மால்:
பெங்களூரின் ஃபோரம் மால்கள் இனி நெக்ஸஸ் மால்களாக இயங்கும் என சென்ற ஞாயிறு டைம்ஸ் ஆஃப் இண்டியா நாளிதழில் வெளிவந்த 2 முழுப்பக்க அறிவிப்பை பெங்களூர்வாசிகள் கவனித்திருக்கக் கூடும்.
பெங்களூர் மக்களுக்கு அறிமுகமாகிய முதல் மால், 1999_ல் கோரமங்களாவில் ப்ரெஸ்டிஜ் க்ரூப் கட்டிய ஃபோரம் மால்தான். 72000 சதுர அடிகளில், ஐந்த தளங்களுடன் முதல் மால் கலாச்சாரம், ஃபுட் கோர்ட், ஒரே இடத்தில் பத்துக்கும் மேலான பிவிஆர் திரைப்பட அரங்குகள் என அப்போது அவை புதுமையாகத் தோன்றியது. ஈர்க்கவும் செய்தது.
கோரமங்களா ஃபோரம் மாலின் வெற்றிக்குப் பிறகு சில வருட இடைவெளிகளில் வொயிட்ஃபீல்டில் ஃபோரம் நேபர்ஹூட் மால், சாந்தினிகேதன் ஃபோரம் மால் ஆகியவற்றையும் கொண்டு வந்த ப்ரஸ்டிஜ் க்ரூப் தற்போது அவற்றை ப்(b)ளாக் ஸ்டோன் க்ரூபிற்கு கைமாற்றி விட்டது. சாந்தினிகேதன் மாலில் பெயர் மாற்றம் செய்யப்பட்ட போது மொபைலில் எடுத்த படங்களை இங்கே பகிர்ந்துள்ளேன். கீழ் வரும் படத்தில் கட்டிடத்தின் வலப்பக்கம் ஏணி மேல் நின்று பெயர் வரையும் வேலை நடப்பதைக் காணலாம்:
மால்களைப் பற்றிய செய்தியில் எழுந்த சிந்தனைகளில் சில மலரும் நினைவுகளும்:
தொன்னூறுகளின் மத்தியில் பிரிகேட் ரோடின் முனையில் இருந்த “மோட்டா சூப்பர் மார்க்கெட்”தான் முதன் முதலில் எஸ்கலேட்டருடன் இயங்கிய வணிக வளாகம் என நினைவு. மாலுக்கு இணையான விண்டோ ஷாப்பிங் அனுபவத்தைக் கொடுத்து வந்தது கமர்ஷியல் ஸ்ட்ரீட்டுக்கு அருகே இன்ஃபென்ட்ரி ரோடில் இருந்த “சஃபினா ப்ளாஸா”. வாரயிறுதிகளில் இங்கே கூட்டம் அலை மோதும்.
மால்கள் வருவதற்கு முன்னர் பிரிகேட் ரோடும், கமர்ஷியல் ஸ்ட்ரீட்டும் தீபாவளி சமயங்களில் கோலாகலமாகக் காட்சி அளிக்கும். தெரு முழுவதையும் அடைத்து சீரியல் பல்ப் செட் பந்தல்கள் மின்ன, இரவு நேரங்கள் எள் விழ இடமில்லாத மக்கள் கூட்டத்துடன் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். பரிசுகள், குலுக்கல்கள் என அறிவிப்புகள் அல்லோகலப்படும். அது ஒரு காலம். சிறு எலக்ட்ரானிக் பொருட்களுக்காக மெஜஸ்டிக் அருகேயுள்ள பர்மா பஜார் கடைகளில் அலைந்து திரிந்ததும் நினைவுக்கு வருகிறது. பெங்களூர் மட்டுமல்ல, பல பெருநகரங்களும் தொலைத்து விட்டன சிறு வணிகர்களின் தொடர்பை.
இப்போது மாலில் ஒரே இடத்தில் எல்லாம் கிடைக்கும் என மக்கள் சென்ற நிலையும் குறைந்து, கைபேசியின் மூலம் இருந்த இடத்தில் இருந்து அனைத்தையும் வாங்கிக் கொள்கிறார்கள். காலத்தின் மாற்றத்தையும் அது தரும் வசதிகளையும் ஏற்றுக் கொள்ளப் பழகி விட்டோம் என்றாலும் அந்நாளைய ஷாப்பிங் அனுபவம் தந்த சுவாரஸ்யம் இப்போது இல்லை என்பதே உண்மை.
*
ஓவியமான எனது ஒளிப்படம்
நான் எடுத்த படம்:
தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வரும் யோகேஷ் காண்ட் ஓவியக் கலையின் மீதான் ஈர்ப்பினால் தொடர்ந்து படங்கள் வரைந்தும் தீட்டியும் வருகிறார். வாட்டர் கலரிங் இவருக்குப் பிடித்தமான ஒன்றாம். இன்ஸ்டா கிராமில் எனது படங்களைப் பார்த்து விட்டு ஃப்ளிக்கரிலும் எனது பக்கத்தைத் தொடருவதாகவும், நான் எடுத்த பூக்களின் படங்கள் மிகப் பிடித்திருப்பதாகவும், அதனால் இந்தப் படத்தை வரைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
ஏ 3 அளவில் கைவினைக் காகிதத் தாளில் வரையப்பட்டது.
வரைந்ததோடு அதை அறியவும் தந்த ஓவியர் யோகேஷ் காண்ட் அவர்களுக்கு என் நன்றி! அவரது ஓவியங்களை இங்கே கண்டு ரசிக்கலாம்: https://www.instagram.com/yogeshp2k3/
எனது படம் ஓவியமாவது எனக்குத் தெரிந்து இது இரண்டாம் முறை. முன்னர் நண்பர் சதாங்கா வரைந்த திருநாகேஸ்வரத்தின் புஷ்கரணி இங்கே: https://tamilamudam.blogspot.com/2015/02/blog-post_25.html
*
புன்னகை 80:
மே 2022_ல் “புன்னகை” 80_வது இதழ் மிகச் சிறப்பாக வெளிவந்துள்ளது. அதில் நான் தமிழாக்கம் செய்த, கலீல் ஜிப்ரானின் நான்கு கவிதைகள்: ‘மகிழ்ச்சியும் துயரமும்’, ‘சுயம் அறிதல்’, ‘காலம்’, ‘நட்பு’ ஆகியன வெளியாகியுள்ளன. உங்களுடனான பகிர்வாகவும் எனக்கான சேமிப்பாகவும் இங்கே பதிந்து கொள்கிறேன்:
#
##
#
#
சூப்பர் மார்க்கெட்டையே பெரிதாக எண்ணியிருந்த காலம் ஒன்று. மால்கள் வந்து அதை முறியடித்தது. நான் ஒரு மாலுக்கு முதல் முறையாக சில மாதங்களுக்கு முன்தான் சென்றேன்! அதுவும் RRR படம் பார்க்கச் செல்கையில்!
பதிலளிநீக்குஓவியமாய் உங்கள் ஒளிப்படம் அருமை, வாழ்த்துகள். புன்னகை இதழில் கவிதை வெளியானதற்கும் வாழ்த்துகள்.
மாலுக்கு சமீபத்தில்தான் சென்றீர்கள் என்பது ஆச்சரியமளிக்கிறது. ஒரு மால் கூட விட்டு வைத்ததில்லை நான்:).
நீக்குவாழ்த்துகளுக்கு நன்றி ஸ்ரீராம்.
உங்கள் முயற்சிகள் அனைத்துக்கும் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குபுதிது புதிதாக பிரமாண்ட மால்கள் வர பழையன கழிந்துபோகின்றன இங்கும் அதுவே.
ஆம் மாதேவி. எங்கும் இதே நிலைதான். நன்றி.
நீக்குமால் பற்றிய விவரம் அறிந்து கொண்டேன். இப்போது மாலகளுக்கு போய் வாங்கும் ஆர்வம் குறைந்து இருக்கு, நேரமும் இல்லை. ஆன்லைனில் புக் செய்து வாங்குவதைதான் விரும்புகிறார்கள்.
பதிலளிநீக்குஉங்கள் படம் ஓவியம் ஆனது மகிழ்ச்சி, வாழ்த்துக்கள்.
புன்னகையில் நீங்கள் செய்த தமிழாக்க கவிதைகள் இடம்பெற்றதற்கு வாழ்த்துகள்.
கடைசி படம் மிக அருமை.
ஆம். மக்களுக்கு மால்கள் மீது முன்பிருந்த ஆர்வம் வடிந்து விட்டுள்ளது.
நீக்குதங்கள் கருத்துக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி கோமதிம்மா.