Thursday, May 31, 2012

கோடை விடுமுறையும் குழந்தைகளும்..

கோடை என்றாலே மின் தடையும் அக்னி நட்சத்திரமும் அனல் வெயிலுமே மனதில் வந்து மருள வைக்க, குழந்தைகளுக்கோ அதுவே மான் குட்டிகளாகத் துள்ளித் திரியக் கிடைத்த சுகமான பருவகாலமாக இருக்கிறது.

பள்ளி நாட்களில் பரபரப்பாக புத்தக மூட்டைகளுடன் கிளம்பிச் சென்று மாலையில் வாடிவதங்கிய மலர்களாகத் திரும்பும் அரும்புகளின் முகங்களில் இந்த இரண்டு மாத விடுமுறைதான் எத்தனை குளிர்ச்சியையும் ஆனந்தத்தையும் கொண்டு வருகின்றன!!!

#1 பூவொன்று கண்டேன்..#2 இரட்டைச் சடை நிலவுகள்


#3 கூல்.../ CoooooooooooooL


தொலைக்காட்சியிலும் கணினியிலும் தொலைந்து போயிடாமல் ஒன்று கூடி ஓடியாடி மகிழும் குழந்தைகளின் சத்தம் குயில்களின் கூவலாக ஒவ்வொரு குடியிருப்பிலிருந்தும் ஒலித்தபடி இருக்கிறது. எந்தப் பக்கம் எப்போது சூரியன் கடையை விரிப்பார் எனத் தெரிந்து வைத்து அதற்கேற்ப கட்டிடங்களுக்கு நடுவே நிழலான இடமாகப் பார்த்து அடிக்கடி ஜாகையை மாற்றியும் கொள்கிறார்கள்.

#4 ஆடுவோமே..


சின்ன சின்னக் குழுக்களாக தென்படும் இவர்கள் சிலநேரங்களில் கட்டிடத்தின் அகன்ற படிக்கட்டுகளில் மொத்தமாக முப்பது நாற்பது பேராகக் கொலுப்பொம்மைகளைப் போல் அமர்ந்து அளவளாவிக் கொண்டிருப்பதைக் காணக் கண் கோடி வேண்டும். வாட்டர் பாட்டில்கள், பந்துகள், மட்டைகள், பொம்மைகள் போன்றனவும் இறைந்து கிடக்கப் போவார் வருவோருக்கு ஒரு ஒற்றையடிப் பாதை விட்டிருப்பார்கள்:)!

நம்ம காலமும் நினைவுக்கு வருகிறது. கூட்டுக் குடும்பமாக இதே போல நாளெல்லாம் ஆட்டம் போட்ட விடுமுறை நாட்கள். கேரம், சைனீஸ் செக்கர்ஸ், தாயம், சதுரங்கம், மோனோபொலி, ட்ரேட், ஹாக்கி, கில்லி(அண்ணன்களுக்கு நிகரா ஆடுவோமே), ஷட்டில், கல்லா மண்ணா, கண்ணாமூச்சி, கலர் கலர் வாட் கலர்.. இன்னும் இருக்கு இப்படி நிறைய:)!
[பெயர் மறந்து விட்டது. பலகை எங்கும் சிறிய ஆணிகளால் அரைவட்டத்தில் அமைந்த குழிகள் பாயின்டுகளுடன் காத்திருக்கும். ஓரத்திலிருக்கும் பாதை வழியே கோலிக் குண்டை பலமாகச் சுண்டி விட்டு குழிகளில் விழ வைக்க வேண்டும். அதிக பாயிண்ட் தரும் குழிகளில் விழ வைப்பதில் இருக்கிறது சாமர்த்தியம். படம்: தந்தை எடுத்தது.]


#5 வல்லவனுக்கு..


கூட்டுக் குடும்ப வழக்கங்கள் மறைந்து விட்ட இந்நாளில் குடியிருப்புகள் ஓரளவு குழந்தைகளுக்கு அந்தச் சூழலை நல்கித் தாமாகவே விட்டுக் கொடுத்தல், பகிருதல் போன்ற நல்ல பழக்கங்களைக் கற்றிட வழிவகுக்கின்றன என்றே சொல்ல வேண்டும்.

இதோ முடிகிறது கோடை விடுமுறை. சர் சர்ரென வந்து நிற்கிற பள்ளி வேன்கள் அள்ளிக் கொண்டு போய் விடும் குழந்தைகளை. இனி ஆளற்ற நீச்சல் குளத்தில் தனியாக நீந்திக் கொண்டிருக்கும் சூரியன். பூங்காவின் பேரமைதி ஏற்படுத்துகிற வெறுமையில் நடுங்கிக் காற்றிடம் கெஞ்சக் கூடும் ஊஞ்சல்கள் கொஞ்சம் ஆட்டிவிடச் சொல்லி. குழந்தைகளின் பெருங்கூச்சலுக்குத் தொடக்கத்தில் பதறிப் படபடத்த புறாக்கள் இப்போது எங்கே அவர்கள் எனக் குழப்பத்துடன் குடியிருப்பைச் சுற்றிச் சுற்றி வரக் கூடும்.

பயணங்கள், விருந்தினர் வருகை, ருசித்து ரசித்துச் சாப்பாடு, நல்ல ஆட்டம், நல்ல தூக்கம் எல்லாம் தந்த நீண்ட விடுமுறைக்கு இன்னும் முழுதாக ஓராண்டு காத்திருக்க வேண்டுமே என்றொரு ஒரு மெல்லிய சோகத்துடனே ஆரம்பமாகும் புதிய கல்வியாண்டு. ஆனாலும் புதிய வகுப்பறை, புதிய புத்தகங்கள், புதிய நண்பர்கள், புதிய ஆசிரியர்கள் எனப் பொங்கும் உற்சாகத்துடன் விரைவில் சூழலுடன் பொருந்திப் போய் விடுவார்கள் குழந்தைகள்! வரும் கல்வி ஆண்டு சிறப்பாக அமைய ஒவ்வொரு குழந்தையையும் வாழ்த்துவோம்!

#6 சாதிக்கப் பிறந்தவள்

***

59 comments:

 1. அணுஅணுவாக ரசித்து, எங்கள் கால நினைவுகளில் தோய்ந்து போய்விட்டேன்..

  அருமை!

  ReplyDelete
 2. இந்தக்காலக்குழந்தைகளுக்கு ஓடி ஆடி விளையாட வாய்ப்பே கிடைப்பதில்லைதான். கம்ப்யூட்டரில் உக்காந்த இடத்தில் கேம் விளையாடுராங்க.என்ன செய்யமுடியும். வீட்டுக்கு வீடு இதே தானே நடக்குது.

  ReplyDelete
 3. மாடிக் குடியிருப்புகள் என்று அலுத்த காலம் போய்க் குழந்தைகள் கூடும்
  விளையாட்டுக் கூடமானது அழகு.குழந்தைகளுக்கு இருக்கும்

  அடாப்லபிடி அதிசயம். வெய்யிலோ மழையோ ஒண்டிக்கொண்டாவது விடுமறையை அனுபவிப்பார்கள்.
  இனிய பதிவு.

  ReplyDelete
 4. கோடை விடுமுறை முடிந்து குழந்தைகளை பள்ளி வேன்கள் அள்ளிச் சென்றதும் ஏற்படும் வெறுமையை அழகாகச் சொன்ன வார்த்தைகள் நன்று. குழந்தைகளுடன் நானும் குழந்தையாகி விட்ட உணர்வு. படங்கள் ஒவ்வென்றும்... சூப்பர்ப்!

  ReplyDelete
 5. பூவொன்று கண்டேன், இரட்டைச் சடை நிலவுகள் இரண்டையும் தாண்டிவர வெகுநேரமானது எனக்கு. உங்கள் எழுத்தைப் படிக்கையில் நான் ஏன் பெரியவளானேன. அந்தப் பருவத்திலேயே இருந்திருக்கலாமேன்னு ஏக்கமே வந்திட்டுது...!

  ReplyDelete
 6. மிக அருமையான பகிர்வு.
  //வரும் கல்வி ஆண்டு சிறப்பாக அமைய ஒவ்வொரு குழந்தையையும் வாழ்த்துவோம்!//

  ReplyDelete
 7. படங்களும் உங்கள் எழுத்தும் அருமை.

  ReplyDelete
 8. ஜாபகம் வருதே ஜாபகம் வருதே ... படங்கள் பழைய நினைவுகளுக்குள் தள்ளி விட்டு வேடிக்கை பார்க்கிறது அருமைங்க .

  ReplyDelete
 9. அருமையான காட்சிப் பதிவுகள். ஒவ்வொன்றும் பேசும் படங்கள்.

  ReplyDelete
 10. பழைய நினைவுகளெல்லாம் கிளம்புது :-))

  ReplyDelete
 11. அருமையான பதிவு உங்களின் மலரும் நினைவுகளுடன்.... மாறிவிட்ட காலசூழ்நிலையில் கூட அப்பார்ட்மன்ட் வாழ்கையில் இப்படிபட்ட‌ ஒரு சௌகரியம் இருப்பது நன்மையே....என்னுடைய பள்ளிபருவத்தில் என்னை வெளியே விளையாட அனுமதிக்கமாட்டார்கள் என் பெற்றோர்கள்..விடுமுறையில் ஒரே சுகம் சொர்கமான என்னுடைய பாட்டி வீடுதான்...மாமா குடும்பம் சித்தி குடும்பம் என விடுமுறையில் அவர்வரர் குழந்தைகளும் பாட்டிவீட்டில் கூடிவிட ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தான் கூடி உண்ண "கூட்டாஞ்சோறு" மறக்கமுடியுமா? வாழ்கையின் பொற்காலங்கள் அவைகள்...

  வாழ்த்துக்கள் இராமலக்ஷ்மி,படங்களும் அருமை!!!

  ReplyDelete
 12. படிக்கட்டுகளில் கொலுபொம்மையென அமர்ந்து இளைப்பாறும் குழந்தைகளையும், ஆங்காங்கே இறைந்துகிடக்கும் விளையாட்டுச் சாமான்களையும், நடுவில் ஒற்றையடிப் பாதையையும் கற்பனை செய்யும்போதே மனம் நிறைகிறது. அழகானப் படங்களுக்கும் நினைவலைப் பகிர்வுகளுக்கும் பாராட்டுகள் ராமலக்ஷ்மி.

  ReplyDelete
 13. வாவ்.... சொல்ல வைக்கும் படங்கள்....

  ரசித்தேன்..

  ReplyDelete
 14. வரும் கல்வி ஆண்டு சிறப்பாக அமைய ஒவ்வொரு குழந்தையையும் வாழ்த்துவோம்!

  மிகவும் அற்புதம். பள்ளி பருவம் ஞாபகமும் , பழைய கிராமத்து விளையாட்டும் என்னை வருடுகிறது......

  ReplyDelete
 15. அதே அக்னி வெய்யிலைக் குழந்தைகள் லட்சியமே செய்வதில்லை! படங்கள் அருமை.
  இதோ முடிகிறது கோடை விடுமுறை என்று ஆரம்பிக்கும் பாரா கவிதையாக இருக்கிறது.
  இந்தக் கோடை விடுமுறையிலும் ஸ்பெஷல் கற்றுக் கொல்லும் வகுப்புகளுக்குச் சென்று கொண்டிருக்கும் குழந்தைகள் உண்டு. விளையாட்டு என்ற விஷயத்தில் அந்தக் காலம் போல் இப்போ வராது! இடமும் கிடையாது. இப்போதெல்லாம் இந்த மாதிரி அபார்ட்மெனட்களில் நீச்சல் குளம், கார் பார்க்கிங் விளையாட்டு மைதானம் உட்பட சகலமும் உள்ளே வைத்து, வாசலில் நிற்கும் செக்கியூரிட்டிக் காரர் எந்தக் குழந்தையும் வெளியே செல்லாமல் பாதுகாப்பதால் குழந்தைகள் வீட்டை விட்டு வெளியில் வந்து விளையாடினாலும் பெற்றோர்கள் கவலை இல்லாமல் இருக்க முடிகிறது!

  ReplyDelete
 16. படங்கள் எல்லாமே அருமை.. ராமலக்‌ஷ்மி

  \\ஒற்றையடிப் பாதை விட்டிருப்பார்கள்//
  :)) அதானே.. என்ன ஒரு உலகம்..

  வல்லவனுக்கு இலையும் ஆயுதம்..சரிதான்..

  ReplyDelete
 17. தொட்டாற் சுருங்கிச் செடியை சுருங்காது பிடுங்குவதும்...வண்ணத்துப்பூச்சிகளை ஓடிப் பிடிப்பதும்...எறும்புகளின் தொடர் யாத்திரையை பின் தொடர்வதும்..மழைகளில் காகிதக் கப்பல் செய்வதும்...இன்றைய குழந்தைகளுக்கு கனவாகிக் கொண்டே போகிறது. அழகான ஆக்கம்.

  ReplyDelete
 18. அருமையான நினைவலைகள். பள்ளிப்பருவ நினைவுகள் மறக்க முடியாதது.

  ReplyDelete
 19. அப்டியே எங்கள் பள்ளி விடுமுறைகளையும் நினைக்க வைத்த பகிர்வுக்கு நன்றிகள் அக்கா :)

  ReplyDelete
 20. நினைவலைகளுடன் நீந்தி வரும் மகிழ்ச்சியான தருணங்கள்.

  ReplyDelete
 21. வரும் கல்வி ஆண்டு சிறப்பாகவும் மகிழ்ச்சியாகவும் அமைய ஒவ்வொரு குழந்தையையும் வாழ்த்துவோம்!

  ReplyDelete
 22. அசத்தலான எழுத்து நடையுடன் பேசாமல் பேசும் படங்கள் ..!

  ReplyDelete
 23. ஹூ.....ம்...னு பெர்ர்ரூமூச்சு விட வச்சிட்டீங்க... எல்லாரையுமே!!

  //வல்லவனுக்கு.//
  இந்தப் ப்டத்தில் அந்தச் சிறுவன் வைத்திருப்பது இலையா? பலாப்பழம் (ஹி.. ஹி..) மாதிரி இருக்கு.. ஆனா இல்லை... என்னவோன்னு முழிச்சுகிட்டிருந்தேன்.. :-)))))

  ReplyDelete
 24. நல்ல கட்டுரை! பேசும் படங்கள்!

  ReplyDelete
 25. துளசி கோபால் said...
  //அணுஅணுவாக ரசித்து, எங்கள் கால நினைவுகளில் தோய்ந்து போய்விட்டேன்..

  அருமை!//

  பலருக்கும் நினைவுகளை மலரச் செய்து விட்டுள்ளது பகிர்வு:)! மிக்க நன்றி.

  ReplyDelete
 26. Lakshmi said...
  //உக்காந்த இடத்தில் கேம் விளையாடுராங்க.//

  அதை இந்த நீண்ட விடுமுறை மாற்றியிருந்தது என்றே சொல்ல வேண்டும், குடியிருப்புகளிலேனும். கருத்துக்கு நன்றி லக்ஷ்மிம்மா.

  ReplyDelete
 27. வல்லிசிம்ஹன் said...
  //வெய்யிலோ மழையோ ஒண்டிக்கொண்டாவது விடுமறையை அனுபவிப்பார்கள்.
  இனிய பதிவு.//

  ஆம்:), நன்றி வல்லிம்மா.

  ReplyDelete
 28. பா.கணேஷ் said...
  //குழந்தைகளுடன் நானும் குழந்தையாகி விட்ட உணர்வு. படங்கள் ஒவ்வென்றும்... சூப்பர்ப்!//

  மிக்க நன்றி கணேஷ்.

  ReplyDelete
 29. Niranjanaa Bala said...
  //உங்கள் எழுத்தைப் படிக்கையில் நான் ஏன் பெரியவளானேன. அந்தப் பருவத்திலேயே இருந்திருக்கலாமேன்னு ஏக்கமே வந்திட்டுது...!//

  அடடா:)! கருத்துக்கு நன்றி நிரஞ்சனா!

  ReplyDelete
 30. Asiya Omar said...
  /மிக அருமையான பகிர்வு./

  நன்றி ஆசியா.

  ReplyDelete
 31. மோகன் குமார் said...
  //படங்களும் உங்கள் எழுத்தும் அருமை.//

  மிக்க நன்றி மோகன் குமார்.

  ReplyDelete
 32. சசிகலா said...
  //படங்கள் பழைய நினைவுகளுக்குள் தள்ளி விட்டு வேடிக்கை பார்க்கிறது அருமைங்க .//

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete
 33. ரிஷபன் said...
  //அருமையான காட்சிப் பதிவுகள். ஒவ்வொன்றும் பேசும் படங்கள்.//

  மிக்க நன்றி.

  ReplyDelete
 34. அமைதிச்சாரல் said...
  //பழைய நினைவுகளெல்லாம் கிளம்புது :-))//

  நன்றி சாந்தி:)!

  ReplyDelete
 35. Nithi Clicks said...
  //அருமையான பதிவு உங்களின் மலரும் நினைவுகளுடன்....

  வாழ்த்துக்கள் இராமலக்ஷ்மி,படங்களும் அருமை!!!//

  நன்றி நித்தி பகிர்ந்து கொண்ட இனிய நினைவுகளுக்கும்.

  ReplyDelete
 36. கீதமஞ்சரி said...
  //அழகானப் படங்களுக்கும் நினைவலைப் பகிர்வுகளுக்கும் பாராட்டுகள் ராமலக்ஷ்மி.//

  நன்றி கீதமஞ்சரி.

  ReplyDelete
 37. வெங்கட் நாகராஜ் said...
  //வாவ்.... சொல்ல வைக்கும் படங்கள்....

  ரசித்தேன்..//

  நன்றி வெங்கட்.

  ReplyDelete
 38. VijiParthiban said...
  //மிகவும் அற்புதம். பள்ளி பருவம் ஞாபகமும் , பழைய கிராமத்து விளையாட்டும் என்னை வருடுகிறது......//

  நன்றி விஜி.

  ReplyDelete
 39. ஸ்ரீராம். said...
  //அதே அக்னி வெய்யிலைக் குழந்தைகள் லட்சியமே செய்வதில்லை! படங்கள் அருமை.இதோ முடிகிறது கோடை விடுமுறை என்று ஆரம்பிக்கும் பாரா கவிதையாக இருக்கிறது.//

  நன்றி ஸ்ரீராம். இங்கேயும் கோடை வகுப்பு விளம்பரங்கள் பல கண்டேன். எத்தனை பேர் சேர்த்திருந்தார்கள் தெரியாது. ஆனாலும் அதையும் தாண்டி விடுமுறையைக் குழந்தைகள் கொண்டாடிய விதம் அழகு:)!

  குடியிருப்பில் ஏன் சாத்தியம் என நீங்கள் சொல்லியிருப்பன சரியே.

  ReplyDelete
 40. முத்துலெட்சுமி/muthuletchumi said...
  \\ஒற்றையடிப் பாதை விட்டிருப்பார்கள்//
  :)) அதானே.. என்ன ஒரு உலகம்..
  //

  நன்றி முத்துலெட்சுமி:)!

  ReplyDelete
 41. தீபிகா(Theepika) said...
  //...மழைகளில் காகிதக் கப்பல் செய்வதும்...இன்றைய குழந்தைகளுக்கு கனவாகிக் கொண்டே போகிறது. அழகான ஆக்கம்.//

  அழகாகப் பகிர்ந்துள்ளீர்கள் நினைவுகளை. நன்றி தீபிகா, முதல் வருகைக்கும்.

  ReplyDelete
 42. geethasmbsvm6 said...
  //அருமையான நினைவலைகள். பள்ளிப்பருவ நினைவுகள் மறக்க முடியாதது.//

  ஆம் எவருக்குமே. மிக்க நன்றி.

  ReplyDelete
 43. சுசி said...
  //அப்டியே எங்கள் பள்ளி விடுமுறைகளையும் நினைக்க வைத்த பகிர்வுக்கு நன்றிகள் அக்கா :)//

  நன்றி சுசி:)!

  ReplyDelete
 44. குமரி எஸ். நீலகண்டன் said...
  //நினைவலைகளுடன் நீந்தி வரும் மகிழ்ச்சியான தருணங்கள்.//

  நலமா? நீண்ட நாட்களுக்குப் பிறகு பதிவுகள் பக்கம் வருகிறீர்கள். மகிழ்ச்சி. கருத்துக்கு நன்றி.

  ReplyDelete
 45. அமைதி அப்பா said...
  //வரும் கல்வி ஆண்டு சிறப்பாகவும் மகிழ்ச்சியாகவும் அமைய ஒவ்வொரு குழந்தையையும் வாழ்த்துவோம்!//

  நன்றி அமைதி அப்பா.

  ReplyDelete
 46. வரலாற்று சுவடுகள் said...
  //அசத்தலான எழுத்து நடையுடன் பேசாமல் பேசும் படங்கள் ..!/

  மிக்க நன்றி.

  ReplyDelete
 47. ஹுஸைனம்மா said...
  // அந்தச் சிறுவன் வைத்திருப்பது இலையா? //

  இலையேதான்:)! நன்றி ஹுஸைனம்மா.

  ReplyDelete
 48. கே. பி. ஜனா... said...
  //நல்ல கட்டுரை! பேசும் படங்கள்!//

  மிக்க நன்றி.

  ReplyDelete
 49. "இனி ஆளற்ற நீச்சல் குளத்தில் தனியாக நீந்திக் கொண்டிருக்கும் சூரியன்."

  அருமையான பதிவு!

  ReplyDelete
 50. நன்றி பிரேம்குமார்:)!

  ReplyDelete
 51. குழந்தைகளின் குதூகல விடுமுறையில் எங்கள் நினைவலைகளும் தொடர்ந்து சிறப்பிக்கின்றன.

  அருமையான படங்களும்.

  ReplyDelete
 52. மிக்க நன்றி மாதேவி.

  ReplyDelete
 53. அருமையாக விளக்கியிருக்கிரிர்கள்

  ReplyDelete
 54. @ அன்பை தேடி,,அன்பு,

  முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete
 55. I remember the name of that board game.is LTP ......am I correct ramalashmi

  ReplyDelete
 56. அட ஆமாம்:)! அதேதான். நல்ல நினைவாற்றல் உங்களுக்கு!

  இப்போ பெயரோடு தேடியதில் கிடைத்த படம்!

  ReplyDelete
 57. புதிய வகுப்பறை, புதிய புத்தகங்கள், புதிய நண்பர்கள், புதிய ஆசிரியர்கள் எனப் பொங்கும் உற்சாகத்துடன் விரைவில் சூழலுடன் பொருந்திப் போய் விடுவார்கள் குழந்தைகள்! வரும் கல்வி ஆண்டு சிறப்பாக அமைய ஒவ்வொரு குழந்தையையும் வாழ்த்துவோம்!//
  கண்டிப்பாய் வாழ்த்துவோம். வாழ்த்துக்கள்.

  அருமையான மலரும் நினைவுகளுடன்
  குழந்தைகளின் கோடை விடுமுறை குதுகலங்களை விவரித்து எங்கள் கோடை விடுமுறை குதுகலத்தையும் நினைவு படுத்தி விட்டீர்கள் ராமலக்ஷ்மி..

  ReplyDelete
 58. @ கோமதி அரசு,

  நலமா:)? சிறிய இடைவெளிக்குப் பிறகு அனைத்து பதிவுகளையும் வாசித்து தந்திருக்கும் கருத்துகளுக்கு மிக்க நன்றி.

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin