் பார்க்கில் எடுத்தவையா என விசாரித்தார்.

#

ஒரே ஒருமுறை எனது ஜப்பானிய ஹைக்கூ கவிதைகளின் ஆங்கிலத்தினூடான மொழிபெயர்ப்பை குழும மடலில் பாராட்டி கருத்தளித்திருந்தார். ஆயினும் தொடர்ந்து என்னைக் கவனித்து வந்திருப்பது அவர் பேசியதிலிருந்து தெரிய வந்தபோது ஆச்சரியமும் மகிழ்ச்சியும் ஏற்பட்டது. “ஃபோட்டோகிராஃபியை எப்படிப் பார்க்கிறீர்கள்? அது ஒரு கலையா?” எனும் மகேஷின் கேள்விக்கு ஆம் எனப் பதிலளிக்கும்போது எனது படங்களைக் குறிப்பிட்டுச் சொன்னவர் நான் எடுத்த பறவைகளின் படங்கள் நன்றாக இருக்குமெனப் பாராட்டு வழங்கினார். ரசனை முக்கியம் என்றார். நிகழ்வு முடிந்து அவரை திருமாலும் நானும் அவரது இல்லத்தில் கொண்டுவிடச் சென்றிருந்தபோது தனது மருமகளுக்கு அறிமுகம் செய்ததும் மருமகள், “நீங்கள் எடுத்த படங்களை நேற்று கூடக் காட்டினார்” எனச் சொன்னார். “நன்றாக எழுதவும் செய்வார். இதோ அவரது நூல்கள்” எனக் காண்பித்தார்.

கிளம்பும்போது “இரண்டு வருடங்களாக நினைத்தது நிறைவேறியதில் மகிழ்ச்சி” என அவரது மருமகளிடம் தெரிவித்தபோது திரு.வெ.சா. அவர்கள், “ஆம். அவர்கள் விருப்பத்தை நிறைவேற்றி எல்லோருக்கும் தரிசனம் அருளி மகிழ்வித்தாயிற்று” என விடை கொடுத்தார். உண்மையில் அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சி!
#
திரு.வெங்கட் சாமிநாதன் அவர்களைப் பற்றியும் அவரது படைப்புகள் குறித்தும் அறிந்து கொள்ள விக்கிப்பீடியா இணைப்பு இங்கே.

*
பின் குறிப்பு:

குழும மடலில் எனது இந்தப் பகிர்வு மற்றும் ஷைலஜாவின் பதிவுக்கான கருத்தாக திரு. வெ.சா அவர்கள் அளித்திருந்த பதிலை இங்கே பதிந்து வைக்கிறேன்:

சனிக்கிழமை அன்று,  சுமார் இரண்டு மணி நேரம் மனதுக்கு மிக இதமாக, வெகு சந்தோஷம் தருவதாக இருந்தது.  வெகு நாட்களுக்குப் பிறகு இத்தகைய ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. அது எவ்வளவு இதமாக, புத்துணர்ச்சி தருவதாக இருந்தது என்பதை அன்று கூடிய அன்பர்கள் யாரும் யூகிக்க முடியாது.  இம்மாதிரி சந்திப்புகள் எனக்கு இங்கு, பெங்களூரில் மிக அரிதாகவே கிடைக்கிறது.

நேரிடை அறிமுகங்கள், இணையத்தில் எழுத்துமூலம் கிடைத்ததற்கும் மேல் கிடைத்தது பற்றி எனக்கு அதிக மகிழ்ச்சி. மறுபடியும் இம்மாதிரி ஒரு சந்திப்புக்காகக் காத்திருப்பேன்.

ஒன்றே ஒன்று.  தமிழின் மிகப் பெரிய ஆளுமை என்றும் இன்னும் பல அடைமொழிகளும், சாதனைப் பட்டியல்களும் - எல்லாம் இன்றைய தமிழ்க் கலாசாரத்தைச் சேர்ந்தவை. ... ஆனால் இதிலேயே நாம் மூன்று தலைமுறையாக மூழ்கிக் கிடக்கும் போது, இதிலிருந்து தப்புவது கஷ்டம்தான். முயலலாம். இம்மாதிரியான அடைமொழிகள் எனக்குத் தரப்பட்டது சினேகம், அன்பு, மரியாதை வயதுக்கு என்று பல காரணங்கள் இருப்பது தெரிகிறது. 

எல்லோருக்கும் என் நேரத்தை அன்று மனதுக்கு ரம்மியமாகக் கழியக் கிடைத்த வாய்ப்புக்கு என் மகிழ்ச்சியைத் தெரிவிக்க வேண்டும். 

மீண்டும் எப்போதாவது சந்திக்கலாம். எதிர்பார்த்திருப்பேன்.”
**

சந்தித்த நண்பர்கள் சார்பில் “மீண்டும் எங்கள் நன்றி”.
***

18 கருத்துகள்:

  1. மனதிற்கு மிகவும் நெகிழ்வான, நிறைவான ஒரு சந்திப்பு. இதற்கு ஏற்பாடு செய்த உங்களுக்கும், என்னை மிகுந்த பரிவுடன் அழைத்து வந்த ஷைலஜாவிற்கும் மனமார்ந்த நன்றி. எத்தனை பெரிய எழுத்துலக ஜாம்பவான் அவர். அவருடன் இத்தனை சுலபமாக உரையாடியது என்றைக்கும் மறக்க முடியாத நினைவுப் பெட்டகத்தில் பொக்கிஷமாக இருக்கும். புகைப்படங்களில் அவரது அத்தனை பாவங்களையும் கொண்டுவந்திருக்கிறீர்கள். நன்றி ராமலக்ஷ்மி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம், நிறைவான ஒரு சந்திப்பு. மிக்க நன்றி ரஞ்சனிம்மா.

      நீக்கு
  2. நல்ல அனுபவத்தைப் பெற்று எங்களுடனும் பகிர்ந்திருக்கிறீர்கள்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  3. எழுத்துலக சான்றோர்களை கண்டு உரையாடியது மகிழ்ச்சி அளித்து இருக்கும் உங்களுக்கு எல்லாம்.
    புகைப்படங்கள் எல்லாம் அருமை.

    பதிலளிநீக்கு
  4. பொக்கிஷமான நினைவலைகளைப்படங்களுடன்
    அருமையாகப்பகிர்ந்தமைக்குப் பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  5. அசத்தலாக இருக்கிறது அனைத்துப்போட்டோக்களும். உங்கள் கைவண்ணத்தில் அழகுக்கு அழகு..அன்று
    அனைவரின் ஒத்துழைப்போடு \திருவெசா அவர்களை நாம்சந்திக்கமுடிந்தது மறக்கமுடியாத ஒரு மதியப்பொழுதானது அல்லவா!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் ஷைலஜா, மறக்க முடியாத இந்த சந்திப்பை ஒருங்கிணைத்த தங்களுக்கு நன்றி.

      நீக்கு
  6. ரொம்ப அழகான புகைப்படங்களுடன் பகிர்ந்திருக்கிறீர்கள்!.. தங்களயெல்லாம் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்ததில் ரொம்ப ரொம்ப சந்தோஷம் எனக்கு!...புகைப்படங்கள் கண்ணில் ஒற்றிக் கொள்ளும்படி இருக்கின்றன!... இந்த சந்திப்பு நடந்ததில், தங்கள் பங்களிப்பு குறிப்பிடத்தகுந்தது!.. மிக்க நன்றி தங்களுக்கு!..

    பதிலளிநீக்கு
  7. இவரைப் போன்றோரின் ஆசியும் சந்திப்பும் வரம்..
    நல்ல சந்திப்பை பகிர்ந்திருக்கிறீர்கள் அக்கா...

    பதிலளிநீக்கு
  8. ஐயாவை சந்தித்ததன் மூலம் மிகப்பெரும் ஆசீர்வாதம் பெற்று வந்திருக்கிறீர்கள். பாராட்டுகள் அனைவருக்கும்.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin