புதன், 29 ஜனவரி, 2020

பெங்களூர் கோட்டை

#1
பெங்களூர் கோட்டை

'திப்பு சுல்தானின் கோடைக்கால அரண்மனை'யிலிருந்து ஐந்து நிமிட நடையில் சென்றடையும் தூரத்தில், பெங்களூர் கிருஷ்ண ராஜேந்திர சாலையில் இருக்கிறது பெங்களூர் கோட்டையின் 'டெல்லி பாகிலு' (நுழைவாயில்). 

#2

பெங்களூரின் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் முதன்மையானது. இதன் வரலாற்றைச் சுருக்கமாகத் தெரிந்து கொள்வோம்.

#3


#4


#5

#6

1537_ஆம் ஆண்டு விஜய நகரப் பேரரசின் இராணுவத் தலைவராக இருந்த கெம்பகெளடா என்பவரே பெங்களூரை உருவாக்கிப் பலப்படுத்தி அதற்குப் பெயரையும் வைத்தவர். பெங்களூர் நகரத்தின் பெயர் ‘பெங்களூரு’ என்பதிலிருந்தே ஏற்பட்டது என்பதற்கான ஆதாரம் ஏறத்தாழ கி.பி 890_ஆம் ஆண்டு பேகூரிலுள்ள பேகூர் கோயில் கங்கா கல்வெட்டில் காணக் கிடைத்திருக்கிறது. பெங்களூரின் நான்கு திசைகளுக்கும் எல்லைகள் வகுத்து கெம்பகெளடா அமைத்த மண்டபங்களைக் குறித்து படங்களுடன் முன்னர் பகிர்ந்திருக்கிறேன்.

கெம்பகெளடா உருவாக்கிய களிமண் கோட்டையே பெங்களூர் கோட்டை. 

#7
 #8

 #9

முதலில் நீள் வட்ட வடிவமைப்புடன் வட்ட நிலவறைகளையும் முக்கியமான இடங்களில் பிரமாண்டமான நுழைவாயில்களையும்  கொண்டிருந்திருக்கிறது. இந்த நுழைவாயில்கள் வடக்கே டெல்லி பாகிலு (Gate) மற்றும் யெலஹங்கா பாகிலு, கிழக்கே அல்சூர் பாகிலு, தெற்கே கனகனஹள்ளி பாகிலு மற்றும் மைசூர் பாகிலு, மேற்கே கெங்கேரி பாகிலு என்ற பெயர்களால் அழைக்கப்பட்டிருக்கின்றன. 

கீழ்வரும் நான்கு படங்களும் கோட்டையின் உட்புறத் தோட்டத்தின் சுற்றுச் சுவர்கள்:
#10

#11
#12


#13இப்போதைய பெங்களூர் கோட்டையில் இருக்கும் இந்த (டெல்லி பாகிலு) தவிர சிதிலமடைந்து விட்ட மற்றவற்றின் மிச்சங்கள் காய்ந்து போன அகழிகளுடன், வரலாற்றின் அடையாளங்களாக இன்னமும் காணப்படுகின்றன. கோட்டையின் உள்ளே பெரிய நிலவறையும் பிள்ளையாருக்கு ஒரு சிறிய கோயிலும் உள்ளது. கோயிலில் புனரமைப்பு வேலைகள் நடந்து கொண்டிருந்ததால் சன்னதி மூடப்பட்டிருந்தது.

#13
கோயிலும்
பிரமாண்ட வாயிற்கதவின் 
பின்பக்க வடிவமைப்பும்

#15
நிலவறை

#16
மாடம்

#17
பின்புற வாயில்

 #18
சிதிலமடைந்த தூணின் ஒரு பாகம்


1689_ஆம் ஆண்டில் பெங்களூர் நகரம் முகலாய மன்னர்களால் மைசூர் ராஜா சிக்க தேவராயரிடம் குத்தகைக்கு விடப்பட்டது. அவர் கோட்டையைத்  தெற்கு நோக்கி விரித்துக் கட்டி அதன் எல்லைக்குள் ஸ்ரீ வெங்கடரமணா கோயிலையும் எழுப்பினார்.

1758_ஆம் ஆண்டு ஹைதர் அலியின் கட்டுப்பாட்டுக்குள் பெங்களூர் வந்தது. 1761_ஆம் ஆண்டு களிமண்ணால் கட்டப்பட்டிருந்த இக்கோட்டையை தற்போது இருக்கும் கற்கோட்டையாக மாற்றி பலப்படுத்தினார்.  அவருக்கு அடுத்து பொறுப்புக்கு வந்த திப்பு சுல்தான் இதை மேலும் விரிவாக்கம் செய்து பலப்படுத்தியிருக்கிறார்.

1791_ஆம் ஆண்டு மூன்றாம் மைசூர் போரின் போது பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் இராணுவத் தலைவரான கார்ன்வாலிஸ் பிரபு இக்கோட்டையை முற்றுகை இட்டிருக்கிறார். திப்புவின் படைத் தளபதி பகதூர் கானின் தலைமையிலான மைசூர் ராணுவத்தின் கடும் எதிர்ப்பைச் சமாளிக்க முடியாமல் திணறியிருக்கிறார். சுமார் 2000 பேர்கள் இப்போரில் மாண்டிருக்கிறார்கள். மார்ச் 21 ஆம் தேதி பிரிட்டிஷ் ராணுவம், கோட்டையின் டெல்லி நுழைவாயில் அருகே இருந்த சுவரை உடைத்து முன்னேறி கோட்டையைக் கைப்பற்றியது. ஆனால் ஒரு வருடம் கழித்து ஸ்ரீரங்கப்பட்டின ஒப்பந்தத்தின் படி, கோட்டையை மீண்டும் திப்பு சுல்தானிடம் திருப்பி ஒப்படைத்தார்.

திப்புவின் மைசூர் இராணுவ வீரர்கள் எதிர்த்துப் போராடிய இந்த சம்பவத்தை விவரிக்கும் போது பிரிட்டிஷ் சரித்திரக் குறிப்பாளர் மார்க் வில்க்ஸ், ‘எதிர்த்து நிற்கும் பண்பு எல்லா இடங்களிலும் மரியாதைக்குரியது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

திப்புவின் கோடைக்கால அரண்மனையைப் போலவே இந்த அரண்மனையும் 1958_ல் நிறைவேற்றப்பட்ட பழமையான நினைவுச் சின்னங்கள் மற்றும் தொல்லியல் இடங்கள் சட்டத்தின் படி தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது. 2010_ல் மேம்படுத்தப்பட்ட இச்சட்டத்தின்படி, இந்த இடத்தை எந்த வகையிலும் சேதப் படுத்தினாலோ, தவறாகப் பயன்படுத்தினாலோ அபராதமும் சிறைத் தண்டனையும் உண்டு. 

தகவல்கள்: வளாகத்திலிருந்து அறிவிப்புப் பலகை மற்றும் விக்கிப்பீடியாவிலிருந்து தமிழாக்கம் செய்துள்ளேன்.


***

13 கருத்துகள்:

 1. அறியாத பல சரித்திரச் சான்றுகளுடனும் அருமையான படங்களுடன் பகிர்ந்த விதம்அருமை.வாழ்த்துகளுடன்...

  பதிலளிநீக்கு
 2. எப்போதோசிறுவயதில் கோட்டைக்குசென்ற நினைவு இப்போடுடிப்புவைப்பற்றி புகழ்ந்துபேசவும் தயக்கம்அரசுக்கு திப்புஎன்றாலேயே அலர்ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான். கர்நாடகாவில் ஒவ்வொரு வருடமும் சிறப்பாகக் கொண்டாடப்படும் ‘திப்பு ஜெயந்தி’ சமீப வருடங்களாக அரசின் அழுத்தத்தால் சிறிய அளவிலேயே அதுவும் போலீஸ் பாதுகாப்புடன் கொண்டாடப்படுகிறது. நன்றி GMB sir.

   நீக்கு
 3. திப்பு சுல்தான் கோடைக்கால அரண்மனை மிக அழகாய் இருக்கிறது.

  படங்கள் எல்லாம் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி கோமதிம்மா. இது பெங்களூர் கோட்டை. திப்பு சுல்தானின் கோடைக்கால அரண்மனைக்கு அருகே உள்ளது.

   நீக்கு
 4. சுவாரஸ்யமான விவரங்கள்.  அழகிய படங்கள்.

  பதிலளிநீக்கு
 5. பெங்களூர் சென்றபோது பார்க்க ஆசைப்பட்ட இடம். அதனை பதிவாகத்தந்தமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடுத்த முறை வரும் போது செல்ல முயன்றிடுங்கள்.

   மிக்க நன்றி.

   நீக்கு
 6. ஸ்வாரஸ்யமான தகவல்கள்.

  படங்கள் மிகச் சிறப்பாக வந்திருக்கிறது. குறிப்பாக கோணங்கள்!

  பதிலளிநீக்கு
 7. பெங்களூர் கோட்டை.
  ..அழகிய படங்களும் அருமையான வரலாற்று செய்திகள்....

  அனைத்தையும் அறிந்துக் கொண்டேன்...

  3 மாதங்களுக்கு முன் இதன் வாசல் வரை சென்றுவிட்டு ஆனால் பார்க்காமல் வந்து விட்டோம்🙂

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin