புதன், 26 பிப்ரவரி, 2020

எழு பறவையே.. - வீரபத்திரர் ஆலயம்.. - லெபக்ஷி, ஆந்திரா (பாகம்: 1)

#1

ந்திரப் பிரதேசத்திலுள்ள அனந்தப்பூர் மாநிலத்திலிருக்கும் சிறு கிராமம் லெபக்ஷி. பெங்களூரின் வடக்கு எல்லையிலிருந்து சுமார் 120 கி.மீ தொலைவில், ஹைதராபாத் சாலையில் பயணித்து ஆந்திராவுக்குள் நுழைந்ததும், இந்துப்பூருக்கு கிழக்கே 15 கி.மீ தொலைவில் உள்ளது.

இந்தக் கிராமத்தின் பெயர்க் காரணமும் வரலாற்றுப் பின்னணியும் நம்மை இதிகாசக் காலத்திற்குள் அழைத்துச் செல்கின்றன:


#2

சீதையைக் கடத்திச் செல்லுகையில் தடுக்க முயன்ற ஜடாயுவின் இறக்கைகளை வெட்டி வீழ்த்துகிறார் இராவணன். ஜடாயு இந்தக் கிராமத்தில் வீழ, சீதையைத் தேடி வருகிற ராமன் ஜடாயுவை இங்கே கண்டு “எழு பறவையே” (தெலுங்கில் “லெ பக்ஷி”) எனக் கூற அதுவே கிராமத்தின் பெயராயிற்று என்கிறது இராமயணத்தின் கிளைக் கதை.

#3

கோயிலை அடைவதற்கு சுமார் அரை கி.மீ முன்னர் சாலையின் வலப்பக்கம் ஒரு குன்றின் மேல் ஜடாயுவுக்கு எழுப்பப் பட்டிருக்கும் சிலை. உச்சி வரை செல்வதற்குப் படிக்கட்டுகள் உள்ளன.

சாலையின் வலப்பக்கம் சிறுபூங்காவினுள் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட, உலகின் இரண்டாவது மிகப் பெரிய சிலையெனும் பெருமை வாய்ந்த நந்தி ஒன்று உள்ளது. 

#4



கோயிலுக்குச் சென்று விட்டுத் திரும்பி வரும்போது தரிசனம் செய்த இந்த நந்தியின் படங்கள் மேலும் சிலவற்றைத் தகவல்களுடன் தனிப் பதிவாகப் பார்க்கலாம்.

திகாசக் கதைக்கு மட்டுமின்றி, இக்கிராமம் சிறு குன்றின் மேல்  இருக்கும்  தொன்மையான வீரபத்திர சுவாமி கோயிலுக்காகவும் பிரசித்தி பெற்றதாகத் திகழ்கிறது. 

#5

விஜயநகர மன்னர்கள் காலத்தில் (1336–1646) வீரண்ணா மற்றும் விருபண்ணா எனும் சகோதரர்களால் விஜயநகர கட்டிடக் கலையைப் பின்பற்றி கட்டப்பட்டிருக்கிறது.  

#6

சிவன், விஷ்ணு, வீரபத்திரர், பத்ரகாளி, துர்க்கை, பிள்ளையார் சன்னதிகளைக் கொண்ட இக்கோயில் வடக்குப் பார்த்த கோயிலாகக் கட்டப்பட்டிருப்பது கவனிக்க வேண்டிய சிறப்பம்சம். ஸ்கந்த புராணத்தில் குறிப்பிடப் பட்டுள்ள முக்கியமான சிவ ஸ்தலங்களுள் இதுவும் ஒன்றாகும்.

#7

கொடிமரம்




#8
நுழைவாயில் சுவற்றில் 
அருள் பாலித்திருக்கும்
விநாயகர்


இக்கோயிலில் வீரபத்திரர் உக்கிரமாகக் காட்சி அளிக்க அவரது துணையான பத்ரகாளி இங்கே சாந்தமாக அருள்பாலிக்கிறார். வீரபத்திரரின் கருவறைக்கு முன் இருக்கும் சிறு மண்டபத்திற்குள் படம் எடுக்க அனுமதியில்லை. அந்த மண்டபத்திற்குள் நாம் நுழைந்ததும் வலப் பக்கத்தில் மேற்குத் திசைப் பார்த்து அருள்பாலிக்கும் துர்க்கை அம்மனை நின்ற இடத்திலிருந்தே தரிசிக்க மிகப் பெரிய நிலைக்கண்ணாடியை சுவற்றில் பொருத்தியிருக்கிறார்கள். இடப்பக்கத்தில் நவக்கிரகங்கள் உள்ளன.

ருவறை மண்டபத்தை சுற்றி முக்கியமாகப் பார்க்கப்பட வேண்டியவையாக, நாட்டிய மண்டபம், ஒரே தூணில் இருபுறமுமாக வடிக்கப்பட்ட வாஸ்து புருஷன் மற்றும் அவரது துணையான பத்மினி தேவியின் சிற்பங்கள், தாமரை வடிவ மேற்கூரை, இயற்கைச் சாயங்களால் வரையப்பட்டக் கூரைச் சுவரோவியங்கள், தொங்கும் தூண், மூன்றடுக்குகளாகச் சுருண்டு நிற்கும் ஏழுதலை நாகலிங்கம் [படம் 1], பெரிய பிள்ளையார் சிலை, பாதியில் நின்று போன திறந்தவெளிக் கல்யாண மண்டபம், விருபண்ணாவின் இரத்த விழிக் கறைகள் ஆகியன பிரசித்தமானவை. 


இயற்கைச் சாயங்களால்
தீட்டப்பட்ட
கூரைச் சுவரோவியங்கள்
#9

வீரண்ணா, விருபண்ணா ஓவியங்கள், அர்த்தநாரீஸ்வர், ஹரிஹரர் ஓவியங்கள் எனப் பல காட்சிகள் காணக் கிடைக்கின்றன. கழுத்தை வளைத்து மேல் நோக்கி எடுத்த படங்கள் மூன்று இங்கே :). 

#10

சில கோயில்களில் இது போன்ற ஓவியங்களை சீரமைப்பு என்ற பெயரில் மீண்டும் வண்ணம் சேர்த்து அழகு படுத்த முயன்று அழகைப் பாழ்படுத்தி விடுவதுண்டு. அவ்வாறின்றி ஓவியங்கள் பழமை மாறாமல் பராமரிக்கப் பட்டிருப்பதும் சிறப்பு. 

#11
சிவனும் பார்வதியும் 
தாயம் 
விளையாடும் காட்சி

#12
அழகிய மேற்கூரை
‘ஷத்பத்ர கமல்’  

#13
பனிரெண்டு கற்களில் 
அடுக்கடுக்காகச் செதுக்கப்பட்ட 
நூறு இதழ்களைக் கொண்ட 
தாமரை வடிவம்
ஷத்பத்ர கமல்’  (நூறு இதழ்களைக் கொண்ட கமலம்) என்றும் இக்கூரை அழைக்கப்படுகிறது.

மேலும் படங்களுடன் கோயில் பற்றிய தகவல்களை அடுத்தடுத்த பாகங்களில் காணலாம்.

தகவல்கள்: கோயில் வழிகாட்டி, சுற்றுலாப் பயணிகளுக்கு அளித்த விளக்கங்களில் இருந்து சிலவும், விக்கிப்பீடியா மற்றும் இணையத்திலிருந்து சேகரித்துத் தமிழாக்கம் செய்தவையும்.

12 கருத்துகள்:

  1. மிக அழகிய இடம்.  பெரும் நந்தி கவர்கிறார்.  ஜடாயு சிலையின் மேல் பாகத்தில் ஏறிப் பார்த்தீர்களா?  கோவில் சுவரின் மேல்பாக ஓவியங்கள் அருமை.  தொடரக் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஸ்ரீராம்.

      ஜடாயு இருந்த குன்றின் மேலும் கூட்டம் அதிகம் இருந்தபடியால் செல்லவில்லை. அந்த இரண்டு படங்களும் செல்லும் வழியில் வாகனத்திலிருந்து எடுத்தவை.

      நன்றி. தொடர்ந்து கொண்டிருக்கிறேன் :).

      நீக்கு
  2. மிக அழகிய கோவில். சிற்பங்கள், ஓவியங்கள் எல்லாம் அழகு.ஜடாயு மிக அழகாய் இருக்கிறது.
    அழகிய மேற்கூரை . நந்தி அழகு.
    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  3. பல வருடங்களாக நான் ஆசைப்பட்ட இடத்திற்கு உங்கள் பதிவு மூலமாகச் செல்லும் வாய்ப்பு. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாய்ப்புக் கிடைத்தால் சென்று வாருங்கள். பார்க்க வேண்டிய இடம்.

      நன்றி.

      நீக்கு
  4. அழகான படங்கள். எத்தனை எத்தனை இடங்கள் நம் நாட்டில் - அத்தனையும் பார்க்க ஆசை இருந்தாலும் பார்க்க முடிபவை சில மட்டுமே...

    தொடரட்டும் பயணமும் படங்களும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பயண ஆர்வலர் நீங்கள். பெங்களூர் வரும்போது திட்டமிட்டுச் செல்லலாம்.

      நன்றி வெங்கட்.

      நீக்கு
  5. போன பயணத்தில் நண்பர்கள் இந்த இடத்தை பற்றி கூறினார்கள்...ஆனாலும் எனக்கு இந்த இடத்தின் பெயர் மறந்து விட்டது...

    தற்பொழுது இன்னும் பல தகவல்களுடன் , படங்களுடன் அறிந்துக் கொண்டேன்...

    மிகவும் நன்றி அக்கா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி அனு. வாய்ப்புக் கிடைக்கும் போது அவசியம் செல்லுங்கள்.

      நீக்கு
  6. நந்தி,கூரைஓவியங்கள் அழகாக இருக்கின்றன.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin