Monday, March 12, 2012

மீண்டு வந்த ரஸல் மார்க்கெட்டும் பெங்களூர் ஏழை வியாபாரிகளும்

#1
தீ விபத்திலிருந்து மீண்டு வந்திருக்கும் ரஸல் மார்க்கெட்டை சரியாக இரண்டு வாரங்கள் கழித்துப் பார்க்கச் சென்றிருந்தேன். பெங்களூர் சிவாஜிநகர் பகுதியில் இருக்கும் ரஸல் மார்க்கெட்டை நகரில் பலகாலமாக வசிப்பவர் அறியாமலிருக்க முடியாது. 90-களின் தொடக்கத்தில் பீங்கான் பாத்திரங்கள், சமையலறை சாமான்கள் வாங்க ரஸல் மார்க்கெட்டுக்கு அடுத்து, தேவாலயத்தின் நேர் எதிராக அமைந்த இந்த மைதானத்தைச் சுற்றிய கடைகளுக்கு அடிக்கடி நான் சென்றதுண்டு:
#2
பல்பொருள் அங்காடிகள் பெருகி விட்ட நிலையிலும், அவரவர் வசிக்கும் பகுதிகளிலேயே கிடைக்காத பொருள் இல்லை எனும் வளர்ச்சியினாலும் வாகனம் நிறுத்த இடம் கிடைப்பது சிரமம் என்பதாலும் அங்கு போவதை அதன் பிறகு என்னைப் போல நிறுத்தி விட்டவர் பலர். ஆயினும் இன்றைக்கும் தொடர்ந்து வாடிக்கையாளர்களாக அங்கு செல்லுபவர் இருக்கவே செய்கிறார்கள்.

#3
85 வருடப் பழமை வாய்ந்த 1927-ல் பிரிட்டிஷ்காரர்களால் கட்டப்பட்ட இக்கட்டிடத்தில் பரம்பரையாக, பலதலைமுறைகளாக வியாபாரம் செய்கிறவர்கள் அநேகம் பேர். காய்கறி, பழங்கள், பூக்கள், விளையாட்டுப் பொருட்கள், துணிமணிகள் விற்கிற 440 சிறு கடைகளை, சூரியன் அதிகம் எட்டிப் பார்க்க முடியாத அகன்ற கட்டிடத்தினுள் கொண்டது. அரசுக்குச் சொந்தமான இந்த இடத்தில் கடைகளைக் குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகிறார்கள் ஏழை வியாபாரிகள். பொதுமக்கள் தவிர்த்து நட்சத்திர ஓட்டல்கள், ஐடி அலுவலகங்களுக்கு உணவு சப்ளை செய்யும் கேன்டீன்கள் மொத்தமாக இங்கேதான் வந்து காய்கறிகளும் பழங்களும் வாங்குவார்கள் என்பதால் தினம் ஆயிரக் கணக்கில் வியாபாரம் நடக்கும்.

#4
25 பிப்ரவரி சனிக்கிழமை அதிகாலை மூன்றரை மணியளவில் கடை எண் 1,2-ல் ஏற்பட்ட மின்கசிவினால் எழுந்த தீ மார்க்கெட் எங்கும் பரவ ஒருமணி நேரம் கழித்து வந்த தீயணைப்புத் துறை 28 என்ஜின்கள், 136 பேர் கொண்ட படையுடன் காலை பத்துமணி அளவில் நெருப்பை அணைத்தனர். அதற்குள் 174 கடைகள் முழுவதுமாக எரிந்து சாம்பலாகிவிட்டிருந்தன. வாரயிறுதி விற்பனையை எதிர் நோக்கிக் கடையில் சேகரித்து வைத்திருந்த பொருள் யாவும் சாம்பலாகிட, ஆயிரம் இலட்சங்களில் ஏற்பட்ட கொள் முதலை நஷ்டத்திலும், கடைகள் கருகிப் போனதிலும் கலங்கிப் போய் நின்றிருந்தனர் வியாபாரிகள்.

இத்தனை கஷ்டத்திலும் எல்லோருக்கும் ஆறுதல் தருவதாக இருந்தது உயிரிழப்பு ஏதுமில்லாதது. தான் தப்பித்தால் போதுமென ஓடி விடுகிற காலத்தில், லாரிகளில் வரும் சரக்குகளை இறக்க மார்க்கெட்டுக்கு வெளியில் வந்திருந்த பெர்வஸ் அஹமது தன்னுடன் நாலைந்து தைரியசாலிகளை அழைத்துக் கொண்டு மார்க்கெட்டுக்குள் பாய்ந்து ஒவ்வொரு மூலை முடுக்குக்கும் ஓடி ஓடி ஆங்காங்கே தம் கடை வாசல்களில் உறங்கிக் கொண்டிருந்த 150 பேரை எழுப்பி எச்சரித்துக் காப்பாற்றியிருக்கிறார். புண்ணியவான் அவரும் அவருக்குத் துணை சென்றவர்களும் நல்லாயிருக்கட்டும்.

#5வியாபாரிகள் எந்த நஷ்ட ஈட்டுக்காகவும் காத்திராமல் பத்து நாட்களுக்குள்ளாக அவரவர் இடங்களில் சோகத்தைத் துடைத்து விட்டு மீண்டும் கடைகளைத் துவங்கி விட்டார்கள். அந்த இடத்தை அரசு கையகப்படுத்தி வேறு நவீன கட்டிடடம் கட்டி விடுமோ எனும் அச்சம் ஒரு புறம் என்றால் இடித்து விட்டுத் தங்களுக்கே வேறு வியாபார மையம் ஏற்படுத்துவதாக எழுந்திருக்கும் பேச்சையும் இவர்கள் விரும்பவில்லை. ”ரஸல் மார்க்கெட்” இருக்கிற பிரதான இடமும், அதன் பாரம்பரியப் பெயருமே தங்களுக்கு வியாபாரத்தைக் கொண்டு வருகிற காரணிகள் என்பதால் வேறு இடம் ஒதுக்கப்பட்டாலும் தாங்கள் பட்டினிதான் கிடக்க நேருமெனப் பயப்படுகிறார்கள். அரசு வேறு விதமாக முடிவெடுத்து விடக் கூடாதென அத்தனை மந்திரிகளுக்கு நன்றி சொல்லி வாசலில் பேனர் கட்டியிருக்கிறார்கள் பாருங்கள் முதல் படத்தில்.

சரியாக இரண்டு வாரங்கள் முடிந்த நிலையில் நேற்று மதியம் அந்த வழியாக இதற்காகவே சென்றுவந்தேன். அரசியல் பிரச்சனை இருக்கும் நிலையிலும், எனக்கு இருக்கும் மொழிப் பிரச்சனையாலும் வியாபாரிகளைப் படம் எடுக்கவும், கேள்வி கேட்கவும் தயக்கமாக இருக்கவே, வெளியிலிருந்து P&S கேமராவில் எடுத்த படங்களைப் பகிந்துள்ளேன். மார்க்கெட்டுக்கு உள்ளேயும் ஒரு சுற்று போய் வந்தேன். நுழைந்ததும் இடப்பக்கத்தில் அப்போதுதான் பறித்து வந்தது போலான பச்சைப் பசேல் காய்கறி, வண்ணக் கனிகளுடனும்; நேர் வரிசையில் மலர்ச்சியுடனான பூமாலைகளுடனுமாக (புகையால்) கருமை படிந்த கடைகள் நம்பிக்கை வெளிச்சத்தில் இயங்க ஆரம்பித்திருந்தன. அக்னியின் மிச்ச அடையாளங்கள் கட்டிடம் எங்கும் விரவி நிற்கிறது. புதிய கட்டிடம் வேண்டாம், புனரமைப்பு செய்தால் போதுமெனும் இவர்கள் கோரிக்கைக்கு மாநகராட்சி எந்த வாக்குறுதியும் தரவில்லை. ஆலோசித்து முடிவெடுப்பதாகவே சொல்லியுள்ளது. காலம் நல்ல பதில் தரக் காத்திருக்கிறார்கள் ஏழை வியாபாரிகள்.
***

55 comments:

 1. படங்களுடன் தங்கள் விரிவான பதிவு உண்மை நிலவரத்தை
  மிக அழகாகப் புரியவைத்துப் போகிறது
  பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 2. அருமையான விளக்கம் ,அவலத்தையும் ஆதங்கத்தையும் எழுதியிருக்கும் விதம் அனைவரையும் சிந்திக்க வைக்கும்.

  ReplyDelete
 3. இங்கேயும் இதுபோல முக்கியமான மார்க்கெட்டுகள் எரிந்துபோனபோது, வியாபாரிகளின் துயர் சொல்லி மாளாததாக இருந்தது. மேலும், புதிதாகக் கட்டிடம் எழும்பினாலும், அதில் வாடகை மற்ற செலவுகள் மிக அதிகமாகிவிடும். சமாளிக்க முடியாது.

  என்ன துயர் வந்தாலும், அடுத்த நாள் வயிற்றுப் பாட்டைப் பார்க்கக் கிளம்பித்தான் ஆகவேண்டியிருக்கிறது.

  வெளிப்புறம் புகையால் கருமை தெரியவில்லையே. உள்பக்கம்தான் அதிகம்பாதிக்கப்பட்டதோ.

  எல்லாரையும் காக்க நினைத்த பெர்வேஸ் & நண்பர்களுக்கும் பாராட்டுகள்.

  ReplyDelete
 4. துயர் நீங்கி வாழட்டும்.

  ReplyDelete
 5. படங்களுடன் தங்கள் விரிவான பதிவு உண்மை நிலவரத்தை
  மிக அழகாகப் புரியவைத்துப் போகிறது
  பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 6. அந்த வியாபாரிகளுக்கு நல்லது நடக்க வேண்டுகிறேன். பெர்வஸ் அகமது போன்ற மனிதர்களால்தான் நாட்டில் மழைக்கிறது எனத் தோன்றுகிறது. அழகான உங்கள் படங்களுடன் அருமையான பகிர்வு.

  ReplyDelete
 7. அவலத்தினை புகைப்படங்கள் வழியே பார்க்கும் பொழுது கஷ்டமாக உள்ளது.

  ReplyDelete
 8. முன்னெச்சரிக்கை மிக்க மற்றும் நம்பிக்கையான உழைப்பாளிகள். பெர்வேஸ் அகமதுவின் தீரம் பாராட்டத்தக்கது. இன்னும் உங்களுக்கு மொழிப் பிரச்னையா....அட...!

  ReplyDelete
 9. எல்லா ஊர்களிலும் ரஸல் மார்க்கெட் போல ஒன்றுள்ளது. அரசுக்கும், அந்த ஏழை கடைக்காரர்களுக்கும் எப்போதும் பிணக்குள்ளது.

  ReplyDelete
 10. துயர் கண்டு துவண்டு விடாமல் மிகவும் எதார்த்தமாக, தொடர்ந்து அடுத்து என்ன யோசித்து உடனடியாகச் செயல்படும் அவர்கள் மனப்போக்குக்கு ஒரு சல்யூட்! பகிர்வுக்கு நன்றி ராமலக்ஷ்மி..

  ReplyDelete
 11. Longlive பெர்வஸ் அஹமது !

  Samooga poruppulla article. Thanks

  ReplyDelete
 12. நானும் ரஸல் மார்க்கெட் போயிருக்கிறேன்.தீ விபத்து குறித்து உங்கள் பதிவு மூலம் தான் தெரிய வந்தது.நன்கு அலசி எழுதிய விதம் அருமை.உயிர் சேதமில்லை என்ற செய்தி மனதிற்கு நிம்மதியை தருகிறது.
  மீண்டும் புத்துணர்வோடு வியாபாரம் நடைபெறுவதும் ஒரு ஆறுதல் தான்.

  ReplyDelete
 13. சமூகத்துடனான உங்கள் அக்கறை சந்தோஷமாக இருக்கிறது !

  ReplyDelete
 14. உயிரிழப்பு ஏற்படாமல் காப்பாற்றியவரை கடவுள் நல்ல விதமாக வைத்திருக்கட்டும்....

  உண்மை நிலை தெரிந்தது....

  ReplyDelete
 15. படங்களுடன் நிலமையை அழகாக புரிய வைத்தது உங்க பதிவு. மீண்டு வர இறைவனை கேட்ட்கி கொள்கிறேன். பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 16. சிந்திக்க வைத்த பதிவு. படங்களும் அழகு... நன்றி ராமலஷ்மி.

  ReplyDelete
 17. ஆபத்திலிருந்து பல உயிர்களை காப்பாற்றிய பர்வேஸின் சேவை மகத்தானது. பாரம்பரிய கட்டிடங்கள் தீக்கு இரையாகும் மோது மனதிற்கு மிகவும் கடினத்தை தருகிறது. தரமற்ற மின்சார இணைப்புக்களே பல தீ விபத்துக்களுக்கும் காரணமாக அமைந்து விடுகின்றன.

  ReplyDelete
 18. படிக்கும் போதே மிகவும் வேதனையாக உள்ளது. பாவம் அந்த ஏழை வியாபாரிகள். எவ்வளவு பொருட்கள் நஷ்டமாகி இருக்கும். மீண்டும் மீண்டு வந்து புது வாழ்க்கைத் தொடர வேண்டுமே.

  வேறு இடம் கிடைத்தாலும் இது போல வியாபாரம் சூடு பிடிக்காது தான்.

  இந்த இடத்திலேயே அவர்கள் கடைபோட அனுமதித்தால் தான் நல்லது.

  ReplyDelete
 19. அந்த நல்ல மனிதருக்கு என் வாழ்த்துக்களும்,பாராட்டுக்களும்...மீண்டும் அதே உற்சாகத்துடன் வியபாரிகள் வலம்வர ப்ரார்த்தனைகள்!!

  ReplyDelete
 20. கஷ்டமான நேரத்திலும் உயிர்சேதம் எதுவுமில்லை என அறிகையில் மனம் நிம்மதி அடைகிறது....விளக்கமான கட்டுரை செய்தித்தாளை விட அருமையாக தந்திருக்கிறீர்கள்...

  மனிதனென்பவன் தெய்வமாகலாம் என்ற பாடல் வரிகள் தான் ஞாபகத்திற்கு வருகிறது திரு.பர்வேஸ் அகமதுவை பார்க்கும்போது....

  \\ஒருமணி நேரம் கழித்து வந்த தீயணைப்புத் துறை//

  என்ன கொடுமை?

  \\அரசியல் பிரச்சனை இருக்கும் நிலையிலும், எனக்கு இருக்கும் மொழிப் பிரச்சனையாலும் வியாபாரிகளைப் படம் எடுக்கவும், கேள்வி கேட்கவும் தயக்கமாக இருக்கவே//

  வருத்தப்படவேண்டிய விஷயம்...வேற்றுமையில் ஒற்றுமை என்பதெல்லாம் வெறும் ஏட்டளவில் தானோ?

  ReplyDelete
 21. கஷ்டமான விஷயம். எப்போது வேண்டுமானாலும் தீப்பிடிக்கக் கூடிய வாய்ப்புகள் இந்த மாதிரி இடங்களில் இருக்கின்றன. சரியான பாதுகாப்பு இருக்க வேண்டும்.... தில்லியில் உள்ள கடைத்தெருக்களில் இந்த அபாயம் அதிகம். அதுவும் பழைய தில்லியில்....

  ReplyDelete
 22. பெர்வஸ் அஹமது தன்னுடன் நாலைந்து தைரியசாலிகளை அழைத்துக் கொண்டு மார்க்கெட்டுக்குள் பாய்ந்து ஒவ்வொரு மூலை முடுக்குக்கும் ஓடி ஓடி ஆங்காங்கே தம் கடை வாசல்களில் உறங்கிக் கொண்டிருந்த 150 பேரை எழுப்பி எச்சரித்துக் காப்பாற்றியிருக்கிறார். புண்ணியவான் அவரும் அவருக்குத் துணை சென்றவர்களும் நல்லாயிருக்கட்டும்.

  ReplyDelete
 23. அந்தப் புண்ணியவான் பெர்வஸ் அஹமத் நல்லா இருக்கணுங்க.

  பதிவு அருமை! உங்க படங்கள்.... சொல்லணுமா!!!!!!!!

  ஏழை வியாபாரிகள் பணத்தில் மட்டுமே ஏழைகள்!

  சென்னை மூர்மார்கெட் எரிஞ்சுபோனப்ப 'ஐயோ'ன்னு இருந்துச்சுங்க. அங்கே பழைய புத்தகக்கடையில் பொக்கிஷங்கள் ரொம்ப சல்லீசா வாங்கி இருக்கேன்.

  இப்போ.. மூர்மார்கெட் பகுதி பக்கமே எட்டிப்பார்க்க முடியலை:(

  ReplyDelete
 24. பாவமா இருக்கு.. ஆனாலும் சட்ன்னு மீண்டு வந்துருவாங்க. அத்தனை பேரையும் காப்பாத்திய அந்த நல்ல மனிதர் நல்லாருக்கட்டும்.

  ReplyDelete
 25. Ramani said...
  //படங்களுடன் தங்கள் விரிவான பதிவு உண்மை நிலவரத்தை
  மிக அழகாகப் புரியவைத்துப் போகிறது
  பகிர்வுக்கு நன்றி//

  கருத்துக்கும் வருகைக்கும் நன்றி.

  ReplyDelete
 26. goma said...
  //அருமையான விளக்கம் ,அவலத்தையும் ஆதங்கத்தையும் எழுதியிருக்கும் விதம் அனைவரையும் சிந்திக்க வைக்கும்.//

  மிக்க நன்றி.

  ReplyDelete
 27. ஹுஸைனம்மா said...
  //இங்கேயும் இதுபோல முக்கியமான மார்க்கெட்டுகள் எரிந்துபோனபோது, வியாபாரிகளின் துயர் சொல்லி மாளாததாக இருந்தது. மேலும், புதிதாகக் கட்டிடம் எழும்பினாலும், அதில் வாடகை மற்ற செலவுகள் மிக அதிகமாகிவிடும். சமாளிக்க முடியாது.

  என்ன துயர் வந்தாலும், அடுத்த நாள் வயிற்றுப் பாட்டைப் பார்க்கக் கிளம்பித்தான் ஆகவேண்டியிருக்கிறது.

  வெளிப்புறம் புகையால் கருமை தெரியவில்லையே. உள்பக்கம்தான் அதிகம்பாதிக்கப்பட்டதோ.

  எல்லாரையும் காக்க நினைத்த பெர்வேஸ் & நண்பர்களுக்கும் பாராட்டுகள்.//

  உண்மைதான். புனரமைப்புக்கே மாநகராட்சி ஆறுமாதங்கள் ஆக்கலாம் என எண்ணிய வியாபாரிகள் அவர்களை எதிர்பார்க்காமல் பெங்களூர் சர்வதேச விமான நிலையத்தைக் கட்டிய KK Infrastructure தனியார் நிறுவனத்தின் துணையோடு தங்கள் செலவிலேயே சீரமைத்து வருகிறார்கள். 90 பேர்களுடன் அசுர வேகத்தில் எரிந்து உத்திரங்கள் தூண்களை எல்லாம் மாற்றி பெயிண்ட் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் 2 தினங்களில் முற்றிலும் எரிந்த கடைகளும் இயங்க ஆரம்பித்து விடுமென எதிர்ப்பாக்கப் படுகிறது. இது இன்றைய செய்தி!

  ஆம் வெளிப்புறத்தில் அதன் தாக்கம் அதிகம் தெரியவில்லை. முகப்பிலும் முதல் மற்றும் மூன்றாம் படங்களில் கட்டிட இடது ஓர ஜன்னல்களில் படிந்த கருமை தவிர்த்து. Russel market fire bangalore என கூகுளாரிடம் சொன்னீர்களானால் உள்ளே எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டிருந்தது எனப் படங்களைக் காட்டுவார்.

  பெர்வேஸை அரசு பாராட்டுமோ பதக்கம் அளிக்குமோ தெரியாது. ஆனால் மக்களும் பத்திரிகைகளும் கொண்டாடியிருந்தன. குடும்பத்துடன் அவர் படத்தையும் வெளியிட்டிருந்தன.

  நன்றி ஹுசைனம்மா.

  ReplyDelete
 28. மாதேவி said...
  /துயர் நீங்கி வாழட்டும்./

  நன்றி மாதேவி.

  ReplyDelete
 29. Lakshmi said...
  //படங்களுடன் தங்கள் விரிவான பதிவு உண்மை நிலவரத்தை
  மிக அழகாகப் புரியவைத்துப் போகிறது

  பகிர்வுக்கு நன்றி//

  நன்றி லக்ஷ்மிம்மா.

  ReplyDelete
 30. கணேஷ் said...
  //அந்த வியாபாரிகளுக்கு நல்லது நடக்க வேண்டுகிறேன். பெர்வஸ் அகமது போன்ற மனிதர்களால்தான் நாட்டில் மழைக்கிறது எனத் தோன்றுகிறது. அழகான உங்கள் படங்களுடன் அருமையான பகிர்வு.//

  நன்றி கணேஷ்.

  ReplyDelete
 31. ஸாதிகா said...
  //அவலத்தினை புகைப்படங்கள் வழியே பார்க்கும் பொழுது கஷ்டமாக உள்ளது.//

  நன்றி ஸாதிகா.

  ReplyDelete
 32. ஸ்ரீராம். said...
  //முன்னெச்சரிக்கை மிக்க மற்றும் நம்பிக்கையான உழைப்பாளிகள். பெர்வேஸ் அகமதுவின் தீரம் பாராட்டத்தக்கது. இன்னும் உங்களுக்கு மொழிப் பிரச்னையா....அட...!//

  தப்புதான். தமிழையும் ஆங்கிலத்தையும் வைத்தே காலம் தள்ளிக் கொண்டிருக்கிறேன். கன்னடத்தை விட இப்பகுதியில் ஹிந்தி அவசியமாகிறது. ஓரளவு புரியுமென்றாலும் நான் பத்திரிகையிலிருந்து வரவில்லை(பத்திரிகை என்றால் சங்கத்தின் அனுமதியோடுதான் பேசுவார்கள்) எனப் புரியும்படி சொல்லி அவர்களைப் பேச வைக்க நான் நிறைய பேச வேண்டுமே:(.

  ReplyDelete
 33. தமிழ் உதயம் said...
  //எல்லா ஊர்களிலும் ரஸல் மார்க்கெட் போல ஒன்றுள்ளது. அரசுக்கும், அந்த ஏழை கடைக்காரர்களுக்கும் எப்போதும் பிணக்குள்ளது.//

  கருத்துக்கு நன்றி ரமேஷ்.

  ReplyDelete
 34. பாச மலர் / Paasa Malar said...
  //துயர் கண்டு துவண்டு விடாமல் மிகவும் எதார்த்தமாக, தொடர்ந்து அடுத்து என்ன யோசித்து உடனடியாகச் செயல்படும் அவர்கள் மனப்போக்குக்கு ஒரு சல்யூட்! பகிர்வுக்கு நன்றி ராமலக்ஷ்மி..//

  நன்றி மலர்.

  ReplyDelete
 35. மோகன் குமார் said...
  //Longlive பெர்வஸ் அஹமது !

  Samooga poruppulla article. Thanks//

  நன்றி மோகன் குமார்.

  ReplyDelete
 36. பெர்வஸ் அஹமது தன்னுடன் நாலைந்து தைரியசாலிகளை அழைத்துக் கொண்டு மார்க்கெட்டுக்குள் பாய்ந்து ஒவ்வொரு மூலை முடுக்குக்கும் ஓடி ஓடி ஆங்காங்கே தம் கடை வாசல்களில் உறங்கிக் கொண்டிருந்த 150 பேரை எழுப்பி எச்சரித்துக் காப்பாற்றியிருக்கிறார். புண்ணியவான் அவரும் அவருக்குத் துணை சென்றவர்களும் நல்லாயிருக்கட்டும்.//

  உதவும் நல்ல உள்ளம் படைத்தவர்கள் வாழ்க பல்லாண்டு.

  நல்ல பகிர்வு.
  வியாபாரிகளுக்கு நல்ல தீர்வு அமைய வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 37. Asiya Omar said...
  //நானும் ரஸல் மார்க்கெட் போயிருக்கிறேன்.தீ விபத்து குறித்து உங்கள் பதிவு மூலம் தான் தெரிய வந்தது.நன்கு அலசி எழுதிய விதம் அருமை.உயிர் சேதமில்லை என்ற செய்தி மனதிற்கு நிம்மதியை தருகிறது.
  மீண்டும் புத்துணர்வோடு வியாபாரம் நடைபெறுவதும் ஒரு ஆறுதல் தான்.//

  ஆம் ஆசியா. நன்றி.

  ReplyDelete
 38. ஹேமா said...
  //சமூகத்துடனான உங்கள் அக்கறை சந்தோஷமாக இருக்கிறது !//

  நன்றி ஹேமா.

  ReplyDelete
 39. கோவை2தில்லி said...
  /உயிரிழப்பு ஏற்படாமல் காப்பாற்றியவரை கடவுள் நல்ல விதமாக வைத்திருக்கட்டும்....

  உண்மை நிலை தெரிந்தது..../

  நன்றி ஆதி.

  ReplyDelete
 40. ராஜி said...
  /படங்களுடன் நிலமையை அழகாக புரிய வைத்தது உங்க பதிவு. மீண்டு வர இறைவனை கேட்டுக் கொள்கிறேன். பகிர்வுக்கு நன்றி/

  நன்றி ராஜி.

  ReplyDelete
 41. நித்திலம்-சிப்பிக்குள் முத்து said.../சிந்திக்க வைத்த பதிவு. படங்களும் அழகு... நன்றி ராமலஷ்மி./

  நன்றி பவளா.

  ReplyDelete
 42. குமரி எஸ். நீலகண்டன் said...
  /ஆபத்திலிருந்து பல உயிர்களை காப்பாற்றிய பர்வேஸின் சேவை மகத்தானது. பாரம்பரிய கட்டிடங்கள் தீக்கு இரையாகும் மோது மனதிற்கு மிகவும் கடினத்தை தருகிறது. தரமற்ற மின்சார இணைப்புக்களே பல தீ விபத்துக்களுக்கும் காரணமாக அமைந்து விடுகின்றன./

  உண்மைதான், இப்படி பல இடங்களில் நேர்ந்துள்ளதே. நன்றி நீலகண்டன்.

  ReplyDelete
 43. வை.கோபாலகிருஷ்ணன் said...
  /படிக்கும் போதே மிகவும் வேதனையாக உள்ளது. பாவம் அந்த ஏழை வியாபாரிகள். எவ்வளவு பொருட்கள் நஷ்டமாகி இருக்கும். மீண்டும் மீண்டு வந்து புது வாழ்க்கைத் தொடர வேண்டுமே.

  வேறு இடம் கிடைத்தாலும் இது போல வியாபாரம் சூடு பிடிக்காது தான். இந்த இடத்திலேயே அவர்கள் கடைபோட அனுமதித்தால் தான் நல்லது./

  ஆம் சார். இந்த இடம் கைவிட்டுப் போய்விடக் கூடாதென்றுதான் தங்கள் சொந்த செலவிலேயே புனரமைத்துக் கொண்டிருக்கிறார்கள். நன்றி.

  ReplyDelete
 44. S.Menaga said...
  /அந்த நல்ல மனிதருக்கு என் வாழ்த்துக்களும்,பாராட்டுக்களும்...மீண்டும் அதே உற்சாகத்துடன் வியபாரிகள் வலம்வர ப்ரார்த்தனைகள்!!/

  நன்றி மேனகா.

  ReplyDelete
 45. Nithi Clicks said...
  /மனிதனென்பவன் தெய்வமாகலாம் என்ற பாடல் வரிகள் தான் ஞாபகத்திற்கு வருகிறது திரு.பர்வேஸ் அகமதுவை பார்க்கும்போது..../

  பொருத்தமான பாடல்.

  ***\\ஒருமணி நேரம் கழித்து வந்த தீயணைப்புத் துறை//

  என்ன கொடுமை?/****

  இது குறித்தும் எழுத வேண்டியுள்ளது:(. விரைவில் எழுதுகிறேன்.

  //வேற்றுமையில் ஒற்றுமை என்பதெல்லாம் வெறும் ஏட்டளவில் தானோ?//

  வேற்று மொழி என்பதால் பதிலளிக்கமாட்டார்கள் என்பதல்ல அர்த்தம். எண்ணப் பரிமாற்றம் சிரமம் என்று பொருள். கன்னடம், ஹிந்தி கற்று வைக்காதது என் பிழையே.

  நன்றி நித்தி.

  ReplyDelete
 46. வெங்கட் நாகராஜ் said...
  /கஷ்டமான விஷயம். எப்போது வேண்டுமானாலும் தீப்பிடிக்கக் கூடிய வாய்ப்புகள் இந்த மாதிரி இடங்களில் இருக்கின்றன. சரியான பாதுகாப்பு இருக்க வேண்டும்.... தில்லியில் உள்ள கடைத்தெருக்களில் இந்த அபாயம் அதிகம். அதுவும் பழைய தில்லியில்..../

  சென்ற வருட கார்டன் விபத்துக்குப் பின் பாதுகாப்பு ஏற்பாடுகளை அரசு இங்கு வலியுறுத்தியே வருகிறது.

  ReplyDelete
 47. seenivasan ramakrishnan said... /பெர்வஸ் அஹமது .... அவருக்குத் துணை சென்றவர்களும் நல்லாயிருக்கட்டும்./

  முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete
 48. துளசி கோபால் said...

  /ஏழை வியாபாரிகள் பணத்தில் மட்டுமே ஏழைகள்!

  சென்னை மூர்மார்கெட் எரிஞ்சுபோனப்ப 'ஐயோ'ன்னு இருந்துச்சுங்க. அங்கே பழைய புத்தகக்கடையில் பொக்கிஷங்கள் ரொம்ப சல்லீசா வாங்கி இருக்கேன்./

  சரியாகச் சொன்னீர்கள்.

  மூர் மார்க்கெட் விபத்தில் எல்லோரும் புத்தகங்கள் குறித்து ஆதங்கப்பட்டிருந்தது நினைவிலுள்ளது.

  நன்றி மேடம்.

  ReplyDelete
 49. கோமதி அரசு said...
  //உதவும் நல்ல உள்ளம் படைத்தவர்கள் வாழ்க பல்லாண்டு.

  நல்ல பகிர்வு.

  வியாபாரிகளுக்கு நல்ல தீர்வு அமைய வாழ்த்துக்கள்.//

  நன்றி கோமதிம்மா.

  ReplyDelete
 50. Nice Ramalakshmi. With pictures & details super.

  ReplyDelete
 51. Vijiskitchencreations said...
  //Nice Ramalakshmi. With pictures & details super.//

  நன்றி விஜி.

  ReplyDelete
 52. பெங்களூரின் மிகப்பழைய அடையாளங்களில் இந்த மார்க்கெட்டும் ஒன்று. இதைப்பற்றிக் கேள்விப்பட்டு ஒருமுறை இந்த இடத்தைப் பார்க்க வேண்டும் என்றே போய்வந்தோம். நீங்கள் குறிப்பிட்டிருக்கும் தீ விபத்து பற்றியும் செய்தித்தாள்களில் படித்திருக்கிறேன். பாவம் அந்த வியாபாரிகள்.
  எங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் ஜெயநகர் ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ்- கூட இடிக்கப்படப் போகிறது என்று சொல்லுகிறார்கள். மால்கள் வந்ததில் பாதிக்கப்பட்டவர்கள் இந்த சிறு வியாபாரிகள்.

  ReplyDelete
 53. இடத்துக்கு இடம் ஸூப்பர் மார்க்கெட், மால் ஆகியன பெருகியிராத காலத்தில் இந்த மார்க்கெட் அருகே இருக்கும் மைதானத்தில் உள்ள "ADAMS" கடைக்கு அடிக்கடி செல்வதுண்டு. இப்போதும் அது இயங்கி வருவது ஆச்சரியமே.

  ஜெயநகர் காம்ப்ளெக்ஸ் பிரபலமானதாயிற்றே. பாவம் அந்த வியாபாரிகள்.

  ReplyDelete
 54. இடத்துக்கு இடம் ஸூப்பர் மார்க்கெட், மால் ஆகியன பெருகியிராத காலத்தில் இந்த மார்க்கெட் அருகே இருக்கும் மைதானத்தில் உள்ள "ADAMS" கடைக்கு அடிக்கடி செல்வதுண்டு. இப்போதும் அது இயங்கி வருவது ஆச்சரியமே.

  ஜெயநகர் காம்ப்ளெக்ஸ் பிரபலமானதாயிற்றே. பாவம் அந்த வியாபாரிகள்.

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin