வியாழன், 11 மார்ச், 2010

கால காலமாய்..





கோவிலில்
அர்ச்சனைக்குக் கொடுத்திருக்கிறாளாம்
அவர் பெயரில்

அழைத்து நின்ற மனைவிக்கு
அவள் செல்லமகன் கடைக்குட்டியைக்
கைகாட்டி விட்டு
மனையெங்கும் நிறைந்திருந்த
மற்ற உறவுகளைக்
கூட்டினார் ஒன்றாகக் கூடத்தில்

அடுத்த ஐந்து தினங்களில்
வரவிருந்த தன் ஐம்பதாவது
மணவிழாக் கொண்டாட்டத்தில்
எவரெவருக்கு என்ன பொறுப்பெனப்
பிரித்துக் கொடுத்துவிட்டுப்
பெருமிதமாய் நிமிர்ந்தமர்ந்தார்

வருகின்றயாவரும் வாய்பிளந்து
ஆச்சரியப் பெருமூச்செறிந்து
கண்ணிமைக்கவும்தான்
மறந்துபோகிற வண்ணமாய்
பரிசொன்றைத் தரவேண்டும்
சபையிலே தன்னவளுக்கு

கவுரவத்தைக் காக்கும்வகையில்
கச்சிதமான பொருளினைப்
பரிந்துரைக்கும் நபருக்கும்
தருவேன் என்றார் அன்பளிப்பாய்
தங்கத்தில் மோதிரமொன்று
நடுவில் உயர்ரத்தினம் பதித்து

முன்வந்து சிலாகித்தாள்
மூத்த கொழுந்தியாள்
அன்றொருநாள் போத்தீஸில்
வியந்துபார்த்து வாங்காதுவிட்ட
பாட்டுப்பாடும் சீலையை

'வைரத்தில்ஆரம் வனப்பாய்
இருக்கும் அண்ணிக்கு'
குரல் கொடுத்தாள் தங்கை
வேண்டும் போது பெற்றிடலாம்
உரிமையோடு இரவல் என்று

'தனியாகக் கார் இருந்தால்
சவுகரியம் பாட்டிக்கு'
ஊர்சுற்ற தனக்கும்
உள்ளுக்குள் நினைத்தபடி
செல்லமகளின் சீமந்தப் புத்திரன்

'ப்ளாஸ்மா நல்லாயிருக்குமே'
தென்றலும் திருமதிசெல்வமும்
இனிவிரிவார்கள் பெரியதிரையில்
கற்பனையில் அகமகிழ்ந்தபடி மருமகள்

பெரியமகன் சொன்னது
சகலைக்குப் பிடிக்கவில்லை
அயித்தான் சொன்னது
அத்தைக்கு ஒப்புதலில்லை
அவரவர் ஆசைக்கு
அடுத்தவர் சொல்வது
அத்தனை ரசிக்கவில்லை

ஆனாலும் பெரிதுபடுத்தாது
நவநாகரீக பிளாட்டின நகைமுதல்
அதிநவீனக் கைபேசி வரை
ஒவ்வொருவர் ஒன்றைச் சொன்னார்
தவற விடுவானேன்
தனிபரிசையெனப் பலபேரும்
அக்கறையில் வெகுசிலபேரும்

எவர்சொன்னதிலும் திருப்தியின்றி
அவகாசம் வாங்கிக்கொண்டு
கூட்டத்தைக் கலைத்திட்டார்
குழப்பத்துடன் எழுந்திட்டார்
ஓய்வாக உள்ளறையில்
ஆழ்ந்துபோனார் சிந்தனையில்

ஆடியதுநிழல் வாசற்படியிலே
அன்னைக்குத் துணையாக
ஆலயம் சென்றிருந்தவன்
நின்றிருந்தான் நெடுமரம்போலே

ஏனோ தன்னோடு அதிகம்
ஒட்டுவதில்லை எனும்
நெஞ்சடைக்கும் ஏக்கத்தால்
அதீத பிரியம்தான்
எப்போதும் இவன்மேலே

சொல்லெனக் கண்ணாலேபேசிக்
கனிவாய்ப் பார்த்திருந்தார்
ஆடும் நாற்காலியில்
முன்னும்பின்னும் போனபடி

சின்னத் தயக்கத்துக்குப்பிறகு
திறந்தான் சின்னவன் மனதை
"இனியாவது அம்மாவுக்கு
மதிப்பு சந்தோசம் நிம்மதி"

நின்றது நாற்காலி.
நிற்காமல் காலகாலமாய்
ஓடிக் கொண்டிருந்தது
அறைமூலையில்
ஆளுயரப் பாட்டன்கடிகாரம்

திருகப்பட்ட சாவிக்குத்
தடையற்ற
சேவையைத் தந்தபடி
கடந்துபோன
நிகழ்வுகளுக்கு எல்லாம்
கனமான மவுனசாட்சியாய்..?!
***

படம் நன்றி: யூத்ஃபுல் விகடன்
பி.கு: ‘இப்படியா நடத்தப் படுகிறார் மகளிர் ?’ எனக் கேட்டால் ‘இப்படியும்தான்! ’ என்பதே பதில்.


  • 6 மார்ச், விகடன்.காம் சக்தி 2010 மகளிர் தினச் சிறப்பிதழில் வெளியான கவிதை.




திங்கள், 8 மார்ச், 2010

சதுரங்கப் பலகையில் சர்வ சுதந்திரமாய்...- விகடன்.காமின் சக்தி 2010-ல்

மகளிர்தின வாழ்த்துக்கள்!

இன்றைக்கும் காணக் கிடைக்கிற காட்சிதான் இது. உற்சாகக் கூவலுடன் சிறுவர்கள் கிரிக்கெட் ஆடியபடி இருக்க அவர்கள் வயதொத்த சிறுமி ஏக்கமாய் பார்த்தபடி அமர்ந்திருப்பது. கடந்து செல்லுபவர்கள் ‘இவளையும் சேர்த்துக் கொள்ளுங்களேன்’ என்றால் "இது பாய்ஸ் கேம்ஸ்’ என்பதாக இருக்கும் வருகிற பதில். ஒரு ஓவர் பவுலிங் கொடுத்துப் பார்க்கும் முன்னரே ஏன் இந்த முடிவு? ‘அவளாலே முடியாது’ அப்போதுதான் நம் கண் எதிரே அருமையான கேட்சை தவறவிட்ட சிறுவன் அலட்சியமாகச் சொல்லுவான்.

துறுதுறுவென ஓடிச்சாடி அந்தச் சிறுமியின் கால்கள் காட்டத் துடிக்கும் வேகத்தை அத்தனை எளிதாய்ப் புறக்கணித்தால் எப்படி? கண்கள் கவனத்தைக் குவிக்க, தாவிக் கைகள் பிடிக்க என அவள் பந்துகளைத் தடுத்தாள ஒரு வாய்ப்புக் கூட மறுக்கப்பட்டால் எப்படி? உடல் பலத்தில் ஒருபடி கீழே இருந்தாலும் கூட உற்சாகத்தை உயிரினுள்ளிருந்து திரட்டி, பிடித்திருக்கும் மட்டைக்கு ஊட்டி, அவளால் இயன்ற வரை ஓங்கி அடிக்கிற பந்து சிக்சரா ஃபோரா, இல்லையேல் காற்றிலே மட்டை மட்டும் சுழல க்ளீன் போல்டா, பரவாயில்லை எதுவானாலும் ஆடிப் பார்க்கதான் விடுங்களேன்.

சகமனிதனுக்கான வாய்ப்பைக் கிடைக்கவிடாமல் செய்வதைப் போன்றதொரு மட்டமான விஷயம் வேறில்லை உலகில். அதுவே பெண்கள் என வருகையில் சமுதாயம் இதை எப்போதும், அந்தச் சிறுவனைப் போலவே தயங்காமல், ‘இதுவே உங்களுக்கு விதிக்கப்பட்டது’ என்கிற மாதிரியான மனோபாவத்துடன் இன்றளவும் செய்து கொண்டேதான் இருக்கிறது. அதையும் உடைத்துக் கொண்டு வெளியில் வந்து காண்பித்துக் கொண்டுதானிருக்கிறார்கள் பெண்கள். கடந்த வருடம் நவம்பர் 20ஆம் தேதி இந்திய கடற்படையின் வரலாற்றில் ஒரு குறிப்பு பொன் எழுத்துக்களால் பதிக்கப் பட்டது. அன்று இருபத்து இரண்டு வயதே நிரம்பிய அம்பிகா ஹூடா, சீமாராணி ஆகிய இரு பெண் அதிகாரிகள் துணை லெப்டினென்ட் பொறுப்பேற்றனர்.



இதுகாலம் வரையில் பெண் பைலட்டுகள் சரக்கு மற்றும் போக்குவரத்து விமானங்களை மட்டுமே இயக்கி வந்துள்ளனர். ஆனால் இந்த சாதனை மகளிர் கப்பற்படையின் குண்டு பொழியும் வசதிபடைத்த டார்னியர் விமானங்களை ஓட்டி ரேடார் மூலமாகக் கடலைக் கண்காணிப்பது, போர் விமானங்களின் வருகையைக் கவனித்து விமானப் படைக்குத் தகவல் தருவது போன்ற மிகப் பெரிய பொறுப்புகளைக் கையாளப் போகிறார்கள். ஆக, ஆண்களால் மட்டுமே முடியுமென நினைக்கப்பட்ட விஷயங்களை பெண்களும் செய்து பார்க்க அனுமதி அளிக்கப் பட்டதால்தானே இது சாத்தியப்பட்டது. அவர்கள் முயற்சித்துதான் பார்க்கட்டுமே. முடியவில்லை எனத் தோற்றாலும் நட்டமொன்றும் இல்லை. ஆனால் முயற்சிக்க விடுங்கள்!

‘ஆமாம் இப்போது இங்கே எந்த வாய்ப்பு மறுக்கப்பட்டு விட்டது? சொல்லபோனால் எங்களுக்கான வாய்ப்புகளும் இவர்களால்தான் கெட்டுப் போகிறது’ என முணுமுணுக்கும் ஆண்கள் பலருண்டு. உதாரணத்துக்கு கடந்த வாரம் ஹரியானா மாநில அரசானது அரசுப்பணியிலிருக்கும் பெண்களுக்கு இரண்டு வருட சி.சி.எல் எனும் சைல்ட் கேர் லீவ் ஒன்றை அறிவித்துள்ளது. முதலிரண்டு குழந்தைகளுக்கு மட்டுமென்றும், பதினெட்டு வயதை அவர்கள் எட்டும் வரை எப்போது வேண்டுமானாலும் இந்த விடுப்பை பிரித்து எடுத்துக் கொள்ளலாமென்றும் அறிவித்துள்ளது.

இது சரியா தவறா எனும் பெரும் சர்ச்சையும் எழுந்துள்ளது. ‘இனிமேல் இவர்களுக்கு கொண்டாட்டம்தான். பெரும்பாலும் அலுவலகங்கள் இதனால் காலியாகத்தான் இருக்கப் போகின்றன. எந்த வேலைகளும் நடக்கப் போவதில்லை’ எனும் எக்காளம் வலுக்கிறது. தம்மை ஈன்றவளும் தம் வாரிசுகளைச் சுமந்தவளும் பெண் என்பதை இவர்கள் மறந்தொன்றும் போகவில்லை. மதிக்கின்ற மனம்தான் இல்லை. ஆனால் ஹரியானாவின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் கீதா புக்கல், தாய்மையைப் மதித்துப் போற்றும் அடையாளமாகவே இச்சட்டம் அமலுக்கு கொண்ட வரப்பட்டதாக அறிவித்துள்ளார்.

‘பெண்கள் தாங்கள் சுதந்திரமாக இருப்பதற்காக மட்டுமேயன்றி தம் குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலத்தை தரவும்தான் வேலைக்குச் செல்கிறார்கள். வீட்டிலும் வெளியிலுமாக சுமைதாங்கும் அவர்களுக்கு இது தேவையான ஒன்றுதான்’ என அனுசரணையாகக் குரல் எழுப்பியுள்ளனர் அம்மாநில அரசு அதிகாரிகள் சிலர். இருப்பினும், கிளம்பியிருக்கும் அதிருப்தியால் மற்ற மாநிலங்கள் இதைப் பின்பற்ற முன்வருவார்களா என்பது கேள்விக்குறியாக இருக்க இன்றளவிலும் தனியார் நிறுவனங்களில் பெண்களுக்கான பிரசவகால விடுப்பு மூன்றுமாதங்களாகவே இருந்து வருகிறது.

விடுப்பு கிடைக்கிறது என்பதற்காக எவரும் தேவையில்லாமல் அதை பயன்படுத்துவார்கள் எனத் தோன்றவில்லை. ஏனெனில் வேலையின் மீதான் அக்கறையும், போட்டிகள் சூழ்ந்த இவ்வுலகில் தன்னை நிரூபித்தாக வேண்டிய அவசியத்தையும் உணர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள் பெண்கள். இடைக்காலங்களில் தவிர்க்கமுடியாமல் நீண்ட விடுப்புகள் தேவைப்படுகையில் வேறுவழியின்றி பார்த்து வந்த வேலையை ஏக்கத்துடனும் வருத்தத்துடனும் ராஜினாமா செய்து விட்ட ஆயிரக்கணக்கான பெண்கள் உண்டு. அந்த நிலைமை ஏற்படாமலிருக்கவும் இந்த சட்டம் உதவும் என்கிற வகையில் நிச்சயம் இது பாராட்டுக்குரியதே.

பி
ரசவகாலம் தவிர்த்து தன்னை ஒரு பெண் என்பதை முன்னிறுத்தி சலுகைகள் பெறுவதில் அத்தனை நாட்டமோ விருப்பமோ கொண்டவர்களாகத் தெரியவில்லை இன்றைய மங்கையர். எந்த உடல் உபாதையானாலும் பொறுத்துக் கொண்டு வெளிக்காட்டாமல் வேலை செய்கிறார்கள். தமது குழந்தைகளுக்கொரு பிரச்சனை, எதிர்பாராத உடல்நலக் குறைவு என வரும் போது விடுப்பு எடுக்கும் சூழல்கள் அமைந்துதான் போகிறது. தாய்மையா வேலையா என இரட்டைக் குதிரையில் சவாரி செய்கிற நிலைமைதான். இதையே சாதகமாக்கி, ஒரு பதவி உயர்வென்று வருகையில், திறமையிலும் அர்ப்பணிப்புடன் வேலை செய்வதிலும் பலமடங்கு முன்னணியில் இருந்தாலும்கூட பெண் எனும் காரணத்தால், குடும்பப் பொறுப்புடன் இந்தப் பொறுப்பை சரிவர செய்வது அத்தனை சாத்தியப்படாது என அவர்களைப் பின்தள்ளுவது நடப்பதேயில்லை என யாராவது சொல்ல இயலுமா?

சமுதாயத்தைப் பார்த்து எழுப்பப்படும் இக்கேள்விகள் யாவும், கவனிக்க, பெண்களுக்கும் உரித்தானதே. மேலதிகாரியாக இருப்பது ஒரு பெண்ணே ஆனாலும், அலுவலக நன்மை கருதியென இந்தமாதிரியான கட்டங்களில் பதவி உயர்வை திறமையில் ஒருபடி கீழே இருக்கும் ஆணுக்குத் தந்து விடுவதுண்டு. அந்த வாய்ப்பை உரிய தகுதியுடைய அந்தப் பெண்ணுக்கேதான் வழங்கிப் பாருங்களேன். எப்பாடு பட்டேனும் மூன்று குதிரையில் கூட சவாரி செய்து உங்கள் அலுவலகத்தை முன்னுக்குக் கொண்டு வருவார். இந்த இடத்தில்தான் வீட்டிலுள்ளவர்கள் ஒத்துழைப்பும் அத்தியாவசியமாகிறது ஒரு பெண்ணின் முன்னேற்றத்துக்கு.

வீடும் இந்த சமுதாயத்தின் ஒரு அங்கம்தானே? தினசரி வீட்டு வேலைகளில் உதவுவதில் முடிந்து விடுவதில்லை கணவனின் கடமை. குழந்தைகளின் பள்ளியில் பெற்றோர் சந்திப்புகள் அல்லது அவர்களை மருத்துவரிடம் அழைத்துச் செல்வது போன்ற பொறுப்புகள் தந்தைக்கும் உண்டு.தன்னைவிட மனைவி பெரிய பொறுப்பில் இருந்தால் ‘என் வேலை அத்தனை முக்கியம் இல்லை என நினைத்தாயா?’ என்றோ, அல்லது தான் உயர்பதவி வகிக்கும் கர்வத்தில், ‘என்வேலை முக்கியமா உன் வேலை முக்கியமா’ என்றோ விவாதம் செய்வது சரியல்ல. குறிப்பிட்ட அத்தினத்தில் மனைவிக்கு அலுவலகத்தில் ஏதேனும் அதிமுக்கிய வேலை இருக்கலாம். அவரது வளர்ச்சியின் அடுத்த மைல்கல்லை எட்ட வைக்கக் கூடியதாக இருக்கலாம்.

கவனித்துப் பார்த்தால் இது போன்ற ‘நீயா நானா’வில் பெரும்பாலும் விட்டுக்கொடுப்பவர்கள் பெண்களாகத்தான் இருப்பார்கள். ஊர் மாற்றமோ வேலை மாற்றமோ ஆணுக்கு நிகழுகையில், அதே ஊருக்கு தனது அலுவலகம் மூலமாக மாற்றலாகிட வழியில்லாது போகையில், அதுவரை பார்த்துச் சேர்ந்த பெயர் பதவி எல்லாவற்றையும் துறந்து வேறுவேலையைத் தேட கணவனுக்காகக் பொட்டியைக் கட்டும் மனைவியர்தான் எத்தனைபேர்? மறுபடியும் ஆரம்பப் புள்ளியிலிருந்து புதிய இடத்தில் வேலையைத் தொடங்க ஆண்களே அதீத தயக்கம் காட்டுகையில் குழந்தைகளின் படிப்பு,வீடு,வேலை,இட மாற்றங்களுக்கு மனத்திண்மையுடன் தம்மை தயார் செய்து கொள்கிறார்கள் பெண்கள்.

சதுரங்கப் பலகையில் எவருக்கும் இல்லாத சக்தி ராணிக்குதான் தரப்பட்டுள்ளது. மற்ற காய்கள் எல்லாம் நகர நிபந்தனைகள் இருக்க, ராணிக்கு மட்டுமே சுதந்திரமாக எத்திசையிலும் செல்ல அனுமதி உண்டு. ஆனால் இந்த சுதந்திரம் எதற்காகவாம்? ராஜாவைக் காப்பாற்ற. வாழ்க்கை சதுரங்கத்தில் ராஜாவாகக் குடும்பமோ பணியிடமோ இருக்க, பெண் சர்வ சுதந்திரமாக ஓடுவதுபோலத்தான் ஓடுகிறாள் எட்டுத்திக்கிலும், காலில் பிணைக்கப்பட்ட கண்ணுக்குத் தெரியாத சங்கலியுடன்.
பிறப்பால் பெண் எனும் அந்தச் சங்கிலியை அனுசரணையுடன் அறுத்தெறிந்து அவர்களுக்கு உரிய வாய்ப்பினைக் கொடுப்பதில்தான் இருக்கிறது அதே பிறப்பால், தேக பலம் எனும் ஒரேயொரு கூடுதல் வரத்தால், தம்மை உயர்வாய்க் கருதிக் கொள்பவர்களின் உண்மையான பெருமிதம். சக மனுஷியை சக உயிராய் மதித்து எல்லா முயற்சிகளுக்கும் கை கொடுங்கள். வளர்ச்சிக்கு வழி விடுங்கள். வானம் தொடுவார்கள். வாழ வைப்பார்கள்.
*** ***






  • 6 மார்ச், “சக்தி 2010” மகளிர்தினச் சிறப்பிதழின் ஹைலைட்ஸ் ஆகஇங்கே:













  • யூத்ஃபுல் விகடன் தளத்தின் ‘அதிகம் படித்தவை’ பட்டியலிலும்:
நன்றி விகடன்!

  • ‘பெண்ணுக்குப் பேதம் வேண்டாம்’ எனும் தலைப்பில் ஜனவரி 2011 'லேடீஸ் ஸ்பெஷல்' பத்திரிகையின் புத்தாண்டு பொங்கல் சிறப்பிதழிலும்.., நன்றி லேடீஸ் ஸ்பெஷல்!

புதன், 3 மார்ச், 2010

கலைமகளில் வலைப்பதிவர்

கலைமகள் மாத இதழின் வாசகர்களுக்கு, வலைதளத்தின் குட்டி சாம்ராஜ்யமாக விளங்கும் பதிவுலகினை அறிமுகப்படுத்தும் முயற்சியாக ஷைலஜா அவர்கள் கடந்த இதழில் ஆரம்பித்திருக்கும் கட்டுரைதான் ‘இணையத்தில் எழுதுகிறார்கள்; இதயத்தில் நுழைகிறார்கள்!’. முதல் பாகத்தில் சுப்பையா சார், துளசி மேடம், அம்பி, ரிஷான் ஷெரீஃப் ஆகியோர் இடம் பெற்றதைத் தொடர்ந்து இம்மாத இதழில் வல்லிம்மா, புதுகைத் தென்றல், அமிர்தவர்ஷினி அம்மா ஆகியோருடன் நானும்.

[ஸ்கேன் பக்கங்களைக் ‘க்ளிக்’கிட்டுப் பெரிதாக்கியும் வாசித்திடலாம்.]

முதலில் பிப்ரவரி இதழில் ஷைலஜா எழுதிய முன்னுரை உங்கள் பார்வைக்கு:


இனி மார்ச் இதழின் கட்டுரை:

இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் எனது பதிவினை முழுவதுமாக வாசிக்க இங்கும் செல்லலாம்.




நன்றி ஷைலஜா!

மகளிர்தினம் காணும் மாதத்தில் மங்கையர் எமைச் சிறப்பித்தமைக்கு நன்றி கலைமகள்!

இடம் பெற்றிருக்கும் சக பதிவர்களுக்கு என் நல்வாழ்த்துக்கள்!

இதை சாத்தியமாக்கி, தொடர்ந்து எங்களை எழுத வைத்து ஊக்கம் தந்து வரும்
நண்பர்கள் உங்களுக்கு
எங்கள் அனைவரின் மனமார்ந்த நன்றிகள்!

திங்கள், 1 மார்ச், 2010

பூமேலே நேசம்



'பூக்களுக்குஅழகு பூத்திட்டசெடியிலே
புன்னகைத்தபடி இருப்பதுதான்.
இதுபுரியாதவர் என்னமனிதரோ?'

சிரித்துக்குலுங்கிய பவளமல்லிகளைப்
பார்த்ததும்கிடைத்த பரவசத்தை
அடுத்தநொடியே அலுப்பதில் தொலைத்தாலும்
கண்ணுங்கருத்துமாய்த் தன்தோட்டம்
பேணிவந்த கனகத்தின் கொள்கையிலே
தவறேதும் தெரியவில்லை.

அவர்நந்தவனத்தை அலங்கரித்து வந்தன
செவ்வரளி செம்பரத்தை சிவந்திசம்பங்கி
சிவப்பு மஞ்சள் ரோஜாக்கள்
மகிழம்பூ நந்தியாவட்டை
வண்ணவண்ண ஜினியாக்கள்.

இவற்றுக்குநடுவே புதிதாக உயர்ந்து
சுற்றுச்சுவரினை விடவும்வளர்ந்து
தெருவைஎட்டிப் பார்த்து
இதமாய்ச் சிரித்த
இருசூரியகாந்திகளைக் கண்டதும்
பூந்தோட்டக் காவல்காரம்மாவின்
கடுகடுப்பு மறந்தேதான் போனதுபாவம்
சிறுமி செண்பகத்துக்கு.

அச்சோலையைக் கடக்கும்போதெல்லாம்
கம்பிக்கதவுளின் ஊடாக
மெல்லிய ஏக்கப்பார்வையை படரவிட்டபடி
விடுவிடுவெனப் பயந்துநடப்பவளைத்
தயங்கித்தயங்கிக் கால்தேய்த்து
நிற்க வைத்தன
மலர்ந்துமயக்கிய மஞ்சள்காந்திகள்.

ஆதவன் உதிக்கும் திசைநோக்கி
வந்தனம் பாடி அவைநிற்க
தன்னை எதிர்பார்த்தே
தவமிருப்பதாய் நினைத்து
தலையசைக்கும் தங்கமலர்களுக்குக்
கையசைத்துச் செல்லுவாள்
காலையிலே பள்ளிக்கு.

மணியடிக்கக் காத்திருந்து
மாலையில் திரும்புகையிலோ
மறையும் கதிரவனை
மறக்காமல் வழியனுப்பும் சூரியப்பூக்கள்
அவளைக்காணவே மேற்குத் திரும்பி
வட்டக்கருவிழி பூரிக்க
ஆவலாய்ப் பார்த்துநிற்பதாய்
எண்ணந்தனை வேறு
வளர்த்து விட்டிருந்தாள்!

உடைத்து ஊற்றெடுத்த பாசத்தினை
அடைத்து வைக்கும் வித்தை
அறியாத பருவத்தினள்
கருணைகொள்வாள் கனகமெனக்
கனன்றெழுந்த கணநேரச்சிந்தனையில்
துணிந்துகை காட்டியேதான்விட்டாள்
ஒருமலரேனும் வேண்டுமென.

"செடியோடு அவையிருந்தால்
இன்னும் சிலகாலம் வாழ்ந்திடும்
உனக்காக நான்பறித்தால்
ஒரேநாளில் வாடிவிடும்"

மூடிக்கொண்ட வாயிற்கதவுகளுக்கு
இந்தப்பக்கம்
வாடிப்போய்நின்றிருந்தாள் செண்பகம்.
***


படம்: இணையத்திலிருந்து..



புதன், 17 பிப்ரவரி, 2010

ஏரிக்கரைப் பூங்காற்றே-குமரகம் புகைப்படங்கள்-PiT போட்டிக்கும்

கேரளம் என்றால் பசுமை. பசுமை என்றால் கேரளம். கட்டியம் கூறுவது போல இருந்தன விமானத்திலிருந்து பார்க்கையில், விரிக்கப்பட்ட பச்சைக் கம்பளம் போலக் காட்சியளித்த தென்னைகள். கொச்சினில் இருந்து ஒன்றரைமணிநேரம் பயணித்தால் குமரகம். படங்களைப் பேசவிட்டிருக்கிறேன் வழக்கப்போல சின்னக் குறிப்புகளுடன்.

ஏரிக்கரைப் பூங்காற்றே

இம்மாத PiT போட்டித் தலைப்பு: வாகனம். இந்த முதல் படத்தையே போட்டிக்குத் தந்துள்ளேன்.
***

கரையோரக் கவிதைகள்

கண்ணுக்கெட்டிய வரையில் ஏரியைச் சுற்றியமைந்த கரையெங்கும் பசுமைதான். செழிப்புக்குக் காரணம் பேக் வாட்டர்.இருநூற்றுஐந்து சதுரக் கிலோ மீட்டர் பரப்பளவில் விரிந்து பரந்த வேம்பநாடு ஏரியைச் சுற்றிதான் குமரகமும் ஆலப்புழை, கோட்டயம், எர்ணாகுளம் மாவட்டங்களும் உள்ளன.

முதலில் பேக்வாட்டர்ஸ் என்றால் என்னவென்று பார்ப்போம். இந்த ஏரியை எடுத்துக் கொண்டால் அது கடல் மட்டத்தின் அளவில் உள்ளது. மழைக்காலத்தில் மலையிலிருந்து பாய்ந்துவரும் நதிகளின் நீரானது கடலில் கலக்கும்போது ஏரியையும் நிரப்புகிறது. அந்த நல்லநீர் சுற்றியுள்ள மாவட்டங்களில் விவசாயத்துக்கு மிக உகந்ததாய் இருக்கிறது. மழையற்ற கோடையிலோ தாழ்வான மட்டத்தில் இருக்கும் காரணத்தால் கடலின் உப்புநீர் ஏரிக்குள் புகுகிறது. இதைத்தான் ‘பேக் வாட்டர்ஸ்’ என்கிறார்கள். அந்த சமயம் மட்டும் விவசாயத்துக்கு ஏற்றதாக இருப்பதில்லை.
***

போறவழி தென்கிழக்கோ

படகுவீடுகள் சராசரியாக 70அடி நீளமும் நடுப்பகுதில் 15அடி அகலமும் கொண்டவையாக உள்ளன. ஆணிகளை உபயோகிக்காமல் தேங்காய் நார்களைக் கொண்டேதான் பலகைகளைக் கட்டுகின்றார்களாம்.
***

அதிகாலை நேரமே இனிதான பயணமே
நிலாவைத்தான் கையில பிடிக்கமுடியுமா? அள்ளமுடியும் அதேபாணியில் சுடாத காலைச்சூரியனையும். ஆனா தோணி ஆட்டம் கண்டுட்டா.. அதான் கம்முன்னு அள்ளிட்டேன் நிர்மலமான அந்தச் சுடரொளியை கவனமா காமிராவிலேயே:)! எப்படிப் படகு சீராய்க் கிழிக்கிறது நீரிலே கோடு, பாருங்களேன்!
***

ஒதுங்கி நிற்கிறது படகு
கூரைமேல் சூரியன் எத்தனை அழகு

***
அஸ்தமனப் பொழுது
அமைதியில் மனது

அந்திசாயும் நேரமானால் ஏரிக்கரையோரம் இருக்கும் இருக்கைகள் நிரம்பிவிடும் அஸ்தமனத்தை ரசிக்க. ‘சளக் சளக்’ தாளகதியோடு கரையைத் தொடர்ந்து தொட்டுச் செல்லும் சிற்றலைகளின் சங்கீதம், நொடிக்கு நொடி மாறும் வானின் வர்ண ஜாலம், மெல்ல மெல்ல நீருக்குள் இறங்கும் சூரியப்பந்து யாவும் நெஞ்சை நிறைக்கும் அமைதியைத் தந்து.
***

தனித்திரு விழித்திரு
***
விழித்திருந்ததால் தனித்துத்தெரிவது
அடர்கானகத்தில் நிமிர்ந்துவளர வழியின்றிபோனாலும்
அயர்ந்து போகாமல்
கிடைத்தசந்தில் புகுந்துபுறப்பட்டு உருப்பட்டு
உலகுக்கு சொல்லுது பாடம்
வாய்ப்பு தேடிவரக் காத்திருக்காதே
தேடிப்போ நீ வாய்ப்பையென!
***


வானமே எல்லைநானும்தான் நானும்தான் என இன்னுமொன்று
தொட்டுவிடும் தூரம்தான் வானம்என்று
***

மோட்டர் படகு, துடுப்புப் படகு, படகு வீடு என எல்லாவற்றிலும் பயணித்து ஏரியைச் சுற்றி சுற்றி வந்த போது எடுத்த படங்களில் ஒருசிலவற்றைப் பகிர்ந்து கொண்டாயிற்று. ரசித்திருப்பீர்கள் என நம்புகிறேன்.


பேக்கர்ஸ் பங்களா

வேம்பநாடு ஏரியின் கரையில்தான் அமைந்திருக்கிறது தாஜ் கார்டன் ரெட்ரீட் விடுதி.  ஆல்ஃப்ரெட் ஜார்ஜ் பேக்கர் என்பவரால் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் 1881-ல் கட்டப்பட்டது. நான்கு தலைமுறைகளாக நூறு வருடங்கள் அவரது குடும்பத்தினரே அதை உபயோகித்து வந்தபடியால் அவர் பெயருடனேயே இப்போது ரிசார்ட்டின் அலுவலகமாயும் உணவு விடுதியாயும்.


லகூன்
பங்களாவுக்கு நேர் எதிரே அமைந்த இந்த் லகூனைச் சுற்றிலும் இரவு ஏழுமணி அளவில் ஆரம்பித்து நான்கு கிராமத்துபெண்கள் ஆயிரம் அகல்விளக்குகளை ஏற்றி வைக்கிறார்கள். நீர் நிலம் அக்னி வாயு ஆகாயமென பஞ்சபூதங்களையும் தரிசிக்கும் ஐதீகமாம். இந்தப் பின்னணியில் மேலேதெரியும் புல்வெளியில் தினமும் இரவு எட்டு மணியிலிருந்து அரைமணி நேரத்துக்கு ஒவ்வொருநாளும் ஒன்றாக மோகினியாட்டம், பரதநாட்டியம், திருவாதிரை எனும் கேரளப் பாரம்பரிய கூட்டுநடனம், வயலின் மெல்லிசை எனக் காண வாய்த்தது. இரவுக்காட்சியாய் எடுத்தபடங்கள் எவையும் அத்தனை கூர்மையாக வரவில்லை. [மற்ற படங்கள் அந்த அனுபவத்துடன் இங்கே: ‘கண்ணோடு காண்பதெல்லாம்.]
ஒளிரும் தீபங்கள்
***

நெல் வயல்

சலசல ஓடை சிலுசிலு நாத்து
ஒத்தையடிப் பாலம் ஒசந்துநிக்கும் தென்னைகள்
***

பாதையோரம் பூத்திருந்து வரும்வழியைப் பார்த்திருந்தவை

செந்தாழம் பூவோ


***
ஸ்பீக்கர்பூவும் வெண்பூவும்
***
எக்சோரா என்னும் இட்லிப்பூ


***

சின்னஞ்சிறு மஞ்சள்மலர்

மொளைச்சு மூணுஇலையே விட்ட அரையடி உயரச்செடியில் ஒன்றரையங்குல அளவில் கண்சிமிட்டிய மஞ்சப்பூ மேக்ரோவில் அழகா வந்திருக்கா? ஒரு விஷயம் கவனித்தேன். இவற்றை எடுத்த பத்து நாட்களுக்குள்ளாகவேதான் லால்பாக் மலர்கண்காட்சி செல்லும் வாய்ப்பு வந்தது. பார்வைக்கென அணிவகுத்திருந்த தொட்டிச்செடிகளில் பூத்திருந்தவற்றைக் காட்டிலும் மண்ணில் வளர வரம் வாங்கி வந்தவற்றின் மலர்ச்சியே தனிதான் என்பதைக் கண்கூடாக உணர முடிந்தது. 
***


இயற்கையின் எழிலில் திளைக்க முடிந்த வனத்தில்
உறுத்தலாய் அமைந்தது இதுதான் மனதில்!

போட்டுத்........................................ ...........தள்ளுறாங்களே!
‘ஏன் வெட்டுறீங்க’ என்ற கேள்விக்கு ‘பூச்சி வெட்டிடுச்சு’ என வந்தது பதில். பல ஏக்கர் பரப்பளவில் பலவகை மரஞ்செடிகளைப் பயிர்செய்து பரமாரித்து வருபவர்கள் தப்பாகச் சொல்ல மாட்டார்கள் எனத் தோன்றினாலும் அத்தனை உயர்ந்தமரம் ஓரிரு மணியில் வெட்டிச் சாய்க்கப்பட்டது வருத்தமே த்ந்தது.

உலகெங்கிலும் மனிதரின் தேவைக்காக கணக்கில்லாமல் கடந்த சில வருடங்களாய்ச் சாய்க்கப்பட்டு வரும் மரங்கள்! காணாது போகிற காடுகரைகள்! விளைநிலங்கள்! விளைவுகள்? இயற்கையின் சீற்றம். குறைகிற மழை வரம். கூடிக்கொண்டே போகிற பூமியின் வெப்பம். இனியேனும் யோசிப்போம்.


இயற்கை அன்னையைப் போற்றுவோம்
இருக்கும் வளத்தைக் காப்பாற்றுவோம்


***


பொறுமையாய்ப் பார்த்ததற்கு நன்றி. சொல்லிப் போங்களேன் ‘பளிச்’சுன்னு பிடிச்சதென ஏதேனுமிருந்தால்:)!



ஏரிக்கரை படங்கள் மேலும் சில இந்தப் பதிவில்: தண்ணி காட்டறேன்..

இங்கே படங்கள் ஒன்றும் நான்கும்: கிழக்கு சிவக்கையிலே..




இப்பதிவுக்கு காட்சிப் படைப்புகள் பிரிவில் இரண்டாம் பரிசாக தமிழ்மணம் விருது 2010
வெள்ளிப் பதக்கம்
நன்றி தமிழ்மணம்!

முதலிரண்டு சுற்றுகளில் வாக்களித்த நண்பர்களுக்கும்,
இறுதிச் சுற்றில் தேர்ந்தெடுத்த நடுவர்களுக்கும் நன்றி!
***


29 மார்ச் 2012
பேக்கர்ஸ் பங்களாவை இன்னொரு கோணத்தில் நான் எடுத்த படத்தை மேக் மை ட்ரிப் டாட்.காம் வாங்கி தன் விளம்பரங்களுக்கு பயன்படுத்தி வருகிறது என்பதையும் இங்கே பதிந்து வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்:
***

வியாழன், 11 பிப்ரவரி, 2010

கைமாத்து



அவசரத்தேவை
வேறு வழியேயில்லை.

தேடிச் சென்ற நண்பன்
நாசூக்காய் கைவிரிக்க..

உறவுகள்
உதட்டைப் பிதுக்க..

பழகிய சில இடங்களில்
'பழைய பாக்கியே இன்னும்..'
என இழுக்க..

ஏதோ ஒரு பேருந்தில்
ஏறி அமர்ந்தேன்.

நல்லவேளையாய்
காசு இருந்தது டிக்கெட்டுக்கு.

நெஞ்சு வெடித்து
விடக் கூடாதென
அஞ்சு வரி அதன் பின்னே
நுணுக்கி எழுதி
'அவமானம்'
எனத் தலைப்பிட்டேன்.

அழகாய் வந்திருக்க
ஆறியது சற்றே மனசு..

கைமாத்தாகக் கவிதையாவது
கிடைத்ததே என்று.
***



  • படம் நன்றி: கீற்று

செவ்வாய், 2 பிப்ரவரி, 2010

தேடல்


என்னென்ன நம் தேவை
என்கின்ற கோணத்திலேயே
என்றைக்கும் சிந்தித்து
எப்படியோ ஒருமுடிவுக்கும் வந்து..

அதை அடைந்திடும் நோக்கம்
ஒன்றே வாழ்வாகிப் போனாற்போல்
துடிப்புடன் நாளதும் பொழுதும்
ஓயாமல் ஓடியாடி..

ஒருவழியாய் ஆசையது
நிறைவேறும் வேளைதனில்
தேடத்தான் வேண்டியிருக்கிறது
பலனாகக் கிடைத்ததா
துளியேனும் பரவசமென்று!

***

என்னென்ன தேவையில்லை
எனத் தீர்மானித்து
ஒருதெளிவாய் வாழ்கின்ற
வகையினருக்கு மட்டுமின்றி..

இதுயிதுவே தேவையென
எல்லைகள்
வகுத்துக் கொள்ளாமல்
விடிகின்ற காலைகளை
நன்றிப் புன்னகைசிந்தி
எதிர்கொள்வது போலவே
வருகின்ற வளர்ச்சிகளைச்
சந்தித்தவராய்
செய்யும் பணிகளிலே
கவனத்தைக் குவித்துத்
திறம்பட முடிப்பதையே
பேரானந்தமாய்
உணர்பவருக்கும்..

தேடாமலேதான்
கிடைத்து விடுகிறதோ
நம்மில் பலருக்கும்
தீராத் தேவையாகவே
இருந்துவரும் அந்தப்
பரிபூரண மனநிறைவு?

*** *** ***


படம்: இணையத்திலிருந்து...






யூத்ஃபுல் விகடன் முகப்பில்:















விகடன்.காம் முகப்பில்:












LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin