செவ்வாய், 22 ஏப்ரல், 2014

எழுத்தாளர் பாவண்ணன் பார்வையில்.. ‘இலைகள் பழுக்காத உலகம்’ - 'குழந்தைமையின் கவித்துவம்' திண்ணை இதழில்..

மண்ணுலக வாழ்வை நீத்தவர்கள் வாழும் உலகத்தை இலைகள் பழுக்காத உலகம் என மதிப்பிடுகிறது ராமலக்ஷ்மியின் கவிமனம். இன்னொருவகையில் கலைஞனின் அக உலகத்தையும் இலைகள் பழுக்காத உலகம் என்றே சொல்லலாம். எல்லாத் தருணங்களிலும் எண்ணங்களோடு வாழ அந்த உலகத்தில் மட்டுமே சாத்தியப்படுகிறது. குழந்தைமையின் துடிப்போடு அவற்றை அடுக்கி அடுக்கிக் கலைத்து  எல்லையற்ற ஊக்கத்தையும் உவகையையும் அடைவதுகூட சாத்தியமாகிறது. தன் எண்ணங்களாலும்  கற்பனைகளாலும் தான் கண்டடைந்த அனுபவங்களாலும்  தன் அக உலகத்தை அடர்த்திமிக்கதாக கட்டமைத்துக்கொண்டிருக்கிறார் ராமலக்‌ஷ்மி. அந்த உலகத்தின் ஈர மண்ணைக் குழைத்தெடுத்து அவர் வடித்துவைத்திருக்கும் சிற்பங்களை ’இலைகள் பழுக்காத உலகம்’ தொகுதி வழியாகப் பார்க்கவைத்திருக்கிறார். சிற்பங்களை வடிப்பதில் அவருக்குள்ள முனைப்பும் ஆர்வமும் பாராட்டுக்குரியவை. செய்நேர்த்தியோடு காணப்படும் பல சிற்பங்கள் அவருடைய சொல்லாற்றலுக்குச் சாட்சியாக உள்ளன.


‘அனுதாபம்’ என்றொரு கவிதை. தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டே உணவுண்ணும் ஒரு குடும்பத்தலைவனைச் சித்தரிக்கும் காட்சி இக்கவிதையில் உள்ளது. மனைவி பரிமாறுகிறாள். கணவன் உண்ணத் தொடங்குகிறான். தொலைக்காட்சியில் செய்திகள் வாசிக்கப்படுகின்றன. ஏதோ ஒரு நதியில் எதிர்பாராமல் உருவான வெள்ளப்பெருக்கில் ஒரு படகு கவிழ்ந்துவிட்டது. ஏராளமான பேர்கள் மரணமடைந்துபோய் விட்டார்கள். வெள்ளத்தில் அகப்பட்டு இறந்தவர்கள் ஆயிரம் பேர்களுக்கும் மேல் இருக்கலாம். வேறொரு ஊரில் பூகம்பம். ஒரு நகரமே அழிந்துவிட்டது. இன்னொரு நகரத்தில் ரயில் விபத்து. இருபது பேர்களுக்கும் மேல் உயிரிழந்துபோய்விட்டார்கள். இப்படி, அடுக்கடுக்காக மரணச்செய்திகளாகவே வாசிக்கப்படுகிறது. சோறுண்ணும் கணவன் அவற்றை ஆயாசத்தோடு கேட்டபடி உண்ணுகிறான். அந்த மரணங்கள் அனைத்தும் ஒரு தகவலாகவே அவனைக் கடந்துபோகின்றன. ஏதோ ஒரு கணத்தில் தன் சின்ன மகளின் நினைவு வருகிறது. அவளைப்பற்றி தன் மனைவியிடம் விசாரிக்கிறான். தொட்டியில் வளர்ந்த மீன் இறந்துபோய் மிதந்ததைக் கண்ட துயரத்தைத் தாங்கிக்கொள்ள முடியாமல் அழுது அழுது சோர்ந்து தூங்கிவிட்டதாகச் சொல்கிறாள் அவள். ஒரு கண நேர உறுத்தலுக்குப் பிறகு உணவைத் தொடர்ந்து உண்ணத் தொடங்குகிறான் கணவன்.

கவிதையின் வரிகள் இத்துடன் முடிந்தாலும் குழந்தைமையைப் பறிகொடுத்து வாழும் அவலத்தின்மீது ஒரு கணம் வெளிச்சத்தைப் பாய்ச்சிவிட்டு முடிகிறது. மரணம் என்பது கொடுந்துயர். நம்மைச் சார்ந்த உயிர்களானாலும் சரி, எவ்விதமான தொடர்புமில்லாத உயிர்களானாலும் சரி, மரணத்தின் துயரம் கொடுமையானது. அது நம் அமைதியைக் குலைக்கிறது. மரணம் உருவாக்கும் மனபாரம் ஒருகணம் நம் பாதையை நம்மை மீண்டும் திருப்பிப் பார்க்கவைக்கத் தூண்டுகிறது. முதன்முதலாக மரணத்தை நேருறப் பார்க்கும்போது ஒருவர் உணரும் அதிர்ச்சியும் துயரமும் எல்லையற்றவை. அடுத்தடுத்த மரணக்காட்சிகள் மரணத்தை வாழ்வின் இன்னொரு பக்கமாகக் கருதக்கூடிய பக்குவத்தை வழங்குகின்றன.  அந்தப் பக்குவத்தில் பிறப்பதுதான் அனுதாபம். நம்மில் பெருகும் அனுதாப உணர்வு நாம் இன்னும் குழந்தைமையுணர்வோடு இருக்கிறோம் என்பதன் அடையாளம். அந்த உணர்வும் அற்றுப்போனவர்களாக வறண்டிருப்பது மாபெரும் அவலம்.

’கூழாங்கற்கள்’ கவிதை நேரிடையாக மரணக்காட்சியைச் சித்தரிக்காவிட்டாலும் மரணத்துக்குப் பிறகு எஞ்சப்போவதுபற்றிய ஒரு கேள்வியை முன்வைக்கிறது. ஒரு குழந்தைவிளையாட்டு வழியாகவே கவிதை தொடங்குகிறது. குழந்தை மணல்வீட்டைக் கட்டி விளையாடுகிறது. கூட விளையாடவந்த குழந்தைகள் எங்கிருந்தோ கூழாங்கற்களைக் கொண்டுவந்து கொடுக்கிறார்கள். வீடுகட்டும் குழந்தை அவற்றை வாங்கி, வீட்டைச் சுற்றி அகழியாக அடுக்கிவைத்து அழகு பார்க்கிறது. குழந்தைகள் அவ்வீட்டைச் சுற்றிச்சுற்றி வந்து விளையாடுகிறார்கள். மகிழ்ச்சிகொள்கிறார்கள். ஆடி முடித்த களைப்பில், ஆற்றங்கரை மணலில் அந்த வீட்டை அப்படியே விட்டுவிட்டு வீடு திரும்புகிறார்கள். குழந்தைமை எதையுமே சேகரிப்பதில்லை. அதனால், அவர்களுக்கு துயரமும் இல்லை. வளர்ந்த மனிதர்கள் தம் குழந்தைமையைத் தொலைத்துவிடுவதால் சேகரிப்பதில் ஈடுபடுகிறார்கள். செல்வத்துக்காக அலைகிறார்கள். பாடுபட்டுச் சேர்த்துவைக்கும் எதுவும், தன் ஆவி கூடுவிட்டுச் சென்றபிறகு, கூட வரப்போவதில்லை என்னும் பக்குவம் இல்லாதவர்களாக மாறிவிடுகிறார்கள்.

குழந்தைமையின் தன்னிச்சையான செயலில் கணநேரம் வெளிப்பட்டுத் தெறிக்கும் கவித்துவத்தை அனுபவமாக முனவைக்கும் கவிதை ‘மழலையின் எதிர்ப்பாட்டு’. கடலோரக் குடிசையின் வாசலில் உட்கார்ந்தபடி ஒரு குழந்தையை உறங்கவைக்கிறாள் ஒரு மீனவத்தாய். அக்குழந்தையின் தந்தை ஆழ்கடலில் மீன் பிடிக்கச் சென்றிருக்கிறான். குழந்தையை மடியில் கிடத்தியபடி விண்மீன்களையும் நிலவையும் மேகங்களையும் காட்டி தாலாட்டுகிறாள் தாய். எதிர்பாராமல் கடல் பொங்கக்கூடும் என கிடைத்த  தகவலால் மனம் பதைத்தாலும் காட்டிக்கொள்ளாமல் குழந்தையை உறங்கவைக்க கதையும் பாட்டும் சொல்கிறாள் அவள். கண்ணே கண்ணுறங்கு என அவள் பாடும் பாடிய பாட்டின் குரல்கேட்டு, கடற்கரையோரத்துக் கூழாங்கற்களும் சிப்பிகளும் உறங்கத் தொடங்குகின்றன. கடலலைகள்கூட சுருண்டு பின்வாங்குகின்றன. தாய் சொல்லும் ஒவ்வொரு சொல்லுக்கும் ம் கொட்டுகிறது குழந்தை. தூங்கும்வரை அக்குழந்தை சொன்ன ம் கள் எல்லாவற்றையும் சேகரித்துக்கொண்ட மேகங்கள் ஆழ்கடலுக்குச் சென்ற அதன் தந்தையைத் தேடி தூது செல்கின்றன. கள்ளங்கபடற்ற ஒரு குழந்தையின் ம் என்னும் சொல்லுக்குத்தான் எவ்வளவு சக்தி! கரையையும் ஆழ்கடலையும் அச்சக்தி ஒரே கணத்தில் இணைத்துவிடுகிறது.

குழந்தைப்பருவத்தில் தம்மைவிட்டும் இந்த உலகத்தைவிட்டும் மறைந்துபோன தந்தையை, நரைபடர்ந்து தந்தையைவிட வயதுகூடிய கட்டத்தில் தன் கனவில் பார்க்கிறாள் ஒருத்தி. தந்தைக்கு தன் மகளின் அடையாளம் தெரியவில்லை. தந்தையின் அடையாளம் மகளுக்குத் தெரிந்தாலும் தந்தையிடம் தன்னை அவளால் வெளிப்படுத்திக்கொள்ள முடியவில்லை. அவர் ஓர் உலகில். அவள் இன்னொரு உலகில். அவர்கள் பார்த்துக்கொள்வதோ இன்னொரு உலகில். இயலாமையின் அவலத்துடன் கனவுக்காட்சி முடிந்துவிடுகிறது. ‘இலைகள் பழுக்காத உலகம்’ இத்தொகுதியின் நல்ல கவிதைகளில் ஒன்று. வயது கூடினாலும், சிறுவயதில் எப்போதோ பார்த்த ஒருவர் தன்னை அடையாளம் கண்டுபிடித்துப் பேசிய மகிழ்ச்சியை முன்வைக்கும் ’யார் அந்தச் சிறுவன்?’ என்னும் கவிதையும் இத்தொகுதியில் உள்ளது. கண்டுபிடிப்பவரும் கண்டுபிடிக்கப்படுபவரும் ஒரே உலகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் எந்தத் தவிப்புமில்லாத மகிழ்ச்சி இருதரப்பிலும் படர்ந்துவிடுகிறது.

‘வண்ணக்குடைகள் விற்பனைக்கு’ கவிதை முன்வைக்கும் காட்சி கூர்மையானது. வசீகரமான பல நிறங்களில் பலவிதமான தோற்றங்களில் வடிவமைக்கப்பட்ட குடைகளை கூவிக்கூவி விற்கிறான் ஒருவன். கைக்கு இரண்டாகச் சுழற்றியபடி அவன் நடக்கும் நடை அனைவருடைய கவனத்தையும் ஈர்க்கிறது. எதிர்பாராமல் வந்துவிட்ட மழை, அவனையும் அவனுடைய வியாபாரத்தையும் நிலைகுலையவைக்கிறது. குடைகளைப் பாதுகாக்கும் வேகத்தில் அவற்றை அவசரமாக மடித்து பாதுகாப்பாக பைக்குள் திணித்தபடி ஒதுங்கி நிற்க மறைவிடம் தேடி ஓடுகிறான் அவன்.

‘அழகிய வீரர்கள்’ கவிதை சுழலும் பம்பரத்தையும் சுழற்றும் சாட்டையையும் கொண்ட ஒரு காட்சியை முன்வைத்து விரிவடைகிறது. தன்மீது படர்ந்து, தன்னை வசீகரமாகச் சுழற்றும் சாட்டையின் அன்பையும் உறவையும் நினைத்துநினைத்து மகிழ்ச்சியில் திளைக்கிறது பம்பரம். சாட்டையின் எதிர்பார்ப்பை ஒருகணமும் ஏமாற்றாமல், தன் சக்தியையெல்லாம் திரட்டி அழகாகச் சுழல்கிறது பம்பரம். சுழல்வதன் வழியாகவே தன் அழகும் ஆற்றலும் வெளிப்படுவதாக அது எண்ணிக்கொள்கிறது. அடிபட்ட காயங்களின் காரணமாக, சாட்டையால் அது கைவிடப்பட்ட கணத்தை அதனால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. வெவ்வேறு பம்பரம் தேடிச் செல்லும் சாட்டையின் செயலை நம்பமுடியாமல் இயலாமையோடு பார்த்தபடி இருக்கிறது. ஒவ்வொரு பொருளுக்கும் அல்லது ஒவ்வொரு மனிதருக்கும் வகுத்திருக்கும் எல்லையின் மர்மம் தீராத புதிர்களாகவே நீடிக்கின்றன. ராமலக்‌ஷ்மியின் கவிதைகள் அப்புதிர்களின் புள்ளிகளை ஒருகணம் தொட்டு மீள்கின்றன.

ஒரு கவிதை வாசகனாக, என்னுடைய எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் உள்ளன ராமலக்ஷ்மியின் கவிதைகள். மேலே பகிர்ந்துகொண்ட  கவிதைகள் அனைத்தும் உயர்ந்த தரத்தில் உள்ளவை.  சொற்களை இன்னும் செறிவுறக் கையாளும் நேர்த்தி பழகப்பழக, இன்னும் மேலான கவிதைகளை ராமலக்ஷ்மியால் படைக்கவியலும் என்பதற்கு இவையே சாட்சிகள்.

(இலைகள் பழுக்காத உலகம். கவிதைகள். ராமலக்ஷ்மி. அகநாழிகைப் பதிப்பகம். எண்.33, மண்டபம் தெரு, மதுராந்தகம். விலை. ரூ.80)

 *

20 ஏப்ரல் 2014, திண்ணை இணைய இதழில் வெளியாகியுள்ள விமர்சனக் கட்டுரை.

**

எழுத்தாளர் திரு. பாவண்ணன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

***

16 கருத்துகள்:

  1. வாழ்த்துகளும், பாராட்டுகளும்.

    பதிலளிநீக்கு
  2. ரசனையான பார்வை... மனமார்ந்த வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  3. வாழ்த்துக்களும், பாராட்டுதல்களும். எழுத்தாளர் பாவாணனின் விமர்சனம் கவிதை நூலை வாங்கத் தூண்டுகிறது.
    வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  4. நண்பர் பாஸ்கரன் (பாவண்ணன்) நல்ல எழுத்தாளர் மட்டுமல்ல ஒரு ரசிகரும்கூட என்று தெரிந்து கொண்டேன்.

    பதிலளிநீக்கு
  5. @vijayan,

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  6. பாவண்ணனுக்கும் தங்களுக்கும் வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  7. பாவண்ணன் அவர்கள் அருமையாக கவிதை தொகுப்பை விமர்சனம் செய்து இருக்கிறார்.

    வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  8. தாங்கள் தெரிவு செய்துள்ளது போல மரண ம் மிக கொடுமை ஆனது.அதிலும் குழந்தை களு டைய மரண ம் அதிகம் பாதிக்கும் .மீனவ நண்பன் படத்தில் இரந்த குழந்தைக்காக ஜேசுதாஸ் பாடும் "இரவுப்பாடகன்" என்ற பாடல் நாங்கள் (நான்,மனைவி ,ஆறும்மாத பெண் மற்றும் இரண்டு வயது மகள் ) விரும்பி கேட்போம்.என் சின்ன மகள் ஒரு வயதில் எங்கலை விட்டு இரந்த துயரத்தில் இருந்த போது இந்த பாடலும் ஒலிக்க நாங்கள் அடைந்த வேதனை உங்கள் பகிர்வில் அனுபவிக்க முடிந்தது .

    பதிலளிநீக்கு
  9. @visu.,

    தங்கள் வருகைக்கும் உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டதற்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  10. அருமையான விமர்சனம்...

    மீண்டும் ஒரு முறை படித்த உணர்வு...

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin