வியாழன், 27 ஆகஸ்ட், 2026

இல்லாத எல்லாமும் - பரிசு பெற்ற கவிதை - பண்புடன் முதலாம் ஆண்டுநிறைவுப் போட்டி

 

இல்லாத எல்லாமும் 

வானம் ஒப்புக் கொள்வதற்கு முன்னரே
அவளது இரவு தொடங்கி விடுகிறது

மங்கிய ஒளியில்
பழைய புடவைகளை மடிப்பது போல
பொழுதுகளை மடிமேல் விரித்து நீவுகிறாள்
நைந்து போன அதன் இழைகளில்
தூக்கியெறிய முடியாத காலம்

முடிவற்ற எண்ணங்களால் நிரம்பி வழியும் 
அவளது மனதை அறிந்த தூக்கம் 
ஒருபோதும் உள்ளே நுழைவதில்லை
ஆனால் அழைக்கப்படாமல் 
உரிமையுடன் நினைவுகள் வருகின்றன
அவளருகில் அமர்ந்து
அவளறிந்த குரல்களில் பேசுகின்றன
அடர்ந்த நிசப்தத்தில்
தமக்குள் சிரிக்கின்றன

நினைவு கூர்கிறாள் 
எப்போதோ பற்றிய கரங்களின் ஸ்பரிசத்தை
எங்கும் ஒலித்த பெயர்களை
பல திசைகளில் சுவாசித்த இல்லத்தை

முன்னோக்கி நகராமல்
அவளைச் சுற்றியே சுழல்கிறது கடிகாரம்
நேரத்தை அல்ல 
நேரத்தில் எஞ்சியதை அளக்கிறது

இருளே சோர்ந்து போன நிசியில்
கண்கள் அகலத் திறந்திருக்க
அசைவின்றிப் படுத்துக் கிடக்கிறாள்

எண்ணுகிறாள்
சன்னலுக்கு வெளியே மின்னிய 
நட்சத்திரங்களை அல்ல
இல்லாதவர்களை

அவளருகிலேயே 
கனிவோடு காவலிருக்கிறது
தன்னை வெளிப்படுத்தி 
அவளைக் காயப்படுத்த விரும்பாத 
நிதர்சனம்...

தனிமை என்பது 
மனிதர்கள் இல்லாதிருப்பது அல்ல
இனி இல்லாத எல்லாமும் 
அங்கே நிறைந்திருப்பது
*
நன்றி பண்புடன்!
முதலாம் ஆண்டு நிறைவுப் போட்டியில் வெற்றி பெற்ற அனைத்துப் படைப்புகளும் ஒரே சிறப்பிதழாக வெளியாகியுள்ளது. அவற்றை ஒரு சேர வாசிக்கலாம்... "இங்கே".
*
தொடர்புடைய முந்தைய பதிவு:
*

5 கருத்துகள்:

  1. இருந்தது இல்லாமல் போகும்போது வரும் தாக்கம் அழகாய் வெளிப்படுத்தி இருக்கிறீர்கள்.  அந்த சோகம் மனதில் பதிகிறது.

    பதிலளிநீக்கு
  2. முதலாம் ஆண்டு நிறைவுப் போட்டியில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும்.

    பதிலளிநீக்கு
  3. கவிதையின் ஒவ்வொரு வரியும்,காட்சியாக விரிந்து, புதிய உலகைக் காட்டுகிறது.. பொழுதுகளை மடிக்கும் அழகு கவித்துவ அழகியல்

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin