செவ்வாய், 14 ஜனவரி, 2020

க.அம்சப்ரியாவின் ‘கல்வி 100 சிந்தனைகள்' - மதிப்புரை.. ‘கல்கி’ பொங்கல் சிறப்பிதழில்..


கவிஞரும் தமிழ் ஆசிரியருமான க. அம்சப்ரியா அவர்களின் நூல் குறித்த மதிப்புரை இந்த வாரக் கல்கி பொங்கல் சிறப்பிதழில்..


நம்பிக்கை விதைகள்

மனிதர்கள் மனிதநேயத்துடன் மனிதர்களாக வாழ்வதற்கும், ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் அமைதிக்கும், ஆண் பெண் சமத்துவம் மற்றும் மதங்களையும் சாதிகளையும் தாண்டிய சகோதரத்துவம் நிலவவும் கல்வி எத்துணை அவசியமானதென்பதை அறிவோம். ஆசிரியர்களின் அக்கறை, பெற்றோரின் பொறுப்பு, மாணவர்களின் மனநிலை இவை மூன்றும் சரியான கோணத்தில் அணுகப்பட்டால் மட்டுமே கல்விக் கூடங்கள் சிறந்த குடிமகன்களை நாட்டுக்கு அளிக்க முடியும்.

தமிழாசிரியரும் கவிஞருமான க. அம்சப்ரியா, அத்தகையக் கல்வி எத்தகு அம்சங்களைக் கொண்டிருக்க வேண்டும் என்பதை பெற்றோர், மாணவர், ஆசிரியர், புத்தகம், கல்வி, வகுப்பறை மற்றும் சமுதாயம் ஆகிய தலைப்புகளின் கீழ் சிந்தனை விதைகளாகத் தூவியிருக்கிறார், நிச்சயம் அவை பெரும் விருட்சங்களாக உயர்ந்து பரிமளிக்கும் என்கிற நம்பிக்கையுடன். 19 வருட தனது ஆசிரியப் பணியில் அவர் கண்டு உணர்ந்த அனுபவங்களின் வெளிப்பாடாக இச்சிந்தனைகள் அமைந்திருப்பது கூடுதல் சிறப்பு.

பெரும்பாலும் பெற்றோர் இருவருமே பணிக்குச் செல்லும் இந்தக் காலக்கட்டத்தில் குழந்தைகளுக்காக நேரத்தை ஒதுக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் அதை அர்த்தமுள்ளதாகச் செலவிட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்துகிறார். அறிவுரைகளை விடவும் கனிவான பேச்சினால் மட்டுமே குழந்தைகளை நெருங்க முடியும் என்பதை மனதில் பதிய வைக்கிறார். 'குழந்தைகளின் பிடிவாதத்திற்கு அடிபணிகிற பெற்றோர்களால் ஆரோக்கியமான சூழலில் குழந்தைகளை வளர்ப்பது கடினம்' என்பதைச் சுட்டிக் காட்டுகிறார்.

மாணவர்களுக்கு மற்றுமொரு பெற்றோராய் இருந்து அக்கறையுடனும் பொறுப்புடனும் வழிநடத்தும் 'ஆசிரியரைப் புறக்கணிக்கும் சமுதாயம் தனது தலைமுறையை மட்டுமல்ல. அடுத்தடுத்த தலைமுறையையும் இழப்பிற்குள்ளாக்குகிறது.' என எச்சரிக்கிறார். திகைக்க வைக்கும் அளவில் மாணவர்கள் மத்தியிலும் குற்றங்கள் மலிந்து வரும் இந்நாளில் ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடன் செயலாற்றினால் மட்டுமே மாணவர்கள் மனதில் இடம் பெற்று அவர்களை வழிநடத்துவதில் வெற்றி பெற முடியும் எனக் காட்டுகிறார்: 'எழுத்துகளாகவும் கருத்துகளாகவும் மாணவர் மனதில் நுழைபவரே ஆசிரியர்', 'ஒரு மாணவரை நல்வழிப்படுத்த ஆசிரியரின் கருணை மிக்க ஒரு சொல்', 'எத்தனை மாணவர்களைச் சமுதாயத்திற்கான பொறுப்புள்ளவர்களாக மாற்றினோம் என்பது ஆசிரியரின் வாழ்க்கை'! 

அதே நேரம் மாணவர்கள் ஆசிரியரை தம் வாழ்வின் வழிகாட்டியாக நம்பத் துவங்கினாலே வாழ்க்கை ஒளிமயமாகும் எனப் புரிய வைக்கிறார். புத்தகங்களை நேசிக்க, புத்தகங்கள் வழியே பயணித்துப் புதிய உலகைக் காணக் கற்றுத் தருகிறார். 

மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண்களால் பள்ளிக்குச் சேரும் புகழைக் குறிவைத்து இயங்கும் கல்வியாளர்களைச் சிந்திக்க வைக்கிறார்: 'கற்ற கல்வியைச் சோதிப்பதென்பது வினாத்தாள்களால் தீர்மானிக்கப்படுவதல்ல'.  நாடு முழுவதும் புதிய கல்விக் கொள்கை சரியா என விவாதித்து வரும் நிலையில் அதற்கான விளக்கங்களைத் தெளிவாக முன் வைத்திருக்கிறார்: 'கற்ற கல்வியைச் சோதிப்பதென்பது வினாத்தாள்களால் தீர்மானிக்கப்படுவதில்ல', 'மனிதர்களைப் பக்குவப்படுத்துவதே கல்வி'!

சிறந்த பெற்றோரை, மாணவரை, ஆசிரியரை அடையாளம் காட்டுவதோடு அவர்கள் ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை கொள்ள வைக்கிறார் ஆசிரியர். ஒரு கையேட்டின் வடிவில் அனைத்துத் தரப்பினரையும் சிந்திக்க வைக்கும் தொகுப்பாகச் சுடர் விடுகிறது ‘கல்வி 100 சிந்தனைகள்’.  ஒவ்வொரு சிந்தனைக்கும் மாணவச் செல்வங்கள் வரைந்த நூறு ஓவியங்களைப் பயன்படுத்தியிருப்பது பாராட்டுக்குரியது.
*

[முழுமையான கட்டுரையைப் பகிர்ந்து உள்ளேன்.]

கல்வி 100 சிந்தனைகள் - க. அம்சப்ரியா;
பக்கங்கள்: 120; விலை: 110/- ; வெளியீடு மற்றும் கிடைக்குமிடம்: அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம், பெரம்பூர், சென்னை - 11; தொலைபேசி எண்: 94446 40986

நடைபெற்று வரும் சென்னை புத்தகக் கண்காட்சியில் அம்ருதா பதிப்பக அரங்கில் இந்நூலை வாங்கிப் பயனுறலாம்.


நன்றி கல்கி!
***

10 கருத்துகள்:

 1. ஆசிரியர் கருணையும் அன்பும் உடையவராக இருக்க வேண்டும். மாணவர்கள் ஆசிரியரை தங்களை நலவழி படுத்துபவர் ஆசிரியர் என்று நம்ப வேண்டும் என்று சொன்னது மிகவும் அருமை.
  அப்படி இருந்தால்தான் நல்லது.

  அனைத்து தரப்பினரையும் சிந்திக்க வைத்து இருக்கும் நூல் ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.
  அழகாய் விமர்சனம் செய்த உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 2. சிறப்பானதொரு அறிமுகம்.

  கல்கியில் வெளியீடு - வாழ்த்துகள்... நூல் ஆசிரியருக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

  பதிலளிநீக்கு
 3. சிறப்பான மதிப்புரை. இன்றைய சூழலில் மிகவும் அவசியமான நூல்தான். மாணவர்களின் ஓவியங்களும் இடம்பெற்றிருப்பது சிறப்பு. நூலாசிரியருக்கு வாழ்த்துகள். கல்கியில் வெளியானதற்கு பாராட்டுகள் ராமலக்ஷ்மி.

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin