புதன், 8 ஏப்ரல், 2015

‘தென்றல்’ அமெரிக்க இதழில் அட்டைப்படக் கட்டுரையாக.. முனைவர். விஜயாலயனின் பறவைக் காதல்

K.S. விஜயாலயன். ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கைத் தமிழர். இவரது ஃப்ளிக்கர் பக்கத்தை கடந்த ஆறு ஆண்டுகளாகத் தொடர்ந்து வருகிறேன். இயற்கையோ, பறவைகளோ, இரவுக் காட்சிகளோ.. எந்த வகைப்படமானாலும் சரி. கலைநயத்துடன் மிளிரும் அவற்றில் தென்படும் நேர்த்தி எப்போதும் என் பாராட்டுக்குரியவையாக இருந்து வருகின்றன.

திறமையும் உழைப்பும் ஒருசேரக் கொண்ட இந்த இளைஞரின் கலைத் திறனைக் கெளரவிக்கும் விதமாக சாதனையாளராகச் சிறப்பித்து, இவரது ஒளிப்படப் பயணம் குறித்த எனது கட்டுரையை அட்டைப்படக் கட்டுரையாக வெளியிட்டிருக்கும் தென்றல் ஆசிரியர் குழுவினருக்கு நன்றி.

ப்ரல் 2015 இதழில் வெளியாகியிருக்கும் கீழ்வரும் இந்தக் கட்டுரையை
தென்றல் இதழுக்கான பயனர் கணக்குடன் இங்கே இணையத்திலும் வாசிக்கலாம்: http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=9984


பறவைக் காதலர் விஜயாலயன்
லங்கைத் தமிழர் முனைவர். விஜயாலயன். ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பல்கலைக்கழகத்தில் பணியாற்றுகிறார். கணினிப் பொறியியலில் ஆய்வு முடித்தவர். ஒளிப்பட ஆர்வலரான இவரது கவனம் அதிகமாகப் பறவைகளின் மீதே.

"இயற்கைமீது எனக்குக் காதல். அதனால் என் பார்வை பறவைகளின் பக்கம் திரும்பியது" என்கிறார். பல நாட்டு நகரங்களின் அழகைக் கேமராவில் சிறைப்படுத்தியிருந்த போதும், இயற்கையையும் பறவைகளையும் படமெடுப்பதற்காகவே ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தாய்லாந்து, இந்தியா, நேபாளம் மற்றும் இலங்கையில் உள்ள காடுகளிலும் சரணாலயங்களிலும் சுற்றித் திரிந்திருக்கிறார்.

சிறுவயதில் அம்மாவின் பாட்டனி ஸ்க்ராப் புத்தகத்தில் பார்க்க நேர்ந்த நூற்றுக்கணக்கான இலைகளும் அதற்கு அம்மா எழுதி வைத்த குறிப்புகளும் ஆர்வத்தை ஏற்படுத்த, இவரும் தாவரங்களைத் தேடி அலைய ஆரம்பித்திருக்கிறார். பள்ளி நாட்களில் மாலைப் பொழுதுகளில் வசித்து வந்த வட இலங்கையில் தன் வீட்டின் பின்னாலும் பக்கத்து வீடுகளின் பின்புறங்களிலுமிருந்த பெரிய தோட்டங்களில் தாவர வகைகளை இனம் காணுவது, பூக்களையும் விதைகளையும் சேகரிப்பது, ‘டச் மி நாட்’ போன்ற செடிகளை வைத்து விளையாடுவது எனத் தொடங்கியிருக்கிறது இயற்கையுடனான உறவு. வீட்டு வேலிக்குப் பின்னாலிருந்து சதுப்பு நிலத்தில் மழைக்காலத்துக்குப் பின் வருடம் ஒருமுறை மட்டுமே பூக்கும் தாவரங்கள் கவனத்தை ஈர்த்திருக்கின்றன. அங்கேதான் நண்பர்களுடன் பட்டம் விட்டு, ஓடிப்பிடித்து விளையாடி, கனிகளைச் சேகரித்து மகிழ்ந்து இருந்திருக்கிறார். அப்போது அங்கு வரும் பறவைகளை மிமிக் செய்யும் வழக்கம் சிறுவர்களுக்குக் கொண்டாட்டத்தைக் கொடுத்திருக்கிறது. ‘குக்கூ’ எனப் பதில் குரல் கொடுத்த குயில்களும், காணக் கிடைத்த ஆள்காட்டிக் குருவிகளும் மெல்ல மெல்லத் தாவரங்கள் மீதிருந்த இவரது ஆர்வத்தை பறவைகள் பக்கம் திருப்பியிருக்கின்றன.



அப்போதிலிருந்து ஆராதிக்கத் தொடங்கி விட்டார் பறவைகளின் அழகை அவற்றின் உற்சாகம், வேகம், இனிய கானம், விதவிதமான வண்ணம், வியக்க வைக்கும் வடிவம் ஆகியவற்றுக்காகவே. தமிழில், தன் கையால் தயாரித்த ஸ்க்ராப் புத்தகத்தில், பார்த்த பறவைகளின் பெயர்களையும் விவரங்களையும் பதிவு செய்ய ஆரம்பிக்க, எண்ணிக்கை நூறைத் தாண்டியிருக்கிறது. ஒலிகளை வைத்தே பறவைகளை அடையாளம் காண்பது, எதற்காகக் குரல் கொடுக்கிறது என வித்தியாசத்தை உணர முடிவது, எப்போது எந்த இடங்களில் காணக் கிடைக்கும், எப்படி அவற்றைத் தொந்திரவு செய்யாமல் அருகே செல்வது போன்ற திறமைகளையும் கூடவே வளர்த்துக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் இலங்கையில் ஏற்பட்ட கலவரங்கள் இவரது bird watching நடவடிக்கைகளை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்து விட்டிருக்கிறது.

மேற்படிப்புக்காக தாய்லாந்து சென்றபோது பசுமையும், அமைதியும் கோலோச்சிய கல்லூரி வளாகத்தில் மீண்டும் துளிர்த்தது இயற்கை நேயம். ஆங்கிலத்தில் பறவைகளின் பெயர்கள், தகவல்களைத் தேடி அறிவதை இணையம் எளிதாக்கியது. ஜூம் வசதிகொண்ட டிஜிட்டல் கேமராவுடன் வார இறுதிகளில் தாய்லாந்தின் காட்டுப்பகுதிகளில் சுற்றித்திரிந்து படம் எடுத்தவர், பணம் சேமித்து 55-200 mm லென்ஸுடன் நுழைவுக்கட்ட DSLR வாங்கியிருக்கிறார். பறவைகள், பூக்கள், தாவரங்கள், இயற்கைக்காட்சிகள் என இவர் தொகுத்த ஃபேஸ்புக் ஆல்பங்கள் "விஜயாலயனைப் பார்க்க வேண்டுமானால் புதரில் தேடு" என நண்பர்களைக் கேலி செய்ய வைத்திருக்கிறது.

விஜயாலயன் படிப்பிலும் குறை வைக்கவில்லை. கனவு கண்டபடியே PhD அட்மிஷன் மெல்போர்ன் பல்கலைக்கழகத்தில் கிடைத்தது. "அங்கிருந்த அழகான கட்டிடங்களைவிட என்னை அதிகம் கவர்ந்தது பறவைகள்தாம்" என்று சொல்லிச் சிரிக்கிறார் விஜயாலயன். ஓய்வுநேரத்தில் போகுமிடமெல்லாம் பறவை சுடத் தொடங்கிவிட்டார், கேமராவில்தான். பெரிய ஜூம் லென்ஸுகள் இன்றிச் சாதாரணமான புகைப்படக் கருவிகளைக் கொண்டே இதுவரை 300க்கும் அதிகமான பறவை இனங்களைப் பளிச்சென்று படமாக்கியிருக்கிறார். அவற்றில் பாதி ஆஸ்திரேலியப் பறவையினங்கள். தன்னார்வலர்களைக் கொண்ட Birdlife Australia அமைப்புடன் இணைந்து செயல்படுகிறார். அவர்களது இணையதளத்தில் இவர் எடுத்த படங்கள் கற்பிக்கும் ஸ்லைடுகளாகப் பயன்படுகின்றன. அதன் நிறுவன உறுப்பினராகவும், அவர்கள் வெளியிடும் மாதாந்தரப் பத்திரிகையின் 2012 டிசம்பர் இதழில் 'சிறப்புக் கவனம்பெறும் புகைப்படக் கலைஞர்' ஆகவும் கௌரவம் பெற்றுள்ளார்.

"எந்தப் பறவை எங்கே இருக்கும்னு தெரியணும். அங்கே போய்ப் பொறுமையாகக் காத்திருக்கணும். எங்கே கிளம்பினாலும் கையில கேமரா இருக்கணும். இதுதான் பறவைக்காதலனின் அடையாளம்" என்கிறார் விஜயாலயன். இவர் எடுத்த இயற்கைக் காட்சிகளும், கட்டடக்கலை படங்களும், வண்ணவிளக்குகளில் ஒளிரும் இரவுநேர மெல்போர்ன் நகரக் காட்சிகளும் மிகுந்த பாராட்டுப் பெற்றவை.

இவற்றையெல்லாம் பார்க்க:
Clicking Moments - Flickr
www.evergreenclicks.com/nature
facebook.com/evergreenclickscom

அனுபவப் பூர்வமான ஆலோசனைகளை அறிய: clicking-moments.blogspot.com.au

- ராமலக்ஷ்மி, பெங்களூரு
**


திருமதி. சரஸ்வதி தியாகராஜன் அவர்களின் குரலில், ஒலி வடிவில் கேட்க: http://www.tamilonline.com/media/Apr2015/32/Apr2015_Sathaniyalar_Vijayalayan.mp3

**

தென்றல் இதழ் அட்டையில்..
‘கண் கவரும் கருப்பு அன்னங்கள்’
படம்: K.S. விஜயாலயன், ஆஸ்திரேலியா


அட்டையிலிருக்கும் அன்னங்களோடு மேலும் பத்துப் படங்களைத் தென்றல் ஆன்லைனில் காணலாம்.

மாதிரிக்கு மூன்று இங்கே:
#
படம்: K.S. விஜயாலயன்
#
படம்: K.S. விஜயாலயன்
#
படம்: K.S. விஜயாலயன்

நன்றி தென்றல்! வாழ்த்துகள் விஜயாலயன்!
***


8 கருத்துகள்:

  1. வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

    இதுமாதிரி பொழுது போக்குகள்தான் வாழ்வைச் சுவாரஸ்யமாக்குகின்றன.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin