Monday, June 17, 2013

‘சூழல் மாசடைதல்’ ( Pollution - June PiT ) - ‘பெங்களூரு’ ஐடி நகரத்தின் இன்னொரு பக்கம்

டுத்த தலைமுறைக்கு நாம் விட்டுச் செல்லப் போகிற உலகம் எப்படியானதாக இருக்கப் போகிறது? இந்தக் கேள்விக்கான பதில் அச்சத்தையே தருகிறது. விளைவுகளை நமது காலத்திலேயே சந்திக்க ஆரம்பித்து விட்டோம். தலையாய இப்பிரச்சனை குறித்த விழிப்புணர்வு வேண்டித் தலைப்பைத் தந்திருக்கிறார் இம்மாத PiT போட்டிக்கான நடுவர் நவ்ஃபல்.

தலைப்பு: சூழல் மாசடைதல்

சுத்தமான தண்ணீரும், காற்றும் எத்தனை அவசியம் என்பதை உணராமல் தன்னை ஐடி நகரமாக முன்னிலைப்படுத்துவதிலேயே அக்கறை காட்டி வந்த அரசு சென்ற வருடத்தில் பெங்களூரில் அகற்றப்படாமல் குன்றுகளாய்க் குவிந்த குப்பைப் பிரச்சனை  சர்வதேசச் செய்தியில் அடிபட்டபோதுதான் அவசரமாக விழித்துக் கொண்டு ஆணைகள் பிறப்பித்தது. அது குறித்த என் பகிர்வு இங்கே: மாதிரி நகரம் ஆகிறதா பெங்களூர்?  இதற்கான விடை இப்போது வரை எதிர்மறையாகதான் உள்ளது.

#1
அலை குளத்தில்
கோபுர நிழல்.
அருகே..
”Cleanliness is next to Godliness” எனும் தலைப்போடு
Bangalore AID கண்காட்சியில் இடம் பெற்ற படம்.
கிட்டத்தட்ட ஒரு கோடியை நெருங்கும் ஜனத்தொகை தினம் வெளியேற்றும் 4000 டன் குப்பையைக் கழித்துக் கொட்ட புதிய நிலக்குழிகளைதான் தேடுகிறார்களே தவிர திட்டமிட்டபடி அவற்றை மாற்று சக்தியாக்கப் போதுமான ஆலைகளை அமைப்பதில் நாட்டம் காட்டவில்லை. 15-20% குப்பைகள் மட்டுமே மாற்று சக்தியாக்கப்படுவதாய் தெரிகிறது. ஏற்கனவே இருக்கும் நிலக்குழிகளைச் சுற்றியிருக்கும் கிராமத்தினர் எதிர்ப்பு தெரிவித்தபோதுதான் சென்ற வருடம் பிரச்சனை வெடித்தது.  மாநகராட்சி பொதுமக்கள் ஒத்துழைப்பதில்லை எனக் குற்றம் சாட்டுகிறது. பதிலுக்கு மக்கள் போதுமான பணியாளர்களும் இல்லை, தேவையான கருவிகளும் இல்லை என மாநகராட்சியைச் சாடுகிறது. பெரும் அளவில் குப்பைகளை வெளியேற்றுகிறவர்கள் கூட அதற்கான ஆலைகள் நிறுவ அக்கறை எடுக்கவில்லை.

பெங்களூரின் முக்கிய இடமாகக் கருதப்படும் ஹல்சூர் ஏரியில் கிடைத்த சில காட்சிகள் (படங்கள் 1 முதல் 6 வரை):

#2
அழகிய ஏரி
களையப்படாத தளைகள்..

#3
மக்காத குடுவைகளின்
புகலிடமாக..

#4  ஐடி நகரத்தின் பிரதான சாலையான எம்.ஜி ரோடின் இந்தப் பக்கம்..


#5 தோட்ட நகரின் மறுபக்கம்

அல்சூர் ஏரிப் பூங்காவில்..

#6 ஒரு பானைச் சோற்றுக்கு..


*******************************************

டுக்குமாடிக் குடியிருப்புகளில் மாநகராட்சி ஆணையின்படி குப்பைகள் பிரித்தே சேகரிக்கப்படுகின்றன. அவற்றை லாரிகளில் வந்து எடுத்துச் சென்று விடுகிறார்கள். தனிவீடுகளில் வசிப்பவர்கள் தெருமுனைகளில் வெளியேற்றும் குப்பைகளை அகற்ற டெண்டர் எடுத்தவர்கள் சிறிய அளவில் செயல்படுவர்களிடம் பொறுப்பை ஒப்படைக்கிறார்கள். இப்படிஆரம்பிக்கிறது இவர்கள் காலை.

#7
இரண்டு பேராக வருகிறார்கள். முதல் இடத்தில் நின்று நிதானமாக இப்படி மூன்று சாக்குகளைக் கட்டியாகிறது, பிளாஸ்டிக் பொருட்கள், பால் கவர்கள், பேப்பர்கள் எனத் தங்கள் தேவைக்கானவற்றைப் பிரித்து எடுத்துக் கொள்ள. அடுத்து இடம் இடமாகக் குப்பைகளை அள்ளிச் செல்லுகிறார்கள்.
#8

இதுபோன்ற தெருமுனைக் குப்பைத் தொட்டிகளிலிருந்து தீ கொளுந்து விட்டெரிவதும், குபுகுபுவெனப் புகை எழுவதும் அடிக்கடி நிகழும் ஒன்று. குளிர் நேரமானாலும் காலையில் காற்றோட்டத்துக்காக நாலாபக்கமும் திறந்து வைக்கிற சன்னல்களை அவசரமாய் மூட வேண்டியதாகிறது:(! பக்கத்தில் மட்டுமல்ல, நாலைந்து தெருக்கள் தள்ளி என்றாலும் கூட காற்றிலே கசிந்து சன்னல் வழி நுழைந்து விடும் புகை. இதை பொதுமக்கள் செய்கிறார்களா அல்லது வண்டி நிரம்பியதும் மறுபடி வருவதைத் தவிர்க்க ஊழியர்களே செய்கிறார்களா என்பது நிச்சயமாகத் தெரியவில்லை:(!

#9


ஆலைப் புகைகள் போல இவையும் ஆபத்தானவையே. அடுத்து ஓரிரு மணி நேரமாவது தேவைப்படுகிறது இடம் பழைய நிலைக்குத் திரும்ப.

#10
காற்றின் திசையில் பரவும் புகையில் திணறுகின்றன மரங்களும்..
இன்றைய செய்தியில் ஒரு ஆய்வு அறிக்கை 18 முதல் 30 வயதுக்குள்ளான வயதினர் பலருக்கும் தலைமுடி உதிருவது, முழுவதுமாய் வழுக்கை போன்ற பிரச்சனைகள் முன் எப்போதையும் விட அதிகம் இருப்பதற்குப் பரம்பரை, படிப்பு மற்றும் வேலை அழுத்தம் காரணங்களைத் தாண்டி நகரத்தின் மாசான காற்றும், குழாய் நீரும் கூட காரணமே எனத் தெரிவித்துள்ளது. சமீபமாக இந்த வயதினரின் இரத்தத்தில் அளவுக்கதிமாகத் துத்தநாகம் (zinc) இருப்பதும் பரிசோதனை அறிக்கைகள் மூலம் தெரிய வந்திருக்கிறது. இதற்கு நீரின் மாசே காரணம் என்கிறார்கள். Emmission Test செய்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டியது சட்டமாக இருந்தாலும் அன்றாடம் இவர்கள் பயணிக்கும் சாலைகளில் வாகனங்கள் எழுப்பும் புகைக்கும் குறைவே இல்லை.

ஐந்து நாட்களுக்கு முன் வெளியான இன்னொரு ஆய்வு அறிக்கையின்படி பெங்களூரின் 92 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 52 இடங்களின் நிலத்தடி நீரில் TDS  (Total Dissolved Solids) அனுமதிக்கப்பட்ட 500 mg/l அளவை விட அதிகமாக இருப்பது அறியப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் லிட்டருக்கு ஆயிரத்தையும் தாண்டியிருக்கிறது தாதுக்களின் அளவு. காவேரி நீர், ஏரி நீர் போதுமானதாக இல்லாத நகரத்தில் பல இடங்களில் குடிப்பதற்கும் பயன்படுத்தபடுகிற நிலத்தடி நீரின் இந்நிலையால் ஆபத்தான வியாதிகளுக்கான வாய்ப்பு அதிகம் என்கிறார்கள்.

இந்த மாதப் போட்டித் தலைப்பு முடிவான போது ஒரு நல்ல கருவுக்கு எனது பங்களிப்பும் இருக்க வேண்டுமென முடிவு செய்து கடந்த ஒருவாரத்தில் எடுத்த படங்களை (மாதிரிக்காக)ப் பகிர்ந்துள்ளேன். உங்கள் பகுதியின் நிலை, ஊரின் நிலை, வாகனப் புகை, ஆலைப் புகை என நீங்களும் படங்களின் மூலமாக விழிப்புணர்வை ஏற்படுத்தலாமே. போட்டிக்கான கடைசித் தேதி: 20 ஜூன் 2013. விதிமுறைகள் இங்கே. அறிவிப்பு இங்கே.
***

இதன் தொடர்ச்சியாக 22 பிப்ரவரி 2014 பகிர்ந்த மற்றுமொரு பதிவு:
முப்பாட்டன் சொத்தா பூமி? - ஹல்சூரு ஏரி, பெங்களூரு

**


29 comments:


 1. தினமும் மலைபோலக்குவிந்திடும் குப்பைகளையும் கழிவுப்பொருட்களை நினைத்தாலே மிகவும் அச்சமாகத்தான் இருக்கிறது.

  மிகவும் அருமையான விழிப்புணர்வுக் கட்டுரை.

  போட்டியில் வெற்றிபெற வாழ்த்துகள்.

  ReplyDelete
 2. (எ)இங்கும் அப்படியே... நல்லதொரு விழிப்புணர்வு படங்கள்... வெற்றி பெற வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 3. @வை.கோபாலகிருஷ்ணன்,@திண்டுக்கல் தனபாலன்,
  இருவருக்கும் நன்றி. நான் கலந்து கொள்ள அன்றி,
  போட்டிக்கான இறுதித் தேதி நெருங்குவதால் நண்பர்களுக்கு நினைவூட்டிடவே இப்பகிர்வு. மாதிரிப் படங்களுடன்:)!

  ReplyDelete
 4. முடி உதிர்வதற்கு மாசான காற்றும், நீரும் கூட காரணம் என்பது அதிர்ச்சி தகவல். புகைப்பட ஆதாரங்களுடன் வெளிப்படுத்தியிருக்கும் உங்கள் கவலை எங்களுக்குப் புரிகிறது. புரியவேண்டியவர்களுக்கு புரிய வேண்டுமே!

  ReplyDelete
 5. இளையவர்களுக்கும் தலைமுடி உதிர்வதற்கான காரணம் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. புகை சூழ்ந்த படங்கள் நன்றாக வந்திருக்கின்றன. இங்கு கூட குப்பையைக் கொளுத்துபவர்கள் அதைச் சரியாக அணைக்காமல் சென்று, இரவு முழுவதும் புகை மண்டலத்தில் இருப்பதும், எங்கே தீ கங்கு இருக்கிறது என்று தேடிச் செல்வதும் அவ்வப்போது நிகழ்கிறது. தண்ணீர் பாட்டில்கள் இயற்கை சுத்தத்துக்கு ஒரு மிகப் பெரிய சவால். வனங்களின் பக்கம் சென்று மது அருந்துவோர் அங்கு உடைத்துப் போட்டு வரும் மது பாட்டில்கள் விலங்குகளின், முக்கியமாக யானைகளின் காலில் குத்தி அவை படும் அவஸ்தையை ஜெமோ தன்னுடைய யானை டாக்டர் கதையில் சொல்லியிருப்பார்.

  ReplyDelete
 6. எம்புட்டுதான் விழிப்புணர்வு ஏற்ப்படுத்தினாலும் நம்மாளுங்களின் கரிசனையின்மை மனதை நோகத்தான் வைக்கிறது வேறே என்னத்த சொல்ல போங்க...!

  ReplyDelete
 7. அழகு நகரம் அழுக்கு நகரமாகாமல் இருந்தால் சரி...
  குத்திக் காட்டிய கட்டுரைக்கு நன்றி....

  ReplyDelete
 8. /குப்பையைக் கழித்துக் கொட்ட புதிய நிலக்குழிகளைதான் தேடுகிறார்களே தவிர திட்டமிட்டபடி அவற்றை மாற்று சக்தியாக்கப் போதுமான ஆலைகளை அமைப்பதில் நாட்டம் காட்டவில்லை./

  மிக வருத்தமான உண்மை அக்கா. இது எல்லா ஊர்களுக்கும், ஏன் சில நாடுகளுக்குமே பொருந்தும்! குப்பையை மின்சாரமாக மாற்றலாம்; உரமாக மாற்றலாம். எவ்வளவு பயனுள்ள ஒரு resource-ஐ வீணாக்கி, அதன்மூலம், நிலம், நீர், காற்று எல்லாம் வீணாக்குகிறோம் என்று நினைத்தால்... :-(

  //கடந்த ஒருவாரத்தில் எடுத்த படங்களை//

  ஒரே வாரத்தில் இத்தனை புகைப்படங்களா? :-)) :-(

  இந்த மாத ‘பிட்’ கரு, ரொம்ப சுலபமானதாகவும், அதிகப் பங்களிப்புகள் தரக்கூடியதாகவும் உள்ளது என்று சொல்லி மகிழ்வதா.. வருத்தப்படுவதா!! :-(

  ReplyDelete
 9. ஆஹா.. உங்கூர்ல குப்பைத்தொட்டி கூட எவ்ளோ 'சுத்தமா' இருக்குது. ஜூப்பரு :-))

  ReplyDelete
 10. போட்டி பற்றிய அறிவிப்பு என்று இல்லாமால் சமூக அக்கறையோடு தகவல்களை பகிர்ந்த விதம் அருமை!

  ஒவ்வொரு தனிமனிதனும் திருந்தினால்தான் சமூகம் திருந்தும்.

  சென்னையின் புறநகரில் உள்ள டீக்கடையின் முன்பு டீயை குடித்துவிட்டு சாலையில் அலட்சியமாக 'பேப்பர் கப்' -ஐ தூக்கி வீசும் மனிதர்களை என்னவென்று சொல்வது?

  இன்னும் குப்பைகளை எரித்து குளிப்பதற்கு வெந்நீர் தயாரிக்கும் படித்த மக்களை என்ன சொல்வது?

  இந்த மாதிரி பதிவுகள் அவர்கள் கண்ணில் படாதோ?

  ReplyDelete
 11. வணக்கம்...

  உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/06/blog-post_19.html) சென்று பார்க்கவும்... நன்றி...

  ReplyDelete
 12. அருமையான விழிப்புணர்வுக் கட்டுரை.

  ReplyDelete
 13. தனி மனித விழிப்புணர்வும், ஒழுக்கமும் இருந்தாலொழிய, எந்த முன்னேற்றமும் ஏற்படாது :( எத்தனையோ ஆயிரம் சொற்களால் சொல்ல வேண்டியதை ஒரு படம் சொல்லி விடும் என்பார்கள். மிகவும் உண்மை என்று எடுத்துக் காட்டிய உங்கள் திறமைக்கு வாழ்த்தும், நன்றியும்.

  ReplyDelete
 14. மிக அருமையான விழிப்புணர்வு பகிர்வு.
  முடி உதிர்தல் பற்றின தகவல் அதிர்ச்சியான தகவல் தான்.
  சென்னையில் தெருவுக்கு தெரு சேர்ந்து கோபுரம் போல் குவிந்து கிடக்கும் குப்பைகளை நினைத்தால் ரொம்பவே வருத்தம் தான்..

  ReplyDelete
 15. சென்னை தான் இப்படின்னா உங்க ஊரும் இப்படித்தானா!

  பொறுப்பில் உள்ளவர்கள் தட்டி கழிப்பதால் தான் இது போன்ற நிலை. நாம் சரியாக இருந்து கொள்வோம் வேற என்ன பண்ணுறது.

  ReplyDelete
 16. சில மக்கள் தன் வீட்டை மட்டும் சுத்தமாக வைக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
  பொதுவிடம்,மற்றும் சுற்றுபுறத்தை தூய்மையாக வைத்து இருப்பது நமக்கு நல்லது என்ற விழிப்புணர்வு மக்களிடம் வந்தால் தான் சூழல் மாசடைவது குறையும்.
  நல்ல விழிப்புணர்வு பதிவு, படங்கள் அருமை.

  ReplyDelete
 17. @Viya Pathy,

  உண்மைதான். கருத்துக்கு நன்றி.

  ReplyDelete
 18. @ஸ்ரீராம்.,

  குப்பை எரிப்பது சென்னையிலும் நடக்கிறதா? ஆம். யானை டாக்டர் கதை நானும் வாசித்திருக்கிறேன். நன்றி ஸ்ரீராம்.

  ReplyDelete
 19. @MANO நாஞ்சில் மனோ,

  மாற வேண்டும் மக்கள். நன்றி மனோ.

  ReplyDelete
 20. @ஹுஸைனம்மா,

  நன்றி ஹுஸைனம்மா. ஆம். இந்தப் பிரச்சனை நாட்டின், உலகின் பல பாகங்களிலும்தான்:(.

  ReplyDelete
 21. @அமைதிச்சாரல்,

  அப்படியே கீழே வரை எட்டியும் பார்த்து விடுங்கள்.

  நன்றி சாந்தி.

  ReplyDelete
 22. @அமைதி அப்பா,

  கேடு எனத் தெரிந்தேதான் தொடருகிறார்கள்:(! நீங்களே சொல்லியிருப்பது போல் அலட்சியமே காரணம்.

  நன்றி அமைதி அப்பா.

  ReplyDelete
 23. @கிரி,

  நம் வரையில் சரியாக இருப்பது ஒன்றே நம்மால் இயன்றதாக இருக்கிறது. நன்றி கிரி.

  ReplyDelete
 24. @கோமதி அரசு,

  ஆம், பொது இடமும் நம் இடம் எனும் உணர்வு வந்தால்தான் மாற்றம் நிகழும். நன்றி கோமதிம்மா.

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin