ஞாயிறு, 26 செப்டம்பர், 2010

ஒற்றைப் பேனாவின் மை




பேரொளியொன்று
வானில் தோன்றிய வேளையில்
பிரபஞ்சமெங்கும் சிந்தியததன் மிச்சமாய்
எண்ணற்ற நட்சத்திரங்கள்

ஓரொளியிலிருந்து வந்த 

மூலம் அறியாமல்
யார் உயர்வென்று
எங்கெங்கினும் போர்க்களங்கள்

மோதியது போதுமென்று
வாதிட்டு அலுத்துப் போய்
செய்வதறியாது கோள்கள்

உலுக்கக் காத்திருக்கிறது உலகை
ஒற்றைப் பேனாவின் மை
வடிக்கப் போகும் தீர்ப்புகள்

வெட்கப்பட்டு உதித்து
வேதனையுடன் மறைகின்றார்
நித்தம் சூரியசந்திரர்கள்

ஒரேசக்தியாய் ஒளிர்கின்றார்
அத்தனை கடவுளரும் எனும்
புரிதலின்றி புவியெங்கும் பாமரர்கள்!

***

: 24 செப்டம்பர் அலகாபாத் உயர்நீதிமன்றத்தால் வழங்கப்பட இருந்த அயோத்தி தீர்ப்புக்கு உச்சநீதி மன்றம் நான்கு நாட்களுக்கு இடைக்காலத் தடை.


படங்கள்: இணையத்திலிருந்து..

திங்கள், 20 செப்டம்பர், 2010

செல்வக் களஞ்சியங்கள்


ண் என்றால் வரவு. பெண் என்றால் செலவு. பெற்ற பிள்ளைகளில் ஆணே வயது காலத்தில் துணையிருப்பான். பெண் பிள்ளை என்றைக்கும் வேறு வீட்டுக்குச் செல்ல வேண்டியவள். காலகாலமாய் தொடரும் பாடாவதிக் கருத்துகள்தான். பெண்கள் எத்தனை சாதித்துக் காட்டி என்ன போயிற்று. இன்றைக்கும் கருவறைக்கே வேண்டாத விருந்தாளியாகத்தான் இருக்கிறாள் என்பதுதான் வேதனை தோய்ந்த உண்மை.

எல்லோருக்கும் தெரிந்த, எத்தனயோ பேரால் வேறுவேறு வார்த்தைகளால் அடிக்கடி சொல்லப்பட்டவைதானே எனத் தோன்றலாம். கள்ளிப்பால் கதைகளும், கருவிலேயே பெண்சிசுக்களின் உயிர்த்துடிப்பைச் சிதைக்கத் துணியும் அவலங்களும் தொடரும் வேதனையாகவே இருக்க, மக்கள் மனதில் மாற்றங்கள் வாராதா எனும் ஆதங்கத்தின் விளைவே இந்தப் பகிர்வு.

பிறக்கப் போகும் குழந்தை ‘ஆரோக்கியமாக வளர்கிறதா’ என்றறியக் கண்டுபிடிக்கப்பட்ட ஸ்கேன் கருவி ஏனோ நம் நாட்டில் இப்படிப் பால் பாகுபாட்டினைத் தெரிந்து கொண்டு, பெண் என்றால் கருவிலேயே கலைத்து விடும் மாபாவத்துக்குத் துணை போய் கொண்டிருக்கிறது.

டந்த ஜூன் இரண்டாவது வாரம் பெங்களூர் மருத்துவமனை ஒன்றில் இப்படி சட்டத்துக்குப் புறம்பாக, கருவில் வளருவது பெண்ணா பையனா எனக் கண்டறிந்து சொல்கிறார்கள் எனத் தெரியவந்து, ஒரு கர்ப்பிணிப் பெண்ணை அழைத்துச் சென்று ஸ்கேன் செய்ய வைத்துள்ளார்கள் அரசின் சுகாதார மற்றும் குடும்பநலத் துறை ஏற்பாடு செய்த ஐவர் அணி . மருத்துவரும் தன் தவறு காமிராவில் பதிவாகிக் கொண்டிருப்பது தெரியாமல் ரூ 14000 வாங்கிக் கொண்டு ஐந்து நிமிடங்களில் அறிந்து சொல்லி விட்டார் வயிற்றில் இருப்பது பெண் சிசுதான் என.

வந்திருப்பது யாரெனத் தெரியவர மின்னலெனத் தப்பித்துத் தலைமறைவாகி விட்டார். உடந்தையாய் இருந்து மாட்டிக் கொண்ட அட்டெண்டர் பெண்மணி மூலமாக சராசரியாக ஒருநாளுக்குப் பத்து பேராவது இந்த சோதனையைச் செய்து கொள்ள வந்தபடி இருந்தது தெரிய வந்திருக்கிறது. இத்தனைக்கும் அந்த மருத்துவமனையெங்கும் இச்சோதனை சட்டப்படி குற்றம் எனும் வாசகம் நிரம்பிய போஸ்டர்களால் நிரம்பி இருந்திருக்கின்றது.

தொடர்ந்து அரசு மேற்கொண்ட திடீர் சோதனைகளின் முடிவாக பலமருத்துவமனைகளில் இது சர்வ சாதாரணமாக நடைமுறையில் இருப்பது தெரியவர அபராதம் விதிக்கப்பட்டதோடு, இக்கருவியையே கைப்பற்றி விட்டுள்ளது அரசு. இந்த அவலம் இந்தியாவின் எல்லா இடங்களிலும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது.

றுமைக் கோட்டிலுள்ளவர்கள், படிப்பறிவில்லாதவர்கள்தான் அறியாமையால் இப்படிச் செய்கிறார்கள் என சொல்ல முடியாது. என்ன குழந்தையெனத் தெரிந்து அதன் துடிப்பை நிறுத்திட பல ஆயிரம் செலவிடத் துடிக்கும் வசதியானவரும்தான் இதில் அடக்கம். மெத்தப் படித்த மருத்துவர்களும் உடந்தை என்பது தலைகுனிவுக்குரிய விஷயம். ஆனால் மருத்துவர்களை மட்டும் குறை சொல்லி என்ன பயன்?

‘எந்தக் குழந்தையானால் என்ன? தாயும் சேயும் நலமாய் வந்தால் போதும்’ எனச் சொல்லியபடியே பிரசவ வார்டில் புதுவரவுக்குக் காத்திருக்கும் சுற்றங்களும் கூட, பிறந்தது பெண் எனத் தெரிவிக்கப் படும் வேளையில் ‘பெண்ணா’ என இழுப்பதையும், அதுவே ஆண் குழந்தையெனும் போது ‘ஆகா’ என ஆனந்தத்தில் துள்ளுபவதையும் இன்றளவிலும் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றோம்.

ஆரம்ப வரவேற்பே இப்படி அலுப்பும் சலிப்புமாய் இருக்குமானால் பெண்குழந்தைகள் மீதான வெறுப்பு சமுதாயத்தில் மாற்ற முடியாத ஒன்றாகவே போய்விடும். கருவில் அழித்திடும் அளவுக்கு இறங்கி விடாத மக்களும், கருத்தினில் பெண்குழந்தைகளைக் கொண்டாட ஆரம்பித்தால்தான் ஒரு அலையாய் இந்த எண்ணம் சமுதாயத்தில் பரவும்.

மருத்துவக் காரணங்களுக்கான பரிந்துரைகள் தவிர்த்து, ஆரோக்கியமான ஒரு கருவைச் சுமக்கும் தாய், குடும்பத்தினரின் வற்புறுத்தலுக்காக ஒருபோதும் இச்செயலுக்குத் துணை போகக் கூடாது. தானும் ஒரு பெண் என்பதை சுமப்பவளும் சரி, தூண்டும் பிற குடும்பத்துப் பெண்களும் சரி மறக்கக் கூடாது. கருவில் இருப்பது இன்னொரு உயிர், அதை மாய்க்கும் உரிமை எவருக்கும் கிடையாது என்பதை உணர வேண்டும். ஆணா பெண்ணா என்பது பிறக்கும்போது தெரிய வந்தால் போதும் என்பதில் கருவுற்ற பெண்கள் பிடிவாதம் காட்ட வேண்டும். நம் நாட்டின் குடும்ப அமைப்பில் இதற்காகக் கூடப் போராட வேண்டிய சூழலில் பெண்கள் தவிப்பது ஒட்டு மொத்த சமுதாயத்துக்கே வெட்கக் கேடு.

ஆண்களும், தன்னைச் சுமந்தவளும் ஆளாக்கியவள் பெண்ணாயிருக்க, தன் தேவைகளை நிறைவேற்றக் கரம் பிடித்தவள் பெண்ணாயிருக்க ஒரு பெண் குழந்தைக்குத் தகப்பனாக இருப்பதும் வளர்ப்பதும் சிரமம் என்கிற எண்ணத்தை கைவிட வேண்டும். கருவறைக்குள் குடிவருவது குடும்பத்தின் குலசாமி குலதெய்வமாகத்தான் இருக்க முடியுமே தவிர எந்த வேண்டாத விருந்தாளிகவும் இருக்க முடியாது. கோவிலில் கடவுள் எழுந்தருளியிருக்கும் இடத்தைக் ‘கர்ப்பக் கிரகம்’ என்றழைப்பதிலிருந்தே புரிந்து கொள்ளலாம் கர்ப்பத்தின் புனிதத்தை. தாய்மையின் மேன்மையை. தன் பெற்றோரோ சுற்றமோ வற்புறுத்தினாலும் மனைவிக்குக் கணவன் துணை நின்றால் சுற்றம் தானாக வாயடைத்துப் போகும்.

ளர்க்கும் சிரமம் எங்களுக்கு’ என வாதம் செய்பவரும் இருக்கிறார்கள். ஆண் குழந்தை என்றால் உங்கள் சிரமங்கள் பஞ்சாகிப் பறந்து விடுமா? மாறிவரும் இக்காலத்தில் நமது எந்தக் கணிப்புகளும் உண்மையாக இருக்கப் போவதேயில்லை. பெற்றவரைக் கடைசி வரை வைத்துத் தாங்கும் மகள்களும் உள்ளனர். வயதான காலத்தில் தவிக்க விட்டு பிரிந்து சென்று விடும் மகன்களும் உள்ளனர். பல இடங்களில் மகன்களுடனே வாழ்ந்தாலும் கூட மனதால் தனிமைப்பட்டுப் போய் ஆதரவாய் தோள் சாய மகள்களின் தோள் தேடும் பெற்றோரும் உள்ளனர். இது போல் மனப்பாரம் இறக்கி வைக்க மகள்கள் இல்லாது போனார்களே என எண்ணி ஏங்கும் தம்பதியரும் உள்ளனர்.

இவையெல்லாம் இங்கு பட்டியலிடக் காரணம் எந்த அடிப்படையில் பெண் குழந்தைகள் வெறுக்கப் படுகிறார்களோ அது தவறு என்று சொல்லத்தான். படிப்பு முதல் திருமணம் வரை இந்தக் காலத்தில் ஆண் பெண் இருவருக்குமே எல்லாவித செலவுகளும் ஒரே மாதிரியாகி விட்டனவே. மேலும் பொருளாதார அடிப்படையில் பிள்ளை வளர்ப்பினைப் பாகுபடுத்திப் பார்ப்பதே கேவலமான ஒரு சிந்தனையாகும்.

உண்மையில், எந்த எதிர்பார்ப்புகளுமின்றி குழந்தைகளுக்கு நாம் தரும் அன்பே பரிசுத்தமானது. அதில் ஆண் என்ன பெண் என்ன என நினைத்துப் பார்ப்போம். குழந்தைகளே வாழ்வின் பொக்கிஷங்கள், அவர்களை வளர்க்கும் அனுபவம் இறைவன் தந்த பேரானந்தம், சந்திக்கும் சிரமங்கள் இன்பம் தரும் சவால்கள் என்கிற உணர்வும் புரிதலும் வந்து விட்டால் சின்னக் கண்ணன் ஆனாலும், செல்லக் கண்ணம்மா ஆனாலும் செல்வக் களஞ்சியங்கள்தாம்.

*** *** ***

படம் நன்றி: கருவாயன் என்ற சுரேஷ்பாபு
http://www.flickr.com/photos/30041161@N03/4702191239/in/pool-548474@N20/
  • ஜனவரி 2011 'லேடீஸ் ஸ்பெஷல்' பத்திரிகையின் புத்தாண்டு பொங்கல் சிறப்பிதழிலும்.., நன்றி லேடீஸ் ஸ்பெஷல்!

ஞாயிறு, 12 செப்டம்பர், 2010

வளர்ப்புப் பிராணிகள்-செப்டம்பர் PiT

இம்மாதப் போட்டித் தலைப்பு வளர்ப்புப் பிராணிகள். வீட்டில் வளர்ப்பதாகத்தான் இருக்கவேண்டுமென்பதில்லை. மனிதனால் பரமாரிக்கப்படக் கூடிய எவ்வகை விலங்குகளும் ‘ஓகே’தான் என PiT குழு அனுமதி வழங்கி விட்டபடியால்..

நெல்லையிலே காந்திமதி
வரவேற்கிறாள் கைதூக்கி



அழகிய திருமகள்




கம்பீரக் கஜேந்திரன்

கன்றுக்குட்டி போல் வாசலிலே




வாஞ்சை

‘புல்லு போதும்ங்கிறதே? சரிசரி வூட்டுக்குப் போயி பருத்திக் கொட்டையும் புண்ணாக்கும் கரைச்சு வச்சுடுவோம்’, வாடியே தன் வயிறு இருந்தாலும் வாயில்லாப் பிராணியை வாஞ்சையாய்க் கவனிக்கும் பெரியவர்.



மொசல்



பூக்குவியல்





மதில் மேல் கொரங்கு

“இஞ்சியத் தின்னாலும் இப்படித்தான் முழிப்போம்.”



நிமிர்ந்த நன்னடை





[படங்கள் கணினித் திரையை விட்டு விலகித் தெரியுமாயின் Ctrl மற்றும் minus பொத்தான்களை ஒருசேர அழுத்தக் கேட்டு கொள்கிறேன்.]

முதல் படம் போட்டிக்கு. மற்றவை பார்வைக்கு.

போட்டிப் படங்களின் அணிவகுப்பு இங்கே.

திங்கள், 6 செப்டம்பர், 2010

தாயுமானவராய்.. - உயிரோசையில்..

டந்த கல்வியாண்டின் தொடக்கத்தில் பெங்களூரின் ஒரு பள்ளியில ஐடி கார்ட் அணிந்து வராத ஒன்றாம் வகுப்புக் குழந்தைகள் பள்ளிக்கட்டிடங்களைச் சுற்றிப் பலமுறை ஓடுமாறு தண்டிக்கப் பட்டனர். அதில் ஒரு சிறுமி மயக்கமாகும் நிலைக்கு வர, அடுத்த நாள் பெற்றோர் பெருந்திரளாக வந்து தட்டிக் கேட்கவும் நிர்வாகம் பயந்து குழந்தைகளை திருத்தும் நல்லெண்ணத்தில்தான் அப்படி செய்ததாகவும் இனி ‘தவறு’ நேராதென்றும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டது. ஒன்றாம் வகுப்புக் குழந்தைகளை இதுபோன்ற காரணங்களுக்காக ஓட விட்டது தவறுதான். ஐடி கார்ட் அணியாதது குறித்து பெற்றவர்களுக்கு எச்சரிக்கை அனுப்பியிருக்கலாம். ரிப்போர்ட் கார்டில் குறிப்பது, அபராதம் விதிப்பது என எத்தனையோ பிற வழிமுறைகள் இருக்கின்றனவே.

இது ஒரு உதாரணத்துக்கே. உடல் மன ரீதியாக குழந்தைகளை வருத்தும் கார்ப்போரல் தண்டனைகள் பற்றி எத்தனையோ கேட்டாயிற்று. பார்த்தாயிற்று. எதிர்ப்புகளும் தெரிவித்தாயிற்று. வாக்குவாதங்கள் நிகழ்ந்தாயிற்று. ஆனாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாச் செய்திகள் இந்தப் பக்கம்தான் குற்றம் எனக் கைநீட்டி உறுதியாகச் சொல்லமுடியாதபடி சில சமயங்களிலும், கைகட்டி வேடிக்கை பார்க்க முடியாதபடி பல சமயங்களிலும்.

இந்த நேரத்தில் நமது பள்ளி அனுபவங்களோடு ஒப்பிட்டுப் பேசுவதென்பது காலத்துக்குப் பொருந்தாத ஒன்றாய் தோன்றலாம். ஆனால் நினைவின் இடுக்குகளுக்குள் இருந்து அவை பீறிட்டு வரவே செய்கின்றன. சென்ற நூற்றாண்டின் எழுபது எண்பதுகளில் எனது பள்ளிக்காலம். பிள்ளைகளை பள்ளியில் சேர்த்து விட வருபவர்கள் ஆண்டுவிழா போன்ற நிகழ்வுகள் தவிர வேறெதற்கும் அழைக்கப்படுவதில்லை. பிள்ளைகளின் படிப்போடு ஒழுக்கத்துக்கும் பள்ளிகளே உத்திரவாதம் என்பது போலாக என்ன கண்டித்தாலும் பெற்றோர் தலையிட்டதில்லை.

மணலில் முழங்காலிட வைப்பது, பெஞ்சு மேல் ஏற்றுவது, ஸ்கேலினால் உள்ளங்கையில் அடிப்பது, மைதானத்தைச் சுற்றி ஓடவிடுவது இதெல்லாம் சர்வ சாதாரணமாகத் தரப்பட்ட தண்டனைகள். ஓரிரு முறைகள் சற்றே வரம்பு மீறிச் சென்ற சம்பவங்களில் மட்டுமே பெற்றோர் தலையிடக் கண்டிருக்கிறேன். தலைமை ஆசிரியரும் குறிப்பிட்ட ஆசிரியர்களை எச்சரிக்கத் தவறவில்லை அந்த நாளிலும்.

ஆனால் இப்போது சின்ன விஷயங்களுக்கும் ஆசிரியர்கள் மாணவர்களை உரிமையுடன் நெறிப்படுத்த முடியாத நிலையிலேயே உள்ளனர். அப்படியே மாணவர்மேல் தன்மையாகத் தவறுகள் சுட்டிக்காட்டப்படும் போதும்கூட தங்கள் பிள்ளைகளிடம் தவறேதும் உள்ளதா என்பது பற்றி ஆராயாமல் பெற்றவர் கொந்தளிப்பதே பெரும்பாலும் நடக்கின்றது. பொறுமையற்ற ஆசிரியர்கள் சிலரால் நடந்த பல தவறுகளால் ஆசிரியர்கள் பிள்ளைகளைக் கண்டிப்பதே குற்றமெனும் மனோபாவத்துக்கு வந்தே விட்டோம்.

அன்றைக்கு ஆசிரியர்கள் நமக்கு வழங்கிய தண்டனைகளைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், அவர்கள் கண்டிப்புடன் இருந்ததாலேயே நல்ல ஒழுக்கத்துடன் வளர்ந்தோமென நம்புகிற நாம் இன்றைக்கு நமது பிள்ளைகளை ஆசிரியர்கள் அடிப்பதை விரும்பவில்லைதான். என் மகன் படித்து முடித்த பள்ளிகளில் கார்ப்போரல் தண்டனைகள் இல்லாதது இயல்பாக நடந்தது. இருந்திருந்தால் நான் அதை விரும்பியிருப்பேனா என்பது கேள்விக்குறியென்றால் இன்றைய சூழலுக்கு என்னதான் தீர்வு என்பதற்கும் என்னிடம் சரியான விடையில்லை.

ஒரு தாய் எப்படி அன்பையும் கண்டிப்பையும் பிள்ளைகளிடம் ஒருசேரக் காட்டுவாளோ அதே போன்ற கருணை உள்ளம் ஆசிரியருக்கு இருக்க வேண்டியதும், தங்கள் கண்ணின் மணிகளைக் காக்கும் இமைகளாய் ஆசிரியர்கள் இருப்பார்கள் எனும் நம்பிக்கை பெற்றோருக்கு இருக்க வேண்டியதும் அவசியமாகிறது. தாயுமாய் ஆசிரியர்கள் இருக்கையில் தண்டனைகள் வரம்பு மீற வாய்ப்பில்லை. இந்த பரஸ்பர நம்பிக்கை காப்பாற்றப்பட்டால் வரம்பின் எல்லையை வரையறுப்பதிலுள்ள சிக்கல்களும் தீரக் கூடுமென்றே நினைக்கின்றேன்.

***

ந்த ஆசிரியர் தினம் இதோ நான் பகிரப் போகும் நினைவுகளைத் தாங்கி நன்றியுடன் நகர்ந்தது நேற்று. கடந்த மாதம் நெல்லை சென்றிருந்த போது எங்கள் பள்ளியாகிய இக்னேஷியஸ் கான்வென்டுக்குச் சென்று வந்தது பற்றி சென்ற பிட் பதிவில் குறிப்பிட்டிருந்தேன். நானும் தங்கையர் இருவரும் பிள்ளைகளுடன் சென்றிருந்தோம். படிப்பினை முடித்து பல ஆண்டுகள் ஆகிவிட்டபடியாலும், எங்களுக்கு எடுத்த ஆசிரியர்கள் பலரும் ஓய்வு பெற்று விட்டதைக் கேள்விப்பட்டதாலும், வகுப்பு நாள் எனில் மாணவருக்கு இடைஞ்சலாய் இருக்கக் கூடும் என்பதாலும் நாங்கள் தேர்ந்தெடுத்தது ஒரு அழகான ‘ஞாயிறு’.



வாசலில் இருந்த காவலாளி ‘நாங்கள் பழைய மாணவியர்’ என சொன்னதும் மிகுந்த பரிவுடன் ‘போங்க, போய் நல்லா சுத்திப்பாருங்க. பசங்களுக்கு எல்லா இடமும் காட்டுங்க. கொஞ்ச நேரம் அமைதியா உக்காந்துட்டும் வாங்க’ என்றார். அவருக்கும் நன்றி.

ஒவ்வொரு வகுப்பு இருந்த கட்டிடங்களுக்குக்கும் மைதானங்களுக்கும் தேவாலயத்துக்கும் சென்று வந்தோம். எம்மைச் செதுக்கிய ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் நினைவுக்கு வந்தனர். கூடப்படித்தவர்கள் எல்லாம் பச்சை வெள்ளை சீருடையில் சினிமாவில் வரும் ஃப்ளாஷ்பேக் போல அவ்விடத்தில் தோன்றி அங்குமிங்குமாய் நடமாடினால் எவ்வளவு நன்றாக இருக்குமென்ற சிறுபிள்ளைத்தனமான ஏக்கம் எழுந்தது.

அத்தனை இடங்களையும் படம் எடுத்தேன், எனக்காக மட்டுமல்ல எனது பள்ளியின் பழைய மாணாக்கர் அனைவருக்காகவும்.  அப்படங்களின் தொகுப்பு இங்கே:
[எம் பள்ளி மாணவியரால் ஃபேஸ்புக்கில்  பல இலட்சம் பக்கப் பார்வைகளைப் பெற்ற ஆல்பமாக உள்ளது. அனைவரையும் நன்றியோடு நினைவு கூர்ந்திட உதவும் தொகுப்பாக அது அமைந்து போனதில் மகிழ்ச்சி.]
மற்றவருக்கு இப்படங்கள் வெறும் கல்லும் கட்டிடமும், மண்ணும் மைதானமுமே. அங்கு கற்றவருக்கோ தாய்வீடு போல. தவழ்ந்து வளர்ந்த வீட்டில் அமர்ந்து கதை பேசிய திண்ணை, ஓடி விளையாடிய முற்றம், நிலாச் சோறு உண்ட மொட்டைமாடி இவற்றின் மீதான் நேசம் போலவே அங்கிருந்த வகுப்பறைகளுடனும், மரத்தடிகளுடனும், மாடிப்படிகளுடனும், நடனம் நாடகம் என அசத்திய மேடையுடனும் அளவில்லாப் பாசம் பொங்கியது.

விடுதிக் கட்டிடம் அருகே சென்ற போது மாடி வராந்தாவில் நின்றிருந்த மாணவி நீங்கள் யாரென சைகை செய்ய அறிமுகம் செய்து கொள்ளவும் ‘எந்த வருடத்தில் முடித்தீர்கள்’ எனக் கேட்டாள். சொன்னபோது நெஞ்சில் கை வைத்து ‘ஏ ஆண்டவரே. நானெல்லாம் அப்போது பிறக்கவே இல்லையே!’ என்றபடி மற்றவர்களைக் கூவி அழைத்தாள். அவர்களுடன் அளவளாவும் ஆசையில் தங்கை கீழே அழைக்க, ‘அனுமதியில்லை’ என்றார்கள் வருத்தத்துடன். ‘ஆகா, விதிகளை மீறாத நல்ல பிள்ளைகள்’ என மெச்சியபடி கையசைத்து விட்டு நகர்ந்தோம்.

இன்னும் இருபது இருபத்தைந்து வருடங்கள் கழிந்து அவர்களில் எவரேனும் நெஞ்சம் நிறைய நன்றியுடன் இப்படி பள்ளியினை வலம் வரக் கூடும். அப்போதைய மாணவியர் திகைப்பும் மகிழ்வுமாய் அவர்களை நோக்கிக் கையசைக்கக் கூடும். காலச் சக்கரத்தின் சுழல்வில் எங்கெங்கோ இடம்பெயர்ந்தாலும், எத்தனையோ நிகழ்வுகள் அனுபவங்களில் நாம் உலகைக் கற்றாலும், பயின்ற பள்ளி ஆழ்மனதில் நீங்கா மதிப்புடன் இடம் பெறுகிறதென்றால் அதற்குக் காரணம் சொல்லித் தந்த ஆசிரியரும்தானே!!
***

, ஆ’ அறிவித்து, அறிவுக் கண் திறந்து, பதின்ம வயதில் பக்குவம் தந்து வளர்ச்சியின் ஒவ்வொரு படியிலும் கூட இருந்த பள்ளியுடனான பந்தம், பேபி க்ளாஸ் என அழைக்கப்பட்ட யுகேஜி-யுடன் சேர்த்து பதிமூன்று வருடங்கள் என்பதனால் ஒருவித ஓரவஞ்சனையுடன் கல்லூரிக்குச் செல்லாமல் வந்து விட்டதாக நினைக்க வேண்டாம். நேரம் அமையவில்லை. அடுத்த முறை நிச்சயம் செல்வோம். ஆனால் அம்மை அப்பனை அழகாய் வலம் வந்து ஞானப்பழத்தைப் பெற்றுக் கொண்டப் பிள்ளையாரைப் போல எங்கள் மூவருக்குமே கல்லூரியில் தமிழ் வகுப்பெடுத்த, தற்போது ஓய்வு பெற்று விட்ட பேராசிரியை திருமதி. விமலா சாமுவேல் அவர்களை அவரது இல்லம் சென்று சந்தித்தோம் ஒரு மதிய நேரத்தில்.

சற்றும் எங்களை எதிர்பார்த்திராத அவர் ஆரத் தழுவி வரவேற்றார். ‘இத்தனை வருடங்கள் என் ஆசிரியர்களைச் சந்தித்து, என்னைப் பற்றிக் கேட்டுவந்த உங்களைப் பற்றி, உங்கள் ஆசிரியர் என்ன சொல்கிறார் எனப் பார்க்கிறேன்’ என்றபடியே கூட வந்த மகனைப் பார்த்து ‘உங்கம்மா ரொம்ப தங்கமான ஸ்டூடண்ட்பா’ என்றுதான் தன் பேச்சினையே ஆரம்பித்தார்:)! . ‘அந்த காலத்தில் எப்படிக் கதை கவிதையெல்லாம் எழுதுவா தெரியுமா?’ என்றார். இப்போதும் தொடர்வதை என் தங்கைகள் சொல்லக் கேட்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தார். ‘கணினி அத்தனை பரிச்சயம் இல்லை. கணவர் ஏதேனும் காட்டினால் பார்ப்பேன்’ என்றவரிடம் ‘வலையில் என் படைப்புகளைப் பாருங்கள்’ என்று சிரமப் படுத்த விரும்பவில்லை. கல்லூரி காலத்தில் இவரே எனக்கு எழுத உற்சாகம் தந்தவர். கல்லூரியில் இருந்த ஐந்து வருடங்கள் மட்டுமின்றி அதன் பின்னரும் ஓரிரு வருடங்கள் என் படைப்புகளை வாங்கி ஆண்டுமலரில் வெளியிட்டவர். அருமையாகப் பாடமெடுத்துத் 'தமிழை அமுதென்று' உணர வைத்த ஆசிரியர். அவருக்கு இங்கு என் வணக்கங்கள்.

மாணவியர் நாங்கள் மூவரும் அவருடன் நின்று புகைப்படமெடுத்துக் கொண்டோம். கல்லூரியின் தற்போதைய மாற்றங்கள் பற்றியெல்லாம் பேசிக் கொண்டிருந்தார். விடைபெறும் போது எம் பிள்ளைகள் அனைவரையும் உச்சி முகர்ந்து ஆசிர்வாதித்தார் எமது அன்னையைப் போல. வீடு திரும்பியதும் தம்பியுடன் இதைப் பகிர்ந்த வேளையில் சொன்னான் ‘ஆண்டுகள் எத்தனை கடந்தாலும், ஆசிரியருக்கே மறந்தாலும் மாணவர் தேடிச் சென்று பார்ப்பதும், அதனால் அவருக்குக் கிட்டும் பரவசமும் உன்னமான இப்பணிக்குத் தன்னை ஒப்படைத்தவருக்கு மட்டுமே வரமாய் வாய்த்த ஒன்று!’ என. எத்தனை உண்மை.

அத்தனை ஆசிரியப் பெருந்தகையினருக்கும் வாழ்த்துகளும் வணக்கங்களும்!!

*** *** ***

 13 செப்டம்பர் 2010, உயிர்மை.காமின் ‘உயிரோசை’ இணைய இதழில்..
நன்றி உயிரோசை!

திங்கள், 30 ஆகஸ்ட், 2010

ஒதுக்கப்பட்டவை


இட்லி வடை பொங்கல்
கெட்டிச் சட்னி சாம்பார்

உணவுப் பட்டியல் பார்த்து
விரும்பிக் கேட்டு வாங்கி
கலந்து கட்டி அடித்து

போதும் போதுமெனக்
கெஞ்சிய வயிற்றின் மேல்
இரக்கம் வைத்து
எழுகிற நேரம்

கடந்தது மேசையை
கமகம மசால் தோசை

‘அடடா, விட்டு விட்டோமே’
கண்டும் காணாது நடந்தாலும்
சுண்டி இழுத்த மணத்தால்
மின்னல் வெட்டாய் வந்து மறையும்
அற்ப சிந்தனையை
எப்படி மனதோடு சுமப்பதில்லையோ
அதுபோலவேதான்

நினைத்து மறுகவோ
நெஞ்சின் ஒரு ஓரத்தில்
புதைத்து வைத்து
ஏக்கமாய்ப் புரட்டிப் பார்க்கவோ
அவசியம் இல்லாதவை

வேண்டாம் என வாழ்வில்
ஒதுக்கிய வாய்ப்புகள்!
***

20 ஜூலை 2010, யூத்ஃபுல் விகடனில் வெளியான கவிதை.

படம் நன்றி: யூத்ஃபுல் விகடன்

வியாழன், 26 ஆகஸ்ட், 2010

மன்னாதி மன்னர்கள்

ராஜாதி ராஜ.. ராஜ மார்த்தாண்ட.. ராஜ கம்பீர..

யாரு யாரு’ ? பொறுங்களேன்.

'ன்னைக்குப் பொருக்காட்சிக்குப் போகலாமா?’ தம்பி கேட்டதும் மருமக்களுக்கு மட்டுமல்ல அவன் அக்காக்கள் எங்கள் மூவருக்கும் கூட குஷிதான். சின்ன வயதில் போனது. அப்புறம் நெல்லைக்கு போன சமயங்களில் அது வாய்த்திருக்கவில்லை. “பொருக்காட்சின்னா..?” -இது தங்கையின் புத்திரன். அமெரிக்காவில் பெரிய மால்களுக்கும் பெங்களூரில் மால்களுடன், குளிரூட்டப்பட்டு அல்லது ஒரே கொட்டகையின் கீழ் கம்பளமிடப்பட்ட பொருட்காட்சிகளுக்குமே பழகி விட்டிருந்த பிள்ளைகளுக்கு விளக்க முற்பட்ட போது “ஓ கைப்புள்ள திருவிழா மாதிரியா?” என்றார்கள். நல்ல தெளிவுதான். வாழ்க வடிவேலு.

கோவில் மற்றும் விசேஷ வீடுகளுக்கு செல்லுகையில் அழகாய் பாவாடை சட்டை அணியப் பழகிவிட்டிருந்த தங்கை மகளுக்கென கொட்டி வைத்திருந்தார்கள் வண்ண வண்ண வளையல்களை முதல் கடையில். அங்கேயே நேரம் எடுக்க ஆரம்பிக்க காத்திருக்கும் பாலபாடமும் ஆரம்பமாகி விட்டது. ஒலிபெருக்கியில் ஓங்கி இசைந்த பாடலுக்குத் தானாக ஆட்டம் வந்தது தம்பியின் செல்ல மகனுக்கு. தோள்களை ஸ்டைலாக அசைத்து கைகளைச் சொடுக்கிட ஆரம்பிக்க சுற்றி நின்று ரசித்திருந்தார்கள் மற்றவர்கள். ஆடிக்காற்றில் ஆளுயரத்துக்குத் திடீர் திடீரெனக் கிளம்பியப் புழுதிப் புயலைச் சமாளிக்க முதலில் திணறினாலும், ஓரிரு முறைகளில் எதிர்திசை திரும்பி இமைகளை எப்படி இறுக்கிக் கொள்வது என்பது கண் வந்த கலையாயிற்று.

தை எடுத்தாலும் ஆறு ரூபாய்’. இந்தக் கடையைப் பார்த்து தாள மாட்டாத ஆச்சரியம் . ‘ஒன்லி சிக்ஸ் ருபீஸ்? எப்படி சாத்தியம்?’ என ஒரே வியப்பு. சின்னத் தங்கையின் சின்ன மகன் அங்கே ஆறு ரூபாய்க்கு ஒரு அசத்தல் கண்ணாடி வாங்கி மாட்டிக் கொண்டான். அடுத்தடுத்த கடைகளில் ராமரின் வில் அம்புகள், இந்திய ரூபாய்கள் கொண்ட கீ செயின் என பார்த்துப் பார்த்து ஏதேதோ வாங்கிப் பையை நிரப்பிக் கொண்டான். தற்சமயம் அவனது அமெரிக்கப் பள்ளியில் இந்த பர்ச்சேஸ் எல்லாம்தான் ஹாட் டாபிக் என சாட்டில் தெரிவித்தாள் தங்கை. தன் மேசையில் வரிசையாக அடுக்கி வைத்து அங்கே ஒரு கண்காட்சி நடத்திக் கொண்டிருக்கிறானாம்.

தேசம் விட்டு தேசம் வந்து..

[ஆறு ரூபாய் அசத்தல் கண்ணாடியில் தம்பியும், முதன்முதல் பஞ்சு மிட்டாய் சுவைக்கப் போகும் பரவசத்தில் அண்ணனும்..]

விற்பனை உத்தி
உருண்டு திரண்டு..

மிட்டாய் உருண்டு திரண்டு பஞ்சாகி வரும் அழகை ரசித்துப் பார்த்திருந்து வாங்கிச் சப்புக் கொட்டி மகிழ்ந்தார்கள். மைதானத்தில் பல குழந்தைகள் ஒளிரும் கொம்புகளுடன் திரிந்தார்கள். கொம்பு சீவி விட்டவர் யாரெனத் தெரிந்து போனது சிறிது தூரம் நடந்ததும். நல்ல விற்பனைதான். விளம்பர உத்தி தந்த வெற்றி. ‘ரொம்பதான் அலட்டிக்காதே. உனக்கு மட்டுமென்ன ரெண்டு கொம்பா முளச்சிருக்கு?’ எனும் கேள்வியை அடிக்கடி சந்திக்க நேருபவரும் கூட வாங்கி மாட்டிக் கொள்ளலாம்:)!

ஒரு பக்கம் திறந்த மேடையில், ஒளிவெள்ளத்தில், அதிரும் சினிமா பாடல்களுக்கு ஜோராக ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தது ஒரு ஜோடி. லைவ்வாக ‘மானாட மயிலாட’! பிடிக்காமல் போகுமா மக்களுக்கு? சரியான கூட்டம் அங்கு.

டக் தடக்’ எனத் தூக்கித் தூக்கி அடித்த ராட்டினம் ஒன்றில், மொத்த வண்டிக்கும் தனி ஆளாய் அமர்ந்து அசராமல் பவனி வந்து வெற்றிப் புன்னகையுடன் இறங்கினாள் தங்கை மகள். அதற்கென்ன என்கிறீர்களா? சொல்கிறேன். அடுத்து நாங்கள் நின்றிருந்தது பேய் வீட்டின் (ஹாண்டட் ஹவுஸ்) முன்.

இப்படித்தான், நான் நான்காம் வகுப்பில் இருந்தபோது நெல்லை மருத்துக்கல்லூரி பொருட்காட்சிக்குப் பள்ளியிலிருந்து அழைத்துச் சென்றிருந்தார்கள். அங்கே பேய் நடனமென எலும்புக்கூடுகள் ஆட, பார்த்து விட்டு வெளியே வந்து தேம்பித் தேம்பி அழுத வகுப்பு மாணவியர் நினைவுக்கு வர எச்சரித்தேன் அப்படியும் இருக்கலாமென. ‘ஹை!! ஸ்கெலட்டன் டான்ஸ். நல்லாதான் இருக்கும்’ பிள்ளைகள் அடம் செய்ய தலைக்கு பத்து ரூபாய் என டிக்கெட் வாங்கப் பட்டது.

தயாராகக் காத்திருந்த முகமூடிப் பேய் ‘பே’ என தலையை மட்டும் நீட்டி அச்சுறுத்த, முதல் ஆளாய் காலை எடுத்து வைத்த தங்கை மகள் சற்றும் அதை எதிர்பாராத நிலையில் அழத் தொடங்கி விட்டாள். அவள் அம்மா உடனேயே வெளியே அழைத்து வந்து விட்டாலும் கொஞ்ச நேரம் அழுதுதான் நிறுத்தினாள்.

முன் தினம் முரப்பநாடு ஆற்றுக்குப் போயிருந்த போது ‘தண்ணீர் கலர் ப்ரெளனாக இருக்கே’ என்று ஒரு அண்ணனும், ‘இறங்கினால் மீன் கடிக்கே’ என ஒரு அண்ணனும் நீச்சல்குள நினைவுகளோடு கரையோடு நின்று விட, சின்ன அண்ணாரு மட்டும் பயமின்றி குளித்தார் என்றாலும் குளிரில் வெடவெடத்தார். இவள் மட்டுமே நடுஆற்றுக்குப் போய் கொஞ்சமும் பயமின்றி மூழ்கி மூழ்கி வெளிவந்தாள். சமீபத்திய தாய்லாந்து பயணத்தில், அடியில் அதல பாதாளமாய் இருக்க, ஒரு மரத்திலிருந்து இன்னொரு மரத்துக்கு(‘ஃப்ளைட் ஆஃப் தி கிபான்’) குரங்கு போல கயிற்றின் வழி சென்றவள், எப்போதும் தைரியசாலியாய் பாராட்டப்பட்டவள் இந்த முகமூடிப் பேயிடம் ஏமாந்து போய் விட்டாள்.

ஏழு வயதுதானே? எதையோ எதிர்பார்த்து என்னென்னவோ கணக்குப் போட்டு நாம் எடுத்து வைக்கிற அடிகள் எதிர்பாராத திருப்பத்தில் சறுக்கி விடுவதில்லையா? அனுபவங்களைப் பாடங்களாய் காணும் பக்குவம் இன்றைய பிள்ளைகளுக்கு நிறையவே இருக்கிறது. தாண்டி வருவாள்.

பேய் வீட்டுக்குள் நுழைந்த மற்ற சூரர்களைப் பற்றிப் பார்ப்போம். தங்கையை மிரட்டிய பேய் மேலே அண்ணன்களுக்கு இருந்திருக்கிறது உள்ளுக்குள்ளே கோபம். நுழைகையில் பயம் காட்டிய பேயே உள்பக்கமாக ஓடிஓடி அடுத்தடுத்த திருப்பங்களிலும் அச்சுறுத்தியதைக் கவனித்து, சுதாகரித்துக் கொண்டவர்கள் கடைசித் திருப்பத்தில் பேய் அலறும் முன் ‘பே’ எனத் தாங்கள் அலறி வெலவெலக்க வைத்து விட்டார்கள் வீரதீரப் பேயை. பிழைத்துக் கொள்வார்கள்.

சிரித்தபடி பிள்ளைகள் வெளிவர, பேய் முகமூடியைத் தூக்கி என் தங்கையிடம் ‘யக்கா யக்கா, டீக்கு ஒரு ரெண்டு ரூவா கொடுத்துட்டுப் போக்கா’ என்றிருக்கிறது பரிதாபமாக. ஐந்து டீக்கு காசை கொடுத்து விட்டு வந்ததாக தங்கை சொன்ன போது பேயின் பிழைப்பு மேல் இரக்கமே ஏற்பட்டது.

சிரித்து வாழ வேண்டும்


ராசாதி ராசா யார் என்று தெரிந்து விட்டதா?இவரை சிரிக்க வைக்கக் கூட்டத்தினர் ஏதேதோ கோமாளித் தனங்கள் செய்து, தமது செய்கையை தாமே ரசித்துச் சிரித்துக் கொண்டிருந்தது நல்ல வேடிக்கை. அதுவேதான் நோக்கமெனில் பாராட்டத்தான் வேண்டும்.

ராசா விறைப்பாக நின்றாலும் எங்கோ பார்த்துக் கொண்டிருக்கவில்லை. ஒவ்வொருவரின் முயற்சிகளையும் உன்னிப்பாகக் கவனித்தபடிதான் இருந்தார். அப்படியும் நரசிம்ம ராவைத் தோற்கடிக்கும் முகத்துடனேயே நின்றிருக்க இதொன்றும் அத்தனை சிரமமில்லை போலிருக்கிறதென நினைத்து, வீடு திரும்பியதும் ஆளாளுக்கு அந்த ராசா போல இருந்து பார்த்தோம். ஊஹூம். யாராலும் ஓரிரு நிமிடம் கூடத் தாக்குப் பிடிக்க முடியவில்லை. உண்மையில் அதில் வெல்லும் ஆர்வம் எவருக்கும் இல்லை என்றே கொள்ள வேண்டும். கோடிகள் கொட்டிக் கொடுத்தாலும் சிரிக்காமல் வாழ யாருக்குதான் இருக்கும் விருப்பம்?

ஆனால் சவால் ராசாவோ ஐம்பதாயிரத்தில் ஐம்பது பைசாவைக் கூட யாருக்கும் விட்டுக் கொடுப்பதாய் இல்லை. மகுடம் தலைக்கு ஏறிவிட்டால் அதை கெட்டியாகப் பிடித்துக் கொள்வதிலேதானே இன்றைய சாம்ராஜ்ய சக்கரவர்த்திகளுக்குக் காலம் கழிகிறது! இன்னொரு கோணத்தில் பார்த்தால் சாமான்னியர்கள் மட்டும் இதற்கு விதிவிலக்கா எனும் சிந்தனையும் எழுகிறது. பெயர், பொருள், புகழ், வேலை, பதவி என இருப்பதைத் தக்க வைத்துக் கொள்ளவதுதான் எல்லோருக்குமே வாழ்நாள் போராட்டமாய் உள்ளது. சக்கரவர்த்திகளுக்குச் சற்றே கூடுதலான போராட்டம். அவ்வளவுதான் வித்தியாசம்.

இவ்வேந்தரைப் பொறுத்த மட்டில் கிரீடம் என்பது சவாலில் தோற்றுப் போகாமல் எஜமானின் ஐம்பதாயிரதைக் காப்பாற்றித் தன் வேலையைத் தக்க வைத்துக் கொள்வதே எனும் கனமான உண்மை, பளபளத்த அவரது உடைகளுக்குள் பதுங்கி விட்டுக் கொண்டிருந்தது.

சற்றுப் பொறுத்துக் கிடைத்த காட்சிதான் என்ன அழகு! நிகழ்ச்சி இடைவேளையின் போது தன் சிம்மாசனத்தில் அமர்ந்தபடி ரொம்ப அந்நியோன்மாய் மக்களிடம் அளவளாவிக் கொண்டிருந்தார் ராசா. அரியாசனத்தில் இருப்பவர்கள் இப்படிப் பொதுமக்களை அணுகினால் எத்தனை நன்றாக இருக்கும்? எட்டிப் பார்த்த ஏக்கத்தை எளிதாகத் தட்டிவிட முடியவில்லை.

தூத்துக்குடியிலிருந்து வரவேண்டிய பெங்களூர் எக்ஸ்பிரசுக்காக கோவில்பட்டி ரயில் நிலையத்தில் காத்திருந்தோம் நானும் மகனும். பெஞ்சில் அமர்ந்திருந்த எங்களைக் கடந்து சென்றார்கள் நாலைந்து பேர். அதில் ஒல்லியான உருவத்துடன் ஐம்பது வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் ‘எங்கிட்ட நடக்குமா? அப்படியே கொடல வுருவி மாலையாப் போட்டுறுவேன்ல. அந்தப் பயம் இருக்கு அவனுக்கு’ என உதார் விட்டுக் கொண்டிருந்தார்.

”கொடல என்றால்?” உச்சரிப்பு பிடிபடாமல் இழுத்தான் மகன். ”கொடல இல்லை, குடல்.” விளக்கினேன். உதார் மன்னன் சொன்னதன் அர்த்தம் முழுதாகப் புரியவர சிரிப்பை அடக்க முடியவில்லை அவனுக்கு. ”ஆளப் பார்த்தா அப்படியொண்ணும் ரவுடி மாதிரி தெரியலயே” என்றான். ”வெள்ளந்தி மனிதர்கள்தானடா. இப்படி உதார் விட்டுக் கொள்வதில் கிடைக்கிறது ஒரு அற்ப சந்தோஷம்” சொல்லி முடிக்கவில்லை நான்..

அடுத்து வந்து கொண்டிருந்தார்கள் பளீர் வெள்ளையும் சுளீர் சொள்ளையுமாய், மடித்துக் கட்டிய வேட்டியோடு மூன்று பேர். நடுவிலிருந்த பெரியவருக்கு அறுபது வயது இருக்கும். ”எங்க அக்கா வூட்ல இருக்குல அந்தச் சட்டை. அத மட்டும் நா போட்டேன்னு வையு” விரல்களைச் சொடுக்கி ”ஒரு.. ஒரு.. எளவட்டப் பயலும் எம்முன்ன நிக்க முடியாதுல்ல” ரவுசு விட்டபடி அக்கா வூட்டுச் சட்டையை அப்போதே அணிந்திருக்கும் தோரணையில் காலரைத் தூக்கி விட்டுக் கொண்டார். ‘ஏதேனும் டீ ஷர்டாய் இருக்கும்’ மறுபடி அடக்க மாட்டாமல் மகன் சிரிக்க எனக்கோ உலகெங்குமே வயது வரம்பின்றி ரவுசு மன்னர்கள் அடிக்கடி தங்களைப் பற்றி விடும் சவுண்டு நினைவுக்கு வந்தது. ‘யூத்து...’!!!

***

இந்தப் பதிவின் ஒரு பகுதி ஆனந்த விகடனின் ‘என் விகடன்’ மதுரை பதிப்பின் வலையோசையில்..
நன்றி விகடன்!

ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2010

மலரோடு மலராக..-பெங்களூரு லால்பாக்கில்.. - ( Bangalore Lalbagh Flower Show )

1.கரங்குவித்து வணங்கி வரவேற்கிறது அழகாய் ஆம்பல்

'சுதந்திரதினக் கண்காட்சி அப்டேட்ஸ் போலிருக்கிறது' என நினைத்து வந்தீர்களானால் மன்னிக்கணும். கடந்தமுறை அலைமோதிய கூட்டத்தை நினைத்தே போகவில்லை. இந்த முறை கண்ணாடி மாளிகையை அலங்கரித்தது ஆறுலட்சம் ரோஜாக்களால் உருவாக்கப்பட்ட ‘இண்டியா கேட்’.

ஒவ்வொரு வருடமும் தாஜ்மகால், குதுப்மினார், டைனாசர் என க்ளாஸ் ஹவுஸில் இடம் பெறும் பிரமாண்ட மலர் கட்டுமானங்களே கண்காட்சியின் செண்டர் ஃஆப் அட்ராக்‌ஷனாக இருந்து வந்தாலும், தோட்டக்கலையை முழுமையாக அறிந்து கொள்ளும் விதமாகக் காட்சிப் படுத்தியிருப்பார்கள் பரந்து விரிந்த லால்பாக் எங்கிலும் பல பிரிவுகளாக.

இந்த சுதந்திர தினக் கண்காட்சிக்கு நாற்பத்தைந்து லட்சம் ரூபாய் செலவானதாகவும் நுழைவுக் கட்டணம் வாயிலாக ஒரு கோடியே பத்து லட்சம் ரூபாய் வந்ததாகவும் (தலைக்கு முப்பது ரூபாய் என்றால் எத்தனை பேர் பார்த்துக் களித்தார்கள் என கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள்), நிகர இலாபம் ஐம்பத்தைந்து இலட்சமென்றும் செய்தி அறிக்கை வெளியாகியுள்ளது.

சரி விஜயகாந்த் பாணியில் எதற்கு இந்தக் கதையெல்லாம் என்கிறீர்களா? ஜனவரியில் குடியரசு தினக் கண்காட்சியன்று எடுத்த படங்களில் பலவற்றை சொன்னபடி பார்வைக்கு வைக்காதது இப்போதுதான் நினைவுக்கு வந்தது. என் கணக்குக்கு கூட ஒரு பதிவுமாயிற்று:)! உங்களுக்கு மலர்களைப் பார்த்த மாதிரியும் ஆயிற்று.

முதல் பாகம் பார்க்காதவர்களுக்கு மாதிரிக்காக மீண்டும் ஒரு படம்..

2.குதுப்மினார்
ஆனால் மீள் படம் அல்ல:)! இதே போன்ற காவேரி மாதா மற்றும் மத நல்லிணக்க, பண்டிகை மலர் அலங்காரங்கள் காண விருப்பமாயின் முதல் பாகத்துக்குச் செல்லுங்கள்.

கூட்டத்தோடு கூட்டமாக நகருகையில் அவசரமாய் எடுத்தவையே பின் வரும் படங்களும். ஆகையால் 'பூவை மறைக்கிற இலைகள், அருகே தெரிகிற தளைகள்' போன்ற சிறிய பெரிய குறைகள் எவற்றையும் பெரிது படுத்தாமல் வாருங்களேன் கூடவே, பிழைத்துப் போகிறேன் எப்போதும் போல:)!

[படங்கள் கணினித் திரையை விட்டு விலகித் தெரிந்தால் control மற்றும் minus பொத்தான்களை பயன்படுத்துங்கள்.]

3.ராஜா மகள்




4.லில்லி மலருக்குக் கொண்டாட்டம்



5.பூவில் வண்டு



6.தண்டுடன் அல்லி.. தடாகத்தில்..



7.இதழா குழலா?
இவ்வகை மலரை இங்குதான் முதன் முறையாகக் கண்டேன்.


8.மெல்லத் திறக்கும் இதழ்கள்



9.(செக்கச்) சிவந்த மலர்

10.நம்பினால் நம்புங்கள்
ஒற்றைப் பூதான் இத்தனை பெரிசாய்..

இவ்வகையே கண்காட்சியில் முதல் பரிசினைத் தட்டிச் சென்றது.


11.தொந்திரவு செய்யாதீர்


12.நீயா?


13.நானா?



14.கள்ளிக்குப் பூவேலி

பூந்தோட்டத்துக்கு முள்வேலி பார்த்திருப்போம். இங்கே முள் நிறைந்த ‘டிமோத்தி’ கள்ளிச்செடிக்கு பூக்களால் வேலி.


15.கண்ணாடி மாளிகை கண்காட்சி நாயகனாய்..



எல்லா மலரும் அழகுதான். இருப்பினும் வண்ணம், கோணம், வடிவம் என ஏதேனும் காரணத்தால் எதுவேனும் குறிப்பாகப் பிடித்திருந்தால் சொல்லிச் செல்லுங்களேன்:)!





LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin