சனி, 22 பிப்ரவரி, 2014

முப்பாட்டன் சொத்தா பூமி? - ஹல்சூரு ஏரி, பெங்களூரு

#1
பழமையானதும் பெங்களூரின் மிகப் பெரிய ஏரிகளில் ஒன்றும் ஆன அல்சூர்(ஹல்சூரு) ஏரி, நகரின் மையத்தில், மகாத்மா காந்தி சாலைக்கு அருகே உள்ளது. பெங்களூரை உருவாக்கிய முதலாம் கெம்பகெளடா (1513-1569), அல்சூர் கிராமத்தை விஜய நகர அரசர்களிடமிருந்து பரிசாகப் பெற்றிருக்கிறார். அல்சூர் ஏரி இரண்டாம் கெம்ப கெளடாவினால் நிர்மாணிக்கப் பட்டது. ஏரிக்கு அருகாமையில் ஒரு பலாப்பழத் தோட்டம் இருந்திருக்கிறது. கன்னட மொழியில் பலாவை 'ஹலசின ஹன்னு' என்பார்கள். அதனாலேயே இந்த இடம் ‘ஹல்சூரு’ என அழைக்கப்பட்டிருக்கிறது. பின்னாளில் ஆங்கிலேயர் ஆட்சியின் போது ஹல்சூரு.. அல்சூர் ஆகிவிட்டது. 1807_ல்முதல் பிரிட்டிஷ் இராணுவ நிலையம் இங்குதான் அமைக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

123 ஏக்கர் பரப்பளவில் விரிந்து பரந்திருக்கும் ஏரி பல சிறு தீவுகளைத் தன்னுள் கொண்டது.
#2

ஏரியைச் சுற்றிய கரையின் நீளம் சுமார் 3 கிலோ மீட்டர்.

#3

நீரின் ஆழம் சராசரியாக 19 அடிகளிலிருந்து 58 அடிகள் வரைக்கும் கூட.
#4
ஏரியின் வயது, உருவாக்கிய இரண்டாம் கெம்பகெளடா காலத்தைக் கொண்டு கணக்கிடப் பட்டாலும், இப்போது காணப்படும் ஏரியை அமைத்தது சர். லெவின் பென்தம் போரிங், அதன் பிறகு சீரமைத்தது பெங்களூரின் போலீஸ் கமிஷனர்.

#5
Utility Building
மழை மேகங்கள் சூழ்ந்த பின் மாலைப் பொழுதில் MG Road கட்டிடங்கள்...
#6

ஏரிக் கரையை ஒட்டியமைந்திருக்கிறது நகரின் மிகப் பெரும் குருத்வாரா, ஸ்ரீ குரு சிங் சபா . ஞாயிற்றுகிழமை காலைகளில் சுமார் ஆயிரம் சீக்கியர்கள் வழிபட வருகிறார்கள்.  மதிய உணவு வழங்கப்படும் நேரத்தில் எண்ணிக்கை 2000-3000 வரை செல்கிறது.

அல்சூர் பகுதியில் இருக்கும் பிற முக்கிய வழிபாட்டுத் தலங்களில் முக்கியமானவை, ஏரிக்கு சற்று தொலைவில் அமைந்த பதினாறாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சோமேஷ்வரா ஆலயமும், எண்ணூறு ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட சுப்ரமணியர் ஆலயமும்.

அல்சூர் ஏரிக் கரையில்தான் பெங்களூர் தமிழ்ச் சங்கக் கட்டிடம் உள்ளது.

வருடம் முழுவதுமே சுற்றுலாப் பயணிகள், தினசரி நடை மற்றும் ஓட்டப் பயிற்சி செய்பவர்கள், படகுச் சவாரிப் பிரியர்கள், ஓவியம் தீட்ட ஒன்று கூடுகிறவர்கள், ஒளிப்படக் கலைஞர்கள், காற்று வாங்க.. காதல் செய்ய.. வருபவர்கள் என எப்போதும் மக்கள் கூட்டத்தைப் பார்க்கலாம் இங்கே. புதன் விடுமுறை. அனுமதி நேரம் காலை 9 முதல் மாலை 6 வரை.

#7

எல்லாவற்றுக்கும் மறுபக்கம் என ஒன்று இருக்கும்தானே:(? கொட்டிக் கிடக்கும் அழகை இரசிக்கத் தந்த கையோடு இதையும் [‘சூழல் மாசடைதல்’ - ‘பெங்களூரு’ ஐடி நகரத்தின் இன்னொரு பக்கம்] காட்ட வேண்டியிருப்பது வருத்தத்தைத் தந்தாலும் சுற்றுச் சூழல் அடையும் பாதிப்பை உலகுக்குக் காட்டும் பொறுப்பும் இருக்கிறதல்லவா? அந்தப் பதிவின் முதல் 6 படங்கள் அல்சூர் ஏரியில்.. இந்தப் படங்களை எடுத்த அதே நாளில் எடுத்தவையே:(.

எப்போது உணர்வோம் முப்பாட்டன் சொத்தல்ல இப்பூமி, வருங்காலச் சந்ததியரிடம் நாம் வாங்கியிருக்கும் கடன் என்பதை.

#8
We do not inherit the earth from our ancestors, we borrow it from our children.
***

14 கருத்துகள்:

  1. அருமையான படங்கள் மூலம் ஏரியின் அழகை ரசிக்க முடிந்தது... இன்னும் மேம்படுத்தவும், காக்கப்படவும் வேண்டும்...

    பதிலளிநீக்கு
  2. சுவாரஸ்யமான விவரங்களுடன் அழகிய படங்கள். சூழல் மாசடைதல் லிங்க்கையும் க்ளிக் செய்து (மறுபடி) பார்த்தேன்.

    பதிலளிநீக்கு
  3. அழகான அல்சூர் ஏரி. பலமுறை அந்தப்பக்கமாக போனாலும் ஏரியில் படகில் பயணம் செய்யவில்லை. நகரின் முக்கிய பகுதியில் இருக்கும் இந்த ஏரியை இதுவரை பாதுகாத்துக்கொண்டிருக்கும் கர்நாடக அரசின் செயலை பாராட்டாமல் இருக்கமுடியவில்லை. அங்கே உள்ள தமிழ்ச்சங்கத்திற்கு விஜயம் செய்து உறுப்பினரான பழைய நினைவுகள் மனதில் நிழலாடுகிறது.

    பதிலளிநீக்கு
  4. கடைசிப்படம் அள்ளுது :-))

    படகில் பயணம் கவிதை. கவிதைப்பயணமும் உண்டா?

    பதிலளிநீக்கு
  5. முந்தையப் பகுதியையும் படித்துவிட்டு இங்கே வந்தேன். அழகுக்கு ஒரு உதாரணம் அல்சூர் ஏரியாக இருந்த காலம் போய் இப்படிக் குப்பைக் கூளமாக இருப்பது வருத்தமாக இருக்கிறது. அதுவும் இந்தப் போகிமூட்டப் புகை அச்சம் கொடுக்கிறதே அம்மா. மகத்தான விழிப்புணர்வு வரவேண்டும். எங்கள் ஊரில் நல்ல வேளையாக இப்படிக் கொளுத்தும் வழக்கம் இல்லை. நான் சொல்வது சென்னையைப் பற்றி.

    பதிலளிநீக்கு
  6. படங்கள் அருமை...
    ரசிக்க வைத்தன அக்கா...

    பதிலளிநீக்கு
  7. @கவிப்ரியன் ஆர்க்காடு,

    இன்னும் அக்கறை காட்ட வேண்டும் அரசு. கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  8. @சாந்தி மாரியப்பன்,

    நன்றி சாந்தி. /கவிதைப் பயணம்/ தமிழ்ச் சங்கக் கவியரங்கம் சிலவேளைகளில் படகில் பயணித்தபடி நடக்குமென ஷைலஜா சொல்லி கேள்விப் பட்டிருக்கிறேன்:).

    பதிலளிநீக்கு
  9. @வல்லிசிம்ஹன்,

    பெங்களூரில் இந்த போகி மூட்டப் பழக்கம் வருடக் கணக்காக இருக்கிறது
    :(. நன்றி வல்லிம்மா.

    பதிலளிநீக்கு
  10. மிகச் சிறப்பான படங்கள்.....

    அல்சூரில் எனது சகோதரி சில வருடங்கள் இருந்தார். அப்போது அங்கே வந்திருக்கிறேன் - ஆனாலும் ஏரிப் பக்கம் சென்றதில்லை.

    நீங்கள் குறிப்பிட்ட சோமேஷ்வர் கோவில் மட்டும் சென்றதுண்டு......

    பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin