Sunday, January 19, 2020

திருவள்ளுவர் தினக் கொண்டாட்டம் - பெங்களூரு ஹல்சூரு மணிமண்டபம்


ரண்டு வரிகள், மூன்று பிரிவுகள், ஒன்பது இயல்கள், நூற்றுமுப்பத்தி மூன்று அதிகாரங்கள், ஆயிரத்து முந்நூற்று முப்பது குறள்களைப் படைத்த திருவள்ளுவரைப் போற்றும் விதமாக ‘திருவள்ளுவர் தினம்’ ஒவ்வொரு வருடமும்  தை மாதத்தின் இரண்டாம் நாளன்று கொண்டாடப் படுகிறது. இந்த வருடமும் 16 ஜனவரி அன்று தமிழகத்திலும் தமிழர் வாழும் பிற இடங்களிலும் திருவள்ளுவர் சிலைக்கு மாலை மரியாதைகள் செய்யப்பட்டன.


நேற்று பெங்களூர் ஹல்சூரு ஏரிக்கரையில் அமைந்துள்ள திருவள்ளுவர் மணிமண்டபத்திற்குச் சென்றிருந்தேன். இரு தினங்களுக்கு முன் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட்டதைத் தொடர்ந்து மக்கள் இங்கு வந்த வண்ணமாக உள்ளனர். நான் சென்றிருந்த போதும் ஒரு சிலர் மாலைகளைக் கொண்டு வந்து அணிவித்து, திருவள்ளுவரை வலம் வந்து வணங்கிச் சென்றனர். கம்பீரமாக அமர்ந்திருக்கும் திருவள்ளுவரை நானும் வணங்கி, படங்களும் எடுத்தேன்.

#2

இந்த இடத்தில் நிறுவப்பட்டிருக்கும் திருவள்ளுவர் சிலைக்குப் பின்னால் ஒரு பெரிய வரலாறே உள்ளது. உங்களில் பலருக்கும் தெரிந்த ஒன்றே.

1991 ஆம் ஆண்டில் நாங்கள் பெங்களூருக்குக் குடிவந்தோம். எத்தனையோ முறை இந்த இடத்தைக் கடந்து செல்லும் போதெல்லாம் சாக்குப் பைகளால் மூடி இறுக்கக் கட்டி வைக்கப்பட்ட சிலையையே வருத்தத்துடன் பார்க்க நேர்ந்திருக்கிறது. அந்தப் பழைய சிலை அளவில் இப்போதிருக்கும் இந்தச் சிலையை விடச் சிறியது. அந்தச் சிலை சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்
பெங்களூரு தமிழ்ச் சங்கத்தின் முயற்சியால் பெங்களூரு மாநகராட்சியின் அனுமதியும் பெற்ற பிறகே நிறுவப் பட்டது.  அதை அப்போதைய கர்நாடக முதலமைச்சராக இருந்த திரு. பங்காரப்பா 1991_ஆம் ஆண்டு செப்டம்பர் ஒன்றாம் திகதி திறந்துவைப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. ஆனால், சில கன்னட அமைப்புகளின் எதிர்ப்பினாலும், அவர்கள் தொடுத்த வழக்கினாலும் சிலையைத் திறக்க முடியாமல் சாக்குப்பைகளால் மூடி வைக்கும் நிலைமை ஏற்பட்டது. பிரச்சனை பெரிதாகி கலவரங்கள் ஏற்படவும் தொடர்ச்சியான காவலர் பாதுகாப்பும் இருந்து வந்தது.

18 ஆண்டுகள் வரையில் நீடிந்த இந்தச் சிக்கலுக்கு தீர்வு காண கர்நாடக முதல்வர் எடியூரப்பா தமிழ்நாடு முதல்வர் கருணாநிதியுடன் நிகழ்த்திய பேச்சை வார்த்தையைத் தொடர்ந்து இச்சிலையைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. கன்னட அமைப்புகள் விடுத்த கோரிக்கையை அடுத்து நல்லெண்ண அடிப்படையில் சென்னையில் கன்னடக் கவிஞர் சர்வக்ஞரின் சிலை நிறுவப்பட்டு திறக்கப்பட்டது. பின்னர் பெங்களூரு தமிழ்ச் சங்கம் பழைய சிலையை நீக்கி விட்டு திருவள்ளுவருக்கு இந்தப் புதிய வெண்கலச் சிலையை தயாரித்து  அங்கு நிறுவியது.

2009_ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9_ஆம் தேதி அன்று நடந்த விழாவில் திரு. பங்காரப்பா முன்னிலையில் அப்போது தமிழக முதல்வராக இருந்த  கலைஞர் மு. கருணாநிதி சிலையைத் திறந்து வைத்தார். அப்போதும் கூட இச்சிலை திறப்புக்கு எதிராக கன்னட அமைப்புகள் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்தன என்றாலும் எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை.

இப்போது எந்தப் பிரச்சனையும் இன்றி ஏரிக்கரை மணிமண்டபத்தில் திருவள்ளுவர் மக்களுக்குக் காட்சி தந்து அருள்பாலிக்கிறார்.


[வரலாற்றுத் தகவல்கள்: விக்கிபீடியா]
***

11 comments:

 1. திருவள்ளுவர் சிலையின் கண் நம்மை பார்ப்பது போலவே உள்ளது.
  மிக அருமையாக படம் எடுக்கபட்டதால் அழகாய் மிளிரும் வள்ளுவர்.
  விவரங்கள் அறிந்தேன்.

  ReplyDelete
 2. ஆம்.   பழைய பிரச்னை நினைவில் இருக்கிறது.    சென்னையில் சர்வக்ஞர் சிலையை யாரும் கவனித்ததாய்த் தெரியவில்லை!

  ReplyDelete
  Replies
  1. கவனிக்கப்பட்டது செய்தியாக நமக்கு வராமல் போயிருக்கவும் வாய்ப்புள்ளது.

   நன்றி ஸ்ரீராம்.

   Delete
 3. அழகிய வள்ளுவர் சிலை. வரலாறும் அறிந்தோம்.

  ReplyDelete
 4. திருவள்ளுவரை மிக அழகாக படம் பிடித்திருக்கிறீர்கள்! பெங்களூருவில் திருவள்ளுவர் சிலை இத்தனை அழகாக இருப்பது பெருமிதமாக உள்ளது. அதற்குப்பின்னணியில் இத்தனை பெரிய கதை இருப்பது எனக்குத் தெரிந்திருக்கவில்லை.

  ReplyDelete
 5. அழகான படங்கள்.

  எல்லாவற்றிலும் அரசியல்! அது தானே அவர்களுக்குப் பிழைப்பு!

  ReplyDelete
  Replies
  1. நன்றி வெங்கட்.

   உண்மைதான்.

   Delete
 6. அழகான படங்கள்...தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்...

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin