வியாழன், 15 மார்ச், 2012

தூறல்: 2 - எங்கள் கையில் இந்தியா

அரசின் மெத்தனம்:

எழுநூற்று இருபது சதுரக் கிலோமீட்டர் பரப்பளவில் பத்து மில்லியன் மக்களுக்கு வீடாக இருக்கிற பெங்களூரில் மொத்தம் இருப்பது பதிமூன்றே தீயணைப்பு நிலையங்கள். பணியாற்றும் படைவீரர் வெறும் நானூறு பேர்களே. மற்ற மாநிலங்களில் எப்படிங்க?

இந்த அதிர்ச்சி அளிக்கும் தகவல் 23 பிப்ரவரி அன்று நடைபெற்ற கால்டன் தீவிபத்து இரண்டாம் வருட நினைவு நாளின் போது வெளிவந்துள்ளது. குறைந்த பட்சம் அறுபது நிலையங்களாக நகரத்துக்குத் தேவை என சென்ற வருடம் ஆய்வு அறிக்கையை மட்டும் அழகாக வெளியிட்டிருக்கிறது அரசு.

ஜன கிரஹா அமைப்பைச் சேர்ந்த ஸ்வாதி இராமநாதன் அரசின் மெத்தனத்தையும் அலட்சியப் போக்கினையும் கண்டித்து அளித்த பேட்டியில் “குடிசைப் பகுதிகளிலும், அதி உயரக் கட்டிடங்களிலும் ஆபத்து எப்போது வருமென்றே சொல்ல முடியாது. அப்படி வருகையில் படையினர் பத்து நிமிடங்களுக்கு உள்ளாக அங்கிருக்க வேண்டும். போக்குவரத்து நெருக்கடி மிகுந்த மாநகரத்தில் 13 நிலையங்களுடன் அது சாத்தியமா?” எனக் கேட்கிறார்.

[இப்படி இவர் சொன்ன மறுநாள் ஏற்பட்ட ரஸல் மார்க்கெட் விபத்தின் போது அந்த அதிகாலை வேளையிலும் படையினர் 1 மணி நேரம் கழித்தே சம்பவ இடத்துக்கு வந்தனர் என்பதும் இங்கு குறிப்பிட வேண்டிய ஒன்று.]

கால்டன் விபத்தில் புகையின் நெடி தாளாமல் மாடிகளிலிருந்து குதித்து உயிரிழந்த 9 பேர்களுக்கான நினைவுநாள் கூட்டத்தில், ஒரு நிமிட மெளன அஞ்சலியின் போது எழுந்த விசும்பல்களுக்கு யார் என்ன ஆறுதல் தந்து விட முடியும்? ஆயினும் தம் துயரை மனதோடு சுமந்து கொண்டு இந்தக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் "Beyond Carlton" (கால்டனுக்கு அப்பால்) எனும் அமைப்பை ஏற்படுத்திக் கொண்டு பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள் ஆகியவற்றை அணுகி அதிகபட்ச பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இருக்க வலியுறுத்தி வருகின்றனர்.

அரசின் மெத்தனம் தொடர்ந்தாலும் அக்கறையுடன் ஒரு அதிகாரி அன்றைய தினத்தில் வழங்கிய ஆலோசனை இது: “புகையின் திணறலில் இருந்து தப்பிக்க தவழ்ந்தோ, அமர்ந்தபடி நகர்ந்தோ செல்ல வேண்டும். ஏனெனில் புகை மேல்பக்கமாக நகரும் தன்மை கொண்டது. மூக்கினை ஈரத்துணியால் மூடிக் கொள்ள வேண்டும்”


உயிரின் மதிப்பு:

மற்றவர் உயிரோடு விளையாடும் உரிமையை யார் தந்தனரோ அரசுக்கு? கால்டன் விபத்தைத் தொடர்ந்து அரசு இப்போது உயர்ந்த கட்டிடங்கள் அலுவலகங்களில் விழிப்புணர்வுக்காக (mock drill) பாதுகாப்பு ஒத்திகைகளைக் கட்டாயமாக்க, பெரும்பாலான அலுவலகங்கள் தனியார்களை அழைத்து இதை நடத்திக் கொள்வதில் ஒரு அர்த்தம் இருக்கவே செய்கிறது. 23 வயதான நளினி தான் வேலை செய்த ஆடை நிறுவனத்தின் தலைமையகத்தில் இந்த ஒத்திகை நடக்கயிருப்பது கேள்விப்பட்டு, பொதுநல அதிகாரியான தான் செல்வது அவசியம் எனக் கருதி பெங்களூர், பீன்யாவிலிருந்து யஷ்வந்த்பூர் அலுவலகத்துக்குச் சென்றிருக்கிறார்.

அரசின் தீ மற்றும் அவசரகாலச் சேவைத் துறையினர் நிகழ்த்திய இந்த ஒத்திகையில் தமது ஆட்களை வைத்துச் செய்யாமல் அலுவலகத்தைச் சேர்த்தவர்களை ஒத்திகையில் ஈடுபடுத்தியது முதல் தவறு. தமது ஆட்களென்றால் இன்னும் கவனமாக இருந்திருக்க மாட்டார்களா என்ன? தன் தைரியத்தால் எப்போதும் மற்றவருக்கு முன் மாதிரியாக இருந்து வந்த நளினி தானாக முன்வந்து இதில் கலந்து கொண்டதாகச் சொல்லுகிறார்கள். மூன்றாம் மாடி அருகே இறங்கிக் கொண்டிருக்கையில் பிடித்திருந்த கயிறு பலம் தாங்காமல் அறுந்து போக தரையில் மோதி விழுந்து சம்பவ இடத்திலேயே காலமாகி விட்டார்.

கயிறு பலம் தாங்குமா என முறையாகப் பரிசோதிக்கப்படாதது ஒரு பக்கமிருக்க “பொதுவாக கீழே நாங்கள் வலையோ, படுக்கையோ விரிப்பது வழக்கம்; இந்த முறை அதைச் செய்யாதது எங்கள் தவறே” எனத் தீயணைப்புத் துறை உயர் அதிகாரி ஒருவரின் வியாக்கியானம் போன உயிரை மீட்டுக் கொடுக்குமா:(?

“சில நேரங்களில் இப்படி சில அசம்பாவிதங்கள் நடந்து போவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது” என்பதில் அடங்கி விடுகிறது அவர்களது வருத்தம். இச்சம்பவம் தொடர்பாக எவர் மீதும் புகார் பதிவு செய்யப்படாததுடன், விசாரித்து முடிவெடுப்போம் என்கிற பூசலான அறிக்கை மட்டும் வெளியானது. உயிருக்கான மதிப்பை எவராலும் எதனாலும் ஈடு செய்ய முடியாதென்றாலும் நளினியின் குடும்பத்துக்கு நட்ட ஈடு வழங்கப்படுமா என்பது குறித்தும் அரசுத் தரப்பிலிருந்து உறுதியான தகவல் ஏதும் இல்லை என்கின்றன பத்திரிகைகள்.


உலக நீர் நாள்:
22 மார்ச் 2012 உலக நீர் நாளுக்கான விழிப்புணர்வுப் படம்.

‘மண் மரம் வளம் மனிதன்’ திரு. வின்சென்ட் அவர்கள் இதை அவரவர் வலைப்பக்கங்களில் பதிந்து விழிப்புணர்வைப் பரப்பிட வேண்டுகோள் விடுத்துள்ளார். படத்தின் html code-யை இங்கே தந்திருக்கிறார் நம் வசதிக்காக. [நானும் கொடுக்க முயன்றேன். ஆனால் படமாகி விடுகிறது. எனவே அங்கிருந்து பெற்றிடுங்கள்!]

2010-ல் பதிவர்களுக்கு இவர் விடுத்திருந்த அழைப்பின் பேரில் நான் எழுதிய “உலகம் உய்ய.. - தண்ணீர் தினத்துக்காக” !

தொடர்ந்து பலரும் எழுதிய விழிப்புணர்வுப் பதிவுகளின் தொகுப்பு திரு வின்செண்ட் அவர்களின் தளத்தில் இங்கே.

இதை இந்த வருடமும் தொடரலாமே. எழுதாதவர்கள் மேலும் பதிவுகள் இட்டு அதன் சுட்டிகளை தொகுப்பின் பின்னூட்டத்தில் தெரிவித்திடுங்களேன்.


அதீதம் கார்னர்:


வலையோசை 12: ‘அன்புடன் அருணா
வலையோசை 13: பாச மலரின் ‘பெட்டகம்


1 மார்ச், மகளிர் தின ஃபோட்டோ கார்னர்:
1. தாயுமானவள் - திவாகர்
2. சூடிக் கொடுத்த சுடர்க்கொடி - பிரேம் ஆனந்த்
3. கலையின் காதலன் - ரஞ்சனி

15 மார்ச், இன்றைய ஃபோட்டோ கார்னர்: மூன்று தலைமுறைகள் by iamaiman

1. ஓய்வற்ற உழைப்பு
2. வண்ணக் கனவுகள்
3. எங்கள் கையில் இந்தியா

பிடித்த படங்களின் மேல் க்ளிக் செய்து பெரிதாக்கியும் ரசித்திடலாம்:)!


தமிழக மின்வெட்டும் ஜான் கென்னடியும் (படத்துளி): ‘இருட்டை சபித்துக் கொண்டிராமல் மெழுகுவர்த்தியை ஏற்றிடப் பார்’ (‘Better to light a candle than curse the darkness’)! இந்தப் பழமொழியோடு சேர்த்து பொதுவாக அதைப் பொதுவில் உபயோகித்தவர்களும் நினைவு கூர்ந்திடப்படுகிறார்கள். உடன் நினைவுக்கு வருபவர் ஜான் கென்னடியாக இருந்தாலும் முதன் முதாலாக இதைப் பொதுவில் கையாண்டவர் பீட்டர் பெனன்சன் எனும் ஆங்கிலேயர்; 1961_ஆம் ஆண்டு மனித உரிமை நாள் விழாவில் தான் ஆற்றிய உரையில்!

வாழ்வியல் தத்துவமாகச் சொல்லப்பட்ட இம்மொழியோடு தமிழக மின்வெட்டை சம்பந்தப்படுத்திப் பார்த்தால், அப்பாடீ..., டன் டன்னாக அல்லவா தேவைப்படும் மெழுகுவர்த்திகள்! இலவச மெழுகுவர்த்தி திட்டம் ஏதேனும் அரசின் பரீசிலனையில் இருக்குமா என்பது அம்மாவுக்கே வெளிச்சம்!!!!
***


(அவ்வப்போது தூறும்)

34 கருத்துகள்:

  1. nice photo..
    ஜான் கெனடிக்கும் மெழுகுவத்திக்கும் என்ன சம்மந்தம்?

    பதிலளிநீக்கு
  2. சிந்திக்க வேண்டிய விஷயங்களைத் தந்திருக்கிறீர்கள்.
    ஒரு பேச்சுக்காக திடீரென்று அரசு பதிமூன்றிலிருந்து பத்தாயிரத்துக்கு அதிகரிக்கும் திட்டத்தைக் கொண்டு வருகிறது என்று வைப்போம். எங்கே தீயணைப்பு நிலையங்களைக் கட்டுவார்கள்? தண்ணீருக்கு எங்கே போவார்கள்? சாலை நெரிசல் எப்படி மறையும்?
    ஒரு நகரம் உருவாகிறது என்றால் அதன் திட்டத்திலேயே தீயணைப்பு நூலகம் பூங்கா போன்ற பொது நல/வசதி அமைப்புகள் சேர்க்கப்பட வேண்டும். அப்படியில்லாத போது ஆபத்து காலத்தில் அடித்துக் கொள்ள வேண்டியது தான். பத்து நிமிட அண்மையில் தீயணைப்பு நிலையம் இல்லை என்று தெரிந்து தானே வீடு வாங்குகிறோம்? தீயணைப்பு நிலையம் கட்டப்படவில்லை என்றாலும் அதற்கான இட ஒதுக்கீடு இருக்கிறதா என்று தெரிந்து கொள்ளவாவது வேண்டாமா? நாம் செய்ய மாட்டோம். தீயணைப்பு நிலையத்துக்கு கிடைக்கும் தண்ணீரை சும்மா விடுவோமா?

    பதிலளிநீக்கு
  3. தூறல் வலுக்க ஆரம்பிச்சிடுச்சு ! அரசியல் பக்கம் போகாத ராமலட்சுமி கூட அம்மாவுக்கு கேள்வி எழுப்புறாங்க !!

    பதிலளிநீக்கு
  4. தீ விபத்திலிருந்து தப்பிக்க அதிகாரி வழங்கிய ஆலோசனை நிச்சயம் தேவையானது. ,///

    விழிப்புணர்வு ஒத்திகையின் போது நிகழ்ந்த நளினியின் மரணத்திற்கு மன்னிப்பே கிடையாது.///

    உலக நீர் நாளுக்காக எழுதப்பட்ட எனது பதிவை - நீங்கள் தந்த சுட்டியில் வாசித்தேன். இந்த ஆண்டும் தண்ணீர் குறித்த விழிப்புணர்வு எழுத வேண்டும். நல்ல பதிவு.

    பதிலளிநீக்கு
  5. //மற்றவர் உயிரோடு விளையாடும் உரிமையை யார் தந்தனரோ அரசுக்கு?//

    நானும் படித்து மிகவும் வருந்தினேன்.

    தங்களுடைய கேள்விகளுக்கு நிச்சயம் பதில் கிடைக்கும்!

    பதிலளிநீக்கு
  6. @ அப்பாதுரை,

    படத்துக்குக் கீழ் சொல்லியிருப்பதை வாசிக்கவில்லை என எண்ணுகிறேன்:)!

    ----

    பத்தாயிரம் நிலையம் வேண்டும் என யாரும் இங்கே மல்லுக்கு நிற்கவில்லை.

    அரசின் ஆய்வுப்படியே பார்த்தாலும் அறுபதாவது இருக்க வேண்டியுள்ளது. பதிமூன்று எங்கே? அறுபது எங்கே? நகரம் என்பது விரிவடையே செய்யும். அதற்கேற்ற எல்லா வசதிகளையும் கவனிக்க வேண்டியதும் அரசின் கடமையே. ஐடி நகரம் எனும் பெயரை தக்க வைத்துக் கொள்ள ஊருக்குள் வளைத்து வளைத்து பாலங்களையும் மெட்ரோவையும் கட்டுகிறவர்கள்; சாலை விரிவாக்கத்துக்கு என மத்திய அரசின் கீழ் உள்ள இராணுவத்துக்கு சொந்தமான, மற்றும் தனியார் இடங்களைக் கேட்டுப் பெறுகிறவர்கள், கூட முப்பது இடங்களில் இதை நிறுவவது முடியாத காரியம் ஒன்றும் இல்லை. அலட்சியமே காரணம். அலுவலகங்கள், கட்டிடங்கள், பள்ளிகள் போன்றவை பாதுக்காப்பு ஏற்பாடுகளை முறைப்படி பின்பற்ற வேண்டும் என்பதையும் மறுப்பதற்கில்லை என்றாலும் தொடர்ந்து ஏற்பட்ட பல விபத்துகளுக்குப் பிறகும் அரசு காட்டும் மெத்தனப் போக்கையே கண்டித்திருக்கிறது ஜன கிரஹா.

    விரைவான விரிவான கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  7. மோகன் குமார் said...
    //தூறல் வலுக்க ஆரம்பிச்சிடுச்சு ! அரசியல் பக்கம் போகாத ராமலட்சுமி கூட அம்மாவுக்கு கேள்வி எழுப்புறாங்க !!//

    வெளிச்சம் பிறக்காதா என்றுதான்:)! நன்றி மோகன் குமார்.

    பதிலளிநீக்கு
  8. தமிழ் உதயம் said...
    //உலக நீர் நாளுக்காக எழுதப்பட்ட எனது பதிவை - நீங்கள் தந்த சுட்டியில் வாசித்தேன். இந்த ஆண்டும் தண்ணீர் குறித்த விழிப்புணர்வு எழுத வேண்டும். நல்ல பதிவு.//

    இன்னும் சிலரேனும் தொடர்வார்கள் என நம்புவோம். கருத்துகளுக்கு மிக்க நன்றி ரமேஷ்.

    பதிலளிநீக்கு
  9. அமைதி அப்பா said...
    ***//மற்றவர் உயிரோடு விளையாடும் உரிமையை யார் தந்தனரோ அரசுக்கு?//

    நானும் படித்து மிகவும் வருந்தினேன்.

    தங்களுடைய கேள்விகளுக்கு நிச்சயம் பதில் கிடைக்கும்!/***

    நம்புவோம். நன்றி அமைதி அப்பா.

    பதிலளிநீக்கு
  10. அரசின் அலட்சியம் பல சமயங்களில் நம்மை வருந்தத்தான் வைக்கிறது. என்ன செய்ய..? தீ விபத்து சமயத்தில் நடந்து கொள்ள வேண்டிய முறை பற்றிய ஆலோசனை புதிது எனக்கு. மிக நன்று. மற்ற பகுதிகள் அனைத்துமே சிந்தனையைத் தூண்டுவதாக அமைந்திருந்தன. ந்ன்றி!

    பதிலளிநீக்கு
  11. நல்லதொரு விழிப்புணர்வு கட்டுரை...ரொம்ப உணர்வு பூர்வமாய் எழுதி இருக்கீங்க...
    நானும் தண்ணீர் பற்றிய கட்டுரையை அளிக்கிறேன் விரைவில்

    பதிலளிநீக்கு
  12. கண்ணீரின் சேமிப்பு பற்றியும், தண்ணீரின் சேமிப்பு பற்றியும் அடுத்தடுத்து...

    அந்த அதிகாரி சொல்வது நல்ல யோசனைதான். நமக்குத் தெரியும். ஆனால் நாம் உட்கார்ந்து தவழ ஆரம்பிக்கும்போது சுற்றிலும் யோசிக்காமல் பீதியில் ஓடுபவர்கள் நம்மை மிதித்துக் கூழாக்கி விடுவார்களே...!

    பதிலளிநீக்கு
  13. கயிறு பலம் தாங்குமா என முறையாகப் பரிசோதிக்கப்படாதது ஒரு பக்கமிருக்க “பொதுவாக கீழே நாங்கள் வலையோ, படுக்கையோ விரிப்பது வழக்கம்; இந்த முறை அதைச் செய்யாதது எங்கள் தவறே” எனத் தீயணைப்புத் துறை உயர் அதிகாரி ஒருவரின் வியாக்கியானம் போன உயிரை மீட்டுக் கொடுக்குமா:(?//

    வருந்தத்தக்க இந்த நிகழ்ச்சி உயர் அதிகாரியின் அலட்சிய போக்கை காட்டுகிறது.
    பொறுப்பற்றவர்களின் செயலால் வாழவேண்டிய சின்னவயது பெண்ணின் உயிர் பறி போனதே!

    உலகநீர் வளத்திற்கு விழிப்புணர்வுபதிவு போனமுறை எழுதியது போல் இந்தமுறையும் எழுதவேண்டும்.

    உங்கள் நினைவூட்டலுக்கு நன்றி ராமலக்ஷ்மி.

    மெழுகுவர்த்தி படம் அருமை.

    பதிலளிநீக்கு
  14. தீ விபத்து பகிர்வு,உலக நீர்நாள் பகிர்வுக்கு நன்றி.
    மெழுகுவர்த்தி படத்தி முன்பே ரசித்திருக்கிறேன்.மூன்று தலைமுறைகள்
    மிக துல்லியம்.

    பதிலளிநீக்கு
  15. உங்களூரில் எங்களூரில் என்று வாதம் இல்லை. இருந்தால்ம் ஒரு பெண்ணை ரிஸ்க் எடுக்க வைத்த முட்டள்தனத்தை என்ன சொல்வது. இந்த வருடம் பெண்கள் பரலோகம் போகும் வருடமா என்று நினைக்க வைக்கிறது.
    மெழுகுவர்த்தி படம் வெகு அருமை. மின்சாரத்தைச் சேகரிப்பதில் நாங்களும் மும்முரமாகிவிட்டோம்.

    தலைவலியும் நோவும் தனக்கு வந்தால் அல்லவா தெரியும். எல்லாரும் மஹாத்மா போல விசிறியும் ராட்டினமுமாக இருப்பார்களா.
    சுரண்டுவதையும், அதைக் காப்பதிலும் அவர்கள் சக்தி பூராவும் செலவழிகிறது.
    மிக நல்ல பதிவு.

    பதிலளிநீக்கு
  16. //“சில நேரங்களில் இப்படி சில அசம்பாவிதங்கள் நடந்து போவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது” என்பதில் அடங்கி விடுகிறது அவர்களது வருத்தம்//

    தப்பித்துக் கொள்ளும் மனப்பான்மை இவங்க கிட்ட இருக்கறதையே இது காட்டுது..

    பதிலளிநீக்கு
  17. விழிப்புணர்வு பகிர்வு. பாவம் நளினி....

    உலக நீர் நாள் - விழிப்புணர்வு வர வேண்டும் எல்லோரிடமும்.

    பதிலளிநீக்கு
  18. கணேஷ் said...

    //அரசின் அலட்சியம் பல சமயங்களில் நம்மை வருந்தத்தான் வைக்கிறது. என்ன செய்ய..? தீ விபத்து சமயத்தில் நடந்து கொள்ள வேண்டிய முறை பற்றிய ஆலோசனை புதிது எனக்கு. மிக நன்று. மற்ற பகுதிகள் அனைத்துமே சிந்தனையைத் தூண்டுவதாக அமைந்திருந்தன. ந்ன்றி!//

    நன்றி கணேஷ்.

    பதிலளிநீக்கு
  19. அருள் said...

    //ஐ.நா.மனித உரிமைத் தீர்மானம்: எனது சிறு பங்களிப்பு! //

    பதிவை வாசித்தேன். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  20. ஷைலஜா said...

    //நல்லதொரு விழிப்புணர்வு கட்டுரை...ரொம்ப உணர்வு பூர்வமாய் எழுதி இருக்கீங்க...//

    நன்றி ஷைலஜா.

    //நானும் தண்ணீர் பற்றிய கட்டுரையை அளிக்கிறேன் விரைவில்//

    அவசியம் தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  21. ஸ்ரீராம். said...

    //கண்ணீரின் சேமிப்பு பற்றியும், தண்ணீரின் சேமிப்பு பற்றியும் அடுத்தடுத்து...

    அந்த அதிகாரி சொல்வது நல்ல யோசனைதான். நமக்குத் தெரியும். ஆனால் நாம் உட்கார்ந்து தவழ ஆரம்பிக்கும்போது சுற்றிலும் யோசிக்காமல் பீதியில் ஓடுபவர்கள் நம்மை மிதித்துக் கூழாக்கி விடுவார்களே...!//

    எழுதும் போது எனக்கும் தோன்றியது ‘தெரிந்தவர்களும் கூட அந்த நேரத்தில் மறந்து போய் பீதியில் ஓடவே முயன்றிடுவார்களோ’ என்பதே. இருப்பினும் அதிகாரி கொடுத்த ஆலோசனை பகிரப் பட வேண்டிய ஒன்றென எண்ணினேன்.

    நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  22. கோமதி அரசு said...

    /வருந்தத்தக்க இந்த நிகழ்ச்சி உயர் அதிகாரியின் அலட்சிய போக்கை காட்டுகிறது.
    பொறுப்பற்றவர்களின் செயலால் வாழவேண்டிய சின்னவயது பெண்ணின் உயிர் பறி போனதே!

    உலகநீர் வளத்திற்கு விழிப்புணர்வுபதிவு போனமுறை எழுதியது போல் இந்தமுறையும் எழுதவேண்டும்.

    உங்கள் நினைவூட்டலுக்கு நன்றி ராமலக்ஷ்மி.

    மெழுகுவர்த்தி படம் அருமை.//

    கருத்துக்கு நன்றி கோமதிம்மா. உலகநீர் வளம் குறித்த உங்கள் பகிர்வுக்குக் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  23. Asiya Omar said...

    //தீ விபத்து பகிர்வு,உலக நீர்நாள் பகிர்வுக்கு நன்றி.
    மெழுகுவர்த்தி படத்தி முன்பே ரசித்திருக்கிறேன்.மூன்று தலைமுறைகள்
    மிக துல்லியம்.//

    மிக்க நன்றி ஆசியா.

    பதிலளிநீக்கு
  24. வல்லிசிம்ஹன் said...

    //உங்களூரில் எங்களூரில் என்று வாதம் இல்லை. மெழுகுவர்த்தி படம் வெகு அருமை. மின்சாரத்தைச் சேகரிப்பதில் நாங்களும் மும்முரமாகிவிட்டோம்.

    தலைவலியும் நோவும் தனக்கு வந்தால் அல்லவா தெரியும். எல்லாரும் மஹாத்மா போல விசிறியும் ராட்டினமுமாக இருப்பார்களா. சுரண்டுவதையும், அதைக் காப்பதிலும் அவர்கள் சக்தி பூராவும் செலவழிகிறது.//

    சரியாகச் சொன்னீர்கள்!

    //மிக நல்ல பதிவு.//

    நன்றி வல்லிம்மா.

    பதிலளிநீக்கு
  25. அமைதிச்சாரல் said...

    **//“சில நேரங்களில் இப்படி சில அசம்பாவிதங்கள் நடந்து போவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது” என்பதில் அடங்கி விடுகிறது அவர்களது வருத்தம்//

    தப்பித்துக் கொள்ளும் மனப்பான்மை இவங்க கிட்ட இருக்கறதையே இது காட்டுது..//**

    எல்லா விஷயங்களிலும் அதைதானே செய்து கொண்டிருக்கிறார்கள்!

    நன்றி சாந்தி.

    பதிலளிநீக்கு
  26. கோவை2தில்லி said...

    //விழிப்புணர்வு பகிர்வு. பாவம் நளினி....

    உலக நீர் நாள் - விழிப்புணர்வு வர வேண்டும் எல்லோரிடமும்.//

    நன்றி ஆதி.

    பதிலளிநீக்கு
  27. விழிப்புணர்வுகள் ஏற்பட வேண்டிய பகுதிகளைத் தொட்டிருக்கிறீர்கள்...
    நல்லது கொஞ்சமேனும் நடக்காதா என்று ஏங்கத்தான் செய்கிறோம்...


    மெழுகுவர்த்தி படம் மிகவும் அருமை

    பதிலளிநீக்கு
  28. நல்ல பகிர்வு... இந்த வருடம் நானும் பதிவிடுகிறேன்....

    பதிலளிநீக்கு
  29. பாச மலர் / Paasa Malar said...
    //விழிப்புணர்வுகள் ஏற்பட வேண்டிய பகுதிகளைத் தொட்டிருக்கிறீர்கள்...
    நல்லது கொஞ்சமேனும் நடக்காதா என்று ஏங்கத்தான் செய்கிறோம்...//

    அதுவே ஆதங்கம்.

    //மெழுகுவர்த்தி படம் மிகவும் அருமை//

    நன்றி மலர்.

    பதிலளிநீக்கு
  30. வெங்கட் நாகராஜ் said...
    //நல்ல பகிர்வு... இந்த வருடம் நானும் பதிவிடுகிறேன்....//

    அவசியம் பதிவிடுங்கள். நன்றி வெங்கட்.

    பதிலளிநீக்கு
  31. படிக்க மட்டுமல்ல சிந்திக்கவைக்கிறது உங்களின் பதிவு...முதற்கண் உங்களது சமுதாய அக்கறைக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்...என்ன செய்வது பொதுத்துறைகளின் இந்த அலட்சிய போக்குகளை....ஒருவரை கேட்டால் மற்றொருவரை கைகாட்டி குற்றம் சொல்லுவார்..அவரை கேட்டால் இவரை சொல்லுவார்...ஆக நடந்த தவறுக்கு யாரும் பழி ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.....யாரை நொந்துகொள்வது :(

    பதிலளிநீக்கு
  32. தம் துயரை மனதோடு சுமந்து கொண்டு இந்தக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் "Beyond Carlton" (கால்டனுக்கு அப்பால்) எனும் அமைப்பை ஏற்படுத்திக் கொண்டு பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள் ஆகியவற்றை அணுகி அதிகபட்ச பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இருக்க வலியுறுத்தி வருகின்றனர்.

    துயரை சுமந்து துடைக்க வழியும் அளிக்கும் உன்னத உறவுகள்!

    பதிலளிநீக்கு
  33. Nithi Clicks said...
    //படிக்க மட்டுமல்ல சிந்திக்கவைக்கிறது உங்களின் பதிவு...//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நித்தி. பலரின் மனதில் இருக்கும் ஆதங்கங்களின் பிரதிபலிப்பே என் பகிர்வு.

    பதிலளிநீக்கு
  34. இராஜராஜேஸ்வரி said...
    //துயரை சுமந்து துடைக்க வழியும் அளிக்கும் உன்னத உறவுகள்!//

    ஆம் பாராட்டுக்கும் வணக்கத்துக்கும் உரியவர்கள். நன்றி இராஜராஜேஸ்வரி.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin