வெள்ளி, 26 மார்ச், 2021

கிணறு வற்றாத வரையில்.. - கண்ணமங்களா ஏரி, பெங்களூரு

 #1


கிணறு வற்றாத வரையில் உணருவதில்லை நாம் நீரின் அருமையை.”  என்றார் Thomas Fuller. உண்மைதான். இயற்கை நமக்குக் கொடுத்திருக்கும் கொடைகளை மதிக்கக் கற்று நமக்கு அருகே இருக்கும் நீர் நிலைகள் சரிவரப் பராமரிக்கப்பட்டாலே தண்ணீர் பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம். 

#2


பெங்களூரின் வொயில் ஃபீல்ட் பகுதியில் சுமார் 18 ஏக்கர் பரப்பளவில் விரிந்து கிடக்கிறது கண்ணமங்களா ஏரி. சீகெஹள்ளி, தொட்டனஹள்ளி, கண்ணமங்களா ஆகிய மூன்று பஞ்சாயத்துகளின் கீழ் வரும் சுமார் 25000 மக்களுக்கு நீராதாரமாக இருந்து வருகிறது இந்த ஏரி.

#3

சுற்றிலும் உள்ள நிலங்களில் நெல், சோளம், காய்கறி மற்றும் பல தானியங்களை விளைவித்து வரும் விவசாயிகளுக்கும், குடியிருப்புகளின் வீட்டுத் தேவைகளும் இதன் நீரே பயன்பட்டு வருகிறது.

இந்நிலையிலும்  இந்த ஏரி சரிவரப் பராமரிக்கப்படாமல் பல தச ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்டு, கிராமங்களிலுள்ள கழிவு நீர் வந்து கலந்தபடியும் குப்பைகள் கொட்டப்பட்டும், அருகே எரிக்கப்பட்டுமாக நிலைமை இருந்து வந்திருக்கிறது. 

இன்று புனரமைக்கப்பட்டு சுத்தமாக இருக்கும் ஏரி எப்படி இவ்வாறாக மாறியது என்பதைக் பார்க்கலாம். 

ரு ஆண்டுகளுக்கு முன் இந்த ஏரியை ஒட்டி அமைந்துள்ள ஸ்ரீ விஷ்ணு கோயிலின் வளாகத்தில் யோகா வகுப்புகளை ஆரம்பிக்க முடிவெடுத்தனர் உள்ளூர் முக்கிய பிரமுகர்கள் சிலர். அப்படி வகுப்பு ஆரம்பிக்கப்பட்ட போது காற்றில் கலந்து வந்த துர்நாற்றத்தைத் தாங்க முடியாமல் எங்கிருந்து வருகிறது என ஆராய்ந்த போது அது ஏரிப் பக்கத்திலிருந்து வருவது தெரிய வந்தது.

மறுநாள் காலையில் ஏரியையும் அதைச் சுற்றியப் பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டதில் பல அதிர்ச்சிகள் காத்திருந்தன.

நெடுங்காலமாக ஏரியில் கழிவு நீர் கலந்ததாலும் குப்பைகள் கொட்டப்பட்டதாலும் அந்தப் பகுதியின் நிலத்தடி நீரும் நச்சுத் தன்மையுடன் இருந்திருக்கிறது. அத்தோடு குப்பைகள் எரிக்கப்படும் வழக்கத்தால் காற்றிலும் மாசு சேர்ந்திருக்கிறது. இதை சீரமைக்க ஆய்வுக் குழு முடிவு செய்தது.

மேலும் ஆராய்ந்ததில் ஏரிக்குச் சொந்தமான பகுதிகள் ஆக்ரமிப்பு செய்யப்பட்டிருந்ததும் தெரிய வந்திருக்கிறது. ஆனால் ஏரி புனர் அமைக்கப்பட உள்ளது அறிந்து அத்தனை பேரும் ஆக்ரமித்த நிலங்களைத் தாமாக முன் வந்து ஒப்படைத்து விட்டதாகத் தெரிகிறது.

அது மட்டுமின்றி சுற்று வட்டாரத்து மக்களும், குடியிருப்புகளைச் சேர்ந்த பலரும் நன்கொடை அளித்ததோடு தன்னார்வலர்களாக இப்பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். 

பஞ்சாயத்து எடுத்த இந்த முயற்சிகளுக்கு வொயிட்ஃபீல்ட் மகாதேவபுரா மாநகராட்சியும் தம்மால் இயன்ற முழு ஒத்துழைப்பைக் கொடுத்திருக்கிறது. பெரிய சவாலாக இருந்த விஷயம் நிலத்திற்குக் கீழ் ஆறடியிலிருந்து மேலே முப்பது அடி வரைக்குமாகக் குவிந்து கிடந்த குப்பை மலை. மாநகராட்சியின் உதவியோடு சுமார் 400 டன் குப்பைகளையும் கசடுகளையும் அகற்றவே ஆறு மாதங்கள் பிடித்தன. சுற்றி வாழும் மக்களுக்கு இடையூறு ஏற்படாமல் இப்பணிகள் இரவு நேரத்தில் மேற்கொள்ளப்பட்டன.

#4



தூர் வாரப்பட்ட ஏரி, இன்று 9 கோடி லிட்டர் தண்ணீரை சேமிக்கக் கூடிய வகையில் பரந்து தெளிந்து நிற்கிறது.

பஞ்சாயத்தில் இருந்த வரைபடங்களின் உதவியோடு எல்லைகள் நிர்மாணிக்கப்பட்டன. ஏரியைச் சுற்றி வேலி அமைத்து, நடை பாதைகள் ஏற்படுத்தப் பட்டன. 

#5


#6


ஏரியைக் கடந்து சுற்றி வர இரும்புப் பாலம் அமைக்க பட்டது. சிறு குழந்தைகளுக்கான விளையாட்டுத் திடலும், ஏரியை ஒட்டி சிறு மண்டபமும் (gazebo) தற்போது தயாராகி வருகின்றன.

ஆய்வுக் கூடத்தில் பரிசோதனை செய்யப்பட்ட நீரின் தரம் பன்மடங்கு உயர்ந்து பயன்படுத்தத் தகுந்ததாக சான்றிதழ் பெற்று விட்டது. ஆயிரம் அடிக்குக் கீழ் சென்று விட்டிருந்த நிலத்தடி நீர் 400 முதல் 500 வரை அடிகள் வரை உயர்ந்தும் விட்டன. 

தன்னார்வலர்களுடன் வாரயிறுதிகளில் கூட்டம் நடத்தி பொறுப்புகளைப் பிரிந்து ஒப்படைத்து சேர்ந்து உழைத்து, மக்கள் - பஞ்சாயத்து - மாநகராட்சி கைகோர்த்து சாதித்து விட்டுள்ளார்கள்.

#7

பெரும்பாலும் இந்த ஆலமரத்தின் கீழ்தான் கூட்டம் நடத்தியிருக்கின்றனர். 70 வயதான மொட்டப்பா எனும் பெரியவர் தனது மாமா நட்டு வளர்த்த மரம் அது என்றும் சிறு வயதிலிருந்து அந்த மரத்தடியில் சிறுவர்களோடு ஆடி விளையாடி வளர்ந்ததாகவும் சொல்லியிருக்கிறார். மேலும் ‘கண்ணமங்களா ஏரி’ அந்நாளில் ‘முள்ளு ஏரி’ என அழைக்கப்பட்ட தகவலையும் பகிர்ந்திருக்கிறார்.

மீண்டு வாழ ஆரம்பித்திருக்கும் ஏரியில் செழிக்க ஆரம்பித்திருக்கின்றன தாவரங்களும், பறவைகளின் வரவும். 

#8


#9



வெட்டி வேர்:

கரைகள் அரிக்கப்படாமல் தாங்கிப் பிடிக்க வெட்டி வேர் வளர்க்கப்படுகிறது.  இத்தாவரத்தின் முக்கிய நன்மை, நார்த்திசுக்களால் ஆன இதன் வேர் பத்தடி ஆழம் வரை சென்று மண்ணை இறுகப் பிடித்துக் கொள்ள வல்லது. மழைக்காலங்களில் மண் அரிப்பு ஏற்படாமல் தடுக்கிறது. சிறுகற்களால் கட்டப்படும் கரைகளுக்குப் பதிலாக சுற்றுச் சூழலுக்கும் நன்மை பயக்கும் இந்த இயற்கைத் தாவரம் வளர்ந்து வருகிறது.

மியாவாக்கி காடுகள்:

அது மட்டுமின்றி ஏரியின் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் 2 மியாவாக்கி காடுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த உத்திக்கு முன்னோடியாகத் திகழ்கின்றனர் ஜப்பானியர். இந்த முறையில் தாவரங்களின் வளர்ச்சி 10 மடங்கு வேகமாகவும் 30 மடங்கு அடர்த்தியாகவும் இருக்கும். ஒரு சிறு பகுதியில் மிக நெருக்கமாக பல்வேறு பூர்வீகத் தாவரங்களை நட்டு வளர்க்கும் இம்முறையைக் கண்டு பிடித்தவரின் பெயரையே இதற்கு வைத்திருக்கிறார்கள். இப்போது கண்ணமங்களா ஏரியின் 2 மியாவாக்கிக் காடுகளில் சுமார் 2500-3500 வரையிலான தாவரங்கள் வேகவேகமாக வளர்ந்து வருவதோடு பறவைகளையும் தம் பக்கம் ஈர்த்து வருகின்றன. 

காலை மாலை வேளைகளில் நடைப் பயிற்சி மேற்கொள்வோர் எண்ணிக்கையும், பறவை ஆர்வலர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இப்பதிவிலுள்ள படங்கள் நிகான் D750 மற்றும் D5000 இரண்டையுமே உபயோகித்து எடுத்தவை. 70-300mm zoom ஏரியின் உள்ளே தொலைவில் இருக்கும் பறவைகளைப் படமாக்க உகந்ததாக இல்லை. கனமான லென்ஸுகளைக் கையாள்வதில் சிரமம் உள்ளதால், பறவைகளைப் படமாக்குவதற்கென்று பிரத்தியேகமாக ஒரு பிரிட்ஜ் கேமரா (semi dslr) வாங்கிடும் எண்ணம் பரிசீலனையில் உள்ளது :). முடிந்த அளவில் ஓரளவு தெளிவாகக் கிட்டிய படங்கள் பார்வைக்கு..

#10

நீர்க் காக்கைகள்

#11


#12



#13



#14



#15


**

பறவை பார்ப்போம் - பாகம் (64)

[நேரில் அறிய வந்த மற்றும் தமிழாக்கம் செய்த தகவல்கள்.] 

***


தொடர்புடைய முந்தைய பதிவுகள்:

பெங்களூர் ஏரிகள்
11. அதோ அந்தப் பறவை போல... - கைக்கொண்டன ஹள்ளி ஏரி (பெங்களூர்)


மைசூர், குமரகம் ஏரிகள்


-----------------------------------***----------------------------------

5 கருத்துகள்:

  1. நீர் என்று இல்லை.  எந்தப்பொருளும் கையில் இருக்கும்போது அருமை தெரிவதில்லை.

    தாமாக முன்வந்து ஆக்கிரமித்த நிலங்களை ஒப்படைத்தது மிகவும் பாராட்டுக்குரியது.

    ஏரி மீட்டெடுக்கப்பட்டு அழகிய வடிவம் பெற்றிருப்பது சந்தோஷம் தருகிறது.  மிகவும் அழகான படங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /அருமை தெரிவதில்லை/ உண்மைதான்.

      நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. சிறப்பான முயற்சி - பாராட்டுதலுக்குரியதும் கூட.

    மக்கள் மனது வைத்தால், அரசாங்கமும் ஒத்துழைத்தால், இப்படியான பல விஷயங்களைச் சிறப்பாக செய்து விட முடியும் என்பதை இந்த ஏரி உணர்த்துகிறது.

    படங்கள் அழகு. Semi DSLR - Will see details in the net. முடிந்தால் நீங்களும் தகவல்கள் பகிர்ந்து கொள்ளுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. Semi DSLR or Bridge camera என அழைக்கப்படும் இவற்றில் DSLR போலவே செட்டிங் செய்து படம் எடுக்க இயலும். அதிக ஜூம் கொண்ட fixed lens கொண்டிருக்கும். பயணங்களுக்கும் உகந்தது. Nikon P950, P1000 இந்த வகையைச் சேர்ந்ததே. Budget friendly_யும் கூட. இன்னும் சற்றே செலவழிக்கலாமெனில் Panasonic FZ1000, FZ2000, FZ330 மற்றும் Sony RX10 IV , RX10 III போன்றன. பறவைகளைப் படமாக்க Sony RX10 IV சிறந்ததென பரிந்துரைகள் பல வாசித்ததால் அதை வாங்கப் பரிசீலித்துக் கொண்டிருக்கிறேன். இணையத்தில் best bridge camera எனத் தேடினாலே நிறைய அறிந்து கொள்ளலாம். மேலதிகத் தகவல்கள் தேவைப்படுமாயின் மடல் செய்யுங்கள். அடிக்கடி லென்ஸ் மாற்றும் அவசியமின்றி உங்களது பயணங்களுக்கு உதவியாக இருக்கும். எளிதாக எடுத்துச் செல்லவும் இயலும்.

      நீக்கு
  3. மேலதிகத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. நானும் தேடுகிறேன்.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin