திங்கள், 8 மே, 2023

தேரி - ராஜேஷ் வைரபாண்டியனின் நாவல் - ஒரு பார்வை - கீற்று மின்னிதழில்..

தேரி. ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமெனில், அற்புதம்! ‘ஒவ்வொரு நாளும் ஒருசில அத்தியாயங்கள்’ என முடிவெடுத்து ஆரம்பித்தேன். ஆயின் ஆவல் மிக, தொடர்ச்சியாக மூன்று தினங்களில் வாசித்து முடித்தேன்.  

காட்சிகளாக விரியும் கிராமத்து மக்களின் எளிய வாழ்க்கை,  சீரிய எழுத்து நடை, ரசிக்க வைக்கும் வட்டார வழக்கு, ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் கண் முன் கொண்டு வந்த சிறப்பு,  நுட்பமானக் கதைப் பின்னல், வாசகரின் ஆர்வத்தைத் தூண்டியபடி சென்று உரிய நேரத்தில் ஒவ்வொன்றாகக் கட்டவிழ்க்கப்பட்ட முடிச்சுகள்!

காதல், நட்பு, பாசம், துரோகம் ஆகியவற்றால் கதையின் போக்கில் கடத்தப்படும் உணர்வுகள் பல இடங்களில் கலங்கவும் நெகிழவும் வைக்கின்றன. அனைத்திற்கும் மேலாக அன்றிலிருந்து இன்றுவரை உலகெங்கிலுமாக இருக்கும் சாதி, இன வெறியை, புலம்பெயர்ந்தவர்களின் துயர்மிகு வாழ்க்கைச் சித்திரத்தை, அவர்களுக்கு நேரும் அவமதிப்பை மனதை அதிர வைக்கும் சம்பவங்களுடன் உரைத்த விதம் நாவலை உயர்த்திப் பிடித்துள்ளது.

ராஜேஷ் வைரபாண்டியனின் முதல் நாவல். காலத்துக்கும் பேசப்படுவதாக அமைய ஆசிரியருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!

தூத்துகுடி மாவட்டத்தின் சாயர்புரம் அருகே இருக்கும் தேரி எனும் செம்மண் பூமியிலும் அதைச் சுற்றியுள்ள கரிசல் மண் பகுதியிலும் வாழ்ந்த மக்களைச் சுற்றி இழைக்கப்பட்ட நாவல், சுமார் முப்பது மற்றும் ஐம்பது ஆண்டுகள் பின் நோக்கி நம்மை அழைத்துச் செல்கிறது. 

செல்லக்குட்டியை எந்தக் கட்டத்திலும் விட்டுக் கொடுக்காத அசரியா, பாதாளமுனி; செவ்வந்தியை உயிராக நேசித்த பேச்சி ஆகியோர் தூய நட்பின் அடையாளமாகத் துலங்குகிறார்கள். பதினைந்தாவது அத்தியாயத்தின் முடிவில் தங்கராணியின் அம்மாவை செவ்வந்தி என ஆசிரியர் குறிப்பிடுகையில்தான் அதுகாறும் இருதலைமுறைக் கதைகள் மாற்றி மாற்றி சொல்லப்பட்டிருப்பது புரிய வர இன்னும் நிமிர்ந்து உட்காருகிறோம். 

எத்தனை ஆண்டுகள் கடந்து விட்டிருந்தாலும் இதில் சொல்லப்பட்டிருக்கும் கசப்பான உண்மைகளை இப்போதும் சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறோம். படித்து முடித்துத் தகுதிக்கேற்ற வேலைக்குச் சென்றாலும் கூட அங்கும் குலத்தொழிலைக் குறிப்பிட்டு அவமரியாதை செய்வது, வந்தேறிகள் என வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் மட்டம் தட்டி மகிழ்வது, தம் வாசலில் ஒருபடி மேலேறி விட்டதற்கேக் கொதித்துப் போவது, கூடி மகிழ்வதில் குற்றமில்லை ஆனால் சாதி குறைந்தவள் தன் செருப்பை அணிந்து பார்க்கக் கூடாதென வெறி கொண்டு பாய்வது போன்றவை சமூகம் பெற்ற நீங்காத சாபங்கள். 

சாதியைக் காரணம் காட்டி தன் குடும்பம் தன்னை நேசித்தவனோடு சேர விடாமல் செய்த வலியை முழுதாக அனுபவித்து, ஆறாத ரணத்துடன் வாழும் செவ்வந்தி வளர்த்த தங்கவேலுவுக்கு ‘ஏன் இத்தனை சாதி வெறி’ என நமக்குள் எழும் கேள்விக்கான பதிலை செவ்வந்தியே தன்னைத் தானே கேட்டுக் கொண்டு நமக்கும் அறியத் தருகிறாள். தவறென்றே உணர முடியாதபடி அடுத்தடுத்தத் தலைமுறைக்குத் தம் கேடுகெட்ட கொள்கைகளை விதைத்தபடி செல்கிறது சமூகம். 

தங்கராணியைத் தங்கையென்றும் பாராமல் தங்கவேலு கிணற்றில் தள்ளிக் கொல்ல முயன்றது உட்பட சாதி ஆணவக் கொலைகளுக்கு மெளன சாட்சியாக இன்னுமும் கூட சித்திரப்பூ புதைக்கப்பட்ட செம்மண் பரப்பில் அந்த ஒற்றைப் பனைமரம் இருக்கக் கூடும். 

சித்திரப்பூவின் மரணத்தை மறைக்க அவள் மேல் அவதூறைப் பரப்பச் செய்து பச்சைமுத்துவின் சாவுக்கும் காரணமாகிவிட்ட தொம்மை அண்ணாச்சியை தெய்வம் நின்று தண்டித்தது ஆறுதல். சித்திரப்பூவை பச்சைமுத்து எத்தனை பாசத்துடன் வளர்த்தார் என்பதை நிலாவைப் பார்த்தபடி நெஞ்சுருகிப் பூந்துளசி பாடுகையில் நமக்கும் கண்ணில் நீர் துளிர்க்கிறது. பேச்சி மட்டுமல்ல பூந்துளசி மேல் பரிவு காட்டும் செந்தூர்கனியும் மனதில் நிற்கிறாள்.

ளம் நிறைந்த பூமியான தேரியின் மடியிலிருந்து லாரிலாரியாக உறிஞ்சப்பட்ட நீர், அள்ளப்பட்ட மணல் போன்ற சமூகக் குற்றங்களையும் சுட்டிக் காட்டிச் செல்கிறார் ஆசிரியர். வாகைகுளம் விமான நிலையத்திற்காகத் தோட்டங்களையும் நிலங்களையும் அரசாங்கம் கையகப்படுத்தும் காலக் கட்டத்தில் வந்து முடிகிறது நாவல். 

ஊரில் மொத்தமே இரண்டு வீட்டில் மட்டும் கலர் டிவி, அதில் தாராள மனம் கொண்ட ராதா கிருஷ்ணன் அண்ணாச்சி வீட்டில் அசரியா, பாதாளமுனி உட்பட ஒன்று கூடும் கிரிக்கெட் பிரியர்கள் பழைய நினைவுகளை மலரச் செய்கிறார்கள். தனலெட்சுமி டாக்கீஸை நிஜத்தில் அறிந்த அந்த ஊர் மக்களுக்கும் மலரக் கூடும் பல நினைவுகள். தேரி வாழ் உயிரினங்கள் யாவும் நாவலில் கோட்டுச் சித்திரங்களாக கதையோடு பயணிக்கின்றன.

ஆசையாக வளர்க்கப்படும் ஆடுகள் திருட்டுப் போவது, வைத்தியம் பார்க்கும் பொட்டம்மை, அவளுக்கு பின்னாலிருந்த மர்மங்கள் எனக் கிராமத்துச் சூழலின் வெவ்வேறு நிகழ்வுகளை, சிக்கல்களை மூலக் கதையோடு நேர்த்தியாக  இணைத்து எடுத்துச் சென்றுள்ளார் ஆசிரியர். எவரோடும் பேசாத பொட்டம்மை  கன்னிப் பெண்ணான செவ்வந்தியின் நாடியைப் பிடித்துப் பார்த்துவிட்டு வைக்கோல் பிரியில் பொம்மையைச் செய்து அவள் கைகளில் திணித்து அவள் கர்ப்பமாகியிருப்பதை உணர்த்திச் செல்வது போன்ற இடங்களில் ஆசிரியரின் நுணுக்கமான விவரணை வியப்பில் புருவங்களை உயர வைக்கிறது.  தேரித் தோட்டத்தில் வெட்சியும் செல்லக்குட்டியும் இயற்கையோடு நடத்தும் குடித்தனம் கவித்துவமானது.

கைப்பிள்ளை என்றும் பாராமல் யார் என நினைத்துத் தூக்கி எறிந்தாரோ அந்தப் பிள்ளையே  கண்ணாடிக்காரரின் வீட்டு வாரிசாக வளர நேர்ந்தது விதி செய்த திருத்தமான விளையாட்டு. தன் பிறப்பு ரகசியம் வெளிவந்த பின்னும் தன்னை வளர்த்த ஆச்சியை விட்டுச் செல்லவில்லை செல்லக்குட்டி. வெட்சியின் அப்பழுக்கற்ற அன்பில் கரைந்தாலும் தங்கராணியை மறக்க முடியாமல் தவித்துப் பின் வெட்சியின் ஆலோசனையில் நெகிழ்வதும் இருவருமாக அதைச் செயல் படுத்துவதும் மனிதத்தின் உச்சம், வெட்சியுடைய தாய்மை உள்ளத்தின் விசுவரூபம். 

தான் பெற்ற மகவை விட ஒருபடி மேலாக தங்கராணியையும், அணிற்பிள்ளையையும் நேசிக்கும் வெட்சியைத் தன் தாயாக,  ஒரு தெய்வமாக செல்லக்குட்டி மட்டுமல்ல ஆசிரியரும் பார்த்திருப்பது இந்த நாவலை வெட்சி கதாபாத்திரத்திற்கு சமர்ப்பித்திருப்பதில் புரிய வரும்.

இறுதியில், ஆச்சியின் வீட்டையும் வெட்சியின் நகைகளையும் விற்று வாங்கிய வாழ்நாள் கனவாகிய தோட்டம் முத்துசாமி அண்ணாச்சியின் வஞ்சனையால் கைவிட்டுப் போகும்போது வேதனையில் நொந்து போகும் செல்லக்குட்டிக்கு வெட்சி கூறும் ஆறுதலானது, ‘எனக்கு மட்டும் ஏனிப்படி’ எனச் சோதனைக் காலங்களில் மருகி நிற்கும் மானுடர் அனைவருக்குமானது. 

*

தேரி (நாவல்)
ஆசிரியர்: ராஜேஷ் வைரபாண்டியன் (2018_ஆம் ஆண்டு வரையில் நிலாரசிகன் என்ற பெயரில் கவிதை, கதைகள் எழுதி வந்தவர்.) 
முதல் பதிப்பு: மார்ச் 2023
வெளியீடு: உதிரிகள் பதிப்பகம் [ uthirigal@gmail.com ; +91 - 8508833000 ]
விலை: ரூ.440/- ; பக்கங்கள்: 291
நாவல் வேண்டுவோர் www.rajeshvairapandian.com _ல் வாங்கிக் கொள்ளலாம்.
*

2 கருத்துகள்:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin