#1
கடந்த 3 வருடங்களாக, சரியாக ஏப்ரல் மாத இறுதியில் எங்கள் குடியிருப்புக்கு வந்து விடுகின்றன ஒரு ஜோடி சாம்பல் இருவாச்சிப் பறவைகள். இங்கிருக்கும் அடர்ந்த மரங்கள் ஏதேனும் ஒன்றில் கூடு கட்டிக் குஞ்சு பொரித்து அது சற்றே வளரும் வரை இருந்து விட்டு ஜூன் மாத இறுதியில் பறந்து விடும் பெரிய பறவைகள். குஞ்சு அங்குமிங்குமாகப் பெற்றோரைத் தேடி ஓரிரு வாரங்கள் பெருங்குரல் எழுப்பிச் சுற்றியபடி இருந்து விட்டு, பின்னர் காணாமல் போய் விடுவது வழக்கம்.
#2
#3
பின் அடுத்தடுத்த நாட்களில் குஞ்சும் காணக் கிடைத்தது.
எப்போதும் போலவே, தனித்து வாழப் பழகட்டுமெனக் குஞ்சினை விட்டு விட்டுப் பெற்றோர் எங்கேனும் சென்று விட இது மட்டும் குடியிருப்பிலுள்ள மரங்களில்தான் நாளின் பெரும்பாலான பொழுதைக் கழித்தபடி உள்ளது.
#6
தோட்டத்தின் சுற்றுச் சுவரையொட்டிய யூகலிப்டஸ் மரத்தில் குடும்பமாக அவை அமர்ந்திருக்கும் காட்சி.
#7
இவை மற்ற பறவைகளைப் போல மனிதர்களைக் கண்டால் மருளவோ வெருண்டு பறப்பதோ இல்லை. படம் எடுக்க வேண்டுமா, எவ்வளவு வேண்டுமோ எடுத்துக் கொள் என சாவகாசமாக அமர்ந்திருக்கும். மனம் இருக்கையில் போனால் போகிறதென அப்படியும் இப்படியுமாய் திரும்பி விதம் விதமாய் போஸ் கொடுக்கவும் செய்யும்.
#9
ஆண் பறவைக்குக் கருவிழியைச் சுற்றிய வளையம் சிகப்பாக இருக்கும். மூக்கின் மேல் உள்ள அடுக்கும் சற்று புடைப்பாக இருப்பதைக் காணலாம்.
#10
சென்ற வருடம் தனித்து விடப்பட்டக் குஞ்சு எப்போதும் பெரிதாகத் தொடர்ந்து அலறியபடியே இருந்தது. ஆனால் இப்போது பிறந்த இந்தக் குஞ்சு சாதுவாகவே உள்ளது. எப்போதேனும் வாய் விட்டுப் பெற்றோரை அழைக்கும். அவையும் குரல் கேட்டால் வந்து விடும்.
#11
கோடை மழை:
வழக்கமாக பெங்களூரில் மே 15_க்கு மேல்தான் மழை ஆரம்பிக்கும். ஆனால் இந்த வருடமோ மே முதல் வாரமே மழை ஆரம்பித்து விட்டது. முதலில் மாலை நேரங்களில் சிறிது நேரமே பெய்தாலும் பேய்க்காற்றுடன் ஒரு ஆட்டம் ஆடி ஓய்ந்தபடி இருந்தது மழை. பின்னர் காலை, மதியம் எனக் கணக்கில்லாமல் திடீர் திடீரெனப் பொழிந்தது. மழை ஆரம்பித்த இரண்டாம் தினமே அப்படியான 10 நிமிடப் புயல் காற்றில் வீட்டுத் தோட்டத்தின் பறவைகள் சரணாலயமாக இருந்த முருங்கை மரத்தின் பிரதானக் கிளை முறிந்து விழுந்தது.
#12
இரண்டு மாடி உயரத்துக்கு வளர்ந்திருந்த மரத்தின் மேல் கிளைகளில் கம்பு வைத்தும் பறிக்க முடியாதிருந்த காய்களெல்லாம் மரம் சரிந்ததும் சேகரிக்கப்பட்டு அக்கம்பக்கத்தினருக்கு விநியோகிக்கப்பட்டது.
#13
முருங்கை மரம் மொட்டு விட்டுப் பூத்துப் பின் காய்களாகும் வரையிலான பருவத்தில் ஏராளமான தேன் சிட்டுக்கள், கதிர்க்குருவிகள், மைனாக்கள், பூச்சிப் பிடிப்பான்கள், இரட்டைவால் குருவிகள், பச்சைக் கிளிகள் காலைப் பொழுதினை ரம்மியமாக்கியபடி இருந்தன. மரம் முறிந்ததில் வருத்தம் மேலிட்டது. சட்டென அதிகாலையில் தோட்டம் மிகவும் அமைதியாகி விட்டது போன்றொரு உணர்வு.
மீதி இருக்கும் இரண்டு கிளைகள் அதிக இலைகளற்றவை. தோட்டக்காரர் அதையும் அகற்றி விட்டால்தான் மீண்டும் மரம் முன் போல் நன்கு தளைத்து வரும் என்றார். உண்மைதான். கடந்த ஆறு வருடங்களில் மரம் நன்கு காய்த்து முடித்ததும் இரண்டு முறைகள் அவ்வாறாக நிலத்திலிருந்து இரண்டடி உயரம் விட்டு வெட்டியதுண்டு. பின் துளிர்த்து தளைத்து பெரிதாக வளர ஏழெட்டு மாதங்களாவது ஆகும். இந்த முறையும் வெட்டும் பருவம் வந்தும் பறவைகளின் அடைக்கலமாக இருக்கும் மரத்தை வெட்டுவானேன் எனத் தள்ளிப் போட்டு வந்தேன். இயற்கை விடவில்லை. தானாக நடத்திக் கொண்டது.
தற்போது தினமும் விடிந்தும் விடியாத அதிகாலைப் பொழுதில் தனியாக வந்து அமரும் இந்த இருவாச்சி குஞ்சுக்காக மீதக் கிளைகளை விட்டாமல் விட்டுள்ளேன். இது சற்று வளர்ந்து குடியிருப்பை விட்டுக் கிளம்பிச் செல்லட்டும் எனக் காத்திருக்கிறேன்:).
#14
என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம்: 138
பறவை பார்ப்போம்.. - பாகம்: 85
***
பறவைகள், இயற்கை, மழை என பதிவு வழி பகிர்ந்த விஷயங்கள் மற்றும் படங்கள் நன்று. தனியாக விட்டுச் செல்லும் இருவாச்சி பறவைகள்..... :(
பதிலளிநீக்குஇந்த வருடம் பெற்றோர் அவ்வப்போது வந்து பார்ப்பது ஆறுதல். சென்ற வருடம் குஞ்சு மிகச் சிறிதாக இருக்கையில் விட்டுச் சென்று விட்டன. அது பரிதாபமாகக் கதறியபடி இருந்தது 2,3 வாரங்களுக்கு.
நீக்குநன்றி வெங்கட்.
இருவாச்சி பறவை பற்றிய விவரங்கள் சுவாரஸ்யம். படங்கள் அழகு. ஒரு வெப்ப மரம் வைத்தால் அரா மரம் வைத்தால் மரம் படர்ந்து அடர்ந்து ஏராள கிளைகளுடன் இருக்குமே... நிழலும் அபாரமாகக் கிடைக்கும். ஆனால் அந்த நிழலே மற்ற செடி, மரங்களை வளர விடாமல் செய்யுமோ...!
பதிலளிநீக்குவேப்ப மரம், அரச மரம்!!! :))
நீக்குவேப்ப, அரச மரங்களென்றே வாசித்தேன்:). இந்த தோட்ட அமைப்புக்கு அவை சரி வராது. நடுவில் புல்வெளியில் வைக்க இயலாது. ஓரங்களில் வைத்தால் அடுத்த வீட்டுத் தோட்டங்களில் அவை கிளை பரப்புவதை அவர்கள் விரும்புவார்களா தெரியாது.
நீக்குநம் ஊர்ப்பக்கம் வீட்டு வாசல் பகுதியில் வேப்ப மரம் வைப்பதைப் போல் இங்கு குடியிருப்பின் ஒவ்வொரு வீட்டு வாசல் முன்னும் மடகாஸ்கர் ஆல்மண்ட் மரங்கள் வைக்கப்பட்டுள்ளன. அவை குடை விரித்து நிழல் பரப்புவதோடு பறவைகளுக்கும் அடைக்கலம் கொடுக்கின்றன. நேரமிருக்கையில் இம்மரங்களின் படங்களைப் பகிருகிறேன்.
நன்றி ஸ்ரீராம்.
வெகு காலத்துக்கு பின் விரிவான பதிவு . படங்கள் எல்லாம் அருமை.
பதிலளிநீக்குஇருவாச்சி பறவையின் வரவும் அதன் குஞ்சும் அழகு.
முருங்கை மரம் நீண்டு கொண்டு போனால் காற்று மழைக்கு ஒடிந்து விழுந்துவிடும். அடிமரம் கனமாக இருப்பது போல வெட்டிவிட வேண்டும்.
நீங்கள் முருங்கை பூ படங்கள் அதில் அமரும் அணில், மற்றும் பற்வைகள் படம் போட்டு இருப்பீர்கள் .
இங்கு இன்று நல்ல மழை இடியுடன் பெய்து கொண்டு இருக்கிறது.
நன்றி கோமதிம்மா.
நீக்குஆம், அடிமரம் கனமாக இருப்பது போலவே வெட்டினோம் முன்பும். இப்போது கிளை முறிந்த இடத்தில் மீண்டும் இலைகள் துளிர்த்து வருகின்றன. அவை உயர்ந்து வளரும் பட்சத்தில், இருக்கும் கிளைகளை விட்டாமல் விட்டு விடலாமா என யோசிக்கிறேன்.
முருங்கைப் பூ சீஸனில் எடுத்த படங்கள் இன்னும் பல உள்ளன பகிருவதற்கு:).
இங்கும் இரவுதோறும் மின்னலுடன் மழை தொடருகிறது.
பறவைகள் பற்றிய தகவல்களைத் படங்களுடன் அழகாக தந்துள்ளீர்கள்.
பதிலளிநீக்குஅவை வாழும் முருங்கை விழுந்தது கவலைதான்.
முருங்கை காற்றுக்கு முறிவதுண்டு எங்கள் வீட்டிலும் இரு கொப்புகள் உ டைந்து மிகுதியையும் வெட்டி விட்டுள்ளோம்.
நன்றி மாதேவி.
நீக்குநானும் அவ்வாறு மீதத்தையும் வெட்டுவதாகவே இருந்தேன். ஆனால் முறிந்த இடத்தில் இருந்து மீண்டும் இலைகள் துளிர்த்துக் கிளைத்து வந்தபடி உள்ளன:).